வியாழன், 5 மே, 2011

புதைந்துபோன நிலத்தில் எழுதப்படும் ஆனையிறவின் அடையாளங்கள்

கொழும்பில் இருந்து வெளியாகும் 'இருக்கிறம்' சஞ்சிகைக்காக தீபச்செல்வன் எழுதியது.

வன்னி நிலப்பரப்பில் நிகழ்ந்த ஆக்கிரமிப்பின் அடையாளத்தைக் காட்டி தமிழர்களின் நெஞ்சில் மாபெரும் காயத்தை ஏற்படுத்தி நிற்கிறது ஆனையிறவில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ நினைவுத் தூபி.ஆனையிறவு என்றாலே போராளிகளினதும், படைகளதும் இரத்தமும் உப்பு வயல்களுக்குள் நகர்ந்து செல்லும் இரவுகளும் ஞாபகம் வருகின்றன.

நித்தமும் வெடிக்கும் குண்டுகளின் சத்தங்கள் ஆனையிறவிலிருந்து கேட்கும். 1999ம் ஆண்டு ஆக்கிரமிப்பாளர்களால் கைப்பற்றப்பட்ட ஆனையிறவை இருநூற்று நாற்பது ஆண்டுகளின் பின்னர் தமிழர்கள் கைப்பறினார்கள் என்ற செய்தியை நவீனத் தமிழர்களின் வீரக்கதை என்று தமிழினம் கொண்டாடியது.

இன்று ஆனையிறவு வீழ்ந்து கிடக்கிறது என்பதையே அதனைச் சுற்றியுள்ள நிலைமைகள் காட்டுகின்றன.

ஆனையிறவின் அழகும் உப்பளத்து தொழிலும் தமிழ் மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்தவை. ஈழத்தின் வடக்கில் முக்கியமான வளம் கொழிக்கும் கடல்நிலமாக இது விளங்குகிறது.வடக்கில் யாழ் குடநாட்டையும் வன்னிப் பெருநிலப் பரப்பையும் இணைக்கின்ற இந்த கடலோரச் சமவெளி கிளிநொச்சி மாவட்டத்திற்குள் அடங்குகிறது.

இலங்கையிலேயே உள்ள மிகப்பெரிய உப்பளம் இது என்று கூறப்படுகிறது. கடலும் உப்பு வயல்களும் சூரிய வெளிச்சமும் காற்றும் என்று மனதைக் கவர்ந்து கொள்ளையிடும் அழகிய பிரதேசமாக காட்சியளிக்கின்ற ஆனையிறவு இன்று மீண்டும் வீழ்ந்த கடல்நிலம் என்ற அடையாளத்துடன் இருக்கிறது.

யுத்த வெற்றியின் பெருங் குறியீடாக கைகளால் தூக்கி நிமிர்த்தி வைத்திருக்கும் இலங்கையின் உருவமும் தாமரை மலர்களும் பெரும்பான்மையினரின் கண்களை, மனங்களை மகிழ்ச்சிப்படுத்திக் கொண்டிருக்கின்றன போலும்.

இதனாலோ என்னவோ ஆனையிறவு இப்பொழுது தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளின் உல்லாசத் தலங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. அந்த யுத்த நினைவுத்தூபியை எந்தத் தமிழர்களும் இதுவரையில் மனம்விரும்பி ஏறிச்சென்று பார்த்ததாகத் தெரியவில்லை.

தென்பகுதிச் சுற்றுலாப் பயணிகள்தான் அதைச் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். அந்த தூபியைச் சுற்றி வன்னியின் யுத்தக் கதைகள் எழுதப்பட்டுள்ளன. ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.

வீரப்படைகளின் சாகசங்களை கொண்டாடும் ஆக்கிரமிப்பின் குறியீட்டை இன்று ஆனையிறவு தாங்கி வைத்திருக்கிறது. ஆனையிறவில் தென்பகுதி சுற்றுலாப் பிரயாணிகள் யாழ் மக்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும். அவர்களை எப்படி மதிக்க வேண்டும் என்று வழிகாட்டி வகுப்புக்கள் எடுப்பதாக இராணுவம் சொல்கிறது.

நாவற்குழிச் சிங்களக்குடியேற்றம் நடைபெற்ற பின்னரே இந்தத் தகவலை இராணுவம் தெரிவித்திருந்தது.

ஆனையிறவை காலம் காலமாக அந்நியப் படைகள் ஆண்டு வந்தன. 1760ம் ஆண்டு போர்த்துக்கேயர் அமைத்த படைத்தளம் முதல் 1952ம் ஆண்டு இலங்கைப் படை அமைத்த படைத்தளம் என்று ஆக்கிரமிக்கப்பட்ட நிலமாக இருந்த ஆனையிறவு பின்னர் 2000ம் ஆண்டு தமிழர்களிடம் வீழ்ந்தது.

1991ல் ‘ஆகாயக் கடவெளிச் சமர்’ என்ற பெயரில் புலிகள் ஆனையிறவைக் கைப்பற்ற கடும் சமரில் ஈடுபட்ட பொழுதும் அது தோல்வியில் முடிவடைந்தது.

அந்த யுத்தம் ஒரு மாதம் வரை நடந்தது. பின்னர் ஏப்ரல் 22ம் நாள் 2000ஆம் ஆண்டு நடத்திய ஓயாத அலைகள் சமரில் ஆனையிறவு போராளிகளின் வசமானது. அதுநாள் வரை இதற்காக சுமார் 3000 போராளிகள் களப்பலியானார்கள். ஆனையிறவு ஒரு இரத்தச் சமவெளியாயிருக்கிறது.

2009 ஜனவரி 10ல் இலங்கை இராணுவம் மீண்டும் ஆனையிறவை கைப்பற்றியது. பரந்தனின் வீழ்ச்சியைத் தொடர்ந்து முகமாலை, நாகர்கோவில், பளை, இயக்கச்சி, ஆனையிறவு போன்ற பகுதிகளை விட்டு விடுதலைப் புலிகள் பின்வாங்கியதைத் தொடர்ந்து ஆனையிறவில் மீண்டும் இராணுவம் நுழைந்தது.

ஆனையிறவு முன்னரங்க களத்தில் வெடிகுண்டு தாங்கிய போராளி ஒருவர் இராணுவத்தின் நிலைகளை நோக்கி நகர்ந்த பொழுது வீரமரணம் அடைந்தார்.

அவரின் நினைவாகப் போராளிகள் ஆனையிறவை மீட்ட பொழுது அந்தப் போர்த்தாங்கியை நினைவுச் சின்னமாக்கினார்கள். ஆனையிறவுக்காக இரத்தம் சிந்திய எல்லாப் போராளிகளையும் அது கண்ணுக்கு முன்னால் கொண்டு வந்திருக்கிறது. போராளிகள் எத்தகைய கஷ்டங்களை அனுபவித்து நகர்ந்தார்கள் என்ற தீரங்களையும் அது சொல்கிறது.

இன்றோ அதில் மோதி பலியான இராணுவத்தினரின் கதை எழுதப்பட்டுள்ளது. அந்தக் கதை இப்படித்தான் இருக்கிறது.


“சிறிலங்கா சிங்க றெஜிமன்டில் - கோப்ரல் காமினி குலரத்ன வை ஜி [பரம வீர விபூஷன] இல்லாவிட்டால் ஹசல வீரயானன் என்ற உன்னதமானவரால் அழிக்கப்பட்ட தீவிரவாதிகளின் புல்டோஸராகும். தாய் நாட்டின் பேரில் உயிர்த் தியாகத்திற்காக பல உன்னத மனிதர்கள் உதயமானார்கள் இம்மண்ணில். அந்த மாவீரர்களைப் பாதுகாக்கவும் தாய் நாட்டின் விடுதலைக்காகவும் தன்னுயிரையே தியாகம் செய்த இம்மண் பெற்றெடுத்த ஒரே ஒரு தவப்புதல்வன் நீயே… மிலேச்சப் பயங்கரவாதிகளினால் 1991 ஜுலை 13ம் திகதி இரவு ஆயிரக்கணக்கான வெடிபொருட்களைப் பொருத்தி இம்முகாமுக்கு அனுப்பப்பட்ட புல்டோஸர்…”

காலங் காலமாக வரலாறுகள் இப்படித்தானே எழுதப்பட்டு வந்துள்ளன.

ஆனால் இன விடுதலைக்காகவும் ஆக்கிரமிப்பு முகாம்களை அழிப்பதற்காகவும் இராணுவ முகாமுக்குள் நுழைந்த போராளியின் முகம் அழிக்க முடியாதபடி இந்தப் போர்த்தாங்கியில் படிந்திருக்கிறது.

அந்த போர்த்தாங்கியினைச் சுற்றி இராணுவத்தினரின் இராணுவ உணவகங்கள் நிறைந்து காணப்படுகின்றன. போர்த்தாங்கியை பார்வையிட்டு அதன் மீது எழுதப்பட்ட குறிப்புக்களை படித்து உண்டு ஆறிச் செல்வதற்கான பல வசதிகள் காணப்படுகின்றன. சுற்றுலாத்தளம்போல அழிவு அழகுபடுத்தப்பட்டிருக்கிறது.


இதுதான் ஆனையிறவில் காணப்படுகின்ற துயர்மிக்க சின்னங்கள்.

இவையெல்லாவற்றுக்கும் அப்பால் ஆனையிறவில் உள்ள குறிஞ்சித்தீவு உப்பு வயல்களை நம்பி வாழ்ந்த குடும்பங்களின் கதைகள் எங்கும் எழுதப்பட்டிருக்கவில்லை.

அந்தப் பகுதியில் இறால்களை மீன்களை பிடிப்பதை நம்பி வாழ்ந்த மக்களின் கதைகள் எங்கும் எழுதப்பட்டிருக்கவில்லை.

முப்பதாண்டுகளாய் தேடித் தேடி அழிக்கப்பட்ட அவர்களின் வாழ்க்கை சிதைந்த கதைகள் பற்றி எங்கும் எழுதப்பட்டிருக்கவில்லை.

உப்பளத் தொழிற்சாலை கட்டிடம் இப்பொழுது இராணுவத்தின் முகாமாகியிருக்கிறது.

உயர உயர முகாம்களிட்டு படைகள் எல்லா இடங்களிலும் தங்கியிருக்கின்றனர். நாளை இறால் பிடிக்கலாம். நாளை உப்பளம் இயங்கும் என்று கண்கட்டும் கதைகளால் இழுத்தடிக்கப்படுகிறது.

அந்த கடற்சமவெளியை நம்பி வாழ்ந்த மக்கள் தொழிலற்று அந்தப் பகுதிக்குச் செல்ல முடியாமல் உப்புவயல்களும் அழிந்த தொழிற்சாலைகளும் கடலும் இராணுவ மயத்தால் மூடுண்டு கிடக்கிறது.

ஆக, ஆக்கிரமிப்பின் வலிமைமிக்க குறியீடாக ஆனையிறவு இன்று தலைநிமிர்ந்து நிற்கின்றது. அதற்குள் அமிழ்ந்து மடிந்துபோன ஆயிரமாயிரம் தமிழ்மக்களின் கதைகள் மண்ணோடு மண்ணாக புதையுண்டு மௌனமாய்க் கிடக்கின்றன.

ஒளிப்படங்கள்: 'இருக்கிறம்'

இக்கட்டுரை 'இருக்கிறம்' 02-05-2011 இதழில் வெளிவந்தது.

கருத்துகள் இல்லை: