புதன், 30 மார்ச், 2011

ஊடகம் என்றால் என்ன?

பொதுவாக ஊடகம் என்றால் கடத்துவது, காவுவது என்று தமிழில் அர்த்தம் கொள்ளப்படுகிறது.

ஒரு செப்புக்கம்பி ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு மின்சாரத்தை கடத்திச் செல்லும் போது அது அங்கே ஒரு ஊடகமாகச் செயற்படுகிறது.

அதே போல ஒருவர் பேசும்பேச்சை,மற்றவர் கேட்பதற்கு அதை ஒலி அலைகளாகச் சுமந்து செல்லும் காற்று ஊடகமாகச் செயற்படுகிறது.

ஊடகவியல் என்கிறபோது அது மனிதர்களுக்கிடையி;ல் கருத்துக்களை தகவல்களை காவிச் செல்கின்ற -பரப்புகின்ற வேலையைச் செய்கின்ற தொடர்பாடல் சம்மந்தப்பட்ட துறையைக் குறிக்கிறது என்று சாதாரணமாகச் சொல்லலாம்.

குறிப்பாகச் சொல்வதானால் கருத்தியலை கட்டமைப்பது,மனிதர்களினதும் சமுகத்தினதும் இருப்பை தீர்மானிப்பது, சந்தைப் பொருளாதாரத்தின் இருப்பை தீர்மானிப்பது,அரசியல் தத்துவம் விஞ்ஞானம் சட்டம் மருத்துவம் பொறியியல் என்று பல்துறை சார்ந்த விடயங்களில் தீர்மானகரமான சக்தியாக விளங்குவது என்று ஊடகவியலில் சர்வ வியாபகத் தன்மையை விளக்கலாம்.

ஊடகவியலின் செயற்பாடு

முதல்கட்டமாக ஊடகவிலின்; செயற்பாடுகளை தகவல் தெரிவித்தல், அறிக்கையிடுதல், பிரதிபலிப்பை உருவாக்குதல் என்கின்ற மூன்று வரையறைகளுக்குள் அடக்கலாம்.

தகவல் தெரிவித்தல்

கருத்தை மக்களிடம் எடுத்துச் செல்கின்ற பணி தான் ஒரு ஊடகத்தின் முதல் பணியாகும்.கருத்து என்பது இதழியலில் செய்தி, கட்டுரை, விவாதம், விமர்சனம், சிறுகதை, தொடர்கதை, நாவல், கவிதை, பாடல் என்று பல்வேறு வடிவங்களில் மக்களிடம் எடுத்துச் செல்லப்படுகிறது.

ஓலி ஒளி ஊடகங்களில் இவற்றுடன் கலந்துரையாடல் பாடல் நாடகம் விவரணச் சித்திரம் குறும் படம் ஆவணப்படம் சினிமா என்று இந்த வடிவம் இன்னும் விரிவுபெறுகிறது.

ஒரு விளம்பரமாக அறிவித்தலாகக் கூட ஒரு கருத்து மக்களிடம் எடுத்துச் செல்லப்படலாம்.

கருத்து ஊடகங்களுடாக மக்களிடம் எடுத்துச் செல்லப் படுகின்ற போது முதலில் தகவல் தெரிவித்தல் என்ற பணி அங்கு நடைபெறுகிறது.

அறிக்கையிடுதல்

அறிக்கையிடுதல் என்பது ஊடகவியலில் மிக முக்கியமான ஒரு விடயமாகும்.

ஒரு கருத்தை கட்டமைத்து, அதை மக்கள் நம்புகின்ற விதத்தில்,

அவர்கள் விருப்பத்தக்கவகையில் அவர்களுடைய அறிவுத் தளத்தை நோக்கி நகர்த்துவதை ஊடகவியலில் அறிக்கையிடுதல் என்று சொல்லலாம்.

அதாவது ஒரு மனிதனின் சிந்தனைத் தளத்தில் ஊடுருவி அவன் எதைச் செய்ய வேண்டும், எதைச் சார்ந்திருக்க வேண்டும், எதைச் சாப்பிட வேண்டும் எதை உடுக்கவேண்டும், எதைக் குடிக்கவேண்டும், எதைப் படிக்க வேண்டும், எதைப் பார்க்க வேண்டும் என்ற அவனது அனைத்துச் செயற்பாடுகளையும் அவனையறியாமலோ அல்லது அவன் அறியும் படியாகவோ புறநிலையில் இருந்து இயக்குகின்ற தீர்மானகரமான சக்தியாக ஊடகவியல் விளங்குதற்கு இந்த அறிக்ககையிடுதல் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

உதாரணமாக நமது நாட்டிலே உள்ளுரில் தயாரிக்கப்படுகின்ற ஒரு குளிர் பானம், தரமும் சுவையும் ஊட்டச்சத்தும் நிறைந்ததாக இருந்தாலும், சர்வதேச பிரபல்யம் வாய்ந்த குளிர் பானங்களுடன் சந்தையில் அதனால் போட்டிபோட முடிவதில்லை.

இதற்கு பொருளாதார ரீதியாக பலகாரணங்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் அவை எல்லாவற்றiயும் விட , உள்ளுர் குளிர்பானத்தைவிட சர்வதேசப் புகழ்பெற்ற குளிர் பானந்தான் சிறந்தது, அவற்றை மற்றவர்களுக்கு முன்பாக குடிப்பதே கௌரவத்துக்குரியது என்று நுகர்வேருடைய மனங்களிலே கட்டமைக்கப்பட்டிருக்கின்ற பிரமை முக்கியமானதாகும்.

இந்தப் பிரமை ஊடகங்களால் தான் கட்டமைக்கப்படுகிறது. இதைக் கட்டமைப்பதற்காக ஊடகவியலில் கையாளப்படும் முறைதான் அறிக்கையிடுதல் எனப்படுகிறது.

பொதுவாக அறிக்கையிடுதலில் தகவல் தெரிவித்தல், ஓப்பீட்டுக் குள்ளாக்கல், அம்பலப்படுத்தல், நம்பிக்கையூட்டல் என்கின்ற வழிமுறைகள் கையாளப்படுகின்றன.

உதாரணமாக சர்வதேச சந்தையில் இடம் பிடித்திருக்கும் ஒரு பிரபலமான நிறுவனத்தின் தயாரிப்பான ஒரு செருப்பு, அல்லது சப்பாத்து முதன் முதலாக ஒரு நாட்டின் உள்@ர் சந்தைக்கு வருகின்றதென்று வைத்துக்கொண்டால் அந்தப் பொருள் சந்தைக்கு வருவதற்கு முன்னர் அதைப்பற்றிய விளம்பரம் செய்யப்படும்.

அதிலே முதலில் அந்தத் தயாரிப்பு மற்றும் அதை தயாரித்த நிறுவனம் பற்றிய தகவல் இருக்கும். அடுத்தபடியாக அந்த நிறுவனத்தின் சர்வதேசப் பிரபல்யம் மற்றும் அந்த நிறுவனத் தயாரிப்புக்களின் விற்பனைச் சாதனை (அதிக மக்கள் வாங்கிப் பாவிக்கின்றார்கள் என்கின்ற புள்ளி விபரம்) என்கின்ற ஒப்பீட்டுத் தன்மை இருக்கும்.

அடுத்து அந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் பாதுகாப்பானவை, உறுதியானவை நீடித்து உழைக்கக் கூடியவை என்கின்ற அம்பலப்படுத்தும் (மற்றய தயாரிப்புக்கள் தரமற்றவை என்று மறைமுகமாக அம்பலப்படுத்தவது) தன்மை இருக்கும்.

இறுதியாக மக்களின் அபிமானத்தை பெற்ற ஒரு விளையாட்டு வீரர் அந்த செருப்பை அல்லது சப்பாத்தை பாவிப்பது போன்று காண்பிக்கப்படும். இதன் மூலம் இந்தத் தயாரிப்பு சிறந்ததாகத் தான் இருக்கும் என்ற நம்பிக்கை அல்லது பிரமை நுகர்வோருடைய மனங்களிலே கட்டமைக்கப்படும்.

அறிக்கையிடுதல் என்பது ஒரு விளம்பரத்தில் மட்டுமல்லாமல் ஊடகத்துறை சார்ந்த அனைத்து கருத்தியல் வெளிப்பாட்டு வடிவங்களில் இந்த அடிப்படையிலே தான் மேற்கொள்ளப்படுகிறது.

பொதுவாக ஊடகத்துறையில் அறிக்கையிடுதல் என்பது இருவழித் தன்மை கொண்டதாகும்.

முதலாவது ஒரு அதிகார மையத்திலிருந்து மக்களை நோக்கி அறிக்கையிடப்படுவது. இது அதிகார மையத்தின் தேவைகளுக்காக மக்களை தயார் படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. பெரும்பாரும் அனைத்து ஊடகங்களினதும் 90 வீதமான செயற்பாடுகள் இந்த வகையயை அதாவது மேலிருந்து கீழ்நோக்கி கருத்தை கொண்டுசெல்லும் தன்மையைக் கொண்டவை.

அது செய்தியும் செய்திசார்ந்த வடிவங்களாக இருக்கலாம். அல்லது நாடகம் சினிமா சின்னத்திரை என்று அழகியல் சார்ந்த வடிவங்களாக இருக்கலாம். அனைத்துமே இந்த வரையறைக்கள் அடங்குகின்றன.

இரண்டாவது மக்களிடமிருந்து தகவல்களைத் திரட்டி, அதிகார மையத்தை நோக்கி அறிக்கையிடுவது. இது அதிகார மையத்தின் தேவைகளுக்காக மக்களை தயார்படுத்துவதற்கு மக்களிடமிருந்து தகவல்களை திரட்டி அதிகார மையத்துக்குக் கொடுப்பது. இது அநேகமாக ஒரு புலனாய்வு செயற்பாட்டுக்கு ஒப்பானது. இதற்கு சிறந்த உதாரணமாக தேர்தல் காலங்களில் ஊடகங்கள் நடத்தும் கருத்துக் கணிப்புக்களை குறிப்பிடலாம். அதேபோல இந்திய ஊடகங்கள் நடத்தும் திரை வரிசை ரொப் ரென் போன்ற நிகழ்ச்சிகளை குறிப்பிடலாம்.

பிரதிபலிப்பை உருவாக்குதல்

ஒரு கருத்து ஒரு ஊடகத்தினூடாக ஏதாவதுதொரு வடிவத்தில் மக்களுக்கு தெரிவிக்கப்படும் போது அல்லது மக்கள் மத்தியிலே பரப்பப்படும் போது மக்களுடைய மனங்களிலே அறிதல் தெளிதல் வினையாற்றுதல் என்ற மூன்று செயற்பாடுகள் நடக்கின்றன.

உதாரணமாக காச்சல் தலைவலி என்பது உலகிலுள்ள அனைவருக்கும் வரக்கூடிய ஒரு நோயாகும். இந்த நோய்க்கு பல்வேறு பெயர்களில் மருந்துகளும் இருக்கின்றன. இந்த நோயை ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கக் கூடிய மருந்தின் அடிப்படை மூலக்கூறுகள் மருத்துவ ரீதியாக ஒன்றாக இருந்தாலும்; நாட்டுக்கு நாடு இந்த மருந்துகள் அவற்றை தயாரிக்கின்ற நிறுவனங்களின் கொடுக்கப்படும் வௌ;வேறு பெயர்களில் தான் மக்களால் அறியப்படுகின்றன.

இலங்கையில் காச்சலுக்கென்று என்ற மருந்து பாவனையில் இருக்கிறதென்று வைத்துக் கொண்டால் இப்போது என்ற சிறந்த மருந்து வெளிநாடுகளில் பாவிக்கப்படுவதாகவும்; அது இலங்கையில் விற்பனைக்கு வந்துள்ள தென்றும் ஒரு செய்தி ஊடகங்களில் வரும் போது அதை கிரகிக்கும் ஒரு மனிதன் முதலில் இந்தப் புதிய மருந்து வந்திருக்கும் தகவலை அறிந்து கொள்கிறான். அதற்கு அடுத்தபடியாக அந்த தகவலூடான இந்த புதிய மருந்து வெளிநாடுகளில் பாவிக்கப்படுவதால் சிறந்த மருந்தாக இருக்கும் என்ற கருத்து (அவனுடைய அறிதலுக்கு ஊடாக) அவனுக்கு ஏற்படுகிறது. அதன் பின்னர் அந்த மருந்தை வாங்கவேண்டும் என்ற வினையாற்றும் எண்ணம் அவனுக்கு உருவாகிறது. மருத்துவர் பழைய மருந்தை கொடுத்தால் புதிய மருந்தை எழுதித் தாருங்கள் என்று கேட்கும் நிலைக்கு அவன் வருகிறான்.

இதற்கு இன்னொரு உதாரணமாக கடந்த 2005ம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் படுகொலை செய்யப்பட்ட செய்;தியை எடுத்துக் கொள்ளலாம்.

இந்தச் செய்தி ஊடகங்கள் வாயிலாக ஐரோப்பாவில் உள்ள புலம் பெயர்ந்த தமிழர்களை எட்டிய போது அதன் மூலம் ஜோசப் பரராசசிங்கம் துப்பாக்கிச்; சூடுபட்டு இறந்துவிட்டார் என்ற தகவல் முதலில் அவர்களுக்கு தெரிகிறது.

அடுத்து அவர் எங்கே வைத்து சுடப்பட்டார்? எப்போது சுடப்பட்டார்? யார் அவரைச் சுட்டார்கள்? யார் அவரின் எதிரிகள் என்கின்ற தகவல்கள் மூலம் அவரைச் சுட்டுக் கொன்றவர்கள் தமிழின துரோகிகள் என்ற தெழிவு அல்லது புரிதல் அவர்களுக்கு ஏற்படுகிறது.

அதற்கு அடுத்த கட்டமாக இந்தப் புரிதல் தெழிதல்களுக்கூடாக இந்தப் படுகொலையைக் கண்டிக்க வேண்டும் என்ற செயலாற்றும் என்ணம் இந்தச்செய்தியைப் படிப்பவர்களுடைய மனதிலே உருவாகிறது.

இந்த செய்தி சொல்லப்பட்ட விதத்தையும் அதை உள்வாக்கிக் கொண்டவருடைய கருத்தியல் தளம் மற்றும் இருப்பையும் பொறுத்து இந்தப் படுகொலைக்கு எதிராக வினையாற்றும் செயற்பாடு அமைகின்றது.

ஓரு தீவிரமான கிறிஸ்தவருக்கு ஜேசு பாலன் பிறந்த நேரத்தில் அவரது பிறப்புக்கான ஆராதனை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்துவிட்டதே என்ற கொதிப்பு அவரை ஆட்கொண்டிருக்கும்.

தமிழ் தேசிய உணர்வாளர் ஒருவருக்கு துயரத்துடன் கூடிய ஆத்திர உணர்வை இது தூண்டியிருக்கும.;

இதேவேளை இனவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபடும் நபருக்கு இந்தச் செய்தி மகிழ்ச்சிதரும் ஒன்றாக இருந்திருக்கும்.

பொதுவாக ஊடகங்கள் தங்களது நோக்கம் இருப்பு மற்றும் செயற்பாடுகள் பற்றி பல்வேறு காரணங்களையும் வியாக்கியானங்களையும் கொள்கை விளக்கங்களையும் கூறினாலும் உண்மையில் மக்களின் மனங்களில் பிரதிபலிப்பை உருவாக்குவது என்பது தான் அனைத்து ஊடகங்களினதும் அடிப்படைக் குறிக்கோளாகும்.

அதாவது மக்களின் சிந்தனைத் தளத்துக்குள் ஊடுருவி அதில் செல்வாக்குச் செலுத்தி சார்புத் தன்மை ஒன்றை உருவாக்கி அவர்களை இயக்குகின்ற சக்தியாக இன்றைய நவீன ஊடகம் தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது.

பொதுவாக ஊடகவியல் என்று இன்று அழைக்கப்படும் இந்தத்துறையிலுள்ள அனைத்து ஊடகங்களும் இந்த மூன்று அடிப்படை நோக்கங்களை ஆதாரமாகக் கொண்டுதான் செயற்படுகின்றன.

செய்தி சார்ந்த விடயங்களாக இருந்தாலும்,அறிவியல் சார்ந்த விடயங்களாக இருந்தாலும் அல்லது கலைத்துவம் சார்ந்த மகிழ்வூட்டும் விடயங்களாக இருந்தாலும் ஊடகங்களால் கட்டமைக்கப்படுகின்ற அனைத்து வடிவங்களுமே மனிதனுடைய சிந்தனைத் தளத்தை ஆக்கிரமிப்பதை நோக்கமாகக் கொண்டவையாகும்.

தேவைக்கான உற்பத்திஎன்பது பொருளியலிலே ஒரு முக்கியமான விடயம். அதாவது மக்களுடைய தேவையை பூர்த்தி செய்வதற்காக பொருட்களை உற்பத்தி செய்வது ஒரு வகை. உற்பத்தி செய்யப்பட்ட அல்லது செய்யப்படவுள்ள பொருட்களுக்கான தேவையை மக்கள் மத்தியில் வலிந்து உருவாக்குவது இன்னொரு வகை. இன்றைய உலகமயமாதல் சூழலில் பொருட்களுக்கான தேவையை மக்கள் மத்தியில் வலிந்து உருவாக்கும் வேலையை அதாவது மக்களை சந்தைப் பொருளாக்கும் வேலையை அனைத்து மேலாதிக்க ஊடகங்களும் செய்து வருகின்றன.

மேற்குலகின் ஜனநாயக அக்கறை, தனிமனித சுதந்திரத்தின் மீதான கரினம், மனித உரிமை செயற்பாட்டை வலியுறுத்துவதிலுள்ள அதீத ஈடுபாடு,

கருத்தியல் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதிலுள்ள ஆர்வம்இவை அனைத்தையும் கட்டுடைத்தால், பொருளாதார நலன் தான் இவற்றின் அடிப்படை என்பது தெரியவரும்.

ஊடகவியல் என்பது சந்தைப் பொருளாதார வாழ்வியலுக்காவும், அந்த சந்தைப் பொருளாதாரத்தில் ஆளுமை செலுத்துகின்ற மேலாதிக்க சக்திகளின் அரசியல் நலன்களுக்காகவும் மக்களை தயார் படுத்துகின்ற அவர்களை கருத்தியல் சிறைக்குள் தள்ளுகின்ற வேலையை செய்கின்ற முக்கியமான துறையாக மாறிவிட்டடது.

தங்களது விடுதலைக்கும், உரிமைக்கும், சமத்துவத்திற்கும் போராடுகின்ற மக்களுடைய குரலை திட்டமிட்டு நசுக்குவதிலும் கொச்சைப்படுத்துவதிலும் முன்னணியில் நிற்கும் மேலாதிக்க ஊடகங்களின் நோக்கத்தை இந்தப் பின்னணியில் வைத்துத் தான் பார்க்க வேண்டும்.

தங்களது விடுதலைக்கும், உரிமைக்கும், சமத்துவத்திற்கும் போராடுகின்ற மக்களுடைய குரலாக ஒலிக்கும் ஊடகங்கள் இந்த மேலாதிக்க ஊடகங்களின் கருத்தியல் ஆக்கிரமிப்பை தகர்த்தெறிய வேண்டும்.

தங்களுடைய தளம் எது என்பதையும் அதில் பயணிப்பதற்கான சரியான வழித்தடம் எது என்பதையும் இந்த ஊடகங்கள் சரியாக இனம் காணவேண்டும். அதாவது தங்களுக்கான ஊடகக் கருத்தியல் எது என்பதையும், தனித்துவமான வடிவம் எது என்பதையும் இந்த ஊடகங்கள் திர்மானிக்க வேண்டும்.

மாறாக இந்த மேலாதிக்க ஊடகங்களின் வழிமுறைகளும் கருத்தியல் தளமும் தான் சிறந்தது உச்சமானது என்று நினைத்தால் இவை அவற்றின் ஊது குழல்களாகவும், தரகர்களாகவும் தான் இருக்க முடியுமே அன்றி மக்களுக்கான உண்மையான ஊடகங்களாக இருக்க முடியாது.

தமிழ் தளத்தில் ஊடகவியல்

ஊடகவியல் என்றதும் அது தமிழில் இல்லாத ஒரு துறை. தமிழர்களுக்கு அது புதியது. ஐரோப்பியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட-உருவாக்கப்பட்ட ஒரு நவீன துறைஎன்ற எண்ணம் நம்மவர்கள் பலரிடம் இருக்கிறது.

அது இதழியலாக இருந்தாலும் இலத்திரனியல் சார்ந்த ஒலி ஒளி வடிவங்களாக இருந்தாலும் அதற்கு மேற்குலகத்தினரே சொந்தக்காரர்கள் என்றும் அவர்கள் உருவாக்கிய வழி முறைகளே சிறந்தது என்றும் அதை நாம் அப்படியே பின்பற்றுவது தான் நம்முடைய ஊடகத்துறையை வளர்பதற்கு சிறந்த வழி என்றும் கருதுகின்ற நிலைப்பாடுதான் இன்னும் நம்மிடையே இருக்கிறது.

இன்றும் கூட தமிழ் சமூகத்திலுள்ள அறிவு சார்ந்த பிரிவினரிடையே ஐரோப்பிய ஆங்கில வானொலிகளும் தெலைக்காட்சிகளும் சொல்வது தான் செய்தி என்றும் அவற்றில் ஒரு செய்தி சொல்லப்பட்டால் அது உண்மை என்றும் கண்மூடித்தனமாக நம்புகிற போக்கு எம்மிடையே காணப்படுகிறது.

இந்த வானொலிகளும் தொலைக்காட்சிகளும் செய்தியை சொல்லுகின்ற முறைதான் ஊடகத்துறையின் உச்சம் என்றும் தாங்களும் நம்பி மற்றவர்களையும் நம்பச் சொல்கின்ற போக்குத் தான் இன்னமும் நம்மவர்களிடத்திலே இருக்கிறது.

இதழியல், சினிமா, சின்னத்திரையில் கூட மேற்குலக முன்மாதிரியை அச்சொட்டாக பின்பற்றுவதன் மூலம் தரமான சிறந்த படைப்புக்களை தர முடியும் என்று தான் இன்றுவரை பலர் நம்புகிறார்கள்.

இந்த காலணித்துவ அடிமை மனோபாவமும் அடிமைச் சிந்தனையும் தான் தமிழ் தேசிய ஊடகக் கருத்தியல் ஒன்று இதுவரை உருவாகமல் போனதற்கும் தமிழ் ஊடகத்துறை தனக்கென்று ஒரு தனித்துவமான அடையாளத்தை கட்டமைக்கத் தவறியதற்கும் காரணம் என்பதை நாம் உணரவேண்டு.ம்.

நாம் நாமாக எமது சுயத்தை இழந்துவிடாமல் இருந்துகொண்டு எமது அனுபவங்களின் அடிப்படையில் எங்களுக்கென்று ஒரு தளத்தை உருவாக்கிக் கொண்டு அதன் பின்னர் மற்றவர்களுடைய அனுபவங்களை அதனுடன் இணைப்பதன் மூலமே எங்களுடைய அடையாளத்தை நாங்கள் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

நம்மை நாமே தாழ்த்திக் கொண்டு எங்களுடைய அனுபங்களை குறைத்து மதிப்பீடு செய்து கொண்டு அடுத்தவர்களுடைய அனுபங்களையும் அடையாளங்களையும் நாம் பின்பற்ற முற்பட்டால் நாம் எமது சுயத்தையும் சொந்த அடையாளத்தையும் தொலைத்து விடுவோம்; என்பதையும் உணர வேண்டும்.

ஊடகவியல் என்பது ஒரு இனத்தின் சமூகத்தின் கருத்தியல் தளத்தில் காத்திரமான- தீர்மானகரமான பாத்திரத்தை வகிக்கின்ற ஒன்றாகும். இந்தத் தளத்தை ஒரு தேசிய இனம் தனது சுய அடையாளங்களின் அடிப்படையில் கட்டியெழுப்பத் தவறுமாக இருந்தால் இந்தத் தளத்துக்குள் ஊடுருவல்களையும், ஆக்கிரமிப்புக்களையும் அனுமதிக்குமாக இருந்தால்

அந்த இனம் படிப்படியாக தனது சுயத்தையும் அடையாளத்தையும் இழக்கும்.

சிறுகச் சிறுகச் கொல்லும் விசத்தைப் போல ஒரு தேசிய இனத்தின் கருத்தியல் தளத்துக்குள் புகுந்துகொள்ளும் ஆக்கிரமிப்புக் கருத்தியலும் படிப்படியாக அந்த இனத்தின் பண்பாட்டுத் தளத்தை சிதைத்து கடைசியில் அந்த இனத்தின் இருப்பையும் அடையாளத்தையும் அழித்துவிடும்.

உலகமயமாதல் சூழலில் மனிதர்களையே சந்தைப் பொருட்களாக மாற்றுவதற்காக தேசங்களினதும் தேசிய இனங்களினதும் வரலாற்றiயும் பண்பாட்டையும் கலை கலாச்சார விழுமியங்களையும்; அழிக்கின்ற, மழுங்கடிக்கின்ற கைங்கரியத்தை செய்வதில் ஊடகவியல் மிக முக்கியமான பங்களிப்பை செய்கின்றது.

ஊடகத்துறை என்பது மக்களுக்கான தகவல்களைச் சொல்கின்ற, அறிவூட்டுகின்ற, மகிழ்வுட்டுகின்ற பணியைச் செய்வதாகச் சொல்லிக் கொண்டாலும் அடிப்படையில் மக்கள் மீது கருத்தை திணிக்கின்ற- சந்தைப் பொருளாதார வலைப்பின்னல்களுக்குள் அவர்களைச் சிக்க வைக்கின்ற பணியைத் தான் பல ஊடகங்கள் குறிப்பாக உலக மேலதிக்க ஊடகங்கள்திட்டமிட்டுச் செய்துவருகின்றன.

உலகில் நிமிடத்துக்கு நிமிடம் , விநாடிக்கு விநாடி எத்தனையோ ஆயிரக்கணக்கான சம்பவங்களும் செயல்களும் நிகழ்ந்தாலும் எவை செய்தியாக்கப்பட வேண்டும், எப்படிப்பட்ட செய்திகளாக அவை ஆக்கப்படவேண்டும், என்ன கருத்துக்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதை விரல்விட்டு எண்ணக் கூடிய இந்த மேலாதிக்க ஊடகங்கள் தான் தீர்மானிக்கின்றன.

அரசபயங்கரவாதச் செயற்பாடுகளை ஜனநாயகச் செயற்பாடுகளாகவும், தேசிய விடுதலைப்போராட்டங்களை பயங்கரவாதச் செயற்பாடுகளாகவும் இந்த மேலாதிக்க ஊடகங்கள் கட்டமைத்துக் கதை சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த ஊடகங்களையும் இவற்றின் ஊடகக் கோட்பாடுகளையும் தமிழ் தேசிய இனம் தன்னுடைய ஊடகக் கருத்தியலை திர்மானிப்பதற்கான வழிகாட்டியாகவும் முன் மாதிரியாகவும் கொள்ள வேண்டுமா? என்ற கேள்வி முக்கியமாக கேட்கப்பட வேண்டிய ஒன்றாகும்.