வியாழன், 26 மே, 2011

ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இந்தியா!

ஊழலில்தான் இந்தியா படுவேகமாக மற்ற நாடுகளை பின்னுக்கு தள்ளிவிட்டு பாய்ச்சல் காட்டுகின்றது என்றால், தற்போது உலகின் மிக அமைதி குறைவான, அதாவது ஆபத்தான 20 நாடுகளின் பட்டியலிலும் இந்தியா இடம் பிடித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

சர்வதேச ஆய்வு அமைப்பான பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவனம் உலக அளவில்,உலகின் அமைதியான நாடுகள் குறித்த ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வுக்கு மொத்தம் 153 நாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

வன்முறை தாக்குதல், மோதல்களினால் ஏற்படும் மரணம், உள்நாட்டு மொத்த உற்பத்தியில் இராணுவத்திற்கு செலவிடப்படும் அளவு ஆகியவை இந்த ஆய்வுக்கு பரிசீலிக்க எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதில் உலகின் அமைதியான நாடாக ஐஸ்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடம் நியூசிலாந்துக்கும், மூன்றாவது இடம் ஜப்பானுக்கும், நான்காவது இடம் டென்மார்க்கிற்கும், ஐந்தாவது இடம் செக் குடியரசுக்கும் கிடைத்துள்ளது.

மேலும் ஆறாவது இடம் ஆஸ்திரியாவிற்கும், ஏழாவது இடம் பின்லாந்துக்கும், எட்டாவது இடம் கனடாவுக்கும், ஒன்பதாவது இடம் நார்வேக்கும், பத்தாவது இடம் ஸ்லோவேனியாவுக்கும் கிடைத்துள்ளன.

அதே சமயம் உலக நாடுகளில் மிக அமைதி குறைவான நாடுகளின் பட்டியலில் நாடாக சோமாலியா கடைசி இடத்தில் உள்ளது.

ஆட்சி நிர்வாகமே இல்லாத சோமாலியா கடைசி இடத்தை பிடித்ததில் வியப்பேதும் இல்லை என்றாலும், உலக நாடுகளில் மிக அமைதி குறைவான, அதாவது ஆபத்தான 20 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது இந்தியர்களுக்கு கவலை அளிப்பதாக உள்ளது.
ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட மொத்தமுள்ள 153 இடங்களில், இந்தியாவுக்கு 135 ஆவது இடமும், பாகிஸ்தானுக்கு 146 ஆவது இடமும், ஆப்கானிஸ்தானுக்கு 150 ஆவது இடமும் கிடைத்துள்ளது.

அதே சமயம் 2008 ல் ஏற்பட்ட சர்வதேச பொருளாதார சரிவின் தாக்கத்தினால் ஐஸ்லாந்தின் வங்கிகள் பெருமளவு அழிவை சந்தித்ததோடு, ஐஸ்லாந்து முதல்முறையாக தனது நாட்டின் சில இடங்களில் கலவரத்தையும் கண்டது.

ஆனால் மூன்றே ஆண்டுகளில் மீண்டும் தன்னை கட்டமைத்துக் கொண்டு, உலகின் மிக அமைதியான நாடுகள் பட்டியலில், அதாவது உலகிலேயே நிம்மதியாக வாழக்கூடிய நாடுகளில் முதலிடத்தை பிடித்து,உலக நாடுகளை அண்ணாந்து பார்க்க வைத்துள்ளதோடு, இதுவரை அந்த இடத்தில் இருந்த நியூசிலாந்தையும் இரண்டாமிடத்திற்கு தள்ளி உள்ளது.

சீனாவில் தொடர்ந்து காணப்படும் சமூக குழப்பம், பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்குமான வருமான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரிப்பது போன்றவை அந்நாட்டை தொடர்ந்து ஆபத்தான நாடுகள் பட்டியலிலேயே வைத்துள்ளது.

அண்மையில் மக்கள் புரட்சிகளை சந்தித்த எகிப்து, துனிசினியா ஆகிய நாடுகளில் நிலவும் உணவு பொருட்களின் விலையேற்றம், கலவரங்கள் போன்றவை, ஆபத்தான நாடுகளின் பட்டியலிலேயே இந்நாடுகளை இடம்பெறச் செய்துள்ளதாக அந்த ஆய்வறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
கருத்துகள் இல்லை: