சனி, 7 மே, 2011

ஈழம் - சிங்கத்தின் நகங்கள்: காலச்சுவடு நடாத்த இருந்த விவாத அரங்கம் நிறுத்தம்

காலச்சுவடு சார்பாக 8.5.2011 அன்று சென்னை தி.நகர் செ.தெய்வநாயகம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுவதாக இருந்த 'ஈழம் - சிங்கத்தின் நகங்கள்' என்னும் தலைப்பிலான ஐ.நா.போர்க்குற்றம் தொடர்பான அறிக்கை குறித்த விவாத அரங்கு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காலச்சுவடு பொறுப்பாசிரியர் ஓர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையின் முழுவிபரமாவது,

அன்பிற்குரிய வாசகர்களுக்கு,

கடந்த அரை நூற்றாண்டுக் காலமாக நடைபெற்றுவரும் ஈழத் தமிழர்களின் அரசியல் வாழ்வுரிமைப் போராட்டங்களில் காலச்சுவடு செலுத்தி வந்துள்ள ஈடுபாடும் அக்கறையும் நினைவூட்டக்கூடிய அளவுக்குப் பழமையானதல்ல.

இந்த உண்மையைக் காலச்சுவடோடு தொடர்புடைய வாசகர்கள், படைப்பாளிகள், அறிவுத் துறை நண்பர்கள் நன்கறிவார்கள்.

ஈழப் பிரச்சினையின் அனைத்துப் பரிமாணங்களையும் விருப்புவெறுப்பற்ற இதழியல் நேர்மையோடு பதிவுசெய்து வந்திருக்கிறது காலச்சுவடு. வாசகர்கள் தம் எதிர்வினைகள், விவாதங்கள் மூலம் அவற்றைச் செழுமைப்படுத்தி விரிவுபடுத்தியிருக்கிறார்கள்.

ஈழப் பிரச்சினை சார்ந்து முன்வைக்கப்பட்ட மாற்றுக் கருத்துகளுக்கான இடம் மறுக்கப்பட்டதுமில்லை. இதழியல் சார்ந்த பதிவுகள் தவிர காலச்சுவடு, கருத்தரங்குகள், விவாத அரங்குகள் வாயிலாகவும் அத்தகைய உரையாடல்களை ஒருங்கிணைத்து வந்திருக்கிறது.

ஈழப் பிரச்சினை தொடர்பான உரையாடல்களைத் திமுக அரசு கடுமையாகத் தடுத்துவந்த ஒரு கட்டத்தில், சென்ற 2010 ஜூலை மாதத்தில் காலச்சுவடு பதிப்பகத்தால் நடத்தப்பட்ட எட்டு ஈழ நூல்கள் வெளியீட்டு விழா அத்தகைய உரையாடல்களுக்கான வெளியை உருவாக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்தது.

1988 முதல் 2009வரை காலச்சுவடில் இடம்பெற்ற ஈழம் தொடர்பான அரசியல் பதிவுகள் ‘சிங்கத்தின் நகங்களும் அசோகச் சக்கரமும்’, ‘போரும் வாழ்வும்’ என்னும் தலைப்புகளில் இரு தொகுதிகளாகச் சென்ற ஆண்டு வெளியிடப்பட்டமை, காலச்சுவடின் ஈழம் தொடர்பான அக்கறைக்கு வலுவான சான்று.

அவ்வகையில் சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையால் வெளியிடப்பட்ட இலங்கைப் போர்க்குற்றங்கள் பற்றிய அறிக்கையின் மீதான ஒரு விவாத அரங்கை 08.05.2011 அன்று ‘ஈழம்: சிங்கத்தின் நகங்கள்’ என்னும் பெயரில் நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்தோம். எழுத்தாளர்கள் பா. செயப்பிரகாசம், இராஜேந்திர சோழன், பேராசிரியர் வி. சூரியநாராயண், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான ச. பாலமுருகன், டாக்டர் பால் நியூமென், பத்திரிகையாளர் ப்ரியா தம்பி ஆகியோர் அவ்விவாத அரங்கில் பங்குகொள்வதற்கு இசைந்தனர்.

கூட்டம் பற்றிய தகவல்கள் வந்தவுடனேயே இணையத்திலும் வலைப்பூக்களிலும் நேரடியாகவும் தொலைபேசி வாயிலாகவும் அதற்கெதிரான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டதை அறிந்தோம்.

கூட்டத்தில் பங்கேற்க இசைவு தெரிவித்திருந்த பால் நியூமென் காலச்சுவடு இலங்கைத் தமிழர்கள் நலனில் அக்கறையற்ற ஒரு இதழ் எனத் தன் நண்பர்கள் சொன்னதாலும் வி. சூரியநாராயண் அவர்களுடன் மேடையைப் பகிர்ந்துகொள்ள முடியாது எனக் கூறிக் கூட்டத்தில் பங்கேற்க முடியாது எனத் தெரிவித்தார்.

பிறகு நடைபெற்ற தீவிரமான எதிர்ப்பிரச்சாரத்தின் விளைவால் கூட்டத்தில் பங்கேற்கவிருந்த இராஜேந்திர சோழன் அவர்களும் தன் மறுப்பைத் தெரிவித்தார். ச. பாலமுருகன் தயக்கத்துடன் தன் மறுப்பைத் தெரிவித்தார். பா. செயப்பிரகாசம் கூட்டத்தை ஒத்தி வைக்கலாம் என ஆலோசனை கூறினார்.

மிகக் குறுகிய கால அவகாசமே இருந்ததால் எங்களால் காவல் துறை அனுமதியும் பெறமுடியவில்லை. கூட்டத்திற்கெதிரான தீவிரப் பிரச்சாரம், பங்கேற்பாளர்கள்மீதான அவதூறுகள், நேரடியான, மறைமுகமான மிரட்டல்கள் முதலான எதிர்ப்பாளர்களின் பாசிசப் போக்குகள் கூட்டம் ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் என்னும் நம்பிக்கையை உருவாக்கவில்லை.

கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை உருவாக்கப்பட்டிருப்பதையும் அனுமானித்தோம். பங்கேற்பாளர்களில் நான்கு பேர் வர மறுத்துவிட்ட நிலையில் மாற்று ஏற்பாடுகள் செய்வதற்கான அவகாசமும் எங்களுக்கில்லை.

விவாத அரங்கை வன்மத்தின் ஊற்றுக் கண்ணாக மாற்றி அதன் மூலம் மாற்றுக் கருத்துகளுக்கான வெளியை அழிக்க நினைக்கும் முயற்சிகளுக்குத் துணைபோக எங்களுக்கு விருப்பமும் இல்லை. எனவே வரும் ஞாயிறன்று நடைபெறவிருந்த கூட்டம் ரத்து செய்யப்படுகிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இலங்கை அரசின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்துவதற்கான வாய்ப்பைக்கொண்டிருந்த ஒரு கூட்டத்துக்குத் தமிழ் உணர்வாளர்களே தடையாக இருப்பது நகை முரண்.

எங்கள் அழைப்பை ஏற்று வருகை தரச் சம்மதித்த பங்கேற்பாளர்களுக்கும் கூட்டம் நடத்துவற்கான அரங்கைத் தந்துதவிய செ. நெ. தெய்வநாயகம் மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்துக்கும் ஒத்துழைத்த அனைத்து நண்பர்களுக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தேவிபாரதி,
பொறுப்பாசிரியர், காலச்சுவடு.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: