ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

ஐ.நா வல்லுநர்கள் குழுவின் சிறிலங்கா மீதான குற்றச்சாட்டுக்கள் - பகுதி 4

போர் இடம்பெற்ற பகுதியில் சிக்கியிருந்த பொதுமக்களின் தொகையினைக் குறைத்துக் கூறியதன் ஊடாக அவர்களுக்குப் போதிய உணவுகள் மற்றும் மருத்துப்பொருட்கள் கிடைப்பதை சிறிலங்கா மறுத்தமை தொடர்பான விபரங்கள் இந்த நான்காவது பகுதியில் தொடர்கிறது.

தமிழ் பொதுமக்களின் எண்ணிக்கையினைக் குறைத்துக் கூறுதல்:

ஈ. போதிய மனிதாபிமான உதவிகளை மறுக்கும் வகையில் குழப்பம்தரும் இடம்பெயர்ந்தவர்களது எண்ணிக்கை

124.
போரின் இறுதிக் கட்டத்தில் குறிப்பாக சனவரி 2009 தொடக்கம் மே 2009 வரையிலான காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்த பொதுமக்களின் தொகையினை சிறிலங்கா அரசாங்கம் வேண்டுமென்றே குறைத்துக் கூறியிருக்கிறது. இதுபோல குறைந்தளவு பொதுமக்களே அங்கிருக்கிறார்கள் எனக் கூறியதன் ஊடாக அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை அரசாங்கம் மட்டுப்படுத்தியிருக்கிறது.

125.
இறுதிக்கட்டப் போர் தீவிரம் பெற்ற நிலையில், சுதந்திரமான உறுதிப்படுத்தல்களின் அடிப்படையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருக்கும் பொதுமக்களின் தொகை 150,000 க்கும் 250,000க்கும் இடைப்பட்டது என சிறிலங்கா அரசாங்கம் 13 சனவரி 2009 அன்று தனது இணையத்தளத்தின் ஊடாகத் தகவல் வெளியிட்டிருந்தது.

ஆனால் வன்னிப் பிராந்தியத்தில் 250,000க்கும் அதிகமான பொதுமக்கள் வசித்துவருகிறார்கள் என சனவரி மாதத்தின் இறுதிப்பகுதியில் ஐ.நா கணக்கிட்டிருந்தது (இதன் பின்னர் ஐ.நா வெளியிட்ட விபரங்களில் மக்களின் தொகை மேலும் அதிகம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது). ஆனால் வன்னிப் பிராந்தியத்தில் வெறும் 75,000 பொதுமக்கள் மாத்திரமே எஞ்சியிருக்கிறார்கள் என சனவரி மாதத்தின் இறுதிப்பகுதியில் பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டிருந்தது.

எவ்வாறிருப்பினும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உண்மையில் எத்தனை பொதுமக்கள் வசித்துவருகிறார்கள் என்பது தொடர்பான உண்மையான தகவல்களை சிறிலங்கா அரசாங்கம் நன்கறியும். உலக உணவுத் ஸ்தாபனத்திடமிருந்து உலர் உணவுகளைப் பெறுவதற்கு ஏதுவாக மாவட்ட அரச அதிபர்கள் இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பான தகவல்களை மாதாந்தம் திரட்டடிவந்தார்கள்.

செப்ரெம்பர் 2008க்கு முற்பட்ட காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்த வன்னிப் பிராந்தியத்தில் 420,000 பொதுமக்கள் இருந்ததை முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அரசாங்க அதிபர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். பொதுமக்கள் தொடர்பான இந்தத் தொகை மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம். ஆனால் வன்னிப்பிராந்தியத்தல் பதிவுசெய்யப்பட்ட பாடசாலைச் சிறார்களின் எண்ணிக்கை 70,000 என ஐ.நா சிறுவர் நிதியம் கணக்கிட்டிருந்தது. வன்னிப்பிராந்தியத்தில் வாழும் மக்களின் தொகையென சிறிலங்கா அரசாங்கம் குறிப்பிட்ட தொகையும் பதியப்பட்ட பாடசாலை மாணவர்கள் என சிறுவர் நிதியம் குறிப்பிட்ட தொகையும் ஏறத்தாழ ஒன்றாகத்தான் இருக்கிறது.

126.
இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட தொகை மாறுபட்டதாக அமைந்தது. ஆனால் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வசித்துவந்த மக்களின் தொகையென பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டவை எப்போதுமே மிகவும் குறைவானதாகத்தான் இருந்திருக்கிறது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செயற்பட்டுவந்த அரச ஊழியர்கள் மக்களின் தேவை மதிப்பீடு உள்ளிட்ட இதர புள்ளிவிபரங்களை அரசாங்கத்திற்கு அனுப்பியபோது அரசாங்கத்தினால் கண்டிக்கப்பட்டனர்.

எடுத்துக்காட்டாக, 02 பெப்பிரவரி 2009 அன்று முல்லைத்தீவு மாவட்ட உதவி அரச அதிபர் பொதுநிர்வாக உள்நாட்டு விவகார அமைச்சுக்கு இரண்டாவது பாதுகாப்பு வலயப் பகுதியிலிருந்து நிலமை அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். இந்த அறிக்கையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 81000 குடும்பங்களைச் சேர்ந்த 330,000 பேர் அப்போது வசித்துவந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

எவ்வாறிருப்பினும், புலிகளின் கட்டுப்பாட்டுப் பதியில் 330,000 பேர் இருக்கிறார்கள் எனக் கூறுவது 'தன்னிச்சையானது மற்றும் ஆதாரமற்றது' எனவும் 'இடம்பெயர்ந்தவர்களது தொகை தொடர்பாக இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான தகவல்களைத் தொடர்ந்தும் வழங்குமிடத்து' ஒழுக்காற்று நடவடிக்கையினை எடுக்கவேண்டியது 'தவிர்க்கமுடியாதது ஆகிவிடும்' எனவும் மார்ச் 18ம் நாளன்று தேச நிர்மான மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சினது செயலாளர் உதவி அரசாங்க அதிபருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

127.
வேல்ட் வியூ மற்றும் குயிக்பேட் ஆகிய செய்மதிகள் எடுத்த ஒளிப்படங்களின் அடிப்படையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் 267,618 பேர் இருக்கிறார்கள் என 2009ம் ஆண்டு பெப்பிரவரி மாதத்தின் இறுதிப் பகுதியில் சிறிலங்காவினது ஐ.நா அணி சிறிலங்கா அரசாங்கத்திற்குத் தகவல் வழங்கியிருந்தது. ஏப்பிரல் மாதத்தின் இறுதிப்பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் 127,177 பேர் தொடர்ந்தும் வசித்துவருகிறார்கள் என ஐ.நா கணக்கிட்டிருந்தது. ஆனால் அந்தக் காலப்பகுதியில் வெறும் 10,000 பேர் மாத்திரமே அங்கிருக்கிறார்கள் என்றது சிறிலங்கா அரசாங்கம்.

ஈற்றில் மோதல்கள் இடம்பெற்ற பகுதிகளிலிருந்து வெளித்தோன்றிய 290,000 பொதுமக்கள் அங்கிருந்து கொண்டுவரப்பட்டு மாணிக்கம் பண்ணை முகாமில் தங்கவைக்கப்பட்டனர். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருந்த மக்களின் தொகை தொடர்பான முன்பின் முரணான அரசாங்கத்தின் விபரங்கள் தொடர்பாக அது இதுவரை எந்த விளக்கத்தினையும் வழங்கவில்லை.

128.
இவ்வாறாக இடம்பெயர்ந்தவர்களின் தொகையினை அரசாங்கம் குறைவாக மதிப்பிட்டதன் விளைவாக, உண்மையில் வன்னிப் பிராந்தியத்தில் சிக்கியிருந்த மக்களுக்குத் தேவையான அளவு எதுவோ அதனைவிடக் குறைந்தளவிலான உணவு நிவாரணப் பொருட்களே உலக உணவு நிறுவனத்தினரால் வழங்கப்பட்டிருந்தது. இது பரந்துபட்ட போசாக்கின்மை மற்றும் பட்டினி ஆகியவற்றுக்கு வழிசெய்தது.

அதேபோலவே பெருந்தொகையான பொதுமக்கள் எறிகணைத் தாக்குதல்களின் விளைவாகக் காயமடைந்த நிலையில், வன்னிப் பிராந்தியத்திற்கு அனுமதிக்கப்பட்ட மருந்துப்பொருட்களின் அளவு அங்கு காணப்பட்ட பெரும் தேவையுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவானதாகவே காணப்பட்டது. இரண்டாவது பாதுகாப்பு வலயப் பகுதியில் மக்களுக்கு ஏற்பட்ட காயங்களின் தன்மையினைக் கருத்திற்கொண்டு, மயக்க மருந்துகள், இரத்தத்தினை ஏற்றுவதற்கான பைகள், நோய்க்கிருமிகளைக் கட்டுப்படுத்தும் மருந்துகள், சத்திரசிகிச்சைக்குரிய பொருட்கள், கையுறைகள் மற்றும் தொற்றுநீக்கிகள் போன்றவற்றை மருத்துவர்கள் கோரியிருந்தார்கள்.

இவற்றில் மிகவும் குறைந்தளவான பொருட்களே அங்கு அனுப்பப்பட்டிருந்தன. அத்தியாவசியமான தேவையாக இருந்த இந்த மருத்துகளுக்குப் பதிலாக பனடோல், ஒவ்வாமைக்கு உரிய மாத்திரைகள் மற்றும் விற்றமின்களே அரசாங்கத்தினால் அனுப்பப்பட்டன.

மாச்ச் 2009ல் பொதுமக்கள் இழப்புகள் வேகமாக அதிகரித்துச்செல்ல தேவையான மருந்துப்பொருட்கள் இல்லாமல் இருந்தமையின் விளைவாக காயமடைந்தவர்கள் பெரும் துன்பத்தினைச் சந்தித்ததோடு தேவையற்ற பல மரணங்களும் சம்பவித்தன. கடிதங்கள் ஊடாகவும் செய்தி ஊடகங்களுடனான செவ்விகள் வாயிலாகவும் போர் இடம்பெற்ற பகுதியில் நிலவிய மருந்துப்பொருட்களுக்கான தட்டுப்பாடு தொடர்பாக மருத்துவர்கள் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்தனர். இறந்த மற்றும் காயமடைந்தவர்களின் விபரங்களையும் இவை தொடர்பான ஒளிப்படங்களையும் இந்த மருத்துவர்கள் அனுப்பியிருந்தார்கள்.

இதுபோல இழப்பு விபரங்களைச் சேகரிப்பதையோ அல்லது அதனை ஊடகங்களுக்குத் தெரிவிப்பதையோ உடனடியாக நிறுத்துமாறு மருத்துவர்களுக்குப் பணித்த சுகாதார அமைச்சு இல்லையேல் இவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனக் கூறியிருந்தது. மார்ச் 16ம் நாளன்று மருத்தவர்களான சத்தியமூர்த்தி மற்றும் வரதராஜா ஆகியோர், 'முல்லைத்தீவு மாவட்டத்தில் மருந்துப் பற்றாக்குறையின் விளைவாக ஏற்பட்ட தேவையற்ற மரணங்கள்' என்ற தலைப்பில் அரசாங்கத்திற்கு அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார்கள்.

"மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படுவதோடு அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் கிடைக்கப்பெற்றிருந்தால் பல மரணங்கள் நிகழாமல் தடுத்திருக்கலாம். நோய்க்கிருமிகளைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் எவையும் எங்களுக்கு அனுப்பப்படவில்லை. மயக்கமருந்துகள் எதுவுமே அனுப்பப்படவில்லை. நோயாளர்களை மயக்குவதற்குப் பயன்படும் ஐ.வி திரவம் ஒரு போத்தலேனும் எமக்குக் கிடைக்கவில்லை. இந்த நிலையில் உயிர்காக்கும் அவசர சத்திரசிகிச்சைகள் எதனையும் மேற்கொள்ளமுடியாத நிலைமைக்கு நாங்கள் தள்ளப்பட்டிருக்கிறோம்" என மருத்துவர்களின் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

129.
முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்திருக்கும் மருத்துவமனையில் மயக்கமருந்துகளைக் கையாளுவதற்குப் பயிற்றுவிக்கப்பட்ட மருத்துவர் எவரும் இல்லாத நிலையில் வலிநிவாரணிகளையும் ஐ.வி திரவங்களையும் மாத்திரமே அனுப்பமுடியும் என 19 மார்ச் 2009 அன்று சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது. தங்களுக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதிகளை இந்தியத் தூதரகத்திற்கோ அல்லது தமிழ்நாட்டு முதல்வருக்கோ அல்லது வேறு எவருக்குமோ பிரதியிட்டு அனுப்புவதன் ஊடாக வழிமுறைகளை மீறவேண்டாம் எனவும் தவறின் 'வழிமுறைகளை மீறயதற்காகவும் அரசாங்கத்தினைச் சங்கடத்தில் ஆழ்த்தியமைக்காகவும்' ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சு அனுப்பிய கடிதத்தில் மருத்துவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

130.
ஈற்றில் மே 16ம் நாளன்று இந்த மருத்துவர்கள் போர் இடம்பெற்ற பகுதியிலிருந்து வெளியேறியபோது கைதுசெய்யப்பட்டதோடு பல மாதங்களாகத் தடுத்துவைக்கப்பட்டனர். யூலை மாதத்தின் முதற் பகுதியில் இந்த மருத்துவர்களை வைத்து உடகவியலாளர் மாநாடொன்று நடாத்தப்பட்டது. போர் இடம்பெற்ற வேளையில் மிகவும் குறைந்தளவிலான பொதுமக்களே கொல்லப்பட்டும் காயமடைந்தும் இருந்தனர் என்றும் இழப்புகள் தொடர்பான தகவல்களை மிகைப்படுத்திக் கூறுவதற்கு தாங்கள் புலிகளால் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

போர் இடம்பெற்ற பகுதிகளில் இருந்து மின்னஞ்சல்கள் வாயிலாகவும், செவ்விகள் மற்றும் அறிக்கைகள் ஊடாகவும் இந்த மருத்துவர்கள் வழங்கிய தகவல்களுக்கு முரணானதாக இந்த மருத்துவர்களின் புதிய கருத்து அமைந்தது. அரசாங்கத்தின் கடுமையான அழுத்தத்தின் காரணமாகவே ஊடகவியலாளர் மாநாட்டில் இந்த மருத்துவர்கள் இவ்வாறு கருத்துரைத்திருக்கிறார்கள் என வல்லுநர்கள் குழு வெகுவாக நம்புகிறது. அத்துடன் மருத்துவர்கள் முன்னர் வெளியிட்ட அறிக்கைகளின் உண்மைத் தன்மையினை இந்தப் ஊடகவியலாளர் மாநாடு எந்தவகையிலும் பாதிக்காது என்றும் குழு நம்புகிறது.

131.
பொதுமக்களின் அளவு தொடர்பான உண்மையான தகவல்களைப் பெறக்கூடிய வசதி அரசாங்கதிற்கு இருந்தபோதும் வன்னிப்பிராந்தியத்திற்கான அத்தியாவசிய வழங்கல்களைக் குறைப்பதற்கான திட்டமிட்டதொரு நடவடிக்கையாகவே, பொதுமக்களின் தொகை தொடர்பாக அரசாங்கம் குறைத்துக் கூறியிருக்கிறது.

இதன் காரணமாகவே பொதுமக்களின் எண்ணிக்கை அரசதரப்பினரால் குறைத்துக்கூறப்பட்டது என்பதை அரசாங்கத்தின் மூத்த அலுவர் ஒருவர் ஏற்றுக்கொண்டிருக்கிறார். இதுபோல பொதுமக்களின் தொகையினை அரசாங்கம் குறைத்துக்கூறியதானது போரின் இறுதிக் கட்டத்தில் பொதுமக்களும் விடுதலைப் புலிகளும் ஒன்றே என அரசாங்கம் கருதியிருக்கிறது என்பதையே சுட்டிக் காட்டுகிறது.

கருத்துகள் இல்லை: