செவ்வாய், 10 ஏப்ரல், 2007

தமிழ் தேசியமும் கோடம்பாக்க மாயையும்


கோடம்பாக்கம் எனறு நான் குறிப்பிட்டது தமிழ் சமூகத்தின் கருத்தியல் தளத்தை சீரழிக்கும் கருத்துருவாக்கத்தின் குறியீட்டை மட்டுமே.
அந்த கருத்துருவாக்கத்தளம் தமிழர் விரோத சக்திகளால் தான் கட்டுப்படுத்தப்பட்டு ஆளுமை செய்யப்பட்டு வருகிறது.அந்தத் தளத்திலே மாற்றுச் சினிமா முற்போக்கு சிந்தனை மற்றும் தமிழ் தேசிய ஆதரவு என்பவற்றைக் கொணட பலர் இருக்கிறார்கள்.ஒருசிலர் இந்த ஆதிக்க சக்திகளுடன் சமரசம் செய்து கொண்டு இருப்பை தக்க வைத்துக் கொள்ள முயல்கிறார்கள்.அதை விரும்பாதவர்கள் தங்களது திறமையை கனவுகளை வெளிக்காட்ட முடியாமல் முடங்கிப் போய் உள்ளார்கள்.ஓரளவுக்கு தமிழ் தேசிய ஆதரவு தளத்தில் செயற்படும் தங்கர் பச்சான் நடிகைகளின் செயற்பாட்டை கண்டித்ததற்காக அவர்களது காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட வைக்கப்பட்டதை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
அடுத்து இந்தக் கோடம்பாக்கத்து கருத்துருவாக்கத்தளம் ‘ரோ’ எனப்படும் இந்திய புலனாய்வுத்துறையினாலும் மத்திய கொள்கை வகுப்பு பிரிவினராலும் கட்டுப்படுத்தப் படுகிறது. முதலிட்டாளர்கள் தணிக்கை சபை உறுப்பினர்கள் மற்றும் நான் இங்கே பெயர் குறிப்பிட விரும்பாத சில பெரும் நடிகர்கள் தயாரிப்பாளர்கள் மூலமாக இந்த ஆளுமை செலுத்தப்படுகிறது.தமிழ் கருத்தியல் தமிழ் தேசிய உணர்வு என்பன இந்த சினிமா என்ற ஊடகத்தினுடாக மக்கள் மத்தில் பரப்பப்பட்டு விடக் கூடாது என்பதில் இந்திய புலனாய்வுத்துறையினரும் மத்திய கொள்கை வகுப்பு பிரிவினரும் மிகக் கவனமாக இருக்கிறார்கள்.1985 க்கும் அதற்கு பின்பும்(அதாவது எமது போராட்டம கூர்மையடைவதற்கு முன்னர்) வெளிவந்த தமிழ் திரைபடங்களை எடுத்து ஆய்வுக்குள்ளாக்கினால் இந்த உண்மை உங்களுக்குப் புரியும்.

நான் இதை ஊகத்தின் அடிப்படையில் சொல்வதாக நினைக்க வேண்டாம். விடுதலைச் செயற்பாடுகளுக்காக (1982லிருந்து 87 வரை ) தமிழகத்தில் தங்கியிருந்த காலத்தில் கோடம்பாக்கத்தின் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் பலருடன் நேரடித் தொடர்பு இருந்ததன் அடிப்படையிலேயே இதை சொல்கிறேன். 1985 ம் ஆண்டு எமது 1983 இனக்கலவரத்தை படமாக எடுக்க முயன்ற ஒரு பிரபல இயக்குனர் ரோ அதிகாரிகளால் நேரடியாக எச்சரிக்கப்பட்டதை அடுத்த தனது முயற்சியை கைவிட்டார்.; அடுத்து அவர் இயக்க முயன்ற படங்களுக்கு எவரும் முதலீடு செய்ய முன்வரவில்லை. ஆர்.கே.செல்வமணி விஜயகாந்தை வைத்து தயாரித்த குற்றப்பத்திரிகை படம் எந்த விதத்திலும் தமிழ்தேசிய ஆதரவு நிலைப்பாட்டை கொண்டிருக்காத போதிலும் அரசியல் காரணங்களுக்காக அதற்கு கொடுக்கப்பட்ட அழுத்தம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
இப்போது ‘சாதியம்’ ‘றவடீசம்’ ‘போராளிகளும் தற்கொலைப் போராளிகளும் மூளைச் சலவை செய்யப்பட்ட பயங்கரவாதிகள்’ ‘மக்களின் உரிமைப் போராட்டங்களை அடக்கி ஒடக்கும் காவல்துறையினர்; மேலானவர்கள்’ என்கின்ற கருத்தியல்கள் தான் கோடப்பாக்க சினிமாவின் அடிப்படை கருத்தியலாக இருக்கிறது.விதி விலக்காக ஒன்று இரண்டு நல்ல படங்கள் வெளி வந்தாலும் அவற்றை இந்த கோடம்பாகக் மேலாதிக்க கருத்தியலை தாண்டி வெளிக் கொண்டுவருவதற்கு அவற்றின் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் பட்டபாடு வெளியே தெரிவதில்லை.

என்னுடைய கோரிக்கை ரோவினால் வழி நடத்தப்படும் கோடம்பாக்க ஆதிக்க சினிமாவை சீரழிவு சினிமாக்களை நிராத்து அந்தத் தளத்திலிருந்ர மிகப்பெரிய போராட்டத்தின் மத்தியில் வெளிவரத்துடிக்கும் மாற்றுச் சினிமாவுக்கும் மாற்றுச் சினிமா இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கும் புலம் பெயர்ந்த தமிழர்களும் ஊடகங்களும் ஊக்கமளிக்க வேண்டும் என்பதேயாகும். இதைத் தான் நான் ஆரம்பத்தில் இருந்து வலியுறுத்தி வருகிறேன்.

இன்றைக்கு புலம் பெயர்ந்த தமிழ் சமூகம் கோடம்பாக்க தமிழ்சினிமாவின் சந்தையை ஓரு குறிப்பிட்ட அளவுக்கு தீர்மானிக்கின்ற சக்தியாக இருக்கிறது. இதை தொலை நோக்குப் பார்வையோடு அணுகி தமிழ் தேசிய ஆதரவையும் மாற்றுச் சினிமா பார்வையையும் கொண்ட தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் தங்கள் படைப்புக்களை வெளிக் கொண்டவருவதற்கு உதவ வேண்டும் என்பதே எனது வேண்டுகோளாகும்.

இன்றைக்கு பாரிஸ் இலண்டன் போன்ற பெரு நகரங்களில் வன்முறையில் ஈடுபடும் இளைஞர் குழுக்களுக்கு கில்லி விஜயின் பாணிதான் முன் மாதிரியாக இருக்கிறது.

இன்றைக்கு புலம் பெயர்ந்த தமிழ் சமூகம் எப்படி இருக்கிறது? பாரிஸ் போன்ற பெரு நகரங்களில் 5 திருமணங்களில் 3 திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன.10 க்கு 8 பெற்றோர் வயது வந்த தங்களது பிள்ளைகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறார்கள்.10 க்கு 6 இளைஞர்கள் திசை மாறி தெருவுக்கு வருகிறார்கள்.10 க்கு 2 முதியவர்கள் பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில் முதியோர் இல்லங்களுக்கு செல்லும் நிலையில் இருக்கிறார்கள்.100 க்கு ஒருவர் அடையாளம் இழந்து 24 மணிநேரக் குடிகாரர்களாகி தெருவுக்கு வருகிறார்கள்.

இந்தக் கோடம்பாக்க கழிசடை சினிமாவை தூக்கிப் பிடிப்பவர்களைப் பார்த்து அதை காட்டித்தான் மக்களை அணி திரட்ட முடியும் என்பதைப் பார்த்து எனக்கு அளவுக்கதிகமாக கோபம் வருகிறது என்றால் என் வாழ்க்கையின் பெரும் பகுதியை சாவு இரத்தம் அவலம் என்பவற்றை களத்தில் நின்று அனுபவித்தவன். நாங்கள் இங்கே எங்கள் கடமையை சரிவர செய்யத் தவறும் ஒவ்வொரு நாளும் அங்கே தாயகத்திலே ஒவ்வாரு போராளியின் மக்களின் உயிர்கள் போய்க் கொண்டிருக்கிறதே என்று துடிப்பதேயாகும்.

2003 ம் அண்டு நான் வன்னிப் பெரு நிலப் பரப்புக்குச் சென்ற போது கரிப்பட்டமுறிப்பு பகுதியில் ஒரு இடத்தை எனக்கு கூட்டிக்கொண்டு சென்று காட்டினார்கள்.
அந்த இடத்தின் முக்கியத்துவம் என்ன வென்றால் ஏ9 நெடுஞ்சாலை மீட்புச் சமரின் போது வாழ்வா சாவா என்ற ரீதியில் அங்கே சிறீலங்காவின் அக்கிரமிப்பு படைகளுக்கும் எமது போராளிகளுக்கம் இடையில் நேரடிச் சமர் நடந்தது.
பெண் போராளிகள் அணி ஒன்று எதிரியின் ஆக்கிரமிப்பு வியூகத்தை உடைப்பதற்காக எதிரிக்கு மிக சமீபமாக நின்று மோட்டார் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. எதிரியோ எறிகணைகளை மழையாகப் பொழிந்து கொண்டிருக்கிறான்.எமது போராளிகள் எண்ணி எண்ணி எதிரியின் இலக்குகளை நோக்கி தங்களிடம் அந்தக்கள முனையில் இருந்த ஒரே ஒரு மோட்டார் மூலம் எதிர் தாக்குதல் நடத்துகிறார்கள். அந்தப் பெண் போராளிகள் அணி அந்த களமுனையை உடைத்தால் தான் பின்னால் வரும் போராளிகள் அணி எதிரிகளை அழித்து அந்தப்பகுதியை மீட்கமுடியம் என்ற நிலை.அந்தப்பெண் போராளிகள் தோற்றுப் போய்விட்டால் பின்னால் வரும் போராளிகள் அணி அழிக்கப்படுவதோடு ஏ9 நெடுஞ்சாலை உட்பட வன்னிப் பெருநிலப்பரப்பின் பெரும்பகுதி சிறீலங்கா படைகளின் ஆக்கிரமிப்பக்கு உள்ளாகும் நிலை ஏற்படும்.இந்த நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட பெண் போராளிகள் மோட்டரை வைத்திருந்த இடத்தை நோக்கி எதிரியின் எறிகணை ஒன்று மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது. அந்த எறிகணை அந்த இடத்தில் விழுந்து வெடிக்கும் போது அந்த மோட்டார் அழிக்கப்பட்டுவிடம் அல்லது சேதப்படுத்தப்பட்டுவிடும்.அந்த மோட்டர் செயலிழந்தால் அந்தத் தாக்குதலே தோல்வியடைந்து விடும; பல நூற்றுக்கணக்கான போராளிகள் எதிரியால் கொல்லப்பட்டு விடுவார்கள். ஒரு சில விநாடிகள் தான் ஒரு பெண் போராளி இதை பற்றி சிந்திக்கின்றாள். கண்ணிமைக்கும் நேரத்தில் அவள் பாய்ந்து சென்று அந்த மோட்டாரை கட்டிப்பிடித்துக் கொள்கிறாள்.எதிரியின் எறிகணை வீழ்ந்து வெடித்து அவளது தலை துண்டாடப்பட்டு தனியாகப் பறக்கிறது. மோட்டார் சேதமின்றிக் காப்பாற்றப்படுகிறது.மோட்டரோடு சேர்ந்து உயிரற்ற தலையறற அவளது உடல் தரையில் சாய்கிறது. அவளது ஈடுஇணையற்ற ஈகத்தைக் கண்டு அதீத உத்வேகம் பெற்ற பெண்போராளிகள் ஏதிரி மீது மூர்கத்தனமான தாக்குதலை தொடக்கிறார்கள். எதிரி ஓட ஓட விரட்டப்படகிறான். ஏ9 நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் போது பல்வேறு விமர்சனங்களை வைத்த புலம் பெயர்ந்த தமிழர்கள் பலருக்கு அந்தப் போராளி செய்த தியாகத்தின் பலனாகத்தான் அவர்களால் அந்தப் பாதையில் பயணிக்க முடிந்தது என்பது தெரியுமா?
இப்படி பல நூற்றக்கணக்கான வீர வரலாறுகள் தியாக வரலாறுகள் எங்கள் மண்ணிலே இருக்கின்றன.மக்களுடைய அவலங்கள் ஏராளமாக இரக்கின்றன. இவற்றை மாற்றுச் சினிமா என்ற வரையறைக்குள் உட்படுத்தி பதிவு செய்ய வேண்டும்.- அந்த வேலைக்கு புலம் பெயாந்த ஊடகங்களும் புலம் பெயர்ந்த மக்களும் உதவ வேண்டும் என்பது தானே எனது கோரிக்கை.

சினிமா என்ற மக்கள் தொடர்பு சாதனம் பிறந்த இடம் பாரிஸ். உலகப் புகழ்பெற்ற உலகளவில் சாதனை படைத்த பல சினிமா இயக்குனர்கள் பாரிசிலுள்ள சினிமா கல்லூரிகளில் தானே தமது கல்வியை கற்றிருந்தார்கள்.3 முதல் 5 வருடங்கள் கொண்ட அந்தப்படிப்பை எங்களது இளைதலைமுறை படிப்பதற்கு எமது ஊடகங்கள் ஊக்கவிக்க வேண்டும் பொருளாதார ரீதியாக உதவவேண்டு என்பது தானே எனது கோரிக்கை.
எதுவும் தெரியாமல் எல்லாம் தெரியும் என்று பாசாங்கு செய்கின்ற போக்குத் தானே எமது ஊடகங்களில் நிறைந்திருக்கிறது.
மக்கள் மத்தியில் அரசியல் வேலை செய்வதில் மக்களை அணி திரட்டுவதில் நீண்ட அனுபவம் உள்ளவன் என்ற வகையில் சில கேள்விகளை கேட்கவிரும்புகிறேன்?
மேலே நான் குறிப்பட்ட போராளியின் தியாகம் -ஒரே ஒரு கைத்துப்பாக்கியுடன் பேராட்டத்தை ஆரம்பித்து இன்று அதை வான்படையை கட்டும் அளவுக்க வளர்த்தெடுத்த தேசியத்தலைவரின் ஆளுமை இவற்றை ஒருபுறமும் விஜப் அஜித் அசின் நயன்தாரா வகையராக்கள் நடிக்கும் சினிமாக்களையும் எடுத்துச் சொல்லி மக்களிடம் ஆதரவு கேட்கச் செல்வோம்.வீடுவீடாகச் செல்வோம். இதிலே எந்த தளத்திலே மக்களின் ஆதரவை திரட்டுவது நிரந்தரமானதாக இருக்கும்?கோடம்பாக்க கழிசடை கலாச்சாரத்தை ரோவினுடைய விருப்பத்தை வெளிப்படுத்தும் உடகங்களுக்கு எதிராக போராளிகளின் ; தியாகம் - தேசியத்தலைவரின் ஆளுமை. மக்களின் அவலங்கள் இவற்றை உரிய ஊடக வடிவ வெளிப்பாட்டு முறையில் பதிவாக்கி மக்கள் முன் எடுத்துச் சென்றால் அவர்கள் எங்களை விட்டுவிட்டு புது சினிமாவை நோக்கித்தான் ஓடுவார்களா?

கற்பனையில் புனையப்படும் கோடம்பாக்க இம்சைத் தொடர்களுக்கு பதிலாக எங்கள் மக்களுடைய அவலங்களை அவர்களது இடப்பெயர்வின் சோகங்களை எங்கள் மண்ணிலும் புநை;துள்ள கதைகளை இப்போதைக்கு குறைந்த பட்சம் தமிழகத்தின் தமிழுணர்வுள்ள இயக்குனர்களை வைத்து தயாரித்து வெளியிட்டால் எங்கள் மக்கள் பார்க்கமாட்டார்களா?

புலம் பெயாந்த யூதர்கள் பாரிசிலும் நியூயோhக்கிலும் லண்டனிலும் உள்ள சினிமாகல்லூரிகளில் கல்வி கற்று தங்களுடைய முதலீடுகளை போட்டு படம் எடுத்து தங்களது திறமையை நீரூபித்துத்தானே ஹொலிவுட்டுககு; கால் பதித்தார்கள். இந்த முன் மாதிரியை நாங்கள் பின்பற்ற வேண்டும் என்ற தானே நான் வலியுறுத்துகிறேன்.

ஓராயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாததை ஒரு காட்சிப்பதிவால் ஒருபடத்தால் சொல்ல முடியும் என்பதை தமிழன விரோதிகள் நன்கு தெரிந்துவைத்துக்கொண்டு துறைசார் ரீதியில் அதை திட்டமிட்டு பயன்படுத்துகிறார்கள்.ஆனால் நாங்கள்….. ?

இறுதியாக இப்போது நான் இவ்வாறு சொல்வதும் எழுதுவம் சிலருக்கு பைத்தியக்காரத் தனமாகத் தோன்றலாம்.இதை சொல்வதற்கு உனக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று சிலர் கேட்கலாம்.ஆனால் இன்னொரு பத்து வருடத்தில் இந்த சிரழிவு கலாச்சாரத்தை தமிழ் கலாசச்hரம் என்ற சொல்லி விதைப்பதன் அறுவடையை புலம் பெயர்ந்த சமூகம் செய்யும் போது இப்படி ஒருவர் முன்பே சொன்னாரே என்று ஒரு சிலராவது நான் உயிரோடு இல்லாவிட்டாலும் என்னை நினைவு கூருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.நான் மீண்டும் சொல்கிறேன் நாங்கள் இங்கே புலம்பெயர்ந்த நாடுகளில் எங்கள் கடமையை சரிவர செய்யத் தவறும் ஒவ்வொரு நாளும் அங்கே தாயகத்திலே ஒவ்வாரு போராளியின் மக்களின் உயிர்கள் போய்க் கொண்டிருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.

திங்கள், 9 ஏப்ரல், 2007

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

பிரெஞ்சுக் காவல்துறையினர் எங்களது செயற்பாட்டாளர்களை கைது செய்த நடவடிக்கையானது எமது விடுதலைப் போராட்டத்துக்கு எதிரானது-விடுதலைப்புலிகள் அமைப்பை ஒழிப்பதற்கும் அவர்களது செயற்பாடுகளை முற்றுமுழுதாக கட்டுப்படுத்துவதற்கும் பிரான்ஸ் அரசாங்கம் தீர்மானித்து விட்டது. சிறீலங்கா அரசாங்கத்தின் செயற்பாடுகளை பிரான்ஸ் அரசாங்கம் ஆதரிக்கிறது என்று பலரும் கருகிறார்கள். தேசத் துரோகிகளும் சிறீலங்கா அரசும் இதை அப்படித்தான் சித்தரிக்க முயல்கிறார்கள்.
ஐரோப்பிய ஒன்றியத்தால் விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்ட போது பல ஐரோப்பிய நாடுகளில் பொது இடங்களில் புலிக்கொடி வைத்திருப்பதற்கும் தேசியத் தலைவரது படத்தை வைத்திருப்பதற்கும் கூட தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் பிரான்ஸ் அரசாங்கம் எங்களுடைய விடயத்தில் கண்டும் காணாமல் செயல்படுகின்ற நெகிழ்வுத் தன்மையான ஒரு போக்கையே கடைப்பிடித்து வந்தது.
சந்திரிகா தனது ஆட்சிக்காலத்தில் இங்கு வந்து பிரான்சின் அரசுத் தலைவர் ஜக் சிராக்கை சந்தித்து ரிரின் தொலைக்காட்சியையும் ஏனைய உப அமைப்புக்களையும் தடைசெய்யும் படியும் எமக்கு எதிராக தனது அரசு நடத்தும் போருக்கு பொருளாதார மற்றும் ஆயுத உதவி வழங்கும்படியும் விடுத்த வேண்டுகோளை அவர் ஏற்க மறுத்துவிட்டார். பாரிசின் இதயம் என வர்ணிக்கப்படும் ஈபிள் கோபுரப் பகுதியில் நாங்கள் ‘சாவிலும் வாழ்வோம்’ நிகழ்வை நடத்தவும் அந்த இடத்தில் தமிழீழ தேசியக் கொடி ஏற்றவும் பிரான்ஸ் அரசாங்கம் அனுமதிஅளித்தது. இந்த விடயங்கள் பிரான்ஸ் அரசின் வெளிநாட்டுக் கொள்கையுடன் சம்பந்தப்பட்டவையாக இருந்தன.
ஆனால் இப்போது அதிரடியாக எமது செயற்பாட்டாளர்களை பிரெஞ்சுக் காவல்துறையினர் கைது செய்ததற்குக் காரணம் பிரான்ஸ் அரசின் உள் நாட்டுக் கொள்கையாகும்.
அதாவது எதிர்வரும்; ஏப்ரல் 22 ம் திகதி பிரான்சின் அரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில் தற்போது ஆட்சியில் இருக்கும் வலதுசாரி கூட்டணி அரசுக்கு பிரான்சில் புலம்பெயர்ந்து வந்த வாழும் வெளிநாட்டு இளைஞர்கள் மத்தியில் பரவிவரும் வன்முறைக் கலாச்சாரம் தான் பிரதான சவாலாக உள்ளது. கடந்த வருடம் பாரிசின் புறநகர் பகுதியில் வன்முறையில் ஈடுபட்ட 2 ஆபிரிக்க இளைஞர்கள் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து பிரான்ஸ் முழுவதிலும் இடம்பெற்ற வாகன எரிப்பு மற்றும் கலவரங்களை அடக்குவதில் தற்போதைய அரசுத் தலைவர் வேட்பாளரும் அப்போது உள்துறை அமைச்சராக இருந்தவருமான நிக்கோலா சாக்கோசி கையாண்ட அணுகுமுறை பலத்த வாதப் பிரதிவாதங்களை தோற்றுவித்திருந்தது.
பல்லினக் கலாச்சாரம் பல்தேசவாதம் என்கிற கோட்பபாடகள் நடை முறைச் சாத்தியமற்றவை வெளிநாட்டு குடியேற்றக்காரர்கள் பிரெஞ்சு சமூகத்தடன் ஒன்றிணைந்து வாழ்வதற்கு தயாரில்லை. அவர்கள் தங்களது தனித்துவத்தை வெளிப்படுத்த முற்படுவதே பிரச்சனைக்கு காரணமாகின்றது என்ற எண்ணம் வலதுசாரிகளை ஆதரிக்கும் மக்களிடையே ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த மாதம் நாங்கள் குட்டித் தமிழீழம் என்று சொல்கின்ற லா சப்பல் பகுதிக்கு அண்மையிலுள்ள ஐரோப்பாவின் வடக்குப்பகுதி நாடுகளை இணைக்கும் பிரதான தொடரூந்து நிலையமான ‘கார் து நோட்’ தொடரூந்து நிலையத்தில் ஆபிரிக்க வம்சாவழி இளைஞர்களுக்கும் காவல்துறையினருக்கம் இடையில் பாரிய மோதல் இடம்பெற்றது.இதில் 10க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்ததுடன் பல கடைகள் சேதமாக்கப்பட்டன. 25க்கும் மேற்பட்ட கறுப்பின இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள். பல மணி நேரம் அந்த தொடரூந்து நிலையம் மூடப்பட்டது. மாலையில் வேலை முடிந்து வீட்டுக்குச் செல்லும் நேரத்தில் ஏற்பட்ட இந்தக் கலவரத்தால் ஏறக்குறைய 50 ஆயிரத்தில் இருந்து 1 இலட்சம் வரையிலான பயணிகள் பாதிக்கப்பட்டார்கள்.
தேர்தலுக்கான திகதி குறிக்கப்பட்ட பின்னர் நடந்த இந்தச் சம்பவம் அரசாங்கத்துக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தது.இந்தக் காலகட்டத்தில் பிரான்சின் இனவாதக்கட்சித் தலைவரான ஜோன் மரி லூ பென் ‘இந்தியாவில் இருந்து சென்ற தமிழர்கள் இலங்கையில் தமிழ்நாடு கேட்பதைப் போல பாரிசையும் தங்களுக்கு பிரித்துத் தரும்படி கேட்பார்கள்.இவர்கள் பாரிசிலுள்ள தங்களது வணிக நிறுவனங்களக்கு தங்களது தாய் மொழியான தமிழ் மொழியில் பெயர் வைக்கலாம் அல்லது பிரெஞ்சு மொழியில் பெயர் வைக்கலாம். எதற்காக ஆங்கில மொழியில் பெயர் வைத்திருக்க்pறார்கள்? என்ற கேள்வியையும் எழுப்பியதோடு பிரெஞ்சு சமூகத்துடன் ஒன்றிணைந்து வாழ இவர்கள் தயாரில்லை என்பதையை இது காட்டுகிறது. இவர்கள் விடயத்தில் பிரெஞ்சு அரசாங்கம் கவனமாக இருக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.(பிரெஞ்சுக்காரர்களுக்கு ஆங்கிலேயர்களைப் பிடிக்காது . அவர்களுக்குள் 600-700 ஆண்டு காலத்துக்கு மேற்பட்ட விரோதம் உள்ளது.)
பிரான்சிலுள்ள இளைஞர் வன்முறைக் கும்பல்களில் அரேபிய மற்றும் ஆபிரிக்க இனத்தவர்களுக்கு அடுத்தபடியாக ஈழத் தமிழர்களே இருக்கிறார்கள்.பாரிஸ் 10 நிர்வாகப் பகுதி மற்றும் பாரிசின் புற நகர் பகுதிகளான லா கூர் நெவ், செல் போன்ற இடங்களில் வசிக்கும் மக்கள் இந்த தமிழ் வன்முறைக் குழுக்களால் கடும் அதிருப்திக்கு உள்ளாகி இருந்தார்கள்.இந்த வன்முறைக் குழுக்கள் எல்லாம் விடுதலைப்புலிகளின் பினாமிக் குழுக்கள் என்று காட்டுவதற்கான தீவிர பிரச்சாரத்தில் பாரிசிலுள்ள சிறீலங்கா தூதரகமும் ஒட்டுக் குழுக்களின் செயற்பாட்டாளர்களும் ஈடுபட்டு வந்தனர்.லு பிகாரோ போன்ற வலதுசாரி பத்திரிகைகளை இவர்கள் அதற்குப் பயன் படுத்தினார்கள்.
தேர்தல் களத்தில் வெளிநாட்டு இளைஞர் குழுக்களின் வன்முறையை கட்டுப்படுத்துவது தொடர்பான ஒரு பிரச்சார நடவடிக்கையாகவே எமது தமிழ் தேசிய ஆதரவச் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்ட விடயத்தை பார்க்க வேண்டும்.பாரிஸ் நகரத்தில் அதிகளவுக்கு வன்முறை மற்றும் குற்றச் செயல்களில் ஈடபடும் ஆரேபிய ஆபிரிக்க வம்சாவளி இளைஞர் குழுக்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் அது உடனடியாக பாரிய எதிர் விளைவுகளை எற்படுத்தும் என்பதால் எதைசெய்தாலும் எந்த அடக்குமுறையை பிரயோகித்தாலும் ஒன்றுபட்டு அதற்கு எதிராக போராடுவதற்கு பதிலாக பல குழுக்களாக பிரிந்த நின்று பேசிப் பேசியே காலத்தை கடத்தும் தமிழரின் பலவீனத்தை புரிந்து கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
நாம் நடத்தவிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி தருவது போல தந்துவிட்டு பின்னர் பாதுகாப்பு காரணம் காட்டி அதை நிராகரித்தை உற்றுக் கவனித்தால் இதிலுள்ள அரசியல் புரியும்.இப்போது நாங்கள் செய்ய வேண்டியது எல்லோரும் ஒரணியpல் திரள்வதாகும்.குறுகிய சிந்தனையையும் அவர் வரக்கூடாது இவர் வரக் கூடாது.அவரை மட்டந்தட்டவேண்டும் -இவரை மட்டந்தட்ட வேண்டும், எதிர்ப்பு போராட்டத்தை நடத்துவதற்கு இவருக்கு தகுதியல்லை அவருக்கு தகுதியல்லை என்றெல்லாம் பாhக்காமல் நாங்கள் அனைவரும் எங்களால் முடிந்ததை உடனடியாக செய்ய வேண்டும்.
எங்களுடைய எதிர்ப்பை காட்டுவதற்கு அனைத்து ஜனநாயக வழிகளையும் பின்பற்ற வேண்டும்.நாங்கள் ஒவ்வாருவரும் எங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்கு(பிரஞ்சு) எங்களுடன் வேலை செய்யும் பிரஞ்சு மக்களுக்கு எங்கள் தரப்பு நியாயத்தையும் எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் எடுத்துச் சொல்வதற்கு யார் தடை விதிக்கமுடியும்? தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு அவற்றின் வேட்பாளர்களுக்கு இங்குள்ள ஊடகங்களுக்கு மின்னஞ்சல்கள் மூலம் இலட்சக்கணக்கில் எமது கண்டனங்களை தெரிவிக்க வேண்டும்.இதை உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் ஒன்றுபட்டுச் செய்வோம்.
பிரான்சிலுள்ளவர்கள் நேரடியாகவும் வெளியில் உள்ளவர்கள் தங்கள் தங்கள் நாடுகளிலுள்ள பிரஞ்சுத் தூதரகங்களுக்கும் இந்த எதிர்பை தெரிவிப்பதன் மூலம் நாங்கள் அனைவரும் தேசியத் தலைவரின் பின்னால் அணிதிரண்டு நிற்கிறோம் என்பதை செயலில் காட்டிவிட்டுக் கதைப்போம்.
இரண்டாம் உலக யுத்த காலத்தில் பிரான்ஸ் ஹிட்லரால் ஆக்கிரமிக்கப்பட்ட போது பிரானஸின் முன்னாள் அரசத்தலைவர் சாள்ஸ் து கோல் லண்டனில் இருந்த கொண்டு ஆயுதப் போராட்டத்துக்கு அணிதிரட்டவில்லையா? நிதிசேர்க்கவில்லையா அதுவும் பயங்கரவாதமா? பிரான்ஸ் அரசுக்கு எதிராக பஸ்ரிய் சிறையையும் கோட்டையை உடைத்தெறிந்து ஆயுதங்களை கைப்பற்றி போராடிய பிரஞ்சுப் புரட்சியாளர்கள் பயங்கரவாதிகளா?சுதந்திரம் சமத்துவம் சகோதரத்தவம் என்ற பிரான்சின் உயர்ந்த அரசியல் இலக்கு வெறும் பேச்சளவில் தானே என்பதை நாங்கள் உரத்த குரலில் கேட்போம்?ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. ஒற்றுமையே பலம்
யாழ் இணையத்துக்காக எழுதியது