சனி, 21 மே, 2011

கனிமொழியின் புதிய முகவரி : நம்பர்-6 திகார் ஜெயில்

2ஜி வழக்கில் சி.பி.ஐ., தாக்கல் செய்த 2வது குற்றப்பத்திரிகையில் கூட்டு சதியாளர் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த தி.மு.க., எம்.பி.,யும், கருணாநிதியின் மகளுமான கனிமொழி ‌நேற்று ( 20ம் தேதி) டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். டில்லி திகார் சிறை எண் 6ல் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையில் கிடைத்தது என்ன ? சிறை எண் 6ல் 8வது வார்டில் கனிமொழி நேற்று மாலை 4.30 மணிக்கு அடைக்கப்பட்டார். முதல் முறையாக குற்றப் பின்னணியுடன் வருபவர்கள் இந்த சிறையில் அடைக்கப்படுவது வழக்கம். கனிமொழி தனி செல்லில் இருக்கிறார். அவருக்கு தென் இந்திய உணவு வகை வழங்கப்படுகிறது. 10 அடி அகலமும் 15 அடி நீளமும் கொண்ட அறை தான் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கனிமொழி சிறைக்குள் செல்லும் போது, மருந்துப் பொருட்கள், புத்தகங்கள், மூக்கு கண்ணாடி ஆகியனவற்றை எடுத்துச் சென்றார். அறையில் மின்விசிறி, தொலைக்காட்சி பெட்டி, மற்றும் போர்வை ஆகியன தரப்பட்டுள்ளதாக திகார் சிறை துணை ஆய்வாளர் ஆர்.என்.சர்மா தெரிவித்துள்ளார். நாளிதழ்களும் வழங்கப்படும் என தெரிகிறது.


மூக்குத்திக்கு தடை : கனிமொழி சிறைக்கு செல்லும் போது அவரது மூக்குத்தியை அகற்றி விடுமாறு அதிகாரிகள் வலியுறுத்தினர். இதனையடுத்து அவர் மூக்குத்தியை அகற்றினார். சிறை விதிமுறைகளின் படி அவர் ஒரு வாரத்துக்கு இரண்டு முறை அவரது உறவினர்களை சந்திக்க முடியும்.


பக்கத்து சிறையில் உளவாளி ! கனிமொழியின் பக்கத்து சிறையில் பாகிஸ்தான் நாட்டுக்கு உளவு பார்த்து மாஜி ஐ.எப்.எஸ்., அதிகாரி மாதுரி குப்தாவும், விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட பு‌ரோக்கர் சோனு பஞ்சாபன் ஆகியோரும் இருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

சப்பாத்தி , சப்ஜி, சாதம் : நேற்றிரவு கனிமொழிக்கு சப்பாத்தி, சிறிது அளவு சாதம், சப்ஜி, பருப்பு கூட்டு ஆகியன வழங்கப்பட்டன. சி‌றை அறையிலேயே இருந்து உணவு அருந்தினார். கொசுத் தொல்லை அதிகமாக இருந்ததால், தனக்கு கொசு விரட்டி ஏற்பாடு செய்து தருமாறு சிறை அதிகாரிகளுடன் கேட்டுக் கொண்டுள்ளார் கனி. கனிமொழி அறைக்குள்ளேயே அட்டாச்ட் டாய்லட் இருக்கிறது. ஆனால் அதற்கு கதவு இல்லை. கனிமொழி டாய்லட் பயன்படுத்தும் நேரம் சிறைக் காவலர்களிடம் சொன்னால் பெரிய திரை ஒன்று போடப்படும். இதற்கு வேறு வழியில்லை, இது சிறை வழக்கம் என அதிகாரி்கள் கூறினர்.

பேசக்கூடாது......... கனிமொழி சிறை எண் 6ல் இருக்கிறார். சிறை எண் 1, 3,4 ல் 2ஜி வழக்கில் கைதான மற்றவர்கள் இருக்கின்றனர். அவர்களுடன் எக்காரணம் கொண்டும் கனிமொழி பேசக்கூடாது என கனி‌மொழிக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

கண்ணீர், மவுனம், கனிமொழி : ‌கோர்ட் சீன்
நேற்று ( 20ம் தேதி) பிற்பகல் டில்லி பட்டியாலா சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் ஜாமீன் மனு மீதான தீர்ப்புக்காக காத்திருந்த கனிமொழி இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருந்தார். கோர்ட்டில் 2ஜி வழக்கில் ஏற்கனவே கைதான ராஜா, சாகித் பால்வா, சஞ்சய் சந்திரா, வினோத் கோயன்கா ஆகியோரும் இருந்தனர். கனிமொழி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதிபதி ஓ.பி.செய்னி வாசிக்க ஆரம்பித்தார். தீர்‌ப்பு இந்தியில் இருந்தது. யாராவது அதை மொழி பெயர்த்து செல்ல மாட்டார்களா என்ற படி கனிமொழி சுற்றி இருந்தவர்களை ஏக்கத்துடன் ஒரு நோட்டம் விட்டார். கனிமொழி ஜாமீன் மனு ரத்து, அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை புரிந்து கொண்ட ராஜா, எழுந்து நின்றார். சமிக்ஞைகளில் கனி கைது என்பதை தெரிவித்தார். அதிர்ந்து போனார் கனிமொழி. சென்னையில் இருந்து வந்திருந்த கனிமொழியின் உறவுக்கார பாட்டி, கனிமொழியின் மெய்க்காப்பாளர் ஆகியோர் அழுது கொண்டே கோர்ட்டில் இருந்து வெளியேறினர். மவுனம் மட்டுமே மொழியாக, கண்களில் இருந்து கண்ணீர் வழிய கணவர் அரவிந்தனை நோக்கி நகர்ந்தார் கனிமொழி. கணவரை கண்ணீருடன் ஆரத் தழுவி மவுனத்தடன் நகர்ந்தார். கோர்ட்டில் இருந்த டி.பி.ரியால்டி நிறுவனர் சாகித் பால்வாவின் தந்தை, கனிமொழியை நோக்கி நடந்து வந்து, கனியின் தலையில் கைவைத்து எதுவும் நடக்காது என ஆசிர்வதிப்போல் செய்து விட்டுச் சென்றார். உடைகளுக்கு ஏற்ப விதவிதமாக, வித்தியாசமாக கைப்பைகளை ‌பயன்படுத்தும் கனிமொழி, அவர் கையில் வைத்திருந்த பையை கணவரிடம் தந்து விட்டு நகர்ந்தார். யாருடனும் பேசவில்லை. அவரது ஆதரவாளர்களை நோக்கி கையை மட்டும் அசைத்து விட்டுச் சென்றனர். அதற்குள் கோர்ட்டில் இருந்த போலீசார் கனிமொழியை சுற்றிலும் பாதுகாப்புக்கு வந்தனர். வெளியில் இருந்து உள்ளே நுழைய முயன்ற பத்திரிகையாளர்களை தடுத்து நிறுத்தி, கனிமொழியையும், சரத்குமாரையும் கோர்ட் வளாகத்தில் இருக்கும் லாக் அப்புக்கு அழைத்துச் சென்று அமர வைத்தனர்.

கனியை பாராட்டிய நீதிபதி : கோர்ட் நடவடிக்கைகளுக்கு ஒழுங்காக ஒத்துழைப்பு நல்கியதாக கனிமொழிக்கு நீதிபதி ஓ.பி.செய்னி பாராட்டு தெரிவித்தார். அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்பது தான் விருப்பம், இருப்பினும் குற்றத்தின் தாக்கத்தையும், ச‌ாட்சிகளை கலைக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதாலும் தான் ஜாமீன் மறுக்கப்பட வேண்டியிருக்கிறது என்றார்.

http://www.dinamalar.com

கருத்துகள் இல்லை: