வியாழன், 26 மே, 2011

இந்திய அணு உலையையும் வேவு பார்த்த டேவிட் கோல்மேன் ஹெட்லி

மும்பையின் பல பகுதிகளை வேவு பார்த்து லஷ்கர் இ தொய்பாவுக்குத் தகவல் கொடுத்த டேவிட் கோல்மேன் ஹெட்லி, இந்திய அணு உலை ஒன்றையும் தாக்குதலுக்காக வேவு பார்த்த திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த மேஜர் இக்பாலின் உத்தரவின் பேரில் கடந்த 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த பணியை அவன் செய்துள்ளான்.

சிகாகோ டிரிப்யூன் இதுதொடர்பான ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஐஎஸ்ஐ அதிகாரியான இக்பால், இந்தியாவில் செய்ய வேண்டிய வேவுப் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்த உத்தரவிட்டது இந்த இக்பால்தான். இதற்காக இந்திய பணத்தையும் அவர் ஹெட்லிக்குக் கொடுத்தார்.

மேலும் இக்பாலின் ஆலோசனைப்படி இந்தியாவில் உள்ள ஒரு அணு உலைக்கும் சென்றுள்ளான் ஹெட்லி. அது தொடர்பான தகவல்களை சேகரித்துள்ளான்.

2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஹெட்லி மும்பைக்கு வந்தான். பல முக்கிய இடங்களை உளவு பார்த்து தகவல் சேகரித்தான். மும்பை துறைமுகத்தை படகு மூலம் சுற்றி வந்து சூழ்நிலையை ஆராய்ந்தான். துறைமுகப் பகுதியை வீடியோவிலும் பதிவு செய்து கொண்டான்.

சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தையும் முழுமையாக கண்காணித்து தகவல் சேகரித்தான். இந்த நடவடிக்கைகளை முடித்துக் கொண்டு பாகிஸ்தான் திரும்பிய அவன், அங்கு ஜகி, சஜீத் மிர், அபு குஹாபா மற்றும் இன்னொரு லஷ்கர் இ தொய்பா தீவிரவாத தலைவரை சந்தித்துப் பேசினான்.

கூகுள் எர்த் மூலம் மும்பையில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இடங்களின் படங்களை டவுன்லோட் செய்து திட்டத்திற்கு மெருகூட்டியவன் இந்த குஹாபா. மும்பைக்கு அருகே சிறிய மீனவர் குடியிருப்பு அருகே தீவிரவாதிகள் தரையிறங்கலாம் என்று ஐடியா சொல்லியவன் ஹெட்லி.

அங்கிருந்து தாக்குதல் நடத்த வேண்டிய இடங்களுக்கு டாக்சிகள் மூலமாக செல்லுமாறும் யோசனை தெரிவித்தவனும் ஹெட்லியே.

இந்த நேரத்தில், தாஹ் மஹால் ஹோட்டலுக்கு எதிர்ப்புறத்தில், வலது புறமாக தரையிறங்குமாறு யோசனை தெரிவித்தான் ஜகி என்கிற லக்வி.

திட்டங்களை வகுத்த பின்னர் சிகாகோ திரும்பிய ஹெட்லி அங்கு ராணாவை சந்தித்தான். ராணாவிடம் தான் வேவு பார்த்த தகவல்கள் உள்ளிட்டவற்றைத் தெரிவித்து பகிர்ந்து கொண்டான். சஜீத்தை சந்தித்தது, மும்பையில் படகு சவாரி செய்தது உள்ளிட்ட அனைத்தையும் ராணாவிடம் தெரிவித்தான்.

தாக்குதல் திட்டம் குறித்து ஜகியூர் ரஹ்மான் லக்வி கூறிய யோசனைகள், இந்திய, பாகிஸ்தான் கடலில் நிசப்தம் நிலவும் காலம் உள்ளிட்டவை குறித்து ராணாவிடம் விளக்கி விவாதித்தான் ஹெட்லி.

மேலும் இந்திய அணு மின் நிலையத்தை தான் வேவு பார்த்த வந்த விஷயத்தையும் ராணாவிடம் தெரிவித்துள்ளான் ஹெட்லி.

டெல்லியிலும் உளவு பார்க்குமாறு மேஜர் இக்பால் தன்னிடம் கேட்டுக் கொண்டதையும் ராணாவிடம் தெரிவித்துள்ளான் ஹெட்லி.

பின்னர் சிகோகோவிலிருந்து மீண்டும் பாகிஸ்தான் திரும்பினான் ஹெட்லி. அங்கு சஜீத், அபு குஹாபா ஆகியோரை பலமுறை சந்தித்து ஆலோசனை நடத்தினான். பின்னர் ஹெட்லியை மீண்டும் மும்பை செல்லுமாறு சஜீத் பணிக்கவே மீண்டும் மும்பை வந்தான் ஹெட்லி என்று அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணத்தை சிகாகோ கோர்ட்டில் அமெரிக்க அரசுத் தரப்பு வக்கீல்கள் சமர்ப்பித்துள்ளனர்.


கருத்துகள் இல்லை: