புதன், 20 ஏப்ரல், 2011

இன்று வடக்கில் உண்மையில் நடப்பது என்ன?

சாந்த விஜயசூரிய (தமிழாக்கம்: மகிந்தன்)
லங்கா ஈ நியுஸ் இணையத்தளத்தின் வடக்குப் பயண அனுபவங்கள்
தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தின் போது 80,000 பேருக்கு என்ன நடந்தது என்று தெரியாது. தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகள் 27,000 பேர். ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் 1000 ஏக்கர் காணி அரசினால் சுவீகரிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் வடக்கிற்கு வசந்தத்தை கொண்டு வருவதாக கூறிக் கொண்டு எங்கள் வளங்களை கொள்ளையிடுவதுடன் வசந்தத்தின் பேரில் இன்று எமக்கு விட்டு வைத்திருப்பது குழிகள் தோண்டப்பட்ட ஏ 9 வீதியும், பல்தேசிய கம்பனிகளின் பாரியளவிலான விளம்பர பதாதைகள் மட்டுமே என யாழ்ப்பாணத்தின் மதகுருமார்களும், புத்திஜீவிகளும் தெரிவிக்கின்றனர்.
அரசாங்கமானது அபிவிருத்தி என்ற பெயரில் வடக்கின் மரம், மண், மணல், சுண்ணாம்பு கல் போன்றவற்றை இராணுவத்தின் துணையுடன் தெற்கிற்கு கொண்டு செல்வதாக குற்றஞ்சாட்டும் அவர்கள் அதற்கு எதிராக செயற்பட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் வெள்ளை வேன்களில் வந்து கடத்திச் செல்லப்பட்டதாகவும் கூறினர்.
தெற்காசிய சுதந்திர ஊடக அமைப்பு, இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், முஸ்லீம் ஊடகவியலாளர் ஒன்றியம், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், ஊடக சேவையாளர்களின் தொழிற்சங்க சம்மேளனம் போன்றவற்றின் இணைந்த ஊடகவியலாளர் குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட பயணத்தின்போதே மதகுருமார் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
30 வருடங்கள் வட கிழக்கில் இடம்பெற்ற தமிழரின் ஆயுதப் போராட்டம் 2009 மே 18ம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டது. 2009 மே 18 முதல் 2011 மே 18 வரை இரண்டு வருடங்கள் பூர்த்தியாகும் நிலையிலுள்ளது. அதற்காக இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. புலிகள் இயக்கத்தை இராணுவ ரீதியாக தோற்கடித்த பின்னர் அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்களின் தலைமையின் கீழ் வடக்கிற்கு வடக்கின் வசந்தம் கிழக்கிற்கு கிழக்கின் உதயம் என இரண்டு அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக வடக்கின் மதகுருமாரும், புத்தி ஜீவிகளும் சொன்ன கதைதான் இது.
வடக்கின் வசந்தத்தை நீங்கள் தெளிவாக பார்த்துக் கொள்ளக் கூடிய இடம் தான் ஏ 9 வீதி. ஏ 9 வீதியில் வாகனமொன்று பயணம் செல்வதென்பது சூறாவளி வீசுகின்ற கடலில் படகொன்று பயணம் செய்வது போன்று. குடல் தொண்டையை தொடுகிறது. 'யுத்தத்தின் பின்னர் ஓமந்தையிலிருந்து யாழ்ப்பாணம்வரை புகையிரதப் பாதையை மீள புனரமைப்பதற்கென தெற்கின் பாடசாலை மாணவர்களிடமிருந்து ஒரு ரூபா வீதம் அரசாங்கம் திரட்டிய நிதிக்கு இதுவரைக்கும் நடந்தது ஒன்றுமில்லை' எனக் கூறிய யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் இந்த தகவல்களை மக்களிடத்தில் ஆய்வு பூர்வமாக கொண்டு செல்வதற்கு வடக்கின் ஊடகங்களுக்கு எந்த வழியும் இல்லாததினால் தெற்கின் புலனாய்வு ஊடகங்கள் அந்த சவாலை பொறுப்பெடுக்க வேண்டும் என கூறினார்.
யுத்தத்தின் முடிவுடன் அரசாங்கம் வெளிநாட்டு முதலீட்டாளரைப் போன்றே தேசிய முதலீட்டாளருக்கும் வட கிழக்கு பிரதேசங்களில் வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு அழைப்பு விடுத்தது. தேசிய மற்றும் சர்வதே முதலீட்டாளர்களின் வியாபார நடவடிக்கைகளுக்கு தேவையான மின்சாரம், பாதைகள் மற்றும் நீர் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்து கொடுப்பதற்கு அரசாங்கம் பகல் இரவு பாராது வேலை செய்தது. அதன் பிரதிபயனாக பல்தேசிய கம்பனிகளினதும் வங்கிகளினதும் பாரிய விளம்பர பலகைகள் முழு வடக்கிலும் ஆக்கிரமித்துள்ளன. ஏ 9 வீதியில் யாழ்ப்பாணம் வரையில் பயணம் செய்யும் யாருக்கும் இந்த ஆக்கிரமிப்பை மிகவும் தெளிவாகப் பார்க்க கூடியதாக இருக்கும். சரியாக எல்லா வளங்களையும் கொண்ட ஒரு புதிய கிரகத்தை பிடித்து வைத்து கொண்டது போன்றதொரு நிலையே இது. ஏ 9 வீதியில் ஒவ்வொரு 500 மீற்றர் தூரத்திலும் இராணுவ கண்காணிப்பு கோபுரம் நிறுவப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தின் முன்னாள் மாநகர ஆணையாளர் ஒருவர் கூறிய கதை இது.
அரசாங்கம் வடக்கை அபிவிருத்தி செய்வதாக கூறிக்கொண்டு செய்வதெல்லாம் வடக்கின் வளங்களை கொள்ளையடித்து தெற்கிற்கு கொண்டு செல்வதே ஆகும். 2009 மே 18ம் திகதி முதல் நாங்கள் சுரண்டலுக்கு ஆட்பட்டுள்ளோம். தெற்கின் வங்கிகள் வந்து எங்கள் மக்கள் அனைவரினதும் பணத்தை சுரண்டி கொண்டு சென்று விட்டன. இன்று யாழ்ப்பாணம் என்பது தெற்கினதும், இந்தியாவினதும் சந்தை மட்டுமே. இந்தியாவும் சீனாவும் வந்து இன்று இங்கு விதவிதமான ஒப்பந்தங்களில் கையொப்பமிடுகின்றன. எங்கள் மக்களுக்கு ஒரு உப ஒப்பந்தம் கூட தருவதில்லை. எல்லா ஒப்பந்தங்களும் தெற்கில் உள்ளவர்களுக்கே கொடுக்கப்படுகின்றது. இங்குள்ளவர்களுக்கு ஒன்றும் கொடுக்கப்படுவதில்லை.
யுத்தத்திற்கு முன்னர் நாட்டிற்கே திராட்சை பழம் கொடுத்தது நாங்கள். இன்று வெளிநாடுகளிலிருந்து கொண்டு வருகிறார்கள். திராட்சை வளர்த்த எங்கள் இடம் பெருமளவில் அதி உயர் பாதுகாப்பு வலயம் என கூறி பிடித்து வைத்துள்ளனர். எங்களுக்கு அந்த இடங்களில் பயிர்ச்செய்கை செய்வதற்கு அனுமதியில்லை. இருப்பினும் திராட்சைப் பழத்தை இந்தியாவிலிருந்து கொண்டு வருகிறார்கள். ஜனாதிபதி ராஜபக்ச அவர்களின் வடக்கின் வசந்தம் என கூறுவது இதைதான்.
அரசாங்கம் வடக்கின் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் 1000 ஏக்கர் நிலத்தை சுவீகரிக்கிறது. எங்களுடைய காணியை கேட்டவுடன் புலிகள் அந்த இடத்தை பிடித்து வைத்திருந்ததால் அந்த இடங்களில் இராணுவ முகாம்களை அமைப்பதாக இராணுவம் கூறுகிறது. புலிகள் செய்தது தவறு என கூறி இராணுவம் பிடித்து கொண்டது. தற்போது கூறுகிறார்கள் புலிகள் பிடித்து வைத்திருந்ததால் அந்த இடங்களை தர முடியாது என்று. காணிகளின் சொந்தக்காரர்கள் நாங்கள் இருப்பினும் நாங்கள் இன்று வீதியில். எங்களிடம் ஆயிரக்கணக்கான ஏக்கரை அரசாங்கம் கொள்ளை அடித்துள்ளது. வெளிநாட்டு கம்பனிகளுக்கு கொடுக்கிறது.
அரசாங்கம் யுத்தத்தை முடிவுறுத்திய விதத்தை பற்றி விஷேடமாக வடக்கிலுள்ள மக்கள் சந்தோஷமில்லாத நிலையிலிருந்தாலும் யுத்தம் முடிவுற்ற பின்னர் வடக்கிலுள்ள மக்களிடமிருந்து பயம் ஓரளவுக்கு குறைய ஆரம்பித்தது. கடலுக்கு செல்வதற்காக மீனவர்களுக்கு இருந்த தடை நீக்கப்பட்டது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் வலய கல்வி பணிப்பாளர் ஒருவரும், இந்து மதகுரு ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டதும், கொலை செய்யப்பட்ட நபர்கள் சிலரின் இறந்த உடல் கிணற்றிலிருந்து கிடைத்ததை அடுத்தும் வடக்கிலுள்ள மக்கள் மீண்டும் பயத்தால் நடுங்கி போயுள்ளனர். இந்த சம்பவங்களுடன் யுத்தத்திற்கு முன்னர் இருந்த நிலைக்கு மீண்டும் வடக்கிலுள்ள மக்கள் இழுத்து போடப்பட்டுள்ளனர் என்ற பயம் அவர்களிடத்தில் உள்ளது.
யாழ்ப்பாணத்தில் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் எங்களுக்கு கூறியவை வருமாறு.
யுத்தத்திற்கு பிறகு இராணுவம் மீண்டும் யாழ்ப்பாணத்தில் வசிக்கின்ற மக்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கின்றது. புகைப்படங்களை எடுக்கின்றனர். கொலை சம்பவங்களின் பின்னர் இராணுவம் மீண்டும் வீதிகளுக்கு வந்து சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. மாலை 6 மணிக்கு பிறகு குறிப்பாக கிராமங்களில் உலாவ முடியாது. விசாரித்து கைது செய்கின்றனர். அண்மைய மாதங்களில் இடம்பெற்ற சம்பவங்களின் பிறகு இடம்பெற்ற சம்பவங்களை கூர்மையாக பார்க்கும்போது வடக்கிலுள்ள மக்கள் ஜனநாயகத்திற்கு வருவதை தடுப்பதற்காகவே இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறுகின்றதோ என நினைக்க தோன்றுகிறது. வடக்கில் வாக்கு கேட்கும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு தங்கள் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் போது பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டது.
நீங்கள் யாழ்ப்பாண நகரில் சுற்றுப் பயணம் செய்வீர்களென்றால் இராணுவம் வீதியில் இறங்கி சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வதை அவதானிக்கக் கூடியதாக இருக்கும். சமூகத்தில் உயர் நிலையிலுள்ளவர்கள் இதற்கு எதிராக கதைத்தாலும் சாதாரண மக்கள் ஒன்றும் கதைப்பதில்லை. எங்களுக்கு உள்ள கவலை எல்லாம் அரசாங்கம் ஏன் யாழ்ப்பாணத்து தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்வதில்லை என்பதாகும். யுத்தத்திற்கு பிறகு யாழ்ப்பாண மக்கள் மத்தியில் இருந்த சமாதானம் பற்றிய நம்பிக்கைகள் மீண்டும் மறைந்து செல்வதை அவதானிக்க முடிகிறது. அவர்கள் பயத்தினால் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
யுத்தம் முடிவுற்ற பிறகு யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பிற்காக 50,000 வரையான இராணுவம் மற்றும் பொலிஸார் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் 15 பிரதேச செயலாளர் பிரிவுகள் இருப்பதுடன் 182,000 குடும்பங்கள் உள்ளன. குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 675,000 வரை இருக்கும். இதன் அடிப்படையில் பார்க்கின்ற பொழுது யாழ்ப்பாண வாசிகள் 13 பேருக்கு ஒரு பாதுகாப்பு வீரர் என்ற நிலையிலுள்ளனர். இவ்வாறான இறுக்கமான பாதுகாப்பு ஏற்பாடுகளின் கீழ் நபர் ஒருவரை கொலை செய்வது பற்றியோ சுவரொட்டி ஒன்றை ஒட்டுவது பற்றி கூட நினைத்து பார்க்க முடியாது. யாழ்ப்பாண நகரை போன்றே சகல கிராமத்திலும் இராணுவம் மற்றும் பொலிஸ் புலனாய்வு பிரிவு உறுப்பினர்கள் சாதாரண மனிதர்களைப் போன்று நடமாடுகின்றனர். நாங்கள் தங்கியிருந்த யாழ்ப்பாணம் பிள்ளையார் விடுதிக்கும் புலனாய்வு பிரிவினர் வந்து எங்களை பற்றி தகவல் சேகரித்து சென்றிருந்தனர்.
மதகுரு ஒருவர் கருத்து தெரிவிக்கையில்........
கடந்த காலத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு கொலைக்கும், கடத்தலுக்கும் பின்னால் ஒரு அரசியல் இருந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் ஆயுதம் சகிதம் இருப்பவர்கள் இராணுவமும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் குழுவினர் மட்டுமே. அவர்களுக்கு தெரியாமல் ஒன்றும் யாழ்ப்பாணத்தில் நடப்பதற்கில்லை. அந்தளவிற்கு அவர்கள் மக்களிடத்தில் ஊடுரூவியுள்ளனர். தேவானந்தாவின் குழுவினருக்கும் இராணுவத்தினருக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அவர்கள் மிலேச்சத்தனமாகவே வேலை செய்கின்றனர். சுட்டு கொல்லப்பட்ட மற்றும் கடத்தப்பட்ட அனைவரும் அரசாங்கத்திற்கும், இராணுவத்திற்கும் தேவானந்தா குழுவினருக்கும் எதிராக இருந்தவர்களாவார்.
அரசாங்க படைகளுக்கும் புலிகளுக்குமிடையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது அரசாங்க படைகள் மேற்கொண்ட தாக்குதல்களினால் சாதாரண தமிழ் மக்கள் பெருமளவில் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகின்றது. யுத்தத்தின் பிறகு மேலும் பெருமளவிலான மக்கள் அகதி முகாம்களில் அடைக்கப்பட்டு பிறகு மீண்டும் அவர்களின் கிராமங்களில் குடியமர்தப்பட்டுள்ளனர். வடக்கிலுள்ள மக்களில் மேலும் பெருமளவிலானோர் அகதி முகாம்கள் 65இல் தொடர்ந்தும் வசிக்கின்றனர். புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் என சந்தேகத்தின் பேரில் இளைஞர்கள் 1500 மேற்பட்டோர் பாதுகாப்பு பிரிவினரால் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களை பார்ப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கோ, வெளியாருக்கோ அனுமதி இல்லை.
அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் கருத்து தெரிவிக்கையில்
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் தமிழர்கள் 320,000 பேர் இருந்ததாக அறிய கிடைக்கின்றது. புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் இதற்குள் அடங்கவில்லை. மூன்று இலட்சத்து இருபதாயிரத்தில் 270,000 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 1 இலட்சம் பேர் மெனிக் முகாமிற்கும் 80ஆயிரம் பேர் முல்லைத்தீவிற்கும் 3ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கும் மீள் குடியேற்றப்பட்டுள்ளனர். 30000 பேர் வரையில் நாட்டை விட்டு வெளியேறியோ, நாட்டின் வேறு இடங்களிலோ வாழ்கின்றனர். தமிழ் மக்களில் 80ஆயிரம் பேருக்கு நடந்தது என்ன என்பதே தெரியாது.
மெனிக் பார்மில் பெற்றோரை இழந்த 27 ஆயிரம் பிள்ளைகள் உள்ளனர். யுத்தத்தின் இறுதிக் காலப்பகுதியில் மன அழுத்தத்திற்கு உள்ளானோர் 42 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில் 36 ஆயிரம் பேர் இளைஞர், யுவதிகள். யுத்தத்தின் இறுதி காலப்பகுதியில் விதவைகள் 36 ஆயிரம் பேர் இருந்தனர். இவர்களில் 10 ஆயிரம் பேர் வரையானோரின் துணைவர்களை இராணுவம் தடுப்பு முகாமில் வைத்திருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
யாழ்ப்பாண அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் எம்மிடம் மேலும் கூறுகையில்....
அரசாங்க படைகள் புலிகளிடமிருந்து கிழக்கை கைப்பற்றிய பொழுது அப்பிரதேசத்தில் அரச சார்பற்ற நிறுவனங்களால் தடையின்றி அகதிகளுக்கு சேவை செய்ய முடிந்தது. இருப்பினும் வடக்கில் பெரும் தடைகளுக்கு மத்தியிலேயே வேலை செய்ய வேண்டியுள்ளது. அரசாங்கம் அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்களையும் சந்தேகத்துடனேயே பார்க்கின்றது. கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் வேலை செய்வதாயின் பாதுகாப்பு தரப்பினருடனும், ஜனதிபதி செயலாளரிடமும் அனுமதி பெற வேண்டியுள்ளது. அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு தங்கள் நோக்கங்களை கைவிட்டு அரசாங்கத்தின் தேவைகளுக்கமைய வேலை செய்ய வேண்டியுள்ளது.
அகதிகளுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு முதலில் அரச சார்பற்ற நிறுவனங்கள் முன் வந்தன. பிறகு இலங்கை அரசாங்கமும், இந்திய அரசாங்கமும் தலையிட்டு வீடுகளை கட்டித் தருவதாக கூறியதினால் அரச சார்பற்ற நிறுவனங்கள் அதிலிருந்து பின் வாங்கின. இந்தியா வடக்கின் மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை கட்டித் தருவதாக கூறியபோதிலும் இன்னும் ஒரு வீட்டிற்கான அடிக்கல்கூட நடப்படவில்லை. அரசாங்கம் அகதிகளை தென்னங்கீற்றுகளாலும், பொலீத்தீன்களினாலும் மூடப்பட்ட குடிசைகளில் மீள குடியேற்றியுள்ளது. அந்த குடிசைகள் இராணுவ முகாம்களுக்கு அருகில் அமைந்திருப்பதனால் விஷேடமாக பெண்கள் கடும் நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளனர். இந்தியா வடக்கிலுள்ள மக்களுக்கு பெற்று கொடுத்த 450 உழவு இயந்திரங்களில் 65 மாத்திரமே அங்குள்ள மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
வடக்கில் அரச சார்பற்ற நிறுவனங்கள் அகதிகளுக்கு பொது சுகாதாரம், குடிநீர் மற்றும் வாழ்வாதார செயற்பாடுகள் மட்டுமே வழங்கப்படுவதற்கு அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்டுள்ளன.
மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர், யுவதிகளை உடனடியாக குணப்படுத்த வேண்டியுள்ளது. சென்ற வருடம் தொடக்கம் பல்கலைக்கழக மட்டத்திலிருந்து கிராமம் வரையில் தற்கொலை செய்து கொள்ளும் போக்கு அதிகரித்து காணப்படுகின்றது. தாய், தந்தையை இழந்த குழந்தைகள் தேவாலயங்களினால் பராமரிக்கப்பட்ட போதிலும் அது வெற்றி அளிக்கவில்லை. யுத்தம் முடிவடைந்த போதிலும் யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பளை மற்றும் மருதங்கேணி போன்ற பிரதேசங்களை அரசாங்கம் தொடர்ந்தும் அதி உயர் பாதுகாப்பு வலயமாகவே வைத்துள்ளது.
விஷேடமாக மருதங்கேணி அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் பல பாடசாலைகள் உள்ளன. அந்தப் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதால் அப்பிரதேசத்தில் பிள்ளைகளின் பாடசாலை கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வட கிழக்கில் வாழ்ந்த தமிழ் மக்களின் தேசிய பிரச்சினையை தீர்ப்பதற்கு 13வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அப்பால் சென்று அரசியல் தீர்வொன்றைப் பெற்று கொடுப்பதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் உறுதியளித்தது.
புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டதனால் இன்று யுத்தம் ஒன்று இல்லை. தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு பெற்று கொடுக்கப்படுகின்ற அரசியல் தீர்வு பற்றி ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்களிடம் வினாவியபோது 'பிரபாகரன் கேட்ட எதனையும் கொடுப்பதற்கு நான் தயாராக இல்லை' என்று குறிப்பிட்டிருந்தார். வடக்கின் தமிழ் தேசிய பிரச்சினைக்கு தீர்வாக 13வது திருத்தத்தை இலங்கைக்கு அறிமுகம் செய்த இந்தியாவும் இன்று ஊமையாக உள்ளது.
புலிகள் இயக்கத்தை இராணுவ ரீதியாக தோற்கடித்தமையுடன் குறிப்பாக வடக்கில் இந்தியாவிற்கு எதிரான கடுமையான கருத்து உருவாகி உள்ளது. அண்மையில் இங்கிலாந்திற்கும் இந்தியாவிற்குமிடையில் நடைபெற்ற உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கட் போட்டியை தொலைக்காட்சியில் பார்வையிட்ட யாழ்ப்பாணத்தின் இளைஞர்கள் முதல் பெரியோர் வரை இங்கிலாந்தின் வெற்றிக்காக முன்னின்று இந்தியாவிற்கு எதிராக சாபமிட்டதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது. தமிழ் இனத்தை இவ்வாறான நிலைக்கு இழுத்து போட்டதற்கு இந்தியா பொறுப்பு கூற வேண்டுமென இளைஞர்கள் கூறினார்கள்.
மதகுரு ஒருவர் எங்களிடம் பின்வருமாறு கூறினார்:
யுத்தத்திற்கு பிற்பட்ட காலத்தில் இலங்கையர்களாக வாழ்வதற்கு எங்கள் மக்கள் பெருமளவில் எதிர்ப்பார்ப்புகளுடன் இருந்தனர். யுத்தம் முடிவடைந்து ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் அரசியல் தீர்வு தெரியும் தூரத்திலும் இல்லை. வடக்கிலுள்ள மக்களுக்கு மின்சாரம், நீர், மற்றும் பாதைகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதென்றால் இன்னும் என்ன வேண்டியுள்ளது என தெற்கிலுள்ள மக்கள் வினாவுகின்றனர்.
தமிழ் மக்களின் அபிலாஷைகள் 1948 ஆம் ஆண்டு முதல் இந்த நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களினால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. தெற்கிலுள்ள மக்கள் தெரிந்து கொள்வதற்கு அவர்கள் இடம் வைக்கவில்லை. இதன் பிரதிபலிப்பாக எங்களை 30 வருட கால யுத்தத்திற்குள் தள்ளி விட்டனர். தமிழ் மக்கள் அந்த யுத்தத்தை விரும்பி ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல. செய்வதற்கு வேறு ஒன்றும் இல்லாத நிலையிலேயே யுத்தத்தை தேர்ந்தெடுத்தனர். தமிழ் மக்கள் போராட்டத்தை இரத்தத்தினாலும், ஆயுதத்தினாலும் ஒடுக்கி இன்று மீண்டும் ஒரே தேசம் ஒரே நாடு பற்றி அரசாங்கம் பேசுகின்றது. இந்த நாட்டில் சிங்களம், தமிழ் என இரண்டு இனங்கள் உள்ளன. இதுவே உண்மை.
இந்த நாட்டில் இருப்பது ஒரே இனம் என ராஜபக்ஷக்கள் கத்தினாலும் யதார்த்தம் அதுவல்ல. இதை புரிந்து கொள்ளாவிட்டால் மக்கள் மீண்டும் பிரிந்து செல்லும் இடத்திற்கு தள்ளப்படுவார்கள். இந்தியாவினூடாக எமது பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை தேடி கொள்வதை விட இலங்கை அரசாங்கத்துடன் ஏற்படுத்திக் கொள்ளும் நட்பு அதை விட பெறுமதியானது.
யுத்தத்தினால் அகதிகளாகியுள்ளோர் தமிழ் மக்கள் மட்டுமல்ல வடக்கில் வசித்த சிங்கள, முஸ்லிம் மக்களும் அகதிகளாகியுள்ளனர். தமிழ் மக்களுக்கு இராணுவத்தினால் அழுத்தங்கள் ஏற்படுத்தப்பட்ட போதிலும் சிங்கள, முஸ்லிம் மக்களுக்கும் புலிகளினால் அழுத்தங்கள் ஏற்பட்டன.
புலிகளின் அழுத்தத்திற்கு உள்ளான சிங்கள, முஸ்லிம் மக்களின் ஒரு பகுதியினர் புலிகளைத் தோற்கடிப்பதற்கு அரசாங்க இராணுவத்திற்கு உதவிய போதிலும் யுத்தத்திற்கு பிறகு அவர்களின் நிலைமை தமிழ் மக்களின் நிலைக்கு பின் நிற்கவில்லை.
கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண முஸ்லிம்களின் ஒன்றியத்தின் செயலாளர் எங்களிடம் பின்வருமாறு கூறினார்.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் வாழ்ந்த முஸ்லிம்கள் 1990ஆம் ஆண்டு புலிகளினால் துரத்தப்பட்டனர். புலிகள் இயக்கம் சாமான்களையும் எடுத்துக் கொண்டு எங்களுக்கு வெளியேறக் கொடுத்த காலம் இரண்டு மணித்தியாலங்களாகும். 1997 இல் ரிவிரெச இராணுவ நடவடிக்கையுடன் 1990 ஆம் ஆண்டு வெளியேறியவர்களில் ஒரு பகுதியினர் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வந்தனர். நாங்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்த பொழுது எங்கள் வீடுகளிலும் பிள்ளைகள் படித்த பாடசாலைகளிலும் இராணுவ பதுங்கு குழிகள் காணப்பட்டன. 1997 முதல் 2002 வரைக்கும் அந்த பிரதேசம் அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.
இன்று யுத்தம் முடிவடைந்து 1 1ஃ2 வருடங்களுக்கு மேலாகி உள்ளது. இருப்பினும் எந்தவொரு அரசியல் தலைவரும் முஸ்லிம்களை மீள குடியேற்றுவதில் கவனம் செலுத்தவில்லை. நாங்கள் அகதிகள் என அரசாங்கமும் ஏற்றுக் கொள்ளவில்லை.
புலிகளின் கட்டுப்பாட்டுக் காலத்தில் எங்கள் வீடுகள் சிறப்பாக இருந்தன. யாழ்ப்பாணம் இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு எங்கள் வீடுகளின் கூரைகள், கதவு நிலைகள், பாடசாலைகளின் கதவு நிலைகள், கூரைகள் என்பவற்றைக் கழற்றிச் சென்று இராணுவ முகாம்கள் அமைத்தனர். அராபிய நாட்டில் இருந்து நிதி உதவி கிடைத்தால் வீடுகளை மீள அமைத்து தரமுடியும் என சமூக சேவை அமைச்சர் மில்ரோய் பெர்ணண்டோ மற்றும் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் கூறினர்.
புலிகள் இயக்கத்தின் கிழக்கு பிராந்திய இராணுவ பொறுப்பாளராக இருந்த விநாயகமூர்த்தி முரளிதரன் தான் முஸ்லீம் பிரச்சினையை உருவாக்கியவர். இன்று அவர் வந்து எங்களிடம் கூறுகிறார். 'அரேபிய நாடொன்றிலிருந்து நிதி கிடைத்தால் வீடுகளை அமைத்து கொடுக்க முடியும் என்று' இதனை யாரிடம் கூறுவது.
யாழ்ப்பாண மக்களின் பிரதான வருவாய் மூலங்கள் விவசாயமும், மீன்பிடித் தொழிலுமாகும். யாழ்ப்பாண விவசாயிகளின் இடங்களில் இராணுவ முகாம்களும் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களும் அமைந்திருப்பதால் அவர்கள் தமது விவசாயக் காணிகளை இழந்துள்ளனர்.
யுத்த காலத்தில் வடக்கின் மீனவர்களுக்கு கடல் தடை செய்யப்பட்ட ஒரு பிரதேசமாக இருந்ததுடன் யுத்தத்திற்கு பிறகு அந்த மீனவர்கள் மேலுமொரு பிரச்சினைக்கு முகங் கொடுக்க வேண்டியுள்ளது.
குருநகர் மீனவர் தலைவர் ஒருவர் எங்களிடம் பின்வருமாறு கூறினார்.
இந்திய மீனவர்கள் எங்கள் கடல் பகுதிக்குள் வந்து றோலர் மூலம் மீன் பிடிக்கின்றனர். இதனால் எமது மீன் வளம் பாதிக்கப்படுகின்றது. எங்கள் வலைகளை இந்திய மீனவர்கள் வெட்டி விடுகின்றனர். எங்கள் மீனவர் ஒன்றும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நாங்கள் கடற்படையின் ஆலோசனைக்கு ஏற்பவே தொழிற்பட வேண்டியுள்ளது. இந்திய மீனவர்களை பிடித்து கொண்டு வராவிட்டால் கடலுக்கு செல்ல விட மாட்டோம் என கடற்படையினரால் எமக்கு கூறப்பட்டது. அதன் பிறகு நாங்கள் கடற்படையின் சிவில் படையினராக மாறுவேடம் தரித்தவர்களுடன் சென்று இந்திய மீனவர்களை பிடித்து வந்தோம். யுத்த காலத்தில் இருந்த தடைகள் தற்பொழுது எமக்கு இல்லை. கடலுக்கு செல்வதற்கு எமக்கு கடற்படையினரால் அனுமதி பத்திரம் வழங்கப்படுகின்றது. கடலுக்கு செல்வதற்கு முன்னர் கடலுக்கு செல்வோரின் எண்ணிக்கையை கடற்படையினரின் புத்தகத்தில் குறித்து விட்டு செல்ல வேண்டும்.
காங்கேசன் (விவசாயி, வயது 38)
நான் இந்த இடத்தை குத்தகைக்கு வாங்கி விவசாயம் செய்கின்றேன். வருடத்திற்கு இரண்டாயிரம் ரூபாய் குத்தகைப் பணம் செலுத்துகின்றேன். கோவாவுடன், கரட்டும், வெண்டிக்காயும் பயிரிட்டுள்ளேன். கோவா, கரட் இங்கு நன்கு விளைகின்றது. கூலி ஆள் ஒருவருக்கு ஒரு நாளைக்கு 300 ரூபாய் வழங்குகின்றோம். அவர் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை செய்ய வேண்டும். வேலையாட் கூலி, உரம் என்பவற்றிற்கு செலவாகும் தொகையை கழித்தால் 1/2 ஏக்கர் நிலத்தில் 20,000 முதல் 30,000 ரூபாய் வரையில் இலாபத்தை (8 மாதத்திற்கு ஒரு முறை) பெற முடியும். எங்களுக்கு அரசாங்கத்திடமிருந்து எவ்வித உதவியும் கிடைப்பதில்லை. திருநெல்வேலி சந்தைக்கு எமது விளைப் பொருட்களை கொண்டு சென்றதும் வியாபாரிகள் வந்து அவற்றை வாங்கி செல்வார்.
1990களில் புலிகள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய பிறகு நாங்கள் தென்மராட்சிக்கு போய் 1995 இல் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வந்தோம். எனக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அனைத்தையும் எங்கள் சொந்த செலவிலேயே செய்து கொண்டோம். யுத்ததிற்கு பிறகு நிலைமை நல்லது. கோப்பாய் இராணுவ டிவிஷனில் பதிவு செய்ய வேண்டும் எங்களை மீளவும் பதிவு செய்யுமாறு கேட்டுள்ளனர். எங்களுக்கு நல்லது கெட்டது அவசியமில்லை. நாங்கள் சொல்வதை செய்வோம்.
அண்மைய தினங்களில் இடம்பெற்ற கொலைகள் மற்றும் கடத்தல்களை தொடர்ந்து யாழ்ப்பாணச் சமூகம் பீதிக்கு ஆள்பட்டுள்ளனர். அவர்கள் தெரிந்த, தெரியாத அனைவரையும் சந்தேகத்துடன் பார்க்க தூண்டப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் பின்வருமாறு எம்மிடம் கூறினார்.
'உங்களிடத்திலும் உளவாளிகள் இருக்க கூடும். நாங்கள் கதைத்தால் நாளை என்ன நடக்குமோ தெரியாது. நாங்கள் இருந்தால் உங்களுக்கு இங்கு வந்து எங்களை பார்க்க முடியும். அண்மையில் எனது இல்லத்தின் கதவு, ஜன்னல்களை உடைத்துக் கொண்டு ஒரு குழுவினர் உட்புகுந்தனர். நீங்கள் கதைத்து விட்டு போய் விடுவீர்கள் நாங்கள் இங்கு இருக்க வேண்டும். நீங்கள் எங்கள் கதையை வெளிப்படுத்துவதாயின் எங்கள் பெயர்களை போட வேண்டாம், புகைப்படங்களை போட வேண்டாம் என கூறினர்.
இவ்வாறான வேண்டுகோள்களினால் இங்கு கருத்து தெரிவித்த பலரின் பெயர், ஊர் விபரங்களை நாம் வெளியிடவில்லை.
nanry pongutamil inayam

கருத்துகள் இல்லை: