திங்கள், 25 ஏப்ரல், 2011

நிபுணர்குழுவின் பின்னணியில் அமெரிக்கா, பிரித்தானியா – கேவலமான காரியங்களில் ஈடுபடுகின்றனவாம்

சிறிலங்கா அரசுக்கு எதிரான ஐ.நா நிபுணர்குழு அறிக்கையின் பின்னணியில் அமெரிக்காவும் பிரித்தானியாவுமே இருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் உறுதியாக நம்புவதாக கொழும்பு ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அனைத்துலக போர்க்குற்ற விசாரணைக்கு அழுத்தம் கொடுக்கும் உலகத் தமிழர் பேரவையுடன் இணைந்து பிரித்தானியாவும், அமெரிக்காவும் இந்தக் கேவலமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த நாளேடு குறிப்பிட்டுள்ளது.

உலகத் தமிழர் பேரவை, சில பிரித்தானிய, அமெரிக்க அரசியல் அமைப்புகளுடன் இணைந்து அனைத்துலக போர்க்குற்ற விசாரணைக்கு அழைப்பு விடுத்து வருவதாகவும் கொழும்பு ஆங்கில நாளேடு கூறியுள்ளது.

நோர்வேயின் முன்னாள் நடுநிலையாளர் எரிக் சொல்ஹெய்ம் கூட அமெரிக்க, பிரித்தானிய அரசுகளின் இந்த நகர்வுகளுக்கு பின்புலத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள அந்த நாளேடு, அவரும் அனைத்துலக போர்க்குற்ற விசாரணைக்கு பகிரங்கமான முறையில் அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் 28ம் திகதி அமெரிக்க இராஜாங்கத் திணைக்க உதவிச் செயலர் றொபேட் ஓ பிளேக்கை சந்தித்த உலகத் தமிழர் பேரவையினருக்கு ஐ.நா பொதுச்செயலரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ள கொழும்பு நாளேடு, இந்தச் சந்திப்பு அமெரிக்கத் தலையீடு இல்லாமல் ஒருபோதும் சாத்தியமில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளை, எதிர்வரும் மே1ம் நாள் கொழும்பில் நடத்தப்படவுள்ள பாரிய பேரணியில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுக்கு எதிரான எந்த முழக்கங்களையும் எழுப்புவதில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் கண்டிப்பான முடிவை எடுத்துள்ளதாகவும், இந்தப் பேரணியில் ஐ.நா பொதுச் செயலரும், மர்சுகி தருஸ்மன் தலைமையிலான நிபுணர் குழுவுமே இலக்காக இருக்கும் என்றும் அந்த நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: