வியாழன், 21 ஏப்ரல், 2011

வெள்ளைக் கொடி விவகாரத்தில் தொடர்புபட்ட நம்பியாரை இலங்கை விடயத்தில் தொடர்ந்தும் ஈடுபடுத்துவது ஏன்? இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி!

சிறிலங்கா அரசின் தாக்குதல்கள் வன்னியில் தீவிரமாக இடம்பெற்ற காலத்தில் பான் கி மூன் ஒருபோதும் யத்த நிறுத்தத்திற்கான அழைப்பை விடுக்காதிருந்தது ஏன்? நம்பியாரைத் தூதுவராக ஏன் அனுப்பியிருந்தார்? வெள்ளைக்கொடி விவகாரம் எனக் குறிப்பிடப்படும் விடயத்தில் நம்பியார் சம்மந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில் அவரை இப்போதும் சிறிலங்கா விடயத்தில் ஈடுபடுவத்துவதற்கு ஏன் இடமளிக்கப்பட்டுள்ளது?
மார்ச் 31 ம் திகதி அறிக்கை தயாராகி விட்டபோதும் அதனைக் கையளிப்பதற்கு ஏப்ரல் 12 வரை கால அவகாசம் எடுக்கப்பட்டது ஏன்?
ரஷ்ய விஜயத்தின்போது பான் கீ மூன் எந்த விடயம் தொடர்பாகக் கலந்துரையாடுவார்? இந்த விடயங்கள் யாவும் செயலாளர் நாயகத்தின் இரண்டாவது பதவிக் காலத்திற்கு எவ்வாறு பயன்படுத்தப்படும்? என நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட 'இன்னர் சிற்றி பிரஸ்' பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
நிபுணர்குழுவின் அறிக்கையின் சில பகுதிகள் கசியவிடப்பட்டு ஐந்து நாட்கள் (19.03.03) முழுமையாகக் கடந்துவிட்ட நிலையில் இந்த விடயத்தில் ஐ.நா செயலகம் ஸ்தம்பிதமான நிலையையே கொண்டிருப்பதாகவும் இன்னர் சிற்றி பிரஸ் விமர்சனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவிக்கையில்,
196 பக்கங்களைக் கொண்டதாக அறிக்கையிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி நிரந்தரப் பிரதிநிதி சவேந்திர சில்வாவிடம் இதன் பிரதி ஏப்ரல் 13 இல் வழங்கப்பட்டது. 24 மணிநேரத்தில் இந்த அறிக்கையை ஐ.நா பகிரங்கமாக வெளியிடும் என சவேந்திர சில்வாவிடம் தெரிவிக்கப்பட்டது. சிறிலங்கா அரசாங்கம் மேலும் சிறிது கால அவகாசத்தை விரும்புகிறது என சில்வா பதிலளித்திருந்தார். இதற்கு 36 மணித்தியாலங்கள் வழங்கலாம் என ஐ.நா பதிலளித்ததாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.
ஆனால் 36 மணித்தியாலங்கள் கடந்து விட்டன. அறிக்கையின் பிரதி இலங்கை ஊடகங்களில் கசிய விடப்பட்டுள்ளது. இவ்வாறு கசிய விடப்பட்ட அறிக்கையின் பிரதியை இன்னர் சிற்றி பிரஸ் வெளியிட்டுள்ளதுடன் இதுவரை பான் கி மூனும் ஐ.நா செயலகமும் அறிக்கையை திட்டமிட்டபடி வெளியிடாதது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளது.
நிபுணர்குழுவினர் செய்ய வேண்டியதைச் செய்துள்ளனர். சகல தொண்டர் அமைப்புக்களும் பணியாளர்களும் வன்னிப் பிரதேசத்தைவிட்டு வெளியேறியிருந்த நிலையில், மருத்துவ நிலையங்கள் மீது ஷெல்வீச்சு இடம்பெற்றமையை சர்வதேச பணியாளர்களின் சாட்சியத்தை முன்வைத்து அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த விடயமே சிறிலங்கா அரசின் பதிலுக்கான தீனியாக அமையும் என இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அரசாங்கம் மே1 ம் திகதி ஐ.நா அறிக்கைக்கு எதிராக எதிர்ப்பை வெளியிடுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் அறிக்கைக்கான அதன் பதில் எவ்வாறு அமையும் என்பதை அறியலாம்.
நிபுணர்குழுவுடன் சிறிலங்கா சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் குழுவினர் சந்தித்தபோது அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கு முன்பாக சிறிலங்காவுக்கு மேலதிக காலத்தை வழங்குவதற்கு ஐ.நா இணங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏப்ரல் 12 வரை அது நீடிக்கப்பட்டதாகவும் இன்னர் சிற்றி பிரஸ் தனது அடிக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: