செவ்வாய், 17 மே, 2011

பணிப் பெண் மீதான பாலியல் வன்முறை: மருத்துவ பரிசோதனைகளுக்கு ஐ.எம்.எப்., தலைவர் சம்மதம்: பிரான்சில் பரபரப்பு


சர்வதேச நிதியமைப்பின் (ஐ.எம்.எப்.,) தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ் கான் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள், பிரான்சில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் கிளப்பியுள்ளன. இந்நிலையில், பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்கு அவர் சம்மதித்துள்ளார்.

நியூயார்க்கின், டைம் சதுக்கத்தின் அருகில் உள்ள "சோபிடெல்' என்ற ஓட்டலில் தங்கியிருந்த ஐ.எம்.எப்., தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ் கான், ஓட்டல் பணிப்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டார்.இத்தகவல், அவரது சொந்த நாடான பிரான்சில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. 2012ல் அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப் போவது குறித்து, விரைவில் அறிக்கை வெளியிடப் போவதாக, அவர் சமீபத்தில் தான் தெரிவித்திருந்தார்.பிரான்ஸ் சோஷலிஸ்ட் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக அவர் போட்டியிடும் பட்சத்தில், அடுத்த அதிபராகும் வாய்ப்பு அவருக்குத் தான் இருப்பதாக, பல்வேறு கருத்துக் கணிப்புகள் வெளிவந்து கொண்டிருந்தன.

வலுக்கும் சந்தேகம்: இந்நிலையில், அவர் பாலியல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருப்பது, பிரான்சில் அவரது ஆதரவாளர்களிடம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அவரது அரசியல் எதிரிகள் குறிப்பாக, அதிபர் நிக்கோலஸ் சர்கோசியின் ஆட்கள் இதைச் செய்திருப்பார்களோ என்ற சந்தேகம் வலுத்திருக்கிறது. பெண்கள் விஷயத்தில் கான் பலவீனமானவர் என்பது ஏற்கனவே பிரான்ஸ் பத்திரிகைகளுக்குத் தெரியும் என்றாலும், இவ்வளவு மோசமான நிலையில் அவர் குற்றம்சாட்டப்படுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்றே நிபுணர்கள் கூறுகின்றனர். அவர், தனது சொந்த காரியமாகவே அமெரிக்கா வந்திருப்பதும், ஐ.எம்.எப்., தலைவர் என்ற முறையில் வரவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இதனால் தான், நியூயார்க் போலீசார் அவரை கைது செய்தது எளிதானது.

மற்றொரு குற்றச்சாட்டு: இதற்கிடையில், பிரெஞ்சு எழுத்தாளர் டிரிஸ்டேன் பேனன் (31) என்ற பெண், 2002ல் கான் தன்னை கற்பழிக்க முயன்றதாகக் கூறியுள்ளார். இதுகுறித்து, விரைவில் கான் மீது வழக்கு தொடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்."ஒரு அரசியல்வாதியுடன் வாழ்நாள் முழுவதும் நான் பகையைச் சம்பாதிக்க விரும்பாததால் தான், இவ்வளவு காலம் அவரைப் பற்றி எவ்வித புகாரும் அளிக்கவில்லை' என்று பேனன் கூறினார்.

ஐ.எம்.எப்.,க்கு சிக்கல்: டொமினிக் ஸ்ட்ராஸ் கான், பொருளாதார நிபுணர்; வக்கீல்; இரண்டாண்டு காலம் பிரான்சின் நிதி மற்றும் பொருளாதாரத் துறை அமைச்சராக பணிபுரிந்தவர்.ஐ.எம்.எப்., தலைவர் என்ற முறையில், தற்போது பொருளாதார சிக்கலில் தத்தளிக்கும் ஐரோப்பிய நாடுகளை, அதிலிருந்து மீட்பதற்கான சாத்தியக் கூறுகளை முன்வைத்தவர்.இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்தவரும், ஐ.எம்.எப்.,பின் முதல் துணை நிர்வாக இயக்குனருமான ஜான் லிப்ஸ்கி, தற்காலிகமாக ஐ.எம்.எப்.,பின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சம்மதம்: இதற்கிடையில், கான் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். கானின் மனைவியும் இத்தகவலை தான் நம்ப மறுப்பதாகக் கூறியுள்ளார்.தற்போது நியூயார்க்கில் வைக்கப்பட்டிருக்கும் கான், டி.என்.ஏ., விரல் நகங்கள் மற்றும் சம்பவத்தின் போது அணிந்திருந்த ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ அறிவியல் சோதனைகளுக்கு சம்மதம் அளித்துள்ளார்.

கேள்விக்குறி: கான் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியாகும் பட்சத்தில், ஐ.எம்.எப்.,பில் அவரது பணி மற்றும் பிரான்சில் அவரது அரசியல் எதிர்காலம் இரண்டும் கேள்விக்குறியாகிவிடும் என்று பல்வேறு அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

அதிர்ச்சியில் பிரான்ஸ் மக்கள்

* பிரான்ஸ் அரசியலில், தங்கள் அரசியல் எதிரிகளை வீழ்த்த, மோசமான நடவடிக்கைகளை அரசியல்வாதிகள் மேற்கொள்வது மிகவும் சகஜம். ஆனால், தற்போது கான் விஷயத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது, நாலாந்தர நடவடிக்கையாக அந்நாட்டு மக்களால் கருதப்படுகிறது. * இச்சம்பவத்தை மக்களில் பலர் தங்கள் நாட்டுக்கு அவமானமாகவும், பலர் அரசியல் சதி எனவும் கருதுகின்றனர். * அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க்கில், 2009ல் நடந்த ஜி20 மாநாட்டில் கலந்து கொண்ட அதிபர் சர்கோசியிடம், "எனக்கு எதிரான சகல ஆதாரங்களையும் உங்கள் ஆட்கள் திரட்டிக் கொண்டிருப்பதாகக் கேள்விப்படுகிறேன். உடனடியாக அதை நிறுத்தி விடுங்கள். இல்லையெனில், நான் கோர்ட்டுக்கு போக வேண்டி வரும்' என்று கான் எச்சரிக்கை விடுத்ததாக, "நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை கூறியுள்ளது.


http://www.dinamalar.com

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

சோபசக்தி என்ற பிரான்சில் வாழும் இலங்கை தமிழர் ஒருவரும்  இப்படிப்பட்டவரே. ஆகையால் பிரான்சு நாட்டுக்காரர்கள் இப்படி செய்வது வியப்புக்குரியதல்ல