செவ்வாய், 29 அக்டோபர், 2013

நினைவழியா வடுக்கள் 21

நினைவழியா வடுக்கள் 21
சந்திரன் இறந்து இரண்டு வாரம் கடந்துவிட்ட நிலையில் அவனை கொலைசெய்த சாதி வெறியர்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் என் மனதை வாட்டிக்கொண்டிருந்தது. ‘நாங்கள் அவனை மறந்து விட்டதாக நினைத்து அவன் ஆவியாக வந்து எங்களை வெருட்டுவானோ?’ என்ற பயம் வேறு அடிமனதில் இருந்துகொண்டிருந்தது.
இது பற்றிய பேச்சை எடுத்தாலே சின்னத்தம்பியும் நடராசனும் ‘ஆளை விட்டால் போதும் சாமி’ என்று விலகி விலகிச் சென்றார்கள்.
தனியாக எதையும் செய்வதற்கும் எனக்கு துணிவிருக்கவில்லை.
ஒரு நாள் தோழர் சிவராசா எங்கள் வீட்டுக்கு வந்த போது, ‘சிறுவர்களான நாங்கள் அவர்களது போராட்டத்துக்கு என்ன செய்யலாம்’ என்று கேட்டேன்.
‘நன்றாகப்படித்து சாதித்து காட்டுவது தான் சிறுவர்களான எங்களுக்குரிய கடமை’ என்று அவர் சொன்னார்.கந்தமுருசேனாரும் இதைத் தான் எனக்கு சொல்லியிருந்தார்;.
நாங்கள் படித்து முன்னேற வேண்டுமானால் அதற்கு இருக்கும் தடைகளை அகற்ற வேண்டும்.
ஆதிலும் பாடசாலைக்கு செல்வதற்கு விருப்பமும் ஈடுபாடும் இருக்கவேண்டும்.
ஆனால் பாடசாலை என்பது எங்களை அவமதிக்கும்-புறக்கணிக்கும் இடமாக இருந்ததால் நாங்கள் ஆர்வத்தோடும் மகிழ்ச்சியோடும் அங்கு செல்வதில்லை.
உண்மையை சொல்வதானால் கந்த முருகேசனார் நடத்திய திண்ணைப் பள்ளிக் கூடத்துக்கு செல்வதில் இருந்த ஆர்வம் எனக்கு அரசாங்க பாடசாலையான மந்திகை பள்ளிக் கூடத்துக்கு செல்வதில் இருக்கவில்லை.
அதற்கு காரணம் சாதி வெறியரான கதிர்காமர் வாத்தியாருடைய செய்பாடுகளாகும்;
அன்று ஒரு வெள்ளிக்கிழமை.
வழமைபோல பாடசாலைக்குச் சென்று எங்களது வகுப்பில் பசுபதி வாத்தியார் புதிதாக எமக்கு ஏற்பாடு செய்து தந்தபடி காட்போட் மட்டைகளை எடுத்துவந்து தரையில் போட்டுவிட்டு அமரமுற்பட்ட போது நாங்கள் அமரும் இடத்துக்கு பக்கத்தில் உள்ள கதிரையில் அமரும் மாணவன் வராதது தெரிந்தது.
ஏற்கவே சந்திரன் சாதிவெறியர்களால் கொலைசெய்யப்பட்டதை நினைத்து கோபத்துடன் இருந்த எனக்கு ‘இந்த கதிரையில் ஏறியிருந்தால் என்ன?’ என்ற எண்ணம் சட்டென்று தோன்றிது.’போராடினால் தான் எதுவும் கிடைக்கும்’ என்று கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் சொன்னதும் ஞாபகத்துக்கு வந்தது.
‘எல்லாம் வல்ல சாமி இருக்கிற கோயிலுக்குள் போகிறதுக்கு துணிஞ்ச பிறகு வகுப்பில் இருக்கும் கதிரையில் ஏறி இருந்தால் என்ன?’ என்ற நினைப்புடன் பின்விளைவுகள் பற்றிய எந்தப்பயமும் இன்றி அந்த கதிரையில் ஏறி இருந்துவிட்டேன்.
நான் ஏறி இருந்த கதிரைக்கு பக்கத்து கதிரையில் இருந்த மேட்டுக்குடி மாணவன் ஏதோ அசிங்கமான விரும்பத் தகாத மிருகம் ஒன்று தனக்கு பக்கத்தில் வந்து இருந்துவிட்டதாக நினைத்து கத்திக்கொண்டு எழுந்து அப்பால் சென்றுவிட்டான்;.
அங்கிருந்த மேட்டுக்குடி மாணவ சிகாமணிகள் ஏதோ பெரிய அக்கிரமம் நடந்துவிட்டதைப் போல ‘ஏய் நளவா நீ கதிரையில் இருக்கக் கூடாது எழும்படா’ என்று கத்திக் கூச்சல் போட்டார்கள்.நான் அசைய மறுக்க சிலர் என்னை இழுத்து விழுத்தப்பார்த்தார்கள்.
நான் மேசையை இறுக்கிப்பிடித்தபடி அசையாதிருக்க சிலர் எனக்கு அடித்தார்கள்.அவர்களை தடுக்க சின்னத்தம்பி நடராசன் உட்பட எமது சமூகப் பொடியள் முயல அங்கு ஒரு சிறு கலவரமே மூண்டுவிட்டது.
அதற்குள் சில மேட்டுக்குடி பொடியள் ஓடோடிச் சென்று எங்களது வகுப்பாசிரியாரான கதிர்காமர் வாத்தியாரை அழைத்து வந்தார்கள்.
சாதி வெறியரான அவர் குழுமாடு ஒன்று வெறி கொண்டு வருவதைப் போல கோபாவசத்தோடு வந்து ‘எல்லாம் இருங்கோடா’ என்று கத்தினார்.
அப்போதும் கதிரையை விட்டு எழுந்திராது அமர்ந்திருந்த என்னை வெறிபிடித்த மிருகம் ஒன்று பார்ப்பதைப்போல வெறித்தனமாக பர்த்து
‘நள நாயே உனக்கு கதிரை கேக்குதா’ என்று கத்திய வாறு என்னுடை தலைமயிரில் பிடித்து என்னைத்தூக்கி எனது தலையை அருகில் இருந்த சுவரில் மோதி அடித்தார்.
அந்த வெறிகொண்ட மனித மிருகம் தூக்கி அடித்ததில் எனது இடது பக்க நெற்றி உடைந்து இரத்தம் கொட்டியது.
அவமானம் அழுமை ஆத்திரம் எல்லாம் ஒன்று சேர நான் எழுந்து கண் இமைக்கும் நேரத்தில் என்னுடைய சிலேட்டை எடுத்து வாத்தியார் என்ற பெயரில் இருந்த அந்த மனித மிருகத்துக்கு எறிந்துவிட்டேன்.
அந்த சிலேட் அவர் மீது பட்டு கீழே விழுந்து உடைந்து நெருங்கியது.
‘ஓரு நளப் பொடியன் கதிரையில் ஏறி இருந்ததுமல்லாமல் ஒரு வெள்ளாள வாத்தியாரான தன்னையே அடித்துவிட்டான்’ எவ்வளவு பெரிய குற்றம்.?விடுவாரா கதிர்காமர் வாத்தியார்?அப்புறம் அவரது சைவ வெள்ளாளியப் பெருமை என்னாவது ?
என்னை அடித்து உதைத்து துவைத்து எடுத்துவிட்டார்.
அதற்குள் பசுபதி வாத்தியார் தலைமை ஆசிரியர் உட்பட எல்லோரும் அங்கே வந்துவிட்டனர்.
‘கூப்பிடுங்கள் பொலீசை.உவனை கொண்டுபோய் பொலிஸ் ஸ்டேசனிலை வைத்து நல்ல சாத்து சாத்த வேணும்’ என்று கதிர்காமர் வாத்தியார் கத்திக் கொண்டிருந்தார்.
‘போலீசுக்கெல்லாம் வேண்டாம் நாங்களே பாத்துக்கொள்ளுவம்,பொலிசுக்கு போனால் இவன்ரை படிப்பு கெட்டுபோய்விடும்’ என்று பசுபதி வாத்தியார் அவரை சமாதானம் செய்ய முற்பட்டார்.
‘என்ன பொலீஸ் வேண்டாம்?நீர் இந்த கீழ் சாதி நாயளுக்கு சப்போட்டோ? உவங்களுக்கு எல்லாம் என்னத்துக்கு படிப்பு.போய் மக்கோனாவில் (மக்கோனா என்பது ஒரு இடம் அங்குதான் சிறுவர் சீர் திருத்தப் பள்ளி இருந்தது) இருந்து கழி தின்னட்டும்’ என்று வார்த்தைகளை அனலாகக் கொட்டினார்.
POINT PEDRO HOSஇவர்கள் இப்படி பேசிக் கொண்டிருந்த போது எனது தலைக் காயத்திலிருந்து இரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது.
அதை அவதானித்த பசுபதி வாத்தியார் அங்கிருந்த தலைமை ஆசிரியரைப் பார்த்து ‘இதில் என்ன செய்யலாம் என்பதை நீங்கள் தான் முடிவெடுக்க வேணும், நான் போய் இவனுக்கு மருந்து கட்டிக்கொண்டு வாறன்’ என்று கூறிவிட்டு என்னை அருகிலிருந்த மந்திகை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று மருந்து கட்டுவித்தார்.
நாங்கள் மருத்துவமனையில் இருந்து பாடசாலைக்கு திரும்பிய போது அங்கே காவல்துறை ஜீப் நின்று கொண்டிருந்தது.
வாத்தியாரை அடித்துவிட்டு நான் ஓடியபோது கால் தடக்கி கல்லில் விழுந்து மண்டை உடைந்து விட்டது. இது தான் காவல்துறைக்கு அவர்கள் கொடுத்த வாக்கு மூலம்.
POLICE
நான் பயத்தில் கதறி அழ பருத்தித்துறை காவல்துறையினர் என்னை ஜீப்பில் ஏற்றிக் கொண்டு போய் காவலில் வைத்துவிட்டார்கள்.
விசயமறிந்து எனது அப்பாவும் அம்மாவும் ஓடிவந்து அவர்களிடம் என்னை விட்டுவிடும்படி கெஞ்;சிப்பார்த்தார்கள்.
வாத்தியாருக்கு அடித்த பொடியளை விட முடியாது என்று அவர்கள் கூறிவிட்டார்கள்.
எனது தந்தை சட்டத்தரணி ஒருவரை ஏற்பாடு செய்து அவர் மூலமாக காவல்துறையினரை அணுகினார்
அப்போதும் ‘வாத்தியாருக்கு அடித்தது பெரிய குற்றம் என்றும் என்னை நீதி மன்றத்தில் நிறத்தி மக்கோனேவில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப் போவதாகவும்’ அவர்கள் சட்டத்தரணியிடம் தெரிவித்துவிட்டனர்.அந்த சட்டத்தரணி அங்கிருந்த காவல்துறை பொறுப்பதிகாரிக்கு நடந்த உண்மை சம்பவத்தை விளக்கி கூற, அவர் முறைப்பாடு செய்தவர்கள் தாங்கள் கொடுத்த முறைப்பாட்டை திரும்பப் பெற்றால் மட்டுமே என்னை விடுதலை செய்ய வழி இருக்கிறதென்றும் அதற்கு மாலை 5 மணி வரை அவகாசம் தருவதாகவும் தெரிவித்தார்.
அப்போது நேரம் பகல் 11 மணியாகியிருந்தது.
அந்த சட்டத்தரணி தனது காரிலே எனது பெற்றோரை பாடசாலைக்கு அழைத்துவந்து பாடசாலை அதிபருடனும் கதிகர்காமர் வாத்தியாருடனும் பேசிய போதும் அவர்கள் தாங்கள் கொடுத்த முறைப்பாட்டை திரும்பப் பெறமறுத்துவிட்டனர்.
அதற்கு மேல் தன்னால் ஒன்றும் செய்ய முடியாதென சட்டத்தரணி கைவிரித்துவிட, பயந்து போன எனது தந்தை மந்திகை சந்தியில் வாடகை கார் வைத்திருந்த இரத்தினம் என்பவரின் காரை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு அந்த நேரம் எமது பிரதேச தலைவர்கள் என்று சொல்லிக்கொண்டிருந்த ஜெயக்கொடி, துரைரத்தினம், நடராசா என்று எல்லோரையும் சென்று பார்த்து நடந்ததை சொல்லி உதவிசெய்யும் படி கெஞ்சினார்.ஆனால் வாத்தியருக்கு அடித்த பொடியனுக்கு ஒன்றும் செய்ய முடியாது என்று அவர்கள் கையை விரித்துவிட்டனர்.
எனது சிறிய தந்தை செல்லத்தம்பி சிறுபான்மை தமிழர் மகாசபையின் பிரிதிநிதிகள் மூலம் எதாவது செய்விக்கலாம் என்று அவர்களுடன் பேசுவதற்காக யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தார். அவர்களுக்கும் பருத்தித்துறைக்கு வந்து எங்களுக்கு உதவி செய்ய நேரம் இருக்கவில்லை.
மாலை 5 மணி வரை நான் காவல்துறையின் காவலில் அழுது கொண்டிருக்க எனது பெற்றோர் கண்ணீரும் கம்பலையுமாக வீதியாக அலைந்து கொண்டிருந்தனர்.
இதற்கிடையில் இந்த விடயத்தை அறிந்த கரவெட்டி பகுதி கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் தோழர் சண்முகதாசனுக்கு ரங்கோல் போட்டு நடந்ததைச் சொல்ல அவர் உடனடியாக தோழர் எஸ்.டி.பண்டாரநாயக்காவை(சந்திரிகாவின் தந்தை அல்ல) தொடர்;பு கொண்டு நடந்ததை சொல்லி அவர் மூலமாக கொழும்பிலுள்ள காவல்துறை தலைமையகத்தின் ஊடக பருத்தித்துறை காவல் நிலையத்துக்கும் பருத்தித்துறை நீதிபதிக்கும் தகவல் அனுப்பியிருந்தார்.
மாலை 5 மணிக்கு பருத்தித்துறை காவல்துறையினர் என்னை பருத்தித்துறை நீதிபதியின் முன் அவரது வீட்டில் நிறுத்திய போது என்னை ஒரு குற்றவாளியாக அல்லாமல் அன்புடன் அணுகிய நீதிபதி நடந்த சம்பத்தை மறைக்காமல் சொல்லும்படி கேட்டார்.
நான் அழுதுகொண்டே நடந்ததை சொல்ல அதை பதிவு செய்த அவர் காவல்துறையினரை பார்த்து ‘என்மீது வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என்றும், பாடசாலைக்குச் சென்று நடந்த சம்பவத்தை விசாரித்து நடவடிக்கை எடுக்கும் படியும்’ உத்தரவிட்டு என்னை விடுதலை செய்தார்.
பின்னர் நடந்த விசாரணையில் கல்வித்துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.கதிர்காமர் வாத்தியார் என்னை தூக்கி சுவரில் மோதி அடித்தது உண்மை என்பது உறுதியாகியது.சாதிரீதியாக அந்தப்பாடசாலையில் நடந்த புறக்கணிப்புகளும் வெளிச்சத்துக்கு வந்தது.இதை அடுத்து கதிர்காமர் வாத்தியார் மீது துறைசார் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டாகவும் பின்னர் மீண்டும் பணிக்கு சேர்ந்த போது மலையகத்துக்கு இடமாற்றம் பெற்று சென்று விட்டதாகவும் அறிந்தேன்.
இந்தச் சம்பவத்தின் பின்னர் அந்தப்பாடசாலையில் எமது சமூகப் பிள்ளைகளை தரையில் இருத்துவது கிணற்றில் தண்ணீர் அள்ள அனுமதிமறுப்பது, பிளாவில் பால் கொடுப்பது எல்லாம் நிறுத்தப்பட்டாலும் நான் தொடர்ந்து அங்கு கல்வி கற்க அனுமதி மறுக்கப்பட்டது.
ஆசிரியருக்கு அடித்த ஒழுக்கமற்ற மாணவன் என்று எனது பாடசாலை சான்றிதழில் எழுதி என்னை பாடசாலையில் இருந்து நீக்கிவிட்டார்கள்.
இது என்னை அவர்கள் மக்கோனாவுக்கு அனுப்ப முயற்சித்ததைவிட எனக்கு பெரிய பாதிப்பை தந்தது.
எந்தவொரு பாடசாலையிலும் என்னை சேர்த்துக்கொள்ள மறுத்தார்கள்.ஆசிரியருக்கு அடித்த மாணவன் என்ற குற்றச்சாட்டுத்தான் முன்னுக்கு நின்றதே தவிர எனது தரப்பு நியாயம் சாதிய சமூகத்தில் எடுபடவில்லை.
எனது தந்தை எமது பிரதேசத்திலுள்ள எல்லா பாடசாலைகளுக்கும் சென்றுபேசிப் பார்த்தும் எந்தப்பலனும் கிட்டவில்லை.கல்வித் திணைக்களம் வரை சென்று முயன்றும் முடியவில்லை.அவர்கள் தட்டிக்களிப்பதற்காக ஏதாவது ஒரு பாடசாலைக்கு போகச் சொல்வார்கள்.அந்த பாடசாலை அதிபர் எனது பாடசாலை சான்றிதழை பார்த்துவிட்டு இடம் இல்லை என்பார்.எமது சமூக பிள்ளைகளின் முன்னேற்றத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட வதிரி தேவரையாளி இந்துக்கல்லூரியில் கூட எனக்கு இடம் இடம் கிடைக்கவில்லை என்பதும் அவர்களுக்கு கூட அசிரியரை அடித்த மாணவன் என்பது தான் முக்கியமாக கண்ணில் பட்டது என்பது தான் வருத்தத்துக்குரிய விடயம்
ஏறக்குறைய இரண்டு மாதகாலம் இப்படியே அலைந்து திரிந்து ஒரு கட்டத்தில் எனது தந்தை மிகவும் சோர்ந்து மனமுடைந்துவிட்டார்.
இந்த நேரத்தில் தோழர் சிவராசா இறுதி முயற்சியாக ஒருவரை சந்திப்போம் என்று கரவெட்டியிலுள்ள ஒரு ஆசிரியையின் வீட்டுக்கு அவரை அழைத்துச் சென்றார்.
அந்த ஆசிரியை பருத்தித்துறையிலுள்ள மெதடிஸ்த பெண்கள் பாடசாலையில் கல்வி கற்பித்துக் கொண்டிருந்தார்.அத்துடன் அந்த கல்லூரி அதிபர் அந்த ஆசிரியையின் கற்பித்தல் முறை மற்றும் சமூக அக்கறை என்பவற்றால் அவர் மீது நன்மதிப்பு வைத்திருந்தார்.
அந்தக் காலகட்டத்தில் அந்தப்பாடசாலையில் 5 ம் வகுப்புவரை சிறுவர்கள் படிக்கலாம்.6 ம் வகுப்புக்கு நுளைவுத்தேர்வு எழுதி ஹாட்லிக் கல்லூரிக்கு செல்லலாம். மெதடிஸ்த பெண்கள் பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்களுக்கு ஹாட்லிக் கல்லூரியில் சேர்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என்பது விதியாக இருந்தது.
அந்த ஆசிரிiயிடம் தோழர் சிவராசாவும் எனது தந்தையும் நடந்ததை கூற அவர் கொதித்துப் போய்விட்டார்.
ஒரு சிறு பிள்ளையின் எதிர்காலத்தை பழாக்குவதில் இந்த சமூகம் எவ்வளவு அயோக்கியத்தனமாக நடந்து கொள்கிறது என்று வருத்தப்பட்டார்.
உடனடியாகவே அவர் மெதடிஸ்த பெண்கள் பாடசாலை அதிபரின் வீட்டுக்கு தோழர் சிவராசாவையும் எனது தந்தைiயும் அழைத்துக்சென்றார்.
தீவிர கிறீஸ்தவரான அந்த பெண் அதிபரிடம் எனது தந்தையும் தோழர் சிவராசாவும் கூறிய அனைத்தையும் அந்த ஆசிரியை எடுத்துச் சொன்னார்.
அவற்றையெல்லாம் பொறுமையாக கேட்ட அவர் ‘கர்த்தரே இந்தப் பாவிகள் அறியாமல் செய்யும் பிழைகளை மன்னித்தருளும்’ என்ற ஒரே ஒரு வசனத்ததை மட்டும் கூறிவிட்டு மறுபேச்சின்றி என்னை அந்தப் பாடசாலையில் உடனடியாக சேர்த்துக் கொள்ள சம்மதம் தெரிவித்தார்.
எனது தந்தை அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.
மறு நாள் காலையிலேயே நாங்கள் பாடசாலைக்குச் சென்றுவிட்டோம்.
methdistஎந்தவித கேள்விகள் விசாரிப்புகள் காத்திருப்புக்கள் ஏதுமின்றி நான் அந்தப் பாடசாலையில் சேர்த்துக்கொள்ளப்பட்டுவிட்டேன்.
என்னுடைய அதிஷ;டம் நான் அந்த பாடசாலையில் சேர்வதற்கு உதவிய ஆசிரியையே எனது வகுப்பாசிரியராக இருந்தார்.
அவர் முதல் வரிசையில் என்னை அழைத்துச் சென்று அமரவைத்தார்.
என்னுடைய வாழக்கையில் நான் மறக்க முடியாத அளவுக்கு பேருதவி புரிந்து எனது கல்விச் செயற்பாட்டை ஊக்குவித்த அந்த ஆசியையின் பெயர் மேரி(டீச்சர்) ஆகும்.
1980 களில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தளபதிகளில் ஒருவராக இருந்த சுக்ளா அவருடைய மகன் என்பது சிறப்பு தகவலாகும்.
மெதடிஸ்த பெண்கள் பாடசாலை பருத்தித்துறை கடற்கரை ஓரம் மிகவும் ரம்யமான இயற்கை சூழலில் அமைந்திருந்தது.எங்களது வகுப்பில் இருந்து கடலை பார்த்துக்கொண்டே பாடம் படிப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்து.மேரி டீச்சர் உட்பட எமக்கு பாடம் நடத்திய ஆசிரியைகள் அனைவரும் என்னை அன்பாகவும் கண்ணியத்துடனுமே நடத்தினர்.என்னுடைய பின்னணி தெரிந்து எனக்கு கற்பிப்பதற்கு கூடிய அக்கறை எடுத்துக்கொண்டனர்.
எற்கனவே அந்தப் பாடசாலையில் எனக்கு சித்தி முறையான மகாலட்சுமி அத்தை முறையான இரத்தினமணி ஆகியோர் படித்துக்கொண்டிருந்தனர்;.அவர்களுடன் சேர்ந்து அந்தப்பாடசாலைக்கு போவதும் திரும்பி வருவதும் எனக்கு பிடித்திருந்து.
என்ன மந்திகை பாடசாலை எனது வீட்டில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் இருந்தது. இது எங்கள் வீட்டில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பருத்தித்துறை நகரத்தில் இருந்ததால் மந்திகை சந்திக்கு நடந்து சென்று அங்கிருந்து பருத்தித்துறைக்கு பேருந்தில் செல்ல வேண்டி இருந்தது.
000

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

நினைவழியா வடுக்கள் 20

சந்திரனின் மரணம் எனது வாழ்க்கையில் நான் சந்தித்த பார்த்த முதல் இழப்பாகும்.அது என்னை பெரிதும் பாதித்துவிட்டது.
சந்திரன் எனது பெரியப்பா சாமிக் கிட்டிணருக்கும் பெரியம்மா அருந்தவத்துக்கும் பிறந்த ஒரே மகன்.அதுவும் அவர்களுக்கு 15 வருடங்கள் பிள்ளையில்லாமல் இருந்து பிறந்த ஒரே மகன்.அவனது இழப்பை தாங்க முடியாமல் அவர்கள் கதறிய கதறல் இன்றும் என்மனதில் ஆளமாக பதிந்திருக்கிறது.
சந்திரன் விளையாடும் போது கால்தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டான் என்று தான் ஊரில் எல்லோரும் நம்பிக்கொண்டிருந்தார்கள்.
ஓரு சிலர் நடராசன் தான் அவனை கிணற்றுக்குள் தள்ளி விழுத்திவிட்டான் என்றும் அவன் மீது குற்றம் சாட்டினார்கள்.
அவன் எங்கே உண்மையை சொல்லிவிடுவானோ என்ற பயம் எனக்கும் சின்னத்தம்பிக்கும் ஏற்பட்டிருந்தது.ஆனால் அவன் வாயே திறக்கவில்லை.சந்திரனின் சாவு அவனையும் அதிகம் பாதித்திருந்தது. இரண்டு பேரும் பக்கத்து பக்கத்து வீட்டுக்காரர்கள். என்னையும் சின்னத்தம்பியையும் விட அவனுடன் தான் சந்திரன் அதிகநேரம் இருப்பான்.
நடராசன் எங்களை காட்டிக்கொடுக்காததையிட்டு நாங்கள் நிம்மதியடைந்தாலும் எங்களால் தானே சந்திரன் இறந்தான் என்ற ஒரு குற்ற உணர்வு எனது மனதை வருத்தியது.
நாங்கள் ஐயரின் வண்டிலை கொழுத்த போகாமல் இருந்திருந்தால் அவன் செத்துப் போயிருக்க மாட்டான் என்ற எண்ணமும் அதேநேரம் அவனை கொலை செய்தவர்கள் ஈவிரக்கமற்ற அரக்கர்கள் கொடூரமான பூதங்கள் என்ற எண்ணமும் என்மனதில் ஏற்பட்டிருந்து.
64229_514967288559843_1278545773_nகொடுமைக்காரர்களாக சித்தரிக்கப்படும் அரக்கர்களையும் கொடிய பூதங்களையும் அழிப்பதற்கு கடவுள் அவதாரம் எடுத்துவருவார் என்று அம்மா எனக்கு சொல்லியிருந்தா.ஒரு சிறுவன் என்றும் பார்க்காமல் கொலை செய்த இந்த அரக்கர்களை அழிக்க கடவுள் வரமாட்டாரா என்ற ஏக்கமும் எனக்கு ஏற்பட்டது.
நேற்றுவரை எங்களோடு ஒன்றாய் ஓடி விளையாடியவன் இன்று இல்லை என்ற துக்கம் தொண்டைய அடைக்க நான் மூன்று நாட்கள் காச்சலில் எழும்ப முடியாமல் படுத்திருந்தேன்.
சந்திரனின் சாவால் மறுநாள் நடக்கவிருந்த வல்லிபுரஆழ்வார் கோவில் ஆலயப் பிரவேச போராட்டம் பிறிதொரு திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
சந்திரனின் பெற்றோரையும் நெருங்கிய இரத்த உறவினர்களையும் தவிர எங்கள் ஊரிலிருந்த மற்றவர்கள் அவனது மரணத்தை மறந்துவிட்டு தங்களது நாளாந்த வாழ்க்கை பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.
நானும் சின்னத்தம்பியும் நடராசனும் கூட பாடசாலைக்கு செல்ல ஆரம்பித்திருந்தோம்.
அடுத்த ஞாயி;ற்றுக்கிழமை கரவெட்டி பகுதி தோழர்கள் எனது தந்தையை சந்திக்க வந்திருந்தனர்.
சந்திரனின் இழப்புக்கான துயர் பகிர்தலுடன் ஆரம்பித்த அன்றைய சந்திப்பில் சாதியத்துக்கு எதிரான போராட்டம் அடைந்துவரும் வெற்றி பற்றி அவர்கள் அதிகம் பேசிக்கொண்டிருந்தார்கள்.
வழக்கம் போலவே ஒரு ஓரத்தில் அமர்ந்து அவர்கள் பேசுவதை நான் கேட்டுக்கொண்டிருந்தேன்.
அன்றைய பேச்சின் முக்கிய அம்சம் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட ‘பஞ்சமர்களுடைய குழந்தைகளை எவ்வாறு உயர் சாதியினர் ஆளுமைக் குறைப்பு செய்கிறார்கள்’ என்பது பற்றியதாகும்.
அப்போது இந்த ‘ஆளுமை’ என்ற சொல் எனக்கு புதிய சொல்லாக இருந்தது.அவர்கள் பேசியதும் எனக்கு புரியவில்லை. ஆனாலும் ‘யார் நல்ல விடயங்களை பேசினாலும் எனக்கு அது புரியாவிட்டாலும் அதை கூர்ந்து கவனித்து கிரகித்துக்கொண்டு பின்னர் அதிலுள்ள தெரியாத விடயங்களை மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வது’ என்று சிறுவயதில் இருந்தே என்னிடம் ஒரு பழக்கம் இருந்தது. எனக்கு தமிழ் தாத்தா கந்த முருகேசனார் கற்றுத் தந்த பல நல்ல பழக்கங்களில் இதுவும் ஒன்றாகும்.
அப்படித்தான் இந்த ஆளுமை பற்றிய விடயத்தையும் நான் கிரகித்துக்கொண்டேன்.
அந்த வகையிலே ஒரு தனி மனிதனின் ஆளுமை பற்றியும்,அந்த ஆளுமையை திட்டமிட்டு மழுங்கடிப்பதன் மூலம் ஒரு சமூகத்தின் வளர்ச்சியை தடுக்க முடியும் என்பதையும் நான் முதன் முதலாக தெரிந்து கொண்ட அந்த நாளும் அன்று அவர்கள் கலந்துரையாடிய விடயத்தின் சாராம்சமும் இன்றும் பசுமரத்து ஆணிபோல என் நினைவில் இருக்கிறது.
குழந்தைகள் பொதுவாக தமது 5 வயதிலிருந்து 16 வயதுவரையிலான காலகட்டத்திலேயே இந்த உலகத்தை புரிந்து கொள்வதுடன் தங்களுடைய ஆளுமையை- திறமையை-தலைமைப்பண்பை வளர்த்துக்கொள்கின்றன.
இந்தக் காலகட்டத்தில் அந்தக் குழந்தைகளின் மனதில் பதியும் விடயங்களே அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகி இறக்கும் வரை தாக்கம் செலுத்துகிறது.
இந்தக் காலகட்டத்தில் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு கருத்தியல் காயடிப்பு செய்வதன் மூலம் அவர்களது ஆளுமையை மழுங்கடித்து அவர்களது வளர்ச்சியை மட்டுப்படுத்தி சந்ததி சந்ததியாக சாதியத்தை கடத்தும் கைங்கரியத்தை சாதிமான்கள் செய்து வந்தனர்.
குறிப்பாக
‘நீங்கள் எல்லாம் படிச்சு என்னடா கிழிக்கப்போறிங்கள்’
‘படிச்சு டொக்டர் எஞ்சினியர் ஆகலாம் என்று கனவுகாணுறியளோ?’
‘மாடு மேய்க்கப் போறதையும் மரம் ஏறப்போறதையும் விட்டுட்டு ஏன்ரா
பள்ளிக் கூடத்துக்கு வந்து கழுத்தறுக்கிறியள்?’
‘கொப்பரும்(அப்பா)கோத்தையும் (அம்மா) படிச்சிருந்தால் தானே
உங்களுக்கு படிப்பு வரும்’
என்று பஞ்சமர்களின் பிள்ளைகளைப் பார்த்து தினமும் பாடசாலைகளிலும் வெளியிலும் கூறப்படும் வசவுகள் கோபத்தின் வெளிப்பாட்டால் சொல்லப்படும் சாதாரண வசவுகளல்ல.
இவை அந்த பிள்ளைகளின் மனோபலத்தை சிறுகச் சிறுகச் சிதைத்து அவர்களை ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் செயற்திறன் மிக்கவர்களாக வளரவிடாமல் தடுக்கும் திட்டமிட்ட சாதிவெறி செயற்பாட்டின் ஓரங்கமாகும்.
Inside Dutch Fort - Jaffna
சிங்கள இனவெறியர்கள் தமிழர்களை ‘பற தெமிழ’ (பறைத்தமிழன்) என்று இழிசொற்குறியீட்டால் அழைப்பதை இனவெறி செயற்;பாடாக சித்தரித்து அதற்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடிய யாழ்ப்பாண உயர்குடி சமூகம் தான் பஞ்சமர்களான எங்களை ‘நள நாய், பறை வேசை’ முதலான இழிசொற்களால் அழைத்து இம்சைப்படுத்தியது.
இந்த மேட்டுக் குடியினரின் பிள்ளைகள் எங்களை பாடசாலைகளிலும் ரியூட்டரிகளிலும்,பல்கலைக் கழகங்களிலும் தினம் தினம் சோடியம் யெ (நளவர்) பொஸ்பரஸ் P (பள்ளர்) முதலான இரசாயன குறியீட்டுப் பெயர்களால் அழைத்து தனிமைப்படுத்தி அவமானப்படுத்தும் போது எங்கள் மனதில் ஏற்பட்ட வேதனையும் அது எற்படுத்திய வலியையும் எழுத்தில் வர்ணிக்க முடியாது. அதை சாகும்வரை மறக்கவும் முடியாது.(பௌத்த சிங்கள பேரனவாதம் ஒவ்வொரு தமிழனையும் தனிப்பட்ட முறையில் இலக்கு வைத்து தினசரி உளவியல் சித்திரவதை செய்ததில்லை)
பொதுவாக ஈழத்தமிழ் சமூகம் என்பது ஏனைய இந்திய சமூகங்களைப் போல ஆணாதிக்க சமூகமாக இருந்தாலும் யாழ்ப்பாண சமூகத்தில்; தாய்வழி சமூகத்தின் தொடர்ச்சி என்பது அதிகளவுக்கு இருந்து வந்தது.அதிலும் பஞ்சமர் சமூக குடும்பங்களில் தந்தையரை விட தாய்மாரின் ஆதிக்கமே அதிகம் இருந்தது.
ஆனால் யாழ்ப்பாண மேட்டுக்குடி சமூக அமைப்பு கல்வி மற்றும் பொருளாதார ரீதியில் மேம்;பட்ட அரைப் பார்ப்பணிய ஒழுங்கு விதிகளைக் கொண்ட ஒரு சமூக அமைப்பாக இருந்தது.அந்த அமைப்பில் சமூக ஒழுங்கு என்ற பெயரில் குடும்ப உறுப்பினர்களுடைய அதிகாரம் வரையறுக்கப்பட்டிருந்து.
சராசரி இந்திய தமிழக மேட்டுக்குடி குடும்பங்களிள் தாய்மாருக்கு இருந்த அதிகாரங்களை விட யாழ்ப்பாண மேட்டுக்குடி தாய்மார்கள் அதிக அதிகாரங்களை கொண்டவர்களாக இருந்தார்கள்.
அதே போல இந்திய மேட்டுக்குடி தந்தைமாருக்கு குடும்பத்தலைவர் என்ற அடிப்படையில் இருந்த எல்லையற்ற அதிகாரம் யாழ்ப்பாண மேட்டுக்குடி தந்தைமாருக்கு இருக்கவில்லை.அவர்களுடைய அதிகாரம் மனைவிமாருக்கு இருந்த அதிகாரத்தைவிட சற்று அதிகமாக இருந்தாலும் அது வரையறைக்குட்பட்டதாகவே இருந்தது.
இது குடும்ப வன்முறையை ஓரளவுக்கு மட்டுப்படுத்தி அவர்களது பிள்ளைகள் ஆளுமையுள்ளவர்களாக வளர்வதற்கான அகச் சூழலை ஏற்படுத்திக் கொடுத்தது.
ஆனால் பஞ்சமர் சாதி குடும்பங்களில் இத்தகைய ஒரு சமூகம் சார்ந்த அதிகார ஒழுங்கு இல்லாதால் குடும்ப வன்முறை என்பது சர்வசாதாரணமாக இருந்தது.
நான் முதலிலே குறிப்பிட்டபடி இந்தக் குடும்பங்களில் மனைவிமாருடைய ஆதிகம் அதிகம் இருந்ததால் கணவன்மார் தங்களுடைய இருப்பை தக்க வைப்பதற்காக குடித்துவிட்டு வந்து அடித்து உதைத்து கலாட்டா பண்ணுவதும் போதை தெளிந்ததும் மனைவிமாரிடம் சரணாகதியடைவதும் தொடர்கதையாக இருந்து வந்தது.
கணவர்மார் மீது உள்ள கோபத்தை தாய்மார்கள் பிள்ளைகள் மீது காட்டி அவர்களை அடித்து உதைக்கும் போக்கும் பஞ்சமர் சமூகத்தில் மேட்டுக்குடி சமூகத்தைவிட ஒப்பீட்டளவில் அதிகமாக இருந்தது.
lwbbdd_இது பஞ்சமர் சமூகத்தில் பிள்ளைகள் அமைதியான சூழலில் இருந்து படிப்பதற்கும் ஆளுமையுள்ளவர்களாக வளர்வதற்கும் பெரும் தடையாக இருந்தது.மேலும் தாய் தந்தை இருவருமே கல்வியறிவு இல்லதவர்களாகவோ அல்லது ஒரளவுக்கே கல்வி அறிவுள்ளவர்களாகவோ இருந்ததும் பிள்ளைகள் தங்களது பாடங்கள் பற்றிய சந்தேகங்களை கேட்டுத் தெளிவு பெறுவதற்கும் தங்களது எதிர்கால கல்வி பற்றிய வழிகாட்டலை பெறுவதற்கும் முடியாத ஒரு நிலையை ஏற்படுத்தியிருந்து.
இது பஞ்சமர் சமூக பிள்ளைகள் ஒரு குறிப்பிட்ட தரத்துக்கு மேல் கல்வி கற்க முடியாத சூழ்;நிலையும் அவர்கள் தங்களுக்குள்ளேயே ‘இதெல்லாம் எங்களுக்கு ஒத்துவராத விடயங்கள்.நாங்கள் தொண்டூழியம் செய்யப்பிறந்தவர்கள்’ என்ற தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தியது.
குறிப்பாக சொல்வதானால் பஞ்சமர்களுடைய சமூகச் சூழல் என்பது அறியாமையும் அமைதியின்மையும் அடிப்படை வசதிகள் இல்லாததுமான ஒரு நிலையில் இருக்கும் வகையில் கட்டிக்காக்கப்பட்டு வந்தது.இந்தக் கட்டிக்காத்தல் என்பது தற்செயலானதோ அல்லது அர்த்தமற்ற அதிகாரச் செயற்பாடோ அல்ல.
பொதுவாக குழந்தைகளுக்கு அவர்கள் வாழுகின்ற சமூகச் சூழல் சரியில்லாதுவிட்டால் அவர்களால் ஆளுமையுள்ளவர்களாக வளரமுடியாது.
ஓரு சமூகத்தின் வளர்ச்சியை தடுக்க வேண்டுமானால் அந்த சமூகம் வாழக்கூடிய வாழ்வியல் சூழலை மூடுண்ட சூழலாக அல்லது சமச்சிரற்ற வளர்ச்சியுடைய சூழுலாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆண்டான் அடிமை சிந்தைனைக்கான செயற்பாட்டு வடிவமாகவே இந்தக் கட்டிக்காத்தல் இருந்து வந்தது.
இந்த வகையில் நான் அதிஷ;டசாலி என்று சொல்லவேண்டும் எனது பெற்றோர் அதிகம் படிக்காவிட்டாலும் அனுபவக் கல்வியை நிறையப் பெற்றிருந்தனர்.குறிப்பாக இந்த ஒடுக்குமுறையிலிருந்த வெளியே வருவதற்கு எந்தக் கொள்கை சிறந்த கொள்கை என்பதை எனது தந்தை இனங்கண்டுகொண்டிருந்தார்.சமூக அக்கறையுள்ள பல நல்ல தோழர்களின் நட்பை அவர் பெற்றிருந்தார்.
1960 கள் வரை நான் வாழ்ந்த சமூகச் சூழலும் அடி தடி வெட்டு குத்து துப்பாக்கி சூடு என்று குழுச் சண்டை தெருச்சண்டைகள் நிறைந்த வன்முறைக்களமாகவே இருந்து வந்தது.
வாரத்தில் குறைந்து இரண்டு தடவையாவது வசைமாரிகளும் கூச்சல்களும் காட்டுக்கத்தல்களும் தெருநாய்களில் குரைப்புகளும் இணைந்து பேரொலியாக இரவின் நிசப்தத்தை குலைக்கும்.
மறுநாள் காலையில் அவருக்கு மண்டை உடைந்தது,இவருக்கு கை முறிந்தது,மற்றொவருக்கு காலில் வெட்டு விழுந்தது என்று தகவல்வரும்.
எனது பெற்றோர் இந்த குழுமோதல்களுக்குள்- கதியால் வெட்டிய- ஓலைவெட்டிய- பனங்காய் பொறுக்கிய அர்த்தமற்ற சண்டைகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் ஒதுங்கியே இருந்தனர்.
எனது தந்தை எதிரிகள் யார்? நண்பர்கள் யார்? என்பதை தெளிவாக உணர்ந்திருந்தார்.எங்களுக்குள் நாங்கள் மோதிக்கொள்வதும் நாங்கள் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு காவல் நிலையத்துக்கும் நீதிமன்றத்துக்கும் நடையாய் நடப்பதும் எங்களை புதைப்பதற்கு நாங்களே வெட்டிக்கொள்ளும் புதை குழி என்பதை அவர் அறிந்திருந்தார்.
சாதியின் பெயரால் எங்களை அடக்கி ஒடுக்கும் எங்களை மனிதர்களாக மதிக்க மறுக்கும் சாதி வெறியர்களுக்கு எதிராகவே எங்களது கோபம் திருப்ப வேண்டும் எங்களது போராட்டம் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.அதற்காகப் போராடினார்.
அதற்கான தெளிவை அவருக்கு கொடுத்தது யாழ்ப்பாண அதிகர வர்க்கத்துக்கு எட்டிக்காயைவிட கசப்பாக இருந்த பொதுவுடமை சித்தாந்தமாகும்.
இது இந்த சாதிய தளைகளை அறுப்பதற்கு எனக்கு உந்து சந்தியாக அமைந்தது.
(தொடரும்)

ஞாயிறு, 5 மே, 2013

பிரான்சில் மாபெரும் கூட்டுக்குடும்ப அமைப்பு


நாங்கள் இந்திய சமூக அமைப்பிலும் ஈழத்தின் ஆரம்பகால சமுக அமைப்பிலும் கூட்டுக்குடும்ப அமைப்பு முறை இருந்ததை அறிந்திருக்கிறோம்.ஈழத்தில் அது தற்போது வழக்கிழந்து போய்விட்டாலும் இந்தியாவில் நடுத்தர மேல்தட்டு வர்க்கத்தினரிடம் அது தொடர்வதை பார்த்தி;ருக்கிறோம்.இந்த கூட்டுக் குடும்ப அமைப்பு முறை ஆணாதிக்கத்தின் வடிவமாகவும் குடம்ப வன்முறையினதும் மாமியார் மருமகள் கொடுமையின் இருப்பிடமாகவும் இருப்பதாக சினிமாக்களிலும் சின்னத்திரைகளிலும் நிறையவே சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.இதிலே மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் இருந்தாலும் மூத்த தலைமுறையின் ஆதிக்கமும் இளைய தலைமுறையினரின் சுதந்திரத்துக்கான கட்டுப்பாடுகளும் இந்த கூட்டுக்குடும்ப முறையில் அதிகம் என்பது மறுக்க முடியாது.
ஐரோப்பாவிலேஇதைப் போன்ற கூட்டுக்குடும்ப முறையொன்று இருந்தது என்றால் உங்களுக்கு சிலவேளை ஆச்சரியமாக இருக்கலாம்.1748 பேர் ஒன்றாக சேர்ந்து கூட்டுக் குடும்பமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்றால் உங்களால் நம்பமுடியாமல் இருக்கலாம்.; இவர்கள் இந்திய கூட்டுக் குடும்பங்களைப் போல நிர்ப்பந்தத்;தின் அடிப்படையில் வாழாமல் எல்லாரும் சமத்துவமான உரிமைகளோடு மனமொத்து கூட்டாக வாழந்தார்கள்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசிலிருந்து 170 கிலோமீட்டர் தொலைவில் பிரான்சின் இரண்டாவது நிர்வாகப்பிரிவான லென்(L’Asine) மாவட்டத்திலுள்ள பிரதான நகரங்களான லோன் மற்றும் சென்ட் குயின்டன் ஆகிய நகரங்களுக்கிடையில் இருக்கும் கீஸ்(Guise) என்ற சிறு நகரத்திலேயே வரலாற்று சிறப்பு மிக்க இந்த கூட்டுக்குடும்பம் இருந்தது.
fondation_godinஓரு சிறிய கோட்டையுடன் கூடிய இந்த நகரத்தில் இருந்த தொழில் அதிபரான Jean-Baptiste André Godin ஜோன் பப்ரிஸ்ட் ஆந்திரே கோடன் என்பவரின் சிந்தனையில் உதித்ததே இந்த பிரெஞ்சு கூட்டுக்குடும்ப அமைபபு முறையாகும்.
வீடுகளுக்கான கணப்படுப்புகள் மற்றும் சமையல் அடுப்புகளை தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்திவந்த கோடன் அவரது சமகால தத்துவவாதிகளான ஹெகல் மார்க்ஸ் ஏங்கல்ஸ் ஆகியோரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு 1846 ம் ஆண்டு தனது தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கி அவர்களை கூட்டுக்குடும்பமாக வாழ வைக்க வேண்டும் என்ற எண்ணினார்.ஒரே கூரையின் கீழ் தொழிலாளர்களுக்கான வீடுகளை அமைப்பது.விளையாட்டு மைதானம் நீச்சல் தடாகம் நூலகம் சிறுவர்களுக்கான பாடசாலை வயது வந்த பிள்ளைகளுக்கான கல்லூரி வணிக வளாகம் வெதுப்பகம் ஆரம்ப சகாதார நிலையம் என்று அனைத்தையும் ஒரே இடத்தில் அமைத்து தொழிலாளர்களே கூட்டாகச் சேர்ந்து அவற்றை நிர்வகிக்க வேண்டும் என்று விரும்பினார்.
Le familist_re de Guise _ _22_1859 ம் ஆண்டு தன்னுடைய எண்னத்திற்கு செயல்வடிவம் கொடுத்த அவர் 30 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் மூன்று பெரும் தொடர்மாடிக் குடியிருப்புக்களை கட்டுவித்தார்.இந்த தொடர்மாடி குடியிருப்புகளின் சிறப்பம்சம் இது தமிழர்களுடைய நாற்சார் வீட்டு அமைப்பு முறையை ஒத்ததாக கட்டப்பட்டதாகும். நடுவில் பெரிய முற்றம்.அதை சூழ நான்கு பக்கமும் கட்டிடங்கள்.நான்கு மாடிகளை கொண்ட அந்தக் கட்டித்தில் உள்ள அனைத்து வீடுகளின் வாசல்களும் முற்றத்தை பார்ப்பது போலவே அமைக்கப்பட்டன.ஒரே நேரத்தில் எல்லோரும் தங்கள் தங்கள் வாசலுக்கு வந்து அனைவரையும் பார்க்கக் கூடிய விதத்தில் இந்த கட்டிட அமைப்பு அமைக்கப்பட்டது.இவ்வாறு அமைக்கப்பட்ட எல்லா வீடுகளுக்கும் ஒரே மாதியான சமையல் அடுப்புக்கள் விட்டு தளபாடங்கள் கணப்படுப்புகள் எல்லாம் வழங்கப்பட்டன.
பிள்கைளை பராமரிப்பதற்கான குழந்தைகள் காப்பகம் ஆரம்ப மருத்துவ நிலையம் ஆரம்ப பாடசாலை உயர் கல்லூரி உட்பட அனைத்தும் 1864 ம் அண்டளவில் நிறுவி முடிக்கப்பட்டன.1868 ம் ஆண்டு கணக்கின் படி 1748 வயது வந்தவர்களும் அவர்களது குழந்தைகளும் இந்த கூட்டுக் குடும்ப அமைப்பில் அங்கத்தவர்களாக இருந்தனர். அதே வருடம் கோடன் தனது தொழிற்சாலையை தொழிலாளர்களுக்கும் உரிமையுள்ள ஒரு பொது நிறுவனமாக மாற்றினார்;.
தொழிற்சாலை வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புக்கள் அனைத்தையும் ஒரு பொது அமைப்புக் கூடாக தொழிலாளர்களே நிர்வகித்ததுடன் அனைவருக்கும் சமமான வருமானத்தை சம்பளமாக எடுத்துக்கொண்டு மீதியுள்ள இலாபத்தை மீண்டும் அந்த பொது நிறுவனத்தின் கணக்கில் சேர்த்து அதை விரிவு படுத்தினர்.
GUISEபாரிசில் நடந்த பிரெஞ்சு புரட்சிக்கு நிகரான சமூகப்புரட்சியாக கோடனுடைய இந்த கூட்டுக் குடும்பத்திட்டம் கருதப்பட்டது.பல ஐரோப்பிய நாடுகளில் அடிமை முறையும் சமூக ஏற்றத்தாழ்வும் ஒழிக்கப்படாத-அந்தக் காலகட்டத்தில் பெண்களுக்கு சமஉரிமையும் ஆண்களுக்கு நிகராக தொழில் செய்யும் உரிமையும் வழங்கப்படாத அந்தக் காலகட்டத்தில் தன்னுடைய தொழிற்சாலையில் பணி புரிந்த தொழிலாளர்களை ஒரே குடும்பமாகவும் சமத்துவ மனிதர்களாகவும் மாற்றிய அவரது செயற்பாடு பிரெஞ்சு புரட்சியின் உன்னதமான கோட்பாடுகளான விடுதலை சமத்துவம் சகோதரத்துவம் என்பவற்றுக்கு அhத்தமும் வடிவமும் கொடுக்கப்பட்ட ஒன்றாக பார்க்கப்பட்டது.
1888 ம் ஆண்டு கோடான் மறைந்த பின்பு பிரான்சில் நடந்த உள்சாட்டு குழப்பங்களின் தாக்கமும் 20 ம்; நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழில் துறை போட்டி மற்றும் சந்தைக்கான போட்டி அதை தொடாந்து ஏற்பட்ட மதலாம் உலக யுத்தம் என்பவற்றால் இந்த கூட்டுக் குடும்ப அமைப்பு வலுவிழக்க ஆரம்பித்து.அடுத்த தலைமுறையில் வந்த பிள்ளைகள் உயர் கல்விகற்று வெளி வேலைகளுக்கு சென்றது, வெளியாரை திருமணம் செய்தது என்பவற்றால் பெருமளவுக்கு அந்த குடியிருப்பில் இருந்து வெளியேறிவிட்டார்கள்.
கோடன் ஆரம்பித்து நடத்திய அந்த தொழிற்சாலை கூட இன்று அதே பெயரில் தனியார் நிறுவனமாகி கூட்டுக்குடும்ப பாரிம்பரியத்தை கொண்ட தயாரிப்பு என்ற அடையாளத்துடன் இன்றைய உலகமயமாதல் சந்தையில் தனது பொருட்களை
சந்தைப்படுத்தகிறது.
ஆயினும் இன்னும் பல குடும்பங்கள் தாங்கள் இந்த கூட்டுக் குடும்ப பாரம்பரித்தை சோந்தவர்கள் என்று பெருமையுடன் கூறிக்கொண்டு அங்கு வாழ்ந்து வருகிறார்கள்

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

நினைவழியா வடுக்கள்-18


நினைவழியா வடுக்கள்-18

1956 ம் ஆண்டு ஒருங்கினைந்த பருத்தித்துறை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பொன்; கந்தையா தெரிவு செய்யப்பட்டிருந்தார்.அவரது இந்த வெற்றி என்பது மாற்றத்தை வேண்டி நின்ற மக்களின் வெற்றியாகவே கருதப்பட்டது.
1940 களின் இறுதியில் சமூக விடுதலைக்கான பணியை ஆரம்பித்திருந்த அவர் 1950களின் நடுப்பகுதிவரை பிரதேசம் தழுவிய களப்பணிகள் ஊடக சமூகத்தின் தேவைகளை பிரச்சனைகளுக்கான முடிச்சுக்களை துல்லியமாக அடையாளம் கண்டுகொண்டார்.
அந்தக்காலகட்டத்தில் வடமராட்சிப்பிரதேசத்தில் வெண்காயம் மிளகாய் போன்ற உப உணவு பயிர் செய்கையும் புகையிலை போன்ற பணப்பயிர் செய்கையும் முக்கியமான தொழிலாக இருந்தது.
இந்தப் பயிர் செய்கையை பஞ்;சமர்கள் வாரத்துக்கு அல்லது குத்தகைக்கு செய்த அதேநேரத்தில் வெள்ளார்களும் கோவியர் முதலான இடைநிலை சாதியினரும் முக்கிய தொழிலாக செய்துவந்தனர்.விரல் விட்டு எண்ணக்ககூடிய ஒரு சில நிலவுடமையாளர்களை தவிர இந்தத் தொழிலைச் செய்த ஏனைய அனைவரும் கூலி விவசாயிகள் என்ற நிலையிலேயே இருந்தனர்;.
இந்த பயிர் செய்கையை ஆரம்பிப்பதற்காக வட்டிக்கு கடன் எடுப்பதும் பின்னர் அறுவடை முடிந்ததும் அந்தக் கடனை திருப்பிச் செலுத்துவதும் இந்தத் தொழிலின்; மரபாக இருந்தது.இந்த விவசாயிகளுக்கு கடன் கொடுக்கும் நிலவுடமையாளர்கள் அந்தக்கடனை அறவிடுவதற்காக அவர்களின் உற்பத்திப் பொருட்களை தாங்களே கொள்வனவு செய்வதற்காக வெண்காய சங்;கம் அல்லது வியாபாரச்சங்கம் என்ற பெயரில் சங்கங்களை ஆரம்பித்திருந்தார்கள்.

சமூக அந்தஸ்த்தும் அதிகார பலமும் மிக்க இவர்களை மீறி வேறெந்த வியாபாரிகளும் நேரடியாக விவசாயிகளிடம் பொருட்களை கொள்வனவு செய்யமுடியாத நிலையும் விவசாயிகளும் இவர்களைப் பகைத்துக்கொண்டு அவர்களுக்கு பொருட்களை விற்க முடியாத நிலையுமே அப்போதிருந்தது.

இதனால் அந்த பணமுதலைகள் குறிக்கும் அறாவிலைக்கு தங்கள் உற்பத்திப் பொருட்களை விற்றுவிட்டு இந்த விவசாயிகள் வறுமையில் வாடிக்கொண்டிருந்தார்கள்.
மழை வெள்ளம் மற்றும் பூச்சித் தாக்கம் போன்ற புறக்காரணிகளால் விளைச்சல் பாதிக்கப்படும் போது வாங்கிய கடனுக்காக வட்டிக்கு வட்டி கட்டும் நிலையும் இந்த விவசாயிகளுக்கு இருந்தது.

இதைவிட இந்த விவசாயம் என்பது கிணற்றில் இருந்து நீரை இறைப்பதன் மூலமே மேற்கொள்ளப்பட்டது.
அதிலும் இந்த விவசாய நிலங்களில் இருந்த கிணறுகள் மிகவும் ஆளமானவை. இந்தக் கிணறுகளில் இருந்து தண்ணீரை விவசாய நிலத்துக்கு பாய்ச்சுவதற்கு துலா மூலம் அள்ளி ஊற்றுவதுஇசூத்திரப் பொறிமுறையை பயன்படுத்தி ;இறைப்பது என்ற இரண்டு வழிமுறைகள் கையாளப்பட்டன.
துலாமூலம் அள்ளி ஊற்றும் போது துலா கயிற்றை பிடித்து தண்ணீரை அள்ளி ஊற்றவதற்கு ஒருவரும் துலாவின் மேல் ஏறி நின்று முன்பின் அசைந்து (துலா மிதித்தல்) தண்ணீர் அள்ளுவதை இலகுவாகக் இருவரும் அதை பயிருக்கு வாய்க்கால் மடைகளை திறந்து பாய்ச்சவதற்கு ஒருவரும் என்று குறைந்த பட்சம் நான்கு பேர் தேவைப்பட்டார்கள்.பொதுவாக அந்தக்காலகட்டத்தில் துலா மிதிக்கும் வேலையை பஞ்சமர்களே செய்தார்கள்.


நிலவுடமையாளர்கள் தாங்கள் நேரடியாக விவசாயம் செய்த நிலங்களில் இந்த துலா மதித்தல் என்பது அடிமை குடிமைகளின் கட்டயாய சேவை என்று பணிக்கப்பட்டிருந்து.சூத்திரக் கிணறு என்கிறபோது செக்கு போன்ற ஒரு அமைப்பில் அடி அச்சில் சக்கரங்களும் அந்தக் சக்ரங்களின் சுழற்சிக்கு ஏற்ப மேலும் கீழும் சென்று வரத்தக்கதாக இருப்புப் பட்டை (வாளிகள்) களும் பெருத்தப்பட்டிருக்கும் நடு அச்சிலிருந்து நீண்டு செல்லும் நுகத்தடியில் முனையில் மாடுகள் பூட்டப்பட்டிருக்கும். இந்த மாடுகள் சுற்றும் போது சக்கரங்கள் அசைந்து கீழே கிணற்றுக்குள் சென்று தண்ணீரை அள்ளிக் கொண்டு வந்து மேலே ஊற்றும்.இதற்கும் ஒரு மாடு அல்லது இரண்டு மாடுகளும் அதை ஓட்டுவதற்கு ஒருவரும் தண்ணிர் பாச்சுவதற்கு ஒருவரும் தேவைப்பட்டார்கள்.
1950 களுக்கு முன் வாரத்தை(குத்தகை பணம் அல்லது பொருள்) ஒழுங்காக செலுத்தாத அல்லது சாதிய மீறலில் ஈடுபட்டதற்காக தண்டனை விதிக்கப்பட்ட பஞ்சமர்கள் மாடுகளுக்கு பதிலாக இந்த சூத்திரக்கிணறுகளின் நுகத் தடிகளில் பூட்டி வேலை வாங்கப்பட்டதாக எனது அப்பு தெரிவித்திருந்;தார்
மொத்தத்தில் இந்த விவசாய முறை என்பது சுரண்டலையும் அடிமை குடிமை முறையையும் பாதுகாக்கின்ற ஒரு முறையாக இருந்து வந்தது.
இதை உடைத்தெறிவதற்கு பொன் கந்தையை பலமுறை முயன்ற போதும் அது முடியாமல் போனது.

உழைக்கும் விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டுறவுச் சங்கங்களை உருவாக்க வேண்டும்இ தண்ணீர் இறைக்கும் இயந்திரங்களை இறக்குமதி செய்து பயன்படுத்த வேண்டும் என்று அவர் சொன்ன போது அதிகார வர்க்கத்தினர் அதற்கு எதிராக சீறி எழுந்தார்கள்.கூட்டுறவு என்றால் என்ன? நளவன் பள்ளன் பறையைனோடு கூட்டுச் சேருவதா? என்று சாதி வெறியை தூண்டிவி;ட்டார்கள்.தண்ணீர் இறைக்கும் இயந்திரம் வந்தால் கிணறுகளில் உள்ள தண்ணீரையெல்லாம் அவை உறிஞ்சிவிடும்.கிணறுகளில் நீர் வற்றிவிடும் என்று அச்சுறுத்தினார்கள்.

பொன்; கந்தையா நாடளுமன்ற உறுப்பினராக ஆகியதும் விவசாய அலுவலர்களை நியமித்து தண்ணிர் இறைக்கும் இயந்திரங்களை இறக்குமதி செய்து முதலில் தனது கட்சித்தோழர்களின் விவசாய நிலங்களில் பயன்படுத்த வைத்தார்
அத்துடன் பலநோக்கு கூட்டுறவுச்சங்கங்களை உருவாக்கி விவசாயிகளுக்க மானிய விலையில் விளைபொருட்கள் மற்றம் உரம் கிருமிநாசினிகளை வழங்கவும் விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களை அந்தசங்கங்களே கொள்வனவு செய்வும் எற்பாடு செய்தார்.அதே வேளை இந்தக் கூட்டுறவுச்சங்கங்களிலிருந்து விவசாயிகள் விவசாயக் கடன் பெறவும் எற்பாடு செய்யப்பட்டது.
அதேபோல இந்த நினைவுக்குறிப்பில் நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல கள் இறக்குவதில் இருந்தசுரண்டல் பொறிமுறையான தவறணை முறையை நீக்கி மரவரி முறையை அமுல்படுத்தியதுடன் பதநீர் இறக்குவதை ஊக்குவிப்பதற்காக பதநீரிலிருந்து சீனி உற்பத்தி செய்வதற்காக பொலிகண்டியில் சீனித் தொழிற்சாலை ஒன்றiயும் பொன்; கந்தையா உருவாக்கினார்.இந்தத் தொழிற்சாலைக்கான இயந்திரங்கள் அப்போதையை சோவியத் யூனியனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அதிகாரத்தை வைத்துக்கொண்டு பொன் கந்தையா மேற்கொண்ட இந்த நடவடிக்கைகள் சாதியம் என்ற குட்டையில் ஊறி தேங்கிப் போயிருந்த சமூக அமைப்பில் உண்மையான மாறுதலைக் கொண்டுவந்தது.
தவறணை முறை நீக்கம் சீனித் தொழிற்சாலை அமைப்பு கூட்டுறவுச் சங்கங்கள் அமைப்பு என்பவற்றுக்கான சட்ட அங்கீகாரங்களை நாடாளுமன்றத்தில் பெற்றுவிட்டு கொழும்பில் இருந்து அவர் ஊர் திரும்பிய போது அதிகார வாக்கத்தினர் 'நளக் கந்தைiயாவே வருக' என்று உடுப்பிட்டி மாலிசந்தி நெல்லியடி கரவெட்டி பகுதி சுவர்களில் எழுதி அதற்கு பக்கத்தில் அவரது கட்சிச் சின்னமான அருவாள் சுத்தியலுக்கு பதிலாக கள் இறக்கும் தொழிலாளர்கள் பயன்படுத்தும் கத்தியையும் தளநாரையும் (மரம் ஏறம்போது காலில் மாட்டிக்கொண்டு ஏறுவது) சிவப்பு வர்ணத்தில் வரைந்து தமது வயிற்றெரிச்சலை வெளிப்படுத்திக் கொண்டார்கள்.
சமூக மாற்றத்துக்கும் அடக்குமுறைகளில் இருந்து விடுதலை பெறுவதற்கும் கல்வி முக்கியம் என்பதை உணர்ந்த பொன் கந்தையா தனது அடுத்த நடவடிக்கையாக அந்த கல்வியை அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் படியான வேலைத்திட்டங்களை ஆரம்பித்தார்.
கரவெட்டி சந்தாதோட்டம் கம்பர்மலை ஆகிய பகுதிகளில் அனைத்து மக்களும் கல்வியை பெறும் வகையில் ஆரம்பப் பாடசாலைகளை ஆரம்பித்த அவர் உயர் கல்வியையும் எந்தவித பாரபட்சமுமின்றி அனைவரும் பெறும் விதத்தில் அரச கல்லூரி (மத்திய கல்லூரி அல்லது மத்திய மகாவித்தியாலயம்) ஓன்றை பருத்தித்துறை தொகுதியில் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
இதற்கான அனுமதியை சிங்கள பிரதிநிதிகளை பெரும்பான்மையாகக் கொண்ட அப்போதைய இலங்கை அரசாங்கத்திடமிருந்து சுலபமாகப் பெற்றுக்கொண்ட அவர் நூற்றுக்கு 99.99 வீதம் தமிழர்களே வாழ்ந்த வடமராட்சிப் பிரதேசத்தில் அதாவது அன்றைய பருத்தித்துறை தொகுதியில் அந்தக் கல்லூரியை அமைப்பதற்கான நிலத்தை பெற்றுக்கொள்வதில் பெரும் நெருக்கடிகளை எதிர் கொண்டார்.
பருத்தித்துறை தொகுதியின் மையப்பகுதியாகவும் கல்வியறிவில் மிகவும் பின் தங்கிய பகுதிகளை அண்டியதாகவும் இருந்த கரணவாய் வடக்கு பிரதேசத்தில் இருந்த தரிசு நிலத்தை இந்தக் கல்லூரியை அமைப்பதற்காக அவர் தேர்ந்தெடுத்திருந்தார்.
இதை அறிந்துகொண்ட அதிகார வர்க்கத்தினர் அவசர அவசரமாக அந்த இடத்தில் சீமெந்து கட்டிடம் மொன்றை எழுப்பி அதற்கு பொன்னம்பல வித்தியாலயம் என்று பெயரும் வைத்து அங்கு ஒரு பாடசாலையை தாங்கள் உருவாக்கியிருப்பதாக அறிவித்ததுடன் அப்போதைய தமிழ் காங்கிரஸ் கட்சி தலைவராகவும் சட்ட மேதையாகவும் இருந்த ஜீ.ஜீ.பொன்னம்பலத்தை தொடர்புகொண்டு அதற்கு சட்ட அங்கீகாரமும் பெற்றுவிட்டனர்.
இதனால் ஏமாற்றமடைந்த பொன்; கந்தையா உடுப்பிட்டி இமையாணன் பகுதியில் அந்தக் கல்லூரியை அமைப்பதற்கு திட்டமிட்டதுடன் அதற்குரிய காணியை வழங்கும்படி உடுப்பிட்டி வல்வெட்டி பொலிகண்டி பகுதிகளைச் சேர்ந்த நிலக்கிழார்கள் பலரிடம் கேட்டிருந்தார்.ஆனால் அவர்கள் யாரும் அதை வழங்க மறுத்துவிட்டனர்.
இதிலே முக்கியமாக தமிழ் பிள்ளைகளுக்கு கல்வியறிவை ஊட்டுவதற்கு ஒரு கல்லூரியை கட்டுவதற்கு காணி வழங்க மறுத்த உடுப்பிட்டியைச் சேர்ந்த ஒரு மேட்டுக்குடி கனவான்இ பிள்ளைகளற்ற தனது மலட்டுச் சொத்தை அதாவது காணியை தமிழ்நாட்டிலுள்ள சிதம்பரம் கோவிலுக்கு எழுதிவைத்தது கண்டிப்பாக இங்கே குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்;.
அதன் பின்னர் பல்வேறு இடங்களில் தேடியும் அந்தப்பாடசாலை அமைப்பதற்குரிய காணி கிடைக்காத நிலையில் கடைசியாக நல்லஉள்ளம் படைத்த சிலரின் ஒத்தாசையுடன் ஒருவழியாக கரவெட்டிப்பகுதியில் தற்போது விக்னேஸ்வரா கல்லூரி இருக்கும் இடத்தில் அந்தக் கல்லூரியை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தன.ஏறக்குறைய அங்கே கல்லூரி கட்டப்படுவது உறுதி என்று ஆகிவிட்ட நிலையில் ஒரு போதும் வடமாராட்சிப்பிரதேசத்தில் அப்படி ஒரு கல்லூரியை அமைக்கவிடக் கூடாது என்று கங்கணங்கட்டிக்கொண்டிருந்த அதிகார வர்க்கத்தினர் நேரடியாக கொழும்புக்குச் சென்றுஇ சாதியத்தை கட்டிக்காப்பதும் தங்களது அரசியல் கடமைகளில் ஒன்றென்ற நினைப்புடன் செயற்பட்ட தமிழ் அரசில்வாதிகளின் துணையுடன் சிங்கள ஆட்சியாளர்களை சந்தித்து 'கரவெட்டியில் அந்த மத்திய கல்லூரியை அமைப்பதற்கு தெரிவு செய்ப்பட்டுள்ள இடம் அடிக்கடி சாதிக்கலவரங்களும் வன்முறைகளும் நடக்கும் பகுதிகளுக்கு அண்மையில் உள்ளது என்றும் மாணவர்கள் அங்கு அமைதியான சூழலில் கல்வி கற்க முடியாது என்றும் தெரிவித்தனர்.அத்துடன் அது போக்குவரத்து வசதி இல்லாத ஒரு ஒதுக்குப்புறம் என்றும் ஆயிரம் இரண்டாயிரம் மாணவர்கள் கல்வி கற்கக் கூடிய ஒரு பாடசாலையை ஒதுக்குப்பறத்தில் அமைக்கக் கூடாது என்றும் தெரிவித்தனர்.அது மட்டுமல்லாமல் குடி தண்ணீருக்கு தட்டுப்பாடு உள்ளது என்றும் அங்கு பாடசாலை அமைந்தால் மாணவர்களுக்கு தண்ணீர் கிடைப்பது கஷ்டம் என்றும் கூறிவிட்டனர்.
அவர்களின் உள்நோக்கம் என்ன என்பதை அறியாமல் அவர்கள் நியாயத்தை எடுத்துக் கூறுவதாக நினைத்த சிங்கள ஆட்சியாளர்கள் அந்த இடத்தில் அந்த பாடசாலையை அமைக்க வேண்டாம் என்று கூறிவிட்டனர்.
அரசாங்கம் இவ்வாறு அறிவித்த மூன்று மாத காலத்துக்குள் புதிய இடத்தை தெரிவு செய்து அறிவிக்காதுவிட்டால் அந்தக் கல்லூரி அமைப்பதற்கான அனுமதி இரத்தாகிவிடும் ஆபத்து ஏற்பட்டிருந்தது.
மூன்றுமாத காலத்துக்குள் புதிய இடம் ஒன்றை தெரிவு செய்வது பொன். கந்தையாவுக்கு நெருக்கடி மிகுந்த விடயமாக இருந்தது.
இதேவேளை நெல்லியடி சந்திக்கு அண்மையில் நெல்லியடி வதிரி வீதியில் அவருக்கு சொந்தமாக ஒரு சிறுதுண்டு நிலமிருந்தது.அதோடு இணைந்ததாக அவரது உறவினர்களின் நிலங்களுமாக அந்தப் பகுதி பெரியதொரு விவசாய நிலத் தொகுதியாக இருந்தது.அங்கே அந்தக் கல்லூரியை அமைப்பது என்ற முடிவுக்கு வந்த அவர் நம்பிக்கையோடு களத்தில் இறங்கி தன்னுடைய உறவினர்களுக்கு அந்தப்பாடசாலை அமைக்கப்பட வேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறி அதற்காக தங்களுடைய நிலங்களை வழங்குவதற்கு அவர்களை சம்மதிக்கவைத்தார்.
கடைசியாக அனைத்து தடைகளையும்இ எதிர்ப்புக்களையும்இ குழி பறிப்புகளையும் மீறி அந்த இடத்தில் அந்த நெல்லியடி மத்திய மாகா வித்தியாலம் அல்லது நெல்லியடி மத்திய கல்லூரி என்று அழைக்கப்படும் அந்தக்கல்லூரி உருவாக்கப்பட்டது.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் உருவாக்கப்பட்ட முதலாவது மத்திய மகாவித்தியாலயம் என்ற பெயரைப்பெற்ற அந்தக் கல்லூரி தங்கும்விடுதி வசதியையும் கொண்டிருந்தது.அந்தக் கல்லூரியில் குடாநாட்டின் வடமராட்சி கிழக்கு வலிகாமம் தென்மராட்சி தீவகம் உட்பட வன்னி வவுனியா மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை மற்றும் மலையகம் முதலான பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மாணவர்கள் புலமைப்பரிசில்கள் (அரச உதவி)பெற்று வந்து தங்கிப்படித்தனர்.அனைத்து மாணவர்களுக்கும் எந்தவித ஏற்றத்தாழ்வும் இன்றி கல்வியறிவை புகட்டிய நிறுவனமாக அது விளங்கியது.
பாடசாலைகள் அரசுடமையாக்கப்படும் முன்பு உயர் கல்வியும் அவற்றை வழங்கும் கல்லூரிகளும் அதிகார வாக்கத்தின் ஏகபோகச் சொத்துக்களாக இருந்தததும் பஞ்சமர்கள் மற்றும் இடைநிலை சாதிகளையும் பிறமாவட்டங்களையும் சேர்ந்த மாணவர்கள் கிறீஸ்தவமிசனறி;கள் மற்றும் அமெரிக்க மிசனறிகளால் நடத்தப்பட்ட கல்லூரிகளிலே உயர்கல்வியை பாரபட்சமின்றி தொடரக் கூடியதாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அடுத்தபடியாக பருத்தித்துறை தொகுதியில் ஆதார மருத்துவனை ஒன்றை அமைப்பதற்கான அனுமதியையும் பொன். கந்தையா பெற்றிருந்தார். அதையும் அவர் உடுப்பிட்டி பகுதியில் நிறுவுவதற்கு திட்டமிட்டிருந்தார். ஆனால் கல்லூரிக்கு கட்டிடம் கட்டுவதற்கு நிலம் கொடுத்க மறுத்ததைப் போல அதற்கும் அதிகார வாக்க நிலவுடமையாளர்கள் நிலம் கொடுக்க மறத்தனர். இறுதியில் மந்திகையில் அந்த மருத்துவமனை அமைக்கப்பட்டது.அதுவே இன்று பருத்தித்துறை ஆதார மருத்துவமனை என்ற பெயரில் இயங்கும் யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள இரண்டாவது பெரிய மருத்துவமனையாகும்.
பொன் கந்தையா நாடாமன்ற உறுப்பினர் பதவியை பயன்படுத்தி தமிழ்
சமூகத்தின் அடிப்படை முரண்பாடாக இருந்த சாதிய முரண்பாட்டடின் அடித்தளத்தை தகர்த்தெறிவதற்கான வேலைதிட்டங்களை நடைமுறைப்படுத்திய அதேநேரத்தில் இனப்பிரச்சனை விடயத்திலும் அவர் காத்திரமான பாத்திரத்தை வகித்தார்.
1956ல் பண்டாரநாயக்கா சிங்களத்தை இலங்கைத்தீவின் ஆட்சி மொழியாக்கும் சட்டத்தை கொண்டுவந்த போது அதை எதிர்த்து நெருக்கடியில் இருந்து நெருக்கடிக்கு என்ற தலைப்பில் நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்தது.
பொன் கந்தையாவின் காலத்தில் அரசியலில் இருந்த தமிழரசுக்கட்சி மற்றும் தமிழ் காங்கிரஸ் கட்சி அரசியல்வாதிகள் 10 முதல் 15 வருடகாலம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகித்தவர்களாகவும் 30 முதல் 40 வருடங்கள் அரசிலில் ஈடுபட்ட அனுபவம் உள்ளவர்களாகவும் இருந்தார்கள்.
ஆனால் அவர்கள் இந்த 15 வருட பதவிக்காலத்திலும் 40 வருட அரசியல் வாழ்விலும் செய்யாத அல்ல செய்யவிரும்பாத சமூக மாற்றத்தை பொன் கந்தையா 1956 ல் இருந்து 1960 வரையிலான 5 வருடகாலத்தில் நிகழ்த்திக்காட்டினார். இதிலே முக்கியமாக குறிப்பிட வேண்டிய வியடம் அவர் எந்தவொரு கட்டத்திலும் சலுகைகளுக்கான அரசாங்கத்திடம் மண்டியிடவோ-ஒட்டிக்கொள்ளவோ இல்லை.அதே போல மேடைகளில் வீர முழக்கங்களை முழங்கிவிட்டு இரகசியமாக பின்கதவால் சென்று பேரம் பேசவுமில்லை.நேர்மையான முறையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு இருக்கக் கூடிய அதிகாரத்தை பயன்படுத்தி இவற்றை பெற்றுக்கொண்டதாகும்.

குறிப்பாகச் சொல்வதானால் பொன் கந்தையா தமிழ் சமூகத்தின் அடிப்படை முரண்பாடாக இருந்த சாதிய முரண்பாட்டையும்; அதை கட்டிக்காத்துவந்த அடிமை குடிமை முறையிலான சுரண்டல் அமைப்பையும் தகர்தெறிவதற்கான துணிச்சலை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஊட்டியதுடன் அதற்கான பேராட்டத்தில் தான் முன்நிலையில் நின்று தோள் கொடுத்து அதற்கான வழிகாட்டியாகவும் இருந்தார். அவர் அரசிலில் இருந்தது ஒரு 15 வருடங்கள் தான் இருக்கும் ஆனால் இந்தக் குறுகிய காலத்தில் தமிழ்
சமூகத்தில் அவர் எற்படுத்திய மாற்றம் என்பது அளப்பரியது.

1960 தேர்தலில் பருதித்துறை தேர்தல் தொகுதி பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் பொன் கந்தையா போட்டியிட்டார்.அவரை எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என்பதில் அதிகார வாக்கத்தினர் கறியாக இருந்தனர்
ஆவரை எதிர்த்து சமசமாஜக் கட்சி வேட்பாளரான ஆர்.ஆர். தர்மரத்தினம் போட்டியிட்டது அவர்களுக்கு சாதகமாக அமைந்தது. அந்தத் தேர்தலில் இடதுசாரி வாக்குகள் இரண்டாகப் பிரிந்ததாhல பொன் கந்தையா தோல்வியினைச் சந்திக்க நேர்ந்தது. அந்தத் தேர்தலில் கிடைத்த கொம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடைத்த வாக்குகளையும் லங்காசமசமாஜக் கட்சிக்குக் கிடைத்த வாக்குகளையும் கூட்டினால் அதில் வெற்றிபெற்ற எம்.சிவசிதம்பரத்திற்குக் கிடைத்த வாக்குகளிலும் பார்க்க அதிகமாகும்.
இந்தத் தேர்தலில் பொன் கந்தையாவுக்கு 5427 வாக்குகளும் ஆர்.ஆர்.தர்மரட்ணத்துக்கு 4573 வாக்குகளும் கிடைத்தன. எம்.சிவசிதம்பரத்திற்கு 7365 வாக்குகளே கிடைத்தன.
அந்தத் தேர்தலில் அவர் தோற்றுப் போனாலும் சமூகமாற்றத்துக்கான தனது போராட்டத்தை அவர் கைவிடவில்லை.வழமைபோல தனது களப்பணிகளை அவர் தொடர்ந்தார்.
துர்ரதிஷ்டவசமாக கொடிய புற்றுநோய் தாக்கத்துக்குள்ளான அவர் தனது 46 வது வயதில் 1960 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் காலமானார்.
அவருடைய மறைவு மாற்றத்தை வேண்டி நின்ற மக்களுக்கு பேரிழப்பாக இருந்தது
(தொடரும்)

பின் இணைப்பு-
நான் இந்தப்பதிவிலே நெல்லியடி மத்திய மகா வித்தியாலம் பற்றி எழுதிய போது பல நண்பர்கள் கால வேறுபாடு இருப்பதாகவும் அந்தப் பாடசாலை 1921ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதென்றும் 1946ம் ஆண்டு அது அப்போது கல்வி அமைச்சராக இருந்த சி.டபிள்யூ.கன்னங்கராவால் மத்திய மகாவித்தியாலயமாக தரமுயர்த்தப்பட்ட தென்றும் சில நண்பர்கள் சுட்டிக்காட்டினார்கள்.எனக்கும் அந்தக் குழப்பம் இருந்தது.வரலாறு அப்படித்தான் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.
இலங்கைக்கு பிரித்தானியர்களிடந்து சுதந்திரம் கிடைக்காத காலகட்டத்தில் அதுவும் வடமராட்சிப் பிரதேசத்தில் தேவரையாளி இந்துக்கல்லூரியை நிறுவதற்கு பெரும் பாடுபட்டகாலத்தில் இப்படி ஒரு அரசினர் கல்லாரி அமைக்கப்பட்டதா? என்ற சந்தேகம் எனக்கு இருந்தது.
இது தொடர்பாக எமது பிரதேசத்தை சேர்ந்த என்னைவிட வயதில் மூத்த சில கல்விமான்கள் மற்றும் பொன் கந்தையா வாழந்த காலத்தில் வாழ்ந்த அவரது கட்சித் தோழர்கள் பலரிடமும் இதுபற்றி விசாரித்தேன்.
உண்மையில் ஆரம்பத்தில் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தின் பெண்கள் பிரிவு பாடசாலையாக இயங்கிய உடுப்பிட்டி மாலிசந்தி வீதியல் வதிரிச் சந்திக்கு அண்மையிலுள்ள செல்லையா பாடசாலை என்பதே 1921ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதென்றும் பின்னர் அது 1946 ம் ஆண்டு சி.டபிள்யூ.கன்னங்கராவால் அரசினர் பாடசாலையாக அங்கீகரிக்கப்பட்டதென்றும் டபிள்யூ.தகாநாயக்கா கல்வியமைச்சராக இருந்த  பொன்;கந்தையாவின் காலகட்டத்தில் தான் அந்தப்பாடசாலையையும்  இணைத்து நெல்லியடி மத்திய மகா வித்தியாலம்  உருவாக்கப்பட்டதாக அறிய முடிந்தது.
நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தை உருவாக்கியதில் பொன். கந்தையாவின் பங்கை திட்டமிட்டு முடிமறைக்கும் செயலே இந்த வரலாற்று திரிபு என்றும் பலரும் கூறினார்கள்.இந்தக் கல்லூரியன் வரலாற்றைக் கூறும் எந்த அதிகார பூர்வ பதிவுகளிலும் ஒப்புக்குக் கூட பொன் கந்தையாவின் பெயர் இடம்பெறவில்லை என்பது கவனக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்த நண்பர்கள் எனக்கு எழுதினால் அதை நான் இந்தத் தொடரில் இணைத்துக்கொள்வேன்.
0000

பின்னிணைப்பு-2
(1956 ல்; சிங்களம் மட்டும் சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பொன்;கந்தையா ஆற்றிய உரையின் ஒரு பகுதி) 
கௌரவ சபாநாயகர் அவர்களே! இந்த மசோதாவுக்கு நான் 
எதிர்ப்புத்தெரிவிக்கின்றேன். இந்த மசோதாவை எதிர்ப்பதற்கான 
எனது நோக்கு, நான் ஒரு தமிழனாக இருக்கின்றேன்  என்ற உண்மையை மட்டுமே  அடிப்படையாகக் கொண்டதல்ல. ஒரு தமிழன் என்ற வகையில், எனக்கு அருமையாக இருக்கின்ற அனைத்தையுமே இந்த மசோதா திருடுகின்றது என்றே நான் நம்புகின்றேன். எனது கடந்த 
காலத்தையும் நிகழ்காலத்தையும் இது மறுக்கின்றது என்பதோடு, கேடு சூழும் இந்தச் சட்டம், சட்டப் புத்தகத்திலிருந்து நீக்கப்படாதிருப்பின், எமது குழந்தைகளினதும் அவர்தம் தலைமுறைகளினதும் எதிர்காலத்தையும் மறுத்துக் கொண்டிருக்கும். இந்த மசோதாவின் மூலம் 
அரசாங்கம் இந்த நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்கள் சுதந்திரமாகவும் கௌரவமாகவும், நாட்டின் குடிமக்களாகவும் இருந்து கொண்டு வாழும் பயனுள்ள வாழ்க்கையையும் அதற்கான  உரிமையையும் மறுக்கின்றது. நாங்கள் கொண்டிருந்த, கொண்டுள்ள, கொண்டிருக்க வேண்டும் 
என்று அவாவுகின்ற எல்லாவற்றையுமே இது எங்களுக்கு மறுக்கின்றது.
எனது தாய் எனக்கு உணவூட்டியபோது பாடிய அந்த மொழியை, எனது மனைவி எனது குழந்தைக்கு அதனது முதல் மகிழ்ச்சியையும் வருத்தத்தையும் வெளிப்படுத்த பயிற்சியளித்த 
அந்த மொழியை, எனது தாயோடும் மனைவியோடும் குழந்தைகளோடும் பேசுவதற்கு இந்த  அரசோ அல்லது வேறு எந்த அரசுதானுமோ அல்லது உலகின் கொடுங்கோலன் எவனுமோ தடைபோட முடியாது.
 எனது சொந்த மொழியைப் பேசுவதற்கு எவரும் தடைபோட முடியாது. 
சட்டங்களும் தடுக்க முடியாது. அந்த உரிமை பிரச்சினையாக இல்லை. புpரச்சினையாக  இருப்பதெல்லாம், நான் இந்த நாட்டின் குடிமகனாக இருந்து கொண்டு, நாளாந்த வாழ்விலும் அரசிலும் எனது மொழியை பிரயோகிக்கக் கூடிய உரிமைதான். எனது மொழி உரிமையை 
நீங்கள் மறுக்கின்ற பொழுது, இந்த நாட்டின் தமிழ் மகனாக நான் கொண்டிருக்கின்ற, கொண்டிருக்கக் கூடிய உரிமைகள் ஒவ்வொன்றையுமே நீங்கள் மறுக்கின்றீர்கள். 
நானும் எனது மக்களும் இல்லாது போய்விட வேண்டும், முடிந்துவிட வேண்டும் என்று உங்கள் போக்கில் நீங்கள் எடுத்த முடிவை எங்களுக்குப் பரிசாக வழங்குகிறீர்கள்.  
ஆகவே நீங்கள், உங்களது தர்க்கரீதியல்லாத, நியாயத் தன்மையற்ற ஆனால் அதிகார பலமும் ஆயுத பலமும் கொண்ட மேலாதிக்க பலத்துடன் என்னையும் எனது மக்களையும் இந்த அழகிய நாட்டின் மண்ணிலிருந்து  அழித்து விடுவதற்கு முயல்கிறீர்கள்........

.......நான் ஒரு கம்யூனிஸ்ட். கம்யூனிஸ்ட்டாக இருப்பதில்; பெருமையடைபவன். இப்போதைய சமூக பொருளாதார கட்டமைப்பாலும், இதனைப் பாதுகாக்கின்ற அரசியல் நிறுவனங்களாலும் நசிபட்ட, காயப்பட்ட மக்களைக் கொண்ட அமைப்புதான் எமது கட்சி. சுரண்டலிலும் கொடுங்கோன்மையிலும் நிலைகொண்ட அநீதியான சமூகங்கள் அறியாமையிலும், விரக்தியிலும், அவலங்களிலும் வாழ்கின்ற ஆயிரமாயிரம் மக்களைக் குப்பைக் குவியல்;களில் வீசியெறிந்து கொண்டிருக்கின்றன. குருட்டாட்ட சக்திகளின் நிரந்தர துன்புறுத்தலுக்கு இலக்காகும் அவர்கள் அவற்றைப் புரிந்து கொண்டு துடைத்தெறிய முடியாதவர்களாக இருக்கின்றார்கள்.  
இவ்வாறு உரிமை மறுக்கப்பட்டவர்களின் கட்சிதான ; கம்யூனிஸ்ட் கட்சி. அரசியல், பொருளாதார, 
சமூக ரீதியான எல்லா நடவடிக்கை மட்டங்களிலும் அவர்களது உரிமைக்காக அது 
போராடுகின்றது. ஒடுக்குமுறை என்ன வடிவத்தில் தோன்றினாலும் அதற்கெதிராக அது 
போராடுகின்றது. எமது அரசியல் தத்துவத்தின் இந்த அடிப்படை காரணமாகத்தான் கம்யூனிஸ்ட் கட்சியினராகிய நாங்கள் முழுப்பலத்துடன் இந்த மசோதாவை எதிர்க்கின்றோம். இந்த நாட்டில் 
வாழ்கின்ற எல்லா தேசிய இனத்தவர்களும் தமது மொழியைப் பிரயோகிக்கவும், தங்களைத் தாங்களே தமது மொழியில் ஆளவும், தமது மொழியையும் பண்பாட்டையும் வளர்க்கவும் விருத்தி 
செய்யவும், இயல்பானதும் தலையிடப்படாததுமான உரிமையைக் கொண்டுள்ளார்கள் என நம்புகிறோம். 
மற்றெந்த மொழிக் குழுக்களையும்விட, எந்தவொரு மொழிக் குழுவும் கூடுதலாகவோ குறைந்ததாகவோ கொண்டிருக்க முடியாத ஒரு உரிமைதான் இது. 
குடியுரிமையின் உரிமைகளையும் கட்டுப்பாடுகளையும் பிரயோகிப்பதிலும், அனுமதிப்பதிலும், ஒரு நபரோ அல்லது மொழிக்குழுவோ, அவரது அந்தக் குழுவினது மொழி காரணமாக, அடுத்த 
நபருக்கோ அல்லது குழுவுக்கோ கூடிய நிலையிலோ குறைந்த நிலையிலோ வைக்கப்பட முடியாது. 
இந்த மசோதாவை நாங்கள் நோக்குகையில், இந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து தமிழ் பேசும் மக்கட் தொகுதியினதும் உரிமையை இது மறுத்துரைக்கிறது. இந்த உரிமை மறுப்பின் மீது நாங்கள் பாராமுகமாக இருக்க முடியாது என்பதோடு, கம்யூனிஸ்ட் கட்சியினராகிய நாங்கள் இந்த மசோதாவுக்கெதிராக வாக்களிப்போம். இதனது கொள்கைகளுக்கும் செயல்களுக்கும் எதிராக இயங்குவோம். 


புதன், 29 ஆகஸ்ட், 2012

அனுராதபுரம் தமிழர்களின் வரலாற்று தாயகம்! கட்டுடைக்கப்பட வேண்டிய சிங்களப் பொய்கள்!


அனுராதபுரம் தமிழர்களின் வரலாற்று தாயகம்!
கட்டுடைக்கப்பட வேண்டிய சிங்களப் பொய்கள்!
இலங்கைத் தீவின் புராதன நகரங்களில் ஒன்றான அனுராதபுரத்தை சிங்கள இனத்தவர்கள் தங்களது வரலாற்று நகரமாகவும் தங்களுக்கு மட்டுமே உரித்தான பௌத்த புண்ணிய பூமியாகவும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.
இதற்கு ஆதரமாக அங்குள்ள பௌத்த விகாரைகள் புனித வெள்ளரசு மரம் மற்றும் புராதன கட்டிடங்களை காட்டுகின்றனர்.
கிறீஸ்த்துவுக்கு முன்னர் 6ம் நூற்றாண்டில் கௌதம புத்தர் பிறப்பதற்கு முன்னர் உருவாகிய அனுராதபுர நகரத்தின் வரலாற்றை 1200 ஆண்டுகளுக்கு பின்னர் கிபி 6ம் நூற்றாண்டின் வாழ்ந்த(சிலர் அவர் கிபி4ம் நூற்றாண்டில் வாழந்ததாகவும் கூறுவர்)மகாநாபர் என்ற தேரவாத பிக்கு எழுதிய மாகாவம்சம் என்ற சார்புநிலை நூலை வைத்துக்கொண்டு அது தங்களுக்கு மட்டுமே உரித்தான வரலாற்றுத் தலைநகரம் என்று சிங்களம் பெருமை பேசிக்கொள்கிறது.
இலங்கை தமிழர்களின் வரலாற்றை இந்து சார்பு நிலையில் இருந்து நிறுவ முற்பட்ட பெரும்பாலான நமது தமிழ் வரலாற்றாசிரியர்களும் அது பௌத்த நகரமாக இருப்பதால் சிங்கள பௌத்த நகரம் என்று ஒத்தூதி மகாவம்சத்துக்கு விளக்கவுரையும் பொழிப்புரையும் எழுதிவிட்டனர்
மகாவம்சம் கிமு 505 நூற்றாண்டில் வட இந்தியாவிலிருந்து (இன்றைய ஒரிசா மாநிலம்) விஜயனும் அவனது 700 தோழர்களும் இலங்கைக்கு வந்ததில் இருந்;து பௌத்த சிங்களவர்களுடடைய வரலாறு தொடங்குவதாக சொல்கிறது.
விஜயன் வந்ததாக சொல்லப்படும் காலத்தில் இருந்து 1100 வருடங்களுக்குப் பின்னர் அது பற்றி மாகாநாபர் வெறும் மரபுக்கதைகளையும் செவிவழிக் கதைகளையும் அடிப்படையாக வைத்து எழுதி வைத்துள்ள புனைவை உண்மையான வரலாறு என்று நிரூபிப்பதற்கு எந்தவித ஆதரமும் இல்லை.
அதேவேளை அந்தக்காலகட்டத்தில் 2500 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை 700க்கும் அதிகமானவர்கள் கடல்வழியாக கடப்பதென்பது சாதாரணவிடயமல்ல.கடற்போக்கு வரத்தில் அனுபவம் உள்ளவர்களால் தான் அது முடியும்.அந்தக்கால கட்டத்தில் இந்திய பெரு நிலப்பரப்பில் இருந்த அரசுகளில் சோழர்களும் பாண்டியர்களும் மட்டுமே கடற்போக்குவரத்தில் அனுபவம் பெற்றவர்களாகவும் கடலில் ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும் இருந்தார்கள்.
ஓரிசாவிலிருந்து விஜயனும் அவனது தோழர்கள் 700 பேரும் உண்மையில் வங்கக் கடல் வழியாக இலங்கைக்கு பயணம் செய்திருந்தால் கூட அந்தக் கடலில் ஆதிக்கம் செலுத்திய சோழர்களின் கடற்படையின் கண்ணில் படாமல் இலங்கைக்கு சென்றிருக்க முடியாது.அந்தக்காலகட்டத்தில் காவிரிப்பூம் பட்டணம் மிகப் பெரிய கடல் வணிக நகரமாகவும் சோழர்களின் முக்கிய கடல் போக்குவரத்து மையமாகவும் திகழ்ந்தது.
எனவே விஜயன் இலங்கைக்கு வந்ததாக மகாநாபர் கூறியது தேரவாதப் பிரிவினரான தங்களை ஆரிய வம்சாவளியினர் என்று காட்டுவதற்கான முயற்சியாகும்.
இந்த இடத்திலே முக்கிய கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயம் இந்த விஜயன் இலங்கைக்கு வந்ததாக சொல்லப்பட்ட காலத்திலும் சரி மகாவம்சம் எழுதப்பட்ட காலத்திலும் சரி இலங்கையிலும் இந்தியாவிலும் இருந்தது தேசிய இனச் சிந்தனைகொண்ட ஆட்சிமுறைகள் அல்ல!தமிழத்தை எடுத்துக் கொண்டால் சோழர் ஆட்சி; பாண்டியர் ஆட்சி சேரர் ஆட்சி என்றகின்ற ஆட்சி முறைகளே அங்கு இருந்தன.இந்த மூன்று அரசுகளுக்குள்ளும் மொழி பண்பாடு சமயம் என்பவற்றில் இன வழிச் சிந்தனைகள் இருந்தனவே அன்றி இனம் சார்ந்த ஐக்கியம் இருக்கவில்லை.
குறிப்பிட்டுச் சொன்னால் பண்டைய குல வழிச் சமூக ஆட்சிமுறையில் இருந்து முற்றிலும் விலகாத அதன் தொடர்ச்சியான ஆட்சிமுறைகளே இருந்தன.
அது போலவே இலங்கையிலும் மகாநாபர் காலத்தில் இதையொத்த அரசுகளே இருந்தன.சிங்கள இனம் ஒரு தனித்துவமான இனமாக தோன்றிவிட்டதாக சொல்ல முடியாது.மாகாநாபர் பாளி மொழியில் தான் செய்யுள் வடிவில் மகாவம்சத்தை ஏட்;டில் எழுதியுள்ளார்.அனுராதபுரத்தை ஆண்ட எல்லாளனையும் சேனன் குந்திகன் புலஹத்தன், பாகியன், பணயமாறன், பிலயமாறன் மற்றும் தத்திகன் ஆகியோரையும் அவர் அந்நிய ஆக்கிரமிப்பார்கள் என்று கூறுகின்றாரே தவிர தமிழர்கள் என்று குறிப்பிட வில்லை. பிற்காலத்தில மாகாவம்சத்தை மொழியாக்கம் செய்த பௌத்த சிங்கள இனவாதிகள் தான் அவர்களை தமிழர்களாகவும் எல்லாளன் துட்ட கைமுனு யுத்தத்தை தமிழ் சிங்கள யுத்தமாகவும் அடையாளப்படுத்தினார்கள்.
மகாவம்சத்தில் விஜயன் இலங்கைக்கு வந்த காலத்தில் இயக்கர் நாகர் என்ற இரண்டு பிரிவை சேர்ந்த மக்கள் அங்கு வாழ்ந்ததாகவும் அவர்களுக்கு அரசுகள் இருந்ததாகவும் இயக்கர் குல இளவரசியான குவேனியை விஜயன் மணம் புரிந்ததாகவும் சொல்லப்படுகிறது.ஆனால் இந்த இயக்கர்களும் நாகர்களும் நாரீகமற்றவர்களாக இருந்ததாகவும் மகாநாபர் கூறுகிறார்.இதை திராவிடர்களை அரக்கர்கள் என்றும் தாசுக்கள் (இழிவானவர்கள்) ஆரியர்கள் சித்தரித்ததுடன் ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும்.
இலங்கையின் பூர்வீக குடிகளாக இயக்கர்களும் நாகர்களும் இருந்தார்கள் என்பதும் அவர்களுக்கான அரசுகளும் இருந்திருக்கின்றன என்பதும் இவர்கள் இருவரும் நாகர் குலம் இயக்கர் குலம் என்பதில் வேறுபட்டாலும் ஒரே இன-மொழிக்(தமிழ்) குழுமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் உண்மையாகும்.
இது எறக்குறைய தமிழ் நாட்டில் சேர சோழ பாண்டிய அரசுகள் இருந்ததற்கு ஒப்பானது.
அனுராதபுரத்தின் வரலாறு பௌத்த மத்தத்தின் இலங்கை வருகையுடன் தான் முக்கியப்படுத்தப்படுகிறது.
பௌத்த மதத்தை இலங்கைக்கு கொண்டு வந்தவர் மெளிரிப் பேரரசர் அசோகனுடைய மகன் மகிந்தன் எனப்;படும் மகிந்த தேரர் என மகாவம்சம் சொல்கிறது.
மகிந்தர் இலங்கைக்கு வந்த போது அனுராதபுர நகரத்தை ஆட்சி செய்தவன் தேவநம்பிய தீசன்(கிமு 247 -; கிமு 207)
அவனுக்கு முன் பண்டுகாபன் (கிமு 437)
மூத்தசிவன் முதலான பல அரசர்கள் அந்த நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்திருக்கிறார்கள்.
அவர்கள் யாரும் பௌத்தர்கள் அல்ல.
மகாவம்சமும் அதற்கு முந்திய தீபவம்சமும் தரும் தகவலின்படி அவர்கள் மலையை வழிபடுவது கல்லை (சிவலிங்கம்) வழிபடுவது காட்டு மரங்களை வழிபடுவது வேள்வி நடத்துவது மிருங்களை பலியிடுவது என்று நாரிகமற்ற ஒழுங்கு படுத்தப்படாத வழிபாட்டு முறையை கடைப்பிடித்தார்கள்.
இது அந்தக் காலகட்டத்தில் ஒட்டுமொத்த தமிழகத்திலும் நிலவிய வழிபாட்டு முறையாகும்.வைதீக மயப்படுத்தலுக்கு உள்ளாக சிவ(லிங்க)வழிபாடும் நடுகல் வழிபாடும் தமிழர்கள் சிறப்பாக நிலவிய வழிபாட்டு முறைகளாகும்;.
அதே போல இறந்த உடல்களுக்கு சடங்குகளைச் செய்வது அவற்றை புதைத்துவிட்டு வணங்குவது முதலான மூடநம்பிக்கைகளைக் கொண்டிருந்தார்கள்.இதுவும் அன்றைய காலகட்டத்தில் தமிழ் சமூகத்தில் நிலவிய சடங்கு முறையாகும்.(உடலங்களை எரியூட்டுவதென்து ஆரியமயமாக்கலுக்கு பின்னர் வந்தது.)
மொத்தத்தில் இந்தக் குறிப்புகள் அனைத்தும் அந்தக் காலகட்டத்தில் இலங்கையில் இருந்த மக்கள் தமிழ் இன மொழிவழிக் குழுமத்தை சேர்ந்தவர்கள் என்பதையும் அந்த மக்களை ஆட்சி செய்த அரசர்களும் அதே குழுமத்தை சேர்ந்தவர்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றன. 
மகிந்த தேரரும் அவரது சீடர்களும் இலங்கைக்கு வான் வழியாக பறந்து வந்ததாகவே தீப வம்சமும் மகாவம்சமும் கூறுகின்றன.
இது தமிழகத்தினுடாக பௌத்தம் தங்களுக்கு வரவில்லை.தாங்கள் நேரடியாக ஆரியத் தொடர்புடையவர்கள் என்பதற்காக புனையப்பட்ட ஒரு கூற்றாகும்
உண்மையில் மகிந்த தேரர் தமிழ் நாட்டுக்கு வந்து அங்கு ஆட்சிசெய்த மன்னர்களின் ஆதரவைப் பெற்றுத்தான் இலங்கைக்குச் சென்றிருக்க முடியும்.
அந்தக்கால கட்டத்தில் 'இறைமை என்பது கடவுளுக்குரியது.அரசு என்பது கடவுளினுடைய சொத்து.மன்னர் கடவுளின் பிரதிநிதியாக இருந்து ஆட்சி நடத்துபவர்' என்ற வரையறையே அரசுக்கு கொடுக்கப்பட்டிருந்தது.
எனவே சர்வ வல்லமை படைத்த கடவுளையும் அவரது பிரதிநிதியான மன்னரையும் மறுதலிக்கும் மாற்றுச் சமயக் கொள்கை உடையவர்களும் அதை பரப்புபவர்களும் அவ்வளவு சுலபத்தில் ஒரு அரசின் ஆட்புல எல்லைக்கு ஊடாக பயணம் செய்திருக்க முடியாது.
தமிழகத்தில் இருந்த ஆட்சியாளர்கள் சோழர்களையே இலங்கையின் தோரவாத பௌத்த வரலாற்று ஆசிரியர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக சித்தரித்திருக்கிறார்கள்.அதே நேரம் பாண்டிர்களும் சேரர்களும் இலங்கை அரசர்களுடன் மண உறவு வைத்துக் கொண்டதாகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
மகிந்த தேரர் காஞ்சிபுரம் வந்து தங்கியிருந்து பின் அங்கிருந்து பாண்டிய நாட்டுக்கு ஊடக நாகர்கோவில் கன்னியாகுமரி பகுதிக்கு வந்து அங்கிருந்தே இலங்கைக்கு சென்றதாக சில வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.(இது பற்றி ஆராயப்பட வேண்டும்)
மகிந்த தேரரின் வருகையின் பின்னர் தேவநம்பிய தீசன் பௌத்த மதத்தை தழுவியதாகவும் மாகாபோதி விகாரையும் மகாசங்கமும் அமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இலங்கையின் வரலாற்றில் இது ஒரு முக்கிய நிகழ்வு என்பதில் சந்தேகம் இல்லை.
எனெனில் இலங்கையில் அது வரை சைவ கடவுளின் சொத்தாக இருந்த அரசும் இறைமையும் மகா சங்கத்தின் ஆன்மீக சொத்தாக மாற்றமடைகிறது.மன்னர்கள் மகா சங்கத்தின் பிரதிநிதிகளாக இருந்தே ஆட்சி செய்ய வேண்டிய நிலை தோன்றுகிறது.
இந்த இடத்திலே முக்கியமாக குறிப்பிட வேண்டிய விடயம் கௌதம புத்தர் ஒரு போதும் தன்னை கடவுளாக சித்தரித்ததில்லை.அது போல கடவுளைப் பற்றியும் அவர் போதிக்கவில்லை.அவர் மக்களை துன்பங்களில் இருந்து விடுவிப்பதற்கான அவர்கள் நற்கதியடைவதற்கான ஒரு வழிகாட்டியாகவே இருந்தார்.அதற்கான வழிமுறைகள் பற்றியே அவர் போதித்தார்.
அவர் எதையும் எழுத்தில் எழுதி வைக்கவில்லை.ஆனால் அவரது மரணத்துக்கு பின் அவரது சீடர்களே பௌத்த சங்கத்தை உருவாக்கி அவற்றை தத்துவமாக மாற்றினர்
புத்தரின் கோட்பாட்டுகளாக மூன்று புகலிடங்கள் மற்றும் ஐந்து நல்லொழுக்கம் பரிந்துரைக்கப்படுகின்றன. புத்தம்(புத்தரின் Nபாதனைகள்), சங்கம்(பௌத்த சங்கம்);,தர்மம் என்பனவே மூன்று புகலிடங்கள் எனப்படுகின்றன. ஐந்து நல்லொழுக்கங்கள் என்பன 
எந்த ஒரு உயிரையும் கொல்லுதலைத் தவிர்த்தல் 
கொடுக்காத எப்பொருளையும் எடுப்பதைத் தவிர்த்தல்
தவறான பாலியல் உறவுகள் கொள்ளாது இருத்தல் 
தவறான பேச்சு உரைக்காமல் இருத்தல்; (பொய் சொல்வதும், வதந்தி கிளப்புவதும், கடுமையாகப் பேசுவதும், வம்பளப்பதும் தவிர்த்தல்)
போதையளிக்கும் எப்பொருளையும் உட்கொள்ளுதலைத் தவிர்த்தல் ஆகியவையாகும்
கௌதம புத்தர் அரசுரிமையை துறந்து ஆசையே துன்பத்துக்கு காரணம் என்று கூறி துறவற வாழ்க்கை வாழ்ந்து மறைந்தார்.
ஆனால் அவருடைய கோட்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட சங்கம் அரசுகளை தங்களது செல்வாக்குக்கு உட்படுத்தி அவற்றை சார்ந்து இயங்கியது ஒரு முரண்நிலையாகும்.
தேவநம்பிய தீசனுக்குப் பின் எல்லாளன் ஆட்சிக்கு வரும் வரை
உத்தியன் (கிமு 267) மகாசிவன் (கிமு 257) சூரதீசன் (கிமு 247) சேனனும், குத்திகனும் (கிமு 237)அசேலன் (கிமு 215) ஆகிய பல மன்னர்கள் ஆட்சி நடத்தியிருக்கிறார்கள்.இந்தக் காலகட்டத்தில் அனுராதபுரத்தில் இருந்த மகாவிகாரை செல்வாக்குப் பெற்ற ஒரு வழிபாட்டு தலமாகவும் அங்கிருந்த மகா சங்கம் அதிகாரம் பெற்ற அமைப்பாகவும் மாற்றமடைந்திருந்தது.
பௌத்தர்களுக்கும் சைவ சமயத்தவர்களுக்கும் அல்லது பௌத்தத்துக்கும் அதை கடைப்பிடிக்காதவர்களுக்கும் இடையிலான முரண்பாடு கூர்மையடைந்திருக்கிறது.அது தொடர்பிலான மோதல்களும் இடம்பெற்றிருக்கின்றது.மகாபோதி விகாரையில் இருந்த புத்த பிக்குகள் பௌத்தம் தொடர்பான தகவல்களை மட்டும் அட்டகத்தா என்ற பெயரில் பாளி மொழியில் செய்யுள் வடிவத்தில் எழுதி வைத்திருந்தனர்.பௌத்தம் அல்லாத ஏனைய வரலாற்றை அவர்கள் குறிப்பிடவில்லை.
எல்லாளனின் வருகையும் அவனது ஆட்சிமுறையும் மகா சங்கத்தினருக்கும் அவர்களைச் சேர்ந்த பிரிவினருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. அவனது நீதி தவறாத ஆட்சிமுறை பௌத்தத்துக்கு அவன் கொடுத்த மரியாதை அனைத்து மதங்களையும் சமமாக பாவித்த முறை என்று அவனுக்கு மகாவம்சம் பாராட்டு வழங்குவதிலிருந்து அவன் மக்களின் செல்வாக்கைப் பெற்ற ஒரு மன்னனாக இருந்தான் என்பதை அறிய முடிகிறது.
அவனைப்பற்றி குறை கூறுவதை மக்கள் எற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதை உணர்ந்த மகா சங்கத்தினர் அவனை அந்நிய ஆக்கிரமிப்பாளனாக காட்ட முற்;பட்டனர்;.(எல்லாளன் சோழநாட்டில் இருந்து வந்தவன் என்றும் சைவ சமயத்தை கடைப்பிடித்தவன் என்று சிலரும் சமன சமயத்தை கடைப்பிடித்தவன் என்று சிலரும் கூறுகின்றனர்.)எல்லாளனின் வருகையோடு ருகுணை பகுதிக்கு இடம்பெயர்ந்த பௌத்த அதிகார மையத்தின் (அரசு) பிரதிநிதியாக துட்ட கைமுனு இருந்தான்.அந்திய ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி பௌத்தத்தை காப்பது அவனது கடமை என்று போதிக்கப்பட்டது
.
எல்லாளனை வெற்றி கொண்டு அனுராதபுரத்தில் பௌத்த மேலான்மையை நிலை நாட்டுவதற்காக துட்ட கைமுனு திஸ்சமாறகமவிலுருந்து படை திரட்டிக்கொண்டு புறப்பட்ட போது அவன் 20க்கும் மேற்பட்ட சிற்றரசர்களை வெற்றி கொண்ட பின்னரே அனுராதபுரத்தை அடைய முடிந்ததாக மகாவம்சம் கூறுகிறது.இவர்கள் அனைவரும் பௌத்த மதத்தின் எதிரிகள் என்றும் எல்லாளனின் நண்பர்கள் என்றும் கூறப்படுகிறது.
கிமு 161ல் துட்ட கைமுனுவுக்கும் எல்லளனுக்கும் இடையில் நடந்த போர் தமிழ் சிங்களப் போர் என்றும் அதில் கிடைத்த வெற்றி சிங்களவர்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் சிங்கள இனவாத வரலாற்றாசிரியர்கள் இப்போது கூறுகின்றனர். ஆனால் மகாவம்ச மூல நூலில் துட்ட கைமுனு பௌத்த மன்னாகவும் அந்த மதத்தின் காவலனாகவும் சித்தரிக்கப் படுகிறானேயன்றி எந்த இடத்திலும் அவன் ஒரு சிங்கள இனத்தவன் என்றோ குறிப்பிடப்படவில்லை.
உண்மையில் எல்லாளனுக்கும் துட்ட கைமுனுவுக்கும் நடந்த யுத்தம் பௌத்தத்துக்கும் அதன் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் நடந்த யுத்தமேயன்றி சிங்கள தமிழ் யுத்தமல்ல.
துட்ட கைமுனு அடைந்த வெற்றியைக் குறித்து மகாவம்வம்சத்தின் 25வது அத்தியாயத்திலே ஒரு குறிப்புள்ளது
அதிலே மகாசங்க பிக்குகளைப் பார்த்து துட்ட கைமுனு 'மரியாதைக்குரியவர்களே! பல லட்சக்கணக்கான மக்கள் உயிர்கள் இழக்க காரணமாயிருந்த எனக்கு எவ்வாறு ஆறுதல் கிடைக்கும்? என்று கேட்கிறான் 
அதற்கு அவர்கள் 'நீ சொர்க்கம் செல்ல இந்த ஒரு செயல் தடையாக இருக்காது.உன்னால் ஒன்றரை மனிதரே உயிரிழந்தனர்.
பௌத்த சமயத்தில் நம்பிக்கை இல்லாதவர்களும்
தீயவர்களுமான 'மற்றவர்கள்' மிருகங்களைபோல கருதப்படவேண்டும் என்று பதில் சொல்வதாக கூறப்படுகிறது. இது இந்த யுத்தம் இனங்களுக்கு இடையில் நடந்த யுத்தம் அல்ல, இரண்டு மதங்களுக்கு இடையில் நடந்த யுத்தம் என்பதற்கு சிறந்த ஆதாரமாகும்
.
இதிலே இன்னொரு ஆச்சரியப்படத் தக்க தகவல் என்ன வென்றால் எல்லாளனை வெற்றி கொள்வதற்கு கதிர்காம முருகனுக்கு துட்டகைமுனு நேர்த்தி வைத்தாகவும், இந்தப் போரில் வெற்றி பெற்றால் கோவில் கட்டுவதாக அவன் வேண்டிக் கொண்டதாகவும் அதன்படி கதிர்காமம் கோவிலைக்கட்டியதாகவும் கதிர்காம வரலாறு என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.(இது எந்தளவு உண்மை என்று தெரியாது.ஆனால் பதியப்பட வேண்டிய குறிப்பு)
மகாவம்ச குறிப்புகளில் இருந்தும் இலங்கையின் தென்குதியின் பல்வேறு பகுதிகளில் புதைபொருள் ஆராட்சியின் போது கிடைக்கப்பெற்ற இருந்தும் இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் கிமு 1000 வருடத்திற்கு முற்பட்ட காலத்தில் இருந்தே ஒரே இன மொழி பண்பாட்டை சேர்ந்த மக்களே வாழ்ந்திருக்கிறார்கள் என்ற கருத்து வலுப்பெற்றிருக்கிறது. (இது தொடர்பாக இன்னும் ஆய்வுகள் செய்யப்படவேண்டும்)
துட்டகைமுனுவின் ஆட்சிக்குப் பின்னர் அனுராதபுரம் முழுக்க முழுக்க பௌத்த தலைநகரமாக (சிங்கள தலைநகரமாக அல்ல) மாறியது. மகாபோதி விகாரையும் மகா சங்கமும் முன்னரைவிட வலிமை மிக்க அமைப்புக்களாக மாற்றம் பெறுகின்றன.
அதேவேளை இந்தக் காலகட்டத்தில் தமிழகத்திலும் பௌத்தம் காலூன்ற ஆரம்பிக்கிறது.காஞ்சிபுரம் முக்கியமான பௌத்த மையமாக மாறுகிறது.


கிறீஸ்த்துவுக்கு முன் முதலாம் நூற்றாண்டில் அனுராதபுரத்தில் மகாபோதி விகாரைக்கு இணையாக அபயகிரி விகாரை கட்டப்படுகிறது.(இந்த விகாரை அங்கிருந்த ஒரு புராதன சிவன் கோவிலை இடித்துவிட்டு கட்டியதாகவும் சிலர் கூறுகின்றார்கள்.)இந்த இரண்டு விகாரைகளுக்கும் தமிழகத்தில் இருந்தும் பௌத்த துறவிகள் வந்து தங்கியிருந்து மதப்பணியாற்றி இருக்கிறார்கள்.இந்தக் காலகட்டத்தில் அனுராதபுரத்துக்கு வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் கூட பௌத்தர் அல்லாத அரசுகள் இருந்திருக்கின்றன.பௌத்தர்களுக்கும் பௌத்தர்கள் அல்லாதவர்களுக்கும் இடையிலான மோதல்களும் தொடர்ச்சியாக நடந்திருக்கின்றன.
இதேவேளை கிறீஸ்த்து பிறப்பதற்கு சமமமான காலகட்டத்தில் இந்தியாவில் பௌத்த சங்கம் பிளபட்டு .மகாயான பௌத்தம் என்ற ஒரு புதிய பிரிவு தோற்றம் பெறுகிறது.இந்தப் புதிய பிரிவு தமிழ் நாட்டில் இருந்தே தோற்றம் பெற்றதாக பல்வேறு வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்
மகாயான பௌத்தம் பாரம்பரிய தேரவாத பௌத்தத்தில் இருந்து பல விடயங்களில் வேறுபடுகின்றது. மகாயான பௌத்தத்தில் புத்தர் அழியாதவர், மாறாத்தன்மையுடையவர், எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவர், மேலும் எங்கும் நிறைந்திருப்பவர். மகாயான பௌத்தத்தில் போதிசத்துவர்கள் என்றழைக்கப்படும் பல தெய்வீக-குணங்களை கொண்டவர்கள் வணங்கப்படுகிறார்கள்.
எல்லா உயிர்களும் மோட்சமடைய வாய்ப்புள்ளவர்கள் என்பதே மகாயான பௌத்தத்தின் அடிப்படைத் தத்துவமாகும். மேலும் பல புத்தர்கள் மற்றும் போதிசத்துவர்களின் வழிபாடும், புத்தரின் அழியாத்தன்மையும் அதன் அடிப்படை தத்துவத்தினுள் அடங்கும்;. இதனால் சாதாரண மக்களை மகாயான பௌத்தம் வெகுவாகக் கவர்ந்தது,
காஞ்சிபுரத்துக்கு அடுத்தபடியாக காவிரிப்பூம் பட்டணம் நாகபட்டணம் தஞ்சாவூர் உட்பட சோழர்களின் ஆட்சிப் பிரதேசத்திலே தான் இந்த மாகாயான பௌத்தம் செல்வாக்குடன் திகழ்ந்தது.சங்ககாலத்துக்கு அடுத்தபடியாக வந்த களப்பிலர் காலத்திலே தான் சமணமும் பௌத்தமும் தமிழகத்தில் ஆளமாக வேரூன்றியது என்றும் இந்தக்களப்பிலர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று சிலரும் 'இல்லை அவர்கள் சேர சோழ பாண்டிய அரச மரபுகளைச் சாராத மற்றொரு தமிழ் நிலப்பிரபுத்துவக் குழுவினர்' என்று சிலரும் கூறுகின்றனர்.(இதுவும் நீண்ட ஆய்வுக்குரிய ஒரு விடயமாகும்)
பௌத்தத்தில் ஏற்பட்ட தேரவாத மகாயான பிளவு என்பது இலங்கையிலும் எதிரொலித்தது.அபயகிரி விகாரை மகாயான பௌத்த விகாரையாகவும் மாகாபோதி விகாரை தேரவாத பௌத்த விகாரையாகவும் மாற்ற மடைகிறது.மாகாயான பௌத்தம் அனுராதபுரத்தை மையங்கொண்டு இலங்கையின் வடபகுதியிலும் தேரவாத பௌத்தம் தெற்கிலும் செல்வாக்கு செலுத்த ஆரம்பிக்கின்றன.
வடக்கில் கதிரமலை என்ற மகாயன பௌத்த தலைநகரம் உருவாகிறது.
கி.பி 171 முதல கி.பி 193வரை அனுராதபுரத்தில் இருந்து ஆட்சி புரிந்த கஜபாகு மன்னாhல் பத்தினத் தொய்வவழிபாடு(கண்ணகிவழிபாடு) இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதென இராஜவாளி என்ற சிங்கள நூல் கூறுகிறது. கஜபாகு ஆட்சி காலத்தில் சேரமன்னன் செங்குட்டுவன் தனது தலைநகராகிய வஞ்சியில் இமயமலையில் இருந்து கொண்டுவந்த கல்லில் கண்ணகிக்கு சிலை செய்து கோயில் அமைத்து பெருவிழா எடுத்ததாகவும் . கிபி 178ல் நடந்த அந்தவிழாவிற்கு செங்குட்டுவனின் அழைப்பையேற்று அவன் நண்பனாகிய கஜபாகு விழாவில் கலந்து கொண்டதாகவும் அந்த நூல் கூறுகிறது. இதிலிருந்து கஜபாகு மகயான பௌத்த பரிவைச் சோந்தவன் என்பது உறுதியாகிறது.அக்கால தேரவாத பௌத்தத்தில் இப்போதுள்ளது போல் பிறதெய்வ வழிபாடுகள் இருக்கவில்லை. தமிழர் மதத்தின் (ஆதி சைவம்) சில கூறுகளை உள்வாங்கியிருந்த மகாயான பௌத்தை இதை அனுமதித்திருந்தது.
கி.பி 302 முதல் 315 வரையில் அனுராதபுரத்தை ஆண்ட கோதாபயன் என்ற, அரசன் மகாபோதி விகாரைக்கு(தேரவாதம்) ஆதரவாக அபயகிரி விகாரையில் இருந்த அறுபது பிக்குகள் மீது சமய நிந்தனைக் குற்றம் சாட்டி தமிழ்நாட்டுக்கு , நாடு கடத்திவிட்டான்.
அந்தக்காலகட்டத்தில் தமிழகத்தில் மகாயானபௌத்த சங்கத்தின் தலைமை பிக்குவாக இருந்த சங்கமித்திரர் இதையறிந்து அனுராதபுரத்துக்குச் சென்று அரசனின் தவறை உணர்த்தி மிண்டும் மகாயானபௌத்தத்தை அங்கு நிலைநாட்டுவதற்காக தனது சீடர்களோடு பறப்பட்டார்.
இதையறிந்த மகாபோதிவிகாரையை சேர்ந்த தேரவாத பிக்குகள் அரசனிடத்தில் முறையிட்டார்கள். அரசன் சங்கமித்திரரை அழைத்து விசாரித்த போது அவர் மகாயானபௌத்தத்தின் சிறப்புக்களை எடுத்துக் கூறி தேரவாத பௌத்த பிக்குகள் தன்னுடன் விவாதம் செய்த ஏற்பாடு செய்யும் படியும் இந்த விவாதத்தில் தான் வெற்றியடைந்தால் மகாயானபௌத்தத்தை பரப்பவும் அபியகிரி விகாரை முன்பு போல இயங்கவும் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதற்கிணங்க கோத்தபாயனின் அரசவையில் சங்கமித்திரருக்கும் தேரவாத பௌத்த தலைவரான சங்கபாலன் என்பவருக்கும் வாதப்போர் நிகழ்ந்தது. இந்த வாதத்தில் சங்கமித்திரரே வெற்றி பெற்றார். கோத்தபாயன் சங்கமித்திரரின் ஆழ்ந்த கல்வியறிவைப் பாராட்டி அவரை ஆதரித்ததுடன் தமது பிள்ளைகளான சேட்டதிஸ்ஸன், மகாசேனன் ஆகிய இருவருக்கும் கல்வி கற்பிக்க ஆசிரியராக நியமித்தான்.
முத்தவனான சேட்ட திஸ்ஸன் தேவரவாத பிக்குகளின் நட்பை பெற்றிருந்தால் சங்கமித்திரரிடம் பகைமை பாராட்டி வந்தான். இளையவனான மகாசேனன் அவரிடம் அதிக அன்பு கொண்டிருந்தான்
கிபி 323 ல் கோத்தபாயன் காலமாக அரசுரிமையை மூத்த மகனான ஜேட்டதிஸ்ஸன் ஏற்றுக்கொண்டான்.எற்கனவே சங்கமித்திரரிடம் பகைமை பாராட்டிய அவன் ஆட்சிக்கு வந்தததம் அவருக்கு ஆதவாக இருந்த மந்திரிகளில் சிலரைக் கொலைசெய்துவிட்டான். இதைக் கண்ட சங்கமித்திரர் அவன் தம்மையும் கொன்று விடுவான் என்று அஞ்சிச் சோழ நாட்டிற்கு திரும்பிச்சென்றுவிட்டார்.. பத்து ஆண்டுகளின் பின்னர் கிபி333ல் சேட்டதிஸ்ஸன் இறந்துவிட அனுராதபுரத்தின் அரசுரிமை சங்கமித்திரரின் அன்புக்குரிய மாணவனான மகாசேனனிடம்(கி.பி. 334-361) வந்தது.
இச்செய்தி அறிந்த சங்கமித்திரர் அங்குசென்று, தம் மாணவனாகிய அரசனுக்குத் தமது கையினாலேயெ முடிசூட்டினார். அன்று முதல் அங்கு தங்கி இருந்து மகாயான பௌத்த நெறியை பரப்பி வந்தார்
இந்தக்காலகட்டத்தில் மகாபோதிவிகாரையில் இருந்த தேரவாத பிக்குகள்; உண்மையான பௌத்த மதத்தைப் போதிக்க வில்லை என்று அரசனுக்கு முறைப்பாடுகள் வந்ததால் அந்தவிகாரையில் வாழும் பிக்குகளுக்கு நகரமக்கள் உணவு கொடுக்கக்கூடாதென்றும், மீறிக் கொடுப்பவர்களுக்கு நூறு பொன் அபராதம் விதிக்கப்படும் என்றும் அவன் கட்டளையிட்டான். இதன் காரணமாக அங்கிருந்த தேரவாத பிரிவு பிக்குகள் உண்ண உணவு கிடைக்கப் பெறாமல் தென்பகுதியில் இருந்த றுகுணு பிரதேசத்தக்கு போய்விட்டார்கள்.
கைவிப்பட்ட நிலையில் இருந்த மகாபோதி விகாரையை மகாசேனன் சங்கமித்திரரிடம் ஒப்படைத்துவிட்டான்.
அவர் அந்த விகாரையை இடித்து, அந்தப்பொருள்களைக் கொண்டு தமது அபயகிரி விகாரையைக் புதுப்பித்துப் பெரியதாகக் கட்டினார். இந்த நடவடிக்கைக்கு சோணன் என்னும் மந்திரியும் துணையாயிருந்தான். இவற்றை யெல்லாம் அறிந்த அரசனுடைய மனைவியர்களுள் ஒருத்தி( தேரவாத பிரிவை சோந்தவள்;), அபயகிரி விகாரையிலிருந்த பிக்குக்களைத் துரத்திவிட்டு, அந்த விகாரையையும் இடித்தொழித்து சங்கமித்திரரையும் அவருக்குத் துணையாயிருந்த சோணனையும் கொன்றுவிடும்படிச் சிலரை ஏவியதாகவும் அவர்கள் மந்திரியையும் சங்கமித்திரரையும் கொலைசெய்துவிட்டார்கள் என்றும் மகாவம்சத்தின் 36,37 ஆம் அதிகாரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.
(ஆனால் வேறு சில தகவல்கள் சங்க மித்திரர் இந்த கொலை முயற்சியில் இருந்து தப்பி தமிழகம் சென்றுவிட்டதாக தெரிவிக்கின்றன.)
மகாசேனின் ஆட்சிப் பகுதியின் இறுதிக்காலத்தில் மகாபோதி விகாரை மீண்டும் கட்டப்பட்டதையும் மகாவம்சத்தை தொகுத்த மகாநாபர் அந்த விகாரையில் இருந்தே அதை தொகுத்ததையும் அறிய முடிகிறது.
பௌத்தம் இலங்கைக்கு வந்ததாக கூறப்பட்ட காலத்தில் இருந்து மகாநாபர் மாகாவம்சத்தை தொகுத்தாக கூறப்படும் காலம் வரை சிங்கள மொழி சிங்கள இனம் என்ற குறிப்புகள் எங்கும் இடம்பெறவில்லை.பௌத்தர்கள் -பௌத்தத்தின் எதிரிகளான அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் என்ற குறிப்புகள் தான் எங்கும் விரவிக் கிடக்கின்றன.
கல்வெட்டுகள் இலக்கியங்கள் சமயக் குறிப்புகளின் கூட தேர வாதப்பிரிவினர் பாளி மொழியிலும் மகாயான பிரிவினர் சமஸ்கிரதத்திலும் எழுதியுள்ளனர். கிபி 4 ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டொன்று அபயகிரி விகாரையிலுள்ளது.இந்தியாவில் பௌத்த மதம் தோன்றியதில் இருந்து மகாவம்சம் எழுதப்படும் காலம்வரை சீனாவில் பௌத்த மதத்தை பரப்பிய போதி தர்மர் பௌத்த தத்துவமான திரிபிடகத்துக்கு விளக்கவுரை எழுதிய ஆச்சாரிய தர்மபாலர் உட்பட 23 க்கும் மேற்பட்ட பௌத்த பேரறிஞர்கள் தமிழகத்தில் இருந்திருக்கிறார்கள்.
இலங்கையில் இருந்த தேரவாத மாகாயான பௌத்த முரண்பாடுகளும் பௌத்தர்களும் பௌத்தர் அல்லாதோருக்கும் இடையிலான முரண்பாடும் தமிழகத்தை மையம் கொண்டுதான் இயங்கியிருக்கின்றன.
இலங்கையில் கிபி 4ம் நூற்றாண்டில் கூர்மையடைந்த மகாயான தேரவாத முரண்பாடு கிபி 6ம் 7ம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் பௌத்தம் வைதீக இந்து மதத்துக்குள் ஐக்கியப்பட்டுப் போய்விட கௌதம புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாக கொள்ளப்பட இந்து எதிர் தேரவாதபௌத்த முரண்பாடாக கூர்மையடைகிறது.
இதனூடாக 'தமிழக எதிர்ப்பு தமிழ் எதிர்ப்பு' என்ற அடிப்படையில் சிங்கள இனத்துவத்துக்கான தொடக்கப்புள்ளி இடப்படுகிறது.
கிபி 7ம் நூற்றாண்டுக்குப் பின் வலுவிழந்து போன அனுராதபுரம் கிபி 10 ம் நூற்றாண்டில் இராஜ இராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில் அவனது படையினரால் முற்றாக அழிக்கபட்டு பெலநறுவை (சனநாத மங்களம்)க்கு அதிகார மையம் மாற்றப்பட்ட பின்பு தான் சிங்கள இனத்துவம் முழுவடிவம் பெறவதை பார்க்க முடிகிறது.
இந்தக் கால கட்டத்திலும் சிங்கள இன அடையாளத்துடன் ஆட்சிக்குவந்த
பிற்கால அரசர்கள் பாண்டியர்களுடனும் சேர நாட்டு சிற்றரசர்களுடனும் ; நெருங்கிய உறவுகளைப் பேணியிருக்கிறார்கள். சோழர்கள் மட்டுமே அவர்களுக்கு எதிரிகளாக இருந்திருக்கிறார்கள். உண்மையில் சோழர்கள் மட்டும் தான் இலங்கை மீது படையெடுத்தார்களா? சேர பாண்டியர்கள் இலங்கையின் மீது செயல்வாக்கு செலுத்த முயலவில்லையா? அப்படி முயல வில்லை என்றால் அதற்கு என்ன காரணம்? மாறக முயன்றிருந்தால் அவர்களை சிங்கள வரலாற்றாசிரியர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக காட்ட முயலாது ஏன் என்ற கேள்விகளுக்கு விடை காணப்பட வேண்டும்.
இன்றைக்கு அரசமரம் இருக்கும் இடம் எல்லாம் தங்களுடைய புனித பூமி என்றும் இலங்கைத் தீவும் சிங்கள இனமும் தேரவாத பௌத்த நெறியை காப்பாற்றுவதற்காக கௌதபுத்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவை என்றும் கூறிக்கொண்டிருக்கின்ற பௌத்த சிங்கள பேரினவாத பொய்களை கட்டுடைப்பதற்கு தமிழர்களாகிய நாம் 13 ம் நூற்றாண்டில் ஆரிய சக்கரவாத்திகளால் யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண இராட்சியம் பற்றிய ஆய்வுடன் திருப்திகொள்ளும் மனோபாவத்தை மூட்டைகட்டி வைத்துவிட்டு அநுராதபுரத்தில் இருந்தும் எமது வரலாற்றை தேட முற்பட வேண்டும்.ஏனென்றால் அங்கு மதங்களுக்கு இடையில் தான் சண்டை நடந்திறது; இனங்களுக்கிடையில் அல்ல அங்கு வாழந்த மக்கள் தமிழர்கள் தான்.அவர்கள் பேசிய மொழி தமிழ் தான்.பௌத்தர்கள் என்பதால் மட்டும் அவர்கள் சிங்களவர்கள் ஆகிவிடமாட்டார்கள்.இது பற்றி நீண்ட விரிவான ஆய்வுகள் செய்யப்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்
-சிவா சின்னப்பொடி


01 இலங்கையில் தமிழர் - பேராசிரியர் கலாநிதி இந்திரபாலா
02 இலங்கை தமிழ் சாசனங்கள்- பேராசிரியர் க.பத்மநாதன்
03 மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம் கலாநிதி க. குணராசா
04 இலங்கை வரலாறு பாகம் 1: கி. பி. 1500 ஆண்டுகள் வரை பேராசிரியர் செ. கிருஸ்ணராசா.
05 THE LOST CITIES OF CEYLON.By G. E. MITTON,
06 Asoka by Vincent A. Smith.
07 Asoka;s Mission to Ceylon and some connected problem by Jothirmay Sen. Indian Historical querterly
08 The Chronicles of Ceylon by Bimala Chrun Law
10 A HISTORY OF KATARAGAMA AND THEIVANAIAMMAN THEVASTHANAM
11 http://www.noolaham.org/wiki/index.php?