வெள்ளி, 22 ஏப்ரல், 2011

நிபுணர்கள் குழுவுக்கு எதிராக தமிழர்களை வீதியில் இறக்க சிறிலங்கா அதிபர் பணிப்பு

சிறிலங்கா அரசுக்கு ஆதரவாகவும், ஐ.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு எதிராகவும் வடக்கு,கிழக்குப் பகுதிகளில் பேரணிகளை நடத்துமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களையும் மற்றும் அமைச்சர்கள் சிலரையும் அலரி மாளிகைக்கு அழைத்து சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இதுபற்றிக் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போதே அரசாங்கத்துக்கு ஆதரவானதும் ஐ.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு எதிரானதுமான பேரணிகளை நடத்துமாறும் பணித்துள்ளார்.

மே 1ம் நாள் கொழும்பில் நடத்தப்படவுள்ள பாரிய எதிர்ப்புப் பேரணிக்கு பின்னர் இந்தப் பேரணிகளை ஒழுங்கு செய்யுமாறும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் மே 1ம் நாள் நடத்தப்படவுள்ள பாரிய பேரணிக்கு வடக்கு,கிழக்கில் இருந்து ஒவ்வொரு தொகுதி அமைப்பாளரும் குறிப்பிட்டளவான பொதுமக்களை கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்றும் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, சிறிலங்கா அரசின் மீது போர்க்குற்றங்களை சுமத்தியுள்ள ஐ.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு எதிராக மே நாளுக்குப் பின்னர் பேரணிகளை நடத்த வடபகுதி மக்கள் திட்டமிட்டுள்ளதாக சிறிலங்காவின் பிரதி அமைச்சர் முரளிதரன் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ளார்.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களை நேற்றுச் சந்தித்து தற்போதைய நிலைமைகள் குறித்து பேசியுள்ளதாகவும், இந்த அமைப்பாளர்களே பேரணிகளை ஒழுங்குபடுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

வடபகுதி மக்கள் பேரணிகளை நடத்த தயாராகி வருவதாகக் கூறிய சிறிலங்காவின் பிரதி அமைச்சர் முரளிதரன், மகிந்த ராஜபக்சவைச் சந்தித்த அமைப்பாளர்களே பேரணிகளை ஒழுங்கு செய்யவுள்ளதாகவும் முன்னுக்குப் பின் முரணான வகையில் கூறியுள்ளார்.

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் கடந்த ஆண்டில் நிபுணர்கள் குழுவை நியமித்த போதும், வடக்கு, கிழக்கில் சிறிலங்காப் படையினர் தமிழ்மக்களை கட்டாயமாக இழுத்துச் சென்று பேரணிகளில் பங்கேற்க வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: