புதன், 20 ஏப்ரல், 2011

சிறிலங்கா மீதான ஐ.நாவின் போர்க் குற்றச்சாட்டுக்கள் - கருணாநிதியும் ஜெயலலிதாவும் மௌனம்

சிறிலங்கா போர்க் குற்றங்களிலும் ஈடுபட்டிருக்கிறது என்ற ஐ.நாவினது வல்லுநர்கள் குழுவின் குற்றச்சாட்டினைத் தொடர்ந்து இந்திய பொதுவுடக்கட்சி [CPI] போன்ற தமிழர்களுக்கு ஆதரவாகச் செயற்படும் மத்திய அரசியல் கட்சிகள்கூட இந்திய அரசாங்கத்தினைச் சாடிக் கருத்துத் தெரிவித்திருக்கும் நிலையில் தமிழ்நாட்டின் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பன இதுவிடயம் தொடர்பாக மௌனம் காக்கின்றன.

போரின் இறுதிநாட்களில் 2009ம் ஆண்டு தமிழ்நாட்டில் தேர்தல்கள் இடம்பெற்ற அதே காலப்பகுதியில் சிறிலங்காவில் தமிழர்கள் கொல்லப்படுவது தொடர்பாக இந்தக் கட்சிகள் கத்திக் குளறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

2009ம் ஆண்டு இடம்பெற்ற போரின்போது சிறிலங்கா போர்க் குற்றங்களையும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களையும் புரிந்திருப்பதற்கான நம்பத்தகு ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றிருப்பதாகக் கூறும் ஐ.நாவினது வல்லுநர் குழு இந்தச் சம்பவங்கள் தொடர்பான சுதந்திர விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என அழைப்பு விடுத்திருக்கிறது.

ஐ.நா செயலாளர் நாயகம் பன் கீ மூனினால் நியமிக்கப்பட்ட இந்த வல்லுநர் குழு கடந்த வாரம் தனது இறுதி அறிக்கையினைக் கையளித்திருந்தது.

2009ம் ஆண்டு தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரைகள் சூடு பிடித்திருந்த வேளையில் ஈழத் தமிழ் மக்கள் மீதான எறிகணைத் தாக்குதல்களை நிறுத்துமாறு கோரி 'உண்ணாவிரதம்' இருந்த தமிழ்நாட்டு முதல்வர் கருணாநிதியோ அன்றி தமிழர்களை விடுவிப்பதற்காக சிறிலங்காவிற்கு இந்திய இராணுவத்தினை அனுப்புவேன் எனச் சூழுரைத்த ஜெயலலிதாவோ வல்லுநர்கள் குழுவின் இந்த அறிக்கை தொடர்பாக எந்தக் கருத்தினையும் வெளியிடவில்லை.

எவ்வாறிருப்பினும், சி.பி.ஐயினது தேசிய செயலாளர் ராஜா [CPI national secretary D. Raja] இதுவிடயம் தொடர்பாக புதுடில்லியினைக் கடுமையாகச் சாடியிருக்கிறார். "சிறிலங்காவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தக் குற்றச்செயல்கள் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடுதான் என்ன என்பது தற்போது வெளிக்கொண்டுவரப்பட்டுவிட்டது. அதேநேரம் சிறிலங்காவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் உரிமை மீறல்களுக்கு அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற அனைத்துலக அழுத்தத்தினை இல்லாதுசெய்யும் வகையிலேயே புதுடில்லி செயற்படுகிறது" என டீ.ராஜா கூறுகிறார்.

"தமிழர்களது இலட்சியத்திற்குத் துரோகமிழைக்கும் புதுடில்லியின் நிலைப்பாடு வெளியே தெரிந்துவிட்டது. அனைத்துலக விவகாரங்களின் தலையிடும் தார்மீக அதிகாரத்தினைப் புதுடில்லி தற்போது இழந்து நிற்கிறது" என சிறிலங்காவினது விடயத்தில் மத்திய ஐக்கிய மக்கள் முன்னணி அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை எப்போதுமே குறைகாணும் ராஜா கூறுகிறார்.

"அப்பாவித் தமிழ்மக்கள் படுகொலைசெய்யப்படுவதற்கு ஏதுவாக புதுடில்லி சிறிலங்காவிற்குத் துணைபோயிருக்கிறது. சிறிலங்காவில் போர்க் குற்றங்களின் போது கொழும்பு அரசாங்கத்திற்கு பக்க பலமாக நின்றதோடு மாத்திரமின்றி, மேற்கு நாடுகளின் அப்பாவித் தமிழ் மக்களுக்கான உதவிகளைத் தடுத்த தரப்பாகவும் புதுடில்லி மாறியிருக்கிறது. மத்திய அரசாங்கமானது தமிழர்களிடம் மன்னிப்புக்கோருவதோடு தனது நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்வது அவசியமானது" என பெரியார் திராவிடக் கழகத்தினை தலைவர் கொளத்தூர் மணி கூறுகிறார்.

செய்தி வழிமூலம்: Deccan Chronicle

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

ஈழததமிழர் மீதான அழிப்பின் மூலகர்ததாவே இந்தியாவும் அதன் அரசும்தான். அப்படியிருக்க தமிழகத்தின் அரிசியல் வியாதிகள் எப்படி கருத்துக் கூறுவார்கள். தேர்தலில் கருநாய்நிதிக்கும் காங்கிரசின் கால்கள் நக்குவதற்குத் தேவை அதே போல அதிமுகாவிற்கும் அதே நிலை. இவர்கள் எப்படி கருத்துரைப்பார்கள். யார் இருந்தால் என்ன செத்தால் என்ன தமது குடும்ப கஜானாவை நிரப்ப பதவி வேண்டும். அதுவே அவர்களின் குறிக்கோள். அட தன்து மக்களையே சிங்கள படை சுட்டுக் கொல்லவிட்டு வேடிக்கை பார்ப்பவர்கள் ஆயிற்றே இந்த அசிங்கங்கள்.