திங்கள், 21 மே, 2007

தமிழக மீனவர்கள் கடத்தலும் விடுதலையும்- சில கேள்விகள்…..

தமிழக மீனவர்கள் கடத்தலும் விடுதலையும்-சில கேள்விகள்…..

தமிழக மீனவர்கள் 5 பேரை விடுதலைப்புலிகளே சுட்டுக்கொன்றதாகவும் 12 பேரை அவர்கள் கடத்திச் சென்றுள்ளதாகவும் தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜி ஊடகர் மகாநாடு ஒன்றைக் கூட்டி பகிரங்கமாக அறிவித்த போது விடுதலைப்புலிகளுக்கு எதிரான இந்திய தமிழக பர்ப்பணிய ஊடகங்களும் பௌத்த சிங்களப் பேரினவாத ஊடகங்களும் அதை ஊதிப் பெருக்கி பரபரப்புச் செய்தியாக்கி வெளியிட்டன.
தமிழக முதல்வரின் குடும்பத் தொலைக்காட்சி என்று அப்போது சொல்லப்பட்ட சண் தொலைக்காட்சி தமிழக கியூ பிராஞ் காவல்துறையினரால் அவர்களது வழக்கமான பாணியில் அடித்து உதைத்து பெறப்பட்ட சில அப்பாவி ஈழத் தமிழர்களின் வாக்கு மூலங்களை ஒளிபரப்பியது.

இந்த வாக்குமூலங்கள் ஒரு நீதிபதியின் முன்பாகவோ அல்லது ஒரு நீதிமன்றத்திலோ பெறப்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை. காவல்துறையினர் தாங்கள் பெற்ற வாக்குமூலத்தை ஒரு நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு பதிலாக ஊடகங்களில் பகிரங்கமாக வெளியிட்டது ஏன்? ஏன்ற சந்தேகம் பலமாக எழுந்தது.

இன்று நேற்றல்ல கடந்த அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக சிறீலங்கா கடற்படையினர் தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வதும் அவர்களது படகுகள் மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்வதும் அவர்களது வலைகள் மற்றும் மீன்பிடி கருவிகளை சேதப்படுத்துவதும் மீன்களை பறித்துச் செல்வதும் ஒரு தொடர் கதையாகவே நடந்துவந்திருக்கிறது-வருகிறது.
அண்மைக் காலங்களில் சிங்கள கடற்கொள்ளையர்கள் மற்றும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக சிறீலங்கா அரசபடைகளுடன் சேர்ந்தியங்கும் தமிழ் ஆயுதக்குழுக்கள் என்பனவும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய செய்திகள் ஊடகங்களிலே வெளிவந்திருக்கின்றன.

இந்த நிலையில் விடுதலைப்புலிகள் தான் தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்றார்கள் கடத்திச்சென்றார்கள் என்ற செய்தியை தமிழக அரசும் காவல்துறையும் அவசர அவசரமாக வெளிடும் போது விடுதலைப்புலிகளை அழிப்பதற்கும் தமிழகத்திலுள்ள அவர்களது ஆதரவுத் தளத்தை சிதைப்பதற்கும் முயன்றுவரும் சிறீலங்கா கடற்படையும் சிறிலங்கா அரசுடன் சேர்ந்தியங்கும் தமிழ் ஆயுதக் குழுக்களும் எதிர்காலத்தில் தமிழக மீனவர்களை வகை தொகையின்றி சுட்டுக் கொன்றுவிட்டு விடுதலைப்புலிகள் மீது பழி போடுவதற்கான ஆபத்து இருக்கிறது என்பது ஏன் தமிழக அரசுக்கும் தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜிக்கும் தெரியவில்லை? இந்த அறிவிப்பு சிறீலங்கா அரசாங்கத்துடன் மிக நெருக்கமாக பின்னிப் பிணைந்து செயற்படும் பாகிஸ்த்தான் உளவுத்துறை சிறீலங்கா அரச ஆதரவு தமிழ் குழுக்கள் மற்றும் ஜிகாத் போன்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களை வைத்து தமிழகத்தில் பாரிய அழிவுகளை எற்படுத்திவிட்டு விடுதலைப்புலிகள் மீது பழியைப் போட்டு தப்பித்துக்கொள்வதற்கு வழியமைத்துக் கொடுக்கும் என்ற எண்ணம் ஏன் தமிழக அரசுக்கும் தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜிக்கும் வரவில்லை? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்தாலும் பறவாயில்லை தமிழக மக்கள் (மீனவர்கள் உட்பட) வகைதொயின்றி கொல்லப்பட்டாலும் பறவாயில்லை விடுதலைப்புலிகளை; தமிழக மக்களுக்கு எதிரானவர்கள் என்று காட்டவேண்டும் என்ற குறுகிய சிந்தனையும் தமிழர் விரோதப் போக்கும் தான் இந்த அறிவிப்பில் வெளிப்பட்டது.

இப்போது கடத்தப்பட்ட 12 மீனவர்களில் 11 பேர் மீண்டு வந்து விட்டார்கள்கள். அவர்களை சுயமாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்க விடாமல் அவசர அவசரமாக சென்னைக்கு அழைத்துச் சென்று கியூபிராஞ் அலுவலகத்தில் வைத்து விசாரணை என்ற பெயரில் தாங்கள் சொல்வதைத் தான் ஊடகங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று மிரட்டப்பட்டது அந்த மீனவர்கள் வெளியிட்ட தகவல்களில் இருந்தே தெரிய வருகிறது.

இந்த மீனவர்கள் தங்களை கடத்திய விடுதலைப்புலிகள் முதலில் காட்டில் வைத்திருந்ததாகவும் பின்னர் வீடொன்றில் தங்க வைத்ததாகவும் கூறுகிறார்கள்.தங்களது படகுக்காகவே விடுதலைப்புலிகள் தங்களை கடத்தியதாகவும் கூறுகிறார்கள்.

தாங்கள் தங்க வைக்கப்பட்ட இடத்தில் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களது படம் இருந்ததாகவும் அங்குள்ளவர்கள் புலிகளின் குரல் வானொலியை கேட்டதாகவும் சொல்கிறார்கள்.

இதிலே இரண்டு விடயங்கள் முரண்படகின்றன.இவர்கள் தங்க வைக்கப்பட்ட இடம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியாக இருந்தால் அங்கே சிருடை அணிந்த போராளிகளின் நடமாட்டம் இருந்திருக்கும்.போராளிகளின் நினைவு வணக்க நிகழ்வுகள் உட்பட ஈழப்போராட்டம் சம்மந்தப்பட்ட பல நிகழ்வுகள் அங்கே நடந்திருக்கும் அதற்கான அறிவிப்புக்கள் மற்றும் ஏற்பாடுகள் பற்றி இவர்கள் சிறிதளவாவது அறிந்திருக்காமல் இருக்க முடியாது. தங்களை விடுதலைப்புலிகள் வீட்டுக்குள் பூட்டி சிறை வைத்ததாக இவர்கள் எந்த இடத்திலும் சொல்லவில்லை.
அடுத்தது முழுமையான சிங்களப்புதியான காலி துறைமுகத்துக்கே சென்று தாக்குதல் நடத்தும் கடற்புலிகளுக்கு படகு தேவையென்றால் சிங்கள மீனவர்களின் படகுகளை அவர்களால் சுலபமாக கடத்தியிருக்க முடியுமே! தங்களது வழியில் குறுக்கிட்ட மீpனவர்களை கடற்புலிகள் தான் சுட்டார்கள் என்றால் அவர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சிங்கள மீனவர்களின் எண்ணிக்கை ஆயிரக் கணக்கில் இருந்திருக்க வேண்டுமே!
உண்மையில் சிறீலங்கா அரசுக்கும் இந்திய உளவத்துறைக்கும் நெருக்கமான தமிழ் ஆயுதக் குழு ஒன்றினால் தான் இந்த மீனவர்கள் கடத்தப்பட்டிருக்க வேண்டும்.
கடத்தப்பட்ட மீனவச் சிறுவன் அனிதன் மக்கள் தொலைக்காட்சிக்கு தெரிவித்தபடி கடத்தப்பட்ட மீனவர்கள் சிறீலங்கா கடற்படை படகுகளில் ஏற்றப்பட்டு அவர்களின் கட்டுப்பாட்டிலுள்ள யாழ்ப்பாணக் குடா நாட்டுத் தீவொன்றிலேயே தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மையாகும்.
கடத்தப்பட்ட ஒரு மீனவர் தாங்கள் தங்கியிருந்த பகுதியில் விமானக் குண்டுத் தாக்குதல் நடந்ததாகவும் தங்களை பங்கருக்குள் படுக்கும்படி கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.விடுதலைப்புலிகள் பலாலி விமானத் தளத்தின் மீது வான் தாக்குதல் நடத்திய பின்னர் சிறிலங்கா வான் படையினர் அரசகட்டுப்பாட்டிலுள்ள தீவகப் பகுதிகளின் கரையோரப்பகுதிகள் மீது வான் தாக்குதல்கள் நடத்தியிருந்தது இங்கே குறிப்பிடத் தக்க ஒன்றாகும்.

விடுதலைப்புலிகள் கட்டுநாயக்கா விமானப்படை தளத்தின் மீது விமானத் தாக்குதல் நடத்தியதை அடுத்து தங்களுக்கு ஐஸ்கீறிம் மற்றும் இனிப்புப்பண்டங்கள் வழங்கப்பட்டதாக ஒரு மீனவர் கூறியுள்ளார்.சிறீலங்கா அரச கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள மக்களும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்த இவ்வாறு செய்தார்கள் என்பது கவனிக்கத் தக்க ஒன்றாகும்.

அடுத்து இந்த மீனவர்களுடன் கடத்தப்பட்டதாக கூறப்படும் கேரள மீனவர் அவரது படகுடன் திருப்பியபோது அவரது படகில் ஆயுதங்கள் இருந்ததால் மாலைதீவுக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரது படகும் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறது.

இந்த விடயம் மிகப் பெரிய சந்தேகத்தை தோற்றுவித்திருக்கிறது.தமிழக மீனவர்கள் அவர்களது படகுடன் கடத்தப்பட்டது.மன்னார் வளை குடாவில்.அந்த மீனவர்களுடன் கடத்தப்பட்ட ஜோசப் என்ற கேரள மினவர் எதற்காக இந்து சமுத்திரத்திலுள்ள மாலை தீவுக்குச் செல்ல வேண்டும். அவர் மன்னார் வளை குடாவில் இருந்து தூத்துக்குடி கன்னியா குமரி கடற்பகுதி வழியாக கேரளத்துக்கு சென்றிருக்கலாமே?விடுதலைப்புலிகளுக்கு அவரது படகு தேவைப்பட்டிருந்தால்பாக்கு நீரணை வழியாகத் தானே அவர்கள் அதை எடுத்துச் சென்றிக்க வேண்டும்.அப்படி அந்தப்படகை அவர்கள் தங்கள் தேவைக்கப் பாவித்த பின்னர் விடுவித்தருந்தால் அந்தப் பாதையினுடாகத் தானே அவர்கள் விடுவித்திருப்பார்கள்.வங்கள விரி குடாவுக்கப் போய் இந்து சமுத்திரத்த்தில் இலங்கையை சுற்றிப் பயணித்து மாலை தீவைகடந்து கேரளாவுக்கு செல்வது என்பது புதிரானதாக இருக்கிறதே?

இந்தப்படகு மூழ்கடிக்கப்பட்டவுடன் விடுதலைப்புலிகளின் ஆயுதக்கப்பல் மூழ்கடிக்கப்பட்டுவிட்டதாக சிறீலங்கா அரசு அவசர அசரமாக அறிவித்ததும் முதலில் அது விடுதலைப்புலிகள் தான் என்ற கூறிய மாலைதீவு அரசாங்கம் அதை மறுத்து கைது செய்யப்பட்டவர் மலையாளம் பேசுபவர் என்று கூறியதும் கவனிக்கத் தக்கது.

1989ம் அண்டு மாலைதிவு அரசை கவிழ்ப்பதற்கு இந்திய உளவத்துறையான ரோவால் அனுப்பப்பட்ட புளட் குழு மன்னார் முள்ளிக்குளத்திலிருந்தும் தூத்துக்குடி குறைமுகத்திலிருந்தும் சென்றதைப் போல் மாலைதீவில் ஏதோ ஒரு சதிநாச வேலையில் ஈடுபடுவதற்காக இந்தப் படகு குடா நாட்டு தீவுப் பகுதியல் இருந்து தூத்துக்குடி கன்னாகுமரி கடற்பரப்பினூடாக ஏன் மாலை தீவக்குச் சென்றிக்கக் கூடாது? அதற்கான தயாரிப்புக்காக இந்தப் படகும் அதிலிருந்த மீனவர்களும் ஏன் கடத்தப்பட்டிருக்க கூடாது? என்ற கேள்வி களுக்கு விடை காணப்பட்டால் இந்தக் கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் உள்ள சதித்திட்டம் அப்பலத்துக்கு வரும்.

உண்மையில் தமிழகத்தையும் தமிழக மீனவர்களையும் பேரழிவில் இருந்த காப்பாற்ற வேண்டும் என்ற உண்மையான அக்கறையுள்ள ஊடகங்கள் கட்சிகள் பொது அமைப்புக்கள் மற்றும் ஒட்டுமொத்த தமிழக மக்கள் அனைவரும் தமிழர் விரோத போக்குடைய இந்திய உளவுத் துறை அதிகாரிகளுடைய கீழ்த்தரமான சதித் திட்டங்களை அம்பலப் படுத்துவதுடன் அதற்கெதிராக ஒன்றிணைந்து போராட வேண்டும். விடுதலைப்புலிகளை தமிழக மக்களதும் இந்தியாவினதும் எதிரியாக சித்தரிக்க முனையும் இந்த தமிழர் விரோத சக்திகள் பௌத்த சிங்கள பேரினவானத்தை வளர்த்து விடுவதற்கு துணைபோகின்றன. இராணுவ மயமாகிவரும் பௌத்த சிங்கள பேரினவாதம் எப்போதும் இந்திய நலனுக்கு எதிரானது என்பதையும் இது தமிழகத்தற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவின் இருப்புக்கே அச்சுறத்தலாக அமையும் என்பதையும் தமிழக அரசும் இந்திய அரசும் இப்போது உணரத் தவறினால் வரலாறு அவர்களுக்கு கசப்பான பாடத்தை படிப்பிக்கும