திங்கள், 25 ஏப்ரல், 2011

கோத்தாபய– பசில் குழு புதுடெல்லி வருவதற்கு இந்தியா அனுமதி மறுப்பு – ஜுன் வரை சந்திக்க நேரமில்லையாம்

தற்போதைய அரசியல் சூழல் குறித்துக் கலந்துரையாடுவதற்காக சிறிலங்காவின் உயர்மட்டக் குழுவொன்று புதுடெல்லி வருவதற்கு விடுக்கப்பட்ட அழைப்பை இந்தியா நிராகரித்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றின் அரசியல் விவகாரப் பத்தியில் கூறப்பட்டுள்ளது.

போர்க் காலத்தில் இந்திய-சிறிலங்கா விவகாரங்களைக் கையாள்வதற்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நியமித்த அமைச்சர் பசில் ராஜபக்ச, பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மற்றும் அதிபரின் செயலர் லலித் வீரதுங்க ஆகியோரை உள்ளடக்கிய உயர்மட்டக் குழுவுக்கே உடனடியாகப் புதுடெல்லி வருவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஜுன் மாதத்துக்கு முன்னர் சிறிலங்கா குழுவைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்க முடியாது என்று புதுடெல்லி கூறி விட்டதாக இராஜதந்திரிகள் தெரிவித்தனர்.

நிபுணர் குழுவின் போர்க்குற்ற அறிக்கை ஐ.நா பாதுகாப்புச் சபையில் அல்லது மனிதஉரிமைகள் பேரவையில் விவாதத்துக்குக் கொண்டு வரப்படலாம் என்ற நிலைமை இருப்பதால், இந்த விடயத்தில் இந்தியாவின் ஆலோசனையையும் உதவியையும் பெறுவதற்காகவே அரசதரப்புக் குழுவை இந்தியாவுக்கு அனுப்ப சிறிலங்கா அதிபர் முடிவு செய்திருந்தார்.' என்றும் அந்த வார இதழ் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, தமிழர் பிரச்சினைக்கு விரைவில் அரசியல்தீர்வு காணப்படும் என்று போருக்கு முன்னர் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்ற கொழும்பு தவறியிருப்பதால் புதுடெல்லித் தலைமை விசனம் அடைந்துள்ளதாக ‘உதயன்‘ நாளேடு இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

“கடந்த சில ஆண்டுகளில் சிறிலங்கா நடந்து கொண்ட விதம் மற்றும் ஏற்கனவே புதுடெல்லிக்கு வழக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றக் கொழும்பு தவறி இருப்பது, ஆகிய காரணங்களால், ஐ.நா. விவகாரத்தில் சிறிலங்காவுக்கு உடனடியாக எந்த உதவிகளையும் வழங்குவதில்லை என்ற முடிவை புதுடில்லி எடுத்திருப்பதாக இராஜதந்திரி ஒருவர் தெரிவித்தார்.

ஐ.நா. விடயத்தை கொழும்பு மீது அழுத்தம் கொடுப்பதற்கான சந்தர்ப்பமாகப் பயன்படுத்த இந்திய ஆட்சியாளர்கள் விரும்புகின்றனர்.

இந்த விடயம் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் புதுடெல்லி செய்திகள் கூறுகின்றன.

ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை சிறிலங்கா அரசிடம் கையளிக்கப்பட்ட ஒரு சில நாட்களில் அது தொடர்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குடன், தொடர்பு கொண்டு சிறிலங்கா அதிபர் பேசினார்.

அப்போது இந்தியாவின் தற்போதைய நிலைப்பாடு குறித்து அவருக்குத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

போர் முடிந்த பின்னர் உடனடியாக அரசியல்தீர்வு காணப்படும் என்று தமக்கு வழங்கப்பட்ட உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை, போரின் பின்னர் தமிழர் பகுதிகளை மீளக் கட்டியெழுப்பும் நோக்கோடு இந்தியாவால் ஆரம்பிக்கப் பட்ட திட்டங்களுக்கு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பது, குறிப்பாக, 50,000 வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டம் மற்றும் சம்பூர் அனல் மின்நிலையத் திட்டம், கொழும்பு - தூத்துக்குடி படகுச் சேவை என்பவற்றைத் தாமதப்படுத்துவது என்று இந்தியாவுக்கு எதிரான போக்கை கொழும்பு மேற்கொண்டிருக்கும் போது, எப்படி புதுடெல்லியால் தொடர்ந்தும் அனைத்துலக அரங்கில் சிறிலங்காவைப் பாதுகாக்க முடியும் என்று இந்தியப் பிரதமர் அந்தச் சந்தர்ப்பத்தில் கேள்வி எழுப்பினார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்தியப் பிரதமருடனான பேச்சில் சாதகமான சமிக்ஞை கிடைக்காததை அடுத்து, புதுடெல்லிக்கு உயர்மட்டக் குழுவை அனுப்பி நிலைமையைச் சமாளிப்பதற்கு சிறிலங்கா அதிபர் முயற்சி எடுத்துள்ளார்.

ஆனால் அதற்கும் இந்தியா சாதகமான சமிக்ஞை காட்டவில்லை. மே மாத இறுதிவரைக்கும் சிறிலங்கா குழுவைச் சந்திக்க நேரமில்லை என்று தெரிவித்து விட்டது இந்தியா.

வன்னியில் போர் தீவிரமாக நடைபெற்ற காலத்தில் மனிதஉரிமை விவகாரங்களைக் காட்டி கொழும்பு மீது அழுத்தங்கள் கொடுக்கப்படுவதை இந்தியா தடுத்து வந்தது.

இரண்டு முக்கிய காரணங்களுக்காக இந்தியா இந்த இராஜதந்திர உதவிகளை கொழும்புக்கு வழங்கியது.

முதலாவது, விடுதலைப்புலிகள் இயக்கத்தை போராட்டக் களத்தில் இருந்து அகற்றுவது, இரண்டாவது புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் உடனடியாக தமிழர் பிரச்சினைக்கு அரசியல்தீர்வு ஒன்றைக் காணப்படும் என்ற கொழும்பின் உறுதிமொழி.

ஆனால் போர் முடிவடைந்து இரண்டு வருடங்களாகி விட்ட போதும் அரசியல் தீர்வு ஒன்று காண்பதற்கான முயற்சிகளை கொழும்பு அரசு எடுக்கவில்லை.

அது தொடர்பாக புதுடெல்லி அழுத்தங்களைக் கொடுக்கும் போதெல்லாம் வெவ்வேறான காரணங்களைக் சொல்லி இலங்கை தட்டிக்கழித்து வந்தது.

அதேசமயம் போரைக் காரணம் காட்டி சீனாவுடன் உறவுகளை வளர்த்துக் கொண்ட சிறிலங்கா போர் முடிவடைந்த பின்னரும் சீனாவுடனான உறவுகளை மேலும் பலப்படுத்தி வருகிறது.

இது எதிர்காலத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்ற அச்சம் புதுடில்லி மூலோபாய வகுப்பாளர்களிடம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா இந்த அச்சத்தை கொழும்பிடம் வெளிப்படுத்தும் போதெல்லாம், இந்தியாவை மீறி எதுவும் செய்யமாட்டோம் என்று கூறிச் சமாளிக்கும் போக்கையே கொழும்பு கொண்டிருக்கிறது.

இந்தப் போக்கு ஆபத்தானது என்று கருதும் புதுடில்லி மூலோபாய வகுப்பாளர்கள் அதனை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று இப்போது கருதுகிறார்கள்.“ என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: