சனி, 23 ஏப்ரல், 2011

அல்வா கடைக்கே அல்வா கொடுத்த போலிகள்... நீதிமன்றம் தடை!

நெல்லை: திருநெல்வேலி யில் புகழ்பெற்ற இருட்டுக் கடை அல்வா பெயரில் போலி கடைகள் நடத்தவும், இந்தப் பெயரை வேறு யாரும் பயன்படுத்தவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நெல்லை என்றவுடனே அல்வாதான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். திருநெல்வேலிக்கே அல்வாவா என்ற வழக்குச் சொல்லே உண்டு.

இதற்கு முக்கிய காரணம், திருநெல்வேலியில் உள்ள இருட்டுக் கடைதான். திருநெல்வேலி யில் நெல்லையப்பர் கோவில் எதிரே அமைந்துள்ளது இந்த இருட்டுக்கடை. அல்வா என்றாலே இந்த இருட்டுக்கடைதான்.

இந்த கடையில் 45 வாட்ஸ் பல்பு மட்டுமே போடப்பட்டுள்ளதால் வெளிச்சம் குறைவாக இருக்கும். இதனால் இதற்கு இருட்டுக்கடை என்ற பெயர் ஏற்பட்டது. எத்தனையோ நவீன வசதிகள் வந்துவிட்ட இந்தக் காலத்திலும், இந்தக் கடை இன்னமும் 40 வாட்ஸ் பல்புடன் இருட்டாகத்தான் இருக்கிறது. பெயர் காரணம் சரியாக இருக்கவேண்டுமல்லவா... அதனால் இப்படி.

தினமும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையே திறக்கப்படும் இந்த இருட்டுக்கடையில் அல்வா வாங்க மக்கள் கூட்டம் அலைமோதும். கடை திறக்கும் முன்னரே வாடிக்கையாளர்கள் கூடி விடுவார்கள்.

இந்த இருட்டுக்கடை அல்வாவை நெல்லையில் அறிமுகப்படுத்தியவர்கள் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள். சுமார் 135 ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து பல குடும்பத்தினர் பிழைப்பு தேடி நெல்லைக்கு வந்தனர். அவர்கள் அனைவரும் சொக்கப்பட்டி அரண்மனையில் பணிக்கு சேர்ந்தனர். அவர்களில் ஒருவர்தான் 1882-ம் ஆண்டு வந்த ஜகன்சிங். ராஜஸ்தான் இனிப்பு வகைகள் செய்வதில் ஜகன்சிங் நிபுணர். ராஜஸ்தான் வகை இனிப்புகள் தயாரித்து நெல்லையில் விற்பனை செய்ய ஆரம்பித்தார்.

ராஜஸ்தான் இனிப்பு வகையில் ஒன்றான அல்வாவையும் தயாரித்து தள்ளுவண்டியில் தெருத்தெருவாக சென்று விற்று வந்தார். ஜகன்சிங்கின் புது வகை இனிப்பான அல்வா மிகவும் பிடித்து விட்டது. இதனால் அல்வாவுக்கு தனி மவுசு ஏற்பட்டது. இதனால் அல்வா வியாபாரம் சூடுபிடிக்கத்தொடங்கியது.

ஜகன்சிங் தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் அதில் ஈடுபடுத்தி வியாபாரத்தை பெருக்கினார். அவர்களின் வழி தோன்றல்கள் தான் நெல்லை பகுதியில் இனிப்பு பட்சணக் கடைகளை நடத்தி வருகின்றனர்.

அல்வாவுக்கே அல்வா

ஆனால் மற்ற கடைகளுக்கு கிடைக்காத புகழும் வர்த்தகமும் இருட்டுக்கடைக்கு மட்டும் கிடைத்தது. இதனால் அங்கு அல்வா விற்பனை நாளுக்கு நாள் அமோகமாக நடந்தது. அல்வா என்றாலே இருட்டுக்கடைதான் என்ற நிலை மக்கள் மனதில் ஏற்பட்டது.

இதனால் நெல்லையின் பல இடங்களில் இருட்டுக் கடை என்ற பெயரில் புதிய கடைகள் முளைத்தன. பஸ்,ரெயில் நிலையங்களிலும் பலர் இருட்டுகடை அல்வா என்ற பெயரில் பிளாஸ்டிக் பைகளில் தரம் குறைந்த அல்வா விற்று வருகின்றனர். இதனால் பயணிகள் பெரும் ஏமாற்றத்துக்கு ஆளாகுகின்றனர்.

இந்தநிலையில் நெல்லை டவுனில் இருட்டுக்கடை (ஒரிஜினல் கடை) நடத்தி வரும் சுலோசனா பாய் , நெல்லை முதலாவது விரைவு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

தனது மனுவில், "நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் அருகே 1900-ஆண்டில் இருந்து என்னுடைய மாமனார் கிருஷ்ணசிங் லாலா கடை நடத்தி வருகிறார். அதில் அல்வா மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த கடையில் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை அல்வா விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடையில் 45 வாட்ஸ் மின்சார பல்ப் மட்டுமே எரிய விடப்படும். வெளிச்சம் குறைவாக இருப்பதால் இந்த கடையை இருட்டுக்கடை அல்வா கடை என்று மக்களால் அழைக்கப்பட்டு விற்பனை நடந்து வருகிறது.

இந்த நிலையில் நெல்லை சந்திப்பில் 'திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா 'என்ற பெயரில் அந்த பகுதியை சேர்ந்த செய்யது முகைதீன் என்பவர் கடந்த 22-6-2007 முதல் கடையை தொடங்கி நடத்தி வருகிறார்.

இருட்டுக்கடை என்ற பெயரில் அவர் கடை நடத்துவதால் என் வியாபாரம் பாதிக்கிறது. எனவே இருட்டுக்கடை பெயருக்கு முன்போ, பின்போ வேறுவார்த்தைகளை சேர்த்து அல்வா கடை நடத்தக்கூடாது என்று உறுத்துக்கட்டளை பிறப்பிக்க வேண்டும். பை, பேக்குகளில் இந்த பெயரை அவர் பயன்படுத்தக்கூடாது. 2007-க்கு பிறகு விற்பனைக் கணக்குகளையும் லாபத்தையும் என்னிடம் ஒப்படைக்க வேண்டும்,' என தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அவர் 27 சான்றுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இருட்டுக்கடை என்ற பெயரை அவர் வணிக சின்னமாக பதிவு செய்திருப்பதையும் காட்டினார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பொன்பிரகாஷ், "மனுதாரரின் கடையை பிரதிபலிக்கும் படியாக திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா என்று அச்சடித்தோ, விளம்பரம் செய்யவோ கூடாது. இருட்டுக்கடை என்ற வார்த்தையுடன் முன்போ, பின்போ வேறு வார்த்தைகள் சேர்த்து அந்த முகவரியில் அல்வா வியாபாரம் செய்யக்கூடாது," என உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை: