புதன், 11 மே, 2011

எங்களை குற்றக்கூண்டில் ஏற்றித் தண்டிக்க வெளிநாடுகள் சதி”– புலம்புகிறார் மகிந்த ராஜபக்ச

இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கை முடிந்த பின்னர், வடபகுதியில் புதிய வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க வேண்டியுள்ளது. புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்ட பின்னர்- விரைவில் வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்று அலரி மாளிகையில் உள்ளூர் ஊடகங்களின் ஆசிரியர்களுடன் நடத்திய கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச,

“ தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இதுவரை பல சுற்று பேச்சுக்களை நடத்தியுள்ளோம். இன்னும் சில நாட்களில் மீண்டும் அவர்களை சந்தித்து பேச்சுக்களை நடத்துவோம்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல. எனவே, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் கட்சி உட்பட சகல தமிழ்க்கட்சிகளுடனும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது பற்றிய பேச்சுக்களை அரசாங்கம் நடத்தும்.

பிரபாகரன் கோரியதை தமிழ்த் தேசிய கூட்டமைப்போ அல்லது வேறு எந்தத் தரப்பினரோ முன்வைத்தால் அந்தக் கோரிக்கைகளை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பேன்.
ஆனாலும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முன்வைக்கும் நியாயமான கோரிக்கைகளை நான் அவதானமாக செவிமடுத்து அவற்றை அமுலாக்குவதற்கு முயற்சி செய்வேன்.

தருஸ்மன் அறிக்கை நாட்டில் ஒரு சர்ச்சையை கிளப்பாத வகையில், ஊடகங்கள் நாட்டுப்பற்றுடன் செயற்பட வேண்டும்.

தருஸ்மன் குழுவின் அறிக்கை போன்று அல்லாமல் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நம்பகமானதாக அமையும். நல்லிணக்க ஆணைக்குழு விடுத்த வேண்டுகோளை அடுத்து அதன் பணிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

தருஸ்மன் அறிக்கை வெளிவந்தவுடன், அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் வீதி இறங்கி- கிளர்ச்சிகளை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்த்திருந்தவர்களை அரசாங்கத்துக்கு இருக்கும் மக்கள் ஆதரவு ஏமாற்றமடையச் செய்திருக்கிறது.

எதிர்க்கட்சி வலுவிழந்து மக்களால் ஓரங்கட்டப்பட்டுள்ள ஒரே காரணத்தினால் தான், வெளிநாட்டு சக்திகள் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக இத்தகைய சதி முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

எங்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றித் தண்டிக்கப் பார்க்கிறார்கள். ஆனால் நாங்கள் போரின் போது எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை.

நோர்வேயிலுள்ள அரசசார்பற்ற அமைப்பொன்று என் மீதும், பாதுகாப்புச் செயலர் மற்றும் சில இராணுவ அதிகாரிகளுக்கு எதிராகவும் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளது.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

http://www.puthinappalakai.com

கருத்துகள் இல்லை: