திங்கள், 22 ஜனவரி, 2007

நினைவழியா வடுக்கள்-7

நினைவழியா வடுக்கள்-7

யாழ்ப்பாணக் குடாநாட்டில் வழக்கிலிருந்த குடிமை முறையின் கருத்தியல் தளம் என்பது இந்து மதத்தையும் குறிப்பாக பார்ப்பணிய மயப்படுத்தப்பட்ட சைவ சமயத்தையும் அடிப்படையாகக் கொண்டிருந்தது. யாழ்ப்பாண அதிகார வர்க்கத்தின் குடிமைகளான எங்களுடைய வாழ்வு அந்த மதத்துடனும் அந்த மத வழிபாட்டுத் தலங்களான கோவில்களுடனும் இறுக்கமாகப் பிணைக்கப்பட்டிருந்தது.இதேவேளை தமிழ் சமுகத்தின் அடித்தட்டு பிரிவினராக இருந்த எமது முன்னோர்கள் இயல்பாகவே கலையார்வம் மிக்கவர்களாகவும், நாட்டுப்புறக் கலைகளில் சிறந்த பரீட்சியம் உடையவர்களாக இருந்தார்கள்.

இந்தக் கலைகளுக்கான நிகழ் களமாக கோவில்களே இருந்ததால் யாழ்ப்பாண அதிகார வர்க்கம் அதை பயன்படுத்தி -பிரித்தாளும் தந்திரத்தை கையாண்டு எமது சமூகத்தை பிளவு படுத்தி மோதவிட்டு எமது பொருளாதார வளர்ச்சியை அழிப்பதற்கான வேலைகளை திட்டமிட்டுச் செய்தது.

உதாரணமாக எமது பகுதியில் இருக்கும் வல்லிபுரக் கோவில் திருவிழா என்பது அந்தக்காலத்தில் மிகவும் பேர் பெற்ற திருவிழாவாகும். அதிலும் இந்தக் கோவிலின் சப்பறத் திருவிழா அந்தக்காலத்தில் குடாநாட்டிலிருந்த மற்றக் கோவில்களில் இல்லாத அளவுக்கு பிரமாண்டமாக நடக்கும். இந்தக் கோவிலின் பிரமாண்டமான வெளி வீதிகளைச் சுற்றி 25 சிகரங்கள் கட்டப்படுவது அந்தக் காலத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனையாகும்.அதேபோல இந்தச் சப்பறத் திருவிழாவின் போது நடக்கும் வாண வேடிக்கையும் மற்ற எந்தக் கோவில்களிலும் இல்லாத அளவுக்கு பிரமாண்டமாகவே இருக்கும். கரகாட்டம் காவடி ஆட்டம் சிலம்படி மல்யுத்தம் என்பவற்றை பகல் முழுவதும் நடத்தவதும் கோவிலின் நான்கு வீதிகளிலும் தனித்தனி மேடைகள் போட்டு நான்கு கூத்துக்களை ஒரே நேரத்தில் இரவுமுழுவதும் நடத்துவதும் இந்தத் திருவிழாவின் சிறப்பம்சமாகும்.
ஸ்ரீவள்ளி, சம்பூர்ண இராமாயணம், நல்லதங்காள்,அரிச்சந்திரா,சத்தியவான் சாவித்திரி அகிய கூத்துக்கள் அந்தக் காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வையாகும்.

இதில் ஸ்ரீவள்ளி எனது அப்புவின் தந்தை கந்தன் என்பவரின் குழுவினராலும்,சத்தியவான் சாவித்திரி எங்களது உறவினரான சின்னான் என்பவரின் குழுவினராலும் வருடாவருடம் நிகழ்த்தப்படும்.ஏனையவை மைலிட்டி, வட்டுக்கோட்டை பகுதிகளில் இருந்துவரும் கலைஞர்களாலும் நிகழ்த்தப்படும்.

இதேவேளை இந்தக் கோவில் திருவிழாவுக்கான வாண வெடிகளை தயாரிப்பதற்கென்று வாணக்கார கணபதி என்றும், வாணக்கார வேலன் என்று இரண்டு பேர் இருந்தர்கள்.

கூத்து நடத்துவதிலும் வாணவெடிகளை (பட்டாசுகள்) தயாரிப்பதிலும் ஆரம்பகாலத்தில் எனது உறவினர்கள் ஒன்றாக சேர்ந்தே செயற்பட்டு வந்தார்கள். எங்களது முன்னொர்களின் ஆண்டைகளாக இருந்த அதிகாரவர்க்கமே அவர்களை பிளவு படுத்தி மோதவிட்டதாக அப்பு தெரிவித்தார்.

அப்புவின் தந்தையான கந்தனும் அவரது சிறிய தந்தை முறையான சின்னானும் அண்ணாவிகள் எனப்படும் பரம்பரை கூத்துக்கலைஞர்களாகும் இவர்கள் இருவரும் இணைந்து ஸ்ரீவள்ளி, பவளக்கொடி,அல்லி அருச்சுனா, ஏழுபிள்ளை நல்லதங்காள், சத்தியவான் சாவித்திரி என்ற பல கூத்துக்களை நூற்றுக்கணக்கான திருவிழாக்களில் மேடையேற்றியிருக்கிறார்கள்.
இதேவேளை எங்க@ருக்கு அண்மையிலுள்ள கரவெட்டிப் பகுதியிலும் பல நல்ல கூத்துக் கலைஞர்கள் இருந்தார்கள். அவர்களும் அநேகமாக இதேமாதிரியாகன கூத்துக்களையே நடத்திவந்தார்கள்.

ஆரம்பத்தில் எங்களது ஆண்டைகள் அவர்களுக்கும் எங்கள் ஊர்காரர்களுக்கும் இடையில் கூத்து நடத்துவதில் தொழில் ரீதியான போட்டியை தூண்டிவிட்டார்கள்.

அவங்கடை கூத்துத்தான் நல்ல கூத்து. உங்கடை கூத்து வாய்கையில்லை.” என்று சொல்வது அல்லது “அவங்கள் வெளியூரிலை இருந்து வந்த திறமா கூத்துப் போட்டுட்டு போறாங்கள். நீங்கள் என்னடா செய்யிறியள்? அடுத்தமுறை அவங்களை விட நீங்கள் திறமா கூத்து நடத்த வேணும்” என்று தூண்டிவிடுவது.அதாவது வஞ்சப் புகழ்ச்சி என்ற முறையை கையாண்டு கூத்திலே எம்மவர்களின் பணத்தையும் நேரத்தையும் செலவழிக்க வைத்தார்கள்.

அதற்கு அடுத்த கட்டமாக இந்தத் தொழில் ரீதியான போட்டியை குழுமோதலாக மாற்றி ஒருவரை அடித்தும் வெட்டியும் கொலை செய்யுமளவுக்கு போகச் செய்தார்கள்.

ஆண்டைகளின் கபடநோக்கத்தை அறியாத எங்கள் மக்கள் கூத்துக்காக கொலை செய்துவிட்டு காவல் நிலையத்துக்கும் நீதி மன்றத்துக்கும் நடையாய் நடந்து, வழக்கறிஞர்களிடம்; தங்களது தேட்டம் எல்லாவற்றையும் இழந்துவிட்டு கடைசியில் தங்களது வாழ்வை சிறைச்சாலைகளிலும் தூக்கு மேடையிலும் தொலைத்திருக்கிறார்கள்.

என்னுடைய அப்பு அறிந்தவரை எங்களது உறவினர்களான 26 பேர் இந்தக் கூத்துச் சண்டையால் சிறைத் தண்டனை பெற்றிருக்கிறார்கள்.4 பேர் மரண தண்டனையடைந்திருக்கிறார்கள். 14 பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். 12 குடும்பங்கள் தங்களது சொத்தை எல்லாம் இழந்திருக்கின்றன.

1920 களின் பிற்பகுதியில் கரவெட்டி பகுதியில் பொதுவுடமை சிந்தாந்தம் பரவியதை அடுத்து கூத்துக் கலைஞர்கள் ஆண்டைகளின் கபடத்தனத்தை புரிந்து கொண்டு ஒதுங்கிவிட்டார்கள்.

அதன் பின்னர் எங்களுடைய ஊர் கூத்துக் குழுவை இரண்டாக உடைத்த ஆண்டைகள் சொந்தச் சகோதரர்களை மோதவிட்டு கூத்துக்காக ஒருவரை ஒருவர் கொலை செய்யும் நிலையை உருவாக்கிவிட்டார்கள்.

எனது அப்புவின் தந்தை கந்தன் அவருக்கு எதிரான சின்னான் குழுவிலிருந்த அவரது சொந்தத் தம்பியான வேலனால் கொல்லப்பட்டார். அதற்காக அவரது தம்பி வேலனுக்கு 1941 ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்தக் கொலை 1939 ம் ஆண்டு வல்லிபுரக் கோவில் சப்பறத் திருவிழாவில் போடப்பட்ட பவளக்கொடி கூத்துக்கும் சத்தியவான் சாவித்திரி கூத்துக்கும் இடையில் ஏற்பட்ட போட்டியால் நடந்ததாக அப்பு தெரித்தார்.

இதை விட 1924 ம் ஆண்டு நடந்த கல்வீட்டு போராட்டமும் ,பெண்களுக்கான மேல் சட்டைப் போராட்டமும் அப்பு எனக்கு சொன்ன வரலாற்றுத் தகவல்களில் மிக முக்கியமானவையாகும்.

1924 ம் ஆண்டு வரை எங்களுரில் நாங்கள் கல்வீடு கட்டி வாழ்வதற்கும் வீட்டுக் கூரைக்கு ஓடு போடுவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. நாங்கள் கொட்டில் வீடுகளையும் குடில்களையும் மட்டுந்தான் அமைத்து வாழவேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தோம். சிமெந்தும் ஓடும் எங்கள் பகுதிகளுக்கு கொண்டு செல்லமுடியாது தடுக்கப்பட்டிருந்து. வலுவான குடியிருப்புக்களை அமைப்பதன் மூலம் நாங்கள் குடியிருக்கும் நிலங்களுக்கு உரிமை கொண்டாடிவிடக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணம் திருகோனமலை போன்ற பெரிய நகரங்களுக்குச் சென்று தொழில் செய்து வந்த எனது அப்பு கணபதி அவரது தம்பி முருகன் எனது அப்பப்பாவான வினாசி, எனது பெரியப்பாவின் மாமனாரான இளையான் ஆகியோர் இதை எதிர்த்து கல்வீடு கட்டியே தீருவது என்ற முடிவெடுத்திருந்தனர்.
இது தொடர்பாக அப்போது யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்த எமது சமூகத்தை சேர்ந்த கல்விமான்களான ஏ.பி. இராஜேந்திரா, எஸ் ஆர். ஜேக்கப், ஆகியொரது ஆலோசனையையும் இவர்கள் பெற்றிருந்தார்கள். அல்வாய் வதிரி துன்னாலை கரவெட்டி பருத்தித்துறை ஆகிய பகுதிகளிலுள்ள எங்களது சமூகத்தை சேர்ந்த துணிச்சலான இளைஞர்களது ஆதரவையும் இவர்களுக்கு கிடைத்தது.

1924 ம் ஆண்டு ஜனவரி மாதம் இவர்கள் பருத்தித்துறை நகரத்திலிருந்து சீமெந்தையும் ஒடுகளையும் வாங்கி இரவோடு இரவாக மாட்டு வண்டிகளில் இரகசியமாக ஊருக்குள் கொண்டு வந்து சேர்த்துவிட்டர்கள்.

முதலாவது கல்வீடு கட்டுவதற்காக 1924 ம் ஆண்டு தைப்பொங்கல் தினத்தன்று எனது பெரியப்பாவின் மாமனார் இளையானின் காணிக்குள் அத்திவாரம் வெட்டப்பட்டது.

சீமெந்தை குழைத்து கல்வீடு கட்டுவதில் அனுபவம் பெற்ற எமது சமூகத்தைச் சேர்ந்த 2 மேசன்மார் யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இந்த விடயங்கள் எல்லாம் எங்களுரில் இருந்த கருங்காலிகள் சிலரின் கைங்கரியத்தால் ஆண்டைகளின் காதுகளுக்கு எட்டிவிட்டது.

ஆண்டாண்டு காலமாக மேன்மைகொள் சைவ நீதியின் பெயரால் காப்பாற்றப்பட்டு வந்த சாதிய நீதிக்கு பங்கம் வர ஆண்டைகள் விட்டுவார்களா என்ன?

குண்டர் படையை ஏவி விட்டு சீமெந்து பீப்பாக்களையும் (அந்தக்காலத்தில் சீமெந்து பீப்பாவிலே வந்தது) ஒடுகளையும் அபகரித்துச் செல்லவும் எம்மவர்களின் குடிசைகளுக்கு தீவைக்கவும் முயன்றனர். இதை முன்கூட்டியே எதிர்பார்த்து காத்திருந்த நம்பவர்கள் வரலாற்றில் முதல்தடவையாக ஆண்டைகளின் அடியாட்களுக்கு பதிலடி கொடுத்தனர்.

காலமெல்லாம் கூழைக் கும்பிடு போட்டு குனிந்த குறுகி வாழ்ந்த கூட்டம் முதல் தடவையாக கத்தியோடு புத்தியையும் தீட்டியது. ஆண்டைகளின் அடியாட்கள் கூட்டம் கத்தி வெட்டுக்கும் வாள்வெட்டுக்கும் இலக்காகி சிதறி ஓடியது.

திகைத்துப் போன ஆண்டைகள் எப்போதும் தங்களுக்கு விசவாசமாக தங்களது பிரதிநிதிகளாக இருந்தவந்த காவல்துறையினரை எம்மவர்கள் மீது ஏவிவிட்டனர்.

கல்வீடு கட்ட திட்டமிட்ட எனது அப்பு கணபதி அவரது தம்பி முருகன் எனது அப்பப்பாவான வினாசி, எனது பெரியப்பாவின் மாமனாரான இளையான் ஆகியோர் நள்ளிரவு வீடுபுகுந்து இழுத்துச் செல்லப்பட்டனர்.

பொழுது புலர்வதற்குள் இந்தச் செய்தி அயல் ஊர்களில் எல்லாம் பரவி விட்டது.மறு நாள் காலையில் எங்களது ஆண்டைகள் மந்திகைச்சந்தி புட்டளைச்சந்தி முறாவில் சந்தி வல்லிபுரக் கோவில் என்று பல்வேறு இடங்களில் வைத்து அடி உதைக்கும் கத்தி வெட்டுக்கும் இலக்காகினர். அல்வாய் கரவெட்டி துன்னாலை தம்பசிட்டி தும்பளை பருத்தித்துறை என்று அந்தப் பிரதேசம் முழுவதும் சாதிக் கலவரம் மூண்டது.

பிரித்தானிய காலணிய அரசு தகுதி வாய்ந்த ஒரு அதிகாரியை அனுப்பி இந்தச் சம்பவத்தின் பின்னணி பற்றி விசாரணை நடத்தியது. இறுதியில் அரச பிரதிகளுக்கும் ஆண்டைகளுக்கும் இடையில் ஒரு பேச்சுவார்த்தை நடந்தது. அந்தப் பேச்சுவார்த்தையில் 2 அறைகளும் ஒரு விறாந்தையும் கொண்ட வீட்டை நாங்கள் கட்டலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

வேறு வழியின்றி அதை ஒப்புக் கொண்ட ஆண்டைகள் அந்த வீடு 10அடி உயரம் 15 அடி அகலம் 20 அடி நீளத்துக்கு மேற்படாமல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதித்தாகவும் அப்பு தெரிவித்தார். நாங்கள் பொருளாதார ரீதியில் முன்னேறியவர்கள் -செல்வச் செழிப்புள்ளவர்கள் என்பதை வெளியுலகுக்கு காட்டிவிடக் கூடாது என்பதற்காகவே இந்த அளவு முறை கொண்டவரப்பட்டுதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தப் பேச்சு வார்த்தையை அடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டாலும் பின்பு நடந்த வழக்கில் அவர்களுக்கு மூன்று மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

இந்தப் போராட்டமும் அதனால் கிடைத்த வெற்றியும் ‘குட்டக் குட்டக் தொடர்ந்து குனிந்திருப்பது எங்கள் தலைவிதி அல்ல என்பதையும், நாங்கள் சுதந்திரமாக வாழவேண்டுமானால் போராடியே தீரவேண்டும் என்ற உண்மையையும்;’ எங்களது மக்களுக்கு அனுபவ ரீதியாக உணர்த்தியது.

இந்தச் சம்பவம் நடந்த 1924 ம் ஆண்டு வரையில் எங்கள் பிரதேசத்தில் உள்ள எமது சமுகத்தைச் சேர்ந்த பெண்கள் மேல் சட்டையோ (ரவிக்கை) உள்சட்டையோ (பிரா) அணிய முடியாது. சேலையை மார்புக்கு குறுக்காகத்தான் கட்டியிருக்கவேண்டும். இதை குறுக்குக் கட்டு என்று சொல்வார்கள்.

1924 ம் ஆண்டு எப்ரல் மாதம் சிறைத் தண்டனை முடித்துவிட்டு வெளியே வந்த எங்களுர் கல்வீட்டு போராட்டக் குழு தங்களது அடுத்த போராட்டமாக மேல்சட்டை அணியும் உரிமைக்கான போராட்டத்தை ஆரம்பித்தது.

அந்த ஆண்டு சித்திரைப் புதுவருட தினத்தன்று எங்களுர் பெண்கள் மேல் சட்டை அணிந்து கொண்டு வல்லிபுரக் கோவிலுக்குச் செல்வது என்று முடிவு செய்யப்பட்டது.

12 கன்னிப்பெண்களும் 4 திருமணமான பெண்களும் 10 சிறுமிகளும் மேல் சட்டை அணிய முன் வந்தனர்.

யாழ்ப்பாண நகரத்திலிருந்து ஒரு இஸ்லாமிய தையல்காரர் அழைத்துவரப்பட்டு அளவுகள் எடுக்கப்பட்டு ஆளுக்கு இரண்டு சோடி சட்டைகள் தைக்கப்பட்டன.

இந்த விடயமும் வழக்கம் போல் ஆண்டைகளுக்கு முன் கூட்டியே தெரிந்துவிட்டது.

ஏற்கனவே நம்மவர்களிடம் ஒரு தடவை அனுபவப்பட்ட ஆண்டைகள் இம்முறை புத்திசாலித் தனமாகக் காய் நகர்த்தினார்கள்.

சித்திரைப் புத்தாண்டு தினத்தன்று எங்களுர் பெண்கள் குளித்துவிட்டு வாழ்க்கiயில் முதல் தடவையாக மேல்சட்டை (ரவிக்கை) போட்டு சேலை கட்டிக் கொண்டு நாணிக் கோணி வெளியேவர போராட்டக் குழுவினர் பறையடித்தம் வெடி கொழுத்தியும் அதை ஒரு விழாவாகவே கொண்டாடினார்கள்.

ஆண்டைகளின் அடியாட்கள் வந்து தாக்குவாhர்கள் என்று எதிர் பார்த்து பதிலடி கொடுப்பதற்காக துடிப்பான இளைஞர் கூட்டமொன்ற கத்தி வாள் கொட்டன்களுடன் ஏற்கனவே தயாரக நின்றது.

பறை ஓசையும் வெடியோசையும் காதைப் பிளக்க ஆயுதம் தாங்கிய இந்த இளைஞர்கள் பாதுகாப்பு வழங்க ஊரே திரண்டு , மேற்சட்டை அணிந்து செல்லும்; போராட்டம் ஆரம்பமாகியது.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட புரட்சிப் பெண்கள் வல்லிபுரக்கோவிலுக்குச் சென்று வெளியில் நின்று சாமி கும்பிட்டு வெளிவீதியை சுற்றி வரும் வரை ஆண்டைகள் எந்தப் பிரச்சனையும் கொடுக்க வில்லை. கோவிலுக்குள் நின்று அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களது அடியாட்கள் தென்படவேயில்லை.

அவர்களது வஞ்சகத் தனமான வியூகத்தை புரிந்து கொள்ளாத நம்மவர்கள் கல்வீட்டு போராட்டத்தில் கிடைத்த பாடத்தால் அவர்கள் பயந்து விட்டதாக நினைத்து கவனக்குறைவாக இருந்துவிட்டார்கள்.

ஆண்டைகள் எதிர்ப்புக் காட்டாததால் பாதுகாப்பு தேவையில்லை என்று நினைத்து ஆளக்கொரு பக்கமாக கலைந்து சென்றுவிட்டார்கள்.
அந்த நேரம்பார்த்து திடீரென்று எமது பெண்களை முற்றுகையிட்ட வெறிகொண்ட கூட்டமொன்று எமது பெண்களின் மேல் சட்டைகளை கிழித்தெறிந்தும் தலைமையிர்களை வெட்டியும் வெளியாட்டம் ஆடியது. சின்னாச்சி என்ற 17 வயதுப் பெண்ணின் மேல் சட்டையை கிழித்து சேலையையும் உரிந்து நிர்வாணமாக்கியது.அவமானத்தால் துடித்துப் போன அந்தப் பெண் ஒரே ஓட்டமாக ஓடிப்போய் கோவிலுக்கு சற்றுத் தொலைவில் இருந்த தாமரைக் குளத்தில் விழுந்து தற்கொலை செய்துகொண்டு விட்டாள்.

இந்த வெறிகொண்ட கூட்டத்திடம் தனியாக அகப்பட்ட எனது அப்பு இந்த கயவர்கள் கையால் வெட்டும் அடியும் வாங்கிச் சாவதை விட தன்னைத் தானே வெட்டிக்கொண்டு சாவதே மேல் என்று நினைத்து தன்னிடமிருந்த பாளைக் கத்தியால் தன்னுடைய குதிக்கால் நரம்பை தானே அறுத்தக் கொண்டு மயங்கி விழுந்துவிட்டார்.

சனி, 20 ஜனவரி, 2007

நினைவழியா வடுக்கள்-6

நினைவழியா வடுக்கள்-6

அன்று வீட்டுக்கு சென்றதும் முதல் வேலையாக எனது குடும்ப வரலாற்றை அறிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டேன்.

அப்போது அதாவது 1962ம் ஆண்டு எங்களுடைய வீட்டில் ,அப்பா அம்மா ,ஆச்சி (அம்மம்மா) அப்பு (அம்மப்பா) ஆகியோர் மட்டுமே இருந்தோம்.
இதில் அப்பாவுக்கு என்னுடன் ஆறுதலாக இருந்து கதைப்பதற்கு உண்மையில் நேரம் இருப்பதில்லை. சீவல் தொழில் செய்து வந்த அவர் காலையில் 7 மணிக்கு தொழிலை ஆரம்பித்தால் இரவு 8 மணிக்குத்தான் அதை முடிப்பார்.இடையில் மதியம் ஒரு இரண்டு மணி நேரம் சாப்பாட்டுக்கென ஓய்வெடுப்பார்.வாரத்தில் ஏழு நாட்களும் தொழில் செய்யும் அவர் வீட்டுக்கு வரும்போது மிகவும் களைத்துப்போய் வருவார். அதனால் நான் அவரை தொந்தரவு செய்ய விரும்பவதில்லை.
அம்மாவோ அப்பா இறக்கும் கருப்பணியை (பதனீரை) அவர் தொழில் செய்யும் இடத்துக்குச் சென்று வாங்கி வந்து காச்சி பனங்கட்டி செய்யும் வேலையில் ஈடுபடுவா. ஆச்ச்pயும் அவவுக்கு உதவி புரிவா. அவர்கள் இருவரும் எப்போதும் ஏதாவது செய்து கொண்டே இருப்பார்கள். எனவே அவர்களிடமும் ஆற அமர இருந்து என்னால் கதைக்க முடிவதில்லை.

அப்பு மட்டுந்தான் நான் தெரிந்துகொள்ள விரும்பும் விடயத்தை செல்வதற்குரிய ஆளாக இருந்தார். அப்போது அவருக்கு 68 வயது. 1894 ம் ஆண்டு பிறந்த அவர் ‘போல்’ என்று என்ற அழைக்கப்படும் வெள்ளைக்கார பாதிரியார் ஒருவரின் உதவியால் அந்தக் காலத்திலேயே 6 ம் வகுப்புவரை படித்திருக்கிறார். எங்களுடைய உறவினர்களில் அவர் ஒருவர் அதிகமாகப் படித்திருந்தார்.

சிறந்த பாடகரான அவர்; நல்ல நாடக நடிகரும் கூட. ஸ்ரீவள்ளி பவளக்கொடி சத்தியவான் சாவித்திரி முதலாக பல நாடகங்களில் நாரதர் வேடத்தில் தோன்றி நடித்திருக்கிறார்.

தனக்குத் தெரிந்த தன்னோடு சம்பந்தப்பட்ட பல சம்பவங்களை அவர் ஏற்கனவே எனக்குச் சொல்லி இருக்கிறார்.
அதனால் அன்று மாலை எங்கள் வீட்டு முற்றத்தில் இருந்த வேப்ப மரத்தின் கீழிருந்து சுங்கான் குடித்துக்கொண்டிருந்த அவரிடம் சென்று கந்த முருகேசனார்; கூறியதை சொன்னென்.

உடனே சுங்கானை அணைத்து விட்டு என்னைத் தூக்கி தனது மடியில் இருத்திக் கொண்டு எங்களது குடும்ப வரலாற்றை அவர் ஒரு சுவாரசியமான கதையாக சொல்ல ஆரம்பித்தார்.

1920 ம் ஆண்டு வரையில் எங்களுக்கு சொந்த நிலம் என்பது இருக்கவில்லை. நாங்கள் குடியிருந்த நிலமும் எங்களுக்கென்று இருந்த வயல் நிலங்களும் வல்லிபுரக் கோவிலுக்கு சொந்தமானதாக இருந்தது. அதுவரை நிலம் வாங்கும் உரிமை எங்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது.

அந்தக்காலத்தில் வல்லிபுரக்குறிச்சி மற்றும் கொத்தியவத்தை என்று தனித்தனியாக அழைக்கப்பட்டு தற்போது ‘சிங்கைநகர்’ என்ற ஒரே பெயரால் அழைக்கப்படும் எங்கள் ஊரில் 1900 ம் ஆண்டு எடுத்த கணக்கின்படி 38 குடும்பங்கள் மட்டும் இருந்தன.

இதில் எங்களது குடும்பம் உட்பட 24 குடும்பங்கள் புலோலியைச் சேர்ந்த வெள்ளாhளர்களினதும், ஏனைய 14 குடும்பங்கள் துன்னாலைச் சேர்ந்த வெள்ளார்களினதும் குடிமைகளாக இருந்தன.

கந்தன், கணபதி, முருகன், வேலன், வினாசி, சின்னப்பொடியன் சின்னான் ஆகிய பெயர்களைத் தான் நாங்கள் வைக்க முடியும். பெண்கள் என்றால் வள்ளி, பாறி, சின்னாச்சி, சின்னம்மா ஆகிய பெயர்களைத் தான் வைக்கலாம். 1957 ம் ஆண்டு சிறிலங்கா நாடளுமன்றத்தில் சமூகக் குறைபாடுகள் சட்டம் கொண்டுவரப்படும் வரை இந்த முறைதான் இருந்தது.

என்னுடைய அப்பாவின் பெயர் சின்னப்பொடியன் என்றால் அவருடைய தாத்தாவின் பெயர் சின்னப்பெடியன் தான். என்னுடைய அப்புவின் பெயர் கணபதி. அவருடைய தாத்தாவின் பெயரும் அந்தத் தாத்தாவினுடைய தாத்தாவின் பெரும் கணபதி என்றே இருந்தது. குடும்பப் பெயரை தொடர்ந்து வைப்பதென்பது எல்லோருக்கும் பொதுவானதாக இருந்திருந்தால்;அது வரவேற்கத் தக்கதாக இருந்திருக்கும்.

ஆனால் யாழ்ப்பாண சமூகத்தில் சாதி அடிப்படையில் ஒடுக்கப்பட்ட எமக்கு பெயர் வைப்பது கூட அதிகார வர்க்கத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. தன்னுடைய பிள்ளைக்கு பெயர் வைக்கும் உரிமை கூட எங்களது சமூகத்துக்கு மறுக்கப்பட்டிருந்தது. எங்களுக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்பதை ஆரம்பத்தில் விதானை என்ற கிராமத் தலைவரும் பின்வந்த காலத்தில் றிஜிஸ்தர் எனப்படும் பிறப்பு இறப்பு பதிவாளர்களும் தான் தீர்மானித்தனர். இந்தப் பெயர்கள் அடிமை-குடிமை முறையின் குறியீடுகளாக இருந்தன.

1967-68 ம் ஆண்டுக் காலப்பகுதியில் இந்த சாதியத்துக்கு எதிரான போராட்டம் உச்சமடைந்திருந்த நேரத்தில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலுக்குள் செல்வதற்கான ஆலயப் பிரவேசப் போராட்டம் நடந்தது.இந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு யாழ்ப்பாண அதிகார வர்க்கம் தங்களது குண்டர் படைக்கு துணையாக சிறீலங்கா காவல்துறையையும் சட்டத்துறையையும் பயன்படுத்திக் கொண்டது.

இந்த காலகட்டத்திலே ‘கந்தன் கருணை என்ற புகழ் பெற்ற சமூக சீர் திருத்த நாடகம் யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல் வேறு இடங்களில் மேடையேற்றப்பட்டது.

இந்த நாடகத்திலே ஒரு காட்சி…..

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலுக்குள் சாதி அடிப்படையில் ஒடுக்கப்பட்டவர்கள் செல்வதை தடுப்பதற்காக கோவிலைச் சுற்றி சிறீலங்கா காவல்துறையினரின் காவலரண்கள் அமைக்கப்பட்டிருந்தன.

தேவலோகத்திலிருந்து முருகன் அங்கே என்ன நடக்கிறது என்பதை பார்க்க வருகிறார். சிறீலங்கா அரச காவலர்கள் அவரை தடுத்த நிறுத்தி ‘உனது பெயர் என்ன’ என்று கேட்கிறார்கள்.

அவர் ‘என் பெயர் கந்தன்’ என்கிறார்.“ஓ கந்தன். அப்படியென்றால் நீ சாதி குறைந்தவன். அதனால் நீ கோவிலுக்குள் செல்லமுடியாது” என்று கூறி சிறீலங்கா காவலர்கள் அவரை தடுக்கின்றனர்.

“என்ன அநியாயம் இது. நான் குடியிருக்கும் என்னுடைய வீட்டுக்குள் நான் செல்வதற்கு தடையா?” என்று முருகன் அவர்களுடன் வாக்குவாதப்படுகிறார்.

“அவர்களோ முருகன் வேஷம் போட்டுக் கொண்டு வந்து எங்களை ஏமாற்றுகிறாயா?” என்று அவரை அடித்து விரட்டுகின்றார்கள்…..

அந்தக் காலத்தில் பெயர் என்பது சாதிய ஒடுக்குமுறையின் குறியீடாக இருந்தது என்பதை இந்த நாடகக் காட்சி சித்தரித்தது.

என்னுடைய அப்பு அறியத் தக்கதாக எங்களுடைய ஊரில் 30 பேருக்கு கணபதி என்று பெயர் வைக்கப்பட்டிருந்ததது. இந்தக் கணபதிகள் ஒருவரை ஒருவர் வேறுபடுத்துவதற்கு பட்டப்பெயர்கள் சூட்டப்பட்டன.எனது அப்புவுக்கு தலை கொஞ்சம் பெரிது என்ற படியால் அவர் மண்டைக் கணபதி என்று அழைக்கப்பட்டார்.இன்னொருவர் பாணை விரும்பிச் சாப்பிட்டதால் பாண்கட்டைக் கணபதி என்று அழைக்கப்பட்டார்.

1914 ம் ஆண்டு முதலாவது உலக மகா யுத்தம் ஆரம்பமாகிய போது பருத்தித்துறை முறைமுகத்தின் பாதுகாப்புக்கென பிரித்தானியப் படையணி ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்தப் படையணியின் அடிமட்ட வேலைகளை செய்வதற்கு நிறைய ஆட்கள் தேவைப்பட்டார்கள். அதிகார வாக்கத்தை சேர்ந்தவர்கள் அத்தகைய வேலைகளுக்கு செல்ல மறுத்தவிட்ட நிலையில் அவர்களின் குடிமைகளாக இருந்த எமது முன்னோர்கள் கட்டாயப் படுத்தி அழைத்துச் செல்லப்பட்டனர்.
எங்களது ஊரில் இருந்து மட்டும் எனது அப்பு அவரது தந்தை கந்தன் எனது அப்பாவின் அப்பா வினாசி அவரது தந்தை சின்னப்பொடியன் உட்பட 45 பேர் இவ்வாறு பிரித்தானிய படையினருக்கு சேவகம் செய்ய கொண்டு செல்லப்பட்டனர்.

1919 ம் ஆண்டு ஆரம்பம் வரை ஏறக்குறைய ஐந்தரை வருடகாலம் வேலை செய்ததற்காக ஒரு வருடத்துக்கு 12 ரூபா வீதம் அவர்களுக்கு 66 ரூபா சம்பளம் கொடுக்கப்பட்டது.அந்த காலகட்டத்தில் எங்களுடைய முன்னோர்களுக்கு இது ஒரு பெரிய தொகையாக இருந்தது.; அ’துவரை தான் அவ்வளவு பெரிய தொகையை பார்த்ததே இல்லை’ என்று அப்பு என்னிடம் கூறினார்.

அந்தக்காலகட்டத்தில் பருத்தித்துறை பிரதேசத்திற்கான கிறீஸ்தவ மத பங்குத் தந்தையாக இருந்த போல் என்பவர் (அவருடைய முழுப்பெயர் தெரியவில்லை) எங்களுடைய கிராமத்துக்கு அடிக்கடி சென்று நிறைய உதவிகளை செய்திருக்கிறார். எனது அப்பு உட்பட எங்கள் கிராமத்தைச் சேர்ந்த 6 பேரை அவர்களின் ஆண்டைகளாக இருந்த வெள்ளாளர்களின் எதிர்ப்பை பொருட்படுத்தாது பருத்தித்துறை நகரத்தில் தான் நடத்திவந்த பள்ளிக் கூடத்தில் சேர்த்து படிப்பித்திருக்கிறார்.

முதலாம் உலக மகாயுத்தக் காலகட்டத்தில் எம்மவர்கள் வேலை செய்யும் இடத்துக்குச் சென்று அவர் மதப் பிரச்சாரம் செய்து வந்திருக்கிறார்கள். இதனால் அங்கு வேலை செய்த அடித்தட்டு மக்களுக்கும் அவருக்கும் இடையிலான நெருக்கம் அதிகமாகியது. அவருடைய நோக்கம் எம்மவர்களை மதம் மாற்றுவதாக இருந்தாலும் அந்த முயற்சியில் அவர் பல நல்ல செயல்களைச் செய்திருக்கின்றார்.

குடிமை முறையின் கொடூரங்கள் அதனால் எங்களுடைய மக்கள் அனுபவிக்கும் அவலங்கள் மற்றும் கல்வியறிவின்மை என்பவற்றைப் பற்றியெல்லாம் அவர் பிரித்தானிய அரசுக்கு எழுதிய கடிதத்தின் பயனாக 1919ம் ஆண்டு சட்ட ரீதியாக குடிமை முறை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

கட்டாயக் கல்வியும் நிலம் வாங்கும் உரிமையும் எங்களுக்கு வழங்கப்பட்டன. நாங்கள் பரம்பரை பரம்பரையாக குடியிருந்த நிலத்தை எங்களுக்கு வழங்க ஆண்டைகள் மறுத்த போது போல் பாதிரியார் அதை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்து அந்த நிலங்கள் எங்களுக்கு கிடைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்.

போல் பாதியார், விபுலானந்த அடிகள் ஹன்றி பேரின்பநாயகம் முதலால மனிதாபிமானம் மிக்க பல மனிதர்கள் விடுத்த வேண்டுகோள்களின் பேரில் அன்றைய இலங்கையின் பிரித்தானிய காலணித்துவ நாடாளுமன்றத்தில் அனைத்து மக்களுக்குமான வாக்குரிமை,குடிமை முறை ஒழிப்பு சமத்துவமான கல்வி என்ற பல நல்ல திட்டங்கள் முன் வைக்கப்பட்ட போது யாழ்ப்பாண அதிகார வர்க்கத்தின் பிரதிநிதிகளாக அந்த நாடாளுமன்றத்தில் வீற்றிருந்த இராமநாதன் கும்பல் அவற்றை எதிர்த்தது கேவலமான வரலாறாகும்.

முதலாம் உலக மகா யுத்தம் முடிந்த பின்பு இலங்கை அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள் முற்போக்கான சித்தனை கொண்டவர்களால் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண வாலிபர் சங்கத்தின் தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரங்கள், மகாத்மா காந்தியின் குடாநாட்டு வருகை(1926) என்பன எங்களது சமூகத்திற்கு எழுச்சியை கொடுத்திருந்தன.

எங்களுடைய மக்களுக்கு நிலத்தின் மீதான உடமை(இது என்னடைய நிலம்) சட்டபூர்வமாக வழங்கப்படதென்பது கடுமையான உழைப்பாளிகளான அவர்களை முன்னேற்றப் பாதையை நோக்கி உந்தித் தள்ளியது. குடிமை முறையின் ஒழிப்பு பலரை யாழ்ப்பாணம், திருகோணமலை முதலான நகரங்களுக்குச் சென்று தொழில் புரியத் தூண்டியது.

என்னுடைய அப்பு 1921ம் ஆண்டு யாழ்ப்பாண நகரத்துக்கச் சென்று கிறிஸ்தவ மிசனறிமாரால் நடத்தப்பட்ட வெதுப்பகம் (பேக்கரி) ஒன்றில் 5 வருடங்கள் வேலை செய்திருக்கிறார். இந்தக் காலகட்டத்தில் அவர் சைக்கில் ஓடக் கற்றுக்கொண்டு 10 ரூபாவுக்கு ஒரு புதுச் சைக்கிலை வாங்கி ஒடிக்கொண்டு ஊருக்கு வந்தபோது எங்களுர் ஆண்டைகள் அவரை கொலை வெறியுடன் பாத்திருக்கிறார்கள்.

எங்களுடைய ஊரில் மட்டுமல்ல எங்களுடைய ஆண்டைகளுடைய ஊரிலும் முதல் முதலாக சொந்தச் சைக்கில் வைத்திருந்த நபராக அவர் இருந்தார். அவரது புது சைக்கில், அதை அவர் வாங்கிய ஒருவார காலத்தக்குள் எங்களுர் அதிகார வர்க்கக் குண்டர்களால் கோடாலியால் கொத்தி உடைக்கப்பட்டுவிட்டது. அப்புவினுடைய காலையும் அவர்கள் அடித்து முறித்துவிட்டனர்.

1920க்குப் பின்னர் பெருளாதார ரீதியாக எங்களுடைய சமூகம் அடைந்து வந்த முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தாது விட்டால் தங்களது சமூக மேலாண்மை பாதிக்கப்பட்டுவிடும் என்ற அஞ்சிய குடாநாட்டு அதிகார வர்க்கம் தனது அதிகார பலத்தை மட்டுமல்லாது மூளை பலத்தையும் பாவித்தது.

ஆறுமுகநாவலர் பரம்பரையினால் நிறுவப்பட்ட சைவப்பிரகாச வித்தியாசாலைகளில் எமக்கு கல்வி கற்க அனுமதி மறுக்கப்பட்டுவந்த நிலையிலும் அரசாங்கப் பாடசாலைகளில் அதிகாரவர்க்க ஆசிரியர்களால் நாங்கள் கல்வியில் புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையிலும் 1914 ம் ஆண்டு அல்வாய் பகுதியிலுள்ள வதிரிக்கிராமத்தில் வேலிர் சோதிடர், கா.சூரன் ஆசாரி ஆகிய இருவரும் இணைந்து எங்களுக்கென்று ஒருபாடசாலையை உருவாக்கியிருந்தனர்.

அந்தப்பாடசாலையை பதிவு செய்யக் கூடாது என்று குடாநாட்டு அதிகார வாக்கம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்த நெருக்குதல்களை புறந்தள்ளிய பிரித்தானிய ஆட்சியாளர்கள் 1920 ம் ஆண்டு வதிரி தேவரையாளி இந்துக் கல்லூரி என்ற சட்டபூர்வமான அங்கீகாரத்தை வழங்கியிருந்தனர்.

இந்தப் பாடசாலை உருவாகுவதை எதிர்த்த எவரும் ‘ஒரு சமூகத்தினருக்கு என்ற அடிப்படையில் ஒரு பாடசாலை அமைவது தவறு’ என்ற கூறி எதிர்க்கவில்லை. மாறாக ‘சாதி அடிப்படையில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர். தங்களுக்கென்று பாடசாலைகளை உருவாக்குவது தேசவழமைக்கு எதிரானது’ என்று கூறியே எதிர்த்தார்கள்.

சட்ட ரீதியாக தாங்கள் மேற்கொண்ட முயற்சிகளில் முழுமையான வெற்றிகளை பெற முடியாதிருந்த அவர்கள் எங்களை வைத்தே எங்களை அழிக்கும் தந்திரோபாயத்தை கைக் கொள்ள ஆரம்பித்தனர்.

புதன், 17 ஜனவரி, 2007

நினைவழியா வடுக்கள்- 5

நினைவழியா வடுக்கள்- 5

நீ யார்? என்ற இந்தக் கேள்வி ஒரு மிகச் சிறிய கேள்வியாக இருந்த போதிலும் அதற்குரிய விடையை கண்டுபிடிப்பதென்பது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை.

என்னுடைய அம்மா ,அப்பா, அப்பு (தாத்தா) ஆச்சி (பாட்டி) உற்றார் உறவினர் யாருக்குமே இந்தக் கேள்விக்கான விடை தெரியவில்லை. அன்று இரவு வரை எனக்குத் தெரிந்தவர்கள் நண்பர்கள் என்று எல்லோரிடமும் இந்தக் கேள்வியை கேட்டுப் பார்த்துவிட்டேன். யாருக்கும் அதற்கு சரியான பதில் சொல்லத் தெரியவில்லை.

நீ யார்? என்றால், அதற்குரிய பதில் ‘நீ சிவநேசன் சின்னப்பொடியனின் மகன்’ என்றே எல்லோரும் கூறினார்கள். எனக்கு என்னவோ அந்தப் பதில் சரியாக இருக்கும் என்று தோன்றவில்லை.

இரவு பாயில் படுத்துக் கொண்டு உறக்கம் வராமல் இதைப்பற்றியே நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன்.

உன்னுடைய பெயர் சிவநேசமூர்த்தி என்பது உனக்குத் தெரியும் ஆனால் நீ யாரென்றது உனக்குத் தெரியுமோ?’ என்று கந்த முருகேசனார் கேட்ட அந்தக் கேள்வியை திரும்பத் திரும்ப எனக்கு நானே கேட்டுப்பார்த்தேன்.

நான் சின்னப்பொடியனினதும் இலட்சுமியினதும் ஒரே மகன். எனக்கு எட்டு வயது ஆகிறது.நான் ஒரு மாணவன்.’ என்பதற்கு அப்பால் வேறெதையும் என்னால் கண்பிடிக்க முடியவில்லை.

மறுநான் காலையில் வழக்கம் போல அம்மாவுடன் வல்லிபுரக் கோவிலுக்குப் போய் மார்கழித் தோச்சலை முடித்துவிட்டு வந்து கந்த முருகேசனாருடைய பள்ளிக் கூடத்தக்கு புறப்பட்டேன். அன்று அப்பா தனது தொழிலுக்கு சென்று விட்டதால் அம்மா மட்டும் என்னோடு வந்தா.

நாங்கள் எழுவாக்கை வயல் வெளியைக் கடந்து தற்போது கந்த முருசேனார் வீதி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் அந்த வீதியால் சென்ற போது எங்களை கண்டவர்களும் கடந்து சென்றவர்களும் ஒருமாதிரியாக முறாய்த்துப் பார்த்துக் கொண்டு சென்றார்கள்.

நாங்கள் சென்ற அந்தப் பகுதி முழுக்க முழுக்க மேட்டுக் குடியினர் குடியிருக்கும் பகுதியாகும். பொதுவாக அந்தக்காலத்தில் (1955-65) நாங்கள் மேட்டுக் குடியினருடடைய குடியிருப்புக்களுடாக செல்லும் போது ஆண்கள் தோளில் துண்டோ சேட்டோ போடாமலும், பெண்கள் ஆடம்பரமாக உடையுடுத்தாமலும் செல்ல வேண்டும். மற்றப்படி சாதரணமாக உடை உடுத்திச் சென்றால் எங்களை யாரும் கணக்கில் எடுப்பதில்லை. அனால் அன்று எங்களை அவர்கள் பார்த்த பார்வையில் வித்தியாசம் தெரிந்தது. நான் புது உடுப்பும் புது செருப்பும் போட்டுக் கொண்டு போகின்றபடியினால் தான் அப்படிப் பார்க்கிறார்களோ? என்ற சந்தேகம் எனக்கு எற்பட்டது.

நாங்கள் பாடசாலையை நெருங்கிய போது வழக்கமாக காற்றில் மிதந்துவரும் பாடச் சத்தம் கேட்கவில்லை.அதற்குப் பதிலாக அந்தப் பாடசாலைச் சோலையிலிருந்த மாமரத்திலிருந்து இரண்டு குயில்கள் ஏட்டிக்குப் போட்டியாக கூவிக்கொண்டிருந்த சத்தம் மட்டுமே கேட்டது.

பாடசாலை வளவுக்குள் நாங்கள் நுழைந்து போது மாணவர்கள் யாருமின்றி அது வெறிச்சோடிப்போய் இருந்தது. ‘ஏன் என்ன நடந்தது பள்ளிக் கூடம் இல்லையா?’என்று நாங்கள் யோசித்தவாறு கந்த முருகேசனார் அமர்ந்தருக்கும் மாலை நோக்கிச் சென்றோம்.

தான் வழக்கமாக அமரும் இடத்திலிருந்து ஏட்டுச் சுவடி ஒன்றை படித்துக் கொண்டிருந்தவர். என்னைக் கட்டதும் ‘வா..வா..வா.. சின்னப்பொடியனின் சின்னப்பொடியா!’ என்று மகிழ்ச்சியோடு வரவேற்றார்.

“ஏன் நயினார் இன்டைக்கு பள்ளிக் கூடம் இல்லையோ? பொடியள் ஒண்டையும் காணேயில்லை?’ என்று அம்மா தயக்கத்துடன் கேட்க அவருக்கு அடக்க முடியாத கோபம் வந்து விட்டது..

உங்களுக்கு எத்தினை தரம் சொல்லுறது நயினார் எண்டு கூப்பிட்டு கூழைப் கும்பிடு போடாதையுங்கோ எண்டு.” என்று கத்தினார். அந்தக்காலத்தில் நாங்கள் மேட்டக்குடி ஆண்களை; ‘நயினார்’ என்ற சொல்லியும், பெண்களை ‘நச்சியார் என்ற சொல்லியும் தான் அழைக்க வேண்டும்.

அவருடைய கத்தலில் அம்மா பயந்து போய் ஒடுங்கி நிற்க…

ஏன் இண்டைக்கு பள்ளிக் கூடம் நடக்கேல்லை எண்டு உனக்குத் தெரியுமா?. உன்ரை மகனைத் நான் மடியில் தூக்கி இருத்திப் போட்டனாம். அவனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்திட்டனாம். ஓரு நளப்பொடியனை கந்த முருகேசன் எப்பிடி மடியில இருத்தி பாடம் சொல்லிக் கொடுக்கலாம் ? என்று எங்கடை ஆக்கள் என்னைப் பார்த்து கேள்வி கேக்கினம்;. அதனாலை தங்கடை பிள்ளையளை என்னட்டை படிக்க அனுப்ப மாட்டினமாம். போராட்டம் நடத்துகினமாம் போராட்டம்’ என்று பெரிந்து தள்ளினார்.

அப்போது தான் வழியில் நாங்கள் சந்தித்த கனவான்கள் கூட்டம் எங்களை முறைத்துப் பார்த்த பார்வைக்கு எனக்கு அர்த்தம் புரிந்தது.

அம்மாவை வீட்டுக்கு திரும்பிப் போய் விட்டு மத்தியானம் வந்து என்னை கூட்டிச்செல்லும்படி கூறிய கந்த முருகேசனார், என்னை தனக்குப் பக்கத்தில் கூப்பிட்டு இருத்தி ‘நீ பயப்பிடாதை நான் உனக்கு படம் சொல்லித் தாறன். உவங்கள் ஆர் வந்தாலும் வராட்டிலும் நான் உனக்கு படிப்பிக்கிறன்’என்றார்.

அந்த வயதில் எனக்கு அவர் சொன்ன அந்தச் செல்லின் அர்த்தமும் தாக்கமும் புரியவில்லை.ஆனால் வளர்ந்து பெரியவனாகி எனக்கு விபரம் தெரிந்தபோது அதை நினைத்து ,அந்த மாமனிதனுடைய துணிவையும் தமிழ் பற்றையும் நினைத்து வியப்படைந்திருக்கிறேன். அவரிடம் கல்விகற்க சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு பெருமைப்பட்டிருக்கிறென்.

சைவமும் தமிழும் தமிழினத்தின் இரண்டு கண்கள்’ என்றும், ‘மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்’ என்றும் அந்தக்காலத்தில் பேச்சிலும் எழுத்திலும் கூறிவந்த யாழ்ப்பாணக் குடாநாட்டு அதிகார வர்க்கம், ‘சாதியம் என்பது மேன்மைகொள் சைவ நீதியின் பிரிக்க முடியாத ஒரு அம்சம்’ என்று நம்பியது.

நிலமும் கல்வியும் பட்டங்களும் பதவிகளும் சமூகத்தின் மீதான ஆளுமையும் தங்களுக்கு மட்டுமே உரித்தானவை என்றும் அவையெல்லாம் இறைவன் கொடுத்தவரம் என்றும் இந்த அதிகார வர்க்கம் கதைவிட்டுக்கொண்டிருந்த போது, கந்த முருகேசனார் தன்னுடைய தமிழ் புலமையால் அதை மறுதலித்து மதம் கொண்ட யானை தன்னுடைய அழிவை தானே தேடிக்கொள்வதைப் போல மதம் பிடித்த தமிழனும் தன்னுடைய மதவெறியால் தன்னுடைய தலையில் தானே மண் அள்ளிப் போடுவான் என்று இன்றைக்கு 50 வருடங்களுக்கு முன்னர் துணிந்து சொல்லியிருந்தார்.

அன்று கந்த முருகேசனாருடைய பாடசாலையில் என்னைத் தனியே விட்டு;விட்டுச் செல்வதற்கு அம்மா தயங்கினா.நான் அழுது அடம்பிடிப்னோ என்ற பயத்தை விட சாதி வெறியர்கள் வந்து எனக்கு ஏதும் செய்துவிடுவார்களே என்ற பயமே அவவுக்கு அதிகமாக இருந்தது.

அதை அவ கந்த முருகேசனாரிடம் கூறியபோது “நான் இருக்கிறன் இங்கே ஒரு பயலும் வரமாட்டாங்கள் நீ பயப்பிடாமல் போயிட்டு வா” என்று கூறி அனுப்பி வைத்தார்.

அம்மா சென்றதும் என்னைக் கூர்ந்து பார்த்த கந்த முருகேசனார் “ நான் நேற்று உன்னிடம் ஒரு கேள்வி கேட்டனே… என்ன கேள்வி” என்று கேட்டார்.
“நீ யார்?” என்ற கேள்வி என்று நான் சொல்ல…

“அதுக்குப் பதில் தெரியுமா?” என்று அவர் திருப்பிக் கேட்டார்.

நான் தெரியும் என்றும் சொல்லமுடியாமல் தெரியாதென்றும் சொல்ல முடியாமல் தயங்க “எங்கே அதுக்கு பதில் சொல் பார்ப்போம்”; என்றார் அவர்.

“நான் சின்னப்பொடியனினதும் இலட்சுமியினதும் ஒரே மகன். எனக்கு எட்டு வயது ஆகிறது.நான் ஒரு மாணவன்” என்று தயங்கித் தயங்கி சொன்னேன்.

தனது கண்களை மூடி தனது வெண்தாடியை ஒரு நிமிடம் தடவிய அவர் தூரத்திலே புல் மேய்ந்து கொண்டிருந்த மானை காட்டி “அது என்ன? என்ற கேட்டார்.

நான் “மான்” என்று பதில் பதில் சொல்ல மயில்களைக் காட்டி “அது என்ன?” என்றார்.

நான் “மயில்” என்று சொல்ல “அப்ப நீ என்ன ?” என்று அவர் திருப்பிக்கேட்டார்.

அதற்கு உடனே பதில் சொல்லத் தெரியாமல் நான் தடுமாற … “அது மான் இது மயில் ….நீ…. மனிதன்” என்று ஒரு வித இராகத்தோடு உரத்து அழுத்திச் சொன்ன அவர்….

“சரி மனிதன் என்றால் என்ன?” என்று அடுத்த கேள்வியை கேட்டார்.

‘மிருகங்கள் ஐந்தறிவு உள்ளவை, மனிதன் ஆறறிவு உள்ளவன்’ என்று அம்மா எனக்கு ஏற்கனவே சொல்லித்தந்திருந்த படியால் “மனிதன் என்றால் ஆறறிவு உள்ளவன்” என்று நான் அவரது கேள்விக்கு துணிந்து பதில் சொன்னேன்.

எனது பதிலைக் கேட்டதும் தனது கண் புருவங்களை உயர்த்தி என்னை கூர்ந்து பார்த்த அவர் “ ஆறாவது அறிவு என்றால் என்ன?” என்று கேட்டார்.
அதற்குரிய பதிலும் எற்கனவே எனக்குத் தெரிந்திருந்த படியால் “பகுத்தறிவு” என்று சொன்னேன்.

“பகுத்தறிவு என்றால் என்ன?” அவர் திருப்பக் கேட்க எனக்கு சரியான பதில் சொல்லத் தெரியவில்லை.

பகுத்தறிவு என்றால் பகுத்து அறிவது .‘சரி பிழை -, நன்மை தீமை -நல்லது கெட்டது’ என்று எல்லாவற்றiயும் சீர்தூக்கிப்பார்த்து சரியான முடிவுக்கு வாறது.” என்று அவரே அதற்கு விளக்கம் சொன்னதுடன் “இங்கை இந்த இந்த மான்களை பார், மயில்களைப் பார், புறாக்களைப் பார் , கிளியளைப் பார் இதுகளுக்கு பகுத்தறிவு இல்லை எண்டு நாங்கள் சொல்லுறம்;. அதுகள் தங்களுக்குள் எவ்வளவு ஒற்றுமையா இருக்குதுகள்.ஆனால் பகுத்தறிவு இருக்கிறதா சொல்லிக் கொள்ளுற நாங்கள் சாதி சமயம் உயர்ந்தவன் தாழ்ந்தவன் எண்டு சொல்லிக்கொண்டு ஒருதரை ஒருதரை உயர்த்தி தாழ்த்தி சண்டைபிடிச்சுக் கொண்டிருக்கிறம்.” என்று கூறி ஒரு பெருமூச்சுவிட்டார்.

மனிதன் என்றால் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தவேண்டும். அவன்ரை மனதிலை கருணையும் இரக்கமும் இருக்க வேண்டும்.மற்றவைக்கு உதவி செய்ய வேணும் எண்ட குறிக்கோள் இருக்க வேணும். தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்பவன் தான் உண்மையான மனிதன். தியாகம் செய்கிறது தான் உண்மையான மனித குணம்.” என்று அவர் அன்று சொன்ன அந்த வார்த்தைகள் இன்றும் என் மனதில் ஆளமாக பதிந்திருக்கிறது.

முதலில் நீ மனிதன். அடுத்து தமிழன். அடுத்து சின்னப் பொடியன் இலட்சுமியின் மகன். இது தான் உன்னுடைய அடையாளம். இது தான் ‘நீ யார்?’ என்ற அந்தக் கேள்விக்குரிய முழுமையான விடை” என்று அவர் விளக்கமாகச் சொன்னதும் நான் அதை மனதுக்குள் திரும்பச் திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்தேன்.;

நீ மனிதன் எண்டது உனக்குத் தெரியும். அடுத்தது தமிழன். தமிழன்; எண்டால் என்னண்டு தெரியுமோ? ஏன் நீ தமிழன்? இதுக்கு பதில் சொல்லு பார்ப்போம்” என்று அவர் அடுத்த கேள்வியைக் கேட்டார்.

நான் கொஞ்சநேரம்; அதைப் பற்றி யோசித்துப் பார்த்து விட்டு “ தமிழ் கதைக்கிற படியால் நான் தமிழன்” என்று பதில் சொன்னேன்.

“இங்கே தமிழ் ஆக்கள் கொஞ்சப் பேர் இங்கிலிஸ் கதைக்கினம். அப்ப அவை இங்கிலிஸ்காரரா?” என்று அவர் எதிர் கேள்வி கேட்டார்.

எனக்கு குழப்பமாகப் போய்விட்டது. என்ன பதில் சொல்வதென்றே தெரிய வில்லை. நான் அப்பாவித் தனமாக அவரது முகத்தை பார்க்க….

அவர் “நல்லா யோசிச்சுப்பார் உன்ரை அப்பாவிட்டையும் அம்மாவிட்டையும் போய் கேட்டு நாளைக்கு எனக்கு வந்த பதில் சொல்லு” என்றார்.

நான் “சரி” என்று தலையாட்டியதும் ….

அடுத்தது “நீ சின்னப்பொடியன்ரையும் இலட்சுமியின்ரையும் மகன் . சரி அவை இரண்டு பேரும் ஆருடைய பிள்ளையள்? அவையைப் பற்றி தெரியுமோ?” என்று கேட்டார்.

எனக்கு ஏற்கனவே அந்த விபரம் தெரிந்த படியால் “அப்புச்சிக்கு(அப்பப்பா) பெயர் வினாசி.அப்பாச்சி (அப்பம்மா) க்கு பெயர் சின்னாச்சி. அப்புக்கு (அம்மப்பா) பெயர் கணபதி ,ஆத்தை (அம்மம்மா)க்கு பெயர் வள்ளி” என்று உடனே சொன்னேன்.

“சரி உனக்கு அவையின்ரை அப்பா அம்மா ஆரெண்டு தெரியுமோ? என்று அடுத்த கேள்வி வந்தது. உண்மையில் அவர்களைப் பற்றிய விபரம் எனக்கு அப்போது தெரியாது.

அதை புரிந்து கொண்ட கந்த முருகேசனார்; ‘அவை யார்?; எங்கே இருந்தவை. அவை என்ன செய்தவை? இப்ப எங்கை இருக்கினம் என்ற விபரங்களை யெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டு மறுநாள் தனக்கு வந்த சொல்ல வேண்டும் என்றும் சென்னார்.

அன்று அத்துடன் படிப்பு முடிந்துவிட்டது. அம்மா வரும் வரை என்னை அங்கிருந்த மான்கள் மயில்கள் கிளிகள் எல்லாவற்றையும் சுற்றிப்பாக்கும்படி சொன்னார்.

எற்கனவே மந்திகைப் பள்ளிக் கூடத்தில் கதிர்காமர் வாத்தியாரிடம் பேச்சுவாங்கி அடிவாங்கி அவமானப்பட்டு அழுதுகொண்டு படித்தவந்த எனக்கு கந்த முருகேசனாரின் அனுகு முறையும் ஆவர் பாடம் சொல்லித் தந்த விதமும் எனக்கு மிகவும் பிடித்தவிட்டது. நிறைய தெரிந்து கொள்ளவேண்டும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை அது தூண்டியது.

வெள்ளி, 12 ஜனவரி, 2007

நினைவழியா வடுக்கள்- 4

நினைவழியா வடுக்கள்- 4

உண்மையான தமிழ் அடையாளத்தையும் தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சார விழுமியங்களையும் தமிழர் மெய்யியலையும் தேடிய அந்த மனிதர் தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் கந்த முருகேசனாராகும்.

தென் புலோலியை பிறப்பிடமாகக் கொண்ட அவர் ஆறுமுகநாவலரின் சற்சூத்திரக் கோட்பாட்டை நிராகரித்து ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பதை வலியுறுத்தினார். ‘அன்பே சிவம்’ என்பது தான் அவரது மெஞ்ஞானமாக இருந்தது. ‘மனிதர்கள் எல்லோரும் ஒருவர்மேல் ஒருவர் அன்பு செலுத்தவேண்டும்’ என்றும் ‘ஒவ்வொரு மனிதனும்; அடுத்தவரை நேசிப்பதிலும் அடுத்தவர்களுக்குரிய மரியாதையை கொடுப்பதிலும் தான் மனிதம் என்ற சொல்லுக்குரிய அர்த்தம் வெளிப்படுகிறது’என்றும் கூறிவந்தார்.

மனிதனை மனிதன் பிறப்பைக் கொண்டு இழிவுபடுத்தும் இந்துத்துவ வர்ணக் கோட்பாட்டை கடுமையாக விமர்சித்த அவர், இது தமிழர்களதுஅடையாளமோ பண்பாடோ இல்லை என்றும் அடித்துச் சொன்னார்.

சாதி இரண்டொழிய வேறில்லை, சாற்றுங்கால்நீதி வழுவா நெறி முறையின்-மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ளபடி….’ என்பதே உண்மையான தமிழர் மரபு என்றும் வலியுறுத்தி வந்தார்.

பிச்சைக்கு மூத்தகுடி வாழ்க்கை பேசுங்கால்இச்சை பல சொல்லி இடித்து உண்கை - சீச்சிவயிறு வளர்க்கைக்கு மானம் அழியாதுஉயிர் விடுகை சால உறும்” என்ற ஒளவையாரின் நல்வழி வெண்பாவை அவர் எப்போதும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு உதாரணமாகச் சொல்வதுண்டு.

இன்று தமிழ் தாத்தா கந்த முருகேசனார் என்று கேட்டால், அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த ஒரு சிலரையும் அவருடைய உறவினர்களையும் தவிர மற்றவர்கள் தெரியாது என்றே செல்வர்கள். யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமராட்சி மந்திகை பகுதியில் பருத்தித்தித்துறை யாழ்ப்பாணம் நெடுஞ்சாலை அருகே நிறுவப்பட்டள்ள அவரது சிலையும்,தென் புலோலியில் உபய கதிர்காமத்துக்கு அண்மையில் அவர் வாழ்ந்த வீடிருந்த பகுதிக்குச் செல்லும் கந்த முருகேசனார் வீதி என்ற பெயரும் தான் இன்று அவர் ஞாபகார்த்தமாக இருக்கின்றன.

ஏராளமான செய்யுள்களையும், இலக்கண நூல்களையும், தமிழர்; மெய்யியல் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளையும் அவர் எழுதிய போதிலும் அவை எதுவுமே வெளியே வரவில்லை. அவரது பெயர் யாழ்ப்பாணப் புலவர் மரபிலிருந்து திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்யப்பட்டதைப் போல அவரது எழுத்துக்களும் யாழ்ப்பாண அதிகார வர்க்கத்தின் கருத்தியல் வறுமைக்கு இரையாகிவிட்டன.

தமிழ் மக்களின் அறிவுக் கண்ணை திறப்பதற்காக அவர் நடத்தி வந்த திண்ணைப் பள்ளிக் கூடத்தில் மூன்று மாதங்கள் கல்வி கற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்து.

அந்த மூன்று மாதங்களில் அவர் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் இப் போது 45 வருடங்கள் கழிந்துவிட்ட நிலையிலும் அதே வீச்சோடு என்னுள் ஆளமாகப் பதிந்திருக்கிறது.

அந்த அற்புதமான மனிதரை நான் சந்தித்த முதல் சந்திப்பே ஒரு சுவாரசியமான சந்திப்பாகும்.
அதாவது நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட 1962 ம் ஆண்டு மார்கழி மாதத்தின் முதலாவது ஞாயிற்றுக்கிழமை காலையில் எனது அம்மாவும் அப்பாவும் என்னை அந்த திண்ணைப் பள்ளிக் கூடத்தில் சேர்த்து விடுவதற்காக அழைத்துச் சென்றனர்.

புது உடுப்பு, புதுச் செருப்பு, புதுச் சிலேட்டு, புதுப் பென்சில், புதிய பாலபோதினி 3 ம் வகுப்பு தமிழ் புத்தகம், புதுப் புத்தகப் பை என்று எல்லாமே புதிதாக கிடைத்த சந்தோசத்தோடு நான் அப்பாவின் கையை பிடித்துக் கொண்டு உற்சாகமாக நடந்து சென்றேன்.

எங்கள் வீட்டிலிருந்து அந்தப் பள்ளிக்கூடம் ஒரு அரை மைல் தூரத்திலேயே இருந்தது.எழுவாக்கை எனப்படும் வயல் வெளியின் வடக்குப் பக்கத்தினுடாகவே இந்தப் பள்ளிக் கூடத்துக்கு செல்ல வேண்டும். (வல்லிபுரக் கோவிலுக்கு இந்த வயல் வெளியின் கிழக்கப் பக்கமாகச் செல்லவேண்டும்.) நாங்கள் சென்ற போது சூரிய மேலே வந்துவிட்டதால் அதிகாலையில் அந்த வயல் வெளிக்கு அப்பால் உள்ள ஆனை விழுந்தான் வெளியில் பார்த்த கொள்ளிவால் பேய்களின் பயம் இப்போது இருக்கவில்லை.

ஆனால் ‘அந்த புதுப் பள்ளிக் கூடத்தில் வாங்கில்லை அல்லது கதிரையில இருந்து படிக்க விடுவார்களோ? என்ற ஏக்கமும் கதிர்காமர் வாத்தியாரைப் போல யாராது வாத்தியார் என்னுடைய புது உடுப்பை வாழைத் தடலாலை அடிச்சி ஊத்தையாக்கிப் போடுவாரோ?’ என்ற பயமுமே அப்போது இருந்தது.

நாங்கள் அந்தப் பள்ளிக் கூடத்தை அண்மித்த போது… ‘அறங்செய்ய விரும்பு’ ‘ஆறுவது சினம்’ ‘இயல்வது கரவேல்’ ஈவது விளக்கேல்’ என்ற ஒளவையாருடைய ஆத்தி சூடியையும் ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’’ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்ற கொன்றை வேந்தனையும் அங்கு படிக்கின்ற பிள்ளைகள் உரத்த குரலில் கூட்டாகச் செல்வது காற்றில் மிதந்து வந்தது.

நாங்கள் அந்தப் பள்ளிக் கூடத்துக்காகச் சென்ற அந்த வீதியின் ஒரு திருப்பத்தில் மா மரங்கள் பால மரங்கள், தென்னை மரங்கள், பனை மரங்கள், கமுகு (பாக்கு) மரங்கள் வாழை மரங்கள் என்ற பல்வகை மரங்களும் செம்பரத்தை மணி வாழை ரோஜா மல்லிகை கனகாம்பரம் என்று நிறைய பூமரங்களும்; நிரம்பிய ஒரு சோலை இருந்தது. அந்தச் சோலையைத்தான் நான் படிக்கப் போகும் புதுப் பள்ளிக் கூடம் என்று எனது பெற்றொர் எனக்குக் காண்பித்தனர்.

பள்ளிக் கூடம் என்ற பெரிய கட்டிடங்கள் இருக்கும். கதிரை மேசைகள் இருக்கும்’என்று எண்ணிக்கொண்ட சென்ற எனக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது.

அந்தச் சோலையின் நடுவே ஒரு பெரிய மால் என்ற சொல்லுகின்ற ஒரு ஓலைக் கொட்டகையும் அதற்கு அருகே ஒரு சிறு குடிசையும் இருந்தன. ஆங்காங்கே உயரமாக வளாந்திருந்த மாமரம் பலா மரங்களுக்கு இடையே சிறு சிறு வட்டக் குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன. அந்தக் குடில்களின் தரையில் கடற்கரை மணல் போடப்பட்டிருந்தது.அந்த மணலில் இருந்து தான் பிள்ளைகள் பாடம்படித்துக் கொண்டிருந்தார்கள். பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அந்தக் காட்சியைப் பாத்தவுடன் என்னுடைய ஏமாற்றம் இன்னும் அதிகரித்தது.

சே! இந்தப்பள்ளிக் கூடத்திலையும் நிலத்தில் இருந்துதான் படிக்க வேண்டி இருக்கிறதே!’ என்று நான் சலித்தக்கொண்டேன். ஆனால் எல்லோருமே நிலத்தில் இருந்து படித்ததை பார்த்த போது நான் எற்கனவே படித்துக் கொண்டிருக்கும் மந்திகை பள்ளிக் கூடத்தை விட பறவாயில்லை என்ற திருப்தி ஏற்பட்டது.

இதேவேளை அந்தப் பள்ளிக் கூடம் இருந்த அந்த சோலைக் காணிக்குள் அங்காங்கே தடுப்பு வேலிகள் போடப்பட்ட பகுதிக்கள் நான்கு ஐந்து மான்களும் பல முயல்களும் மேயந்துகொண்டிருந்தன..
இன்னொரு புறத்திலே பல மயில்களும் ஏராளமான புறாக்களும் பஞ்சவர்ணக் கிளிகள் உட்பட பல வகையான கிளிகளும் இருந்தன. இந்த மான்களையும் மயில்களையும் பஞ்சவர்ணக் கிளிகளையும்; நான் அதுவரை பாலபோதினி பாடப்புத்தகத்தில் இருந்த படங்களில் தான் பார்த்திருக்கிறேன். அவற்றையெல்லாம் நேரில் பாhர்த்த போது எனக்கு ஒரே மகிழ்ச்சியாக இருந்தது.

ஆனால் அந்த மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. எனது பெற்றோர் அந்த மிருகங்களையும் பறவைகளையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என்னை அழைத்துக் கொண்டு அந்தச் சோலையின் நடுப்பகுதியில் இருந்த மாலை (பெரிய கொட்டகை) நோக்கிச் சென்றனர்.

அந்த மாலின் முன்பகுதியின் இரண்டு பக்கத்திலும் இரண்டு முளம் (ஏறக்கறைய ஒரு மீட்டர்) உயரத்தக்கு பெரிய விசாலமான மண்ணாலான திண்ணைகள் அமைக்கப்பட்டிருந்தன. வலது பக்க திண்ணையில் ஒரு பாய் விரிக்கப்பட்டு அதில் எராளமான ஏட்டுச் சுவடிகளும் பல புத்தகங்களும் வைக்கப்பட்டிருந்தன. இடது பக்கத் திண்ணையிலே மான் தோல் விரிக்கப்பட்டு அதன் மேல் தமிழ் தாத்தா என்று அழைகக்ப்பட்ட கந்த முருகேசனார் கம்பீரமாக அமர்ந்திருந்தார்.

நல்ல சிவந்த நிறம்.பஞ்சு போன்று வெள்ளையாக நரைத்த தலை மயிர். அதே நிறத்திலான நிண்டதாடி. இடுப்பில் மட்டும் நான்கு முள வேட்டி. நெற்றியல் தீருநீற்றுப் பூச்சு அகண்ட மர்பிலும் அடத்தியான சௌ;ளi முடி என்று அவரது தோற்றத்தையும் அவர் அமர்ந்திருந்த விதத்தையும் நான் முதல் முதலாக பார்த்த போது, ஒரு சில விநாடிகள் எனக்கு பயத்தில் நெஞ்சு அடைத்து, தொண்டைத் தண்ணிர் வற்றி, பேச்சோ அழுகையோ வராத ஒருவிதமான திகில் நிலைக்கு தள்ளப்பட்டேன்.

அம்மா எனக்கு அடிக்கடி கூறும் புராணக் கதைகளில் வரும் முனிவர்களுடைய ஞாபகம் தான் வந்தது. ‘புளிய மரத்தில் முனி இருக்கும், முனியடிக்கும் ஆட்களை கொண்டு பேயிடும்’ என்கின்ற கதைகளெல்லாம் எனக்கு அந்தக் கணத்தில் நினைவுக்கு வந்தது.

‘நான் குழப்படி செய்யிறதால அம்மாவும் அப்பாவும் பள்ளிக் கூடத்தக்கு என்று பொய் செல்லி முனியிட்டை பிடிச்சுக் கொடுக்கிறதுக்கு கூட்டிவந்திருக்கினம்’ என்று நினைத்து அம்மாவை கட்டிப் பிடித்துக்கொண்டு கண்ணீர்விட்டுக் கதற ஆரம்பித்தேன்.
‘ஐயோ நான் இனி மேல் குழப்படி செய்ய மாட்டன். என்னை முனியிட்டை பிடிச்சுக் கொடுக்காதையுங்கோ. ஐயா..ஐயா (அப்பாவை நான் ஐயா என்று தான் கூப்பிடுவது வழக்கம்) அம்மாவிட்டை சொல்லணை. என்னை பிடிச்சசுக் குடுக்க வேண்டாம் எண்டு. நான் இனிமேல் குழப்படியே செய்யமாட்டன்’ என்று நான் கதறின கதறலால் அங்கே பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர்களும் மாணவர்களும் பாடத்தை நிறுத்திவிட்டு எங்களையே பார்த்தார்கள்.

“அப்பன் அழாதையடா அவர் முனி இல்லை. அவர் பெரிய வாத்தியார் .அவர் மனிசன் தான் பயப்பிடாதை. ஐயாவும் அம்மாவும் உன்Nhடை கூட இருக்கிறம்’ என்று அம்மா என்னை சமாதானப் படுத்தி எனது பயத்தை தெளிய வைக்க முயற்சித்தா.

கந்த முருகேசனாருக்கு நான் ஏன் அப்படி கத்தி அழுகிறேன் என்பது புரிவில்லை. அவர் எனது அப்பாவிடமும் அம்மாவிடமும் அதற்கான காரணத்தை கேட்டுத் தெரிந்து கொண்டதும் “பேய் பிசாசு முனி என்று பிள்ளையை நல்லா பயப்பிடுத்திப் போட்டியள். இப்படிச் சின்ன வயதிலேயெ அதுகளை பயப்பபடுத்தினால் எப்படி அதுகளுக்கு தன்னம்பிக்கை வரும்?” என்று அவர் அவர்களை கடிந்து கொண்டார்.
அத்தோடு என்னை தூக்கி தான் அமர்ந்திருந்த திண்னையில் இருத்தும்படி அம்மாவுச் சொன்னார்.

‘நான் மாட்டன்.நான் மாட்டன் என்னை விடுங்கோ’ என்று நான் அம்மாவை இன்னும் இறுக்கி கட்டிப்பிடித்துக் கொண்டு கத்தி அடம்பிடிக்க அவர் தனது உதவியாளை அழைத்து எனது வயதுள்ள இரண்டு பொடியளை கூட்டி வந்து தனக்கு பக்கத்தில் இருத்தும்படி கட்டளையிட்டார்.

அவர்கள் வந்து இருந்ததும் ‘இப்ப பாத்தியே உன்னை போல பொடியள் அவருக்குப் பக்கத்தில இருக்கிறாங்கள்;. நீயும் பயப்பிடாமல் ஏறி இரு” என்ற அம்மா தைரியம் சொல்ல, நான் அவவை கட்டிப்பிடித்த பிடியை விடாமல் கழுத்தை திருப்பி அந்தப் பொடியளைப் பாத்தேன் . கொஞ்சம்; பயம் குறைந்தது.

அதை தெரிந்து கொண்ட அம்மா மெதுவாக என்னைத் தூக்கி அந்தத்திண்ணையில் இருத்தினா. அழுகை நின்றாலும் விம்மல் நிக்காத நிலையில், நான் அவவின் கையை பிடித்தக் கொண்டு தலையை குனிந்தவாறு அமர்ந்து கொண்டிருந்தேன். கந்த முருகேசனாரை நிமிர்ந்து பார்க்க எனக்கு தைரியம் வரவில்லை.

அவர் மொதுவாக எனது கையை பிடித்து இழுத்து என்னத் தூக்கி தனது மடியில் இருத்திக் கொண்டார். எனக்கு மறுபடியும் பயம் அதிகமாகிவிட்டது. விம்மி விம்மி அழுமை பீறிட்டு வரும் போல் இருந்து.

அவர் என்னை தடவி “பயப்பிடாத உன்ரை அப்பாவும் அம்மாவும் பக்;கத்தில் தான நிற்கினம். எதுக்கு பயப்பிட வேணும்” என்று சொல்லி ஆறுதல் படுத்தியதுடன், தான் சாப்பிடுவதற்கு வைத்திருந்த முந்திரிகைப் பழத்தை எடுத்து எனக்கு ஊட்டி விட்டார்.

ஏறக்குறைய 10 நிமிடங்களுக்கு மேல் நடந்த இந்தச் சம்பவங்களை அங்கிருந்த ஆசிரியர்களும் மாணவர்களும் பாடம் படிப்பிப்பதையும் படிப்பதையும் விட்டு விட்டு பார்த்துக்கொண்டிருந்தனர்.

கந்த முருகேசனார் அவர்களை ஒரு அதட்டுஅதட்டி விட்டு என்னப் பார்த்து “சின்னப் பொடியனின் (எனது தந்தையின்; பெயர் அது) சின்னப் பொடியா! நாங்கள் பாடம் படிக்கலாமோ?” என்ற கேட்டார்.

அதற்கு நான் விம்மிக்கொண்டே சம்மதம் தெரிவித்து தலையாட்ட “உன்னுடைய பேரென்ன?” என்று அன்போடு திருப்பிக்கேட்டார்.

நான் “சிவ.. சிவன.. சிவநேச…மூர்த்தி என்று விம்மில் தடுக்க தடங்கித் தடங்கி பதில் சொன்னேன்.

“சிவநேசமூர்த்தி- சிவனுக்கு நேசமான மூர்த்தி அது யார் தெரியுமோ?” என்று அவர் திருப்பிக்கேட்க, நான் தெரியாதென தலையாட்டினேன்.

“தமிழ் கடவுளான முருகன். அவர்தான் சிவனுக்கு நேசமான மூர்த்தி என்று விளக்கமளித்த அவர் “சரி நான் இன்னொரு கேள்வி கேட்கப் போகிறேன் அதுக்கு பதில் சொல்லு பார்க்கலாம்” என்றார்.

அது என்ன கேள்வி என்று நான் அவரை நிமிர்ந்து பார்க்க, “உன்னுடைய பெயர் சிவநேசமூர்த்தி என்பது உனக்குத் தெரியும் ஆனால் நீ யார் என்பது உனக்குத் தெரியுமோ? நீ யார்? இதுக்கு பதில் சொல்லு பார்ப்போம்” என்றார்.

“அதற்கு விடை தெரியால் நான் யோசனை செய்ய “இன்றைக்கு முதல் நாள் இவ்வளவும் போதும் நாளைக்கு உன்னுடைய விட்டிலை இருக்கிற எல்லாரிடமும் கேட்டு அதற்கான விடையை தெரிந்து கொண்டு வா” என்று சொல்லி என்னை மடியில் இருந்து இறக்கிவிட்டார்.

அத்துடன் எனது பெற்றோருக்கு மீண்டும் “பிள்ளையளை ஒருநாளும் சாமி பூதம் பேய் பிசாசு முனி என்று சொல்லி பயப்பிடுத்தாதையுங்கோ” என்று அறிவுரை கூறி அனுப்பிவைத்தார்.

நாங்கள் வெளியெ வந்தததும், கண்ட கண்ட புராணக் கதைகளை சொல்லி அம்மாதான் என்னை பயப்படுத்துவதாக அப்பா வழிக்கு வழி அவவை ஏசிக்கொண்டே வந்தார் .என்னுடைய சிந்தனை எல்லாம் ‘நான் யார்?’ என்பதை பற்றியே இருந்தது.

புதன், 10 ஜனவரி, 2007

நினைவழியா வடுக்கள்- 3

நினைவழியா வடுக்கள்- 3
ஈழத் தமிழர்களுடைய வரலாற்றில் 1955 ம் ஆண்டிலிருந்து 1965 ம் ஆண்டுவரையிலான 10 வருடகாலப் பகுதி; மிக முக்கியமான ஒன்றாகும். 1957 ல் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்களச் சட்டம். 1958 ல் நடந்த இனக் கலவரம் 1961 ல் நடைபெற்ற சிறீ எதிர்ப்புப் போராட்டம். 1961லிருந்து 1964 வரை தொடர்ச்சியாக நடந்த தீண்டாமை ஒழிப்பு போராட்டங்கள் என்பன தமிழ் மக்களுடைய குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களுடைய இருப்பிலும் கருத்தியல் தளத்திலும் காத்திரமான தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தன.

ஈழத் தமிழ் மக்கள் யாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு என்ற மூன்று வாழ்வியல் தளங்களை கொண்டவர்கள். இதில் யாழ்ப்பான சமூகமும் அதன் வாழ்வியல் தளமும் மட்டுமே இறுக்கமான சாதியக் கட்டமைப்பை கொண்டதாக இருந்தது. சாதி என்பது தமிழர்களுடைய அடையாளம் என்று இந்த சமூகம் நம்பியது.

யாழ்ப்பாண சமூகத்தின் சாதி அமைப்பு கட்டுள்ள சாதிகள், கட்டற்ற சாதிகள், கட்டுள்ள கலப்புச் சாதிகள், கட்டற்ற கலப்புச் சாதிகள் என்ற நான்கு வரையறைகளைக் கொண்டவையாக இருந்தது.

வெள்ளாளர், பிராமணர், கோவியர். நளவர், பள்ளர், பறையர், வண்ணார், அம்பட்டர், ஆகிய சாதிகள் கட்டுள்ள சாதிகளாக இருந்தன. இதில் வெள்ளாளரும் பிராமணர்களும் அதிகார வர்க்க சாதியினராகவும் ஏனையோர் அடிமைச் சாதியினராகவும் இருந்தனர்.

இந்தியாவை பொறுத்தவரை பிராமணர்கள் முதன்மைச் சாதியினராக இருந்த போதிலும் யாழ்ப்பாணத்தில் வெள்ளாளர்களுக்கு அடுத்த இடத்திலேயே அவர்களது நிலை இருந்தது.
இந்துத்துவ வர்ணக் கோட்பாட்டின்படி வெள்ளாரர்கள் சூத்திரர்கள் என்ற அடிமட்ட சாதிப் படிநிலைக்குள் அடக்கப்பட்ட போதிலும் ஆறுமுக நாவலர் அதை மறுதலித்து வெள்ளாளர்களை சற்சூத்திரர்கள் அதாவது பிராமணர்களுக்கு நிகரானவர்கள் என்று நிறுவியதும் நிலமும் கோவில்களும் வெள்ளாளர்களுடைய ஆதிக்கத்திலேயே இருந்ததும் பிராமணர்கள் அவர்களது கோவில்களில் ஊழியம் செய்பவர்களாக இருந்ததுமே அவர்களது சாதிப் படி நிலையை பின் தள்ளிவிட்டது
.

இந்த கட்டுள்ள சாதி அமைப்பில் கோவியரும் பஞ்சமர்கள் எனப்படும் நளவர், பள்ளர், பறையர், வண்ணார், அம்பட்டர் ஆகியோரும் வெள்ளாளர்களுடைய குடிமைகளாக கருதப்பட்டார்கள். 1970ம் ஆண்டு வரை குடிமை முறை எனப்படும் இந்த அடிமைச்சேவகம் கட்டாயப் படுத்தப்பட்டிருந்து. கோவியர்கள் வெள்ளாளர்களுடைய வீட்டு வேலைகளை செய்வதும் அவர்களது உடமைகளாக இருந்த கோவில்களுக்கு ஊழியம் செய்வதும் கட்டாயப்படுத்தப்பட்டிருந்தது.

ஏனைய பஞ்சமர் சாதிகள் வெள்ளாளர்களின் விளை நிலங்களில் கூலியின்றி வேலை செய்து கொடுப்பது, அவர்களது வீட்டு திருமண ஊர்வலங்களில் “கா” காவிச் செல்வது. அதாவது ஒரு தடியில் ஒரு முனையில் வாழைக்குலை பலாப்பழம்; முதலான பழ வகைகளையும் மறு முனையில் அரிசி முதாலான உணவுப் பண்டங்கள் மற்றும் பாத்திங்கள் முதலான சீர் வரிசைகளையும் கட்டித் தொங்க விட்டு அந்தத் தடியை தோழில் வைத்து அந்த ஊர்வலம் முடியும் வரை காவிக் கொண்டு செல்வதே “கா” காவுதலாகும். மரச்சடங்கில் பாடை கட்டுவது (பெண்கள்) குடக் குரவை வைப்பது மயானத்தில் பிணத்தை எரியூட்டுவது என்று இந்தக் குடிமை முறை நீண்டு கொண்டு செல்லும் .

இதில் கோவியர் நளவர் என்ற இரண்டு சாதிகளும் இந்தியாவில் இல்லாத யாழ்ப்பாணக் குடாநாட்டில் தோற்றம் பெற்ற சாதிகளாகும். இதிலே நளவர்களுடைய தோற்றம் பற்றி யாழ்ப்பாண வரலாற்றைக் கூறும் தொன்மையான நூலான யாழ்ப்பாண வைபவ மாலையில் குறிப்பிடப்பட்டள்ளது.

சங்கிலி மன்னுடைய ஆட்சிக்காலத்தில் தமிழகத்திலிருந்து நம்பிகள் என்ற சாதியைச் சேர்ந்த 64 கத்திக்கார்கள் அவர்களது குடும்பத்தினருடன் மன்னனுடைய மெய்ப்பாதுகாப்புக்காக அழைத்துவரப்பட்டதாகவும்.; அந்த கத்திக்காரர்களுக்கு தலைமை தாங்கிய நம்பியினுடைய மகளை சங்கிலி மன்னனுடைய மகன் பாலியல் வன்முறைக்கு உட்படுத்திவிட்டதால் ஆத்திர மடைந்த அந்த தலைமை நம்பி அவனைக் கொன்றுவிட்டதாகவும் யாழ்ப்பாண வைபவ மாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னுடைய மகனை கொன்ற குற்றத்துக்காக தலைமை நம்பியை தலை வெட்டிக் கொன்ற சங்கிலி மன்னன் ஏனைய நம்பிகளை அரண்மனையிலிருந்து துரத்திவிட்டதாகவும் பிழைப்புக்கு வழியில்லாத அவர்கள் அந்தக்காலகட்டத்தில் மரமேறும் தொழிலைச் செய்து வந்து சானாருடன் சேர்ந்து அந்தத் தொழிலைச் செய்யப் பழகிக் கொண்டதாகவும் இவ்வாறு குலத்தொழிலை விட்டு நழுவி வேறு தொழிலைச் செய்ததால் நழுவிகள் என்று அழைக்கப்பட்டதாகவும் பின்னர் அதுவே நளவர்கள் என்று ஆகிவிட்டதென்றும் யாழ்ப்பாண வைபவ மாலையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் கட்டற்ற சாதிகளாக முக்குவர் திமிலர் தட்டார் செட்டிகள் முதலானவை இருந்தன. இந்தச்சாதிகள் தங்களுக்குள் இறுக்கமான கட்டுக் கோப்பையும் அகமணமுறையையும் கொண்டவையாக இருந்த போதிலும் கட்டுள்ள சாதிகளைப் போல அடிமை குடிமைகளை கொண்டவையாக இருக்கவில்லை.

கட்டுள்ள கலப்புச்சாதிகள் என்ற வரையறைக்குள் நட்டுவர்கள் பண்டாரிகள்; முதலானோர் அடக்கப்பட்டனர். தங்களுக்குள் தங்களுக்கு இணையான சாதியனருடன் உறவுகளை பேணிவந்த இவர்கள் அடிமை குடிமைகளை ஒடுக்கும் விடயத்தில் வெள்ளார்களுக்கு இணையானவர்களாகவே இருந்தார்கள்.

கட்டற்ற கலப்புச்சாதிகளாக கரையார் தச்சர் கொல்லர் குயவர் ஆகியோர் குறிப்பிடப்படுகின்றனர்.அதிகளவுக்கு நெகிழ்வுத் தன்மையைக் கொண்ட இந்தச் சாதியினரிடையே தீண்டாமையும் மற்றவர்களை அடக்கி ஒடுக்கும் மனோபாவமும் ஏனைய மேல்தட்டு மற்றும் இடைநிலை சாதியினரைவிடக் குறைவாகவே இருந்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் எனையபகுதிகளை விட கரையார சாதியினரை அதிகமாகக் கொண்ட வடமராட்சி கிழக்கு பகுதிகள் சாதிய ஒடுக்குமுறை மிகக் குறைந்த பகுதிகளாக இருந்ததும் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

1697ம் ஆண்டு ஒல்லாந்தருடைய ஆட்சிக்காலத்தில் 40 சாதிகள் இருந்ததாக குறிக்கப்பட்டிருக்கிறது.தற்போது 15 முதல் 20 சாதிகளே வழக்கில் இருப்பதாகவும் அதிலும் சில சாதிகள் மறைந்துவிடும் நிலையில் இருப்பதாகவும் 2000ம் ஆண்டளவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

1900 த்தின் ஆரம்பத்திலிருந்து 1980களின் நடுப்பகுதி வரையிருந்த யாழ்ப்;பான சமூகத்தின் அதிகார வர்க்கத்தை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். இதில் ஒரு பகுதியினர் கல்வியையும் இன்னொரு பகுதியினர் வர்த்தகத்தையும் மற்றொரு பகுதியினர் சிறு விவசாயத்தையும் தங்களுடைய வாழ்வாதாரங்களாகக் கொண்டிருந்தனர். இவர்களில் சிறு விவசாயிகள் தவிர்ந்த ஏனையோரில் கணிசமான பகுதியினர் தங்களது தொழில் நிமித்தம் கொழும்பிலும் ஏனைய சிங்களப் பகுதிகளிலும் தங்கிருந்தனர்.

பொதுவாக மனிதர்கள் தாங்கள் கற்ற கல்வியின் மூலம் பெற்றுக் கொண்ட அறிவைக் கொண்டும் ,பல இடங்களுக்கும் சென்று பல தரப்பட்ட மக்களுடன் பழகுவதனால் கிடைக்கும் அனுபவத்தை கொண்டும் தங்களிடமுள்ள பிற்போக்குத் தனங்களை களைந்து தங்களை வளர்த்துக் கொள்வது வழக்கமாகும்.

ஆனால் யாழ்ப்பாண சமூகம் உயர்ந்த கல்வியறிவு பெற்ற சமூகம் என்று தன்னை சொல்லிக்கொண்டாலும், தொழில் நிமித்தம் பல்வேறு இடங்களுக்குச் சென்று பல்வேறுபட்ட மாற்றின மாற்றுக்கலாச்சார மக்களுடன் பழகிய போதிலும், பிறப்பைக் கொண்டு மனிதனை இழிவு செய்யும் சாதியத்தை அது கைவிடத் தயாராக இல்லை. தன்னை ஒரு சாதிய சமூகம் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்வதில் யாழ்ப்பாண சமூகம் இந்திய சாதியச் சமூகத்தக்கு எந்தவிதத்திலும் குறைந்தாக இருக்கவில்லை.

1958ல் சிங்கள பௌத்த பேரினவாதம் வெறி கொண்டு எழுத்து தாக்கிய போது அந்தக்காலகட்டத்தில் அதனால் அதிகம் பாதிக்கப்பட்ட அந்த சமூகம் அடக்குமுறையின் தாக்கத்தையும் வேதனையையும் வலியையும் உணர்ந்து தங்களை மாற்றியிருக்க வேண்டும். ஆனால் நடந்ததோ எதிர்மாறாக இருந்தது.

1958 ற்கு முன்னர் தங்களது தொழில் நிமித்தம் தென்னிலங்கைக்கு இடம்பெயர்ந்து சென்ற அதிகார வர்க்கப்பிரிவினரது விளை நிலங்களும் ஏனைய குடியிருப்பு மற்றும் தரிசு நிலங்களில் இருந்த பயன் தரு மரங்களும் (பனை, தென்னை,பலா,புளி) அவர்களது குடிமைகளான பஞ்சமர்களால் குத்தகைக் குடிமை முறை என்ற அடிப்படையில் பராமரிக்கப்பட்டு வந்தன. இந்த முறையின் படி ஆண்டைகளின் விளைநிலத்திலிருந்து பெறப்பட்ட உற்பத்தியின் 50 வீதத்தை அவர்களின் குடிமைகள் பொருளாகவோ பணமாகவோ வழங்க வேண்டும். இது குடிமை முறைப் பொருள் அல்லது பணம் என்று அழைக்கப்பட்டது.

1958 இனக்கலவரம் வரும் வரை இந்த ஆண்டைகள் கண்ணுக்கு எட்டாத தொலை தூரத்தில் இருந்தாதால் அவர்களது குடிமைகள் ஓரளவுக்கு தங்களது தொழிலை சுதந்திரமாகச் செய்யக் கூடியதாக இருந்தது. அது வரை உள்@ரில் கோவில்களையும் நிலத்தையும் வைத்து அதிகாரம் செலுத்திவந்த அதிகார வாக்கத்துக்கும் அவர்களது குடிமைகளுக்கும் இடையிலான முரண்பாடாகவே சாதிய முரண்பாடு இருந்தது.

1958 இனக்கலவரத்தில் சிங்கள இனவெறியர்களால் தங்களது இருப்பும் தேட்டமும் அழிக்கப்பட்ட நிலையில் அகதிகளாக கப்பல் மூலம் பருத்தித்துறை துறை முகத்தில் வந்திறங்கிய மக்களுக்கு தங்களை விட தங்களது குடிமைகள் பொருளாதார ரீதியில் பலமுள்ளவர்களாக இருந்தது ஒரு கௌரவப் பிரச்சனையாக இருந்தது. அதை விட செல்வச் செழிப்போடும் சமூக அந்தஸ்த்தோடும் வாழ்ந்த தாங்கள், தங்களது உறவுகளாலேயே ஏளனமாகப் பார்க்கப்படும் பரிதாப நிலையும் அவர்களுக்கு எற்பட்டிருந்தது.

எனவே யாழ்பாண சமூகத்தில் மறுபடியும் தங்களது அதிகாரத்தையும் இருப்பையும் தக்க வைத்துக் கொள்வதற்கு நில உடமை மூலம் தங்களுக்கு இருந்த உரிமையை கையில் எடுத்து சாதிய பாரம்பரியத்தையும் சாதியக் கலாச்சாரத்தையும் இறுக்கமாகக் கடைப்பிடிப்பதில் தாங்களே முன்ணியில் இருப்பவர்கள் என்று அவர்கள் காட்ட முற்பட்டார்கள்.

தன்னை ஒருவன் ஒடுக்கும் போது எதிர்த்து நின்ற போராடி அவனை அடக்குவதற்குப் பதிலாக, அவன் மேலுள்ள ஆத்திரத்தை தனக்குக் கீழுள்ள ஒருவனை அடித்து உதைத்து துன்புறுத்துவதன் மூலம் தணித்துக் கொள்ளும் அற்பத் தனமான சாதிய சிந்தனைக்குள் யாழ்ப்பாண சமுகம் மூழ்கிப்போயிருந்தது.

1958 லிருந்து 1968 வரை யாழ்ப்பாணக் குடாநாட்டில் சாதிய முரண்பாடு என்றுமில்லாதவாறு உச்சமடைந்ததற்கும் வெட்கக்கேடான பல சாதியக் கலவரங்கள் நடைபெற்றதற்கும் இதுவே அடிப்படையாகும்.

பௌத்த சிங்கள பேரினவாதிகள் தமிழர்களுக்கு எதிரான இனவெறிப் போரை ஆரம்பித்த போது அதற்கு எதிராக தமிழர்கள் அனைவரும் ஒன்று பட்டுப் போராடுவதற்குப் பதிலாக தமிழர்களே தமிழர்களை சாதியின் பேரால் அடக்கி ஒடுக்கியது தமிழ் தளத்தில் இருந்த கருத்தியல் வறுமையும் தமிழினத்தின் சாபக்கேடுமாகும்.

அன்றைய காலகட்டத்தில் தமிழர்களுடைய அரசியல் தளத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி,தமிழ் காங்கிரஸ் கட்சிறு இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி (சண்முகதாசன் தலைமையிலானது) என்பன செல்வாக்கு செலுத்தும்; கட்சிகளாக இருந்தன.

இதில் தமிழரசுக்கட்சியும் தமிழ் கொங்கிரஸ் கட்சியும் மட்டுமே தமிழ் மக்களை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளாகவும் நாடாளுமன்ற அரசியல் பாதையை ஏற்றுக் கொண்ட கட்சிகளாகவும் இருந்தன.

இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி(சீனச் சார்பு) ஒட்டு மொத்த இலங்கையிலுள்ள மக்களுக்கான கட்சியாகவும் முதலாளித்துவ அடிப்படையிலான நாடாளுமன்ற அரசியலை நிராகரித்த கட்சியாகவும் இருந்தது.
தமிழ் மக்களுக்கு ஐம்பதுக்கு ஐம்பது சம உரிமை கேட்டுப் போராடிய தமிழ் கொங்கிரஸ் கட்சியும், சமஷ்டி ஆட்சியுரிமை கோரி உண்ணா நோன்பு, சாலை மறியல்,நிர்வாக முடக்கல், சிங்கள சிறீ எதிர்ப்பு என்று பல் வேறு போராட்டங்களை நடத்திய தமிழரசுக்கட்சியும், தமிழினத்தை கூறுபோடும்-உடனிருந்தே கொல்லும் சாதியத்தை ஒழிப்பதற்கு ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இந்தக் கட்சிகள் இன உரிமைப் போராட்டம் மொழிப் போராட்டம் என்பவற்றை நடத்திய 1958-68 காலப்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்த 90 வீதமான ஆலயங்கள் 80 வீதமான தேனீர்கடைகள் மற்றும் உணவு விடுதிகள் 40 வீதமான பாடசாலைகள் என்பவற்றில் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட எமக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. 1957ல் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சமூகக் குறைபாடுகள் சட்டத்தின் கீழ் அரசாங்க மற்றும் அரசாங்க நிதி உதவிபெறும் பாடசாலைகளில் கல்வி கற்க எமக்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும் அவ்வாறான 80 வீதமான பாடசாலைகளில் எமக்கான சமத்துவம் மறுக்கப்பட்டிருந்தது. தீண்டாமை என்பது வெளிப்படையாகவே கடைப்பிடிக்கப்பட்டது.

1957 ம் ஆண்டு பருத்தித்துறைத் தொகுதியின் சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பொன்.கந்தையாவின் முயற்சியினால் அப்போதைய எஸ்.டபிள்யூ.ஆர் டி.பண்டாரநாயக்காவின் அரசாங்கத்தில் கல்வி அமைச்சராக இருந்த டபிள்யூ. தஹாநாயக்காவினால் பருத்தித்துறை கரவெட்டி, சாவகச்சேரி, கோப்பாய் காங்கேசன்துறை மானிப்பாய் ஆகிய இடங்களில் அனைத்து பிள்ளைகளும் சமத்துவமாக படிப்பதற்கென்று 16 அரசினர் தமிழ் கலவன் பாடசாலைகள் உருவாக்கப்பட்டன.

ஒடுக்கப்பட்ட மக்களின் பிள்ளைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட இந்தப் பாடசாலைகளில் தங்களது பிள்ளைகளை சேர்ப்பதற்கு யாழ்ப்பாணக் குடாநாட்டு அதிகார வர்க்கம் மறுத்தவிட்டது. இந்தப் 16 பாடசாலைகளில் 5 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் அதிகார வர்க்கத்தின் குண்டர்களால் தீவைத்து எரிக்கப்பட்டன. தமிழரசுக்கட்சி மற்றும் தமிழ்காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் பாடசாலைகள் குடாநாட்டில் அவசியம் இல்லை என்று அரசாங்கத்திற்கு மனுச் செய்தனர்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலவிய இந்த அடிப்படை முரண்பாட்டை அவதானித்த சிங்கள பௌத்த பேரினவாதிகள் திட்டமிட்டு காய் நகர்த்தினார்கள்.

சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை பௌத்த மதத்திற்கு மாற்றும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர். ஐரோப்பியர்கள் கிறிஸ்தவ மதத்தை பரப்பவதற்கு கையாண்ட பாணியில் புத்தூர் அச்சுவேலி கரவெட்டி அல்வாய் ஆகிய பகுதிகளில் பௌத்த பாடசாலைகளையும் அதையொட்டி பௌத்த விஹாரைகளையும் அவர்கள் நிறுவினார்கள்.

புத்தூர் பஞ்ஞாசீக வித்தியாலயம்,அச்சுவேலி ஸ்ரீ விபஸ்த்தி வித்தியாலயம், கரவெட்டி மேற்கு ஸ்ரீ நாரதா வித்தியாலயம், அல்வாய் சேய் மகே வித்தியாலயம் என்பனவே சிங்கள பௌத்த நலன்களுக்காக குடாநாட்டில் அமைக்கப்பட்ட பாடசாலைகளாகும்.

சிங்கள பௌத்த பேரினவாத எதிர்ப்பு என்பதை வாக்கு சீட்டு அரசிலுக்காகவும்; தங்களுடைய வர்க்க நலனுக்காகவும் மட்டுமே பயன்படுத்திய அன்றைய தமிழ் தலைமைகள் தமிழ்மக்களிடையுள்ள முரண்பாடுகளை கழைந்து உண்மையான தமிழ் தேசியத்தை கட்டியெழுப்ப முன்வரவில்லை.

அன்று தமிழ் தலைவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்தியவர்களில் ஒர சிலரைத் தவிர மற்ற அனைவரும் இறுக்கமான சாதிய வட்டத்துக்குள்ளேயே இருந்தனர்.பலருடைய வீடுகளின் முன் புறத்தில் நாங்கள் சென்றால் காத்திருப்பதற்கென்று தனிக் கொட்டில்கள் போடப்பட்டிருந்தன. நாங்கள் தண்ணிர் குடிப்பதற்கென்ற தனியான பானைகளும் தனியான மூக்குப் பேணிகளும் கூட வைக்கப்பட்டிருந்தன. எங்களுக்கு உள்ளே செல்ல அனுமதி மறுத்த பல கோவில்களின் தர்மகர்த்தாக்களாகவும் நிர்வாகிகளாகவும்- உரிமையாளர்களாகவும் தமிழ் காங்கிரஸ் தமிழரசுக் கட்சி என்ற இரண்டு கட்சிகளினதும் பிரமுகர்களும் தலைவர்களும் தான் இருந்திருக்கிறார்கள்.

இவ்வாறு போலித்தனமும் சுயநலமும் மிக்க தமிழ் அரசில் தலைவர்கள் மத்தியில் ஹன்டி பேரின்பநாயகம், நெவின்ஸ்.செல்லத்துரை இந்துபோட் இராஜரட்ணம் சி.தர்மகுலசிங்கம், பொன்.கந்தையா, எம் காத்திகேசு, ஏ.ஈ.தம்பர் எம்.சண்முகதாசன் முதலான பலர் உண்மையிலேயே சாதி அரக்கனை ஒழித்து சமத்துவமான தமிழ் சமூகம் ஒன்றை உருவாக்கவதற்கு பாடுபட்டார்கள்.

இவர்களை விட இன்னொருவர் அரசியலைச் சாராது உண்மையான தமிழ் அடையாளத்தையும் தமிழ் கருத்தியலையும் கண்டறிந்து அதன்படி நடப்பதன் மூலமே தமிழர்கள் ஒன்றுபட முடியும் என்றும் தமிழனமும் தமிழ் மொழியும் தழைக்க முடியம் என்றும் வலியுறுத்தினர்.
அவர் நடத்திய திண்ணைப் பள்ளிக் கூடத்திற்கே எனது பெற்றோர்கள் அன்று என்னை அழைத்துச் செல்லவிருந்தனர்.

திங்கள், 8 ஜனவரி, 2007

நினைவழியா வடுக்கள்- 2

நினைவழியா வடுக்கள்- 2
ஒரு நிமிட இடைவெளிக்குள் அந்த நெருப்புக் கோளங்கள் மறைந்துவிட்டன. அம்மாவும் ஆச்சியும் மூன்று முறை துப்பிவிட்டு என்னை தங்களுக்கு நடுவில் வரச் சொல்லிவிட்டு பயணத்தை தொடர்ந்தார்கள்.

பயம் விலகாத நிலையில் 'கொள்ளிவால் பேய் என்றால் என்ன?' என்று நான் அம்மாவிடம் கேட்டபோது 'அகால மரணமடைந்த அல்லது தற்கொலை செய்துகொண்டவர்களுடைய ஆன்மாக்கள் சாந்தி அடையாது இவ்வாறு கொள்ளிவால் பேய்களாக அலைந்துகொண்டிருப்பதாகவும் மார்கழி மாதம் கடவுளை நோக்கி தவம் செய்து முடித்துவிட்டு பொழுது புலர்வதற்கு முன்னர்; அவை தங்களது இருப்பிடங்களுக்கு செல்கின்றன என்றும் அவ எனக்கு விளக்கமளித்திருந்தா.

சிறுபிள்ளைகளை அந்த கொள்ளிவால் பேய்கள் அடித்துக் கொன்றுவிடும் என்றும் அப்படி எங்கள் ஊரில் இரண்டுபேர் உயிரிழந்ததாகவும் அம்மா என்னை பயமுறுத்தியிருந்தா.

நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது விஞ்ஞானப்பாடம் படிப்பித்த சண்முநாதன் ஆசிரியர் இந்தக் கொள்ளிவால் பேய்களுக்கு விளக்கம் சொல்லும் வரை, இருட்டிலும் இரவிலும்; வெளியில் செல்வதற்கு பயப்படும் மனோநிலையே எனக்கு இருந்தது.

பொதுவாக சதுப்பு நிலங்கள் அல்லது ஈரப்பதனுள்ள நிலங்களுக்கு அடியில் அசாதாரணமான நிலையில் தேங்கி இருக்கும் அடர்த்தி குறைந்த வாயுக்கள் அதிக அமுக்கம் காரணமாக பூமியைவிட்டு வெளிவரும் போது தீப்பற்றிக் கொள்கிறன. அந்தரத்தில் மிதக்கும் இந்தத் தீயைப் பார்த்து பயந்து ஒருவர் ஓட முற்படும் போது அவருக்கு பின்னால் ஏற்படும் வெற்றிடத்தை நோக்கி அந்த தீ பிளம்புகளும் நகர முற்படும். ஒரு ஐந்து அல்லது பத்து வினாடிகளுக்குள் நடக்கும் இந்தச் செயலையே கொள்வால் பேய் துரத்துகிறது என்று பாமர மக்கள் கருதிவிடுகின்றார்கள். இப்படியான காட்சியைப் பார்த்து அதீமாகப் பயப்படும் ஒருவருக்கு திடிரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பதற்கு சாத்தியங்கள் உள்ளன. இதையே கொள்ளிவால் பேய் அடித்து இறந்துவிட்டதாக மக்கள் நினைக்கிறார்கள்.

இது தான் கொள்ளிவால் பேய் சம்பந்தமாக எனது விஞ்ஞான ஆசிரியர் சண்முகநாதன் தந்த விளக்கமாகும்.

அன்று அந்த கொள்ளிவால் பேயின் தரிசனத்தால் நாங்கள் கோவிலுக்கு செல்வதற்கு நேரமாகிவிட்டது. நாங்கள் கோவிலின் மேற்குப்புற வாசலை நெருங்கும் போதே உதயகாலப் பூசைக்கான ஆயத்த மணி அடிக்க ஆரம்பித்துவிட்டது.

வல்லிபுரக்கோவிலின் விசாலமான நான்கு வெளிவீதிகளின் ஓரங்களிலும் பல யாத்திரிகர் மடங்களும் கிணறுகளும் இருந்தாலும் அவற்றுக்குள் நாங்கள் செல்வதற்கும் தண்ணிர் அள்ளுவதற்கும் அந்தக்காலத்தில் எங்களுக்கு உரிமை இருக்கவில்லை.

எங்களுக்கென்று கோவிலின் தென்கிழக்கு மூலையில் ஓதுக்குப்புறமாக ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கே எங்களுக்கென்று ஒரு மடம் இருந்தது. அந்த மடம் ஆண்டிச்சாமி என்பவரால் கட்டப்பட்டதால் அவரது பெயராலேயே அழைக்கப்பட்டது. அந்த மடத்தில் அருகில் இரண்டு கிணறுகள் இருந்தன.அந்தக் கிணறுகளில் தான் நாங்கள் குளிக்கவும் குடிப்பதற்கு தண்ணி அள்ள முடியும்.

அந்த மடத்தின் கிழக்குப் பக்கமாக உள்ள காணிக்குள் இருக்கும் அடர்ந்த பனைமரக் கூடல்களும், அந்தப் பனைமரங்களுக்கு போட்டியாக வானுயர வளர்ந்து நிற்கும் சவுக்கு மரக்காடும், சூரியன் சுட்டெரிக்கும் நண்பகல் வேளையில் கூட ஒளி ஊடுருவமுடியாத இருண்ட தோற்றத்தை கொடுப்பதுண்டு.

வங்கக் கடலில் இருந்து வரும் வாடைக்காற்று பனைமரங்களின் ஓலைகளைகளையும் சவுக்கு மர இலைகளையும் உரசுவதால் ஏற்படும் சோ-ஊ என்ற ஒரு வித்தியாசமான பேரோசை பகல் வேளையில் கூட எனக்கு அந்தப் பகுதியில் நிற்பதற்கு அச்சத்தை ஏற்படுத்துவதுண்டு.
அதிலும் இருள் விலகாத அதிகாலை வேளையில் அந்த இடத்தில் நின்று குளிப்பது ஏதோ மயானத்துக்கு அருகில் நின்று குளிப்பதைப் போன்ற உணர்வையே எனக்கு ஏற்படுத்தும்
.

அதிலும் அன்று கொள்ளிவால் பேய் என்று அம்மா அச்சுறுத்திவிட்டதால் அந்த இடத்தில் நிற்கவே எனக்கு பயமாக இருந்தது. ஏற்கனவே மார்கழிமாத பனிக் குளிரில் சிலிர்த்துப் போயிருந்த தண்ணிர்; உடலில் பட்டதால் எற்பட்ட நடுக்கத்தோடு கொள்ளிவால் பேயின் பயமும் சேர்ந்து கைகால்கள் வெடவெடத்து ஆடவைத்தது.

ஏற்கனவே பூசைக்கு நேரமாகிவிட்டதால் ஒரு பத்து வாளி தண்ணீரோடு அன்றைய எனது மார்கழி தோச்சல் முடிந்தவிட்டது. அம்மாவும் பாட்டியும் கூட அவசர அவசரமாக குளித்து முடிந்ததும் நாங்கள் உடை மாற்றிக் கொண்டு கோவில் வாசலுக்கு சென்ற போது திருப்பள்ளி எழுச்சிப் பூசை ஆரம்பமாகிவிட்டது.
யாரோ ஒரு விஷ்ணு பக்தை தனது கணீரென்ற குரலில்…. “மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்; நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம், கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்நாராயணனே, நமக்கே பறைதருவான், பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்” என்ற ஆண்டாள் திருப்பாவையை பாடிக்கொண்டிருந்தார்.

அந்தக் காலத்தில் வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்கு இப்போது இருப்பதைப் போன்ற இராஜகோபுரம் கிடையாது.அதற்கான அடித்தளம் மட்டும் மொட்டைக் கோபுரமாக இருந்தது.அந்த மொட்டைக் கோபுரத்தோடு சேர்த்து ஓடுபோட்ட உயரமான மண்டபம் ஒன்று இருந்தது. அந்த மண்டபம் சுற்சூத்திரர்கள் அல்லாத இடைநிலை சாதியினருக்காக அமைக்கப்பட்டிருந்தது.

அந்த மண்டபத்துக்குள் செல்வதற்குக் கூட அப்போது எங்களுக்கு அனுமதி கிடையாது. எங்களுக்கென்று அந்த மண்டபத்தின் முகப்பிலே ஒரு சாய்ப்பு இறக்கப்பட்டிருந்தது.அந்த சாய்ப்பை இறக்குவதற்கு கூட 1940க்கும் 45 க்கும் இடைப்பட்ட காலத்தில் பெரிய போராட்டமே நடத்தப்பட்டதாக எனது தாத்தா சொல்லக் கேட்டிருக்கிறேன்
.

ஆனால் எனது காலத்தில் அந்த சாய்ப்பை மூடி வேயப்பட தகரம் இத்துப் போய் அங்காங்கே பொத்தல் பொத்தலாக காட்சியளித்தது. அந்த தகரச் சாய்ப்புக்குள் நின்று பார்த்தால் கோவிலின் மூலஸ்த்தானம் சரியாகத் தெரியாது. கோவிலுக்கு உள்ளேயும் வெளிமண்டபத்திலும் நின்று கும்பிடுபவர்களின் முதுகு தான் எங்களுக்குத் தெரியும்.

பூசை முடிந்தததும் திருநீறு (அந்த ஆலயத்தில் சைவக் குருக்கள்மாரே பூசை செய்வதால் திருநீறு வழங்கப்படுவது வழக்கம்) துளசி இலை தீர்த்தம் என்பவற்றை ஏனைய பக்த கோடிகளுக்கு வழங்கும் குருக்கள்மார் எங்களுக்கு அவற்றை நேரடியாக வழங்க மாட்டார்கள். கோவில் வாசலில் அவற்றுக்கென இருக்கும் இடத்தில் அவற்றை வைத்து விட்டுப் போய்விடுவார்கள். அவற்றை நாங்களே எடுத்துக் கொள்ளவேண்டும். அவர்களுடைய கைகளால் எங்களுக்கு அவற்றை வழங்கினால் தீட்டுப்பட்டுவிடும் என்று அதற்கு அவர்கள் விளக்கம் கொடுத்திருந்தனர்.

அன்;றும் நாங்கள் அந்த தகரச் சாய்ப்புக்குள் நின்று சுவாமியை தரிசித்துவிட்டு நெற்றியில் பெரிய நாமப் பொட்டும் வைத்துக் கொண்டு வீட்டுக்கு புறப்படத் தயாரான போது சூரியன் உதித்துவிட்டது.
“நீ விரும்பினதை வாங்கிச் சாப்பிடு” என்று சொல்லி பாட்டி எனக்கு 10 சதம் தந்துவிட்டு தனது மூடல் பெட்டி வியாபாரத்தை ஆரம்பிக்கச் சென்றுவிட்டா.

அந்தக் காலத்தில் 10 சதம் என்பது பெரிய காசு. நிறையப் பொருட்கள் வாங்கலாம். எனக்கு ஐஸ் பழம் என்றால் ரொம்ப பிடிக்கும். 10 சதத்துக்கு அந்தக் காலத்தில் 3 ஐஸ் பழம் அல்லது 2 ஜஸ் கிறீம் ஹோன் வாங்கலாம். அன்று அந்த அதிகாலை நேரத்தில் ஜஸ் பழ வான்கள் ஒன்றும் வரவில்லை. அதனால் 5 சதத்துக்கு ஒரு பெரிய பை நிறைய கச்சான் வாங்கிக் கொண்டு அம்மாவுடன் வீட்டு;க்கு புறப்பட்டேன்.
போகும் போது நாங்கள் தாமரைக் குளத்துக்கு பக்கத்திலுள்ள வீதியால் சென்றதால் ஒரு 15 நிமிடத்தில் வீட்டுக்குச் சென்றுவிட்டோம். அநேகமாக நாங்கள் வீடு திரும்பிய போது காலை 7 மணி இருக்கும். எனது அப்பாவும் அன்று வழக்கத்துக்கு மாறாக அதிகாலையிலேயே தனது தொழிலை முடித்துவிட்டு வந்து குளித்துவிட்டு எங்களுக்காக காத்திருந்தார்.

என்னுடைய தந்தை எப்போதும் காலையில் எழுந்தவுடன் எங்கள் வீட்டிலிருந்து ஒன்றரை மைல் (அப்போது கிலோமீட்டர் கணக்கு வரவில்லை) தூரத்திள்ள மந்திகை சந்திக்கு சைக்கிலில் சென்று ஈழநாடு வீரகேசரி ஆகிய பத்திரிகைகளை வாங்கிக் கொண்டு வந்து மேலோட்டமாக தலைப்புச் செய்திகளை படித்துவிட்டுத்தான் தனது தொழிலுக்குச் செல்வார். அடை மழை பெய்தால் கூட அவர் அந்த வழக்கத்தை தவற விட்டதில்லை. ஆனால் அன்று என்னை அந்த புதிய பள்ளிக்கூடத்தக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்பதால் அவர் பத்திரிகை வாங்கப் போகவில்லை.
அம்மா அவசர அவசரமாக தேங்காய் துருவி சம்பல் இடித்து தோசை சுட்டுத் தர நானும் அப்பாவும் சாப்பிட்ட பின்னர் தானும் சாப்பிட்டுவிட்டு வந்து எனக்கு கரு நீல நிறத்திலான கால்சட்டையையும் வெள்ளை சேட்டையும் அணிவித்தா.இரண்டுமே புதிதாகத் தைக்கப்பட்டிருந்தன.

அந்தக்காலத்தில் எனக்கு பளிச்சிடும் வெண்மை நிறத்திலான சேட்டும்; அதே போல கருநீல நிறத்திலான கால்சட்டையும் அணிந்து கொண்டு பள்ளிக் கூடம் போவதற்கு சரியான விருப்பம். அத்துடன் காலில் செருப்பும் போட்டுக் கொண்டு பள்ளிக் கூடத்துக்கு போகின்ற போது பள்ளிக் கூடத்தில் வாங்கில்லையும் கதிரை மேசையிலையும் இருந்து படிக்கிற திமிரில் நிலத்தில் இருந்த படிக்கிற எங்களை கேவலமாக பார்க்கின்ற பொடியங்களுக்கும் பெட்டையளுக்கும் ‘நானும் உங்;களுக்கு குறைஞ்சவனில்லை’ என்று சொல்லிக் காட்டுகின்ற மாதிரியான ஒருவித மிடுக்கும் மகிழ்ச்சியும் எனது மனத்தில் இருக்கும்.

ஆனால் வீட்டிலிருந்து பள்ளிக் கூடத்துக்கு போய்; வகுப்பறைக்குள் கால் வைத்தவுடன் அந்த மிடுக்கும் மகிழ்ச்சியும் காணாமல் போய் அவமானம் அழுகை ஆத்திரம் எல்லாம் கலந்த இயலாமையுடன் கூடிய ஒருவிதமான துயர உணர்வே மனதில் இருக்கும்.

இங்கே ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட 1962 ம் ஆண்டு வந்த தீபாவளிக்கு இவ்வாறு கரு நீல நிறத்திலான கால்சட்டையையும் வெள்ளை சேட்டும் புதுச் செருப்பும் அணிந்துகொண்டு பாடசாலைக்கு சென்ற போது எனது வகுப்பில் இருந்த கதிரை வாங்கில் கூட்டத்தினர் “ இஞ்சை பார் புதுச் சேட்டு- புது கழிசான் - புதுச் செருப்பு - முதலாளி ஐயா வாறார்” என்று கேலி செய்து மனதை காயப்படுத்தினர். ஏதோ நான் பெரிய ஒரு குற்றம் செய்துவிட்டதாக அவர்கள் பார்த்த பார்வையும், கூறிய ஏளனச் சொற்களும் எனது பிஞ்சு மனதை காயப்படுத்தின.

வகுப்பில் செம்பாட்டு மண்ணுக்குள் சம்மாணி கட்டிக்கொண்டு இருக்க வேண்டும் என்பதால் அப்பா வாங்கும் வீரகேசரி பேப்பரில் ஒரு பக்கத்தை அன்று பாடசாலைக்கு கொண்டுபோயிருந்தேன்.

நிலத்தில் அந்த பேப்பர் துண்டை விரித்துவிட்டு அமர்ந்த போது எங்களது ஆசிரியரான கதிர்காமர் வாத்தியார் வெள்ளை வேட்டி வெள்ளை ஜிப்பா நெற்றியில் திருநீற்றுக்குறி சகிதம் வகுப்பறைக்குள் நுழைந்தார். நாங்கள் எல்லோரும் எழுந்து அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு அமர்ந்த போது “வாத்தியார் இண்டைக்கு எங்கட வகுப்புக்கு ஒரு பெரிய மனுசன் வந்திருக்கிறார்” என்று முன் வாங்கிலில் இருந்தவர்கள் கூறினார்கள்.
“பெரிய மனிசனா ஆரடா அது?” என்று கதிர்காமர் வாத்தியார் ஆச்சரியத்துடன் கேட்க, அவர்கள் வகுப்பறையின் ஓரத்தில் நிலத்தில் இருந்த என்னைக் காட்டினார்கள்.
தனது கண்ணை அகல விரித்து தான் நின்ற இடத்திலிருந்தே என்னை ஒரு பார்வை பார்த்த அவர் “என்ன பள்ளிக் கூடத்துக்கு படிக்கிறதுக்காக வெளிக்கிட்டு வந்தனியா-இல்லை கோயில் திருவிழாவுக்கு போறதுக்கு வெளிக்கிட்ட்டு வந்தனியா?” என்று ஏளனமாகக் கேட்டார்.
நான் நிலத்திலிருந்து எழும்பி பதில் சொல்லாமல் நின்ற போது கீழே விரித்திருந்த பேப்பர் அவர் கண்ணில் பட்டது.
“என்னடா அது?” என்று அதட்டிக் கேட்டார்.“பேப்பர்….” ஏன்று நான் கிழ்க்குரலில் சொன்னேன்.“அது பேப்பர் எண்டு எனக்குத் தெரியும். அதை ஏன் கீழே போட்டிருக்கிறாய்.அதைச் சொல்லு” என்று கர்ச்சித்தார்.“வெறும் நிலத்திலை இருந்தால் கால்சட்டை ஊத்தையா போயிடுமெண்டு தான்….” என்ற நான் தயங்கித் தயங்கிச் சொல்ல…“நீங்களே ஊத்தையங்கள்.நிலத்தில இருந்தா உங்கடை கால் சட்டை ஊத்தையா பேயிடுமோ? நீங்கள் இருக்கிறதால நிலம்தான்ரா ஊத்தையா போகுது” என்றவர் விறு விறென்று வெளியே போய் பாடசாலை கிணற்றடியில் நின்ற வாழை மரத்திலிருந்து மொத்தமான பச்சைத் தடல் ஒன்றை வெட்டிக்கொண்டு வந்தார்.
வகுப்பறையில் ஒரு நிசப்பதம்.எல்லோரும் பச்சை வாழைத்தடலுடன் வரும் காதிர்காமர் வாத்தியாரை பார்த்துக்கொண்டே இருந்தார்கள். எனக்கும் அவர் அதை ஏன் கொண்டு வருகிறார் என்று முதலில் புரியவில்லை. அந்த வாழைத் தடலால் எனது உடம்பில் பத்து பதினைந்து சாத்தல்கள் விழுந்தற்கு பின்பு தான் எனக்கு எல்லாமே புரிந்தது
.

என்னுடைய புத்தம் புதிய வெள்ளைச் சேட்டு கயர் பட்டுப் போனதும் கால்சட்டை செம்பாட்டு மண் பட்டு அழுக்காகிப் போனதும் கதிர்காமர் வாத்தியார் என்ற பெயரிலிருந்த அந்த மனித மிருகம் அடித்த அடியை விட அதிகம் வலித்தது. அன்று நான் அழுத அழுகை இன்றும் என்னுடைய வாழ்க்கையில் மறக்கமுடியாத அழுகையாக இருக்கிறது.

இந்தச் சம்பவத்துக்குப் பின்பு பள்ளிக் கூடத்தக்கு புது உடுப்பு அணிந்து செல்வதென்பது என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு கனவாகவே இருந்தது.

எனவே இந்த புதுப் பாடசாலையிலும் இப்படி நடக்குமோ? கதிர்காமர் வாத்தியாரைப் போல் ஒருவர் அங்கேயும் இருப்பாரே என்ற பயம் எனக்கு எற்பட்டது.