சனி, 7 மே, 2011

ஒசாமாவை பிடிக்க நாய்

அமெரிக்க கடற்படையின் "சீல்' அதிரடிப்படையினர், ஒசாமாவிற்கு எதிராக தாக்குதல் நடத்தச் சென்ற போது, ராணுவத்தில் சிறப்பு பயிற்சி பெற்ற மோப்ப நாயையும் அழைத்துச் சென்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகேயுள்ள அபோதாபாத்தில், ராணுவ பயிற்சிக் கல்லூரியில் இருந்து சில நூறு அடிகள் தூரத்தில் இருந்த பங்களாவில் பதுங்கியிருந்த சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லாடனை, அமெரிக்கக் கடற்படையின் "சீல்' அதிரடிப்படையினர் கடந்த ஞாயிறன்று இரவு சுட்டுக் கொன்றனர். ஒசாமா பின்லாடனை கொல்ல, "சீல்' அதிரடிப்படையினர் 79 பேர், ஹெலிகாப்டரில் சென்ற போது, அவர்களுடன் ராணுவத்தில் சிறப்பு பயிற்சி பெற்ற மோப்ப நாயையும் அழைத்துச் சென்றனர். ஒசாமா தங்கியிருந்த பங்களாவின் மேல் பகுதியில், ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் "சீல்' அதிரடிப்படையினர் இறங்கிய போது, அவர்களுடன் கழுத்தில் தோல்பட்டை கட்டப்பட்ட அந்த நாயும் இறக்கப்பட்டது. இருந்தாலும், ஒசாமாவிற்கு எதிரான 40 நிமிட அதிரடி தாக்குதலின் போது, நாய் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்த தகவல் இல்லை.

அதேநேரத்தில், அந்தப் பங்களாவில் வெடிமருந்துகள், ஆயுதங்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய மற்ற பொருட்கள் எங்கிருக்கின்றன என்பதை கண்டறிய இந்த நாய் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ஒரு வேளை ஒசாமா தப்பிச் செல்ல முற்பட்டிருந்தால், அவரை பிடிக்கவும், விரட்டிச் செல்லவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். மோப்ப நாயின் பெயர் பற்றிய விவரம் தரவும் இல்லை. அதே போல, அதிரடிப்படையினர் பெயரும் ரகசியமாக உள்ளது. ஒசாமாவிற்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையின் போது, நாய்க்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. அதற்கேற்ப பாதுகாப்பு கவசத்துடன் அந்த நாய் முன்னால் ஓடியது, அதிரடி நடவடிக்கை முடிந்தவுடன் படையினருடன் திரும்பி விட்டது. அனேகமாக இந்த நாய், ஜெர்மன் ஷெப்பர்டு அல்லது பெல்ஜியன் மாலினோய்ஸ் வகையைச் சார்ந்ததாக இருக்கலாம் என, "நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை கூறியுள்ளது.

இதுதொடர்பாக பத்திரிகையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: ஹெலிகாப்டரில் இருந்து "சீல்' படையினருடன் நாய் கீழிறக்கப்பட்ட போது, அதன் உடலில் கவசம் அணிவிக்கப்பட்டிருந்தது. வெடிகுண்டுகளை கண்டு பிடிப்பதில் இந்த வகை நாய் மிகத் திறமையானவை. 3 கி.மீ., தூரத்தில் எதிரிகள் இருந்தாலும், அதை தன் மோப்ப சக்தியால் உணர்ந்து விடும். மேலும், ஜெர்மன் ஷெப்பர்டு மற்றும் பெல்ஜியன் மாலினோய்ஸ் வகை நாய்கள் எல்லாம், மனிதர்களை விட இரண்டு மடங்கு வேகமாக ஓடக்கூடியவை. ஒரு வேளை ஒசாமா தப்பி ஓட முயற்சித்திருந்தால், அதை இந்த நாய்கள் தடுத்திருக்கும். பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில், பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கப் படையினர் எடுத்து வரும் நடவடிக்கையில் இதுபோன்ற 500க்கும் மேற்பட்ட நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அமெரிக்க ராணுவத்தில் பயிற்சி பெறும் இந்த நாய்கள் கடித்தால், அது ஒரே நேரத்தில் பல கிலோ சதையை குதறிவிடும், மேலும், மனிதர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகளைப் போலவே, இந்த நாய்களுக்கும் ராணுவத்தில் கடும் பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்த நாய்களை கையாள்பவர், அவை எந்த பொருளை முகர்ந்து பார்க்கின்றன என்பதை ஆயிரம் அடி தூரத்தில் இருந்தே கண்காணிக்க முடியும். மேலும், நாய் அணிந்திருக்கும் உடையில் இருக்கும் ஸ்பீக்கர் மூலம், அதற்கு உத்தரவு பிறப்பிக்கவும் முடியும். வெடிகுண்டுகளை கண்டறியவும், போர்க்களத்தில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கு உதவவும், அமெரிக்க ராணுவத்தில் தற்போது இதுபோன்ற 2,800 நாய்கள் உள்ளன. இவ்வாறு பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.dinamalar.com/

கருத்துகள் இல்லை: