வியாழன், 8 பிப்ரவரி, 2007

நினைவழியா வடுக்கள்-8

நினைவழியா வடுக்கள்-8

சின்னாச்சியினுடைய தற்கொலையும் என்னுடைய அப்பு கணபதியினுடைய தற்கொலை முயற்சியும் எங்கள் ஊரில் மட்டுமல்லாது எங்களது அயல் கிராமங்களிலும் பெரும் கொந்தளிப்பை உருவாக்கிவிட்டது.

1924 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ம் திகதி மீண்டும் ஒரு உக்கிரமான சாதிக் கலவரம் வடமராட்சிப் பிரதேசத்தை உலுக்கியது.

சரியான கணக்கு தெரியாது விட்டாலும் 12க்கும் அதிகமோனோர் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது .எனது தூரத்து உறவினர்களான பறவை வேலனும் அவரது மனைவி வள்ளியும் அவர்களது ஒரே மகன் கதிரனும் அவர்களது குடிலுக்குள் வைத்து உயிரோடு எரித்துக் கொள்ளப்பட்டார்கள். 50 முதல் 60 வரையிலானோர் படுகாயப்படுத்தப்பட்டன.ஏராளமான வீடுகள் குடிசைகள் கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. 3 நாட்கள் தொடர்ச்சியாக ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அப்போது பிரித்தானிய காலணிய ஆட்சி நடைபெற்ற போதிலும் அந்த ஆட்சியின் கீழிருந்த காவல் துறை நீதித்துறை என்பவற்றில் அதிகார வர்க்கத்தை சேர்ந்தவர்களே அங்கம் வகித்தார்கள்.அத்துடன் காவல்துறை என்பது கிராமத்தலைவர் என்படும் விதானைமாரின் கீழேயே இருந்தது.அவர்கள் ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’என்பதை ‘ஆண்டைகளான அதிகார வர்க்கத்தினர் மேலானவர்கள் அடிமைகளான நாங்கள் கீழானவர்கள்’ என்று மாற்றி அமைத்தார்கள்.

ஒரு பெண் ஒரு பொது இடத்தில் வைத்து மானபங்கப் படுத்தப்பட்டதையோ அதன் காரணமாக அவள் தற்கொலை செய்து கொண்டதையோ ஒரு பெரிய விடயமாக எடுத்துக் கொள்ளாத காவல்துறையினர் ,எங்களுர் கல்வீட்டுப் போராட்டக் குழுவினரே நடந்த கலவரம் அனைத்துக்கும் காரணம் என்று குற்றம் சாட்டியதுடன் ‘சமூக ஒழுங்கை குழப்பியது’, ‘சட்டம் ஒழுங்கை சீர் குலைத்தது’ ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர்களைக் கைது செய்தது. யாழ்ப்பாண மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எனது அப்புவுக்கும் கைவிலங்கு பூட்டப்பட்டது.

பிரித்தானிய காலனிய அரசின் சட்ட விதிகளின் படி இவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றம் தேசத்துரோக குற்றத்துக்கு சமமமானதாகும். இந்தக் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் சாத்தியமும் இருந்தது.

அந்தக் காலகட்டத்தில் தீவிரமான அரசியல் செயற்பாடுகளை மேற்கொண்டுவந்த யாழ்ப்பாண வாலிபர் சங்கம் இந்த விடயத்தை கவனத்தில் எடுத்தது. சாதிய அமைப்பையும் சாதி வெறியர்களையும்
வன்மையாக கண்டித்த வந்த இந்த அமைப்பு, ‘மானத்தை காப்பதற்கு ஆடைய ஆணியும் உரிமை கேட்டுப் போராடிய மக்களை தேசத்துரோகக் குற்றத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது- எந்த வைகையில் நியாயமானது?’ என்று பிரித்தானிய காலனிய அரசிடம் கேள்வி கேட்டது.

பருத்தித்துறை நகரத்திலே இதற்கு எதிரான மறியல் போராட்டம் ஒன்றையும் நடத்திய இந்த அமைப்பு, இந்த விடயம் தொடர்பாக அப்போது பிரித்தானிய காலனிய அரசின் ஆளுனராக இருந்த வில்லியம் ஹென்றி மன்னிங் பிரபுவுக்கு மகஜர் ஒன்றையும் அனுப்பி வைத்தது.

இதை விட எமது சமூகத்தை சேர்ந்த கல்விமான்களான ஏ.பி. இராஜேந்திரா, எஸ் .ஆர்.ஜேக்கப் ஆகியோரும் இந்த விடயம் தொடர்பாக மன்னிங் பிரபுவுக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

இவற்றின் பயனாக 1924 ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் எமது சமூகத்தினினர் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

ஆளுனர் வில்லியம் ஹென்றி மன்னிங் பிரபுவின் உத்தரவின் பேரில் 1925 ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து எமது பெண்களுக்கு மேற் சட்டை அணியும் உரிமை வழங்கப்பட்டது. இந்த உரிமை சட்டமூலம் ஒன்றின் மூலம் வழங்கப்பட்டதா?அல்லது ஆளுனரின் அதிகார வரம்புக்குட்பட்ட உத்தரவொன்றின் மூலம் வழங்கப்பட்டதா என்பது தெரியவில்லை.

முதலாம் உலக யுத்தத்துக்கு பின் உலகளவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் பிரித்தனிய அரசு தனது காலணிய நாடுகளுக்கு சில சலுகைகளை வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்தக்கு தள்ளப்பட்டிருந்தது. அந்த வகையில் இலங்கையிலும் சில அரசியல் மாற்றங்களை செய்ய வேண்டிய நிற்பந்தம் பிரித்தானிய காலனிய அரசுக்கு எற்பட்டது.

குறிப்பாக இந்தியாவில் மகாத்மா காந்தியின் தலைமையில் பிரித்தானிய அரசுக்கு எதிரான சுதந்திரப் போராட்டம் கூர்மையடைந்திருந்ததும் இலங்கை தமிழர்கள் மத்தியும் அதன் தாக்கம் பரவி இருந்ததும் மகாத்மா காந்தியை தமிழர்கள் இலங்கைக்கு அழைத்ததும் பிரித்தானிய அரசின் கவனத்துக்குரிய விடயங்களாக இருந்தன.

இந்திய பெருநிலப்பரப்பில் தமது ஆட்சியை தக்க வைப்பதற்கு இலங்கைத் தீவை தமது இறுக்கமான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய தேவை பிரித்தானிய அரசுக்கு இருந்தது. கடற்போக்குவரத்தின் தேவையும் கடற்படைப் பலமும் அவசியமாக இருந்த அந்தக் காலகட்டத்தில் திருகோணமலைத் துறைமுகத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்களே தென்காசியாவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம் என்ற நிலை இருந்து.

இதனால் இலங்கைத் தீவை தங்களது இரும்புப் பிடிக்குள் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்காக தங்களுக்கு கைவந்த கலையான பிரித்தாளும் தந்திரத்தை கையாண்டனர்
.

1833 ம் ஆண்டு இலங்கை சட்டமன்றத்தில் தமிழர்களுக்கு ஒன்று சிங்களவர்களுக்கு ஒன்று என்று சமத்துவமான பிரதிநிதித்துவத்தை வழங்கிய அவர்கள் 1889 ம் ஆண்டு தமிழர்களுக்கு ஒன்று கண்டியச் சிங்களவர்களுக்கு ஒன்று கரையோரச் சிங்களவர்களுக்கு ஒன்று என்று இதை மாற்றி அமைத்தார்கள்.

இதன் மூலம் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான அதிகாரப் போட்டியை உருவாக்கிய அவர்கள் தமிழர்களுக்கு சேர் (பிரபு) பட்டங்களையும் அரச உயர் பதவிகளையும் வழங்கி இந்த முரண்பாட்டை இன்னும் வளர்த்துவிட்டனர்.

1912ம் ஆண்டு படித்த இலங்கையர்களுக்கான பிரதிநித்துவம் என்ற பேரில் புதிய சட்டமன்றப் பதவியை உருவாக்கிய அவர்கள்; இந்தப் பதவி தமிழர்களுக்கு கிடைக்கும்படி செய்து இன்னும் இந்த முரண்பாடு அதிகமாக வளர்வதற்கு அடித்தளம் இட்டனர்.

1915 ம் ஆண்டு சிங்களவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையிலான இனக்கலவரம் மூண்டபோது தமிழர் பிரதிநிதியான சேர். பொன் இராமநாதன் சிங்களவர்களுக்காக வாதாடுவதற்கு லண்டனுக்கு சென்றதும், நாடு திரும்பிய அவரை சிங்களவர்கள் பல்லக்கில் வைத்து தங்களது தோள்களில் காவிச் சென்றதும் பிரித்தானியர்களின் கண்களை உறுத்தியது.

தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான முரண்பாட்டை வளர்ப்பதில் அக்கறை கொண்டிருந்த பிரித்தானிய ஆளுனர் வில்லியம் ஹென்றி மன்னிங் பிரபு 1921 ம் ஆண்டு கொண்டு வந்த புதிய அரசியல் சீர் திருத்தச் சட்டத்தின் மூலம்; 12 சிங்களவர்களுக்கு 3 தமிழர்கள் என்ற அடிப்படையில் சட்டசபை பிரதிநித்துவத்தை மாற்றி அமைத்தார்.

இதேவேளை யாழ்ப்பாணத் தமிழர்கள் மத்தியில் நிலவிய சாதிய முரண்பாட்டை கையாண்டு தமிழர்களை ஒன்றுபடவிடாமல் தடுக்கும் முயற்சிகளையும் மெற்கொண்டார்.

அந்தக்காலகட்டத்தில் ‘சாதியம் என்பது தமிழரின் பிறப்புரிமை என்றும் உயர் சாதியில் பிறப்பது கடவுள் கொடுத்த வரம்’என்றும் இறுமாப்புக் கொண்டிருந்த சேர். பொன்னம்பலம் இராமநாதன் போன்றோரின் சாதிய வெறியை தேசவழமைச் சட்டத்தை மதிப்பதாக கூறிக்கொண்டு ஊக்குவித்த அவர், மறுபுறத்தில் இந்த சாதியத்தக்கு எதிராக போராடியவர்களுடைய கோரிக்கைளை நிறைவேற்றுவது என்ற பேரில் சில சலுகைகளை வழங்கியதன் மூலம் இந்த முரண்பாடு தொடர்ந்து நீடிக்கும் வகையில் பார்த்துக் கொண்டார்.

சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் கட்டாய ஆரம்பக் கல்வி,அரசாங்கப் பாடசாலைகளில் ஒரே வகுப்பில் இருந்து கல்வி கற்பதற்கு அனுமதி, பாடசாலைகள் மற்றும் உயர் கல்விநிறுவனங்களில் ஒரே இடத்தில் இருந்து உணவு உண்பதற்கு அனுமதி? பொது மயானங்களில் பிணங்களை எரிப்பதற்கு (முன்பு சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்கு தனியான மயானங்கள் இருந்தன) பெண்கள் மேலாடை அணிவதற்கு அனுமதி என்பன மன்னிங் பிரபுவால் எமக்கு வழங்கப்பட்ட சலுகைகளாகும்.

ஆனால் இந்தச்சலுகைகள் வழங்குவதை தடுப்பதற்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டு சட்டசபையிலே வீற்றிருந்த யாழ்ப்பாண அதிகார வர்க்கத்தினர் மேற்கொண்ட முயற்சிகள் தமிழர் வரலாற்றில் கறைபடிந்த அத்தியாயங்களாகும்.
முதலாம் உலக யுத்தக்காலத்தில் சிங்களவர்களுக்காக ஆபத்து நிறைந்த கடலில் இங்கிலாந்துக்கு பயணம் செய்து பிரித்தானிய அரசிடம் நியாயம் கேட்டு வாதாடிய சேர். பொன். இராமநாதன் தனது சொந்த மொழியான தமிழ் மொழியை பேசிய - தான் போற்றிய சைவ சமயத்தை பின்பற்றிய எமக்கு பிரித்தானிய அரசு அற்ப சொற்ப உரிமைகளை வழங்க முன்வந்த போது மூர்க்கத்தனமாக எதிர்த்தது யாழ்ப்பாண அதிகார வர்க்கம் எந்த அளவுக்கு சாதி வெறியில் மூழ்கியிருந்து என்பதற்கு சிறந்த உதாரணமாகும்.

1920 களின் முற்பகுதியில் யாழ்ப்பாண வாலிபர் சங்கத்தின் தீட்டாமை ஒழிப்பு பிரச்சாரங்களும் ‘உழுபவனுக்கே நிலம் சொந்தம்’என்ற கோசத்துடன் வேகமாகப் பரவிய பொதுவுடமைச் சிந்தாந்தத்தின் தாக்கமும் பிறப்பைக் கொண்டும் செய்யும் தொழிலைக் கொண்டும் காலகாலமாக இழிவு படுத்தப்பட்டும் அடிமைப்படுத்தப்பட்டும் வந்த எமது மக்களை கிளர்ந்தெழச் செய்தன. புலோலி, அல்வாய் கரவெட்டி, சாவச்சேரி யாழ்ப்பாணம், சங்கானை ,சுண்ணாகம் பண்டத்தரிப்பு முதலான பல பகுதிகளில் இந்த எழுச்சி தீவிரமடைந்தது.

அந்தக்காலகட்டத்தில் கொம்யூனிஸ்ட் கட்சி என்று ஒன்று இலங்கையில் இருக்கவில்லை. ஆனால் அந்த சித்தாந்தத்தின் மீது அபிமானம் கொண்ட சிலர் அதை ஒரு மக்கள் இயக்கமாக புரட்சி இயக்கமாக வளர்த்தெடுக்க முற்பட்டதாக அப்பு தெரிவித்தhர்.

ஆனால் யார் அந்த இயக்கங்களை நடத்தினார்கள்? யார் அந்த அமைப்புக்கு தலைமை தாங்கினார்கள்? என்ற விபரங்கள் அவருக்குத் தெரியவில்லை. கதிரேசன், கார்திகேசு, கந்தையா என்ற மூன்று பேர் அந்தக் காலகட்டத்தில் தங்கள் மத்தியில் வந்து பொதுவுடமை பிரச்சாரம் செய்ததாகவும், அதில் ஒருவர் பருத்தித்துறையையும் மற்றவர் யாழ்ப்பாண நகரத்தையும் இன்னொருவர் அல்வாயையும் சேர்ந்தவர் என்றும் அவர் கூறியருந்தார். வரலாற்று ஆவணங்களில் இருந்து அவர்கள் யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. சில வேளைகளின் எனது அப்பு அறிந்த அந்தப் பெயர்கள் அவர்களது புனை பெயர்களாகக் கூட இருந்திருக்கலாம். கந்தையா என்ற பெயர் 60 களில் கொம்;யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பருத்தித்துறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பொன் கந்தையா தானா? என்பதையும் உறுதிப்படுத்த முடியவில்லை.

இந்த நூலை படிக்கும் ஒருவருக்கு ஒரு எட்டுவயது சிறுவனால் இவ்வளவு தகவல்களை எப்படி கிரகித்திருக்க முடியும்? எப்படி இவற்றை எல்லாம் ஞாபகம் வைத்திருக்க முடியும்? என்ற சந்தேகம் எழக் கூடும். உண்மையில் நான் இங்கே குறிப்பிடும் எனது காலத்துக்கு முந்திய அனைத்துத் தகவல்களும் கந்த முருகேசனார் என்ற ஆசான் என்னுள் எழுப்பிய தேடல் உணர்வின் காரணமாக என்னுடைய அப்பு ஆச்சி அப்பா அம்மா மற்றும் என்னுடைய ஊரைச்சேர்ந்த பெரியவர்கள் எனக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் பல்துறை சார் அறிஞர்கள் என்று பலரிடம் கேட்டு தெரிந்து கொண்டு வரலாற்று நூல்களோடு அவற்றை ஒப்பிட்டுப் பார்த்து தொகுத்த எனது 20 முதல் 25 வருட கால தேடலினதும் ஆய்வினதும் முடிவுகளையே வரலாற்று ஓட்டம் கருதி எனது எட்டாவது வயதில் நடந்த பதிவாக இங்கே தருகிறேன்.

1920 களில் எமது சமூகத்தினர் மத்தியில் ஏற்பட்ட இந்த எழுச்சி குடாநாட்டு அதிகார வர்க்கத்தை அச்சங்கொள்ள வைத்தது. இது தங்களுடைய இருப்பையும் ஆளுமையையும் பாதித்தவிடும் என்று கருதிய அவர்கள் ‘பொதுவுடமை சித்தாந்தவாதிகளும், யாழ்ப்பாண வாலிபர் சங்கத்தினரும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் காலாகாலமாக நிலவிவந்த தேச வழமைகளை அழிப்பதற்கு முயல்கிறார்கள்’ என்று பிரித்தான காலணிய அரசிடம் முறையிட்டனர். இந்த இரண்டு அமைப்புக்களுமே பிரித்தானிய அரசின் நலனுக்கு எதிரானவர்கள் என்றும் இவர்கள் சாதி குறைந்த படிப்பறிவற்ற வன்முறைக் கும்பலை திரட்டி பிரித்தானிய அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்ய திட்டமிடுகிறார்கள் என்றும் அவர்கள் போட்டுக்கொடுத்தனர்.

தங்களுடைய அறியாமையினாலும் சாதி வெறியினாலும் யாhழ்ப்பாண அதிகார வர்க்கத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்தக்காட்டிக் கொடுப்பே தமிழினம் பௌத்த சிங்களப் பேரினவாதிகளிடம் அடிமைப்பட்டுப் போவதற்கு அடித்தளமாக அமைந்தது.

இலங்கையில் பிரித்தானிய ஆட்சி பிரச்சனையின் தொடர்வதற்கு தமிழர்களுக்கும் சிங்களவர்களையும் பிரித்தாளும் தந்திரத்தின் மூலம் பிளவு படுத்த வேண்டும் என்ற எண்ணப்பாட்டை கொண்டிருந்த பிரித்தானிய ஆளுனர் வில்லியம் ஹென்றி மன்னிங் பிரபு இதை யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள ஆண்டைகளுக்கும் அவர்களது குடிமைகளான அடிமைகளுக்கும் இடையிலான பிரச்சனையாகப் பார்க்கவில்லை.

காந்திய சிந்தனைகளும் கொம்யூனிச சிந்தனைகளும் ஒட்டுமொத்த தமிழர்கள் மத்தியிலும் பரவுவதாகவே அவர் பார்த்தார். இலங்கைத் தமிழர்களுக்கும் இந்தியத் தமிழர்களுக்கும் உள்ள மொழி மற்றும் பண்பாட்டு ரீதியான உறவையும், யாழ்ப்பாண அதிகார வர்க்கத்துக்கு அந்தக்காலகட்டத்தில் இந்தியப் பெரு நிலப்பரப்புடன் இருந்த வணிக மற்றும் கல்வி கலாச்சார ரீயிலான தொடர்புகளையும்; முடிச்சுப் போட்டுப் பார்த்த அவர் இது நிண்ட கால நோக்கில் பிரித்தானிய அரசின் நலன்களுக்கு பாதகமாக அமையும் என்ற முடிவுக்கும் அவர் வந்தார்.

எனவே பிரித்தானிய அரசின் நீண்டகாலத் தேவைக்காக அரசியல் ரீதியாக சிங்களவர்களை உயர்த்தி தமிழர்களை தாழ்த்தும் நிலைப்பாட்டை அவர் எடுத்தார். அதேவேளை பட்டம் பதவிகளுக்காகாக விலைபோகும் ஒரு கூட்டமாக தமிழர்களை மாற்றுவதற்காக நிர்வாக ரீதியாக சிங்களவர்களை தாழ்த்தி தமிழர்களை உயர்த்தினார்,தமிழர்கள் சிறந்த நிர்வாகிகள் சிறந்த கல்வியாளர்கள் என்று ‘வஞ்சப் புகழ்ச்சி’ செய்தே அரசியல் உரிமைகளின் தேவையை அவர்கள் உணராதபடி செய்தார்.
தமிழர்கள் மத்தியில் விடுதலை உணர்வோ தேசிய உணர்வோ தலையெடுக்க விடக் கூடாது என்பதில் பிரித்தானிய ஆளுனர் வில்லியம் ஹென்றி மன்னிங் பிரபு மிகக் கவனமாக இருந்தார்.

‘கொம்யூனிசம்’ என்ற சொல்லே அகராதியில் இருந்து நீக்கப்பட வேண்டிய ஆபத்தான சொல் என்று கருதி வந்த அவர் உடனடியாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் நடைபெற்றுவரும் பேராட்டங்களையும் அவற்றை நடத்தும் அமைப்புக்களையும் கண்காணிக்கும் படியும் கொம்யூனிஸ்டுகளை கைது செய்து தண்டிக்கும் படியும் மாவட்ட ஆளுனருக்கும் காவல்துறையினருக்கும் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்தார்.

பிரித்தானிய எஜமான் எள் என்று சொன்னால் எண்ணையுடன் வந்து நின்று பழக்கப்பட்ட யாழ்ப்பாண அதிகார வர்க்கம் எமது சமூகத்தை புரட்டி எடுத்து.

“மனுசங்கடா-நாங்கள் மனுசங்கடா!உன்னைப் போல-அவனைப்போல உரிமையுள்ளமனுசங்கடா-நாங்கள் மனுசங்கடா!” என்று என்று உரிமைக் குரலெழுப்பிய எமது முன்னோர்கள்,ஈவிரக்கமின்றி அடித்து நொறுக்கப்பட்டார்கள்

1920 களின் முற்பகுதியில் பிரித்தானிய ஆளுனர் வில்லியம் ஹென்றி மன்னிங் பிரபுவின் ஆட்சிக்காலத்தில் எமது சமூகத்தினர் மத்தியில் எற்பட்ட எழுச்சியும் விடுதலை உணர்வும் அந்த தசாப்தத்தின் பிற்பகுதியில் தயவு தாட்சண்ணயமின்றி நசுக்கப்பட்டுவிட்டது.

எங்களுர் கல் வீட்டு போராட்டக் குழு காவல்துறையினரின் வெறியாட்டத்தக்கு அஞ்சித் தலைமறைவாகியது.அந்தக் குழுவில் இருந்த எனது பெரிப்பாவின் மாமனார் இளைஞான் வன்னிக்கும் எனது அப்பு திருகோணமலைக்கும் ஏனையோர் யாழ்ப்பாணத்துக்கும் என்று இடம்பெயர்ந்து சென்றுவிட்டனர்.

எங்களுர் ஆண்டைகள் ஒற்றுமையாக இருந்த எமது ஊரையும் வல்லிபுரக் குறிச்சி கொத்தியவத்தை என்று இரண்டாகப் பிரித்துடன் எங்களுக்குள்ளளேயே குழுமோதல்களையும் தூண்டிவிட்டனா.;

ஆண்டைகளை எதிர்ப்பதும் காலகாலாமாக தேச வழமை என்ற பெயரில் இருந்தவரும் சாதிய ஒழுங்கை மாற்றுவதும் முடியவே முடியாத காரியம் என்றும் அவ்வாறு அதை மாற்ற நினைப்பது பேரழிவிலேயே போய் முடியும்’ என்றும் அவர்கள் திட்ட மிட்டு படிப்பறிவு இல்லாத எமது மக்களை நம்பச் செய்தனர்.

தாழ்ந்த சாதியல் பிறப்பது அவரவர்களது தலைவிதி என்றும் ஒருவர் தனது பெயரை மாற்றலாம் ஊரை மாற்றலாம் மதத்தை மாற்றலாம் ஆனால் பிறப்பையோ அதனால் வரும் சாதிய அடையாளத்தையே மாற்ற முடியாது என்று அதற்கு வியாக்கியானமும் செய்தார்கள்.