சனி, 9 டிசம்பர், 2006

நினைவழியா வடுக்கள்-1

இது 1960 முதல் 1970 வரையிலான காலப்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலவிய சாதியச் சமூக ஒழுங்கு முறையும், அதை தகர்த்தெறிவதற்கு மேற்கொள்ளப்பட்ட போராட்டமும் அந்தக் காலகட்டத்தில் அதனால் எனக்கு ஏற்பட்ட பாதிப்புக்களும் பற்றிய அனுபவப் பதிவுகளாகும்.
தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் கூர்மையடைந்துள்ள இன்றைய காலகட்டத்தில் இந்தப் பதிவு அவசியமா? என்ற கேள்வியை தாயக விடுதலையின் பால் அதீத அக்கறையுள்ள ஒரு போராளி என்ற தளத்தில் இருந்து எனக்கு நானே பலதடவை கேட்டுப் பார்த்திருக்கிறேன்.ஆனால் புலம்பெயர்ந்த தளத்தில் தமிழ் அடையாளம் என்றால் சாதியம் என்று நினைக்கும் ஒரு கூட்டம் இங்கே பிறந்து வளரும் ஒரு பிள்ளையைப் பார்த்து ' நீ பிறப்பினால் தாழ்ந்தவன்' என்று கூறும் போது தமிழ் சமூகத்தின் மீது அந்தப் பிள்ளைக்கு ஏற்படும் வெறுப்பை தேசத்துக்கு எதிரான செயல் என்று முத்திரை குத்தி ஒட்டு மொத்தமாக அவர்களை தமிழ் தளத்திலிருந்து அந்நியப்படவைக்கும் செயற்பாடுகளை திட்டமிட்டுச் செய்யும் நிலையில், சாதியத்தின் கொடூரத்தைனத்தை தமிழ் தேசிய உருவாக்கத்துக்கு அது செய்யும் துரோகத்தனத்தை அம்பலப்படுத்துவதற்கு எனது அனுபவங்களை மறுபதிவுக்கு உள்ளாக்குவது அவசியம் என்று நான் நினைக்கிறேன்.'நாங்கள் தமிழர்கள்' என்ற அடையாளம் மட்டும் தான் தாயகம் தேசியம் தன்னாட்சி என்ற எங்களது அரசியல் இலக்கை நாங்கள் விரைந்து அடைவதற்கு வழிவகுக்கும
01

அது 1962 ம் ஆண்டு.
டிசம்பர் மாதத்தின் முதலாவது ஞாயிற்றுக்கிழமை.
எனக்கு அப்போது ஏழு வயது முடிந்து எட்டாவது ஆரம்பிக்கப் போகும் தருணம்.
என்னுடைய வாழ்க்கையில் எனது நினைவுக்கெட்டிய ஆக முந்திய நினைவுப் பதிவு என்று பார்த்தால் அந்த நாள் தான் இப்போதும் நன்றாக ஞாபகம் இருக்கிறது.
நான் பிறந்த வடமராட்சி பகுதியிலே பொதுவாக மார்கழி மாதத்தை பீடை பிடித்த மாதம் என்று சொல்வார்கள்.வடக்கே பாக்கு நீரிணையும் கிழக்கே வங்கக் கடலும் அந்த மாதத்திலே வழமைக்கு மாறாக குமுறிக் கொந்தளிப்பதால் மீன் பிடித் தொழில் மிகக் குறைந்தளவிலேயே நடக்கும். அந்த மாதத்தில் மாரி மழை அநேகமாக அடைமழையாகத் தொடர்ந்து பெய்வதால் உள்ளுர் சிறு பயிர் செய்கையும் அநேகமாகப் பாதிக்கப்பட்டே இருக்கும். இதனால் அந்த மாதத்தில் பணப் புழக்கம் என்பது குறைவாகவே இருக்கும்.வானம் தொடர்ச்சியாக பல நாட்களுக்கு கருமுகில் சூழ்ந்து இருட்டுக் கட்டியிருப்பதால் செந்தளிப்பில்லாத ஒரு மந்தமான சூழ்நிலை நிலவும்.
ஆனால் வல்லிபுரம் அல்லது வல்லிபுரக்குறிச்சி அல்லது சிங்கைநகர் (தற்போது) என்று அழைக்கப்படும் எங்கள் ஊரைப் பொறுத்தவரை அந்த மார்கழி மாதம் மகிழ்ச்சியான செந்தளிப்பான ஒரு மாதமாகும். அதற்கக் காரணம் எங்கள் ஊரில் அமைந்திருக்கின்ற வரலாற்றுப் பெருமையுடைய வல்லிபுர ஆழ்வார் ஆலயமாகும். ஆறுமுகநாவலர் வழிவந்த சைவ சற்சூத்திர பாரம்பரியமும் அதையொட்டிய இறுக்கமான சாதியக்கட்டமைப்பும் மிக்க வடமராட்சிப் பிரதேசத்தில் வைஷ்ணவப் பாரம்பரியத்தில் வந்த இந்த ஆழ்வார் கோவில் அமைந்திருப்பது விசித்திரமான ஒன்று. வைஷ்ணவர்களால் பெருமாள் என்ற அழைக்கப்படும் மகா விஷ்ணுவின் கையில் அமைந்திருக்கும் சக்கரம் தான் இந்த ஆலயத்தின் மூல விக்கிரகமாகும்.இதன் காரணமாக சிறீ சக்கரத்தாழ்வார் என்று வழங்கப்பட்ட பெயரே பின்பு ஊரின் பெயரோடு சேர்த்து சிறீ வல்லிபுர ஆழ்வார் என்றாகிவிட்டது.
எடுத்த எடுப்பிலேயே நான் இந்தக் கோவிலைப்பற்றிச் சொல்வதற்கு சில முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. இந்தக் கோவிலும் , பருத்தித்துறை செம்பியன் பற்று நெடுஞ்சாலை ஓரத்தில் வங்கக் கடற்கரை வரை பரந்து விரிந்த வெண்மனற்பரப்பில் ஏகாந்தமாய் இந்தக்கோவில் அமைந்திருக்கிற சூழலும் சிறுவயதில் என்னை அதிகளவுக்கு பாதித்திருக்கின்றன.அதாவது என்னை நான் அடையாளம் கண்டு கொள்வதற்கும் ஆறுமுகநாவலர் பரம்பரையின் சற்சூத்திர பாரம்பரியம் மற்றும் இந்துத்துவ மாய்மாலங்களை நான் அனுபவ ரீதியாக புரிந்து கொள்வதற்கும் இவை எனக்குப் பெரிதும் உதவியிருக்கின்றன.
“கடவுள் தூணிலும் துரும்பிலும் விண்ணிலும் மண்ணலும் எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்திருப்பது உண்மை என்றால் எங்கள் வீட்டிலும் எங்களுக்குள்ளும் அவர் இருக்கும் போது, அவர் இருக்கும் கோவிலுக்குள் நாங்கள் ஏன் போகக் கூடாது?” “பஞ்சபூதங்களை கடவுள் படைத்தது உண்மை என்றால் அந்தக் கடவுளால் படைக்கப்பட்ட அந்தப் பஞ்ச பூதங்களில் முக்கியமான நிலத்திலும் நீரிலும் ஏன் எங்களுக்கு உரிமை மறுக்கப்படுகிறது.? கோவில் நிலத்திலுள்ள கினற்றுப் படியில் அல்லது கேணிப் படியில் அல்லது குளக்கரையில் நாங்கள் ஏன் கால்வைக்கக் கூடாது? அவற்றிலுள்ள நீரை நாங்கள் ஏன் தொட்டு அழையக் கூடாது? ஏன் அள்ளிக் குடிக்கக் கூடாது?” என்கின்ற பல கேள்விகள் அந்தக்காலத்தில் என் மனதிலே எழுவதற்கும் அதற்கான விடைகளை நடைமுறைச் செயற்பாடுகளின் ஊடாக நான் தெரிந்துகொள்வதற்கும் இந்தக் கோவிலும் இந்தக் கோவில் வளாகமும் தான் அடித்தளமாக இருந்திருக்கின்றன.
இதைவிட முக்கியமாக தமிழர் தாயகப்பகுதிகளை பௌத்த சிங்களப் பேரின வாதிகள் தங்களது நிலப்பரப்பு என்று உரிமை கொண்டாடுவதற்கும், தமிழர்கள் இலங்கைக்கு வந்தேறு குடிகளாக வந்தவர்கள் என்று வரலாற்றைத் திரிப்பதற்கும் இந்த ஆலயத்தின் வரலாறும் அதை தங்களது சைவ மேலாண்மைக்காக மூடிமறைக்க நினைத்த ஆறுமுகநாவலர் வழிவந்த சற்சூத்திர பரம்பரையினரின் துரோகத்தனமும் துணைபோயிருக்கிறது. பௌத்தமதம் என்றால் அது சிங்களவர்களுக்கு மட்டுமே உரிமையானது, சிங்களவர்களே பௌத்த மதத்தின் காவலர்கள் என்ற கருத்தியலை மகாவம்ச காலத்து பிக்குகளில் இருந்து இன்றைய சிறிலங்காவின் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷ வரை திட்டமிட்டு கட்டமைத்து பரப்பிவரும் நிலையில் அவற்றைக் கட்டுடைத்து தமிழர்களும் பௌத்தர்களாக இருந்திருக்கிறர்கள் தமிழகத்திலும் இலங்கையிலும் தமிழர்கள் கடைப்பிடித்த மகாயான பௌத்தம் கி.பி.7ம் நூற்றாண்டுவரை பரவியிருந்தது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தர்மபாலர் முதலான பல தமிழ் துறவிகள் பௌத்தமதத்துக்கான முக்கியமான தத்துவ நூல்களை எழுதியிருக்கிறார்;கள், தமிழிலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஐம்பெரும் காப்பியங்களில் முக்கியமானவையான மணிமேகலை மற்றும் குண்டகேசி என்பன பௌத்த மதத்தின் மேன்மையை எடுத்து விளக்கிய நூல்கள் என்கின்ற வரலாற்று உண்மைகளை எடுத்துச் சொல்வதற்கு இன்றுவரை சற்சூத்திரப் பரம்பரையினர் தயாரக இல்லை. தமிழர்களுடைய வரலாற்றை ஆரிய பார்ப்பணிய மதக் கோட்பாடுகளுக்குள் சிக்கவைத்து பார்ப்பணிய மதத்தின் வரலாறு தான் தமிழர்களின் வரலாறு என்று ஆறுமுகநாவலரின் சற்சூத்திரப் பரம்பரை பெருமை பேசிக்கொண்டிருக்க, விகாரைகள் இருந்த இடங்கள் எல்லாம் சிங்களவர்களின் பூர்வீக பூமி என்று தேரவாத பௌத்தத்தை கடைப்பிடிக்கும் மாகவம்ச பரம்பரையினர் உரிமை கொண்டாடியதுடன் அந்த நிலப்பரப்புக்களை ஆக்கிரமிக்கும் வேலைகளையும் திட்டமிட்டுச் செய்தனா.;- செய்து வருகின்றனர்.
நான் இங்கே குறிப்பிடும் இந்த வல்லிபுர ஆழ்வார் ஆலயப்பகுதியில் 1940 களில் வரலாற்று பொற்சாசனம் ஒன்று கிடைத்தது. கோவில் தேவைக்காக கிணறு தோண்டிய போது மண்ணுக்குள் இருந்து கிடைத்த இந்த பொற்சாசனம் வல்லிபுரப் பொற்சானம் குறிப்பிடப்படுகிறது. இந்தப் பொற்சாசனம் கிபி 2 ம் நுற்றாண்டிலே ‘படகர அதன’ என்ற இடத்திலே ஒரு பௌத்த விகாரை கட்டப்பட்ட செய்தி பிராமி எழுத்து வடிவத்திலே குறிப்ப்pடப்பட்டிருந்தது. இந்த வரலாற்றப் பொற்சாசனத்தை ஆய்வுசெய்த பரணவிதான உட்பட்ட சிங்கள வரலாற்றாசிரியர்கள் தற்போது வல்லிபுர ஆழ்வார் ஆலயம் இருக்கும் இடத்தில் பௌத்த விகாரையே இருந்த தென்றும் அங்கு சிங்கள மக்களே குடியிருந்தார்கள் என்றும் 14 ம் நூற்றாண்டுக்குப் பின்பு இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய தமிழர்கள் அந்தப்பிரதேசத்தின் பூர்வீக குடிமக்களான சிங்கள மக்களை அடித்து விரட்டிவிட்டு அங்கிருந்த விகாரையையும் அழித்து அது இருந்த இடத்தில் விஷ்ணு கோவிலை கட்டிவிட்டார்கள் என்று நிறுவ முற்பட்டிருக்கிறார்கள்.
புத்தரை மட்டுமல்ல விஷ்ணுவை முழுமுதல் கடவுளாகக் கொண்ட வைஷ்ணவப் பாரம்பரியத்தையும் 'அன்பே சிவம்' என்றுரைத்த இராமலிங்க வள்ளலாரின் சமத்துவ வழிபாட்டு முறையையும் கூட ஏற்றுக்கொள்ளாத ஆறுமுகநாவலரின் சற்சூத்திரப் பரம்பரையினர் தங்களுடைய மேன்மைக்கு பங்கம் வந்துவிடும் என்பதால் சிங்கள பௌத்த பேரின வாதிகளின் இந்த அப்பட்டமான வரலாற்றுத் திரிப்பை கட்டுடைத்து உண்மையை வெளிக் கொண்டுவருவதற்கு விரும்பவில்லை.
உண்மையில் இந்த ஆலயத்தின் வரலாறு என்பது தமிழகத்தில் உத்தவேகத்துடன் எழுந்த பக்தி இயக்க காலகட்டத்தில் (கி.பி.6ம் 7ம் நூற்றாண்டுகள்) தமிழகத்திலும் இலங்கையிலும் தமிழ்மக்கள் மத்தியல் கடைப்பிடிக்கப்பட்டு வந்த சமண பௌத்த மதங்கள் அழிக்கப்பட்ட வரலாற்றுடன் ஆரம்பிக்கிறது. நாயன்மார்களாலும் ஆழ்வார்களாலும் முன்னெடுக்கப்பட்ட இந்தக் கருத்தியல் போராட்டத்தில் கௌதம புத்தர் விஷ்ணுவின் அவதாரமாக அர்த்தப்படுத்தப்பட, புத்தருடைய தர்மச்சக்ரம் விஸ்ணுவினுடைய சக்கரமாக மாற்றப்பட தமிழகத்திலும் இலங்கையிலும் இருந்த மகாயான பௌத்த மதம் இந்துமதத்தின் வைஷ்ணவப் பிரிவுடன் ஐக்கியமாக அந்த மதத்திடைய விகாரைகள் விஷ்ணு கோவில்களாக மாற்றம்பெற்றன. பல விஹாரைகள் கைவிடப்பட்டு அழிந்துபோயின.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் முதல் தலைநகராக விளங்கிய கதிரமலை (தற்போதைய கந்தரோடை) மகாயான பௌத்தத்தை கடைபிடித்த தமிழ் பௌத்த தலைநகராக இருந்தது என்பதற்கு இன்றும் அங்குள்ள ஏராளமான தமிழ் பௌத்த விஹாரைகளின் தடயங்கள் சான்றாக இருக்கின்றன.ஆனால் ஆறுமுக நாவலரின் சற்சூத்திர பரம்பரையினர் கதிரமலையின் வரலாற்றை மூடி மறைத்து மழுப்பகின்ற கைங்கரியத்தில் ஈடுபட, தேரவாத பௌத்ததை கடைப்பிடிக்கும் சிங்கள பௌத்த பேரினவாதிகள் அது தங்களுடைய வரலாற்று நகரம் என்றும் தங்களது முன்னோர்களே அந்தப் பிரதேசத்தின் பூர்வீக குடிமக்கள் என்றும் உரிமை கொண்டாடுகின்றனர்.

கதிரமலையை ஆண்ட கடைசி மன்னனாகிய உக்கிரசேனன், பாண்டிய நாட்டு இளவரசியும் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலை கட்டியவளுமாகிய மாருதப்புரவல்லியை காதல் மணம்புரிந்து அவளுக்காக இந்து மதத்துக்கு மாறி அவளின் பெயரால் உருவாக்கிய நகரமே வல்லிபுரம் ஆகும். கிபி. 6ம் நூற்றாண்டுக்கும்,7 ம் நூற்றாண்டுக்;கும் இடையில் நிகழ்ந்த இந்த வரலாற்று சம்பவத்தின் போதே மகாயான பௌத்தம் அதாவது தமிழ் பௌத்த மரபு வைஷ்ணவத்துக்குள் ஐக்கியமான வரலாற்று மாற்றமும் நிகழ்ந்தது. இந்தப் பின்னணியிலேயே நான் இங்கே குறிப்பிடும் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் தோற்றமும் இடம்பெற்றது.

ஞாயிற்றுக்கிழமை விஷ்ணு வழிபாட்டக்கு உகந்த நாள் என்ற ஒரு ஐதீகம் வழக்கில் இருப்பதால் ஒவ்வெரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த ஆலயம் பக்கதர்கள் கூட்டத்தால் நிறைந்திருக்கும்.அதுவும் ஆவணி மார்கழி மாதங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமைகள் அதிவிசேடமான நாட்கள் என்ற கருதப்படுவதால் இன்னும் அதிகமான பக்தர்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து இங்கே வந்து குவிவார்கள். இந்தக்கோவிலுள்ள இன்னொரு முக்கியமான அம்சம் இங்குவரும் பக்தர்கள் ஆலயச் சுற்றாடலில் அந்தந்த சமூகப்பிரிவினருக்கென அமைக்கப்பட்டிருக்கும் கொட்டகைகளில் தாங்களே பொங்கல் பொங்கி கடவுளுக்கு படைத்து வழிபடும் முறையாகும்.

ஆலயங்களில் இறைவனுக்கு அமுது படைக்கும் உரிமை பார்ப்பணிர்களுக்கு மட்டுமே உரிய என்ற ஆரிய பார்ப்பணிய மற்றும் யாழ்ப்பாண குடாநாட்டு சற்சூத்திர பாரம்பரியங்களுக்கு விதி விலக்காக இந்த வல்லிபுர ஆழ்வார் ஆலயம் உட்டபட்ட குறிப்பிட்ட சில கோவில்களில் இந்த நடைமுறை வழக்கத்தில் இருந்தது.

மார்கழிமாதம் முழுவதும் இந்தக் கோவிலில் மார்கழித் தோச்சல் அல்லது மார்கழி நோன்பு என்று அழைக்கப்படும் திருப்பாவை நோன்பு கொண்டாடப்படுவதால் அதிகாலை நான்கு மணியில் இருந்தே இந்தக் கோவில் களை கட்ட ஆரம்பித்துவிடும்.

எங்கள் ஊரவர்களைப் பொறுத்தவரை இந்தக் கோவில் ஒரு வழிபாட்டுத் தலம் என்பதை விட எங்களுடைய சிறு உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தவதற்கான பிரதான சந்தையாக இருந்தது.

எங்கள் ஊர் பெண்கள் தங்களது தயாரிப்பக்களான மூடல், பெட்டி, அடுக்குப்பெட்டி, நீத்துப்பெட்டி, பாய் (இவையெல்லாம் பனையோலையை கொண்டு செய்யப்பட்ட பொருட்கள்) சுளகு, பனங்கட்டி என்பவற்றை இந்தக் கோவிலின் தென்கிழக்கு மூலையில் எங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் வைத்து விற்பது வழக்கமாகும். எது பாட்டி இந்தச் சந்தையின் முகக்pய வியாபாரிகளில் ஒருவர். வள்ளி ஆச்சி எனப்படும் அவரின் மூடல் மற்றும் அடுக்குப் பெட்டிகளை வாங்குவதற்கென்று நிரந்தர வாடிக்கையாளர்கள் பலர் இருந்தார்கள்.

எனது அப்பாவுக்கு கோவில் மற்றும் அதையொட்டிய மதச்சடங்ககள் என்பவற்றில் நம்பிக்கையோ பற்றோ கிடையாது. ஆனால் அதற்காக அவர் கடவுளே இல்லை என்று சொல்லும் நாஸ்த்திகராக இருந்ததில்லை. கடவுளின் பேரால் கடவுளின் பேரைச் சொல்லி உருவாக்கப்பட்ட மதத்தால் வகுக்கப்பட்ட சாதி அமைப்பின் மீதும் அந்த அமைப்பால் கடைப்பிடிக்கப்பட்ட தீண்டாமைக் கொடுமைகள் குறித்தும் அவருக்கு அடக்கமுடியாத கோபம் இருந்தது.அந்தக் காலகட்டத்தில் இந்தத் தீண்டாமைக் கொடுமையை எதிர்த்து போராட்டம் நடத்திய பொதுவுடமை சித்தாந்தத்தின் மீது அவருக்கு ஈடுபாடும் நம்பிக்கையும் இருந்தது. ஆனால் அதை முழுமையாக புரிந்து கொள்ளும் அளவுக்கு அவரிடம் போதிய கல்வியறிவு இருக்கவில்லை. ஆனால் அடக்குபவர்களை அடக்கப்படுபவர்கள் எதிர்த்து போராடி அடக்கி ஒடுக்கும் வரை அடக்குமுறை தொடரும் என்று அவர் உறுதியாக நம்பினார். பலமே அதிகாரத்தின் அடிப்படை என்பதையும் அவர் புரிந்து கொண்டிருந்தார். மனிதனை மனிதன் பிறப்பைக் கொண்டு இழிவுபடுத்தும் அடிமைப்படுத்தும் கோட்பாட்டு ரீதியான இந்து மதத்தை ஒழிக்கவேண்டும் என்பது அவரது இலட்சியமாக இருந்தது.

ஆனால் எனது தாயார் இதற்கு நேரெதிரான போக்குடையவராக இருந்தார். தீவிரமான விஷ்ணு பக்தையான அவருக்கு பாகவதம் மகாபாரதம் இராமாயணக் கதைகள் எல்லாம் அத்துப்படியானவை. வல்லிபுரக்கோவில் சம்பந்தப்பட்ட எந்த விரதமானாலும் எந்த விஷேட நாட்களானாலும் அவர் தானும் விரதமிருந்து என்னையும் விரதமிருக்க வைப்பிப்பது வழக்கமாகும்.

அதிலும் மார்கழிமாதக் காலை நேரத்தில் அந்தக் கொடுங்குளிரில் அதிகாலை நாலுமணிக்கு என்னை எழுப்பி, எங்கள் வீட்டிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்கு அழைத்துச் சென்று மார்கழித் தோச்சல் என்ற பேரில் சில்லென்ற குளிர் தண்ணீரை தலையில் ஊற்றுவது அந்தக் காலத்தில் எனக்கு மிகப்பெரிய சித்திர வதையாக இருக்கும்.

நான் மேலே குறிப்பிட்ட அந்த ஞாயிற்றுக்கிழமையும் வழக்கம் போல அதிகாலை நாலு மணிக்கு அம்மா என்னை எழுப்பிபோது வழக்கம் போல நானும் சிணுங்கிக் கொண்டு திரும்பிப்படுத்தேன். அப்படி நான் படுக்கும் போது ‘கடவுள் படியளக்கிற நேரத்தில் என்னடா நித்திரை சனியனே எழும்படா!’ என்று அர்ச்சனை நடப்பது வழக்கம். அதுக்கும் எழும்பவில்லை எண்றால் கையால் இரண்டு மூண்று சாத்த விழுவதும் வழக்கம். ஆனால் அன்று அது எதுவுமே நடக்கவில்லை.

“அப்பு ராசா எழும்படி. இண்டைக்கு நீ ஒரு புது பள்ளிக் கூடத்துக்கு போகப் போறாய். சாமியை கும்பிட்டு நல்ல படிப்புத் தரவேணும் கெக்கோணும் எழும்பு ராசா” என்று சொல்லி வாஞ்சையோடு அம்மா என் தலையை தடவியது ஆச்சரியமாக இருந்தது. அதை விட புது பள்ளிக் கூடத்தக்கு போகோணும் எண்டது இன்னும் ஆச்சரிமாக இருந்தது.

அப்போது நான் படித்த மந்திகை பள்ளிக் கூடம் எனக்கு பிடிக்கவில்லை. என்னையும் என்னுடைய சொந்தக்கார பொடியளான சின்னத்தம்பி சந்திரன் நடராசன் ஆகியயோரையும் சாரையடி கூவில் பக்கங்களில் இருந்து வந்த வேறு சில பொடியங்களையும் எங்களுக்கு படிப்பித்த கதிர்காமர் வாத்தியார் வாங்கிலில் இருக்க விடாமல் அழுக்கான நிலத்தில இருத்திறதும், ‘சனியன் மூதேசியளே மரமேறப் போறதுக்கும் மாடு மேய்க்கப் போறதுக்கும் என்ரா உங்களுக்கு படிப்பு’ என்று அடிக்கடி பேசி அடிக்கிறதும் எனக்கு பிடிக்கவில்லை. ‘பள்ளிக் கூடம் எணடால் வாங்கிலிலை இருந்து கொண்டு மேசையில சிலேட்டையும் புத்தகத்தையும் வைச்சுப் படிக்கோணும்’ என்றது தான் என்னுடைய அப்போதைய ஆசை.
“அம்மா அம்மா புது பள்ளிக் கூடத்தில நான் வாங்கில் மேசையில் இருந்து படிக்கலாமே?” என்று நான் கேட்க “ஓ இந்தப் பள்ளிக் கூடத்தில படிக்கலாம்” என்று அம்மா பதில் சொல்ல, நான் அடைந்த சந்தேசத்துக்கு அளவில்லை.
படுக்கையை விட்டு துள்ளி எழுந்தேன். இப்போது நினைத்தாலும் அந்த மகிழ்ச்சியான நேரம் என் ஞாபகத்தில் அழியாமல் அப்படியே இருக்கிறது.
எங்கள் வீட்டிலிருந்து வல்லிபுரக் கோவிலுக்கு போவதற்கு மூன்று வழிகள் இருக்கின்றன. ஒன்று துன்னாலையில் இருந்து வரும் கிறவல் ரோட்டால் தாமரைக்குளத்தின் அருகாகச் செல்வது. இரண்டாவது முனியப்பர் கோவில் அமைந்திக்கும் பனங் காணி வழியாகச் செல்வது. மூன்றாவது எழுவாக்கை எனப்படும் வயல் பரப்பினுடாக செல்வது.

தாமரைக் குளத்தில் யாரோ ஒருவர் தற்கொலை செய்து விட்டதால் அவரது ஆவி அந்தப்பகுதியில் நடமாடும் என்று சொல்லி அதிகாலையில் அந்த வீதியால் அம்மா என்னை கோவிலுக்கு அழைத்துச் செல்வதில்லை. அது போல் முனியப்பரும் பிடித்துவிடுவார் என்ற பயத்தில் அந்தப் பாதையையும் பாவிப்பதில்லை.அதனால் எப்போதும் எழுவாக்கை வயல் வெளியினூடகத்தான் நாங்கள் கோவிலுக்குச் செல்வது வழக்கம்.

அன்றும் வழக்கம் போல அந்த வழியால் அம்மா வயல் வரப்பில் முன்னாலும் பாட்டி பின்னாலும் நடந்து வர நான் நடுவில் சென்று கொண்டிருந்தேன். திடிரென நாங்கள் சென்று கொண்டிருந்த வயல் வெளிக்கு எதிர்ப்புறமுள்ள ஆனை விழுந்தான் மணல் வெளியில் நெருப்புக் கோளங்கள் எரிந்து எரிந்து அனைந்து கொண்டிருந்தன.

“ஐயோ என்ரை பிள்ளை” என்று அம்மா என்னை கட்டி அணைத்து முந்தானைக்கள் மூடிக்கொண்டு ‘அரி ஓம் நமோ நாராயணா’ என்று திரும்பத் திரும்பச் செல்ல, பாட்டியும் ஓடிவந்து என்னை மறைத்து கொண்டு நின்றா.எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரே பயமாக இருந்தது. ‘என்னம்மா அது’ என்று அம்மாவை இரகசியமாக கேட்க ‘கொள்ளிவால் பேயள் போகுதுகள்’ என்று அவவும் இரசியமாக பதில் சொன்னா.

அம்மாவின் முந்தானைக்குள் ஒளிந்திருந்தபடி மெதுவாக எட்டிப் பார்த்தேன். வரிசையாக நெருப்பு கோளங்கள் சென்று கொண்டிருந்தன.முன்னுக்கு போன கோளங்கள் அணைந்து போக பின்னுக்கு புதிது புதிதாக கோளங்கள் தோன்றிக் கொண்டிருந்தன. எனக்கு இன்னும் பயம் வந்துவிட்டது. அம்மாவை இறுக்கி கட்டிப் பிடித்துக் கொண்டேன்.

புதன், 8 நவம்பர், 2006

தமிழ் தளத்தில் ஊடகவியல் 06

06தமிழ் தளத்தில் நடுநிலையும் சார்புத் தன்மையும்
மேற்குலக மேலாதிக்க ஊடகங்களின் நடுநிலமைக்குப் பின்னால் ஒளிந்திருக்கின்ற சார்பு நிலை பற்றியும் நடுநிலை என்ற ஒன்று இருப்பது சாத்தியமில்லை என்றும் நாங்கள் கூறும்போது நடுநிலையோடு இணைத்துக் கட்டமைக்கப்பட்ட நம்பகத்தன்மை பற்றி பேசாமல் இருக்க முடியாது.

நம்பகத்தன்மை என்பது என்ன?

நம்புவது என்றால் ஏற்றுக்கொள்வது என்று சாதாரணமாக தமிழில் அர்த்தம் கொள்ளப்படுகிறது. ஒன்றை ஒருவர் நம்புவது என்பது அவரது உணர்வு மற்றும் விருப்பம் சார்ந்த விடயங்களாகும். இந்த உணர்வும் விருப்பமும் ஒருவருக்கு ஜெனடிக் எனப்படும் பரம்பரை மரபணுக்கூறுகளால் மட்டும் வந்துவிடுவது இல்லை. அவர் சார்ந்த சமூகத்தின் கலாச்சாரத் தளமும் மொழித் தளமும்தான் அதைக் கட்டமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு மனிதனுடைய சமூக அமைப்பும் அவன் வாழுகின்ற சூழலும்தான் அவனது நம்பிக்கைகளுக்கு அடிப்படையாக இருக்கின்றன.
சிறிலங்காப் படையினர் தமிழ் மக்களுடைய எதிரிகள் என்று நாங்கள் சொல்லுகின்ற போது மேலெழுந்த வாரியாக அதைச் சொல்வதில்லை. எங்களுடைய மண்ணை அவர்கள் ஆக்கிரமித்திருப்பதையும் எங்களுடைய மக்களை அவர்கள் கொன்று குவிப்பதையும் அடிப்படையாக வைத்துத்தான் நாங்கள் இந்த முடிவுக்கு வருகின்றோம். தமிழினத்தை அழிக்க வேண்டும் என்ற பொதுக் குறிக்கோளை அடிப்படையாக வைத்து அவர்கள் செயற்படுவதனாலேயே தமிழ் இனத்தின் எதிரிகள் என்று அவர்களை நாங்கள் வரையறை செய்தகின்றோம்.
இந்த வரையறையை நாங்கள் தமிழர்கள் என்ற ஒரு சார்பு நிலையில் நின்றுதான் எடுத்திருக்கின்றோம். இந்த வரையறையைச் செய்ததில் எந்தவிதமான பொய்களுக்கோ மிகைப்படுத்தல்களுக்கோ நாங்கள் இடம் கொடுக்கவில்லை.
1948 பெப்ரவரி 4 இல் சிங்கள பௌத்த பேரினவாதிகள் இலங்கையின் ஆட்சிப்பொறுப்பைக் கைப்பற்றி தமிழினத்தையும் தமிழர் தாயகத்தையும் அழித்தொழிப்பதற்கு முடிவெடுத்த பின்பு அந்த முடிவை நடைமுறைப்படுத்தும் அடக்குமுறைக் கருவியாக சிறிலங்காவின் அரச படையினர் பயன்படுத்தப்பட்ட பின்பே அவர்கள் எங்கள் எதிரிகள் அவர்களை எதிர்த்து நாங்கள் போராடவேண்டும் என்ற முடிவுக்கு நாங்கள் வருகின்றோம். 1950களில் இந்த எண்ணக்கரு தோன்றி 1958 இனக்கலவரத்தில் அது உறுதிப்படுத்தப்பட்டு 1970களில் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக பரிணமித்தபோது அதை ஒடுக்குவதற்கு சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட - மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளால் இந்த எண்ணக்கரு ஒரு தீர்மானகரமான வரையறையாக மாற்றம் பெற்றது.
குறிப்பாக சொல்வதானால் சிறிலங்காப் படைகள் தமிழர்களின் எதிரிகள் என்ற இந்தக் கருத்து எங்களுக்கு முன்பிருந்த முதல் தலைமுறையில் தோற்றம் பெற்று எங்களுடைய தலைமுறையில் வலுப்பெற்று எங்களுக்கு அடுத்த எங்களுடைய பிள்ளைகளின் தலைமுறைக்கு விட்டுச்செல்லப்படுகிறது. அதைவிட இந்த மூன்று தலைமுறையிலும் இந்த கருத்தின் நம்பகத்தன்மை என்பது சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. சார்பு நிலையிலும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.
இதேவிடயத்தை மேற்குலக நடுநிலைக் கோட்பாட்டின்படி கருத்துருவாக்கம் செய்கின்றபோது இலங்கை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் பொதுவான ஒரு நாடு. இலங்கைத் தேசியம் என்பது சிங்களவர்கள், தமிழர்கள் முஸ்லீம்கள், பறங்கியர்கள் என்று அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியது. இதைச் சிதைப்பதற்கு முயலும் தமிழ் பயங்கரவாதிகளுக்கு எதிராக அரச படைகள் தீரத்துடன் போராடி வருகின்றன. இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டை காப்பாற்றுவதற்காக போராடுகின்ற அரச படையினர் தேச பக்தர்கள் என்று குறிப்பிடப்படும்.
உண்மையில் இதிலே எங்கே இருக்கின்றது உண்மையும் நம்பகத்தன்மையும். தமிழர்களை அழித்தொழித்து தமிழர் தாயகத்தை ஆக்கிரமிக்க வேண்டும் என்று நினைக்கும் பௌத்த சிங்கள பேரினவாதிகளைப் பொறுத்தவரை இது ஒரு உண்மையான நடுநிலமையான செய்தியாகும்.

உண்மையும் நேர்மையும்.

நடுநிலமையாக செயற்படும் ஒரு ஊடகத்தில்தான் உண்மையாகவும் நேர்மையாகவும் செய்திகள் சொல்லப்படும், தகவல்கள் வெளிப்படுத்தப்படும் என்ற எண்ணம் மக்களுடைய மனங்களிலே பதிய வைக்கப்பட்டிருக்கிறது.
எங்களுடைய தாயகத்திலே எவ்வளவோ அநீதிகளையும் எத்தனையோ கொடுமைகளையும் சிறிலங்கா அரசும் அதனுடைய படைகளும் செய்கின்ற போதிலும் நடுநிலையோடு செயற்படுவதாக சொல்லிக்கொள்ளும் மேற்குலக ஊடகங்கள் இவற்றில பத்தில் ஒரு பகுதியையாவது வெளியே கொண்டு வந்ததில்லை. அல்லைப்பிட்டியில், வங்காலையில், பச்சிளம் குழந்தைகள் படுபாதகமான முறையில் கொல்லப்பட்ட போதும் இந்த ஊடகங்களின் நடுநிலைக்குரிய விடயமாக அவை தென்படவி;ல்லை.
விடுதலைப் புலிகள் சிறுவர்களை படையில் சேர்க்கிறார்கள் என்ற செய்திக்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்து வெளியிடும் இந்த மேலாதிக்க ஊடகங்கள் இ;ந்த படுபாதக செயல்களுக்கு நூற்றில் ஒரு பங்கு முக்கியத்துவம் கூட கொடுக்கவில்லை. இங்கே நடுநிலையின் பேரால் உண்மையும் நேர்மையும் புதைகுழிக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன.

உண்மையான உண்மை

உண்மை என்று ஒன்று இருக்கின்றதா, என்று இந்த உண்மை தொடர்பான பல சர்ச்சைகளும் உலகத்தில் இருக்கின்றன. உண்மை என்பதே சார்புத் தன்மையுடையது, ஒருவர் பார்க்கும் பார்வையைப் பொறுத்தது, ஒருவருக்கு உண்மையாகத் தெரிவது மற்றொருவருக்கு பொய்யாகத் தெரியும் என்பது இந்த உண்மை தொடர்பாக முன் வைக்கப்படும் கருத்துக்களில் முக்கியமானதொன்றாகும். உதாரணமாக விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடுகின்ற விடுதலைப் போராளிகள் என்பது நூற்றுக்கு நூறு வீதம் உண்மையான ஒரு கூற்றாகும். தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒரு சில துரோகிகளைத் தவிர மற்ற அனைவருக்கும் இந்தக் கூற்று ஏற்புடையதொன்றாகும். ஆனால் சிங்களவர்களைப் பொறுத்தவரை இது ஒரு பொய்யான கூற்றாகும். அவர்களுடைய பார்வையில் விடுதலைப் புலிகள் என்றால் பயங்கரவாதிகள் ( ஒரு சிலர் விதிவிலக்காக அவர்களை போராளிகள் என்று ஏற்றுக்கொண்டாலும்) என்றே அர்த்தம் கொள்ளப்படுகிறது. இங்கே தமிழர்களுக்கு உண்மையாகத் தெரிவது சிங்களவர்களுக்கு பொய்யாகத் தோன்றுகிறது. இதிலே உண்மை எது பொய்யெது என்பதை தமிழ் தளம், சிங்களத்தளம் என்ற சார்பு நிலைகள்தான் தீர்மானிக்கின்றன. இதிலே மேற்குலக மேலாதிக் ஊடகங்களும் சிங்களத் தரப்பை இறைமையுள்ள அரச தரப்பாகவும் தமிழ் தரப்பை அரசின் இறைமைக்கு எதிராக போராடும் எதிர் தரப்பாகவும் கட்டமைத்து சிங்கள அரசின் பார்வையை உள்வாங்கி விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள், வன்முறையாளர்கள், பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துவதற்கு முயல்கின்றன. இங்கே உண்மை என்பது அதிகாரத்தின் அடிப்படையில் இந்த மேற்குலக ஊடகங்களால் போலியாக கட்டமைக்கப்படுகிறது. இவர்கள் குறிப்பிடும் இந்த உண்மை உண்மையைப்போல் தோன்றும் ஆனால் உண்மையாக இருக்காது.

உண்மையால் கட்டமைக்கப்படும் பொய்.

ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகி விடும் என்பது ஜேர்மன் சர்வாதிகாரி அடல்ப் கிட்லரின் ஆட்சியில் பரப்புரைக்குப் பொறுப்பாக இருந்த அமைச்சர் கோயாபல்ஸ் உருவாக்கிய கருத்தியலாகும். பொய்யை உண்மையென்று மக்கள் நம்பும்படி சொல்வதுதான் இன்றைய மேற்குலக ஊடகக் கருத்தியலாகும்.
அதெப்படி பொய் உண்மையாக முடியும் என்று சிலர் கேட்கக்கூடும். உதாரணமாக தீவிரமான கடவுள் நம்பிக்கையுடைய ஒருவரைப் பார்த்து அவர் சிறந்த ஆஸ்திகர் என்றும், கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவரைப் பார்த்து நாஸ்திகர் என்றும் கூறுகிறோம். கடவுள் நம்பிக்கை இல்லாத நாஸ்திகரைவிட கடவுள் நம்பிக்கையுள்ள ஆஸ்திகர்தான அதிகளவுக்கு கடவுளை நிந்தனை செய்பவராகவும், கடவுள் மறுப்பாளராகவும் இருக்கிறார் என்ற உண்மை பலருக்குத் தெரிவதில்லை.
ஒரு நாஸ்திகர் கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார் என்பதையோ அவரை வழிபடுவதற்கான வழிபாட்டு முறைகளையோ ஏற்றுக்கொள்வதில்லை. அவரைப் பொறுத்தவரை எல்லாமே பொய்யானவை. மனிதனைவிட மேலான சக்தி இல்லை என்பது அவரது கருத்தாகும். ஆனால் ஒரு ஆஸ்திகரைப் பொறுத்தவரை கடவுள் என்ற ஒருவர் இருக்கின்றார், அவரை வழிபடுவதற்கு சிறந்த வழிமுறைகள் இருக்கின்றன என்பதை அவர் சந்தேகத்திற்கு இடமின்றி ஏற்றுக்கொள்கிறார். ஆனால் அந்தக் கடவுள் என்பவர் யார்? சிவனா? விஷ்னுவா? கர்த்தரா? அல்லாவா? இவர்களை வழிபடுவதற்குரிய வழிபாட்டு முறைகளில் எது சிறந்தது என்பதில் இவருக்கு பெரிய பிரச்சினை. இந்துக்களில் சைவ சமயத்தவர்களுக்கு சிவன்தான் பெரியவர், முழுமுதல் கடவுள். வைஷ்ணவ சமயத்தவர்களுக்கு விஷ்னுதான் பெரியவர், அவர்தான் முழு முதல் கடவுள். இதில் சிவன் பெரியவரா, விஷ்னு பெரியவரா இரண்டுபேரையும் வழிபடும் ஆஸ்திகர்களுக்கிடையில் பெரிய போட்டி. சிவன் பெரிது என்பவர்கள் அடிமுடி தேடிய கதையையும், விஷ்னு பெரிதென்பவர்கள் பஸ்மாசுரனனிடமிருந்து சிவனை விஷ்னு காப்பாற்றிய புராணத்தையும், சொல்லி தங்கள் கடவுள்தான் உயர்ந்தவர் என்று நிலைநாட்ட முயலுகின்றார்கள்.
கிறிஸ்தவர்களுக்கு கர்த்தர்தான் பெரியவர், மேன்மையானவர், இயேசு பாலன் அவருடைய திருக்குமாரன். கர்த்தரையும். இயேசுவையும் ஆராதிக்கும் தீவிர கிறிஸ்தவர்களுக்கு ஏனைய மதக்கடவுள்கள் ஏற்புடையவர்களல்ல. சில அதி தீவிர கிறிஸ்தவர்கள் ஏனைய கடவுள்களை சாத்தான்கள் என்று அழைப்பதுமுண்டு.
முஸ்லீம்களுக்கு அல்லா மட்டும்தான் கடவுள். அவருக்கு உருவம் கிடையாது. ஐந்து வேளை அல்லாவைத் தொழுது வழிபடும் இஸ்லாமிய மார்க்கம்தான் உலகில் சிறந்தது. ஏனையவை எல்லாம் இழிந்தவை.
இதிலே இந்து, கிறிஸ்தவம், முஸ்லீம் என்று மூன்று மதங்களையும் கடைப்பிடிப்பவர்கள் தங்கள் தங்கள் மதக் கடவுள்களையும் அந்த கடவுள்களை வழிபடும் மதச் சடங்குகளையும் நம்பும் - ஏற்றுக்கெ;hள்ளும் அதே நேரத்தில் ஏனைய கடவுள்களையும் மதங்களையும் நிராகரிப்பதுடன் நிந்திக்கவும் செய்கிறார்கள்.
இந்த கடவுள் நிந்தனை என்பது நாஸ்திகர்கள் செய்யும் கடவுள் நிந்தனையை விட அதிகமானதாகவும் வன்முறைசார்ந்ததாகவும் இருக்கிறது. இன்று உலகிலே குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளிலே நடைபெறும் பல்வேறு கலவரங்களுக்கு கடவுளே காரணமாக இருக்கிறார். இதிலே முக்கியம் என்னவென்றால் ஆஸ்திகன் என்ற உண்மைக்குப் பின்னால் நாஸ்திகன் என்ற பொய்யும் மறைந்திருப்பதேயாகும். இந்த முறையைத்தான் மேற்குலக மேலாதிக்க சக்திகளும் மேலாதிக்க ஊடகங்களும் தேசங்கள், தேசிய இனங்கள், மற்றும் தேசிய விடுதலைப் போராட்டங்களை சிதைப்பதற்காக திட்டமிட்டு கட்டமைத்து பரப்பி வருகின்றனர்.

சார்பு நிலைக்கும் நம்பகத் தன்மைக்குமான இடைவெளி

மேற்குலக மேலாதிக்க ஊடகங்கள் ‘நடுநிலை’ என்ற பெயரில் தாங்கள் விரும்புகின்ற பக்கச் சார்பான பொய் கருத்தை உண்மையான கருத்து என்று மக்கள் நம்புகின்ற விதத்தில் மக்களுக்கு விருப்பமான வடிவத்தில் கொடுத்து, உலகமயமாயதலுக்குத் தேவையான நுகர்வுக் கலாச்சாரத்துக்குள் அவர்களை சிக்க வைத்துக் கொண்டிருக்கிற போது, ‘தனது விடுதலைக்காகப் போராடுகின்ற ஒரு இனம் என்ற தளத்தில் இருந்து ஒரு தனித்துவமான ஊடகக் கருத்தியலை உருவாக்க வேண்டும் என்று சிந்திக்கின்ற நாம் எங்களுடைய கருத்தை மக்கள் விரும்புகின்றபடி, மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுகின்றபடி எப்படிக் கொடுப்பது ? என்பது ஒரு முக்கியமாகக் கேட்டகப்பட வேண்டிய ஒரு கேள்வியாகும்.
இந்தக் கேள்விக்குரிய விடையை பின்வருமாறு கூறிலாம் 'ஒரு தவறான கருத்தை அது தவறு என்று தெரிந்து கொண்டே அதை மூடிமறைத்து மக்கள் மீது திணிக்க கூடாது. எங்களுடைய கருத்து சரியான கருத்தாகவும் நியாயத்தின் பாற்பட்ட கருத்தாகவும் இருக்க வேண்டும். இதிலே ‘சரியானது நியாயமானது’ என்பதை எங்களுடைய மக்களுடைய தளத்திலே (மக்களுடைய தளம் என்கிற போது இனம் மொழி எல்லாமே அதற்குள் அடங்கும்) நின்று நாங்கள் தீர்மானிக்க வேண்டும். ‘நாங்கள் மக்களோடு நிற்பவர்கள், மக்களுக்காக போராடுபவர்கள் மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள்’என்ற எண்ணம் மக்களுக்கு வருகின்ற போது ‘இவர்கள் சொல்வது சரியாக இருக்கும்’ என்கின்ற நம்பகத் தன்மை இயல்பாகவே அவர்களுக்கு ஏற்படும்.
ஏற்கனவே ஊடகவியலில் சார்பு நிலை என்றால் ‘அது பிரச்சாரத் தன்மை உடையது. பொய்கள் நிரம்பியது.மிகைப்படுத்தப்பட்ட தகவல்களைக் கொண்டது’ என்ற கருத்து மக்கள் மத்தியிலே விதைக்கப்பட்டிருக்கிறது. இதை முதலில் தகர்த்தெறிய வேண்டும். நடுநிலை என்பது ஒரு சந்தர்ப்பவாதம் என்பதையும் உண்மையான உண்மையையும், உண்மையான களயதார்த்ததையும் மூடி மறைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு போலி வடிவம் என்பதையும் மக்களுக்கு அம்பலப்படுத்தவேண்டும். சமுக அக்கறையுடனும் சமூகத்தளம் சாhந்தும் எழுதப்படும் எழுத்துக்களே உண்மையானவை என்பதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.இதற்கு ‘தகவல் தெரிவிப்பதற்கும் பிரச்சாரத்துக்கும் இடையில் உள்ள தொடர்பு’ என்ன என்பதையும், அதை எப்படிக் கையாள்வது என்பதையும் தெளிவாக வரையறுக்க வேண்டும்.

தகவல் தெரிவிப்பதும் பிரச்சாரமும்

தகவல் தெரிவிப்பதற்கும் பிரச்சாரம் செய்வதற்கும் இடையில் ஒரு சிறிய இடைவெளி தான் இருக்கிறது. ஒரு தகவலை மக்களுக்கு தெரிவிக்கும் விடயத்தில் இந்த இடைவெளி அதிகரிக்கும் போது அது புதினத் தன்மையுள்ளதாகவும், குறுகும் போது பிரச்சாரத் தன்மையுள்ளதாகவும் மாறுகிறது.
ஒரு தகவலை அல்லது சம்பவத்தை ஒரு தடவை அதுவும் முதல் தடவை சொல்லும் போது அது செய்தியாகிறது.(அதில் புதினத் தன்மை இருக்கும்). இரண்டாவது தடவை அதை திரும்பிச் சொல்லும் போது அது பிரச்சாரமாகிறது.
ஏற்கனவே நிகழ்ந்த ஒரு செயல் அல்லது சம்பவம் ஊடகங்களால் மீள் நிகழ்த்தலுக்கு உள்ளாக்கப்படும் போது தான் அதற்குரிய அடையாளமும் வடிவமும் அர்த்தமும் கொடுக்கப்படுகின்றது என்று பார்த்தோம்.இந்த மீள்நிகழ்தல் நடைபெறும் போது அது நூற்றக்கு நூறு விதம் அப்படியே நிகழ்த்தப்படுவதில்லை.
ஒரு செய்தி மறுவாசிப்புக்கு அல்லது பிரதியெடுத்தலுக்கு உட்படுத்தப்படும் ஒவ்வொரு முறையும் குறைந்தது 10 வீதம் இடைச் செருகல்களுக்கும் புனைவுகளுகக்கும் உட்படுகின்றது.
ஒரு செய்தியில் எந்தளவுக்கு இடைச் செருகல்களும் புனைவுகளும் ஒட்டிக் கொள்கிறதோ அந்தளவுக்கு அந்தச் செய்தி மக்களின் நம்பகத் தன்னமையயை இழந்துவிடும்.சிலர் ஆர்வக் கோளாறு காரணமாகவும் தாங்கள் சிறந்த சார்பு நிலையாளர்கள் என்று காட்டிக்கொள்வதற்காகவும் சில செய்திகளை அவற்றின் செய்திப் பெறுமதிக்கு அப்பால் பூதாகரமாக்கிவிடுகிறார்கள்.இது உடனடியாக மக்கள் மத்தியிலே ஒரு பரபரப்பை எற்படுத்தினாலும் கள யாதார்த்;தம் மக்களுக்கு தெரியவரும் போது அத்தகைய செய்திகளும் அவற்றை வெளியிடும் நிறுவனங்களும் கூட மக்களின் நம்பகத் தன்மையை இழந்துவிடுகின்றன.
மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு ஒரு செய்தியை அதன் செய்திப் பெறுமதிக்கு அப்பால் பூதாகரமாக்காமல் இருப்பது என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.

தமிழ் தளத்தில் ஊடகவியல் 05

நடுநிலையும் சார்பு நிலையும்

மேற்குலக ஊடகங்களும், உலக மேலாதிக்க சக்திகளும் ‘நடுநிலை’ என்ற சொல்லை மிக உன்னதமான பண்புகளைக் கொண்ட ஒரு சொல்லாகவும் அந்தச் சொல்லுக்குரிய அர்த்தமும் அதனூடக கட்டமைக்கப்படுகின்ற கருத்தியலும் மிகச் சிறந்தது, உயர்ந்தது என்று திரும்பத் திரும்ப நமக்குப் போதித்திருக்கின்றன.
ஊடகத்துறையில் பெரிய மேதைகள் விற்பன்னர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பலர் ‘ஊடகமென்பது நடுநிலையானதாக இருக்க வேண்டும். ஒரு ஊடகவியலாளனும் நடு நிலையான போக்கையே கடைப் பிடிக்கவேண்டும்’ என்று உபதேசம் செய்வதையும் நாங்கள் பார்க்கலாம்.
பல அச்சு ஊடகங்கள் ‘நடுநிலை நாழிதழ்’ ‘நடுநிலை வாரஇதழ்’ ‘நடுநிலை மாத இதழ்’ என்று பெரிய எழுத்தில் பெருமையுடன் பறைசாற்றிக் கொள்வதையும் நாங்கள் அவதானிக்கலாம்.
இலத்திரனியல் ஊடகங்களான பல வானொலிகள் தொலைக்காட்சிகள் இணையத்தளங்கள் கூட இந்த நடுநிலை என்ற சொல்லை தவறவிட்டதில்லை.
அந்தளவு இந்தச் சொல் இன்று ஊடகத்துறையிலே முக்கியமான ஒன்றாக ஆகிவிட்டது.

நடுநிலை என்பது என்ன?

நடுநிலை என்பதற்கு சரியான அர்த்தம் ‘பக்கம் சாராமல் இருப்பதாகும்’. பக்கம் சாரமால் இருப்பதென்றால் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள்,அரசியல் சமூக நலன்கள்,பொருளாதார நலன்கள், இன மொழி உணர்வுகள், இப்படி எந்தவித தாக்கமும் இல்லாமால் அனைத்தையும் அனைவரையும் சமமாக மதித்து அனைவருக்கம் சமமான சந்தர்ப்பம் வழங்கி செயற்படுவது என்று வரையறுக்கலாம். இன்றைய சமுச்சீரற்ற ஏற்றத் தாழ்வான இந்த உலகத்திலே எவராவது அப்படி இருக்கிறார்களா? அரசியல் சமூகம் சமயம் பொருளாதாரம் ஊடகம் என்று எந்தத் துறையிலாவது பக்கம் சாராத நடு நிலை என்று சொல்லக் கூடிய இந்தச் செயற்பாடு இருக்கிறதா? ஏன்றால் உண்மையான பதில் ‘இல்லவே இல்லை’ என்பது தான்.
தனி மனிதர்களில் இருந்து அமைப்புக்கள் நிறுவனங்கள் அரசாங்கங்கள்; என்ற அனைத்துமே சார்புத் தன்மை உடையவையே. தனி மனிதர்கள் கூட இன்னொருவரை சார்ந்திருக்காமல் வாழ முடியாது. தனி மனிதர்களுடைய சொந்தக் கருத்துக்களும் கூட அவர்கள் வாழும் சூழலையோ அந்தச் சூழலிலுள்ள சமுக அரசியல் பொருளாதார அடிப்படைகளையோ , மொழித் தளத்தையோ விட்டு வானத்தில் இருந்து குதிக்க முடியாது.
உதாரணமாக இன்று நமது தாயகத்திலே சிறீலங்கா அரசின் கொடூரமான இன ஒடுக்கு முறையும் இனஅழிப்பு நடவடிக்கைகளும் அதற்கு எதிரான வீரஞ் செறிந்த விடுதலைப் போராட்டமும் நடைபெறுகிறது. ஈழத் தமிழர் ஒருவர் ‘இதில் எனக்கு சம்மந்தம் இல்லை. நான் பக்கம் சாராதவன் நடு நிலைமையானவன் என்று கூறினால் அவரைவிட பெரிய பொய்யன் யாரும் இருக்க முடியாது. ஏனென்றால் ஒட்டு மொத்தமான தமிழ் மக்களுக்கும் எதிராக சிங்கள பௌத்த பேரினவாத அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படும் போது ‘நான் அதில் சம்பந்தப் படாதவன்’ என்று சொன்னால் அவர் அந்த ஒடுக்கு முறைக்கு எதிராக நடக்கின்ற நியாயத் தன்மையுடைய விடுதலைப் போராட்டத்தை மறுதலிக்கிறார் என்றே அர்த்தமாகும். இதன் மூலம் அவர் ஒடுக்கு முறையை ஏற்றுக் கொள்ளும் அரச சார்புத் தன்மையை கொண்டிருக்கிறார் என்பதே உண்மையாகும். சிறீலங்காவின் படையினர் தமிழர் தாயகப் பகுதியில் விமானக் குண்டு வீசசு நடத்தும்; போதோ எறிகணைத் தாக்குதல்கள் நடத்தும் போதோ அவரையே அவரது வீட்டையோ தவிர்த்துவிட்டுத் தாக்குதல் நடத்தாது. அந்த நபர் விரும்பாவிட்டாலும் சிறீலங்காஅரசின் இன ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்படும் தமிழர்கள் என்ற அடையாளத்துக்குள் தான் அவரும் அடக்கப்படுவார்.
குறிப்பாகச் சொல்வதானால் நடு நிலைமை என்று சொல்வது அநீதிக்கு துணைபோகின்ற ஒரு சந்தர்ப்பவாதமாகும்.தமிழிலே இதற்கு மதில் மேல் பூனையாக இருப்பது என்று ஒரு அர்த்தமும் இருக்கிறது.

எதற்காக நடுநிலை?

உண்மையில் ஊடகத்துறையில் நடுநிலைமை என்று சொல்வது ஊடக நிறுவனங்கள் கடைப்பிடிக்கின்ற ஒரு வியாபாரத் தந்திரமாகும். மக்களை திசை திருப்புவதற்காக, ஏமாற்றுவதற்காக மக்களை சந்தைப் பொருட்களாக்கு வதற்காக கையாளப்படும் ஒரு செயல் முறையே இதுவாகும்..‘நடு நிலை என்றால் சரியானதாக இருக்கும், நேர்மையானதாக இருக்கும், உண்மையானதாக இருக்கும்’ என்கின்ற பிம்பம் அல்லது மாயை நமது மனத் தளத்திலே திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.‘சரியானது’ ‘உண்மையானது’ ‘நேர்மையானது’ என்ற இந்த சொற்பதங்கள் அவை குறிப்பிடும் அர்த்தத்தை ஒருபோதும் நூற்றுக்கு நூறு வீதம் வெளிப்படுத்தியதில்லை. உதாரணமாக தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்திருக்கும் சிங்களப் படையினர் தங்களது செயல் சரியானது என்று நினைக்கின்றனர்.பயங்கரவாதிகளுக்கு எதிராகவே நீங்கள் போராடுகின்றீர்கள் என்று சிறீலங்கா அரசாங்கம் சொல்வதை அவர்கள் உண்மை என்று நம்புகின்றனர். தமிழர்களுக்கு எதிராக தாங்கள் கட்டவிழ்த்து விடுகின்ற இனஅழிப்பு நடவடிக்கைகளை அவர்கள் நேர்மையான செயற்பாடு அல்லது தங்களுக்கு விதிகக்ப்பட்ட கடமை என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மை என்பது அதுவல்லவே!
ஓரு மேற்குலக ஊடகம் அல்லது உள்ளுர் ஊடகம் ‘இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் உள்ள பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு மத்திலும் தங்கள் கடமையை சரிவரச் செய்கின்றனர்.’ என்று செய்தி வெளியிட்டால் மேற்குலக ஊடகக் கோட்பாட்டின் படி அது ஒரு நடு நிலைமையான செய்தியாகும்.
ஈராக்கின் மீதான அமெரிக்கப் படையெடுப்பை இன்னொரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ‘ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹ{சைன் பேரழிவு ஆயுதங்களை வைத்திப்பதாகவும் அதனால் உலகிற்கு ஆபத்து’ என்றும் புஷ் நிர்வாகம் கூறியதை மேற்குலக ஊடகங்கள் எல்லாமே வரிந்து கட்டிக்கொண்டு முதன்மைச் செய்திகளாக வெளிட்டன. ஆய்வுகள் விவாதங்கள் விமர்சனங்கள் என்று இந்த ஒரு விடயம் உடகங்களின் முதன்மையான இடத்தை பிடித்துக்கொண்டது. ஈராக்கின் மீது அமெரிக்கா படையெடுத்த போது உலகை பேரழிவில் இருந்து காப்பாற்றுவதற்காகவும் சதாமின் அடக்கு முறையில் சிக்கியிருக்கும் ஈராக்கிய மக்களை விடுவிப்பதற்காகவும் அமெரிக்கா மேற்கொண்ட உன்னதமான நடவடிக்கையாகவும் அது சித்தரிக்கப்பட்டது. இந்தச் சித்தரிப்புக்கள் எல்லாமே நடுநிலையான ஊடகக் கோட்பாடு என்ற அடிப்படையிலே தான் மேற்குலக ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டது.
ஆனால் ஈராக் போரின் பின்பு இன்றுவரை அமெரிக்க அரசுத் தலைவர் ஜேர்ஜ் டபிள்யூ புஷ் நிர்வாகத்தின் கூற்றை அடிப்படையாக வைத்து இந்த ஊடகங்களால் கட்டமைக்கப்பட்ட பேரழிவு ஆயுதங்கள் எவையும் ஈராக்கில் கண்டபிடிக்கப்படவில்லை. சதாம் ஹ{சேன் ஆட்சியில் இருந்ததைவிட பல மடங்கு மோசமான அடக்குமுறைதான் இன்று ஈராக்கில் நிலவுகிறது. அமெரிக்க நலன்களுக்காக சன்னி, சியட் மதப்பிரிவகளுக்கிடையிலான மோதல்கள் கூர்மைப்படுத்தப்பட்டிருக்கின்றன. குர்திஷ் இனமக்களுக்கு சதாம் இளைத்த கொடுமை பற்றிப் பேசும் இந்த மேற்குலக ஊடகங்கள் துருக்கியிலே அந்த மக்களுக்கு இருக்கும் அடக்குமுறை பற்றியோ அந்த மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் பற்றியோ பேசுவதில்லை.குர்திஷ் இனமக்களின் விடுதலைக்காகப் போராடிய அப்துல்லா ஒச்சலான் இன்றைக்கும் இவர்களைப் பொறுத்த வரை ஒரு பயங்கரவாதியாகும்.. ஈராக்கியப் போரிலே ஒருகுண்டு வெடிப்புச் சம்பவத்தின் போது ஒரு குழந்தையை அமெரிக்க படை வீரர் ஒருவர் காப்பாற்றுவது போன்ற ஒரு காட்சி அமெரிக்க தொலைக்காட்சிகளிலே அடிக்கடி காண்பிக்கப்படும். ஈராக்கில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப்படையினர் மக்களுக்காகவே போராடுகின்றார்கள் என்பதை காண்பிப்பது தான் இதன் நோக்கம்.ஆனால் ஈராக்கில் அமெரிக்கப்படைகளின் குண்டு வீச்சில் கொல்லப்பட்ட குழந்தைகளின் காட்சிப்படங்களையும் யுத்தத்தை திணித்ததன் மூலம் சிரழிக்கப்பட்ட அவர்களது எதிர்கால வாழ்க்கையையும் இன்னமும் எவரும் உரிய முறையில் படம்பிடித்துக் காட்டவில்லை.

பயங்கரவாதத்துக்கு எதிரான போர்

‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ என்று இப்போது இந்த மேற்குலக மேலாதிக்க ஊடகங்கள் ஒரு கருத்தியலை கட்மைத்துள்ளன. ‘பயங்கர வதம் என்றால் என்ன?’ என்பதற்கு இதுவரை இந்த ஊடகங்களாலேயோ இந்த ஊடகங்களை இயக்ககின்ற மேலாதிக் சக்தினாளினாலேயோ ஒரு தெளிவான வரைவிலக்கணம் கொடுக்கப்படவில்லை. அவ்வாறே பயங்கரவாதத்துக்கும் விடுதலைப் போராட்டங்களுக்கும் இடையிலான வேறுபாடும் வரையறுக்கப்படவில்லை. இந்த நிலையில் தங்களுடைய மேலாதிக்க நலன்களுக்கு எதிரான அல்லது அவற்றைப் பாதிக்க கூடிய அனைத்துமே பயங்கரவாதம் என்றும் தங்களது நோக்கங்களுக்கு துணைபோகின்ற அல்லது அதற்கான புறச் சூழல்களை உருவாக்குகின்ற அனைத்துமே ஜனநாயகச் செயற்பாடுகள் என்றும் விவாதத்துக்கோ விமர்சனத்துக்கோ இடமின்றி இந்த மேலாதிக்க ஊடகங்களால் திட்டமிட்டுக் கட்டமைக்கப்படுகின்றன.

அரசுகளை அதிகாரமிழக்க வைப்பது

இன்றைக்கு பல மேற்குலக மேலாதிக்க ஊடகங்கள் சில சந்தர்ப்பங்களில் அதிரடியாக சில செய்திகளை கட்டுரைகளை ஆவணப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவதுண்டு. ஈராக்கில் அமெரிக்க மற்றும் பிரித்தானியப்படைகள் மேற்கொண்ட சித்திரவதைகள் கியூபாவின் குவாந்தனாமோ சிறையில் அமெரிக்கப்படையினரால் மேற்கொள்ப்பட்ட சித்திரவதைகள், நிக்சன் அமெரிக்காவின் அரசத் தலைவராக இருந்த காலத்தில் இடம்பெற்ற வேட்டர் கேற் ஊழல், கிளின்டனுக்கும் மொனிக்கா லிவின்சிக்கும் இடையிலான பாலியல் தொடர்பு, பிரித்தானிய தலைமை அமைச்சர் ரொனி பிளேயருடை நிர்வாகத்தில் இடம்பெற்ற ஊழல்கள் என்பவற்றை இதற்கான உதாரங்களாகக் காட்டலாம். இவற்றை பார்த்துவிட்டுத் தான் நம்மவர்கள் பலர் ‘இதுவல்லவோ ஊடகத்துறையின் ஐனநாயகப் பண்பு’,இதுவல்லவோ நடுநிலை, ‘இதுவல்லவோ ஊடகத்துறையின் உச்ச வடிவம்’ என்று புழகாங்கிதம் அடைகின்றார்கள்.
உண்மையில் ‘இந்தப் பரபரப்புச் செய்திகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மறுபக்கம் இருக்கிறது’ என்பது பலருக்கத் தெரியாது. இவற்றிக்குப் பின்னால் இடம்பெறும் பேரம்பேசல்களும் பொதுவாக வெளியே தெரிவதில்லை.‘ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுகிறது’ என்று தமிழிலே இருக்கும் உவமானம் இந்தப் பரபரப்பு செய்தி வெளியீட்டின் பின்னணியை விளக்குவதற்கு மிகப் பொருத்தமான சொற்றொடராகும்.
அரசு என்பது ஒரு அடக்கமுறைக் கருவி.அது அனைத்து அதிகாரங்களையும் தன்னகத்தே கொண்டு, அனைத்துவகைப் படைகளையும் வைத்துக்கொண்டு, சிறுபான்மையாகவுள்ள அதிகார வர்க்கத்தின் நலன்களுக்காக பெரும்பான்மையாகவுள்ள உழைக்கும் மக்களை அடக்கி ஆள்கிறது’ என்பது 19 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அரசுக்கு கொடுக்கப்பட்ட வரைவிலக்கணமாகும். அது போலவே ‘மக்களாட்சி’ அல்லது ஜனநாயகம் என்பதற்கு ‘மக்களுக்காக மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்களுடைய பிரதிநிதிகளால் நடத்தப்படுகின்ற, மக்களுடைய ஆட்சி’ என்று 18 ம் நூற்றாண்டின் இறுதியில் வரைவிலக்கணம் கொடுக்கப்பட்டது
20 ம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை இவை பொருத்தமான வரைவிலக்கணங்களாக இருந்தன. ஆனால் இன்று இந்த 21 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்த வரைவிலக்கணங்கள்; பொருத்தமற்றுப் போய்விட்டன.இன்று எந்த ஒரு அரசும் தனக்குரிய அதிகாரங்கள் முழுவதையும் கட்டமைத்து வைத்து எந்தத் தலையீடும் இல்லாது சுயமாக அவற்றைப் பிரயோகிக்கக் கூடிய தன்னுடைய தலைவிதியை தானே தீர்மானிக்கக் கூடிய நிலையில் இல்லை.இன்றைக்கு அரசுகளின் அதிகாரத்தை தீர்மானிக்கின்ற சக்திகளாக உலக வங்கியும் பன்னாட்டு வணிக மற்றும் நிதி நிறுவனங்களும் தான் இருக்கின்றன. அவ்வாறே மக்களாட்சி என்பது இன்று ‘பன்னாட்டு மற்றும் உள்நாட்டு பெரு வணக-நிதி நிறுவனங்களுக்காக மக்களைக் கொண்டு தெரிவு செய்யபட்ட பிரதிநிதிகளால் நடத்தப்படுகின்ற ஆட்சி என்று மாற்றம் பெற்றுவிட்டது
. இன்று உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டிலும் எந்தக் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பதில்லை.இந்தக் கட்சியைத்தான் இந்த நபரைத் தான் ஆட்சிக்கு கொண்டு வரவேண்டும் என்று மக்கள் தீர்மானிக்க வைக்கப்படுகின்றார்கள். உலக வங்கியும் மேற்குலக பெருவணிக நிறுவனங்களும் நிதி நிறுவனங்களும் இந்த கைங்கரியத்தை ஊடகங்களுடாக திட்டமிட்டுச் செய்ய வைக்கின்றன.
ஆட்சியிலுள்ளவர்களுடைய செயற்பாடுகள் தங்களுடைய பொருளாதார-வணிக நலன்களை பாதிக்கின்ற போது, அதற்கு எதிரான தங்களுடைய கருத்தை ஆட்சிலுள்ளவர்கள் கண்டு கொள்ளாத போது, இந்தப் பன்னாட்டு பெரு வணிக வர்க்கம், எப்போதும் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கின்ற அல்லது தங்களில் தங்கி இருக்கின்ற உலக மேலாதிக்க ஊடகங்களை செய்திப் புரட்சி செய்யத் தூண்டி விடுகின்றன. இந்த மேலாதிக்க ஊடகங்களின் நடுநிலை செய்திப் புரட்சியைப் பார்த்து வாய்பிளந்து அகல விழிதிறந்து பார்த்து நிற்கிற உலக மக்களுக்கு இந்தச் செய்திப் புரட்சியின் பின்னால் உள்ள பேரம் பேசல்கள் தெரிவதில்லை.
ஈராக் போரின் பின்னர் உலக எண்ணை வர்த்தகத்தில் புஷ் குடும்பத்தினரின் ஆதிக்கம் அந்தப் போருக்கு முன்பிருந்ததை விட அதிகரித்ததே ஈராக்கிலும் கியூபாவின் குவாந்தனாமோ சிறையிலும் அமெரிக்கப்படைகளின் மனித உரிமை மீறல்கள் பற்றிய செய்திகளும், புஸ் நிர்வாகத்துக்கு கண்மூடித்தனமான ஆதரவை வழங்கி ஈராக் மற்றம் ஆப்கானிஸ்தான் பேர்களில் பங்கெடுத்ததன் மூலம் ரொனி பிளேயரின் ஆட்சி பிரித்தானிய பெரு வணிக நிறுவனங்களின் மத்திய கிழக்கு மற்றும் மூன்றாம் உலக நாடுகளடனான வர்த்தக உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தியதே அவரது ஆட்சியல் ஊழல்கள் பற்றிய செய்திகளும் ; பிரித்தானியப் படையினர் ஈராக்கில் மனத உரிமை மீறலில் ஈடுபட்டது பற்றிய செய்திகளும் வெளிவந்தற்கான பின்னணி எத்தனை பேருக்குத் தெரியும்?.
இது என்ன பைத்தியக்காரத் தனம்? தங்களுடைய நாட்டை தங்களுடைய படைகளின் தவறுகளை நேர்மையாக இந்த மேற்குலக ஊடகங்கள் விமர்சிப்பதை குறை கூறுவதா? என்று சிலர் கேட்கக் கூடும். (வெள்ளைக்காரர்கள் நாயைச் சுட்டாலும் நீதி விசாரணை நடத்தித் தான் சுடுவார்கள் என்று பெருமையாகச் சொல்லிப் பழக்கப்பட்டவர்கள் தானே நாங்கள்!)
மேற்குலக மேலாதிக்க ஊடகங்கள் நடுநிலை என்ற சொல்லை முன்நிறுத்தி காய் நகர்த்துவதற்கு நான்கு அடிப்படை நோக்கங்கள் இருக்கின்றன.
1) தமது நிறுவனத்தை உலகின் தீர்மானகரமான ஒரு சக்தியாக நிலை நிறுத்துவது.
2) உலக பெரும் முதலாளிய நிறுவனங்களில் தேவைக்கேற்ப மக்களை தயார்படுத்துவது, அதாவது சந்தைக்கேற்ற உற்பத்தி என்பதற்கு மாறாக உற்பத்திக்கேற்ற சந்தையை உருவாக்குவது.
3) உலகமயமாதலுக்கு தடையாக இருக்கக்கூடிய அரசுகள், விடுதலை இயக்கங்கள், மக்கள் நல அமைப்புக்கள், என்பவற்றை பலவீனப்படுத்துவது.
4) தேசங்கள் தேசிய இனங்களின் மொழித்தளத்தையும் அது சார்ந்த கலாச்சாரத் தளத்தையும் சீரழித்து சிதைப்பது.

சாதாரணமாக இந்த மேற்குலக வல்லாதிக்க ஊடகங்கள் செய்தி சொல்லும் முறையையோ அல்லது அவை கருத்தை வெளிப்படுத்தும் முறையையோ பார்க்கும் ஒருவருக்கு அவற்றிற்கு பின்னால் இருக்கக்கூடிய இந்த நோக்கங்கள் தெரியவராது. உதாரணமாக 'சிறிலங்கா அரச படைகள் தமிழ் மக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தியதாக' ஒரு செய்தி அல்லது அது சார்ந்த ஒரு விவரணத்தொகுப்பு இந்த மேற்குலக ஊடகங்களில் வெளிவந்தவுடன் இந்த ஊடகங்களின் மொழி தெரிந்த ஒரு சராசரி தமிழர் அதைப் பார்த்து பிரமித்துப்போகிறார். அந்த ஊடகம் நேர்மையாக செய்தி வெளியிட்டுள்ளதாக அவர் நினைக்கிறார். ஆனால் ஒரு செய்தி இப்படி வெளியாகும்போது பத்துச் செய்தி தமிழர்களுடைய போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாக சித்தரித்து வெளியிடப்பட்டிருக்கும் ஒரு இலட்சியத்துக்காக தங்களது உயிரை தியாகம் செய்யும் இளையோரை கட்டாயப்படுத்தி படையில் சேர்த்ததாக 20 தடவை செய்தி வெளியிடப்பட்டிருக்கும். இவையெல்லாம் அந்தத் தமிழரின் கண்களுக்கு தெரிவதில்லை. ஆனால் ஒரு மேற்குலக ஊடகத்தின் முக்கிய இயங்கு தளமாக உள்ள ஐரோப்பிய அல்லது அமெரிக்க மண்ணிலுள்ள ஒருவருக்கு சிறிலங்காப் படையினர் தமிழ் மக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தியதாக வெளிவந்த ஒரு செய்தியைவிட சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக தமிழர்கள் நடாத்தும் போராட்டம் ஒரு பயங்கரவாதப் போராட்டம் என்று பல தடவை வெளிவந்த செய்தியே பெரிதாகத் தெரியும்.
உண்மையில் இந்த உதாரணத்தில் 30 செய்திகள் சிறிலங்கா அரசுக்கு ஆதரவாகவும் ஒரேயொரு செய்தி எதிராகவும் வந்திருக்கிறது. இந்த ஒரேயொரு செய்தி வெளிவந்ததன் பின்னணியை யாரும் சிந்திப்பதில்லை. சிறிலங்கா அரசு ஒரு உலகப்பெரு வணிக நிறுவனத்தின் பொருட்களை சிறிலங்காவில் சந்தைப்படுத்துவதற்கு தயக்கம் காட்டியிருக்கலாம். அல்லது சிறிலங்காவின் உற்பத்திப் பொருட்களான தேயிலையையோ, றப்பரையோ மேற்குலக பெரு வணிக நிறுவனம் ஒன்றிற்கு கொடுப்பதற்கு சிறிலங்கா அரசு பின்னடித்திருக்கலாம். அல்லது தமிழ் மக்களுக்கு எதிரான போரை நடத்துவதற்காக ஆயுதக் கொள்வனவை மேற்கொள்ளும் சிறிலங்கா அரசு மேற்குலகிற்கு விருப்பமில்லாத ஒரு நாட்டுடன் தொடர்பு கொண்டிருக்கலாம். இந்த நிலையிலேயே சிறிலங்கா இராணுவம் தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலைகளை புரிவதாக ஒரே ஒரு செய்தியோ அல்லது செய்தித் தொகுப்போ வெளியிடப்படும். இதைப் பார்த்தவுடன் ஆடிப்போய்விடும் சிறிலங்கா அரசு வெளியில் வீர சூரத்தனமாக மறுப்பறிக்கைகளை விட்டுவிட்டு இரகசியமாக இந்தச் செய்தியை வெளியிட்ட மேற்குலக மேலாதிக்க ஊடகத்துடனும் அதற்குப் பின்;னால் இருக்கக்கூடிய மேலாதிக் சக்திகளுடனும் பேரம் பேசலில் ஈடுபடும். இந்தப் பேரம் பேசலில் மேற்குலக மேலாதிக்க சக்திகளின் நோக்கங்கள் நிறைவேற்றப்படுவதற்கு ஏற்ற உடன்பாடு எட்டியவுடன் பழையபடி தமிழ் மக்களின் போராட்டம் , பயங்கரவாதப் போராட்டம் என்ற பல்லவி தொடரும்.எனவே நடுநிலை எனபது மக்களை ஏமாற்றுவதற்கான அவர்களது இலட்சியங்களை அடையாளங்களை சிதைப்பதற்கான வடிவம் என்று நாம் தெளிவாக வரையறுத்துக்கொள்ளலாம். ஏனென்றால் இந்த உலகத்தில் நூற்றுக்கு நூறு வீதம் பொய்யே சொல்லாத ஒருவன் எப்படி இருக்க முடியாதோ நூற்றுக்கு நூறு வீதம் தவறே செய்யாத ஒருவன் எப்படி இருக்க முடியாதோ அப்படித்தான் நடுநிலமையும் இருக்க முடியாது. இந்த இடத்திலே நடுநிலை கிடையாது என்றால் எல்லாமே சார்புத் தன்மை உடையது என்றால் நம்பகத்தன்மைக்கு இடமில்லாமல் போய்விடுமே என்ற முக்கியமான கேள்வி எழுவது இயல்பானதாகும்.

தமிழ் தளத்தில் ஊடகவியல் 04

04கருத்தியலை கட்டமைக்கும் வழிமுறைகள்

ஊடகத்துறையில் கருத்திலை கட்டமைப்பதற்கொன்று நேர்கோட்டு முறை, சமாந்தரமுறை, ஊடறுக்கும் அல்லது ஊடுபாயும் முறை, பிரதிபலிப்பு முறை என்று நான்கு வழிமுறைகள் கையாளப் படுகின்றன.

01.நேர்கோட்டு முறை

நேர்கோட்டு முறை என்பது விடயத்தை உள்ளதை உள்ளபடி சொல்வதாகும். யார்த்த வாதம் என்றும் இது குறிப்பிடப்படும். உதாரணமாக ஒரு ஏ9 வீதியில் மெதுவாகச் சென்ற ஒருவாகனத்தை வேகமாக வந்த ஒரு வாகனம் மோதி 5 பேர் இறந்துவிட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம.; இதை இந்த நேர்கோட்டு முறையில் ஒரு செய்தியாக்கும் போது ‘கிளிநொச்சிக்கு அருகில் ஏ9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5பேர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளதுள்ளர்.இன்று காலை 9 மணியளவில், ஓமந்தையிலிருந்த யாழ்ப்பாணத்துக்கு பயணிகளை எற்றிச் சென்ற சிற்றூந்தும் எதிர் திசையில் வந்த திசையில் வந்த ஹண்டர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.’ ஏன்று எழுதப்படும்.
இதில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து நடந்தது. உயிரிழப்பு நேர்ந்தது. மக்கள் காயப்பட்டது என்று எல்லா விடயங்களும் இயல்பாக சொல்லப்படுகின்றன.
இந்த விபத்து நடந்த இடத்தில் நின்ற- அதை நேரில் பார்த்த அனைவரும் இதையே தான் சொல்லியிருப்பர்கள்.மக்கள் பார்த்த அதே பார்வையைத் தான் இந்தச் செய்தியை எழுதிய ஊடகவியலாளனும் பாத்திருக்கிறார் .அதை அப்படியே பதிவு செய்திருக்கிறார். ஒரு ஊடகவியலாளனுக்குரிய தேடல் மாற்றுப் பார்வை பார்த்தல் என்பவற்றுக்கான தேவை இங்கே ஏற்படவில்லை.
இங்கே இந்த விபத்து ஏன் நடந்தது? இதற்கு என்ன காரணம்? என்கின்ற உண்மையான செய்தி வெளிப்படுத்தப்படவில்லை. அதாவது இங்கே கண்ணுக்குத் தெரிந்த யதார்த்தத்தை பதிவுசெய்துவிட்டு கண்ணுக்கு புலப்படாத யதார்த்தம் ஒன்று இருப்பது மறைக்கப்படுறது.
இந்த விபத்தில் இரண்டு வாகனங்களின் ஓட்டுனர்களும் வீதி ஒழுங்கு முறைகளை கடைப்பிடிக்காமல் இருந்திருக்கலாம். அல்லது அந்த வீதி அமைப்பும் , அந்த வீதியின் தற்போதைய நிலைமையும் கூட இந்த விபத்தக்கு காரணமாக இருந்திருக்கலாம்.ஒரு மனிதன், ஒரு மாடு அல்லது ஒரு நாய் வீதிக்கு குறுக்கே சென்றதால் கூட இந்த விபத்து நடந்திருக்கலாம்.
இப்படி ஒவ்வொரு சம்பவமும் செயலும் நடைபெறும்போது அவற்றக்கான காரண காரியங்களின்றி அவை நடைபெறாது. அந்தக் காரண காரியங்களை ஏன்? ஏதற்கு? எப்படி? யாரால்? என்ற கேள்விகளை எழுப்பிக் கண்டறிந்து வெளிப்படுத்துவது தான் ஒரு ஊடகவியலாளனுடைய தலையாய கடமையாகும்.
இந்த நேர்கோட்டு முறையில் இதற்கான அவசியம் இல்லாமல் போகின்றது.குறிப்பாகச் சொல்வதானால் தேசங்களினதும், தேசிய இனங்களினதும் எழுச்சியை அடக்குவதற்காக உலக மேலாதிக்க சக்திகளாலும் மேற்குலக ஊடக கொள்கை வகுப்பாளர்களாலும் பரிந்துரைக்கப்பட்ட அல்லது அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முறையே இந்த நேர்கோட்டு முறையாகும். தேடல் இல்லாத ஒரு இனமும் அந்த இனத்தின் வரலாறும் , அந்த இனத்தின் மொழியும், வளர்சியின்றி அழிந்துபோய்விடும் என்ற வரலாற்று உண்மைக்கு செயல் வடிவம் கொடுப்பதற்காக ஊடகத்துறையில் திட்டமிட்ட இந்த முறை முதன்மைப்படுத்தப்படுகிறது.

02.சமாந்தர முறை

எதிர் எதிர் முரண்பாட்டை கட்டமைத்து விடயத்தை நகர்த்திச் செல்வது சமாந்தர முறை எனப்படுகிறது.உதாரணம் கதாநாயகன் எதிர் வில்லன், விடுதலைப்புலிகள் எதிர் சிறிலங்கா அரசாங்கம் அல்லது படையினர்.பிபிசி உட்பட்ட அநேகமான மேற்குலக ஊடகங்கள் இந்த முறையைத்தான் கையாழுகின்றன. ஒரு விடயத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு தரப்பு கருத்தையும் சொல்வது தான் இந்த முறையின் உயர்ந்த நோக்கம் என்று கூறப்படுகிறது.உதாரணமாக ‘கொழும்பில் 5 தமிழர்கள் சிறிலங்கா புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.’ என்பது ஒரு சம்பவம் என்று வைத்துக் கொள்வோம் இதை இந்த சமாந்தர முறையின் கீழ் செய்தியாக்கும் மேற்குலக ஊடகங்கள் ‘கொழும்பில் சிறீலங்கா காவல்துறையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் பொது விடுதலைப் புலிகள் இயக்க தீவிரவாதிகள் 5 பேரை கைது செய்துள்ளனர். இவர்கள் முக்கிய அரசியல் தலைவர்களை கொலைசெய்வதற்கு விடுதலைப்புலிகளால் வன்னியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட தற்கொலை குண்டுதாரிகள் என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக சிறீலங்கா காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் தமது உறுப்பினர்கள் இல்லை என்று விடுதலைப்புலிகள் மறுத்துள்ளனர்.’ ஏன்று குறிப்பிடுவார்கள்.
சிறீலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்ட போது இந்த முறையில் அதை செய்தியாக்கிய மேற்குலக ஊடகங்கள் ‘சிறீலங்காவின் வெளிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் விடுதலைப்புலிகளால் கொழும்பிலுள்ள அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரை சினைப்பர் துப்பாக்கி மூலம் விடுதலைப் புலிகளே சுட்டுக் கொன்றதாக சிறீலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்தக் கொலையை செய்த விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் விரைவில் குற்றாவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தக் குற்றசாட்டை மறுத்துள்ள விடுதலைப் புலிகள் இந்தப் படுகொலைக்கும் தமது அமைப்புக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்’ என்று குறிப்பிட்டன.
இந்த இரண்டு செய்தியிலும் சிறீலங்கா அரசாங்கம் விடுதலைப்புலிகள் என்ற இரண்டு எதிர் மறைகள் கட்டமைக்கப்பட்டு இரண்டு தரப்பு கருத்துக்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் அரசாங்கம் என்பது சட்டபூர்வமான அமைப்பு என்ற மேற்குலகின் எழுதப்படாத ஊடகவிதிக்கமைய சிறீலங்கா அரச தரப்பு கருத்து முதன்மைப் படுத்தப்பட்டு விடுதலைப்புலிகள் தரப்புக் கருத்து இரண்டாம் பட்சமாக்கப்பட்டிருக்கிறது. அதாவது இரண்டு தரப்பு கருத்தையும் சொல்கிறோம் என்ற போர்வையில் ஒரு தரப்புக் கருத்தை முதன்மைப் படுத்தி மறு தரப்புக் கருத்தை ஒப்புக்குச் சொல்வது இந்த முறையில் உள்ள முக்கியமான அம்சமாகும்.
சில சந்தர்ப்பங்களில் அத்தி பூத்தாற் போல இந்த மேற்குலக ஊடகங்களில் விடுதலைப்புலிகள் தரப்பு கருத்தை முதன்மைப்படுத்தி செய்திகள் வருவதுண்டு. இப்படியான சந்தர்பங்களில் ‘ஆகா மேற்குலகு என்றால் மேற்குலகு தான்.’ என்று பூரித்துப் போகிறோம். இந்த ஊடகங்களில் அப்படி ஒரு செய்தி வந்தவுடன் ‘எங்களுக்கு அங்கீகாரம் தந்திருக்க்pறார்கள். எங்களது போராட்டத்தின் நியாயத் தன்மையை உலகம் புரிந்துகொள்ளப் போகிறது’ என்று தவறான கணக்குப் போட்டு விடுகின்றோம். இதற்குப் பின்னால் நிறுவன நலன் பேரம் பேசும் தன்மை என்பன அடங்கியிருப்பதை நாம் கவனிக்கத் தவறிவிடுகிறோம்.
இந்த ஊடகங்கள் கட்டமைத்த வைத்திருக்கின்ற ஆதிக்க கருத்தியல் தளத்தை உடைத்துக்கொண்டு உண்மையான கருத்து உண்மையான செய்தி மக்கள் மத்தியில் சென்றடைவதென்பது அவ்வளவு சுலபமான விடயமல்ல.இந்த ஊடகங்கள் வெளியிடும் ஒரு செய்தியை ஒரு கட்டுரையை ஒரு ஆவணப் படத்தை மட்டும் வைத்துக் கொண்டு அவற்றின் வாசகர்களும் நேயர்களும் சுலபத்தில் ஒரு முடிவுக்கு வந்துவிட மாட்டார்கள். அப்படி ஒரு முடிவுக்கு வர இவர்கள் விடவும் மாட்டார்கள். இன்னொரு மோசமான- பொய்யாக கட்டமைக்கப்பட்ட ஒரு செய்தியை போட்டு அதை தடுத்துவிடுவார்கள்.
உண்மையில் ஊரில் ‘தான் ஒரு பெரிய மனிதன்’ என்ற செல்லிக் கொள்ளும் ஒருவர் ஒரு பெண்னை தொடர்ந்து உத்தமி பத்தினி செல்விட்டு திடீரென்று ஒருநாள் அவள் மோசமான நடத்தை உள்ளவள்.அதை நான் கண்ணால் பார்த்தேன் என்றால் நிச்சயமாக மற்றவர்கள் அதை நம்பிவிடுவார்கள். ‘அவர் சொன்னால் சரியாக இருக்கும் என்ற தான் மக்கள் சொல்வார்கள். பிபிசி சொன்னால் அது சரியாக இருக்கும் என்று நம்முடைய அறிவுஜீவிகள் என்று சொல்லிக் கொள்ளும் சிலர் நம்புவதற்கும் இந்த முறைதான அடிப்படையாகும்.
ஊடக நிறுவனங்கள் உலகில் தங்களை தீர்மானகரமான சக்திகளாக நிலை நிறத்திக் கொள்வதற்கு இந்த முறையை கையாழுகின்றன. தங்களுடைய மேலதிக்கத்தில் யாராவது குறுக்கிடும் போது அவர்களுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டு அவர்களை பேரம் பேசலுக்கு உள்ளாக்க வைத்து பணிய வைத்துவிடுகிறார்கள்.

03 ஊடறுக்கும் ஊடுபாயும் முறை

இது எதிரெதிர் முரண்பாட்டை கட்டமைத்து விடயத்தை சமாந்தரமாக நகர்த்திச் சென்;று முக்கிய திருப்பு முனையில் ஒரு தரப்பை அம்பலப்படுத்தி, மறு தரப்பை நியாப்படுத்துவதாகும். அதாவது ஒரு சினிமாவில் கதாநாயகனையும் வில்லனையும் சமதரப்பாகக் காட்டிச் சென்று முக்க்pய கிளைமாக்ஸ் காட்சியில் கதாநாயகன் வில்லனை அடித்து வீழ்த்தி வெற்றி கொண்டு நியாயத்தை நிலை நிறுத்துவதாகக் காட்டுவதாகும்பொதுவாக சிஎன்என் முதலான அமெரிக்க ஊடகங்களிலும் ஹொலிவுட் திரப்படங்களிலும் இந்த முறையே கையாளப்படுகிறது. இந்த ஊடகக் கருத்தியில் முறை என்பது அமெரிக்க முதன்மை வாதத்தை கட்டமைப்பதற்காக உருவாக்கப்பட்டது என்ற விமர்சிக்கப்படுகிறது.
ஊதாரணமாக லக்ஷ்;மன் கதிர்காமர் விடயத்தை இந்த முறையில் செய்தியாக்கும் போது சிறீலங்காவின் வெளிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் விடுதலைப்புலிகளால் கொழும்பிலுள்ள அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரை சினைப்பர் துப்பாக்கி மூலம் விடுதலைப் புலிகளே சுட்டுக் கொன்றதாக சிறீலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்தக் கொலையை செய்த விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தக் குற்றசாட்டை மறுத்துள்ள விடுதலைப் புலிகள் இந்தப் படுகொலைக்கும் தமது அமைப்புக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். ஆனால் கடந்தகாலத்தில் விடுதலைப்புலிகள் பிரேமதாசா உட்பட்ட பல உயர் அரசியல் தவைர்களை கொலை செய்தததிலிருந்து லக்ஷ்மன் கதிர்காமரையும் அவர்களே கொலைசெய்திருப்பார்கள் என்று நம்பப்படுகிறது. கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் இந்தப் படுகொலையை வன்மையாகக் கண்டித்துள்ளதுடன் விடுதலைப்புலிகள் அனைத்துவிதமான பயங்கரவாதச் செயல்களையும் கைவிட வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார்.’ குறிப்பிட்டிருந்தார்கள்.
இங்கே சிறீலங்கா அரச தரப்பு விடுதலைப் புலிகள் தரப்பு என்ற இரண்டு தரப்புக் கருததுக்களும் சொல்லப்பட்டு இறுதியில் விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அவர்கள் வன்முறையை கைவிட வேண்டும் என்ற அமெரிக்கப் பார்வை முதன்மைப்படுத்தப்பட்டிருக்கிறது.

04.பிரதிபலிப்பு முறை

இது எந்த ஒரு விடயத்தையும் சமூக அரசில் தளத்தில் வைத்துப் பார்க்கவேண்டும். பரந்துபட்ட மக்களுக்கான நலனை முதன்மைப்படுத்த வேண்டும் என்ற நோக்ககத்தை உடையது. இது ஊடக மேலாதிகக் கருத்தியல்களுக்கு எதிராக 60 களில் பிரான்சில் உருவான ஊடக மறுமலர்ச்சி இயக்கத்தின் போது தோற்றம் பெற்றது. ஜோன் போல் சாத்தர்,பியர் போதிலார்,ஜக் தெரிதா போன்ற நவீன தத்துவவாதிகள் பலர் இந்த முறையின் தோற்றத்துக்கு உந்த சக்திகளாக இருந்திருக்கிறார்கள்.
ஒரு சம்பவம் அல்லது ஒரு செயல் நடைபெறும் போது அதன் செய்தி பெறுமதியும் அது தொடர்பான கருத்தியல் பார்வையையும் பரந்துபட்ட மக்களுடைய நலன் என்ற தளத்தில் வைத்துப் பார்க்க வேண்டும் என்பதே இந்த முறையின் அடிப்படையாகும்.
உதாரணமாக ‘கொழும்பில் 5 தமிழர்கள் சிறிலங்கா புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.’ என்ற சம்பவத்தை இந்த முறையின் கீழ் செய்தியாக்கும் போது ‘கைது செய்யப்பட்டவர்கள் யார்? அவர்களை கைது செய்தவர்கள் யார்? அவர்களின் நோக்கம் என்ன? என்ற கேள்விகளை எழுப்பவேண்டும். அதவாது யார் ? யாரால் ? ஏன் ? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளை எங்களுடைய தமிழ் தளத்திலிருந்து எழுப்பி, இவற்றிலிருந்து கிடைக்கும் விடைகளுக் கூடாக இதை ஒரு செய்தியாக்குவது.இங்கே இவர்கள் யார் என்ற கேள்விக்கு விடை, தமிழர்கள் அதிலும் தமிழர் தாயகப் பிரதேசத்தை சேர்ந்த தமிழர்கள் என்பதாகும். யாரால் கைது செய்யப்பட்டார்கள் என்பதற்கு விடை, சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் என்பதாகும். ஏன் கைது செய்யப்பட்டார்கள்? என்ற கேள்விக்கான விடை புதிதாக கொழும்புக்கு வந்த தமிழர் தாயகப் பகுதிகளைச் சேர்ந்த தமிழர்கள் என்பதால். எதற்கு கைது செய்யப்பட்டார்கள்? என்ற கேள்விக்கான விடை கொழும்பின் பாதுகாப்பை உறுதிப் படுத்துவதில் தாங்கள் முனைப்பாக இருக்கிறோம் என்பதை காண்பிப்பது.இதை எப்படிச் செய்தியாக்குவது என்ற அடுத்த கேள்வி எழுப்புகிற போது சிறிலங்கா புலனாய்வுத்துறை, தமிழர் தரப்பு என்ற இரண்டு தரப்புக்கள் வருகிறன.
இதிலே சிறீலங்கா புலனாய்வத்துறையை தமிழர்களுக்கு எதிரான பௌத்த சிங்கள பேரினவதத்தின் பிரதிநிதிகள் என்ற தளத்தில் வைத்துவிட்டுதமிழர் தரப்பில் இதை செய்தியாக எழுதும் போது ‘கொழும்பு வெள்ளவத்தை பகுதியிலுள்ள வீடொன்றை இன்று முற்றுகையிட்ட சிறீலங்கா புலனாய்வத் துறையினர் 5 அப்பாவித் தமிழ் இளைஞர்களை கைதுசெய்துள்ளனர். யாழ்ப்பாணக் குடா நாட்டைச் சேர்ந்த இந்த 5இளைஞர்களும் வெளிநாட்டுக்கு செல்வதற்காக கொழும்புக்கு வந்ததாகத்தெரிவிக்கப்படுகிறது. இவர்களை விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுதாரிகள் என்ற குற்றம் சுமத்தியுள்ள சிறீலங்கா புலனாய்வுத்துறையினர் மேலதிக விசாரணைகளுக்காக தமது பணிமனை அமைந்துள்ள நான்காவது மாடியில் தடுத்து வைத்துள்ளனர்.’ என்று எழுத வேண்டும்.தன்னுடைய இருப்புக்கும் விடுதலைக்குமாக போராடுகின்ற ஒரு தேசிய இனம் தனது தேசிய ஊடக கருத்தியலை கட்டமைப்பதற்கு இந்த முறையே சிறந்ததாக இருக்கும் என்று முன்மொழியப்படுகிறது

தமிழ் தளத்தில் ஊடகவியல் 03

03 கருத்தியலைக் கட்டமைப்பதில் மொழியின் பாத்திரம்

மனித வரலாற்றில் மொழி வகிக்கும் பங்கு என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.
மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்தி மனிதனாக உருவாக்கியதிலும் அவன் இயற்கையை வென்று அதை ஆளுமை செய்யும் வல்லமையைப் பெறவைத்ததிலும் மொழியே முதன்மையான பாத்திரத்தை வகித்தது.
ஒரு மனிதன் தன்னையும்; தன்னைச் சூழவுள்ள உயிருள்ள – உயிரற்ற அனைத்தப் பொருட்களையும் தான் வாழும் இந்த உலகத்தையும் இந்தப் பிரபஞ்சத்தையும் புரிந்து கொள்வதற்கும் மொழிதான் அடிப்படையாக இருந்தது.
மனிதன் தான் தெரிந்;து கொண்டவற்றை அல்லது புரிந்து கொண்டவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டதிலும் அதன்; மூலம் மற்றவர்களுக்கும் தனக்கும் இடையிலான சமூகப் பிணைப்பை உருவாக்கியதிலும் மொழியின் பாத்திரமே முதன்மையாக இருந்தது.
குறிப்பாக சொல்வதானால் பொருளுக்கும் மனிதனுக்கும் அல்லது உலகிற்கும் மனிதனுக்கும் அல்லது பிரபஞ்சத்துக்கும் மனிதனுக்கும் இடையிலுள்ள வெளியானது மொழியாலேயே நிரப்பப்படுகிறது
.
நாம் வாழும் இந்தப் பூமியிலுள்ள கற்பாறை ஒன்றையும், ஒரு மனிதனையும் உதாரணமாக எடுத்துக் கொண்டால் பாறை உயிரற்ற ஒரு அசையாப்பொருள். மனிதன் உயிருள்ள ஒரு அசையும் பொருள். பாறையால் மனிதனைப் பார்க்கவோ உணரவோ முடியாது. ஆனால் மனிதனால் பாறையைப் பார்க்கவும் உணரவும் முடியும்.
தனக்கு முன்னால் இருப்பது கற்பாறை என்பதை ஒரு மனிதன் பார்த்தல் உணர்தல் என்கின்ற செயற்பாடுகள் மூலம் தெரிந்து கொண்டாலும், மொழி தான் இந்த இடத்திலே அதற்குரிய அர்த்தத்தை அவனுக்கு உணர்த்துகிறது. அதாவது இங்கே பாறைக்கும் மனிதனுக்கும் உள்ள வெளி மொழியினால் நிரப்பப்படுகிறது.
குறிப்பாக சொல்வதானால் ஒரு மனிதன் தன்னையும் தன்னைச் சூழவுள்ள உயிருள்ள-உயிரற்ற அனைத்துப் பொருட்களையும்; தன்னுடைய மொழிக்கூடாகத் தான் புரிந்துகொள்கிறான்.
மனிதனுடைய அறிவும் சிந்தனைத் தளமும் மொழியினாலேயே கட்டமைக்கப்படுகின்றன. மனித இனத்தினுடைய அடையாளமும் இருப்பும் வரலாறும் மொழியினாலேயே அர்த்தப் படுத்தப் படுகிறது
.

வீரச்சாவும் உயிரிழப்பும்

உதாரணமாக ‘ஒரு மனிதனுடைய இறப்பு’ என்ற விடயத்தை எடுத்துக் கொண்டால் இறந்தவர் ஒரு போராளியாக இருந்தால் அதிலும் அவர் ஒரு சண்டையின் போது சாவடைந்திருந்தால் நாங்கள் அவர் ‘வீரச்சாவடைந்தார்’ என்கிறோம்.அவர் வீரச்சாவடைந்த அதே சண்டையில் ஒரு சிறிலங்கா படையினனும் உயிரிழந்திருந்தால் ‘படையினன் கொல்லப்பட்டான் அல்லது உயிரிழந்தான் ’ என்கிறோம். இதே சம்பவத்தை ஒரு சிங்கள ஊடகம் சொல்லும் போது ‘ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான்’ என்றும், ஒரு இராணுவ வீரர் உயிரிழந்தர் என்றும் கூறுவார்கள்.
இங்கே ஒரு போராளியினுடைய சாவை வீரமரணம் என்றும், ஒரு படையினனுடைய சாவை உயிரிழப்பு என்றும் நாங்கள் அர்த்தப்படுத்துவதென்பது தற்செயலான ஒன்றல்ல. அது ஒரு நீண்ட விடுதலைப்பேராட்ட வரலாற்றுக்கு ஊடாகவே கட்டமைக்கப்படுகிறது. அதே போலவே ஒரு போராளியை பயங்கரவாதியாக சித்தரிக்கும் சிங்கள மனோபாவமும் ஒரு நீண்ட பௌத்த சிங்கள பேரினவாத வரலாற்றுக் கூடாகவே கட்டமைக்கப்படுகிறது.
இங்கே விடுதலைப் போராட்டம்- பயங்கரவாதம் என்ற எதிர்மறைகளை கட்டமைப்பதில் தமிழ் மொழியும் சிங்கள மொழியும் வவவேறு வேறு தளத்தில் நின்று செயற்படுகின்றன.

தமிழ் தளம் என்பது என்ன?

தமிழ் தளம் என்பது இன ஒடுக்குமுறையையும் அதற்கு எதிரான தேசிய விடுதலைப் போராட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டது. (தமிழகத்திலுள்ள தமிழ்த் தளம் கட்சி அரசியலையும் சாதி மற்றும் மத அடையாளங்களையும் கொண்டே கட்டமைக்கப்பட்டிருக்கிறது) சிங்களத் தளம் என்பது சிங்கள பௌத்த மேலாண்மை அடிப்படையாகக் கொண்டது.
தமிழ் தளத்தில் இருந்து உருவாகும் கருத்துருவாக்கம் இன ஒடுக்கு முறையையும் தேசிய விடுதலையையும் புறந்தள்ளிவிட்டு உருவாக முடியாது. நாங்கள் ஒரு சமரில் போராளிக்கு ஏற்படும் மரணத்தை உயிரிழந்தார் என்றோ, கொல்லப்பட்டார் என்றோ சதாரணமாகச் செல்லிவிட முடியாது. அவ்வாறே அதே சமரில் ஒரு படையினனுக்கு ஏற்படும் மரணத்தை வீரச் சாவடைந்தார் என்று நாங்கள் செல்லிவிட முடியாது. ஏனென்றால் தமிழ் கருத்தியல் தளமும் அதை கட்டமைப்பதில் காத்திரமான பங்கை வகிக்கின்ற தமிழ் மொழியும் தமிழ் தேசிய இனத்துக்கு எதிரான பௌத்தசிங்கள போரிவாத ஒடுக்குமுறைகளும் அவற்றுக்கெதிரான தேசிய விடுதலைப் போராட்டமும் என்கிற வரலாற்றின் நீட்சியோடு பின்னிப் பிணைந்திருக்கின்றன.
இந்த வரலாற்றுப்; போக்கிலிருந்து தமிழ் கருத்தியலையும் தமிழ் மொழியையும் பிரித்தெடுத்துவிட்டால் இரண்டுக்குமே அர்த்தமில்லாமல் போய்விடும். உதாரணமாக விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா அரசபடைகளுக்கும் இடையில் நடந்த மோதலில் 2 படையினர் வீரச்சாவடைந்துள்ளனர் என்று ஒரு தமிழ் ஊடகம் செய்தி வெளியிட்டால் அது தமிழர்களுடைய வரலாற்றை மறுதலித்திருக்கிறது என்றே அர்த்;தங்கொள்ள வேண்டும். இப்படியான ஒரு செய்திக்குரிய மொழி நடையும் சொற் குறியீடும் நிச்சயமாக தமிழ் மக்களை ஆத்திரப்பட வைக்கும்.
‘வீர மரணம்’ என்ற சொல் இந்த இடத்திலே ஒரு நீட்சியற்ற தனிமமாகி அர்த்தமற்ற வெறும் ஒலிக் குறியீடாக குறுகிவிடுகிறது. தமிழ் தளத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் என்பதே சிறிலங்கா படையினருக்குரிய குறியீடாகும். ஒரு ஆக்கிரமிப்பாளனுடைய மரணத்தை அவன் சார்ந்த அதிகார அதிகார வர்க்கத்தை தவிர அவனால் ஆக்கிரமிப்புக்குள்ளாக்கப்பட்ட எவரும் விரச்சாவாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
இந்த இடத்திலே ஒரு போராளி வீரச்சாவடைந்தார் என்கிற போது‘வீரச்சாவு’ என்ற அந்தச் சொல்லுக்கூடாக ஈகம் பற்றிய ஒரு மேன்மையான ஒரு அர்த்தமும், ஒரு பெறுமதிமிக்க வீரம் செறிந்த விடுதலைப்போராட்ட வரலாற்றின் நீட்சியும் மறு வாசிப்புக்கு உள்ளாக்கப்படுகிறது.அந்த வீரச் சாவு என்பது ஒரு சாதாரண குடும்ப வட்டத்திற்குள் நிற்கக் கூடிய ஒரு ஒரு துன்பியில் நிகழ்வாக அல்லாமல் தமிழ் தேசிய இனம் என்கின்ற ஒரு பரந்துபட்ட மக்கள் கூட்டத்தின் உணர்வுகளில் கலக்கின்ற உயரிய விடயமாக அர்த்தப்படுத்தப்படுகிறது.

சொல்லும் அர்த்தமும்

மொழியியலில் ஒரு சொல் அல்லது ஒரு சொற் தொடர் பிற சொற்களின்றியோ, அல்லது பிற சொல் தொடர்களின்றியோ நிலைக்க முடியாது.அதாவது ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு வாக்கியமும் மற்றொன்றில் தொக்கி நிற்கும் அல்லது தங்கிநிற்கும் தன்மையைக் கொண்டுள்ளது. மற்றதினால் விளக்கம் கொடுக்கப்படுவதற்கு ஏற்புடனும் இருக்கிறது. ஒவ்வொரு சொல்லும் அல்லது சொற் தொடரும் எதையாவது சொல்லும் விருப்பத்தை உள்ளடக்கி இருக்கிறது. உதாரணமாக ‘வீரச் சாவு’ என்று நாங்கள் எடுத்துக் கொண்ட சொற்றொடர் வீரம், சாவு என்ற இரண்டு விடயங்களையும் அந்த வீரச்சாவுக்கான சமர்க்களத்தையும் அந்தச்சமர்க்களத்தில் நடந்த சமரையும் விளக்கும் தன்மையை உள்ளடக்கியிருக்கிறது. இங்கே ஒரு சொல்லுக்கூடாக ஒரு சொற்றொடருக்கூடாக ஒரு செய்திப்பரிமாற்றம் நடக்கிறது.
இயக்கம் மிகுந்ததும் இடம் மாற்றிக் கொள்ளக் கூடியதுமான மொழிக் குறியீடுகளான சொற்களை கையாளும் போது நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும். ஊடகத் துறையில் நாம் கையாளும் ஒவ்வொரு சொல்லும் அர்த்தம் மிக்கதாகவும் இயங்கியல் தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
இந்த இடத்திலே தான் மேற்குலக ஆதிக்க ஊடகங்களும் மேற்குல ஆதிக்க சக்திகளும் விடுதலைக்காகப் போராடும் தேசிய இனங்களினதும், மூன்றாம் உலக நாடுகளினதும் கருத்தியல் தளத்துக்குள் தந்திரமாகப் புகுந்து அவற்றை திசைமாற்றிச் சிதைக்கும் வேலையைச் செய்கின்றன.
இந்த சக்திகள் ஜனநாயகம்-பயங்கரவாதம், தனிமனித உரிமை- சிறுவர் உரிமை, கருத்துச் சொல்லும் உரிமை-பேச்சுரிமை-எழுத்துரிமை நடுநிலைமை என்று சில சொற்களையும் சொற்றொடர்களையும் கட்டமைத்து வைத்திருக்கின்றன.
இவர்களைப் பொறுத்தவரை ஒரு அரசு என்பது சட்டபூர்வமானது.அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் விடுதலை இயக்கங்கள் சட்ட பூர்வமற்றவை. ஒரு அரசுக்கும் ஒரு விடுதலை இயக்கத்துக்கும் இடையில் நடக்கும் ஒரு சம்பவத்தை செய்தியாக்கும் போது அரசின் பக்கத்தை முதலில் சொல்லி விடுதலை இயக்கத்தின் பக்கத்தை பின்பு சொல்வது இவர்களது எழுதப்படாத விதிமுறையாகும்.
உதாரணமாக விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் ஒரு சண்டை நடந்து இரண்டு தரப்பிலும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டால் அதை செய்தியாக்கும் போது சிறீலங்காவின் அரச படைகள் மீது விடுதலைப்புலித் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 படையினர் கொல்லப்பட்டள்ளனர்.விடுதலைப்புலி தீவிரவாதிகள் அல்லது பயங்கரவாதிகளுக்கு சிறிலங்கா அரச படையினர் பதிலடி கொடுத்ததில் 2 தீவிரவாதிகள் அல்லது பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று குறிப்படுவது தான் இவர்களுடைய பாணியாகும். இதை ஒரு நடுநிiயான செய்திப்பாணி என்றும் இவர்கள் சொல்லிக் கொள்வார்கள். வெளிப்படையாகப் பார்த்தால் இந்தச் செய்தியில் இரண்டு தரப்பை பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது. இரண்டு தரப்புக்கும் எற்பட்ட இழப்பை வெளிப்படுத்துவதில் ‘கொல்லப்பட்டார்கள்’ என்ற ஓரே சொல்; பயன்படுத்தப்பட்டிருக்கிறது . ஆனால் இந்தச் செய்தியின் இடையிலே பயன் படுத்தப்பட்டிருக்கிற தீவிரவாதிகள் அல்லது பயங்கரவாதிகள் என்ற சொல் ‘கொல்லப்பட்டார்கள்’ என்ற மற்றச் சொல்லுக்கு நியாயம் கற்பிக்கும் ஒரு அர்த்தத்தை கொடுக்கிறது..
இங்கு தீவிரவாதிகள் அல்லது பயங்கரவாதிகள் அரசபடைகள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை கொல்வது அநியாயமானதாகவும், அரச படைகள் தீவிரவாதிகள் அல்லது பயங்கரவாதிகளை கொல்வது நியாமானது என்கின்ற கருத்தியல் மிகவும் தந்திரமான முறையில் கட்டமைக்கப்படுகிறது. இங்கே ‘கொல்லப்பட்டார்கள்’ என்ற ஒரு சொற் குறியீட்டின் மூலம் ‘வீரச் சாவடைந்தார்கள்’ என்று நாங்கள் சொல்வதால் எற்படக்கூடிய வரலாற்றின் நீட்சியும் கருத்தியல் பார்வையும் திட்டமிட்டு தடுக்கப்படுகிறது.
இன்னொரு உதாரணம் ஒரு இரண்டு வருடங்களுக்கு முன் என்று நினைக்கிறேன்.. அமெரிக்காவின் சி.என்.என். தொலைக்காட்சியில் அமெரிக்க அரசுத் தலைவர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் ஒரு ஏழுவயதுச் சிறுமியின் கடிதத்தை படித்துக் காட்டியிருந்தார்.சிறுமியின் தந்தை ஒரு விமானி;. ஆஃப்கானிஸ்தானில் இருக்கிறார். அந்தக் கடிதத்தில் அவள் தந்தையிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தாலும், நாட்டுக்காக தன் தந்தையை இழக்கத் தயாராகியிருப்பதாய் குறிப்பிட்டுள்ளாள். புஷ் இதை அமெரிக்க தேச பக்தி என்கிறார். இதையே ஒரு,தமிழீழச் சிறுமி சொல்வதாக இருந்தால் அதை நமது தேசியத் தலைவர் அவர்கள் படித்துக்காட்டுவதாக இருந்தால் இந்த மேற்குலக ஊடகங்களினதும் ஆதிக்க சக்திகளினதும் எதிர்வினை எப்படி இருக்கும்? மோசமான அடிப்படைவாதம், சிறுவர் உரிமை மீறல்- சிறு குழந்தையை எப்படி கெடுக்கிறார்கள் பாருங்கள்? ‘சிறுவர்களை படையில் சேர்ப்பதற்கு பிரச்சாரம் செய்கிறார்கள்’ என்றெல்லாம் கூச்சல் போட்டிருப்பார்கள்.
எங்களுக்கு புதிய சிந்தனைகளைத் தருவதோ, அல்லது புதிய வழிமுறைகளை கற்றுத் தருவதோ இவர்களுடைய உண்மையான நோக்கம் அல்ல. நாங்கள் எங்களுக்கென்று தனித்துவமான கருத்தியல் கட்டமைப்பை புதிய சிந்தனைத் தளத்தை உருவாக்க விடாமல் தடுப்பது தான் இவர்களுடைய ஒரே நோக்கமாகும்.
தனக்கொன்று ஒரு தனித்துவமான கருத்தியல் கட்டமைப்பும் இயங்கியல் தன்மை இல்லாத சிந்தனைத் தளத்தையும் கொண்ட ஒரு இனம் தனது வரலாற்றை இழந்தவிடும்.
ஒரு இனத்தின் வரலாறு சீரழியும்போது மொழியின் சீரழிவும் அதனுடன் பிணைந்து விடுகிறது. இந்நிலையில் உயிர்துடிப்பில்லாத குறியீடுகளின் தொகுதியாக மொழி மாறுகிறது. எல்லா மனிதர்களும் ஒரே சொற்களைப் பயன்படுத்தினாலும் அந்தச் சொற்களின் நீட்சி எல்லா மக்களும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கும் சொற்களின் அர்த்தம் பற்றிய ஒரு பொது உடன்பாட்டை அடைவதற்கும் முடியாத நிலையை ஏற்படுத்திவிடுகிறது.
லத்தீன் அமெரிக்க அறிஞரான அமில்கார் கப்ரால் என்பவர் மொழியினால் கட்டமைக்கப்பட்ட கருத்தியல் தளத்ததையும் அதனால் கட்டமைக்கப்படும் ஒரு இனத்தின் கலாச்சார வாழ்வையும் அடக்கு முறையாளர்கள் ஏன் அழிக்கிறார்கள் என்பதற்கான காரணத்தை பின் வருமாறு கூறுகிறார்..
ஒரு மக்கள் சமூகத்தின்; மீது அன்னியர்களின் அடக்குமுறை ஆட்சி நடத்க்கும் போது வெறும் பொருளாதாரச் சுரண்டலை மட்டும் செய்வதில்லை. பொருளாதாரச் சுரண்டலை தீவிரமாக நடத்துவதற்காக மக்கள் சமூகத்தின் கலாச்சார வாழ்வை அடக்குமுறையாளர்கள் திட்டமிட்டு நசுக்கி இருக்கிறார்கள் என்பது வரலாறு கூறும் உண்மையாகும். அடக்கப்பட்ட மக்கள் சமூகத்தினுள் கலாச்சார ரீதியாக இயங்கக் கூடியவர்களை ஒழித்துக் கட்டுவதன் மூலம் தான் அடக்குமுறையாளர்கள் தங்கள் ஆட்சியை உறுதிப்படுத்துகின்றனர்.’
மக்களின் கலாச்சார வாழ்வினை அழிப்பதற்கும், வீரியமிழக்க வைப்பதற்கும், முடக்குவதற்கும் அடக்குமுறையாளர்கள் ஆயுதத்தை மட்டுமல்ல அறிவையும் பிரயோகிக்கிறார்கள். ஏனெனில் ஒரு உறுதியான உள்நாட்டுக் கலாச்சார வாழ்வு இருக்குமிடத்தில் அந்நிய ஆட்சி நிரந்தரமாக இருக்க முடியாது.’
சிறீலங்கா அரசின் சிங்கள பௌத்த மேலாதிக்க அடக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழ் மக்களாகிய எமக்கும் அமில்கார் கப்ராலின் இந்தக் கூற்று மிகப் பொருத்தமான ஒன்றாகும்.

தமிழ் தளத்தில் ஊடகவியல் 02

02கருத்தியலை கட்டமைப்பதில் ஊடகவியலின் முதன்மைப் பாத்திரம்
கருத்தை கட்டமைப்பதும், கட்டமைக்கப்பட்ட கருத்தை பதிவுசெய்வதும் கடத்துவதும் பரப்பவதும் காவிச் செல்வதும் ஊடகவியல் என்று சொல்லலாம்.
கருத்து என்கிற போது அது ஏற்கணவே உள்ள ஒரு பொருளின் பிரதிபலிப்பால் ஒரு மனிதனுடைய சிந்தனையில் உருவெடுத்து ஒருசெயற்பாட்டின் மூலம் நடைமுறைப் படுத்தப்படுகின்ற போது முழுமையடைகிறது.
(‘கருத்து என்பது முதல் வந்தது. கடவுளால் படைக்கப்பட்டது. கருத்திலிருந்தே பொருள் வந்தது’ என்ற கருத்து முதல் வாதச் சிந்தனைக்குள் சிக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.)
உதாரணமாக சொந்த வீடு என்ற ஒரு கருத்;து ஒருவருக்கு இருக்குமானால் ஏற்கணவே தங்களுக்கென்று சொந்த வீட்டை வைத்திருக்கும் பலரைப் பார்த்தால் ஏற்பட்ட பிரதிபலிப்பு அவரது மனதிலே சொந்த வீடு கட்டவேண்டும் அந்த எண்ணக் கருவை உருவாக்குகிறது.
உண்மையிலேயே அவர் அந்தக் கருத்துக்கு செயல் வடிவம் கொடுத்து ஓரு வீட்டுக்குச் சொந்தக்காரனாகின்ற போதுதான் அது முழுமையடைகிறது.இங்கே ஏற்கனவே உள்ள சொந்த வீடு என்ற எண்ணக் கரு சொந்த வீடு தனக்கு வேண்டும் என்ற ஒரு மனிதனால் செயல்வடிவப் படுத்தப்படுகின்ற போது அந்தக் கருத்து இன்னும் வலுப் பெறுகிறது.
ஆனால் அதேவேளை எதிர்பாராத விதமாக நடக்கும் சில சம்பவங்களும் புதிய கருத்தை தோற்றுவிப்பதுண்டு;.
உதாரணமாக கடலில் அலையடிக்கும் என்பதும் சதாரணமாக எல்லாருக்கும் தெரிந்த ஒரு விடயம்;. அதே கடல் அலை ஊரையே அழிக்கும் என்பதும், ஆயிரக்கணக்கான உயிர்களைக் காவு கொள்ளும் என்பதும் சுனாமி வந்து பேராழிவை உண்டாக்கிய பின்பு தான் பலருக்குத் தெரியவந்தது.இங்கே எதிர் பாராமல் நடந்த ஒரு செயலில் இருந்து ஒரு புதிய கருத்துப் பிறக்கிறது.இதிலே ஊடகவியலுக்கு என்ன பணி என்ற கேள்வி எழலாம்?

மீழ்நிகழ்த்தல்

ஒரு சம்பவம் அல்லது செயல் ஒரு குறிப்பிட்ட இடத்திலோ அல்லது ஒரு வட்டாரத்திலோ புதிதாக நிகழ்கின்ற போது அதை ஊடகங்கள் தான் ஒரு செய்தியாகவோ, ஒரு புதினமாகவோ, அல்லது ஒரு கலைத்துவம் மிக்க படைப்பாக அதற்கு ஒரு வடிவம் கொடுத்து அதை தேசிய மட்டத்தில் அல்லது உலகளவில் மறு நிகழ்தலுக்கு உள்ளாக்குகின்றன. ஒரு குறிப்பிட்ட இடத்திலோ அல்லது ஒரு வட்டாரத்திலோ ஏற்கணவே நிகழ்ந்த அல்லது நிகழ்ந்துகொண்டிருக்கிற ஒரு செயலை அல்லது சம்பவத்தை ஊடகங்கள் பதிவு செய்து மறு நிகழ்த்தலுக்கு உள்ளாக்காது விட்டால் அந்தச் செயலும் அந்தச் சம்பவமும் நிகழ்ந்ததற்கான சான்றுகளும் தடயங்களும் அவை நடந்த அந்தக் களத்தோடு நின்று அழிந்து போய்விடும்.
குறிப்பாகச் சொன்னால் ஒரு சம்பவம் அல்லது ஒரு செயல் இயற்கையாக நிகழ்ந்தாலும் அல்லது செயற்கையாக நிகழ்த்தப்பட்டாலும், அது நிகழ்ந்ததாக அல்லது நிகழ்த்தப்பட்டதாக அதற்கு அடையாளமும் வடிவமும் கொடுப்பது ஊடகங்கள் தான்.
2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ம் திகதி எமது தாயகத்தை சுனாமி தாக்கிய போது பிரான்சில் நான் செய்தி ஆசிரியராக பணிபுரிந்த தொலைக்காட்சி பணிமனையிலிருந்து அதிகாலை நான்கு மணிக்கு ‘கடல்கொந்தழித்து ஊருக்குள் புகுந்துவிட்டது விசேட செய்தி ஒளிபரப்ப வேண்டும் உடனே வாருங்கள்’ என்று தெலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார்கள்.
‘மார்கழி மாதம் வடபகுதி கடலிலே பாரிய அலை அடிப்பதும் கொந்தளிப்பதும் வழக்கம் தானே’ என்ற சொல்லிவிட்டு நான் இருந்துவிட்டேன்.
சுனாமி அலைகளைப்பற்றி ஏற்கணவே ஓரளவு அறிந்திருந்தாலும் எமது அறிவுக்கெட்டிய காலகட்டத்தில் எமது பிரதேசத்தில் அது நிகழாததால் அதனுடய கோரம் அதனால் ஏற்படும் பாதிப்பு என்பவற்றை அப்போது என்னால் உணர முடியவில்லை.
மீண்டும் ஒரு 15 நிமிடத்தின் பின்னர் மீண்டும் தொலைக்காட்சி நிலையத்திலிருந்து ‘கடலலை ஊருக்குள் புகுந்து ஆட்களை கொண்டு போய்விட்டது. நிறையப் பேர் உயிரிழந்துவிட்டார்கள்.’ என்று கூறிய போது எழுந்து சென்று பிரெஞ்சு தொலைக்காட்சிகளையும் இணையத் தளங்களையும் பார்த்த போது தான் அந்த நிகழ்வின் கொடூரம் அதன் செய்திப் பெறுமதி எனக்குத் தெரிய வந்தது.
அதாவது சுனாமி; தாக்கியது என்ற நிகழ்வு தகவலாக வந்து செவிப்புலனூடாக ஏற்படுத்திய தாக்கத்தை விட ஊடகங்கள் அந்த அவலத்தை பதிவு செய்து மறுநிகழ்த்தலுக்கு உள்ளாக்கியதால் ஏற்பட்ட தாக்கம் அதிகமாக இருந்தது. குறிப்பாகச் சொல்வதானால் சுனாமி தாக்குதல் என்ற இயற்கையின் கொடூரத்தை, ஊடகங்கள் பதிவு செய்து மக்களுக்கு மீளநிகழ்த்திக் காண்பித்ததன் மூலம் தான் அது ஒரு பேரழிவு என்பது உலகத்திற்கு தெரியவந்தது.

சொந்தவீடும் சுனாமி அனர்த்தமும்

மேலே குறிப்பிட்ட ‘சொந்தவீடு’, ‘சுனாமி அனர்த்தம்’ ஆகிய இரண்டு விடயங்களிலும் கருத்தியலை தீர்மானிப்பதில் ஊடகங்கள் எப்படி தீர்மானகரமான சக்கதியாக விளங்குகின்றன என்பதைப் பார்ப்போம்.
‘வீடு’ என்பது உலகம் முழுவதிலுமுள்ள மக்களுக்கான அடிப்படைத் தேவைகளில் ஒன்று. உலக மக்கள் தொகையில் சுமார் மூன்றில் ஒரு பகுதியினர் வீடற்றவர்களாக இருக்கிறார்கள்.யுத்தம் மற்றும் இயற்கை பேரனர்த்தங்கள் போன்றவற்றால்; வீடற்றவர்கள் ஆக்கப்பட்டவர்களையும் இதில் அடக்கலாம்.
இலங்கை இந்தியா ஆபிரிக்கா போன்ற நாடுகளிலுள்ள வெப்ப வலயப் பிரதேசங்களில் வீடில்லாமல் தெருவேரங்களிலும் மரநிழல்களிலும் பொது மண்டபங்களிலும் அதிக மக்கள் வாழ்கின்றார்கள். ஆனால். ஐரோப்பா கனடா போன்ற குளிர் வலைய நாடுகளில் அவ்வாறு மக்கள் வாழமுடியாது.அங்கே உறைபனிக் குளிரை தாக்குப்பிடித்து உயிர் வாழ்வதற்கு வீடு என்பது அத்தியாவசியமானது.அந்த நாடுகளில் நூற்றக்கு 98 வீதமான மக்களுக்கு வீடிருக்கிறது. வீடற்ற ஒரு சிறு பகுதியினர் கூட குளிர்காலத்தில் அரசாங்க காப்பகங்களில் தங்க வைக்கப்படுகிறார்கள்.
குறிப்பாகச் சொல்வதானால் ஐரோப்பா மற்றும் கனடாவில் வீடில்லாமல் ஒரு மனிதன் தெருவோரத்திலோ மரநிழலின் கீழேயோ தொடர்ந்து இருக்க முடியாது. எனவே அங்குள்ள மக்களுக்கு வீடென்பது முதன்மைத் தேவைகளில் ஒன்றாகும். ஆனால் அங்கே வசிக்கும் அநேகமான மக்களுக்கு சொந்த வீடு கிடையாது. அவர்கள் வாடகை வீடுகளிலேதான் வசிக்கிறார்கள்.அந்த மக்களுக்கு சொந்த வீடு வாங்குவதென்பது ஒரு கனவு போன்றதாகும்.அந்தக் கனவை ஊடகங்கள் நனவாக்குகின்றன.
றியல் எஸ்டேட் எனப்படும் வீட்டுமனை விற்பனை என்பது மேற்குலகில் வளர்ச்சிபெற்ற ஒரு தொழில்துறையாகும். இதற்கென்ற பல நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் பற்றிய கவர்ச்சிகரமான விளம்பரங்கள் ஊடகங்களால் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்படுகின்றன.‘மலிவான விலையில் தரமான வீடு, நீங்கள் அதிக வாடகைப்பணம் செலுத்துகின்றீர்களா? கவலையை விடுங்கள் அதைவிட குறைந்த பணத்தை மாதாந்தம் செலுத்தி ஒரு வீட்டை உங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ளுங்கள், இரண்டு அல்லது மூன்ற படுக்கை அறைகள்,தளபாட மயப்படத்தப்பட்ட வரவேற்பறை, நவின சாதனங்களுடன் கூடிய குளியலறை, கழிப்பறைகள், முற்றிலும் நவீன சாதனங்கள் பொருத்தப்பட்ட சமையலறை, தளபாடங்களுடன் கூடிய விசாலமான சாப்பட்டுக் கூடம், விசாலமான கார் தரிப்பிடம், விசாலமான தோட்டம்’ என்றெல்லாம் அறிக்கையிடப்படும் போது சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவையுடைய ஒரு மனிதன் அதை நோக்கி இழுக்கப்படுகின்றான்.
வீடென்றால் ஆடம்பர வசதிகளுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை அந்த மனிதனுடைய சிந்தனைத் தளத்திலே ஊடகங்கள் திட்டமிட்டு புகுத்தி விடுகின்றன. சொந்த வீடு வாங்குவதற்காக அவன் வங்கியில் வட்டிக்கு கடன் எடுக்கும் போது இத்தகைய உபரி ஆடம்பொருட்களுக்கும் சேர்த்தே கடன் வாங்கும் நிலைக்கு அவனையறியாமலே அவன் தள்ளப்படுகிறான். சொந்த வீடு என்ற அடிப்படை தேவைக் கூடாக அவன் ஆடம்பரப்பொருட்களுக்கான நுகர்வோனாக மாற்றப்படுகின்றான்.
இங்கே வீட்டுமனை விற்பனைத் தொழிலில் ஈடுபடும் நிறுவனங்கள் ஒரு தரப்பாகவும் நுகர்வோர் மறுதரப்பாகவும் இருந்தாலும் இந்த இரண்டு தரப்பையும் சந்திக்க வைக்கின்ற முதன்மைச் சக்தியாக ஊடகங்கள் தான் இருந்திருக்கின்றன்.
குறிப்பாகச் சொல்வதானால் சொந்த வீடு என்பது என்ற ஒரு அடிப்படைக் கருத்துக்கு அது இப்படித்தான் இருக்கவேண்டும் அடையாளத்தை கொடுக்கின்ற வேலையை ஊடகங்கள் செய்கின்றன.

சுனாமியும் கடல்கோளும் ஆழிப்பேரலையும்

அடுத்து சுனாமி பேரழிவு நிகழ்ந்த போது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இயற்கை அனர்த்தம் என்ற வகையில் அனைத்து ஊடகங்களுமே அதை பதிவு செய்து உலகமயப்படுத்தியிருந்தன.
இவ்வாறு இந்த விடயம் உலக மயப்படுத்தப்பட்ட போது சுனாமி என்ற அந்த ஜப்பானியச் சொல் ஊடாக ஜப்பானிய மொழியும் ஜப்பானிய வரலாறும் கூட உலகமயப் படுத்தப்பட்டது.
எதோ இந்தப் பேரழிவு என்பது ஜப்பானில் தான் முதல் முதலாக நிகழ்ந்தது போலவும் ஜப்பானியர்கள் தான் அதைக் கண்டுபிடித்து அதற்கு பெயர் வைத்தது போலவும் அனைத்து ஊடகங்களும் ஒரு வரலாற்றப் புனைவைச் செய்து கொண்டிருந்தன.
வரலாற்றில் உலகின் பல இடங்களில் இந்த அனர்த்தம் நிகழ்ந்ததாகப் பதிவுகள் இருந்தாலும்,சுனாமி என்ற ஐப்பானிய சொல் இந்தப் பேரனர்த்தத்துக்கான துறைசார் குறியீட்டுச் சொல்லாக அங்கீகரிக்கப்பட்டதன் மூலம் ஜப்பானிய மக்கள் தங்களுடைய வரலாற்றையும், தங்களுடைய கருத்தியலையும், மொழியின் ஆளுமையையும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். அதாவது ‘சுனாமி’ என்ற ஒரு சிறிய சொல்லுக் கூடாக ஜப்பானின் வரலாறு மீட்கப்பட்டது. அந்தச் சொல்லுக்கான அர்த்தம் என்று என்ன என்று கண்டுபிடிப்பதற்காக ஜப்பானியர்களுடைய கருத்தியலும் ஜப்பானிய மொழியினுடைய ஆளுமையும் மறு வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டன.
தமிழர்களுடைய மிக நீண்ட நெடிய வரலாற்றிலே, இவ்வாறான பேரனர்த்தம் பல தடவைகள் நிகழ்ந்ததற்கான பல தடயங்கள் இருக்கிருக்கின்றன. ‘பஃறுளி ஆற்றுடன் பன்மலையடுக்கத்து குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள’ என்ற சிலப்பதிகார குறிப்பும், காவிரிப்பூம் பட்டணம், ஏழ் பனை நாடு ஏழ்தொங்கநாடு முதலான பல நாடுகள் கடலால் கொள்ளப்பட்டதற்கான சங்க இலக்கியக் குறிப்புகளும் இந்தப் பேரனர்த்தத்தை உணர்த்தும் சான்றுகளாக இருக்கின்றன. ‘கடல்கோள்’ என்ற பதம் இந்தப் பேரழிவைக் குறிக்கும் குறியீட்டுப் பெயராக சங்க இலக்கியங்களிலே பயன் படுத்தப் பட்டதற்கான சான்றுகள் நிறைய இருக்கின்றன.
2004 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 திகதி இந்தப் பேரழிவு நிகழ்ந்ததும் தமிழ் வரலாற்று ஆர்வலர்களும், வரலாற்றுத் தளத்தில் நின்று சிந்தித்த சில தமிழ் ஊடகங்களும், சுனாமி என்ற ஜப்பானிய சொல்லுக்குப் பதிலீடாக ‘கடல்கோள்’ என்ற இந்த சொல்லை பயன்படுத்த முற்பட்டபோது, இன்னொரு பகுதியினர் அந்தச் சொல் தவறு என்று எதிர்ப்புத் தெரிவித்தனர். இதற்கு மேற்குலக வழிகாட்டலில் இயங்கும் ஒரு ஊடகவியல் கற்கை நெறிப்பிரிவினர் முன்நின்று செயற்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
‘கடல்கோள் என்பது கடல் வந்து முழுமையாக ஒரு நாட்டை ஒரு பிரதேசத்தை முற்காக அழித்ததைத் தான் குறிப்பது’ என்றும் ‘தற்போது ஏற்பட்ட பேரழிவு ஒரு நாட்டையோ ஒரு பிரதேசத்தையோ முற்றாக அழிக்கவில்லை. அதனால் இதற்கு ஆழிப்பேரலை என்ற புதிய பெயரை வைக்கலாம்’ என்றும் அவர்கள் அதற்கு ஒரு புதிய கருத்தில் வடிவத்தைக் கொடுத்து அதற்கான குறியீட்டுப் பெயரையும் உருவாக்கினார்கள். இன்று பல தமிழ் ஊடகங்கள் ‘ஆழிப் பேரலை’ என்ற இந்தப் பதத்தைத் தான் பயன் படுத்துகின்றன.
உண்மையில் ஒரு சொல் ஒரு இனத்தின் வரலாற்றை எப்படிப் புரட்டிப் போடுகிறது அல்லது சிதைக்கிறது அல்லது மறுதலிக்கிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும்;.
ஏனென்றால் ஒரு சொல்லுக்குரிய அர்த்தம் என்பது அந்தச் சொல்லைக் கட்டமைக்கின்ற மொழிக்கூடாகவும் அதனுடைய வரலாற்றக்கூடாகவும் தான் கொள்ளப்படுகிறது. அதாவது மொழியும் மொழியினுடைய வரலாறும் தான் ஒரு சொல்லுக்கு அர்த்தம் கொடுக்கின்றன. மொழிக்கு அப்பால் அர்த்தம் என்பது தனியாகக் கிடையாது.
உதாரணமாக தடம், வடம், குடம், படம், மடம் என்ற தமிழ் சொற்களை எடுத்துக் கொண்டால் இவை அனைத்தும் ‘டம்’ என்ற விகுதியைக் கொண்டு முடிகின்றன. த,வ,கு,ப,ம என்று தொடங்கும் உயிர்மெய் எழுத்துக்கள் தான் ஒன்றிலிருந்து மற்றதை வேறுபடுத்துகின்றன.ஆனால் இந்த எழுத்துக்களுக்கு தனியான அர்த்தம் கிடையாது.
தடம், வடம், குடம், படம், மடம் என்றால் என்ன என்பதை தமிழ் மொழியிலுள்ள பல சொற்கூட்டங்களை வைத்துக் கொண்டும் அந்தச் சொற் கூட்டங்களை கட்டமைத்து ஒழுங்குபடுத்திய மொழியினுடைய வரலாற்றை வைத்துக் கொண்டும் தான் இவற்றுக்கான அர்த்தம் கொள்ளப்படுகிறது.
கடல்கோள் என்றால் கடல் பொங்கி வந்து ஒரு நாட்டை முழுமையாக அழிக்கின்ற செயல் என்றும் சுனாமிக்கு அது பொருந்தாது என்றும் சொல்வதானது வரலாற்றுப் பார்வையற்ற அல்லது தமிழ் மொழியின் வரலாற்றை மூடிமறைக்கின்ற ஒரு செலாகத் தான் பார்க்க வேண்டும்.

புவிஅதிர்வும் சுனாமியும்

பூகம்பம்,பூவியதிர்வு,நிலநடுக்கம் என்ற இந்த மூன்று சொற்களும் உலகில் அடிக்கடி நடக்கும் ஒரு இயற்கை பேரனர்த்தை குறிப்பவையாகும். வௌ;வேறு தளங்களில் இந்தச் சொற்கள் பாவிக்கப்பட்டாலும் இவற்றுக்குரிய அர்த்தம் என்பது ஒன்று தான் என்பது தமிழ் மக்களுக்குத் தெரியும். இந்தப் பூகம்பம் அல்லது நில நடுக்கம் என்பது றிக்டர் மானி என்ற அளவுகோலால் அளவிடப்படுகிறது. இது 5.8 அல்லது 5.9 மேல் செல்லும் போது கட்டிங்களை தகர்த்தும் பூமி பிளந்து உள்வாங்கியும் மிகப் பெரிய பேரனர்த்தம் நிகழ்கிறது.
ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் இவற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான தடுப்பு முறைகள் கட்டிடங்களை அமைக்கும் போது கடைப்பிடிக்கப்படுவதால் இந்தப் பேரனர்த்தத்தின் போது எற்படுத்தப்படும் உயிரிழப்புகள் குறைக்கப்படுகின்றன. ஆனால் மூன்றாம் உலக நாடுகளில் இந்தப் பேரனர்த்தம் ஏற்படும் போது பாரிய உயிரழிவுகளும் சொத்தழிவுகளும் ஏற்படுகின்றன.
இதற்காக பாரிய உயிரழிவும் சொத்தழிவும் ஏற்பட்டால் தான் பூகம்பம் என்றும் அவ்வாறு ஏற்படாததை பூமி ஆடியது என்றும் சொல்வதில்லை.கட்டிடங்களில் சிறிய வெடிப்புக்களை ஏற்படுத்தும் சிறிய அதிர்வுகள் கூட பூகம்பம் என்றுதான் சொல்லப்படுகின்றன. றிக்டர் அளவில் 9.க்கு மேல் பதிவாகும் மிகப்பெரிய அதிர்வும் 1 ஆகப் பதிவாகும் மிகச் சிறிய அதிர்வும் கூட பூகம்பம் என்று தான் சொல்லப்படுகின்றன.
கடல்கோள் என்பதும் கடலுக்கடியில் ஏற்படும் மிகப் பெரிய நில அதிர்வால் ஏற்படும் சக்தி அலைகள் அல்லது அதிர்வலைகள் கடலை அமுக்கித் தள்ளி தரைப் பகுதியில் மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்துவதையே குறிக்கிறது. கடலுக்கடியில் ஏற்படும் நிலஅதிர்வின் வீச்சத்தைப் பொறுத்து ஒரு நிலப்பரப்பே அழிவதும் நிலப்பரப்பிலுள்ள மக்கள் அழிவதும் நிகழ்கிறது.
கடல் வந்து ஒரு நிலப்பரப்பை முற்றாக அழிப்பதற்கு கடலுக்கடியில் நிகழும் நில நடுக்கத்தையும்,தரைப்பகுதியல் ஏற்படும் நில நடுக்கத்தையும் தவிர விஞ்ஞான ரீதியாக வேறெந்தக் காரணமும் இல்லை.
எனவே ஒரு நிலப்பரப்பை முழுமையாக அழித்தால் தான் அது கடல்கோள் என்றும், இல்லையென்றால் அது ஆழிப்பேரலை என்றும் குறிப்பிடுவது தமிழர்களது வரலாற்றை மறைக்க வேண்டும் என்ற உள்நோக்கம் கொண்ட தவறான செயலாகும்.
‘ஆழிப் பேரலை’ என்றால் கடலில் எழுந்த பேரலை என்று பொதுவாக அர்த்தங் கொள்ளப்படுகிறது. இந்தப் பேரலை ஒரு புயற்காற்றால் -கடலில் ஏற்பட்ட ஒரு ஒரு பெரிய தாழ்வமுக்கத்தால் கூட ஏற்பட முடியும். இந்த அலைகளுக்கும் கடலுக்கடியில் எற்படும் நிலநடுக்கம் எற்படுத்தும் பேரலைகளுக்கும் இடையில் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது.
சுனாமி என்ற ஜப்பானிய மொழியில் அழைக்கப்படுவதை (நேரடியாகவோ அல்லது ஆங்கில மொழி வழியாகவே) ஜப்பானிய மொழியல் மற்றும் கருத்தியல் தளத்தினுடாக பார்த்து ‘ஆழிப்பேரலை’ என்று மாற்றீட வைத்துள்ளதும், ‘கடல்கோள்’ என்று இதனை தமிழ் தளத்திலும் தமிழ்மொழியின் வரலாற்றுக்கூடாகவும் பார்த்தவர்களுடைய கருத்து காலத்துக்க ஒவ்வாததென்று சிறுமைப்பட்டிருப்பதும் கருத்திலை கட்டமைப்பதில் ஊடகத் துறை எவ்வளவு முதன்மை பாத்திரம் வகிக்கிறது என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டாகும்.

தமிழ் தளத்தில் ஊடகவியல் 01

ஊடகம் என்றால் என்ன?

பொதுவாக ஊடகம் என்றால் கடத்துவது, காவுவது என்று தமிழில் அர்த்தம் கொள்ளப்படுகிறது.
ஒரு செப்புக்கம்பி ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு மின்சாரத்தை கடத்திச் செல்லும் போது அது அங்கே ஒரு ஊடகமாகச் செயற்படுகிறது.அதே போல ஒருவர் பேசும்பேச்சை,மற்றவர் கேட்பதற்கு அதை ஒலி அலைகளாகச் சுமந்து செல்லும் காற்று ஊடகமாகச் செயற்படுகிறது.
ஊடகவியல் என்கிறபோது அது மனிதர்களுக்கிடையி;ல் கருத்துக்களை –தகவல்களை காவிச் செல்கின்ற -பரப்புகின்ற வேலையைச் செய்கின்ற தொடர்பாடல் சம்மந்தப்பட்ட துறையைக் குறிக்கிறது என்று சாதாரணமாகச் சொல்லலாம்
.
குறிப்பாகச் சொல்வதானால் கருத்தியலை கட்டமைப்பது,மனிதர்களினதும் சமுகத்தினதும் இருப்பை தீர்மானிப்பது, சந்தைப் பொருளாதாரத்தின் இருப்பை தீர்மானிப்பது,அரசியல் தத்துவம் விஞ்ஞானம் சட்டம் மருத்துவம் பொறியியல் என்று பல்துறை சார்ந்த விடயங்களில் தீர்மானகரமான சக்தியாக விளங்குவது என்று ஊடகவியலில் சர்வ வியாபகத் தன்மையை விளக்கலாம்.

ஊடகவியலின் செயற்பாடு

முதல்கட்டமாக ஊடகவிலின்; செயற்பாடுகளை தகவல் தெரிவித்தல், அறிக்கையிடுதல், பிரதிபலிப்பை உருவாக்குதல் என்கின்ற மூன்று வரையறைகளுக்குள் அடக்கலாம்.

தகவல் தெரிவித்தல்

கருத்தை மக்களிடம் எடுத்துச் செல்கின்ற பணி தான் ஒரு ஊடகத்தின் முதல் பணியாகும்.
கருத்து என்பது இதழியலில் செய்தி, கட்டுரை, விவாதம், விமர்சனம், சிறுகதை, தொடர்கதை, நாவல், கவிதை, பாடல் என்று பல்வேறு வடிவங்களில் மக்களிடம் எடுத்துச் செல்லப்படுகிறது.
ஓலி ஒளி ஊடகங்களில் இவற்றுடன் கலந்துரையாடல் பாடல் நாடகம் விவரணச் சித்திரம் குறும் படம் ஆவணப்படம் சினிமா என்று இந்த வடிவம் இன்னும் விரிவுபெறுகிறது.
ஒரு விளம்பரமாக அறிவித்தலாகக் கூட ஒரு கருத்து மக்களிடம் எடுத்துச் செல்லப்படலாம்.கருத்து ஊடகங்களுடாக மக்களிடம் எடுத்துச் செல்லப் படுகின்ற போது முதலில் தகவல் தெரிவித்தல் என்ற பணி அங்கு நடைபெறுகிறது.

அறிக்கையிடுதல்

அறிக்கையிடுதல் என்பது ஊடகவியலில் மிக முக்கியமான ஒரு விடயமாகும். ஒரு கருத்தை கட்டமைத்து, அதை மக்கள் நம்புகின்ற விதத்தில்,அவர்கள் விருப்பத்தக்கவகையில் அவர்களுடைய அறிவுத் தளத்தை நோக்கி நகர்த்துவதை ஊடகவியலில் அறிக்கையிடுதல் என்று சொல்லலாம்.
அதாவது ஒரு மனிதனின் சிந்தனைத் தளத்தில் ஊடுருவி அவன் எதைச் செய்ய வேண்டும், எதைச் சார்ந்திருக்க வேண்டும், எதைச் சாப்பிட வேண்டும் எதை உடுக்கவேண்டும், எதைக் குடிக்கவேண்டும், எதைப் படிக்க வேண்டும், எதைப் பார்க்க வேண்டும் என்ற அவனது அனைத்துச் செயற்பாடுகளையும் அவனையறியாமலோ அல்லது அவன் அறியும் படியாகவோ புறநிலையில் இருந்து இயக்குகின்ற தீர்மானகரமான சக்தியாக ஊடகவியல் விளங்குதற்கு இந்த அறிக்ககையிடுதல் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
உதாரணமாக நமது நாட்டிலே உள்ளுரில் தயாரிக்கப்படுகின்ற ஒரு குளிர் பானம், தரமும் சுவையும் ஊட்டச்சத்தும் நிறைந்ததாக இருந்தாலும், சர்வதேச பிரபல்யம் வாய்ந்த குளிர் பானங்களுடன் சந்தையில் அதனால் போட்டிபோட முடிவதில்லை.
இதற்கு பொருளாதார ரீதியாக பலகாரணங்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் அவை எல்லாவற்றiயும் விட , உள்ளுர் குளிர் பானத்தைவிட சர்வதேசப் புகழ்பெற்ற குளிர் பானந்தான் சிறந்தது, அவற்றை மற்றவர்களுக்கு முன்பாக குடிப்பதே கௌரவத்துக்குரியது என்று நுகர்வேருடைய மனங்களிலே கட்டமைக்கப்பட்டிருக்கின்ற பிரமை முக்கியமானதாகும்.
இந்தப் பிரமை ஊடகங்களால் தான் கட்டமைக்கப்படுகிறது. இதைக் கட்டமைப்பதற்காக ஊடகவியலில் கையாளப்படும் முறைதான் அறிக்கையிடுதல் எனப்படுகிறது.
பொதுவாக அறிக்கையிடுதலில் தகவல் தெரிவித்தல், ஓப்பீட்டுக் குள்ளாக்கல், அம்பலப்படுத்தல், நம்பிக்கையூட்டல் என்கின்ற வழிமுறைகள் கையாளப்படுகின்றன.
உதாரணமாக சர்வதேச சந்தையில் இடம் பிடித்திருக்கும் ஒரு பிரபலமான நிறுவனத்தின் தயாரிப்பான ஒரு செருப்பு, அல்லது சப்பாத்து முதன் முதலாக ஒரு நாட்டின் உள்@ர் சந்தைக்கு வருகின்றதென்று வைத்துக்கொண்டால் அந்தப் பொருள் சந்தைக்கு வருவதற்கு முன்னர் அதைப்பற்றிய விளம்பரம் செய்யப்படும்.
அதிலே முதலில் அந்தத் தயாரிப்பு மற்றும் அதை தயாரித்த நிறுவனம் பற்றிய தகவல் இருக்கும். அடுத்தபடியாக அந்த நிறுவனத்தின் சர்வதேசப் பிரபல்யம் மற்றும் அந்த நிறுவனத் தயாரிப்புக்களின் விற்பனைச் சாதனை (அதிக மக்கள் வாங்கிப் பாவிக்கின்றார்கள் என்கின்ற புள்ளி விபரம்) என்கின்ற ஒப்பீட்டுத் தன்மை இருக்கும்.
அடுத்து அந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் பாதுகாப்பானவை, உறுதியானவை நீடித்து உழைக்கக் கூடியவை என்கின்ற அம்பலப்படுத்தும் (மற்றய தயாரிப்புக்கள் தரமற்றவை என்று மறைமுகமாக அம்பலப்படுத்தவது) தன்மை இருக்கும்.
இறுதியாக மக்களின் அபிமானத்தை பெற்ற ஒரு விளையாட்டு வீரர் அந்த செருப்பை அல்லது சப்பாத்தை பாவிப்பது போன்று காண்பிக்கப்படும். இதன் மூலம் இந்தத் தயாரிப்பு சிறந்ததாகத் தான் இருக்கும் என்ற நம்பிக்கை அல்லது பிரமை நுகர்வோருடைய மனங்களிலே கட்டமைக்கப்படும்.
அறிக்கையிடுதல் என்பது ஒரு விளம்பரத்தில் மட்டுமல்லாமல் ஊடகத்துறை சார்ந்த அனைத்து கருத்தியல் வெளிப்பாட்டு வடிவங்களில் இந்த அடிப்படையிலே தான் மேற்கொள்ளப்படுகிறது.
பொதுவாக ஊடகத்துறையில் அறிக்கையிடுதல் என்பது இருவழித் தன்மை கொண்டதாகும்.
முதலாவது ஒரு அதிகார மையத்திலிருந்து மக்களை நோக்கி அறிக்கையிடப்படுவது. இது அதிகார மையத்தின் தேவைகளுக்காக மக்களை தயார் படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. பெரும்பாரும் அனைத்து ஊடகங்களினதும் 90 வீதமான செயற்பாடுகள் இந்த வகையயை அதாவது மேலிருந்து கீழ்நோக்கி கருத்தை கொண்டுசெல்லும் தன்மையைக் கொண்டவை
.
அது செய்தியும் செய்திசார்ந்த வடிவங்களாக இருக்கலாம். அல்லது நாடகம் சினிமா சின்னத்திரை என்று அழகியல் சார்ந்த வடிவங்களாக இருக்கலாம். அனைத்துமே இந்த வரையறைக்கள் அடங்குகின்றன.
இரண்டாவது மக்களிடமிருந்து தகவல்களைத் திரட்டி, அதிகார மையத்தை நோக்கி அறிக்கையிடுவது. இது அதிகார மையத்தின் தேவைகளுக்காக மக்களை தயார்படுத்துவதற்கு மக்களிடமிருந்து தகவல்களை திரட்டி அதிகார மையத்துக்குக் கொடுப்பது. இது அநேகமாக ஒரு புலனாய்வு செயற்பாட்டுக்கு ஒப்பானது. இதற்கு சிறந்த உதாரணமாக தேர்தல் காலங்களில் ஊடகங்கள் நடத்தும் கருத்துக் கணிப்புக்களை குறிப்பிடலாம். அதேபோல இந்திய ஊடகங்கள் நடத்தும் திரை வரிசை ரொப் ரென் போன்ற நிகழ்ச்சிகளை குறிப்பிடலாம்.

பிரதிபலிப்பை உருவாக்குதல்

ஒரு கருத்து ஒரு ஊடகத்தினூடாக ஏதாவதுதொரு வடிவத்தில் மக்களுக்கு தெரிவிக்கப்படும் போது அல்லது மக்கள் மத்தியிலே பரப்பப்படும் போது மக்களுடைய மனங்களிலே அறிதல் தெளிதல் வினையாற்றுதல் என்ற மூன்று செயற்பாடுகள் நடக்கின்றன.
உதாரணமாக காச்சல் தலைவலி என்பது உலகிலுள்ள அனைவருக்கும் வரக்கூடிய ஒரு நோயாகும். இந்த நோய்க்கு பல்வேறு பெயர்களில் மருந்துகளும் இருக்கின்றன. இந்த நோயை ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கக் கூடிய மருந்தின் அடிப்படை மூலக்கூறுகள் மருத்துவ ரீதியாக ஒன்றாக இருந்தாலும்; நாட்டுக்கு நாடு இந்த மருந்துகள் அவற்றை தயாரிக்கின்ற நிறுவனங்களின் கொடுக்கப்படும் வௌ;வேறு பெயர்களில் தான் மக்களால் அறியப்படுகின்றன.
இலங்கையில் காச்சலுக்கென்று ‘அ’ என்ற மருந்து பாவனையில் இருக்கிறதென்று வைத்துக் கொண்டால் இப்போது ‘ஆ’ என்ற சிறந்த மருந்து வெளிநாடுகளில் பாவிக்கப்படுவதாகவும்; அது இலங்கையில் விற்பனைக்கு வந்துள்ள தென்றும் ஒரு செய்தி ஊடகங்களில் வரும் போது அதை கிரகிக்கும் ஒரு மனிதன் முதலில் இந்தப் புதிய மருந்து வந்திருக்கும் தகவலை அறிந்து கொள்கிறான். அதற்கு அடுத்தபடியாக அந்த தகவலூடான இந்த புதிய மருந்து வெளிநாடுகளில் பாவிக்கப்படுவதால் சிறந்த மருந்தாக இருக்கும் என்ற கருத்து (அவனுடைய அறிதலுக்கு ஊடாக) அவனுக்கு ஏற்படுகிறது. அதன் பின்னர் அந்த மருந்தை வாங்கவேண்டும் என்ற வினையாற்றும் எண்ணம் அவனுக்கு உருவாகிறது. மருத்துவர் பழைய மருந்தை கொடுத்தால் புதிய மருந்தை எழுதித் தாருங்கள் என்று கேட்கும் நிலைக்கு அவன் வருகிறான்.
இதற்கு இன்னொரு உதாரணமாக கடந்த 2005ம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் படுகொலை செய்யப்பட்ட செய்;தியை எடுத்துக் கொள்ளலாம்.
இந்தச் செய்தி ஊடகங்கள் வாயிலாக ஐரோப்பாவில் உள்ள புலம் பெயர்ந்த தமிழர்களை எட்டிய போது அதன் மூலம் ஜோசப் பரராசசிங்கம் துப்பாக்கிச்; சூடுபட்டு இறந்துவிட்டார் என்ற தகவல் முதலில் அவர்களுக்கு தெரிகிறது.அடுத்து அவர் எங்கே வைத்து சுடப்பட்டார்? எப்போது சுடப்பட்டார்? யார் அவரைச் சுட்டார்கள்? யார் அவரின் எதிரிகள் என்கின்ற தகவல்கள் மூலம் அவரைச் சுட்டுக் கொன்றவர்கள் தமிழின துரோகிகள் என்ற தெழிவு அல்லது புரிதல் அவர்களுக்கு ஏற்படுகிறது.
அதற்கு அடுத்த கட்டமாக இந்தப் புரிதல் தெழிதல்களுக்கூடாக இந்தப் படுகொலையைக் கண்டிக்க வேண்டும் என்ற செயலாற்றும் என்ணம் இந்தச்செய்தியைப் படிப்பவர்களுடைய மனதிலே உருவாகிறது. இந்த செய்தி சொல்லப்பட்ட விதத்தையும் அதை உள்வாக்கிக் கொண்டவருடைய கருத்தியல் தளம் மற்றும் இருப்பையும் பொறுத்து இந்தப் படுகொலைக்கு எதிராக வினையாற்றும் செயற்பாடு அமைகின்றது.
ஓரு தீவிரமான கிறிஸ்தவருக்கு ஜேசு பாலன் பிறந்த நேரத்தில் அவரது பிறப்புக்கான ஆராதனை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்துவிட்டதே என்ற கொதிப்பு அவரை ஆட்கொண்டிருக்கும்.தமிழ் தேசிய உணர்வாளர் ஒருவருக்கு துயரத்துடன் கூடிய ஆத்திர உணர்வை இது தூண்டியிருக்கும.;
இதேவேளை இனவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபடும் நபருக்கு இந்தச் செய்தி மகிழ்ச்சிதரும் ஒன்றாக இருந்திருக்கும்.
பொதுவாக ஊடகங்கள் தங்களது நோக்கம் இருப்பு மற்றும் செயற்பாடுகள் பற்றி பல்வேறு காரணங்களையும் வியாக்கியானங்களையும் கொள்கை விளக்கங்களையும் கூறினாலும் உண்மையில் மக்களின் மனங்களில் பிரதிபலிப்பை உருவாக்குவது என்பது தான் அனைத்து ஊடகங்களினதும் அடிப்படைக் குறிக்கோளாகும்.
அதாவது மக்களின் சிந்தனைத் தளத்துக்குள் ஊடுருவி அதில் செல்வாக்குச் செலுத்தி சார்புத் தன்மை ஒன்றை உருவாக்கி அவர்களை இயக்குகின்ற சக்தியாக இன்றைய நவீன ஊடகம் தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது.
பொதுவாக ஊடகவியல் என்று இன்று அழைக்கப்படும் இந்தத்துறையிலுள்ள அனைத்து ஊடகங்களும் இந்த மூன்று அடிப்படை நோக்கங்களை ஆதாரமாகக் கொண்டுதான் செயற்படுகின்றன.
செய்தி சார்ந்த விடயங்களாக இருந்தாலும்,அறிவியல் சார்ந்த விடயங்களாக இருந்தாலும் அல்லது கலைத்துவம் சார்ந்த மகிழ்வூட்டும் விடயங்களாக இருந்தாலும் ஊடகங்களால் கட்டமைக்கப்படுகின்ற அனைத்து வடிவங்களுமே மனிதனுடைய சிந்தனைத் தளத்தை ஆக்கிரமிப்பதை நோக்கமாகக் கொண்டவையாகும்.
தேவைக்கான உற்பத்தி’ என்பது பொருளியலிலே ஒரு முக்கியமான விடயம். அதாவது மக்களுடைய தேவையை பூர்த்தி செய்வதற்காக பொருட்களை உற்பத்தி செய்வது ஒரு வகை. உற்பத்தி செய்யப்பட்ட அல்லது செய்யப்படவுள்ள பொருட்களுக்கான தேவையை மக்கள் மத்தியில் வலிந்து உருவாக்குவது இன்னொரு வகை. இன்றைய உலகமயமாதல் சூழலில் பொருட்களுக்கான தேவையை மக்கள் மத்தியில் வலிந்து உருவாக்கும் வேலையை அதாவது மக்களை சந்தைப் பொருளாக்கும் வேலையை அனைத்து மேலாதிக்க ஊடகங்களும் செய்து வருகின்றன.
‘மேற்குலகின் ஜனநாயக அக்கறை, தனிமனித சுதந்திரத்தின் மீதான கரினம், மனித உரிமை செயற்பாட்டை வலியுறுத்துவதிலுள்ள அதீத ஈடுபாடு,கருத்தியல் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதிலுள்ள ஆர்வம்’ இவை அனைத்தையும் கட்டுடைத்தால், பொருளாதார நலன் தான் இவற்றின் அடிப்படை என்பது தெரியவரும்.
ஊடகவியல் என்பது சந்தைப் பொருளாதார வாழ்வியலுக்காவும், அந்த சந்தைப் பொருளாதாரத்தில் ஆளுமை செலுத்துகின்ற மேலாதிக்க சக்திகளின் அரசியல் நலன்களுக்காகவும் மக்களை தயார் படுத்துகின்ற அவர்களை கருத்தியல் சிறைக்குள் தள்ளுகின்ற வேலையை செய்கின்ற முக்கியமான துறையாக மாறிவிட்டடது.
தங்களது விடுதலைக்கும், உரிமைக்கும், சமத்துவத்திற்கும் போராடுகின்ற மக்களுடைய குரலை, திட்டமிட்டு நசுக்குவதிலும் கொச்சைப்படுத்துவதிலும் முன்னணியில் நிற்கும் மேலாதிக்க ஊடகங்களின் நோக்கத்தை இந்தப் பின்னணியில் வைத்துத் தான் பார்க்க வேண்டும்.
தங்களது விடுதலைக்கும், உரிமைக்கும், சமத்துவத்திற்கும் போராடுகின்ற மக்களுடைய குரலாக ஒலிக்கும் ஊடகங்கள் இந்த மேலாதிக்க ஊடகங்களின் கருத்தியல் ஆக்கிரமிப்பை தகர்த்தெறிய வேண்டும்.
தங்களுடைய தளம் எது என்பதையும் அதில் பயணிப்பதற்கான சரியான வழித்தடம் எது என்பதையும் இந்த ஊடகங்கள் சரியாக இனம் காணவேண்டும். அதாவது தங்களுக்கான ஊடகக் கருத்தியல் எது என்பதையும், தனித்துவமான வடிவம் எது என்பதையும் இந்த ஊடகங்கள் திர்மானிக்க வேண்டும்.
மாறாக இந்த மேலாதிக்க ஊடகங்களின் வழிமுறைகளும் கருத்தியல் தளமும் தான் சிறந்தது உச்சமானது என்று நினைத்தால் இவை அவற்றின் ஊது குழல்களாகவும், தரகர்களாகவும் தான் இருக்க முடியுமே அன்றி மக்களுக்கான உண்மையான ஊடகங்களாக இருக்க முடியாது.

தமிழ் தளத்தில் ஊடகவியல்

ஊடகவியல் என்றதும் அது தமிழில் இல்லாத ஒரு துறை. தமிழர்களுக்கு அது புதியது. ‘ஐரோப்பியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட-உருவாக்கப்பட்ட ஒரு நவீன துறை’ என்ற எண்ணம் நம்மவர்கள் பலரிடம் இருக்கிறது.
அது இதழியலாக இருந்தாலும் இலத்திரனியல் சார்ந்த ஒலி ஒளி வடிவங்களாக இருந்தாலும் அதற்கு மேற்குலகத்தினரே சொந்தக்காரர்கள் என்றும் அவர்கள் உருவாக்கிய வழி முறைகளே சிறந்தது என்றும் அதை நாம் அப்படியே பின்பற்றுவது தான் நம்முடைய ஊடகத்துறையை வளர்பதற்கு சிறந்த வழி என்றும் கருதுகின்ற நிலைப்பாடுதான் இன்னும் நம்மிடையே இருக்கிறது.
இன்றும் கூட தமிழ் சமூகத்திலுள்ள அறிவு சார்ந்த பிரிவினரிடையே ஐரோப்பிய ஆங்கில வானொலிகளும் தெலைக்காட்சிகளும் சொல்வது தான் செய்தி என்றும் அவற்றில் ஒரு செய்தி சொல்லப்பட்டால் அது உண்மை என்றும் கண்மூடித்தனமாக நம்புகிற போக்கு எம்மிடையே காணப்படுகிறது.
இந்த வானொலிகளும் தொலைக்காட்சிகளும் செய்தியை சொல்லுகின்ற முறைதான் ஊடகத்துறையின் உச்சம் என்றும் தாங்களும் நம்பி மற்றவர்களையும் நம்பச் சொல்கின்ற போக்குத் தான் இன்னமும் நம்மவர்களிடத்திலே இருக்கிறது.இதழியல், சினிமா, சின்னத்திரையில் கூட மேற்குலக முன்மாதிரியை அச்சொட்டாக பின்பற்றுவதன் மூலம் தரமான சிறந்த படைப்புக்களை தர முடியும் என்று தான் இன்றுவரை பலர் நம்புகிறார்கள்.
இந்த காலணித்துவ அடிமை மனோபாவமும் அடிமைச் சிந்தனையும் தான் தமிழ் தேசிய ஊடகக் கருத்தியல் ஒன்று இதுவரை உருவாகமல் போனதற்கும் தமிழ் ஊடகத்துறை தனக்கென்று ஒரு தனித்துவமான அடையாளத்தை கட்டமைக்கத் தவறியதற்கும் காரணம் என்பதை நாம் உணரவேண்டும்.
நாம் நாமாக எமது சுயத்தை இழந்துவிடாமல் இருந்துகொண்டு எமது அனுபவங்களின் அடிப்படையில் எங்களுக்கென்று ஒரு தளத்தை உருவாக்கிக் கொண்டு அதன் பின்னர் மற்றவர்களுடைய அனுபவங்களை அதனுடன் இணைப்பதன் மூலமே எங்களுடைய அடையாளத்தை நாங்கள் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
நம்மை நாமே தாழ்த்திக் கொண்டு எங்களுடைய அனுபங்களை குறைத்து மதிப்பீடு செய்து கொண்டு அடுத்தவர்களுடைய அனுபங்களையும் அடையாளங்களையும் நாம் பின்பற்ற முற்பட்டால் நாம் எமது சுயத்தையும் சொந்த அடையாளத்தையும் தொலைத்து விடுவோம்; என்பதையும் உணர வேண்டும்.
ஊடகவியல் என்பது ஒரு இனத்தின் சமூகத்தின் கருத்தியல் தளத்தில் காத்திரமான- தீர்மானகரமான பாத்திரத்தை வகிக்கின்ற ஒன்றாகும். இந்தத் தளத்தை ஒரு தேசிய இனம் தனது சுய அடையாளங்களின் அடிப்படையில் கட்டியெழுப்பத் தவறுமாக இருந்தால் இந்தத் தளத்துக்குள் ஊடுருவல்களையும், ஆக்கிரமிப்புக்களையும் அனுமதிக்குமாக இருந்தால்அந்த இனம் படிப்படியாக தனது சுயத்தையும் அடையாளத்தையும் இழக்கும்.
சிறுகச் சிறுகச் கொல்லும் விசத்தைப் போல ஒரு தேசிய இனத்தின் கருத்தியல் தளத்துக்குள் புகுந்துகொள்ளும் ஆக்கிரமிப்புக் கருத்தியலும் படிப்படியாக அந்த இனத்தின் பண்பாட்டுத் தளத்தை சிதைத்து கடைசியில் அந்த இனத்தின் இருப்பையும் அடையாளத்தையும் அழித்துவிடும்.
உலகமயமாதல் சூழலில் மனிதர்களையே சந்தைப் பொருட்களாக மாற்றுவதற்காக தேசங்களினதும் தேசிய இனங்களினதும் வரலாற்றiயும் பண்பாட்டையும் கலை கலாச்சார விழுமியங்களையும்; அழிக்கின்ற, மழுங்கடிக்கின்ற கைங்கரியத்தை செய்வதில் ஊடகவியல் மிக முக்கியமான பங்களிப்பை செய்கின்றது.
ஊடகத்துறை என்பது மக்களுக்கான தகவல்களைச் சொல்கின்ற, அறிவூட்டுகின்ற, மகிழ்வுட்டுகின்ற பணியைச் செய்வதாகச் சொல்லிக் கொண்டாலும் அடிப்படையில் மக்கள் மீது கருத்தை திணிக்கின்ற- சந்தைப் பொருளாதார வலைப்பின்னல்களுக்குள் அவர்களைச் சிக்க வைக்கின்ற பணியைத் தான் பல ஊடகங்கள் குறிப்பாக உலக மேலதிக்க ஊடகங்கள் திட்டமிட்டுச் செய்துவருகின்றன.
உலகில் நிமிடத்துக்கு நிமிடம் , விநாடிக்கு விநாடி எத்தனையோ ஆயிரக்கணக்கான சம்பவங்களும் செயல்களும் நிகழ்ந்தாலும் எவை செய்தியாக்கப்பட வேண்டும், எப்படிப்பட்ட செய்திகளாக அவை ஆக்கப்படவேண்டும், என்ன கருத்துக்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதை விரல்விட்டு எண்ணக் கூடிய இந்த மேலாதிக்க ஊடகங்கள் தான் தீர்மானிக்கின்றன.
அரசபயங்கரவாதச் செயற்பாடுகளை ஜனநாயகச் செயற்பாடுகளாகவும், தேசிய விடுதலைப்போராட்டங்களை பயங்கரவாதச் செயற்பாடுகளாகவும் இந்த மேலாதிக்க ஊடகங்கள் கட்டமைத்துக் கதை சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த ஊடகங்களையும் இவற்றின் ஊடகக் கோட்பாடுகளையும் தமிழ் தேசிய இனம் தன்னுடைய ஊடகக் கருத்தியலை திர்மானிப்பதற்கான வழிகாட்டியாகவும் முன் மாதிரியாகவும் கொள்ள வேண்டுமா? என்ற கேள்வி முக்கியமாக கேட்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

தமிழ் தளத்தில் ஊடகவியல்

ஊடகவியல் என்றதும் அது தமிழில் இல்லாத ஒரு துறை. தமிழர்களுக்கு அது புதியது. ‘ஐரோப்பியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட-உருவாக்கப்பட்ட ஒரு நவீன துறை’ என்ற எண்ணம் நம்மவர்கள் பலரிடம் இருக்கிறது.
அது இதழியலாக இருந்தாலும் இலத்திரனியல் சார்ந்த ஒலி ஒளி வடிவங்களாக இருந்தாலும் அதற்கு மேற்குலகத்தினரே சொந்தக்காரர்கள் என்றும் அவர்கள் உருவாக்கிய வழி முறைகளே சிறந்தது என்றும் அதை நாம் அப்படியே பின்பற்றுவது தான் நம்முடைய ஊடகத்துறையை வளர்பதற்கு சிறந்த வழி என்றும் கருதுகின்ற நிலைப்பாடுதான் இன்னும் நம்மிடையே இருக்கிறது.
இன்றும் கூட தமிழ் சமூகத்திலுள்ள அறிவு சார்ந்த பிரிவினரிடையே ஐரோப்பிய ஆங்கில வானொலிகளும் தெலைக்காட்சிகளும் சொல்வது தான் செய்தி என்றும் அவற்றில் ஒரு செய்தி சொல்லப்பட்டால் அது உண்மை என்றும் கண்மூடித்தனமாக நம்புகிற போக்கு எம்மிடையே காணப்படுகிறது.
இந்த வானொலிகளும் தொலைக்காட்சிகளும் செய்தியை சொல்லுகின்ற முறைதான் ஊடகத்துறையின் உச்சம் என்றும் தாங்களும் நம்பி மற்றவர்களையும் நம்பச் சொல்கின்ற போக்குத் தான் இன்னமும் நம்மவர்களிடத்திலே இருக்கிறது.இதழியல், சினிமா, சின்னத்திரையில் கூட மேற்குலக முன்மாதிரியை அச்சொட்டாக பின்பற்றுவதன் மூலம் தரமான சிறந்த படைப்புக்களை தர முடியும் என்று தான் இன்றுவரை பலர் நம்புகிறார்கள்.
இந்த காலணித்துவ அடிமை மனோபாவமும் அடிமைச் சிந்தனையும் தான் தமிழ் தேசிய ஊடகக் கருத்தியல் ஒன்று இதுவரை உருவாகமல் போனதற்கும் தமிழ் ஊடகத்துறை தனக்கென்று ஒரு தனித்துவமான அடையாளத்தை கட்டமைக்கத் தவறியதற்கும் காரணம் என்பதை நாம் உணரவேண்டும்.
நாம் நாமாக எமது சுயத்தை இழந்துவிடாமல் இருந்துகொண்டு எமது அனுபவங்களின் அடிப்படையில் எங்களுக்கென்று ஒரு தளத்தை உருவாக்கிக் கொண்டு அதன் பின்னர் மற்றவர்களுடைய அனுபவங்களை அதனுடன் இணைப்பதன் மூலமே எங்களுடைய அடையாளத்தை நாங்கள் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
நம்மை நாமே தாழ்த்திக் கொண்டு எங்களுடைய அனுபங்களை குறைத்து மதிப்பீடு செய்து கொண்டு அடுத்தவர்களுடைய அனுபங்களையும் அடையாளங்களையும் நாம் பின்பற்ற முற்பட்டால் நாம் எமது சுயத்தையும் சொந்த அடையாளத்தையும் தொலைத்து விடுவோம்; என்பதையும் உணர வேண்டும்.
ஊடகவியல் என்பது ஒரு இனத்தின் சமூகத்தின் கருத்தியல் தளத்தில் காத்திரமான- தீர்மானகரமான பாத்திரத்தை வகிக்கின்ற ஒன்றாகும். இந்தத் தளத்தை ஒரு தேசிய இனம் தனது சுய அடையாளங்களின் அடிப்படையில் கட்டியெழுப்பத் தவறுமாக இருந்தால் இந்தத் தளத்துக்குள் ஊடுருவல்களையும், ஆக்கிரமிப்புக்களையும் அனுமதிக்குமாக இருந்தால்அந்த இனம் படிப்படியாக தனது சுயத்தையும் அடையாளத்தையும் இழக்கும்.
சிறுகச் சிறுகச் கொல்லும் விசத்தைப் போல ஒரு தேசிய இனத்தின் கருத்தியல் தளத்துக்குள் புகுந்துகொள்ளும் ஆக்கிரமிப்புக் கருத்தியலும் படிப்படியாக அந்த இனத்தின் பண்பாட்டுத் தளத்தை சிதைத்து கடைசியில் அந்த இனத்தின் இருப்பையும் அடையாளத்தையும் அழித்துவிடும்.
உலகமயமாதல் சூழலில் மனிதர்களையே சந்தைப் பொருட்களாக மாற்றுவதற்காக தேசங்களினதும் தேசிய இனங்களினதும் வரலாற்றiயும் பண்பாட்டையும் கலை கலாச்சார விழுமியங்களையும்; அழிக்கின்ற, மழுங்கடிக்கின்ற கைங்கரியத்தை செய்வதில் ஊடகவியல் மிக முக்கியமான பங்களிப்பை செய்கின்றது.
ஊடகத்துறை என்பது மக்களுக்கான தகவல்களைச் சொல்கின்ற, அறிவூட்டுகின்ற, மகிழ்வுட்டுகின்ற பணியைச் செய்வதாகச் சொல்லிக் கொண்டாலும் அடிப்படையில் மக்கள் மீது கருத்தை திணிக்கின்ற- சந்தைப் பொருளாதார வலைப்பின்னல்களுக்குள் அவர்களைச் சிக்க வைக்கின்ற பணியைத் தான் பல ஊடகங்கள் குறிப்பாக உலக மேலதிக்க ஊடகங்கள் திட்டமிட்டுச் செய்துவருகின்றன.
உலகில் நிமிடத்துக்கு நிமிடம் , விநாடிக்கு விநாடி எத்தனையோ ஆயிரக்கணக்கான சம்பவங்களும் செயல்களும் நிகழ்ந்தாலும் எவை செய்தியாக்கப்பட வேண்டும், எப்படிப்பட்ட செய்திகளாக அவை ஆக்கப்படவேண்டும், என்ன கருத்துக்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதை விரல்விட்டு எண்ணக் கூடிய இந்த மேலாதிக்க ஊடகங்கள் தான் தீர்மானிக்கின்றன.
அரசபயங்கரவாதச் செயற்பாடுகளை ஜனநாயகச் செயற்பாடுகளாகவும், தேசிய விடுதலைப்போராட்டங்களை பயங்கரவாதச் செயற்பாடுகளாகவும் இந்த மேலாதிக்க ஊடகங்கள் கட்டமைத்துக் கதை சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த ஊடகங்களையும் இவற்றின் ஊடகக் கோட்பாடுகளையும் தமிழ் தேசிய இனம் தன்னுடைய ஊடகக் கருத்தியலை திர்மானிப்பதற்கான வழிகாட்டியாகவும் முன் மாதிரியாகவும் கொள்ள வேண்டுமா? என்ற கேள்வி முக்கியமாக கேட்கப்பட வேண்டிய ஒன்றாகும்.