புதன், 25 மே, 2011

சோர்ந்துள்ள தொண்டர்களை உற்சாகப்படுத்த தி.மு.க., திட்டம்

சட்டசபை தேர்தல் தோல்வியில் சோர்வுற்று இருந்த, தி.மு.க.,வினருக்கு, கனிமொழி கைது, கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. "அடுத்து என்ன செய்யப் போகிறோம்' என, யோசிக்க முடியாத அளவுக்கு திண்டாடிப் போய் நிற்கின்றனர்.

தேர்தல் தோல்விக்கு, குடும்ப ஆட்சியும், ஊழலும் தான் காரணம் என, மக்கள், பரவலாகப் பேசத் தொடங்கி விட்டனர். கூட்டணியாக உள்ள காங்கிரஸ், அதைக் குற்றச்சாட்டாக சொல்லி வருகிறது. இதற்கு, என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் தி.மு.க., தொண்டர்கள் விழிக்கின்றனர்.புதிய அரசின் மின்னல் வேக செயல்பாடுகள் கண்டும், அதிர்ந்து போய் உள்ளனர். கட்சித் தலைமை என்ன செய்யப் போகிறதோ என்ற தவிப்பும் அவர்கள் மத்தியில் உள்ளது.கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், தொடர்ந்து அவர்களை கட்சிப் பணியில் ஈடுபடுத்தவும், தி.மு.க., தலைமை திட்டமிட்டு வருகிறது. கட்சியின் மாவட்ட கூட்டங்களை நடத்த பணித்துள்ளது. மாவட்ட கூட்டங்களில், கட்சியின் ஒன்றிய கிளை கூட்டங்களை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இக்கூட்டங்களில், கட்சித் தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை, ஜூன் 3ம் தேதி பிரமாண்டமாக கொண்டாட தீர்மானங்கள் நிறைவேற்ற கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தீர்மானத்தின் படி, ஒவ்வொரு கிளையிலும், கட்சியின் கொடியை ஏற்றி, கருணாநிதியின் உருவப்படம் பொறித்த பேனர்களை அமைக்க திட்டமிட்டுள்ளனர்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும், அன்னதானம் செய்யவும் ஏற்பாடு செய்யுமாறு கட்சி நிர்வாகிகள் பணிக்கப்பட்டுள்ளனர்.கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை, ஜூன் 3ம் தேதியோடு நிறுத்தி விடாமல், மாதம் முழுவதும் கொண்டாடுவதற்கு ஏதுவாக ஏற்பாடுகளை செய்யுமாறு, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.கருணாநிதியின் பிறந்த நாளன்று, கட்சித் தலைவருக்கு வாழ்த்து சொல்ல அறிவாலயத்திற்கு திரண்டு வருமாறும் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். தேர்தல் தோல்வி, கனிமொழி கைது ஆகியவற்றிலிருந்து தொண்டர்களை வெளிக்கொண்டு வந்து, உற்சாகம் ஊட்டுவதற்கு கருணாநிதியின் பிறந்தநாளை பயன்படுத்த, தி.மு.க., நிர்வாகிகள் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். பிறந்த நாளை முன்னிட்டு, சென்னையில் கருணாநிதி பங்கேற்கும் பொதுக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்கின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள பின்னடைவை போக்கும் வகையில், கருணாநிதியின் பிறந்தநாள் உரை இருக்கும் என எதிர்பார்க்கின்றனர். தோல்விக்கான காரணம், கனிமொழி கைது போன்ற விவகாரங்கள் குறித்து கட்சித் தலைவர் விரிவாக பேசுவார் எனவும் கட்சி நிர்வாகிகள் நம்பிக்கையில் உள்ளனர். கருணாநிதியின் உரை, புது தெம்பை ஊட்டி, அடுத்தகட்ட பணிகளுக்கு அழைத்துச் செல்லும் என்பது, தி.மு.க.,வினர் எதிர்பார்ப்பு.தோல்வியில் இருந்து மீள்வதோடு, கட்சியிலிருந்து தொண்டன் வெளியேறிவிடாமல் தக்கவைத்துக் கொள்ளவும், கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை, தி.மு.க., கையில் எடுக்கிறது.


கருத்துகள் இல்லை: