வெள்ளி, 20 மே, 2011

பிற்பகல் 1 மணிக்கு மேல் கனிமொழி ஜாமீன் மனு மீது தீர்ப்பு-நீதிபதி

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ள கனிமொழி தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மீதான தீர்ப்பு இன்று பிற்பகல் 1 மணிக்கு மேல் அறிவிக்கப்படும் என்று சிறப்பு சிபிஐ கோர்ட் நீதிபதி ஷைனி தெரிவித்துள்ளார்.

அவருக்கு முன்ஜாமீன் மறுக்கப்பட்டால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்படுவார் என்பதால் கருணாநிதி குடும்ப வட்டாரம் கவலையில் மூழ்கியுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கனிமொழியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. கூட்டுச் சதியாளராக அவரது பெயரை குற்றப் பத்திரிக்கையில் சிபிஐ சேர்த்துள்ளது. கலைஞர் டிவிக்கு ரூ. 204 கோடி பணம் வந்தது தொடர்பான விவகாரத்தில் கனிமொழிக்குத் தொடர்பு இருப்பதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. கனிமொழி தவிர கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டியின் பெயரும் குற்றப் பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதையடுத்து டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் கனிமொழி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது.இதையடுத்து மே 6ம் தேதி கனிமொழியும், சரத்குமாரும் சிபிஐ கோர்ட்டில் ஆஜரானார்கள். அப்போது முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.

கனிமொழிக்காக ஆஜரான வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி, எல்லாத் தவறுக்கும் ராசாதான் காரணம், கனிமொழிக்குத் தொடர்பில்லை. அவர் ஒரு பெண், குழந்தைக்குத் தாய், எங்கும் ஓடி விட மாட்டார். எனவே முன்ஜாமீன் தர வேண்டும்என்று வாதிட்டார்.

அடுத்த நாளும் விசாரணை நடந்தது.அதன் பின்னர் மே 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் அன்றும் தீர்ப்பு அளிக்கப்படவில்லை. மாறாக மே 20ம் தேதியான இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று சிபிஐ கோர்ட்டுக்கு வந்திருந்தார் கனிமொழி. அப்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக நீதிபதி ஷைனியிடம் தெரிவிக்கப்பட்டது. தான் ஓய்வெடுக்க விரும்புவதாக கனிமொழி கூறவே அதை ஏற்ற நீதிபதி அவர் புறப்பட்டுச் செல்ல அனுமதித்தார். இதையடுத்து அவர் கிளம்பிச் சென்றார். ஓய்வுக்குப் பின்னர் மதியம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இந்த நிலையில் இன்று கனிமொழி முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதிபதி ஷைனி அறிவிக்கவுள்ளார். விசாரணைக்காக இன்று காலை 10 மணிக்கு கனிமொழி நீதிமன்றம் வந்தார். அவருடன் கணவர் அரவிந்தனும் உடன் வந்திருந்தார்.

பின்னர் நீதிபதி ஓ.பி.ஷைனி கூறுகையில், பிற்பகல் 1 மணிக்கு மேல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி வழக்கை பிற்பகலுக்கு ஒத்திவைத்தார். இதனால் கனிமொழியின் நிலை பிற்பகல் 1 மணி வரை தள்ளிப் போயுள்ளது.

உத்தரவுக்கு காத்திருக்கிறேன்-கனிமொழி

முன்னதாக கோர்ட்டுக்கு வருவதற்கு முன்பு ஜாமீன் மனு மீதான தீர்ப்பு பாதகமாக அமையுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த கனிமொழி, எந்த உத்தரவு வந்தாலும் அதை சந்தித்தாக வேண்டிய நிலையில் நான் உள்ளேன். உத்தரவுக்காக காத்திருக்கிறேன். நான் நன்றாகவே இருக்கிறேன், எந்தப் பதட்டமும் இல்லை என்றார் அவர்.

http://thatstamil.oneindia.in

கருத்துகள் இல்லை: