ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

மேற்கு நாடுகளில் உள்ள தூதுவர்களை கொழும்புக்கு அவசரமாக அழைத்தது சிறிலங்கா

ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையைத் தோற்கடிப்பதற்கான வியூகங்களை வகுப்பதற்காக மேற்கு நாடுகளில் பணியாற்றும் தூதுவர்கள் பலரையும் சிறிலங்கா அரசாங்கம் அவசரமாக கொழும்புக்கு அழைத்துள்ளது.

நியுயோர்க், வொசிங்டன், பாரிஸ், ஜெனிவா போன்ற நகரங்களில் உள்ள சிறிலங்கா தூதுவர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஐ.நாவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்ன, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பெல்ஜியத்துக்கான தூதுவர் ரவீநாத் ஆரியசிங்க, ஜெனிவாவில் உள்ள ஐ.நாவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சேனுகா செனிவிரத்ன ஆகியோரையும் சிறிலங்கா அரசாங்கம் கொழும்புக்கு அழைத்துள்ளது.

இவர்களுக்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகளும் நிபுணர்குழு அறிக்கை விவகாரத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து விரைவில் விளக்கமளிக்கவுள்ளனர்.

அதேவேளை, வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் மற்றும், நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோருடன் நடத்திய கலந்துரையாடல்களை அடுத்து, நியுயோர்க்கில் நல்லிணக்க முயற்சிகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கான பொறுப்பை பேராசிரியர் வோல்டர் மாரசிங்கவிடம் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஒப்படைத்துள்ளார்.

பேராசிரியர் வோல்டர் மாரசிங்க ஒரு சட்டக்கல்வியாளர் என்பதுடன் சட்ட ஆணைக்குழுவின் தலைவராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, நிபுணர் குழு அறிக்கை விவகாரத்தை கையாள்வது தொடர்பாக சிறிலங்கா வெளிவிகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், நந்தா கொடகே, சிறி பாலிகக்கார, நிகால் றொட்றிக்கோ, பேனாட் குணதிலக போன்ற இராஜதந்திரிகளுடனும் இந்தியாவுக்கான தூதுவர் பிரசாத் காரியவசத்துடனும் கலந்துரையாடியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: