ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

பீரிஸ் நடத்திய சந்திப்பை புறக்கணித்த சீனத் தூதுவர் – குழப்பத்தில் சிறிலங்கா

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் வெளிநாட்டு தூதுவர்கள் இராஜதந்திரிகளுடன் கடந்த 21ம் நாள் நடத்திய சந்திப்பில் சீனத் தூதுவர் கலந்து கொள்ளாத விவகாரம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு கடும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை தொடர்பாக சிறிலங்காவின் நிலைப்பாட்டை விளக்கும் நோக்கில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்திருந்தார்.

கொழும்பிலுள்ள அனைத்து வெளிநாட்டு இராஜதந்திரிகளும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர். ஆனால் சீனத் தூதுவர் யங் சூ பிங் மட்டும் பங்கேற்கவில்லை.

அவர் இந்தச் சந்திப்பில் பங்கேற்காததற்காக காரணத்தை இதுவரை வெளியிடவில்லை.

சீனத்தூதுவருக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அழைப்பு விடுக்கவில்லை ஒரு தகவல் கூறுகிறது.

ஆனால், சிறிலங்கா வெளிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் சீனத் தூதுவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற தகவலை நிராகரித்துள்ளார்.

சீனத்தூதுவருக்கு அழைப்பு அனுப்பப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ள அந்த அதிகாரி, அழைப்பிதழ் கிடைத்ததை சீனத்தூதுவர் தொலைபேசி மூலம் உறுதிப்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.

இந்தநிலையில் அமைச்சர் பீரிஸ் நடத்திய சந்திப்பில் சீனத்தூதுவர் பங்கேற்காததற்கான காரணம் என்னவென்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்தவிவகாரம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிபுணர் குழுவின் அறிக்கையைத் தோற்கடிக்க சீனாவையும் ரஸ்யாவையுமே சிறிலங்கா நம்பியுள்ள நிலையில், சீனத்தூதுவருக்கு அழைப்பு விடுக்கப்படாமல் போனதா என்றும், இதன் பின்னணியில் ஏதேனும் சதித்திட்டங்கள் உள்ளனவா என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு ஆராய்ந்து வருகிறது.

கருத்துகள் இல்லை: