செவ்வாய், 31 மே, 2011

சிறிலங்காவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் ஜெனிவாவில் மோதிக்கொண்ட அனைத்துலக சமூகம்

ஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 17வது கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் அனைத்துலக சமூகம் இரண்டாகப் பிரிந்து நின்று மோதிக்கொண்டது.

சிறிலங்காவுக்கு ஆதரவாக சீனா, கியூபா, ரஸ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் குரல் கொடுத்துள்ளன.

சிறிலங்கா தொடர்பாக தீர்மானம் மீது மீள்விவாதம் நடத்துவதற்கு கியூபா எதிர்ப்புத் தெரிவித்தது.

சிறிலங்கா தனது சொந்த விவகாரங்களை தானே தீர்த்துக் கொள்ளும் என்று சீனா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் தூதுவர், அமைதியை வென்றெடுக்க சிறிலங்காவுக்கு அனைத்துலக சமூகம் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

அதேவேளை சிறிலங்காவுக்கு எதிராக சுதந்திரமான போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தை அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், பிரான்ஸ், மற்றும் அயர்லாந்து போன்ற நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற மேறகுலக நாடுகளின் கருத்தை சிறிலங்காவின் மனிதஉரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க முற்றாக நிராகரித்துள்ளார்.

ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக அமெரிக்கா ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது. நல்லிணக்கத்தை ஏற்படுத்த பொறுப்புக்கூறும் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அமெரிக்கத் தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் பேசிய ஐ.நாவுக்கான ஹங்கேரியின் பிரதிநிதி அன்ராஸ் டிகனி, குற்றச்சாட்டுகள் தொடர்பாக சுதந்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமே நல்லிணக்கம் மற்றும் இறுதியான சமாதானத்தை சிறிலங்காவில் ஏற்படுத்த முடியும் என்று ஐரோப்பிய ஒன்றியம் நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸ், பெல்ஜியம் போன்ற நாடுகளும், ஐ.நாவின் அறிக்கையை வரவேற்றதுடன் சுதந்திரமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.
ஐ.நா நிபுணர் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த சுவிற்சர்லாந்தும் வலியுறுத்தியுள்ளது.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

கியூபாவும் இனவெறியருக்கு உதவியது ஏன்? சுதந்திரப் போராளியாக உலகம் முழுதும் போற்றப்படும் பிடல் கஸ்ரோவின் நாடும் இந்த இனகொலைவெறியருக்கு சதாகமாக இருப்பது தமது பொருளாதார நலன்களக்காகவா? உண்மை நிலையை எழுத்துச் சொல்ல புலம் பெயர் தமிழ் சமூகங்கள் முயலாதது ஏன்?