செவ்வாய், 26 ஏப்ரல், 2011

சோனியா காந்தி, பான் கீ மூன், பராக் ஒபாமா போன்றோரால் தமிழ் மக்களுக்குத் தீர்வு கிடைக்கும் என நாம் ஒருபோதும் நம்பவில்லை: விக்கிரமபாகு கருணாரட்ன.

]

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் தற்போதைய இலங்கை தொடர்பான அறிக்கை உள்நாட்டு அரசியலில் வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. மனித உரிமைகள் மீறல்கள் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளதால் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படலாம் என்ற நம்பிக்கையும் நிலவுகின்றது.

மேலும், மனித உரிமை மீறல்களுடன் சம்பந்தப்பட்ட பாதுகாப்புப் பிரிவினர், அரசியல்வாதிகள், பாதாள உலகினர் கலக்கத்தில் உள்ளனர். யுத்தம் நடை பெற்ற காலப்பகுதியிலும் யுத்தம் முடிவடைந்த இந்த இரண்டு ஆண்டு காலப்பகுதியிலும் நாம் எதைக் கூறிவந்தோமோ அதையே இன்று பான் கீ மூனின் அறிக்கையில் காண முடிகின்றது.

காணாமல் போதல், அரசியல் கைதிகள், கொலை செய்யப்பட்டவர்கள், பயமுறுத்தல்களுக்கு ஆளானவர்கள், சொத்துகள் அழிக்கப்பட்டமை இவை பற்றியே நாம் குரல் கொடுத்து வந்தோம். இரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையில் நாம் கூறியவற்றை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் ஏற்றுக்கொண்டமை போலவே அவரது அறிக்கை அமைந்துள்ளது. தற்போது இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பவர்களாக சோனியா காந்தி, பான் கீ மூன், பராக் ஒபாமா போன்றோர் முன்னிலையில் உள்ளனர்.

இவர்கள் மூலம் தமிழ் மக்களுக்குத் தீர்வு கிடைக்கும் என நாம் ஒருபோதும் நம்பவில்லை. தமிழ்ப் போராளிகளை பூண்டோடு அழிக்க வேண்டும் என்பதில் இவர்கள் அதிக அக்கறையுடன் செயற்பட்டவர்கள். புலனாய்வுத் தகவல்கள், ஆயுதங்கள், ஆட்கள் என சகல உதவிகளையும் வழங்கி தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் முற்றுழுதாக இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பதில் இறுதிவரை செயற்பட்ட இவர்கள், இன்று தமிழ் மக்களின் மனித உரிமைக்காக முதலைக் கண்ணீர் வடிப்பதைப் பார்த்து நாம் ஒருபோதும் ஏமாறமாட்டோம்.

இலங்கை அரசாங்கம் யுத்தத்தை சிறந்த முறையில் நடத்த வழிகாட்டிய எஜமான்கள் என்றே இவர்களைக் குறிப்பிட முடியும். விடுதலைப் புலிகளின் தலைவர்கள் அனைவரும் எவ்வாறு கொல்லப்பட முடியும். சண்டை யிலும் பல்வேறுபட்ட சதிகள் மூலமும் இறுதியில் சரணடைய வரும்போதும் கொல்லப்பட்டனர்.

முக்கிமான தலைவர்கள் தேடித் தேடி அழிக்கப்பட்டனர். ஒருவர் கூட மிஞ்சவில்லை. இவைகள் நடைபெறும் போது சோனியா காந்தி, பான் கீ மூன், பராக் ஒபாமா என்ன செய்து கொண்டிருந்தனர். தத்தமது நிகழ்ச்சி நிரலுக்கு இசைவாக தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கியதைத் தவிர வேறொன்றையும் இவர்கள் செய்யவில்லை.

இந்த யுத்தத்தில் கே.பி போன்றவர்கள் சொத்துகளை வைத்திருந்ததால் உயிர் வாழ்கின்றனர். சோனியா அம்மையாருக்கு தென்னிந்திய அரசியல் களம் சோதனையாக மாறியுள்ளது. எனவே தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை கையில் எடுத்தார். இதன் பின்னரே பான் கீ மூன் செயற்பட்டார். பராக் ஒபாமாவும் செயற்பட்டார். தற்போது கூட பான் கீ மூன் முழுமையான அறிக் கையை வெளியிடவில்லை. அவரது அறிக்கையானது கசிந்து வெளிவந்த சிறிய பகுதியாகவே காணப்படுகின்றது.

முழுமையான அறிக்கையை அவர் எதிர்காலத்தில் வெளியிடுவாரா? என்பது கேள்விக்குரியது.இந்த நாட்டில் அமுலில் இருக்கும் அவசரகாலச்சட்டம், பயங்கரவாத தடைச்சட்டம் இல்லாதொழிக்கப்பட வேண்டும். இனங்களுக்கு இடையே நல்லிணக்கம் ஏற்ப்படுத்தப்பட வேண்டும்.

வடக்கு கிழக்கில் இராணுவ நிர்வாகம் இல்லாது செய்யப்படவேண்டும். உயிரை, உடமையை இழந்த மக்களுக்கு போதிய நஷ்டஈடு வழங்கப்படவேண்டும். 13 பிளஸ் உடனடியாக அமுலுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். இதுவே இன்றுள்ள தேவையாகவுள்ளது.பான் கீ மூனின் அறிக்கைக்கு எதிராக ஆர்ப்பப்பரிவர்களைப் பற்றி நாம் கவலை கொள்ளவில்லை.

ஆனால் இந்த நாட்டில் உடனடியாக எது செய்யப்படவேண்டுமோ அதையே நாம் மேலே கூறியுள்ளோம். இவை நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் அந்நிய நாடுகள் இதனுடாக இந்த நாட்டுக் குள் பிரவேசிக்கும். இதை எவராலும் தடுக்கடியாது போய்விடும்.

வரலாற்றில் தவறுகள் திருத்தப்படவேண்டும். பான் கீ மூனின் அறிக்கையின் பின்னர் எமக்கு வரலாற்றைத் திருத்துவதற்கு உரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தை தவற விடக்கூடாது. அங்ஙனம் தவற விடுவோமானால் எதிர்காலச் சந்ததியினர் முற்றாகவே அழிந்துவிடுவர். குற்றமனதுடன் புரியப்பட்ட தவறுகளை நல்ல மனத்துடன் திருத்தி பரிகாரம் காணமுடியும்.

இதை கார்ல் மார்க்ஸ் வலியுறுத்தியுள்ளார். புத்த பெருமானும் தமது போதனையில் குறிப்பிட்டுள்ளார். இங்ஙனம் செயற்படுவதன் மூலமே தமிழ் மக்களுக்கு வரலாற்று ரீதியாக இழைக்கப்பட்ட அநீதிகளை இனம் கண்டு பரிகாரத்தைக் காண முடியும். இதைச் சாதிப்பதற்காக சகலரும் ஒன்றிணைய வேண்டும். பான் கீ மூனின் அறிக்கையைப் பார்த்து கோபப்பட்டு கோஷமிடுவதை விடுத்து எமது நாட்டையும் இந்தத் தேசத்தில் வாழும் சகல இனங்களையும் காப்பாற்ற வழி தேட வேண்டும்.

தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்காமல் எடுக்கப்படும் எந்த முயற்சியும் விழலுக்கு இறைத்த நீராகவே அமையும். முதலில் தமிழ்த் தலைமைகளுடன் குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடலாம். இதன் மூலம் தமிழ் மக்கள் அனுபவிக்கும் துன்பங்களை அடையாளம் கண்டு தீர்வை வழங்க வேண்டும். நீண்ட காலமாக ஏமாற்றப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களை அரவணைக்க ஆட்சித்தரப்பினர் முதலில் முன்வரவேண் டும். இன்று வரை அது நடைபெறவில்லை யுத்த வெற்றி என்ற மமதை இன்று செல்லாக் காசாகியுள்ளது. எனவே நிலைமைகளைப் புரிந்து மாற்றத்தை ஏற்படுத்த முயலுங்கள் என கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன கோரியுள்ளார்.

கருத்துகள் இல்லை: