புதன், 27 ஏப்ரல், 2011

வெள்ளைக்கொடி விவகாரத்தில் நம்பியாரின் பங்கு - கேள்விக்கு பதிலளிக்காமல் நழுவினார் பான் கீ மூன்

வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் விஜய் நம்பியாரின் பங்கு தொடர்பாக பான் கீ மூனிடம் இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பிய போது அவர் அதற்கு நேரடியாகப் பதிலளிக்காமல் நழுவிச் சென்றுள்ளார்.

பொதுமக்கள் இழப்புகள் பற்றிய சரியான புள்ளிவிபரங்களைத் திரட்டி, போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கு இருந்த வாய்ப்பை ஐ.நா பயன்படுத்தத் தவறியுள்ளதாக நிபுணர்குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது குறித்து ஐ.நா பொதுச்செயலரிடம் இன்னர் சிற்றி பிரஸ் நேற்றுக் கேள்வி எழுப்பியிருந்தது.

இதற்குப் பதிலளித்துள்ள பான் கீ மூன், ஐ.நா பணியாளர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க சிறிலங்கா அதிகாரிகள் மறுத்து விட்டனர் என்று கூறியுள்ளார்.

“ போரின் இறுதிக்கட்டத்தில் பாதுகாப்பு நிலைமை நிச்சயமற்றதாக- மிகவும் மோசமானதாக இருந்தது. அங்குள்ள ஐநாவின் பணியகங்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்யமுடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியது.

அந்த நேரத்தில் சிறிலங்காவின் ஆலோசனைப்படியே எம்மால் நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது“ என்று அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, பான் கீ மூனின் மூத்த ஆலோசகர் விஜய் நம்பியார் வெள்ளைக்கொடிக் கொலைகள் விவகாரத்தில் வகித்த பங்கு தொடர்பாக இன்னொரு கேள்வியை இன்னர் சிற்றி பிரஸ் அவரிடம் எழுப்பியிருந்தது.

அதற்குப் பதிலளித்துள்ள பான் கீ மூன், அந்த நேரத்தில் சிறிலங்காவில் இருந்த ஐ.நா பணியகங்களின் செயற்பாடுகள் தொடர்பாக தாம் மீளாய்வு செய்ய முயற்சிப்பதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக தனது மூத்த ஆலோசகர்களுடன் கலந்துரையாடச் செல்லவுள்ளதாகவும் நழுவலான பதிலை அளித்துள்ளார்

கருத்துகள் இல்லை: