ஞாயிறு, 29 மே, 2011

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சனல்-4 காணொலிப்பதிவு பற்றிய அறிக்கை

சனல் -4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான- தமிழ்க் கைதிகளை சிறிலங்காப் படையினர் சுட்டுக்கொல்லும் காட்சிகள் அடங்கிய, காணொலிப்பதிவு அடங்கிய அறிக்கை நாளை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நீதிக்குப் புறம்பான, தன்னிச்சையான படுகொலைகள் குறித்த ஐ.நாவின் சிறப்பு அறிக்கையிலேயே இந்தக் காணொலிப் பதிவு மற்றும் அது தொடர்பான தொழில்நுட்ப பரிசோதனை அறிக்கையும் உள்ளடக்கப்படவுள்ளன.

இந்த அறிக்கையை ஐ.நா மனிதஉரிமைகள் ஆணைக்குழுவிடம் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் குறித்த ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் கிறிஸ்ரோ ஹெய்ன்ஸ் சமர்ப்பிக்கவுள்ளார்.

சனல்-4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்தக் காணொலிப் பதிவு போலியானது என்று சிறிலங்கா அரசாங்கம் கூறி வருகிறது.

கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளராக கிறிஸ்ரோ ஹெய்ன்ஸ் நியமிக்கப்பட்ட பின்னர் சமர்ப்பிக்கும் முதலாவது அறிக்கை இதுவாகும்.

இவர் கடந்த ஆண்டு சிறிலங்கா வருவதற்கு முற்பட்டபோது சிறிலங்கா அரசாங்கம் அதற்கு அனுமதி அளிக்க மறுத்து விட்டது.

இவருக்கு முன்னர் சிறப்பு அறிக்கையாளராக இருந்த பிலிப் அஸ்ரன் கடைசியாக 2005ம் ஆண்டு சிறிலங்கா வந்திருந்தார்.

அதற்குப் பின்னர் அவருக்கும் சிறிலங்கா வர அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: