செவ்வாய், 17 மே, 2011

துரோகம் செய்ததால் கருணாநிதி தண்டிக்கப்பட்டார்: சீமான்

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க. தலைவர் கருணாநிதி சந்தித்த படுதோல்வி, அவர் தமிழினத்திற்கு செய்த துரோகத்திற்கு கிடைத்த தண்டனை என்று நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் படுகொலையின் இரண்டாவது நினைவு தினத்தையொட்டி, வேலூரில் நாளை நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொதுக் கூட்டமும், அதற்கு முன்பு, ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையை வரவேற்று பேரணியும் நடைபெறவுள்ளது.

பேரணி, பொதுக்கூட்டத்தின் நோக்கும் பற்றி இன்று வேலூரில் செய்தியாளர்களிடம் விளக்கிய சீமான், “தமிழ் ஈழப் பகுதியில் முள்ளிவாய்க்கால் கரையில் தமிழின ஒழிப்பு கோரச் சம்பவங்கள் நடைபெற்றன. 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி அந்த கொடிய படுகொலை நடந்தது. அதில் நிராயுதபாணியாக இருந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த நாளை உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் தமிழ் தேசிய துக்க தினமாக கடைபிடித்து வருகிறார்கள். நாளை 2வது துக்க தினம் ஆகும். அதையொட்டி இங்கு வேலூரில் பேரணியும் பொதுக் கூட்டமும் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டம் துக்க தினத்தையொட்டி அழுவதற்காக அல்ல, எழுவதற்காக நடக்கப் போகும் கூட்டம்” என்று கூறியுள்ளார்.
தமிழர்களின் நிலையில் மாற்றம் வேண்டும் என்பதற்காகவே மக்கள் நம்பிக்கையுடன் ஜெயலலிதாவைத் தேர்ந்தெடுத்துள்ளனர். ஜெயலலிதாவும் இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்க் குற்றவாளி என்றும், அவரை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்க வேண்டும் என்றும், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார் என்று கூறிய சீமான், இந்தியாவின் அயலுறவுக் கொள்கையில் மாற்றம் வேண்டும் என்று கூறினார்.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கும் நளினி உள்ளிட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட சீமான், சோனியா காந்தி தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவை தேனீர் விருந்திற்கு அழைத்ததை தவறாகக் கருதவில்லை என்று கூறினார்.

1 கருத்து:

மதுரை சரவணன் சொன்னது…

சீமான் தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கமும் அதிமுகவின் வெற்றிக்கு காரணம்... அவரின் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்