செவ்வாய், 26 ஏப்ரல், 2011

அலைமோதும் கூட்டம்-சாய்பாபாவுக்கு இன்று நள்ளிரவு வரை அஞ்சலி செலுத்தலாம்

மறைந்த சத்ய சாய்பாபாவுக்கு அஞ்சலி செலுத்த பக்தர்களும், பொதுமக்களும் பெருமளவில் திரண்டு வருவதால் இன்று நள்ளிரவு வரை பாபாவுக்கு அஞ்சலி செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சத்ய சாய்பாபாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கானோர் புட்டபர்த்தியில் குவிந்து வருகின்றனர். இன்று பிற்பகல் வரை கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். மேலும் 2 லட்சம் பேர் வரை அஞ்சலி செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் புட்டபர்த்தியில் பக்தர்கள் கூட்டம் மிக அதிக அளவில் உள்ளது. ஆயிரக்கணக்கானோர் நீண்ட கியூ வரிசையில் காத்து நிற்கின்றனர். இதனால் அஞ்சலி செலுத்தும் நேரம் இன்று நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பிரசாந்தி நிலையத்தில் உள்ள சாய் குல்வந்த் ஹாலில் பாபாவின் உடல் வைக்கப்பட்டுள்ளது. நாளை அடக்கம் செய்யப்படவுள்ளது.

சாய்பாபாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக 1.5 கிலோமீட்டர் தூரம் பக்தர்கள் வரிசையில் நின்றுகொண்டிருக்கின்றனர். அவர்களின் வருகை அதிகரித்து வருகிறது.

சாய்பாபாவுக்கு பல தரப்பிலும் பக்தர்கள் உள்ளனர். அத்தனை பேரும் கண்களில் நீர் வழிய பாபாவை கடைசியாக கண்டு தரிசித்து சென்ற வண்ணம் உள்ளனர்.

மாலையில் வருகிறார் பிரதமர்

பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இன்று மாலை 6 மணியளவில் சாய்பாபாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த புட்டபர்த்தி வருகின்றனர். இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: