வியாழன், 26 மே, 2011

லெனின் உடலைப் புதைப்பதா : ரஷ்யாவில் சர்ச்சை ஓயவில்லை

"கம்யூனிஸ்ட் தலைவர் லெனினின் உடலைப் புதைப்பது என்பது அவசரக் குடுக்கைத் தனம். இதுபோன்ற முடிவுகள் சமூகத்தில் கொந்தளிப்பையே ஏற்படுத்தும்' என்று ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சர்ச் எச்சரித்துள்ளது. சோவியத் ரஷ்யாவின் தலைவரான விளாடிமிர் லெனினின் உடல், ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில், அவருக்கான சமாதிக் கட்டடத்தில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரஷ்யா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அவரது உடலைப் பார்க்க அங்கு செல்கின்றனர்.

சோவியத் ரஷ்யா சிதைந்த பின், லெனின் உடலைப் புதைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. சமீபகாலமாக அக்கோரிக்கை வலுத்தும் வருகிறது. சமீபத்தில் அங்கு நடத்தப்பட்ட பொது கருத்துக் கணிப்பில், 60 சதவீதம் பேர் அவரது உடலைப் புதைப்பதற்கு ஆதரவளித்தனர். 30 சதவீதம் பேர் மட்டுமே அவரது உடல் பேணப்பட வேண்டும், என்று கூறினர்.

இந்நிலையில், ரஷ்ய ஆர்த்தோடாக்ஸ் சர்ச் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,"லெனினின் உடலைக் காட்சிக்கு வைப்பது என்பது ரஷ்யப் பண்பாட்டுக்கு பொருத்தமானதல்ல தான். ஆனால், அவரது உடல் பற்றிய எவ்வித முடிவுகள் எடுப்பதற்கு முன், பல்வேறு சமூகக் குழுக்களின் கருத்துக்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். சமூகக் கொந்தளிப்புகளை உருவாக்கும் முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்தாண்டில், ரஷ்யப் பிரதமர் விளாடிமிர் புடின் இதுகுறித்துப் பேசிய போது, லெனின் உடல் பற்றிய முடிவு எடுக்கக் கூடிய காலம் இன்னும் வரவில்லை என்று குறிப்பிட்டார்.


கருத்துகள் இல்லை: