ஞாயிறு, 10 ஜூன், 2007

சுதந்திரபுரம் படுகொலைகள் நினைவாக…..

சுதந்திரபுரம் படுகொலைகள் நினைவாக…..

பௌத்த சிங்களப் பேரினவாதம் தமிழ் மக்கள் மீது நடத்திய கொடூரமான இனப்படுகொலைகளில் பெரிய அளவுக்கு அனைத்துலக கவனத்துக்கு வராத படுகொலைகளில் வன்னிப் பெருநிலப்பரப்பிலுள்ள சுதந்திரபுரத்தில் இடம்பெற்ற படுகொலைகளும் ஒன்றாகும்.
1998 ஆண்டு யூன் மாதம் 10 ம் திகதி…
அதாவது 9 வருடங்களுக்கு முந்திய இதே நாள்….
காலை 8 மணிக்கும் 9 மணிக்கும் இடையில் என்று நினைக்கிறேன்….
ஒரு சின்னஞ்சிறிய கிடுகுக் கொட்டில்…..
அதில் ஒரு ஏழைத்தாய் தனது நான்கு பிள்ளைகளையும் பாடசாலைக்கு அனுப்புவதற்காக பழைய சோற்றை தண்னிர் விட்டுப் பிசைந்து ஊட்டிவிடுகிறார்….
தீராத நோயில் விழுந்து படத்த படுக்கையாக உள்ள கணவனையும் தனது 4 பிள்ளைகளையும் அந்தத் தாய் அக்கம்பக்கத்திலுள்ள வசதிபடைத்தவர்களின் தென்னந்தோப்புகளில் கிடுகு பின்னிக் கொடுத்து கிடைக்கும் சொற்ப வருமானத்தில் காப்பாற்றி வருகிறார்.
அவரது மூத்த இரண்டு பிள்ளைகளும் கடந்த ஒரு மாதமாக பள்ளிக் கூடம் போவதற்கு கொப்பி வாங்க வேண்டும் என்று கேட்டு வந்தார்கள்.வறுமையிலும் கூட தனது பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று விரும்பிய அந்தத்தாய் பணம் கிடைத்ததும் வாங்கித் தரலாம் என்று அவர்களுக்கு சமாதானம் சொல்லி வந்தார்.
அன்று ‘எப்படியும் கொப்பியுடன் பாடசாலைக்கு வரவேண்டும். இல்லாவிட்டால் வரக்கூhது’ என்று வாத்தியார் கண்டிப்பாக சொல்லிவிட்டதாக பிள்ளைகள் இருவரும் கூறிவிட்டார்கள். ‘பிள்ளைகளை பள்ளிக்கூடத்தை விட்டு நிறுத்திவிடுவார்களே’ என்ற பயந்து போன அந்தத் தாய் தான் கிடுகு பின்னும் வசதிபடைத்த ஒருவரின் வீட்டுக்கு சென்று காரணத்தைச் சொல்லி தனக்கு 10 ரூபா பணம் தரும்படி இரந்து கேட்கிறார்…
அவரது அவசரத்தை புரியாத அவர்கள் மரத்தில் இருந்து விழுந்த தென்னோலைகளை எடுத்து துரவுக்குள் (குளமும் அல்லாத கிணறும் அல்லாத ஒரு சிறு நீர் நிலை) ஊறப் போட்டுவிட்டு வருமாறு கூறுகிறார்கள்..எப்படியும் பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அந்தத்தாய் ஓடி ஓடி தென்னோலைகளை இழுத்து இழுத்து அந்த விட்டு தென்னந்தேப்பின் மூலையில் இருந்த துரவுக்குள் போட்டுக் கொண்டிருந்த போது…..
சிங்கள வான்படையின் இரண்டு கிபீர் விமானங்கள் பேரிரைச்சலுடன் வந்து அந்தப் பகுதியில் குண்டுகளை போட்டுவிட்டுச் செல்கின்றன….பேரிரைச்சல்…..இடி முழக்கம் போன்ற பாரிய வெடியோசை… அதைத் தொடர்ந்து… “ஐயோ என்ரை பிள்ளைகள்… என்ரை அம்மா…என்ரை அப்பா …”என்கின்ற அவலப் பேரொலிகள் காற்றைச் கிழித்துவர… அந்தத்தாயும் “ஐயோ என்ரை பிள்ளைகள்” என்று கத்திக் கொண்டு வீதிக்கு ஓடி வருகிறார்…..
அதன் பின் என்ன நடத்தது என்பதை அந்தத் தாய் சொன்னதை அப்படியே சொல்கிறேன்….(2003 ம் அண்டு நான் வன்னிப் பெருநிலப்பரப்புக்கு சென்றிருந்த பொது அந்தத் தாயை சந்தித்த போது அவரது வாழ்வில் பேரிடியாக விழுந்த அந்த அவலத்தை அவர் கண்ணீருடன் விபரித்தார்….)
நான் அவையின்ரை வீட்டை விட்டு வெளியே ஓடி வாறன்… ஓரே புழுதி மண்டலம்.. எல்லாரும் கத்திக் கதறிக் கொண்டிருக்கினம்…என்ரை பிள்ளையளுக்கு என்னாச்சோ என்று என்ரை நெஞ்சு பதறுது…அழ முடியாமல் எனக்கு தொண்டை அடைக்குது….குண்டு விழுந்த இடத்துக்கு கிட்டப் போய் பாக்கிறன்.... இரத்மும் சதையுமா உடம்புகள் சிதறிக்கிடக்குது..அங்காலை பாத்தால் என்ரை இரண்டு பிள்ளைகள் ஒருவருக்க பக்கத்தில ஒருதர் உடல்சிதறி செத்துப் போய் கிடக்குதுகள்…அங்கால மற்ற இரண்டு பிள்ளைகள் காயம் பட்டு குற்றுயிரும் குலையிருமாக கிடந்து துடிக்குதுகள்…. என்ரை ஐயோ(கதறி அழுகிறார்) நான் என்ன செய்வேன்…செத்துப் போன பிள்ளைகளை பாப்பனா காயப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிற பிள்ளைகளை ஆசுப்பத்திரிக்கு கொண்டுபோகப் பாப்பனா… எந்தத் தாய்க்கும் இப்பிடி ஒரு கொடுமை நடக்கக் கூடாது ராசா…(மீண்டும் கதறி அழுகிறார்) பிறகு காயமடைஞ்சவையை பொடியள் ஒரு ரைக்ரறிலை (உளவு இயந்திரம்) ஏத்தி புதுக்குடியிருப்பு ஆசுப் பத்திரிக்கு கொண்டு போச்சினம். நான்னும் சொத்துப் போன என்ரை இரண்டு பிள்ளைகளையும் தெருவில விட்டுட்டு மற்றப்பிள்ளைகளை ஏற்றிக் கொண்டு ரைக்ரறில போனன் .அந்த ரைக்ரர் ஆசுப்பத்திரிக்கு போகக்கு முன்னம் என்ரை இன்னொரு பிள்ளையும் என்ரை மடியிலேயே செத்துப் போச்சு..(மீண்டும் கதறி அழுகிறார்) இப்ப கடைசியா எனக்கு இருக்கிறது இவன்தான்”; என்று அந்த தாக்குதலில் காயமடைந்து வலுவிழுந்த நிலையில் உயர் வாழும் அந்த மகனை காட்டுகிறார்….
சிங்கள வான் படையினர் நடத்திய இந்தக் கொலைத் தாக்குதலில் 28 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரியவருகிறது.
இந்தத் ஏழைத் தாயக்கு நேர்ந்த கொடுமையைப் போல் இன்னும் எத்தனை கொடுமைகளை எத்தனை அவலங்களை எங்கள் இனம் சந்திக்கிறது.எங்கள் மண்ணை எங்கள் தாயகத்தை மீட்பதற்கு நாங்கள் என்ன செய்தோம்? ஏன்பதை ஒரே ஒரு கணம் நினைத்துப் பார்ப்போம்….