புதன், 11 மே, 2011

போர்க்குற்றச்சாட்டு விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும் : ஐ.நா பாதுகாப்பு சபை வலியுறுத்து

2009 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற போரின் போது மேற்கொள்ளப்பட்டட போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை நேற்று கூடிய போது அதில் போரின் போது பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடப்பட்டது.

ஐக்கிய நாடுகள் செயலாளரின் நிபுணர் குழு, இலங்கையில் இறுதிப்போரின் போது 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளதாக இதன்போது உரையாற்றிய ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான உதவிசெயலாளர் வெலரி எமோஸ் ( Valerie Amos) குறிப்பிட்டார்.

இந்தப்போரின் போது இரண்டு தரப்பினரும் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என்றும் நிபுணர் குழு கண்டறிந்துள்ளது.

எனவே இந்தக்குற்றச்சாட்டுக்கள் குறித்து உரிய விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று வெலரி எமொஸ் கோரிக்கை விடுத்தார்.

அமர்வின்போது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் சார்பில் பங்கேற்ற, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரத்தின் உதவி செயலாளர் இவான் சிமோனோவிக் (Ivan Simonovic) அரசியல், கலாசாரம், பொருளாதாரம் மற்றும் சமூக பிரச்சினைகளே வன்முறைகளுக்கான பிரதான காரணங்கள் என்று குறிப்பிட்டார்.

வன்முறைகள் இடம்பெற்ற இலங்கை, சிரியா மற்றும் லிபியா ஆகிய நாடுகளில் ஐக்கிய நாடுகள் சபை சமாதான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று சிமோனோவிக் தெரிவித்தார்.

இந்தநிலையில் போரில் ஈடுபட்டுள்ளோர் தமது இராணுவ நோக்கங்கள் தொடர்பில் தெளிவான சிந்தனையை கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பான் கீ மூனின் நிபுணர் குழு, இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது. எனவே நிபுணர் குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம், ஏற்றுக் கொள்ளவேண்டும்.

அதன் அடிப்படையில் சர்வதேச விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடு:த்தார்.

இதேவேளை அமர்வில் பங்கேற்ற ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தரப்பிரதிநிதி பாலித கோஹன, இலங்கையி;ல் 25 வருடங்களாக பயங்கரவாத அச்சுறுத்தல் இருந்ததாக குறிப்பிட்டார்.

இலங்கை அரசாங்கம் போரின் போது, பொதுமக்கள் மற்றும் பயங்கரவாதிகள் என்ற பிரிவினரை அடையாளம் காண்பதில் தீவிரம் காட்டியதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தநிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் தோல்வியடையும் கட்டத்திலேயே போர்க்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதாக பாலித கோஹன தெரிவித்தார்.

http://www.tamilwin.com

கருத்துகள் இல்லை: