ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

ஐ.நா போர்க்குற்ற அறிக்கை: தமிழகத்தின் பொறுப்பு என்ன?

இருபத்தோராம் நூற்றாண்டில் நீதி தேவதையின் குரல் ஈழத்தமிழர் மீது மையம் கொண்டு எழுகிறது. அனைத்துவகை அறநெறிகளையும் மீறி, எல்லாவகையான தர்ம போதனைகளையும் தாண்டிக் கேட்பார் யாருமின்றி, உலகின் பச்சைக் கண்களின்முன், இந்தியாவின் அண்டையில் இலட்சக்கணக்கில் ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். ஈழத்தில் நிகழ்ந்தது ஓர் இனப்படுகொலை.
இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் ஹிட்லர் செய்ததை இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சிங்கள ஆட்சியாளர்கள் தொடர்ந்திருக்கிறார்கள். ஹிட்லரிசத்தின் முக்கால் நூற்றாண்டுகளின் பின்பும் அது இலங்கையில் தொடரமுடிகிறது என்றால், உலகளாவிய மனிதகுல நாகரீகத்தின் வளர்ச்சியில் எங்கோ தவறு நடந்திருக்கிறது.
குறைந்தது 80,000க்கும் கூடியது 1,40,000க்கும் இடையில் ஈழத்தமிழர்கள் சிக்கள அரசால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகப் பூர்வாங்கக் கணிப்புகள் கூறுகின்றன. கர்ப்பிணி தாய்மார்கள், சிறுவர்கள், பெண்கள், முதியோர் என வேறுபாடின்றி 80,000 க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது மட்டும் நிச்சயம். இருபத்தோராம் நூற்றாண்டில் நடந்த இந்த இனப்படுகொலையைப் பற்றிப் பேசாமல், ஈழத்தமிழருக்கான நீதி நியாயங்களைப் பற்றிப் பேசாமல் மனித உரிமைகளைப் பற்றியும் ஜனநாயகத்தைப் பற்றியும் இன சமத்துவத்தைப் பற்றியும் சோசலிசத்தைப் பற்றியும் பேசமுடியாது. எல்லா தத்துவங்களுக்கும் மேலாக முதலில் மனிதனுக்கு உயிர் வாழ பாதுகாப்பு வேண்டும்.
கருவறையில் இருக்கும் சிசுவிலிருந்து கல்லறையில் இருக்கும் எலும்புக்கூடுகள்வரை தமிழருக்குப் பாதுகாப்பு என்பதே இல்லை. கூட்டம் கூட்டமாகச் சூழ்ந்துவந்த விமானங்கள் அப்பாவித் தமிழர்கள்மீது குண்டுமழை பொழிந்தன. இக்குண்டுவீச்சில் மக்கள், அவர்தம் வீடுகள், குடியிருப்புகள், கட்டடங்கள், வழிபாட்டுத் தலங்கள், கல்விக் கூடங்கள், மருத்துவமனைகள், பொது மனைகள், வளர்ப்பு பிராணிகள், தாவரங்கள் ஏனைய உயிரினங்கள் என சகலரும் சகலமும் பேரழிவிற்கு உள்ளாகின. எறிகணைகள், பல்குழல் எறிகணைகள், தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகள் என அனைத்தும் எவ்வித ஈவு இரக்கமுமின்றிச் சரமாரியாக மக்கள்மீது வீசப்பட்டன. அவ்வேளை பதுங்குகுழிக்கு வெளியே நீளும் ஒவ்வொரு தலையும் மண்ணில் புரண்டன. PK ரக கனரக துப்பாக்கிகள் இடைவிடாது மக்களை நோக்கி குண்டுமழை பொழியும் வண்ணம் நாட்டிவைக்கப்பட்டன.
தங்களிடம் அகப்படுவோரைப் படையினர் யுத்த களத்தில் தமக்கான வேலைகளைச் செய்வித்ததுடன் சித்திரவதைக்கும் பாலியல் வல்லுறவுகளுக்கும் உள்ளாக்கியதுடன் படுகொலையும் செய்தனர். படையினரிடம் சரணடைந்தோர், அவர்களால் கைதுசெய்யப்பட்டோர் மீதான சித்திரவதைகளும் பாலியல் வல்லுறவுகளும் படுகொலைகளும் இன்னொரு ரகம். அனைத்துச் சர்வதேச தொண்டு நிறுவனங்களையும் வெளியேற்றிவிட்டு எந்த ஓர் ஊடகவியலாளரையும் அனுமதிக்காது, தமிழர் பகுதியை நாலாபுறமும் மூடிவிட்டுச் சாட்சிகளுக்கு இடமின்றி கோர இனப்படுகொலைத் தாண்டவத்தைச் சிங்கள அரசு தமிழ் மண்ணில் எந்தவித தடையுமின்றிப் புரிந்தது.
நீதி மறுக்கப்பட்டவர்களாய், கைவிடப்பட்டவர்களாய், வஞ்சிக்கப்பட்டவர்களாய் கேட்பார் யாருமின்றி அநாதரவான நிலையில் கண்மூடித்தனமாய் கொன்று குவிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் நெஞ்சங்கள் அனலாய்க் கொதிக்கின்றன. ஆறுதல் சொல்ல அரசுகள் இல்லை. அணைப்பார் யாரும் இல்லை. தமிழகமே நீயுமா கண்டும் காணாததுபோல் மௌனம் காக்கப் போகிறாய்? உன் உடன்பிறப்புகளின் வேதனையை நீ அறியாயோ?
இலங்கைத் தீவின் சொந்தக்காரர்கள் நாங்கள். சிங்களவர்களுடன் தீவில் நாங்கள் சம பங்காளிகள். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொன்றுதொட்டு வாழ்ந்துவரும் எமது பாரம்பரிய மண்ணில் சிங்களப் பேரினவாதத்தால் நாங்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகிறோம். அதுவும் இந்தியாவின் பெயரால்தான் அவர்கள் எம்மைக் கொன்று குவிக்கிறார்கள், சித்திரவதை செய்கிறார்கள், மானபங்கப்படுத்துகிறார்கள், எமது அனைத்துவகைப் பிறப்புரிமைகளையும் மீறுகிறார்கள். இந்திய வல்லாதிக்கத்தின் வால்களாய் ஈழத்தமிழர்கள் நீள்கின்றனர் என்றும், அந்த வால்களை நறுக்கினால்தான் இலங்கைத் தீவில் இந்திய வல்லாதிக்கம் வாலாட்ட முடியாது என்றும் கூறி இந்தியாவிற்கு எதிரான தமது யுத்ததைச் சிங்கள ஆட்சியாளர்கள் ஈழத்தமிழர்கள்மீது புரிகின்றனர்.
கி.பி. 4ஆம் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்து இலங்கைக்குச் சென்ற மகாயான பௌத்தத் துறவியான சங்கமித்தரால் சிங்கள மன்னனான மகாசேனன் தேரவாத பௌத்தப் பிரிவிலிருந்து மகாயான பௌத்தப் பிரிவிற்கு மதமாற்றம் செய்யப்பட்டார். மதம் மாறிய மன்னனால் தேரவாதப் பௌத்த மகா நாயக்கத் தேரோக்கள் உட்பட மகா சங்கப் பிக்குகள் குறிசுடப்பட்டனர். இதன் காரணமாக அவர்கள் நாட்டைவிட்டு காட்டுக்குள் ஒழிந்தோடினர். அத்தகைய தேரவாதப் பௌத்தப் பிரிவின் தலைமைப் பிக்குவான மகாநாம தேரரால் கி.பி. 4ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மகாவம்சத்தில் 'மிருகங்களைக் கொல்வது பாவமே ஆயினும் தமிழரைக் கொல்வது பாவம் இல்லை' என்று மன்னனுக்கு ஆறுதல் சொல்லும் வகையில் எழுதப்பட்ட போதனை ஒன்று உள்ளது.
இந்திய எதிர்ப்பினதும், தமிழக எதிர்ப்பினதும் வெளிப்பாடாய் சிங்கள பௌத்தர்களால் 'புனித வலாற்று' நூலாகக் கருதப்படும் மகாவம்சத்தில் இடம்பெற்ற 4 ஆம் நூற்றாண்டில் உருவான அந்த இனப்படுகொலைத் தத்துவத்தை 21ஆம் நூற்றாண்டில் சிங்கள ஆட்சியாளர்கள் நிறைவேற்றியிருக்கிறார்கள். இப்படி இந்தியா, தமிழகம் தொடர்பான ஆயிரக்கணக்கன ஆண்டுகள் பழமையான காரணங்களைக் காட்டி ஈழத்தமிழர்கள் பழிவாங்கப்படுகிறார்கள் என்ற உண்மையைத் தமிழக மக்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம்.
இலங்கையில் நிகழும் இனப்படுகொலையை ஓர் உள்நாட்டுப் பிரச்சனை என்றும் அதில் வெளிநாடுகள் தலையிடக்கூடாது என்றும் ஓர் அபத்தமான கோட்பாட்டை வசதிக்கேற்ப கூறிவருகிறார்கள். அதேவேளை ஒரு நாட்டிற்குள் நிகழும் பிரச்சனை வேறொரு நாட்டிலும் பிரச்சனையைத் தோற்றுவிக்குமானால் அந்தப் பிரச்சனை ஓர் உள்நாட்டுப் பிரச்சனையாக அன்றி அதனோடு சம்பந்தப்பட்ட பிற நாடுகளையும் தழுவிய சர்வதேச பிரச்சனையாக மாறிவிடுகிறது என்ற இன்னொரு சர்வதேச விதி இருப்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்நிலையில் தமிழகம் எழுச்சிகொள்ளும் பட்சத்தில் மட்டுமே அபத்தமான உள்நாட்டுப் பிரச்சனை என்ற கூற்று நீர்த்துப்போய் இந்தியாவும் ஏனைய நாடுகளும் தட்டிக்கேட்பதற்கான சூழல் துலக்கமாகும். மேலும் கோட்பாட்டு ரீதியாகப் பார்க்கும் போதும் 'இனப்பிரச்சனை என்பது ஓர் உள்நாட்டுப் பிரச்சனை அல்ல. அது எப்போதும் ஒரு சர்வதேசப் பிரச்சனை' என்ற கூற்றையும் நாம் இங்கே கருத்தில் கொள்ளவேண்டும்.
இந்தியாவின் பெயரால்தான் ஈழத்தமிழரைச் சிங்கள ஆட்சியாளர்கள் ஒடுக்கி வருகிறார்கள், கொன்று குவிக்கிறார்கள். உலக நாடுகளும் இந்தியாவுடன் சார்புபடுத்தித்தான் ஈழத்தமிழர் விவகாரத்தை அணுகுகின்றன. இந்தியாவின் பகைமை நாடுகளும் இந்தியாவின் உறவு நாடுகளும் ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியாவைத் தொடர்புபடுத்தியே தம் நிலைப்பாடுகளை எடுக்கின்றன. இந்தவகையிலும் இது ஓர் உள்நாட்டுப் பிரச்சனை அல்ல என்பதுடன், ஈழத்தமிழருக்கான நீதியை நிலைநாட்டவேண்டிய பணியில் இந்தியாவிற்குப் பெரும் பொறுப்பு இருக்கிறது.
இலங்கையில் இந்திய ஆதிக்கம் பரவாமல் தடுப்பதற்கு ஈழத்தமிழரை அழிப்பதுதான் ஒரே வழி எனச் சிங்கள ஆட்சியாளர்கள் கருதுவதால் அதன் தர்க்கப்பூர்வ வளர்ச்சியின்படி ஈழத்தமிழர் அல்லாத இலங்கைத் தீவு இந்தியாவின் பகைமை நாடுகளின் கொல்லைப் புறமாவதைத் தவிர்க்க முடியாது. அதன்படி ஈழத்தமிழரின் அழிவை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது என்பது தமிழகத்தினதும் இந்தியாவினதும் தற்கொலையாக அமைந்துவிடக்கூடிய ஆபத்தைக் கொண்டுள்ளது. இனஅழிப்பு சிறுகச் சிறுக நிகழ்வதால் அதன் பருமன் கண்ணுக்குப் புலப்படாமல் இருக்கலாம். ஆனால், சில ஆண்டுகளுக்குப் பின்பு மொத்தமாகப் பார்க்கும்போது மொத்த இனமும் அழிந்திருப்பதைக் காண முடியும். அப்போது இலங்கைத் தீவில் தன் நலனின் பொருட்டும் கையறு நிலையில்தான் நிற்க வேண்டியிருக்கும். எனவே ஈழத்தமிழரைப் பாதுகாப்பது என்பது இந்தியா தன்னைப் பாதுகாப்பதற்குச் சமம்.
இன அழிப்பு என்பது பல வடிவங்களில் நிகழ்கின்றது. ஒன்று நேரடியாக இனப்படுகொலை செய்வது அடுத்து இனப்படுகொலையினாலான இராணுவ மேலாதிக்கத்தை நிலைநாட்டி மக்களை குரலற்றவர்களாக ஒடுக்கிவிடுவது. அதுவே முள்ளிவாய்க்கால் படுகொலையின் பின்பு இப்போது நிகழ்ந்து வருகிறது. சிங்களக் குடியேற்றங்களைத் தமிழ் மண்ணில் தடையின்றி மேற்கொள்வதன் மூலம் தமிழ் மண்ணைச் சிங்கள மயமாக்கிவிடுவது. மேலும் சட்டங்களாலும் போலீஸ், இராணுவ நடவடிக்கைகளினாலும் நிர்வாக ஏற்பாடுகளினாலும் மக்களை முடக்கிவிடுவதுடன் தமிழ் மண்ணில் சிங்கள இன வளர்ச்சிக்கான பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமும் தோலிருக்க சுளை பிடுங்கும் இனஒழிப்பை சிங்களம் அரங்கேற்றுகின்றது.
இங்கு மக்கள் படுகொலை செய்யப்பட்டது என்பது மட்டுமல்ல பிரச்சனை. அப்படுகொலையின் விளைவும் தொடர்ச்சியும் சிங்கள இனவாதம் தமிழ் மண்ணில் விரிந்து பரவுவதற்கான உரமாக அமைந்துள்ளது. ஆதலால் இந்த இனப்படுகொலைக்குப் பின்னணியிலிருந்த நோக்கமும் விளைவும் படுகொலையின் அளவைவிடவும் மிகப்பெரியதாக உள்ளது. எனவே இந்த இனப்படுகொலையின் பின்பு தேசிய நல்லிணக்கத்திற்கான வாய்ப்பு இருக்கிறது என்று கூறுவது உண்மை அல்ல.
மறுபுறமாக இந்த இனப்படுகொலை ஒரு தேசிய இன அழிப்பிற்கான வாய்ப்பைத் தங்குதடையற்ற வகையில் முற்றிலும் திறந்துவிட்டுள்ளது. இது முடிந்து போன ஓர் இனப்படுகொலை மட்டும் அல்ல, முழுமையான இனவழிப்புக்கான ஒரு தயாரிப்புக் கட்டம். ஆதலால் இன்னும் இன்னும் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதுடன் முழுமையான இனஅழிப்புக்கான முன் தயாரிப்பாக அமைந்த மேற்படி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு நீதி காண்பது அவசியம்.
சிங்கள அரசை அணைத்து நடத்துவதன் மூலம் எல்லாவற்றையும் சாதிக்கலாம் என எண்ணும் ஓர் அணுகுமுறை இந்தியாவிடம் உண்டு. ஆனால் கடந்த காலங்களில் சிங்கள அரசை அணைத்து எதனைச் சாதிக்க முடிந்தது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவின் தலையிலும் ஈழத்தமிழர்களின் அடிவயிற்றிலும் நெருப்பை அள்ளிக் கொட்டுவதில் சிங்கள அரசு தொடர்ந்து வெற்றிபெற்று வருகிறது. தன் எதிரிகளை மரணப் பொறிக்குள் சிக்கவைத்து இறுதியில் தனது தலையில் வாகை சூடிக்கொள்ளும் வித்தை சிங்களத் தலைவர்களுக்குக் கைவந்தகலை.
உள் நாட்டில் தமிழ் தலைவர்களுடன் 1920 ஆம் ஆண்டிலிருந்து 1980 ஆம் ஆண்டுவரை ஒப்புக்கொண்ட அனைத்து ஒப்பந்தங்களையும் சிங்களத் தலைவர்கள் மீறினார்கள். பின்பு வெளிநாட்டு ரீதியில் இந்தியா எடுத்துக்கொண்ட பேச்சுவார்த்தைகள் ரீதியிலான அனைத்து முயற்சிகளையும் காலம் கடத்திவிட்டுப் புறம் தள்ளினார்கள். வரலாறு இப்படி இருக்கையில் தற்போது தமிழ் மக்கள்மீது இராணுவ மேலாதிக்கம் பெற்றுவிட்ட சிங்கள அரசு யாருடைய அறிவுரையைக் கேட்டும் இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாணப் போவதில்லை. இந்தியாவாலோ அல்லது வேறு எந்தவொரு அரசாலோ இலங்கை அரசை இப்போது தீர்வை நோக்கி நகர்த்த முடியாது. எந்த அரசு கூறினாலும் இனப்பிரச்சனைக்கான தீர்வை அரசியல் யாப்பில் அவர்கள் மேற்கொள்ளப் போவதில்லை. சிங்களவரின் அரசியல் அகராதியில் இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு என்ற ஒரு வார்த்தை இல்லை. அப்படி ஓர் அரசியல் யாப்பு ரீதியிலான தீர்வை அவர்களிடம் எதிர்பார்ப்பது ஒரு பகல்கனவாய் பொய்யாய் பழங்கதையாய் பையவே போய்விடும்.
ஈழத்தமிழருக்காகக் குரல் கொடுக்கும் பல பிரிவினர் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உண்டு. வரலாறு தந்த பாடமும் படிப்பினையும் எம்மிடம் இரத்தமும் தசையுமாக உள்ளது. இந்நிலையில் ஈழத்தமிழர்கள் இந்தியாவின் கட்சி வேறுபாட்டு அரசியலுக்குள் அகப்பட்டுவிடாது இருப்பதே நல்லது. தொழில்சார் நுணுக்கத்துடன் அணுகி இந்திய மக்களால் வழங்கப்படும் தீர்ப்பின் அடிப்படையிலான படிமுறையில் கட்சிகளை அணுகுவதே சரியானது.
ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கீ-மூன் அவர்கள் நியமித்த நிபுணர் குழு இரண்டு வருடங்களுக்குப் பிறகாவது ஈழத்தமிழர்கள் பல்லாயிரக் கணக்கில் படுகொலை செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிபுணர் குழு அறிக்கையை ஐ.நா. வெளியிடக்கூடாது என இலங்கை அரசு கேட்டுள்ளதுடன் மேற்படி பெரும்தொகையில் மக்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து மேற்கொள்ளப்படக்கூடிய விசாரணையைத் தடுத்து நிறுத்துவதற்குச் சர்வதேச நாடுகளிடம் ஆதரவு திரட்டவும் தொடங்கியுள்ளது. இந்நிலையில் அத்தகைய விசாரணையைச் சர்வதேச மட்டத்தில் மேற்கொள்ள இந்திய அரசு பாடுபட வேண்டும். இதில் இந்திய அரசின் நிலைப்பாடே தலையாயது. இத்தகைய சூழலில் விசாரணையை விரைந்து மேற்கொள்ளுமாறு ஐ.நா. சபையை இந்தியா வற்புறுத்துவதுடன் தனது நட்பு நாடுகளிடம் இதற்கான ஆதரவை திரட்டவும் வேண்டும். இப்பிரச்சனையை வற்புறுத்துவதன் மூலம்தான் இந்தியா தனக்கான தார்மீக பொறுப்பையும் ஜனநாயகத்தின் மீதான தனது கடமையையும் சர்வதேச அரங்கில் நிறைவேற்ற முடியும்.
இதற்காக இந்திய அரசை வற்புறுத்த வேண்டிய உரிமையும் பொறுப்பும் தொப்புள் கொடி உறவுகளான தமிழக மக்களுக்கே முதலில் உண்டு, ஜனநாயகத்தையும் மனித உரிமையையும் நேசிக்கும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உண்டு. இந்திய, தமிழக ஊடகங்கள் நீதியின் பெயராலான தமது மதிப்பார்ந்த பணியை ஆற்ற வேண்டும். ஈழத்தமிழரின் பாதுகாப்பில்தான் தமிழகத்தினதும் இந்தியாவினதும் பாதுகாப்பும் இருக்கிறது என்ற நீண்ட கால கண்ணோட்டத்துடனான பேருண்மையின் அடிப்படையில் மிகவும் அவசரமாகச் செயல்படவேண்டிய நிலையில் தமிழகம் உள்ளது. தமது வரலாற்றுப் பெருமையை இந்திய தலைவர்களும் அறிஞர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் ஊடகவியலாளர்களும் மாணவர்களும் பரந்துபட்ட மக்களும் தர்மத்தின் பெயரால் நிலநாட்டக்கூடிய வகையில் செயல்படுவார்கள் என்று நம்புகிறோம்.
'யாதும் ஊரே யாவரும் கேளிர்.' என்ற விரிந்த சிந்தனையை உலகுக்குத் தந்த தமிழகம்
'அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தன்நோய்போல் போற்றாக் கடை.' என்று பிறர் துன்பத்தையும் தன் துன்பமாகக் கருதியது வள்ளுவரின் அறிவுத் தமிழ் மரபில் வந்த தமிழகம்
'தேரா மன்னா செப்புவது உடையேன்' என்று அரசனிடம் நீதி கேட்ட கண்ணகியின் வழிவந்த தமிழகம்
'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் காட்டிய வள்ளலாரின் வழி வந்த தமிழகம்
'தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் தர்மம் மறுபடி வெல்லும்.' என்று கூறிய பாரதியாரைப் போற்றும் தமிழகம்
'பொங்குதமிழுக்கு இன்னல் ஏற்பட்டால் சங்காரம் நிசம் என்று சங்கே முழங்கு.' என்னும் பாரதிதாசன் வழிவந்த தமிழகம்
ஈழத்தமிழரின் இன்னலைத் துடைக்க எப்போது பொங்கி எழப் போகிறது?

PONGUTAMIL INAYAM

கருத்துகள் இல்லை: