ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

ஐ.நா அறிக்கையை இந்தியாவிடம் வழங்கியது சிறிலங்கா – உதவுவது பற்றி ஆராய்கிறது சிவசங்கர்மேனன் குழு

ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை ஆராய்ந்து பொருத்தமான ஆலோசனை வழங்குமாறு கோரி அதனை இந்தியாவிடம் சிறிலங்கா அரசாங்கம் வழங்கியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையை ஆராய்வதற்கு இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தலைமையிலான குழுவொன்றை இந்திய அரசாங்கம் நியமித்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டதாகவும், அந்த வாரஇதழ் குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிக்கை தொடர்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குடன் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சில நாட்களுக்கு முன்னர் தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்டு பேசியதாகவும் இதையடுத்தே நிபுணர்குழு அறிக்கை இந்தியாவிடம் கையளிக்கப்பட்டதாகவும் இராஜதந்திர வட்டாரங்கள் கூறியுள்ளன.

இந்த அறிக்கையை ஆராயும் இந்திய அதிகாரிகள் குழு தேவைப்பட்டால், சிறிலங்காவுக்கு உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்கும் என்றும் இராஜதந்திரி ஒருவர் கொழும்பு வாரஇதழுக்கு கூறியுள்ளார்.

இதற்கிடையே, நிபுணர்குழு விகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது கேள்விக்குறியாகவே உள்ளதாக மற்றொரு ஆங்கில வாரஇதழ் குறிப்பிட்டுள்ளது.

சிறிலங்காவுடனான சீனாவின் நெருக்கத்தை இந்தியா விரும்பாதிருப்பதும், இந்தியாவுடனானா நெருக்கத்தை சீனா விரும்பாதிருப்பதும் சிறிலங்காவுக்கு நெருக்கடியாக உள்ளதென்றும் அந்த வாரஇதழ் கருத்து வெளியிட்டுள்ளது.

அதேவேளை, பிறிதொரு கொழும்பு ஆங்கில வாரஇதழ் இந்தியா இந்த விவகாரத்தில் நடுநிலை வகிக்கும் முடிவை எடுக்கலாம் என்று தலைப்பிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

1 கருத்து:

Nalliah சொன்னது…

"நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்"
போர் என்பது கொடியது. போர் என்ற பெயரில் கடந்த எழுபது வருடங்களாக எத்தனை லட்சம் அப்பாவி பொது மக்களை அமெரிக்கா குண்டுகள் வீசி கொன்று குவித்திருக்கிறது. மோசமான தலைமைகள் போரை முன்னெடுத்தால் அதனால் மனித குலம் படுமோசமான பேரழிவுகளை சந்திப்பது தவிர்க்க முடியாது என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் எமக்கு பாடம் புகட்டியுள்ளது.
கடந்த நாற்பது வருடங்களாக இந்தியாவிலும், இலங்கையிலும் தமது சுயலாபங்களுக்காக மக்களை உசுப்பேற்றி தம்மை வளர்த்துக்கொண்ட அரசியல் தலைமைகளால் மக்களுக்கு உண்மையில் உருப்படியாக எதையும் பெற்று தர முடியவில்லை. சரியான கருத்துகள் மூலம் மக்கள் சக்தியை சரியான வழியில் வளர்ப்பதன் மூலமே மட்டும்தான் நிம்மதியையும் சுபீட்சத்தையும் மக்கள் பெற முடியும்.