சனி, 23 ஏப்ரல், 2011

ஐ.நா வல்லுநர்கள் குழுவின் சிறிலங்கா மீதான குற்றச்சாட்டுகள் - பகுதி 3

பான் கீ மூன் அமைத்திருந்த வல்லுநர்கள் குழுவின் அறிக்கையில் சிறிலங்காவிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் பொருத்தமான பகுதிகளை முன்னர் வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சி இன்றும் தொடர்கிறது.

ஐ.நாவினது வல்லுநர்கள் குழு சிறிலங்காவிற்கு எதிரான ஐந்து முதன்மையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது. அது தொடராக வெளியிடப்பட்டுவரும் ஐ.நாவின் அறிக்கையினது முதலாவது பாகத்தில் பொதுமக்கள் இழப்பு தொடர்பான விபரங்களை இணைந்திருந்தோம். இரண்டாவது பகுதியில் பொதுமக்கள் இலக்குகள் மீதுதான தாக்குதல்கள் தொடர்பான பகுதிகளைத் தந்திருந்தோம். மூன்றாவது பகுதி இங்கே தொடர்கிறது.

மருத்துவமனைகள் மீதான எறிகணைத் தாக்குதல்கள்:

மருத்துவமனைகளை இலக்குவைத்து எறிகணைத்தாக்குதல்களை மேற்கொண்டமைதான் சிறிலங்காவிற்கு எதிராகச் சுமத்தப்பட்ட இரண்டாவது பிரதானமாக குற்றச்சாட்டாகும். பான் கீ மூன் அமைத்திருந்த வல்லுநர்கள் குழுவினது அறிக்கையில் மருத்துவமனைகள் தாக்குதலுக்குள்ளான சம்பவங்கள் தொடர்பாக கீழ்க்கண்டவாறு விபரிக்கிறது:

சனவரி 19 தொடக்கம் 21 வரையிலான காலப்பகுதியில் முதலாவது பாதுகாப்பு வலயப் பகுதியில் அமைந்திருந்த வள்ளிபுனம் மருத்துவமனையினை இலக்குவைத்து சிறிலங்கா இராணுவத்தினர் எறிகணைத் தாக்குதலை நடாத்தியிருந்தனர். வன்னிப்போர் இடம்பெற்ற காலப்பகுதியில் வன்னியிலுள்ள அனைத்து மருத்துவமனைகளும், அது நிரந்தர அல்லது தற்காலிக மருத்துவமனைகளாக இருக்கலாம், எறிகணைத் தாக்குதலுக்கு உள்ளாகின. குறிப்பாக காயமடைந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கும் சிகிச்சையளிக்கப்பட்டுவந்த மருத்துவமனைகள் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டன (பக்கம் 23 தொடக்கம் 24).

87. கடுமையான எறிகணைத் தாக்குதல்கள் இடைவிடாது தொடர்ந்தன. சனவரி 24ம் நாளன்று முதலாவது பாதுகாப்புவலயப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த உடையார்கட்டு மருத்துவமனை எறிகணைத் தாக்குதலுக்கு உள்ளானது. இந்தத் தற்காலிக மருத்துவமனையின் கூரையில் மருத்துவமனை என அடையாளப்படுத்தப்பட்டிருந்தபோதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

4. புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீதான சிறிலங்கா அரச படையினரின் எறிகணைத் தாக்குதல்

90.
சிறிலங்காவினது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட பெப்பிரவரி 04ம் நாளன்று புதுக்குடியிருப்பு நகரினைக் கைப்பற்றும் நோக்கில் 55ம் மற்றும் 58ம் படைப்பிரிவினர் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்த வேளையில் இரண்டு தரப்பினருக்கும் இடையே உக்கிரமோதல்கள் வெடித்தன. அந்த வேளையில் சிறிலங்கா அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் அங்கீகரித்த வன்னிப் பிராந்தியத்தில் செயலாற்றிய ஒரேயொரு அரச மருத்துவமனை புதுக்குடியிருப்பு மருத்துவமனைதான். அந்த ஐந்து மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் அனைவரும் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் தங்களாலான பணியினைச் செய்தார்கள்.

முதலாவது பாதுகாப்பு வலயம் மீதான படையினரின் எறிகணைத் தாக்குதல்கள் ஒரு திரும்புமுனையாக அமைந்தது எனலாம். இதன் விளைவாக மக்கள் இழப்புக்கள் நாளுக்குநாள் அதிகரித்துச் சென்றது. பாதுகாப்பு வலயப்பகுதியில் காயமடைந்த நூற்றுக்காணக்கான மக்களால் நிறைந்து வழிந்தது புதுக்குடியிருப்பு மருத்துவமனை.

பாதுகாப்பு வலயப் பகுதிகளிலிருந்து தினமும் நூற்றுக்கும் குறையாத நோயாளர்கள் புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார்கள். ஆட்லறி எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் மோட்டார் குண்டுகளில் தாக்குதல்களால் மோசமான அல்லது உயிராபத்தான காயங்களுடனேயே பலர் இங்கு அனுமதிக்கப்பட்டனர். கைக்குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள் என காயமடைந்த மக்கள் மருத்துவமனையின் அனைத்துக் கட்டங்களுக்குள்ளும் தங்கவைக்கப்பட்டனர். கட்டில்கள், கட்டில்களுக்கு கீழே, நடைபாதை அனை அனைத்துப் பகுதிகளும் காயமடைந்தவர்ளால் நிறைந்து வழிந்தன.

91.
29 சனவரி 2009 அன்று வன்னிப் பகுதியில் தங்கியிருந்த ஐ.நாவின் இறுதி இரண்டு வெளிநாட்டுப் பணியாளர்களும் வவுனியாவினை நோக்கிப் புறப்பட்டனர். ஐ.நா அமைப்புக்களில் பணிசெய்த உள்ளூர் பணியாளர்கள் அனைவரும் வெளியேறுவதற்குப் புலிகள் அனுமதிக்கவில்லை. குறித்த இதே தினத்தில் காயமடைந்த மேலும் 200 பேருடன் அனைத்துலகச் செஞ்சிலுவைக் குழுவினது தனியான தொடரணி வவுனியாவினை நோக்கிப் புறப்பட்டது. இதன் பின்னர்தான் நிலைமைகள் மேலும் மோசமாகிச் சென்றன.

சனவரி 29 தொடக்கம் பெப்பிரவரி 04 வரையிலான ஒருவார காலப் பகுதிக்குள் புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது ஆட்லறி எறிகணைத் தாக்குதல்களும் பல்குழல் எறிகணைத் தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டன. ஒன்பது எறிகணைகள் மருத்துவமனை வளாகத்திற்குள் வீழ்ந்து வெடித்தன. இதன்போது ஏற்கனவே காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறிப்பிட்ட தொகையுடையோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

பெப்பிரவரி 04ம் நாளன்று புதுக்குடியிருப்பு மருத்துவமனை வளாகத்திற்குள் எறிகணைகள் வீழ்ந்து வெடித்தபோது செஞ்சிலுவைக்குழுவின் அனைத்துலப் பணியாளர்களும் மருத்துவமனை வளாகத்திற்குள் இருந்திருக்கிறார்கள். சிறிலங்கா அரச படையினரின் நிலைகளிலிருந்துதான் எறிகணைகள் ஏவப்பட்டிருந்தன.

92.
புதுகுடியிருப்பு மருத்துவமனையின் அமைவிடம் தொடர்பான ஆள்கூற்றுப் புள்ளிகள் பற்றிய விபரங்கள் அனைத்தும் சிறிலங்கா அரச படையினருக்கு நன்கு தெரியும். அத்துடன் ஆளற்ற வேவு விமானங்களால் தெளிவாக அடையாளம்காணக்கூடிய வகையில் மருத்துவமனையின் கூரையில் அடையாளமிடப்பட்டிருந்தது.

"அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களின் அடிப்படையில் காயமடைந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட மக்கள் மற்றும் மருத்துவ வசதி வாய்ப்புகள் பாதுகாக்கப்படவேண்டும். எந்தச் சூழமைவிலும் இத்தகைய இலக்குகள் மீது தாக்குதல் நடாத்தக்கூடாது" என பெப்பிரவரி 01ம் நாளன்று அனைத்துலக செஞ்சிலுவைக்குழு அறிக்கை ஒன்றை விடுத்திருந்தது.

93.
கள நிலைமைகள் தொடர்பான அறியாமையின் பால் அமைந்த அறிக்கை இது. மனித உரிமைகள் மற்றும் அனர்ந்த முகாமைத்துவ அமைச்சு செஞ்சிலுவைக்குழுவின் இந்த அறிக்கைக்குப் பதிலளித்திருந்தது. புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது தாக்குதல் நடாத்தப்பட்டதை அரசாங்கம் ஆரம்பத்தில் மறுத்திருந்த நிலையில் 02 பெப்பிரவரி 2009 அன்று பாதுகாப்புச் செயலாளர் ஸ்கைநியுஸ் தொலைக்காட்சிக்குக் கீழ்க்கண்டவாறு கூறியிருந்தார்:

"புதுக்குடியிருப்பு மருத்துவமனையினைக் குறிப்பிட்டே இந்த அறிக்கை வெளியிடப்படுகிறதெனில், தற்போது அங்கு எந்த மருத்துவமனையும் இல்லையே. நாங்கள் அந்த மருத்துவமனையினை எடுத்துவிட்டோம். புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் இருந்த காயமடைந்தவர்கள் அனைவரும் வவுனியாவிற்கு மாற்றப்பட்டுவிட்டார்கள். பாதுகாப்பு வலயத்திற்கு வெளிறே எதுவும் இல்லை. பாதுகாப்பு வலயத்திற்கு வெளியே அமைந்திருக்கும் இந்தப் பகுதியில் எந்த மருத்துவமனையும் செயற்படமுடியாது. இதனால்தான் நாங்கள் பாதுகாப்பு வலயத்தினை ஏற்படுத்தியிருக்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

94.
கிளிநொச்சி நகரம் வீழ்ச்சிகண்ட நிலையில் சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிரான விடுதலைப் புலிகள் மேற்கொண்ட போரின்போது புதுக்குடியிருப்பு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகத் திகழ்ந்தது. இதன் விளைவாக புதுக்குடியிருப்புப் பகுதியில் விடுதலைப் புலிகள் குறிப்பிட்டுக்கூறக்கூடிய பிரசன்னத்தினைக் கொண்டிருந்தார்கள். அதேநேரம் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் காயமடையும் போராளிகளுக்கென தனியான மருத்துவ விடுதிகளைப் புலிகள் கொண்டிருந்தபோதும் அங்கு ஆயுதம் தரித்த புலிகள் எவரும் இருக்கவில்லை. இந்த மருத்துவமனையிலிருந்து குறுகிய தூரத்திலேயே முன்னணிப் பாதுகாப்பு நிலை அமைந்திருந்தது. இந்த நிலையில் புதுக்குடியிருப்புப் பகுதிகளில் மோதல்கள் தீவிரம்பெற அதிகளவிலான காயமடைந்த புலிகளின் உறுப்பினர்கள் இந்த மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டனர். மருத்துவமனைக்கு அருகான பகுதிகளிலிருந்து விடுதலைப் புலிகளும் தங்களது மோட்டார் தாக்குதல்களை நடாத்தியபோதும், மருத்துவமனை வளாகத்தினை இராணுவத் தேவைகளுக்காகப் பயன்படுத்தவில்லை.

புதுக்குடியிருப்புப் பிராந்தியத்தினை எவ்வாறாயினும் கைப்பற்றிவிடவேண்டும் என்ற எண்ணத்தில் சிறிலங்கா அரச படையினர் மருத்துவமனை வளாகத்தின் மீதும் அதனைச் சூழவுள்ள பகுதிகள் மீதும் மீண்டும் மீண்டும் தாக்குதலைத் தொடுத்தனர். எறிகணைத் தாக்குதல்கள் அதிகரித்த நிலையில், பிராந்திய சுகாதார சேவை அதிகாரிகள், ஐ.நா, அரச அதிபர் மற்றும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன புதுக்குடியிருப்பு வைத்தியசாலையிலிருந்த 300 நோயாளர்களை அங்கிருந்து 6-8 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்திருந்த புதுமாத்தளனுக்கு இடம் மாற்றுவதற்குத் தீர்மானித்தனர். விடுதலைப்புலிகளாலும் பகுதியாகப் பயன்படுத்தப்பட்ட பொன்னம்பலம் தனியார் மருத்துவமனை 6 பெப்பிரவரி 2009 எறிகணைத் தாக்குதலுக்கு உள்ளாகி அதன் ஒரு பகுதி முழுமையாக சேதமடைந்தது.

கருத்துகள் இல்லை: