செவ்வாய், 31 மே, 2011

ஜெயலலிதா டெல்லி பயணம்: சோனியாவை சந்திக்கிறார்?

முதல்வர் ஜெயலலிதா இன்னும் ஓரிரு தினங்களில் டெல்லி செல்வார் என்று தெரிகிறது. அப்போது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவர் சந்தித்துப் பேசுவார் என்றும் தெரிகிறது.

சட்டசபைத் தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றிக்காக ஜெயலலிதாவுக்கு சோனியா வாழ்த்து தெரிவித்தார். ஆனால், தேநீர் விருந்துக்கு வருமாறு ஜெயலலிதாவை அவர் அழைத்ததாக வந்த தகவல்கள் உண்மையா இல்லையா என்று இதுவரை தெரியவில்லை.

இந் நிலையில் டெல்லி செல்லும் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கையும் சோனியாவையும் சந்திக்கலாம் என்று தெரிகிறது.

கிரைண்டர்,லேப்டாப் திட்டங்கள் குறித்து ஜெயலலிதா தீவிர ஆலோசனை:

இந் நிலையில் அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட இலவச மிக்ஸி, கிரைண்டர், லேப்டாப் உள்ளிட்ட 9 முக்கிய திட்டங்கள் குறித்து நேற்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் விவாதிக்கப்பட்டது.

அதிமுக தேர்தல்அறிக்கையில் இலவச மிக்ஸி கிரைண்டர், மின்விசிறி, லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு முக்கிய உறுதிமொழிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அவற்றை ஒன்றரை ஆண்டுகளில் நிறைவேற்றுவேன் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அந்த இலக்கை எட்டும் நோக்கில் அவர் அதிகாரிகளை முடுக்கி விட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று ஜெயலலிதா தலைமையில் 2வது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முக்கியமான 9 திட்டங்கள் குறித்து ஆளுநர் அறிக்கையில் அறிவிப்பு வெளியிடுவது தொடர்பாக தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்தத் திட்டங்களை எந்த வகையில் நிறைவேற்றுவது, தேவைப்படும் நிதி, அதற்கான நிதியாதாரம் உள்ளிட்டவை குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டது.

மேலும், திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட இலவச டிவி பெட்டி திட்டத்தை என்ன செய்யலாம் என்பது குறித்தும் முக்கியமாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

வருவாய்த்துறை மூலமாக இலவச மிக்ஸி, கிரைண்டர் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

ஜூன் 3ம் தேதி தமிழக சட்டசபை கூடுகிறது. அப்போது ஆளுநர் பர்னாலா உரை நிகழ்த்தவுள்ளார். அவரது உறையில் இந்த முக்கியத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: