சனி, 9 டிசம்பர், 2006

நினைவழியா வடுக்கள்-1

இது 1960 முதல் 1970 வரையிலான காலப்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலவிய சாதியச் சமூக ஒழுங்கு முறையும், அதை தகர்த்தெறிவதற்கு மேற்கொள்ளப்பட்ட போராட்டமும் அந்தக் காலகட்டத்தில் அதனால் எனக்கு ஏற்பட்ட பாதிப்புக்களும் பற்றிய அனுபவப் பதிவுகளாகும்.
தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் கூர்மையடைந்துள்ள இன்றைய காலகட்டத்தில் இந்தப் பதிவு அவசியமா? என்ற கேள்வியை தாயக விடுதலையின் பால் அதீத அக்கறையுள்ள ஒரு போராளி என்ற தளத்தில் இருந்து எனக்கு நானே பலதடவை கேட்டுப் பார்த்திருக்கிறேன்.ஆனால் புலம்பெயர்ந்த தளத்தில் தமிழ் அடையாளம் என்றால் சாதியம் என்று நினைக்கும் ஒரு கூட்டம் இங்கே பிறந்து வளரும் ஒரு பிள்ளையைப் பார்த்து ' நீ பிறப்பினால் தாழ்ந்தவன்' என்று கூறும் போது தமிழ் சமூகத்தின் மீது அந்தப் பிள்ளைக்கு ஏற்படும் வெறுப்பை தேசத்துக்கு எதிரான செயல் என்று முத்திரை குத்தி ஒட்டு மொத்தமாக அவர்களை தமிழ் தளத்திலிருந்து அந்நியப்படவைக்கும் செயற்பாடுகளை திட்டமிட்டுச் செய்யும் நிலையில், சாதியத்தின் கொடூரத்தைனத்தை தமிழ் தேசிய உருவாக்கத்துக்கு அது செய்யும் துரோகத்தனத்தை அம்பலப்படுத்துவதற்கு எனது அனுபவங்களை மறுபதிவுக்கு உள்ளாக்குவது அவசியம் என்று நான் நினைக்கிறேன்.'நாங்கள் தமிழர்கள்' என்ற அடையாளம் மட்டும் தான் தாயகம் தேசியம் தன்னாட்சி என்ற எங்களது அரசியல் இலக்கை நாங்கள் விரைந்து அடைவதற்கு வழிவகுக்கும
01

அது 1962 ம் ஆண்டு.
டிசம்பர் மாதத்தின் முதலாவது ஞாயிற்றுக்கிழமை.
எனக்கு அப்போது ஏழு வயது முடிந்து எட்டாவது ஆரம்பிக்கப் போகும் தருணம்.
என்னுடைய வாழ்க்கையில் எனது நினைவுக்கெட்டிய ஆக முந்திய நினைவுப் பதிவு என்று பார்த்தால் அந்த நாள் தான் இப்போதும் நன்றாக ஞாபகம் இருக்கிறது.
நான் பிறந்த வடமராட்சி பகுதியிலே பொதுவாக மார்கழி மாதத்தை பீடை பிடித்த மாதம் என்று சொல்வார்கள்.வடக்கே பாக்கு நீரிணையும் கிழக்கே வங்கக் கடலும் அந்த மாதத்திலே வழமைக்கு மாறாக குமுறிக் கொந்தளிப்பதால் மீன் பிடித் தொழில் மிகக் குறைந்தளவிலேயே நடக்கும். அந்த மாதத்தில் மாரி மழை அநேகமாக அடைமழையாகத் தொடர்ந்து பெய்வதால் உள்ளுர் சிறு பயிர் செய்கையும் அநேகமாகப் பாதிக்கப்பட்டே இருக்கும். இதனால் அந்த மாதத்தில் பணப் புழக்கம் என்பது குறைவாகவே இருக்கும்.வானம் தொடர்ச்சியாக பல நாட்களுக்கு கருமுகில் சூழ்ந்து இருட்டுக் கட்டியிருப்பதால் செந்தளிப்பில்லாத ஒரு மந்தமான சூழ்நிலை நிலவும்.
ஆனால் வல்லிபுரம் அல்லது வல்லிபுரக்குறிச்சி அல்லது சிங்கைநகர் (தற்போது) என்று அழைக்கப்படும் எங்கள் ஊரைப் பொறுத்தவரை அந்த மார்கழி மாதம் மகிழ்ச்சியான செந்தளிப்பான ஒரு மாதமாகும். அதற்கக் காரணம் எங்கள் ஊரில் அமைந்திருக்கின்ற வரலாற்றுப் பெருமையுடைய வல்லிபுர ஆழ்வார் ஆலயமாகும். ஆறுமுகநாவலர் வழிவந்த சைவ சற்சூத்திர பாரம்பரியமும் அதையொட்டிய இறுக்கமான சாதியக்கட்டமைப்பும் மிக்க வடமராட்சிப் பிரதேசத்தில் வைஷ்ணவப் பாரம்பரியத்தில் வந்த இந்த ஆழ்வார் கோவில் அமைந்திருப்பது விசித்திரமான ஒன்று. வைஷ்ணவர்களால் பெருமாள் என்ற அழைக்கப்படும் மகா விஷ்ணுவின் கையில் அமைந்திருக்கும் சக்கரம் தான் இந்த ஆலயத்தின் மூல விக்கிரகமாகும்.இதன் காரணமாக சிறீ சக்கரத்தாழ்வார் என்று வழங்கப்பட்ட பெயரே பின்பு ஊரின் பெயரோடு சேர்த்து சிறீ வல்லிபுர ஆழ்வார் என்றாகிவிட்டது.
எடுத்த எடுப்பிலேயே நான் இந்தக் கோவிலைப்பற்றிச் சொல்வதற்கு சில முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. இந்தக் கோவிலும் , பருத்தித்துறை செம்பியன் பற்று நெடுஞ்சாலை ஓரத்தில் வங்கக் கடற்கரை வரை பரந்து விரிந்த வெண்மனற்பரப்பில் ஏகாந்தமாய் இந்தக்கோவில் அமைந்திருக்கிற சூழலும் சிறுவயதில் என்னை அதிகளவுக்கு பாதித்திருக்கின்றன.அதாவது என்னை நான் அடையாளம் கண்டு கொள்வதற்கும் ஆறுமுகநாவலர் பரம்பரையின் சற்சூத்திர பாரம்பரியம் மற்றும் இந்துத்துவ மாய்மாலங்களை நான் அனுபவ ரீதியாக புரிந்து கொள்வதற்கும் இவை எனக்குப் பெரிதும் உதவியிருக்கின்றன.
“கடவுள் தூணிலும் துரும்பிலும் விண்ணிலும் மண்ணலும் எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்திருப்பது உண்மை என்றால் எங்கள் வீட்டிலும் எங்களுக்குள்ளும் அவர் இருக்கும் போது, அவர் இருக்கும் கோவிலுக்குள் நாங்கள் ஏன் போகக் கூடாது?” “பஞ்சபூதங்களை கடவுள் படைத்தது உண்மை என்றால் அந்தக் கடவுளால் படைக்கப்பட்ட அந்தப் பஞ்ச பூதங்களில் முக்கியமான நிலத்திலும் நீரிலும் ஏன் எங்களுக்கு உரிமை மறுக்கப்படுகிறது.? கோவில் நிலத்திலுள்ள கினற்றுப் படியில் அல்லது கேணிப் படியில் அல்லது குளக்கரையில் நாங்கள் ஏன் கால்வைக்கக் கூடாது? அவற்றிலுள்ள நீரை நாங்கள் ஏன் தொட்டு அழையக் கூடாது? ஏன் அள்ளிக் குடிக்கக் கூடாது?” என்கின்ற பல கேள்விகள் அந்தக்காலத்தில் என் மனதிலே எழுவதற்கும் அதற்கான விடைகளை நடைமுறைச் செயற்பாடுகளின் ஊடாக நான் தெரிந்துகொள்வதற்கும் இந்தக் கோவிலும் இந்தக் கோவில் வளாகமும் தான் அடித்தளமாக இருந்திருக்கின்றன.
இதைவிட முக்கியமாக தமிழர் தாயகப்பகுதிகளை பௌத்த சிங்களப் பேரின வாதிகள் தங்களது நிலப்பரப்பு என்று உரிமை கொண்டாடுவதற்கும், தமிழர்கள் இலங்கைக்கு வந்தேறு குடிகளாக வந்தவர்கள் என்று வரலாற்றைத் திரிப்பதற்கும் இந்த ஆலயத்தின் வரலாறும் அதை தங்களது சைவ மேலாண்மைக்காக மூடிமறைக்க நினைத்த ஆறுமுகநாவலர் வழிவந்த சற்சூத்திர பரம்பரையினரின் துரோகத்தனமும் துணைபோயிருக்கிறது. பௌத்தமதம் என்றால் அது சிங்களவர்களுக்கு மட்டுமே உரிமையானது, சிங்களவர்களே பௌத்த மதத்தின் காவலர்கள் என்ற கருத்தியலை மகாவம்ச காலத்து பிக்குகளில் இருந்து இன்றைய சிறிலங்காவின் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷ வரை திட்டமிட்டு கட்டமைத்து பரப்பிவரும் நிலையில் அவற்றைக் கட்டுடைத்து தமிழர்களும் பௌத்தர்களாக இருந்திருக்கிறர்கள் தமிழகத்திலும் இலங்கையிலும் தமிழர்கள் கடைப்பிடித்த மகாயான பௌத்தம் கி.பி.7ம் நூற்றாண்டுவரை பரவியிருந்தது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தர்மபாலர் முதலான பல தமிழ் துறவிகள் பௌத்தமதத்துக்கான முக்கியமான தத்துவ நூல்களை எழுதியிருக்கிறார்;கள், தமிழிலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஐம்பெரும் காப்பியங்களில் முக்கியமானவையான மணிமேகலை மற்றும் குண்டகேசி என்பன பௌத்த மதத்தின் மேன்மையை எடுத்து விளக்கிய நூல்கள் என்கின்ற வரலாற்று உண்மைகளை எடுத்துச் சொல்வதற்கு இன்றுவரை சற்சூத்திரப் பரம்பரையினர் தயாரக இல்லை. தமிழர்களுடைய வரலாற்றை ஆரிய பார்ப்பணிய மதக் கோட்பாடுகளுக்குள் சிக்கவைத்து பார்ப்பணிய மதத்தின் வரலாறு தான் தமிழர்களின் வரலாறு என்று ஆறுமுகநாவலரின் சற்சூத்திரப் பரம்பரை பெருமை பேசிக்கொண்டிருக்க, விகாரைகள் இருந்த இடங்கள் எல்லாம் சிங்களவர்களின் பூர்வீக பூமி என்று தேரவாத பௌத்தத்தை கடைப்பிடிக்கும் மாகவம்ச பரம்பரையினர் உரிமை கொண்டாடியதுடன் அந்த நிலப்பரப்புக்களை ஆக்கிரமிக்கும் வேலைகளையும் திட்டமிட்டுச் செய்தனா.;- செய்து வருகின்றனர்.
நான் இங்கே குறிப்பிடும் இந்த வல்லிபுர ஆழ்வார் ஆலயப்பகுதியில் 1940 களில் வரலாற்று பொற்சாசனம் ஒன்று கிடைத்தது. கோவில் தேவைக்காக கிணறு தோண்டிய போது மண்ணுக்குள் இருந்து கிடைத்த இந்த பொற்சாசனம் வல்லிபுரப் பொற்சானம் குறிப்பிடப்படுகிறது. இந்தப் பொற்சாசனம் கிபி 2 ம் நுற்றாண்டிலே ‘படகர அதன’ என்ற இடத்திலே ஒரு பௌத்த விகாரை கட்டப்பட்ட செய்தி பிராமி எழுத்து வடிவத்திலே குறிப்ப்pடப்பட்டிருந்தது. இந்த வரலாற்றப் பொற்சாசனத்தை ஆய்வுசெய்த பரணவிதான உட்பட்ட சிங்கள வரலாற்றாசிரியர்கள் தற்போது வல்லிபுர ஆழ்வார் ஆலயம் இருக்கும் இடத்தில் பௌத்த விகாரையே இருந்த தென்றும் அங்கு சிங்கள மக்களே குடியிருந்தார்கள் என்றும் 14 ம் நூற்றாண்டுக்குப் பின்பு இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய தமிழர்கள் அந்தப்பிரதேசத்தின் பூர்வீக குடிமக்களான சிங்கள மக்களை அடித்து விரட்டிவிட்டு அங்கிருந்த விகாரையையும் அழித்து அது இருந்த இடத்தில் விஷ்ணு கோவிலை கட்டிவிட்டார்கள் என்று நிறுவ முற்பட்டிருக்கிறார்கள்.
புத்தரை மட்டுமல்ல விஷ்ணுவை முழுமுதல் கடவுளாகக் கொண்ட வைஷ்ணவப் பாரம்பரியத்தையும் 'அன்பே சிவம்' என்றுரைத்த இராமலிங்க வள்ளலாரின் சமத்துவ வழிபாட்டு முறையையும் கூட ஏற்றுக்கொள்ளாத ஆறுமுகநாவலரின் சற்சூத்திரப் பரம்பரையினர் தங்களுடைய மேன்மைக்கு பங்கம் வந்துவிடும் என்பதால் சிங்கள பௌத்த பேரின வாதிகளின் இந்த அப்பட்டமான வரலாற்றுத் திரிப்பை கட்டுடைத்து உண்மையை வெளிக் கொண்டுவருவதற்கு விரும்பவில்லை.
உண்மையில் இந்த ஆலயத்தின் வரலாறு என்பது தமிழகத்தில் உத்தவேகத்துடன் எழுந்த பக்தி இயக்க காலகட்டத்தில் (கி.பி.6ம் 7ம் நூற்றாண்டுகள்) தமிழகத்திலும் இலங்கையிலும் தமிழ்மக்கள் மத்தியல் கடைப்பிடிக்கப்பட்டு வந்த சமண பௌத்த மதங்கள் அழிக்கப்பட்ட வரலாற்றுடன் ஆரம்பிக்கிறது. நாயன்மார்களாலும் ஆழ்வார்களாலும் முன்னெடுக்கப்பட்ட இந்தக் கருத்தியல் போராட்டத்தில் கௌதம புத்தர் விஷ்ணுவின் அவதாரமாக அர்த்தப்படுத்தப்பட, புத்தருடைய தர்மச்சக்ரம் விஸ்ணுவினுடைய சக்கரமாக மாற்றப்பட தமிழகத்திலும் இலங்கையிலும் இருந்த மகாயான பௌத்த மதம் இந்துமதத்தின் வைஷ்ணவப் பிரிவுடன் ஐக்கியமாக அந்த மதத்திடைய விகாரைகள் விஷ்ணு கோவில்களாக மாற்றம்பெற்றன. பல விஹாரைகள் கைவிடப்பட்டு அழிந்துபோயின.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் முதல் தலைநகராக விளங்கிய கதிரமலை (தற்போதைய கந்தரோடை) மகாயான பௌத்தத்தை கடைபிடித்த தமிழ் பௌத்த தலைநகராக இருந்தது என்பதற்கு இன்றும் அங்குள்ள ஏராளமான தமிழ் பௌத்த விஹாரைகளின் தடயங்கள் சான்றாக இருக்கின்றன.ஆனால் ஆறுமுக நாவலரின் சற்சூத்திர பரம்பரையினர் கதிரமலையின் வரலாற்றை மூடி மறைத்து மழுப்பகின்ற கைங்கரியத்தில் ஈடுபட, தேரவாத பௌத்ததை கடைப்பிடிக்கும் சிங்கள பௌத்த பேரினவாதிகள் அது தங்களுடைய வரலாற்று நகரம் என்றும் தங்களது முன்னோர்களே அந்தப் பிரதேசத்தின் பூர்வீக குடிமக்கள் என்றும் உரிமை கொண்டாடுகின்றனர்.

கதிரமலையை ஆண்ட கடைசி மன்னனாகிய உக்கிரசேனன், பாண்டிய நாட்டு இளவரசியும் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலை கட்டியவளுமாகிய மாருதப்புரவல்லியை காதல் மணம்புரிந்து அவளுக்காக இந்து மதத்துக்கு மாறி அவளின் பெயரால் உருவாக்கிய நகரமே வல்லிபுரம் ஆகும். கிபி. 6ம் நூற்றாண்டுக்கும்,7 ம் நூற்றாண்டுக்;கும் இடையில் நிகழ்ந்த இந்த வரலாற்று சம்பவத்தின் போதே மகாயான பௌத்தம் அதாவது தமிழ் பௌத்த மரபு வைஷ்ணவத்துக்குள் ஐக்கியமான வரலாற்று மாற்றமும் நிகழ்ந்தது. இந்தப் பின்னணியிலேயே நான் இங்கே குறிப்பிடும் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் தோற்றமும் இடம்பெற்றது.

ஞாயிற்றுக்கிழமை விஷ்ணு வழிபாட்டக்கு உகந்த நாள் என்ற ஒரு ஐதீகம் வழக்கில் இருப்பதால் ஒவ்வெரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த ஆலயம் பக்கதர்கள் கூட்டத்தால் நிறைந்திருக்கும்.அதுவும் ஆவணி மார்கழி மாதங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமைகள் அதிவிசேடமான நாட்கள் என்ற கருதப்படுவதால் இன்னும் அதிகமான பக்தர்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து இங்கே வந்து குவிவார்கள். இந்தக்கோவிலுள்ள இன்னொரு முக்கியமான அம்சம் இங்குவரும் பக்தர்கள் ஆலயச் சுற்றாடலில் அந்தந்த சமூகப்பிரிவினருக்கென அமைக்கப்பட்டிருக்கும் கொட்டகைகளில் தாங்களே பொங்கல் பொங்கி கடவுளுக்கு படைத்து வழிபடும் முறையாகும்.

ஆலயங்களில் இறைவனுக்கு அமுது படைக்கும் உரிமை பார்ப்பணிர்களுக்கு மட்டுமே உரிய என்ற ஆரிய பார்ப்பணிய மற்றும் யாழ்ப்பாண குடாநாட்டு சற்சூத்திர பாரம்பரியங்களுக்கு விதி விலக்காக இந்த வல்லிபுர ஆழ்வார் ஆலயம் உட்டபட்ட குறிப்பிட்ட சில கோவில்களில் இந்த நடைமுறை வழக்கத்தில் இருந்தது.

மார்கழிமாதம் முழுவதும் இந்தக் கோவிலில் மார்கழித் தோச்சல் அல்லது மார்கழி நோன்பு என்று அழைக்கப்படும் திருப்பாவை நோன்பு கொண்டாடப்படுவதால் அதிகாலை நான்கு மணியில் இருந்தே இந்தக் கோவில் களை கட்ட ஆரம்பித்துவிடும்.

எங்கள் ஊரவர்களைப் பொறுத்தவரை இந்தக் கோவில் ஒரு வழிபாட்டுத் தலம் என்பதை விட எங்களுடைய சிறு உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தவதற்கான பிரதான சந்தையாக இருந்தது.

எங்கள் ஊர் பெண்கள் தங்களது தயாரிப்பக்களான மூடல், பெட்டி, அடுக்குப்பெட்டி, நீத்துப்பெட்டி, பாய் (இவையெல்லாம் பனையோலையை கொண்டு செய்யப்பட்ட பொருட்கள்) சுளகு, பனங்கட்டி என்பவற்றை இந்தக் கோவிலின் தென்கிழக்கு மூலையில் எங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் வைத்து விற்பது வழக்கமாகும். எது பாட்டி இந்தச் சந்தையின் முகக்pய வியாபாரிகளில் ஒருவர். வள்ளி ஆச்சி எனப்படும் அவரின் மூடல் மற்றும் அடுக்குப் பெட்டிகளை வாங்குவதற்கென்று நிரந்தர வாடிக்கையாளர்கள் பலர் இருந்தார்கள்.

எனது அப்பாவுக்கு கோவில் மற்றும் அதையொட்டிய மதச்சடங்ககள் என்பவற்றில் நம்பிக்கையோ பற்றோ கிடையாது. ஆனால் அதற்காக அவர் கடவுளே இல்லை என்று சொல்லும் நாஸ்த்திகராக இருந்ததில்லை. கடவுளின் பேரால் கடவுளின் பேரைச் சொல்லி உருவாக்கப்பட்ட மதத்தால் வகுக்கப்பட்ட சாதி அமைப்பின் மீதும் அந்த அமைப்பால் கடைப்பிடிக்கப்பட்ட தீண்டாமைக் கொடுமைகள் குறித்தும் அவருக்கு அடக்கமுடியாத கோபம் இருந்தது.அந்தக் காலகட்டத்தில் இந்தத் தீண்டாமைக் கொடுமையை எதிர்த்து போராட்டம் நடத்திய பொதுவுடமை சித்தாந்தத்தின் மீது அவருக்கு ஈடுபாடும் நம்பிக்கையும் இருந்தது. ஆனால் அதை முழுமையாக புரிந்து கொள்ளும் அளவுக்கு அவரிடம் போதிய கல்வியறிவு இருக்கவில்லை. ஆனால் அடக்குபவர்களை அடக்கப்படுபவர்கள் எதிர்த்து போராடி அடக்கி ஒடுக்கும் வரை அடக்குமுறை தொடரும் என்று அவர் உறுதியாக நம்பினார். பலமே அதிகாரத்தின் அடிப்படை என்பதையும் அவர் புரிந்து கொண்டிருந்தார். மனிதனை மனிதன் பிறப்பைக் கொண்டு இழிவுபடுத்தும் அடிமைப்படுத்தும் கோட்பாட்டு ரீதியான இந்து மதத்தை ஒழிக்கவேண்டும் என்பது அவரது இலட்சியமாக இருந்தது.

ஆனால் எனது தாயார் இதற்கு நேரெதிரான போக்குடையவராக இருந்தார். தீவிரமான விஷ்ணு பக்தையான அவருக்கு பாகவதம் மகாபாரதம் இராமாயணக் கதைகள் எல்லாம் அத்துப்படியானவை. வல்லிபுரக்கோவில் சம்பந்தப்பட்ட எந்த விரதமானாலும் எந்த விஷேட நாட்களானாலும் அவர் தானும் விரதமிருந்து என்னையும் விரதமிருக்க வைப்பிப்பது வழக்கமாகும்.

அதிலும் மார்கழிமாதக் காலை நேரத்தில் அந்தக் கொடுங்குளிரில் அதிகாலை நாலுமணிக்கு என்னை எழுப்பி, எங்கள் வீட்டிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்கு அழைத்துச் சென்று மார்கழித் தோச்சல் என்ற பேரில் சில்லென்ற குளிர் தண்ணீரை தலையில் ஊற்றுவது அந்தக் காலத்தில் எனக்கு மிகப்பெரிய சித்திர வதையாக இருக்கும்.

நான் மேலே குறிப்பிட்ட அந்த ஞாயிற்றுக்கிழமையும் வழக்கம் போல அதிகாலை நாலு மணிக்கு அம்மா என்னை எழுப்பிபோது வழக்கம் போல நானும் சிணுங்கிக் கொண்டு திரும்பிப்படுத்தேன். அப்படி நான் படுக்கும் போது ‘கடவுள் படியளக்கிற நேரத்தில் என்னடா நித்திரை சனியனே எழும்படா!’ என்று அர்ச்சனை நடப்பது வழக்கம். அதுக்கும் எழும்பவில்லை எண்றால் கையால் இரண்டு மூண்று சாத்த விழுவதும் வழக்கம். ஆனால் அன்று அது எதுவுமே நடக்கவில்லை.

“அப்பு ராசா எழும்படி. இண்டைக்கு நீ ஒரு புது பள்ளிக் கூடத்துக்கு போகப் போறாய். சாமியை கும்பிட்டு நல்ல படிப்புத் தரவேணும் கெக்கோணும் எழும்பு ராசா” என்று சொல்லி வாஞ்சையோடு அம்மா என் தலையை தடவியது ஆச்சரியமாக இருந்தது. அதை விட புது பள்ளிக் கூடத்தக்கு போகோணும் எண்டது இன்னும் ஆச்சரிமாக இருந்தது.

அப்போது நான் படித்த மந்திகை பள்ளிக் கூடம் எனக்கு பிடிக்கவில்லை. என்னையும் என்னுடைய சொந்தக்கார பொடியளான சின்னத்தம்பி சந்திரன் நடராசன் ஆகியயோரையும் சாரையடி கூவில் பக்கங்களில் இருந்து வந்த வேறு சில பொடியங்களையும் எங்களுக்கு படிப்பித்த கதிர்காமர் வாத்தியார் வாங்கிலில் இருக்க விடாமல் அழுக்கான நிலத்தில இருத்திறதும், ‘சனியன் மூதேசியளே மரமேறப் போறதுக்கும் மாடு மேய்க்கப் போறதுக்கும் என்ரா உங்களுக்கு படிப்பு’ என்று அடிக்கடி பேசி அடிக்கிறதும் எனக்கு பிடிக்கவில்லை. ‘பள்ளிக் கூடம் எணடால் வாங்கிலிலை இருந்து கொண்டு மேசையில சிலேட்டையும் புத்தகத்தையும் வைச்சுப் படிக்கோணும்’ என்றது தான் என்னுடைய அப்போதைய ஆசை.
“அம்மா அம்மா புது பள்ளிக் கூடத்தில நான் வாங்கில் மேசையில் இருந்து படிக்கலாமே?” என்று நான் கேட்க “ஓ இந்தப் பள்ளிக் கூடத்தில படிக்கலாம்” என்று அம்மா பதில் சொல்ல, நான் அடைந்த சந்தேசத்துக்கு அளவில்லை.
படுக்கையை விட்டு துள்ளி எழுந்தேன். இப்போது நினைத்தாலும் அந்த மகிழ்ச்சியான நேரம் என் ஞாபகத்தில் அழியாமல் அப்படியே இருக்கிறது.
எங்கள் வீட்டிலிருந்து வல்லிபுரக் கோவிலுக்கு போவதற்கு மூன்று வழிகள் இருக்கின்றன. ஒன்று துன்னாலையில் இருந்து வரும் கிறவல் ரோட்டால் தாமரைக்குளத்தின் அருகாகச் செல்வது. இரண்டாவது முனியப்பர் கோவில் அமைந்திக்கும் பனங் காணி வழியாகச் செல்வது. மூன்றாவது எழுவாக்கை எனப்படும் வயல் பரப்பினுடாக செல்வது.

தாமரைக் குளத்தில் யாரோ ஒருவர் தற்கொலை செய்து விட்டதால் அவரது ஆவி அந்தப்பகுதியில் நடமாடும் என்று சொல்லி அதிகாலையில் அந்த வீதியால் அம்மா என்னை கோவிலுக்கு அழைத்துச் செல்வதில்லை. அது போல் முனியப்பரும் பிடித்துவிடுவார் என்ற பயத்தில் அந்தப் பாதையையும் பாவிப்பதில்லை.அதனால் எப்போதும் எழுவாக்கை வயல் வெளியினூடகத்தான் நாங்கள் கோவிலுக்குச் செல்வது வழக்கம்.

அன்றும் வழக்கம் போல அந்த வழியால் அம்மா வயல் வரப்பில் முன்னாலும் பாட்டி பின்னாலும் நடந்து வர நான் நடுவில் சென்று கொண்டிருந்தேன். திடிரென நாங்கள் சென்று கொண்டிருந்த வயல் வெளிக்கு எதிர்ப்புறமுள்ள ஆனை விழுந்தான் மணல் வெளியில் நெருப்புக் கோளங்கள் எரிந்து எரிந்து அனைந்து கொண்டிருந்தன.

“ஐயோ என்ரை பிள்ளை” என்று அம்மா என்னை கட்டி அணைத்து முந்தானைக்கள் மூடிக்கொண்டு ‘அரி ஓம் நமோ நாராயணா’ என்று திரும்பத் திரும்பச் செல்ல, பாட்டியும் ஓடிவந்து என்னை மறைத்து கொண்டு நின்றா.எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரே பயமாக இருந்தது. ‘என்னம்மா அது’ என்று அம்மாவை இரகசியமாக கேட்க ‘கொள்ளிவால் பேயள் போகுதுகள்’ என்று அவவும் இரசியமாக பதில் சொன்னா.

அம்மாவின் முந்தானைக்குள் ஒளிந்திருந்தபடி மெதுவாக எட்டிப் பார்த்தேன். வரிசையாக நெருப்பு கோளங்கள் சென்று கொண்டிருந்தன.முன்னுக்கு போன கோளங்கள் அணைந்து போக பின்னுக்கு புதிது புதிதாக கோளங்கள் தோன்றிக் கொண்டிருந்தன. எனக்கு இன்னும் பயம் வந்துவிட்டது. அம்மாவை இறுக்கி கட்டிப் பிடித்துக் கொண்டேன்.