புதன், 20 ஏப்ரல், 2011

ஸ்ரீசத்ய சாய்பாபா ஜீவசமாதி? பிரசாந்தி நிலையம் மறுப்பு!!

புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபா உயிருடன் சமாதி ஆகப் போவதாக தகவல் பரவியதால் பக்தர்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகினர். ஆனால் இந்த தகவல் உண்மையில்லை, பக்தர்கள் அமைதி காக்க வேண்டும் என பிரசாந்தி நிலையம் மறுப்பு தெரிவித்துள்ளது.

உலகெங்கிலும் கோடிக்கணக்கான பக்தர்களைக் கொண்டவர் ஸ்ரீசத்ய சாய்பாபா. ஆன்மீக குருவாகத் திகழும் இவர், பல்வேறு அரிய செயல்களை நிகழ்த்திக் காட்டியவர். இவரை கடவுளின் அவதாரமாகவே பக்தர்கள் போற்றி வணங்குகின்றனர்.

புட்டபர்த்தி என்ற வறண்ட குக்கிராமத்தை, இன்று உலகம் முழுக்க தெரியும் நகரமாக மாற்றிய பெருமை சாய்பாபாவுக்கே உண்டு. அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், அவற்றை ஒன்றுமில்லாமல் செய்தது, அவர் ஆற்றிவரும் சமூகப் பணிகள்.

சுகாதாரம், குடிநீர், ஏழைகளுக்கு உதவி என பல்வேறு துறைகளில் யாரும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அளவு உதவிகளைச் செய்தவர் சாய்பாபா. சென்னைக்கு குடிநீர் வழங்கும் தெலுங்கு கங்கைத் திட்டத்துக்கு அவர் தந்த உதவி மிகப் பெரியது. அந்தக் கால்வாய் முழுவதையும் சீரமைக்க ஆகும் செலவை பாபா ஏற்றார்.

சென்னையை நாறடிக்கும் கூவத்தைச் சுத்தப்படுத்த ஆகும் செலவை ஏற்கவும் அவர் முன்வந்தார்.

இந்த நிலையில், சாய்பாபாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதயக் கோளாறு, சுவாசக் கோளாறு காரணமாக புட்ட பர்த்தியில் உள்ள சத்யசாய் மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

அவருக்கு சீறுநீரக கோளாறும் ஏற்பட்டதால் டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது. டாக்டர்கள் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணித்து வருகிறார்கள். 24 மணி நேரமும் டாக்டர்கள் அவரை அருகில் இருந்து கவனித்து வருகிறார்கள்.

சாய்பாபா உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது. அவர் கோமா நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அனைத்து உறுப்புகளும் எந்திரம் மூலம் இயங்க வைக்கப்படுகின்றன. செயற்கை சுவாசம்தாந் அளிக்கப்படுகிறது. டாக்டர்கள் வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் சாய்பாபா உடல்நிலை சீராக இருப்பதாகவும் என்றாலும் கவலைக்கிடமான நிலையிலேயே அவர் உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையே சாய்பாபா ஜீவசமாதி (உயிருடன் மண்ணில் புதைத்தல்) அடையப் போவதாக தகவல் பரவியது. சாய் சேவா தள உறுப்பினர் ஒருவர் உள்ளூர் தொலைக் காட்சிக்கு இவ்வாறு பேட்டி அளித்தார். சாய்பாபா ஜீவசமாதி அடைய இருப்பதாகவும், இதுபற்றி சாய் டிரஸ்ட் முறையான அறிவிப்பை வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

பக்தர்கள் கண்ணீர்...

இது புட்டபர்த்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சாய்பாபா சீடர்களும், ஏராளமான பக்தர்களும் ஆஸ்பத்திரி முன் திரண்டனர். தெருக்களில் சாய்பாபா படத்துடன் கண்ணீருடன் ஊர்வலம் வந்தனர். ஆனால் இது வெறும் வதந்தி என்றும் அதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் சாய் டிரஸ்ட்டின் தலைமை அலுவலகமான பிரசாந்தி நிலையம் அறிவித்தது. ஆந்திர அரசு அதிகாரிகளும் இந்த தகவலை மறுத்தனர். சாய்பாபாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

கருத்து வேறுபாடு

இதற்கிடையே சாய் டிரஸ்ட் உறுப்பினர்களில் ஒருவரும் சாய்பாபாவின் சகோதரர் மகனுமான ரத்னாகருக்கும் மற்ற உறுப்பினர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி தொலைக்காட்சிகளில் பேட்டி அளித்து வருகின்றனர்.

சாய்பாபா ஜீவ சமாதி அடையப் போவதாக வெளியான செய்திகூட, ரத்னாகர் கட்டுப்பாட்டில் இயங்கும் தொலைக்காட்சியில்தான் ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.

1 கருத்து:

delphine சொன்னது…

A lot of controversies ..... Many things will come to the limelight once he dies..Once he is removed off the ventilator, he is dead...So no question of burying him alive.