புதன், 27 ஏப்ரல், 2011

நிபுணர்குழு அறிக்கையின் அடிப்படையில் ஐ.நா விசாரணை நடத்த வேண்டும் – அனைத்துலக மன்னிப்புச் சபை

சிறிலங்கா தொடர்பான போர்க்குற்ற அறிக்கையின் அடிப்படையில் ஐ.நா கண்டிப்பான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்துலக மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அனைத்துலக மன்னிப்புச்சபை நேற்று அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில், அனைத்துலக மன்னிப்புச்சபையின் ஆசிய பசுபிக் பிரிவுக்கான பணிப்பாளர் சாம் சரிபி, “ பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை மறுக்க, சிறிலங்கா அரசு வெள்ளையடிக்க மேற்கொள்ளும் முயற்சிகளை ஐ.நாவின் அறிக்கை போர் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

போர்க்குற்றங்களை யார் செய்தது, யாருக்கு என்ன செய்தது என்று முடிவு செய்வதற்கும், குற்றம் புரிந்தவர்களை நீதியின் முன் நிறுத்துவது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் உரிய நேரத்தில் வெளிப்படைத்தன்மையுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

போரின்போது இரண்டு தரப்பினராலும் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றிய சாட்சியங்களைச் சேகரிக்க ஐ.நாவின் விசாரணைக்குழு ஒன்றை அமைப்பதை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் சாம் சரிபி கேட்டுக் கொண்டுள்ளார்.

“ போரின் இறுதிக்கட்த்தில் அதிலிருந்து தப்பிய சாட்சிகள் மிகப் பயங்கரமான காட்சிகளைக் கொண்டுள்ளனர். அவர்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். காயங்கள் அடைந்தும் வாழ்க்கையை இழந்தும் போயுள்ளனர். உணவு, மருத்துவ வசதிகள், குடிநீர் என்பன அவர்களுக்குக் கிடைக்காமல் பிடுங்கிக் கொள்ளப்பட்டன.

போர் வலயத்தில் இருந்து தப்பிய அவர்களில் பெரும்பாலானவர்கள் இராணுவத் தடுப்பு முகாம்களுக்குள் பரிதாபகரமான நிலைகளில் தடுத்து வைக்கப்பட்டனர்.

இரண்டு ஆண்டுகள் கழிந்தும் பலர் இன்னமும் குற்றச்சாட்டுகள் ஏதும் சுமத்தப்படாமல் தடுப்பில் உள்ளனர். அவர்களுக்கான நீதியை நாம் எப்படி மறுக்க முடியும்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

விடுதலைப் புலிகளாலும் சிறிலங்கா அரசினாலும் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக உடனடியாக அனைத்துல விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும், அதன்மூலமே சிறிலங்காவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: