திங்கள், 25 ஏப்ரல், 2011

சாய்பாபா அறக்கட்டளையின் ரூ 1.5 லட்சம் கோடி சொத்துக்களுக்கு புதிய பொறுப்பாளர் யார்?

பல ஆயிரம் கோடி சொத்துக்களைக் கொண்ட சத்ய சாய் பாபாவின் 'ஸ்ரீ சத்ய சாய் மைய அறக்கட்டளை' அமைப்பின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

சாய்பாபா தனக்கு வாரிசு என்று யாரையும் அடையாளம் காட்டவில்லை.

பாபா இருந்தவரை இந்த அறக்கட்டளைக்கு அவர் வழிகாட்டல் இருந்தது என்பதால் அவருக்கு அடுத்து யார் என்று கேட்க யாருக்குமே தோன்றவில்லை. மேலும், 96 வயதுவரை நான் உயிர் வாழ்வேன் என்று பாபா கூறியிருந்ததால் இந்த எண்ணமே எவருக்கும் வரவில்லை.

ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் சொத்து...

அடுத்ததாக இந்த அறக்கட்டளைக்கு உள்ள சொத்துகளின் மதிப்பு ரூபாய் ஒன்றரை லட்சம் கோடி வரையில் என்கிறார்கள்.

இந்த அறக்கட்டளையை நடத்திவரும் பல்வேறு நிறுவனங்களிடம் ஏராளமான ரொக்க கையிருப்பும் உள்ளது.

1964-ல் சத்யசாய் மைய அறக்கட்டளை நிறுவப்பட்டது. பாபாவே இதன் தலைவர். இதன் நிர்வாகக்குழு 2010-ல் திருத்தியமைக்கப்பட்டது.

165 நாடுகளில் 3 கோடிக்கும் மேற்பட்ட நேரடி பக்தர்கள் பாபாவுக்கு இருக்கின்றனர். அவர்கள் தங்களுடைய வருவாயில் சிறு பகுதியை பாபாவின் அறக்கட்டளைக்கு அளிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றனர்.

ஏழைக் குழந்தைகளுக்கு இலவச பள்ளிக்கூடம், உறைவிடப் பள்ளிகள், தொழில் பயிற்சி மையங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகம், மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள், தியான மண்டபங்கள் என்று ஏராளமான நிரந்தர சொத்துகள் அறக்கட்டளையின் நிர்வாகத்தில் உருவாகியிருக்கின்றன.

அனந்தப்பூர் மாவட்ட மக்களுக்கும் சென்னை மாநகர மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க இந்த அறக்கட்டளையைத்தான் பாபா பயன்படுத்தினார். எனவே இந்த அறக்கட்டளைக்கு அடுத்த தலைவர் யார் என்பதை அறிவதில் பாபாவின் ஆஸ்ரமத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தொண்டர்களுக்கும் மட்டும் அல்ல மத்திய - மாநில அரசுகளுக்கும் ஆர்வம் இருக்கிறது.

இவர்களில் யார்...?

கே சக்ரவர்த்தி

அடுத்து தலைமை ஏற்கக்கூடியவர் என்று அடையாளம் காட்டப்படுபவர் கே. சக்ரவர்த்தி. ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் முன்பு அனந்தப்பூர் மாவட்ட ஆட்சியராக இருந்தவர். அதன் மூலமே பாபாவை நெருங்கினார். இவருடைய நிர்வாகத் திறமையைக் கண்ட பாபா, அரசு வேலையை விட்டுவிட்டு தன்னிடம் சேர்ந்துவிடுமாறு பணித்தார்.

பாபாவின் கட்டளையை ஏற்று 1981-ல் அரசுப் பணியை ராஜிநாமா செய்துவிட்டு பாபாவிடம் சேர்ந்தார். அறக்கட்டளை உறுப்பினராகவும் ஆனார். பாபாவின் நம்பிக்கையை மட்டும் அல்ல பிற நிர்வாகிகளின் நம்பிக்கைக்கும் உரியவரானார். 1994-ல் அறக்கட்டளை செயலாளரானார். அறக்கட்டளைப் பதிவாளரும் இவர்தான்.

பி.என். பகவதி

உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியும் மிகச் சிறந்த நேர்மையாளருமான பி.என். பகவதி இந்த அறக்கட்டளையின் உறுப்பினர். இவர் தலைமைப் பதவிக்கு வரும் வாய்ப்பு குறைவுதான் என்றாலும், அவரும் அந்த 'ரேஸி'ல் உள்ளார்.

எஸ்.வி. கிரி

ஊழல் தடுப்பு கண்காணிப்பு அமைப்பின் தலைவராகப் பதவி வகித்து ஓய்வு பெற்றவரான எஸ்.வி. கிரியும் தலைசிறந்த நிர்வாகி, நேர்மையாளர். எனவே அவர் பெயரும் தலைமைப் பதவிக்கு அடிபடுகிறது.

வேணுசீனிவாசன்

தமிழ்நாட்டைச் சேர்ந்த டி.வி.எஸ். குழுமத் தலைவர் வேணு சீனிவாசனும் அறக்கட்டளை உறுப்பினராக இருக்கிறார். பாபா விரும்பிய தொண்டுகளைக் குறிப்பால் உணர்ந்து செயல்படுத்தி, அவரிடம் தனி அன்பைப் பெற்றவர். தலைமைக்குத் தகுதியானவர் என்று பலராலும் கருதப்படுபவர்.

ஆர்.ஜே. ரத்னாகர்

பாபாவின் சொந்த தம்பி ஜானகிராம் என்பவரின் புதல்வர் ஆர்.ஜே. ரத்னாகர் இப்போது அறக்கட்டளை உறுப்பினராக இருக்கிறார். பாபாவின் உறவினர்களில் அறக்கட்டளையில் இடம் பெற்றுள்ளவர் இவர் ஒருவரே. எம்.பி.ஏ. பட்டதாரி. புட்டபர்த்தியில் கேபிள் டி.வி. நடத்துகிறார். மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் நிர்வாகியாக இருக்கிறார்.

சத்யஜித் (33)

சத்ய சாய் பள்ளிக்கூடத்தில் தன்னுடைய 5-வது வயதில் சேர்ந்தார். பாபாவின் நேரடி பார்வையில் வளர்ந்தார். பள்ளிப்படிப்பு முடித்ததும் சத்ய சாய் உயர் கல்விக்கழகத்திலேயே சேர்ந்து எம்.பி.ஏ. பட்டம் பெற்றார். பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவனாக ரேங்க் பெற்றார். படிப்பு முடித்ததும் ஆஸ்ரமத்திலேயே சேவையில் ஈடுபட்டு பாபாவின் நம்பிக்கைக்கு உரியவராகத் திகழ்ந்தார். இவருடைய அனுமதி இல்லாமல் எவரும் பிரசாந்தி நிலையத்தின் உள்ளே நுழையக்கூட முடியாது என்று கூறுகின்றனர்.

இந்த ஆறுபேரில் ஒருவர்தான் பாபா அறக்கட்டளையின் தலைமைப் பொறுப்புக்கு வரவிருப்பதாக கூறப்படுகிறது.

ஒருவேளை ஒருமித்த கருத்து எட்டப்படாவிட்டால், அறக்கட்டளைக்கு உள்ள ஏராளமான சொத்துகளை ஹிந்து அறநிலையத்துறையே எடுத்துக் கொண்டுவிடுமோ என்ற அச்சமும் மக்களிடயே ஏற்பட்டிருக்கிறது. இந்த அச்சம் அறக்கட்டளைக்கும் இருப்பதால், ஒருமித்த கருத்து ஏற்படும் என நம்புகிறார்கள். எப்படியானாலும் புதன்கிழமையன்று புதிய தலைமை குறித்து அறிவிக்கப்படும் என தெரிகிறது.

கருத்துகள் இல்லை: