ஞாயிறு, 29 மே, 2011

கனிமொழி எம்.பி.க்கு ஜாமீன் கிடைக்குமா? டெல்லி ஐகோர்ட்டில் நாளை விசாரணை

ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் கனிமொழி எம்.பி. கடந்த 20-ந் தேதி சி.பி.ஐ. போலீசாரால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். கனிமொழி எம்.பி. கலைஞர் டி.வி.யில் பங்குதாராக உள்ளார். ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் சிக்கிய சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து கலைஞர் டி.வி.க்கு பணம் கைமாறிய குற்றச் சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் கைதாகி டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். கனிமொழியின் ஜாமீன் மனுவை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு தள்ளுபடி செய்ததால் டெல்லி ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு கடந்த 23-ந் தேதி ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. கனிமொழி தனது மனுவில், என் மீதான குற்றச்சாட்டுக்கள் தவறானவை.
கலைஞர் டி.வி.யில் நான் வெறும் பங்குதாரர் மட்டும்தான். வேறு எந்த செயல்பாட்டுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை. பணபரிவர்த்தனையில் நான் பலன் பெறவில்லை. எனக்கு பள்ளி செல்லும் வயதில் மகன் இருக்கிறான். அவனை நான்தான் கவனிக்க வேண்டும். எனவே மனிதாபிமான அடிப்படையில் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். மறுநாள் (24-ந் தேதி) இந்த மனு டெல்லி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையை வருகிற 30-ந் தேதிக்கு நீதிபதி அஜீத் பரிகோகே ஒத்தி வைத்தார்.
கனிமொழி மனுவுக்கு பதில் அளிக்குமாறு சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார். வழக்கு விசாரணை விவரங்களையும் அன்று கோர்ட்டில் செய்யுமாறும் நீதிபதி உத்தர விட்டார். நாளை (30-ந் தேதி) கனிமொழி எம்.பி.யின் ஜாமீன் மனு டெல்லி ஐகோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது சி.பி.ஐ. தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படுகிறது.
சி.பி.ஐ. தரப்பில் வக்கீல் ஆஜராகி வாதாடுகிறார். கனிமொழி சார்பிலும் வக்கீல் ஆஜராகி வாதாடுவார். இரு தரப்பு வாதங்களும் முடிந்த பின்பு கனிமொழி ஜாமீன் மனு மீது நீதிபதி தீர்ப்பு வழங்குவார். வக்கீல்கள் வாதம் நீண்டு கொண்டே போனால் தீர்ப்பு வழங்க தாமதம் ஆகும்.

கருத்துகள் இல்லை: