செவ்வாய், 24 மே, 2011

சற்சூத்திர கோட்பாட்டாளர்களால் இருட்டடிப்புச் செய்யப்பட்ட கந்த முருகேசனார்


மனித நேயம் கொண்ட மானிடனாக வாழ்ந்த ஒரு உண்மை மனிதரான கந்த முருகேசனார் பற்றி எழுதுமாறு என்னுடைய நண்பர்கள் நீண்டகலாமாக என்னை வற்புறுத்தி வந்தார்கள்.
மானிடம் மரணித்த சமூகச் சூழலில் அடங்கிக் கிடப்பதும் அழுவதும் தொழுவதும் விதி என்று செயலற்ற முடங்கிருந்;த எங்களை “மனிசங்கடா நீங்கள் மனிசங்கடா என்னைப் போல அவனைப்போல உரியுள்ள மனிசங்கடா!” என்று உணரவைத்து எங்களுக்கு தன்னம்பிக்கையூட்டி, சமூக அநீதிகளை எதிர்த்துப்போராடும் வல்லமையை எங்களுக்குத் தந்த அந்த உன்னதமான மனிதரைப்பற்றி எழுதுவதென்பது அவ்வளவு எழிதான விடயமல்ல.
உண்மையான தமிழ் அடையாளத்தையும் தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சார விழுமியங்களையும் தமிழர் மெய்யியலையும் தேடிய அந்த மனிதர் தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் கந்த முருகேசனாராகும்.
தென் புலோலியை பிறப்பிடமாகக் கொண்ட அவர் ஆறுமுகநாவலரின் சற்சூத்திரக் கோட்பாட்டை நிராகரித்து ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பதை வலியுறுத்தினார். ‘அன்பே சிவம்’ என்பது தான் அவரது மெஞ்ஞானமாக இருந்தது. ‘மனிதர்கள் எல்லோரும் ஒருவர்மேல் ஒருவர் அன்பு செலுத்தவேண்டும்’ என்றும் ‘ஒவ்வொரு மனிதனும்; அடுத்தவரை நேசிப்பதிலும் அடுத்தவர்களுக்குரிய மரியாதையை கொடுப்பதிலும் தான் மனிதம் என்ற சொல்லுக்குரிய அர்த்தம் வெளிப்படுகிறது’என்றும் கூறிவந்தார்.
மனிதனை மனிதன் பிறப்பைக் கொண்டு இழிவுபடுத்தும் இந்துத்துவ வர்ணக் கோட்பாட்டை கடுமையாக விமர்சித்த அவர், இது தமிழர்களதுஅடையாளமோ பண்பாடோ இல்லை என்றும் அடித்துச் சொன்னார்.
‘சாதி இரண்டொழிய வேறில்லை, சாற்றுங்கால்நீதி வழுவா நெறி முறையின்-மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ளபடி….’ என்பதே உண்மையான தமிழர் மரபு என்றும் வலியுறுத்தி வந்தார்.
இன்று தமிழ் தாத்தா கந்த முருகேசனார் என்று கேட்டால், அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த ஒரு சிலரையும் அவருடைய உறவினர்களையும் தவிர மற்றவர்கள் தெரியாது என்றே செல்வர்கள். யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமராட்சி மந்திகை பகுதியில் பருத்தித்தித்துறை யாழ்ப்பாணம் நெடுஞ்சாலை அருகே நிறுவப்பட்டள்ள அவரது சிலையும்,தென் புலோலியில் உபய கதிர்காமத்துக்கு அண்மையில் அவர் வாழ்ந்த வீடிருந்த பகுதிக்குச் செல்லும் கந்த முருகேசனார் வீதி என்ற பெயரும் தான் இன்று அவர் ஞாபகார்த்தமாக இருக்கின்றன.
ஏராளமான செய்யுள்களையும், இலக்கண நூல்களையும், தமிழர்; மெய்யியல் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளையும் அவர் எழுதிய போதிலும் அவை எதுவுமே வெளியே வரவில்லை. அவரது பெயர் யாழ்ப்பாணப் புலவர் மரபிலிருந்து திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்யப்பட்டதைப் போல அவரது எழுத்துக்களும் யாழ்ப்பாண அதிகார வர்க்கத்தின் கருத்தியல் வறுமைக்கு இரையாகிவிட்டன.
தமிழ் மக்களின் அறிவுக் கண்ணை திறப்பதற்காக அவர் நடத்தி வந்த திண்ணைப் பள்ளிக் கூடத்தில் மூன்று மாதங்கள் கல்வி கற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்து.
அந்த மூன்று மாதங்களில் அவர் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் இப் போது 45 வருடங்கள் கழிந்துவிட்ட நிலையிலும் அதே வீச்சோடு என்னுள் ஆளமாகப் பதிந்திருக்கிறது.
அந்த அற்புதமான மனிதரை நான் சந்தித்த முதல் சந்திப்பே ஒரு சுவாரசியமான சந்திப்பாகும்.
அதாவது நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட 1962 ம் ஆண்டு மார்கழி மாதத்தின் முதலாவது ஞாயிற்றுக்கிழமை காலையில் எனது அம்மாவும் அப்பாவும் என்னை அந்த திண்ணைப் பள்ளிக் கூடத்தில் சேர்த்து விடுவதற்காக அழைத்துச் சென்றனர்.

புது உடுப்பு, புதுச் செருப்பு, புதுச் சிலேட்டு, புதுப் பென்சில், புதிய பாலபோதினி 3 ம் வகுப்பு தமிழ் புத்தகம், புதுப் புத்தகப் பை என்று எல்லாமே புதிதாக கிடைத்த சந்தோசத்தோடு நான் அப்பாவின் கையை பிடித்துக் கொண்டு உற்சாகமாக நடந்து சென்றேன்.
எங்கள் வீட்டிலிருந்து அந்தப் பள்ளிக்கூடம் ஒரு அரை மைல் தூரத்திலேயே இருந்தது.எழுவாக்கை எனப்படும் வயல் வெளியின் வடக்குப் பக்கத்தினுடாகவே இந்தப் பள்ளிக் கூடத்துக்கு செல்ல வேண்டும். (வல்லிபுரக் கோவிலுக்கு இந்த வயல் வெளியின் கிழக்கப் பக்கமாகச் செல்லவேண்டும்.) நாங்கள் சென்ற போது சூரிய மேலே வந்துவிட்டதால் அதிகாலையில் அந்த வயல் வெளிக்கு அப்பால் உள்ள ஆனை விழுந்தான் வெளியில் பார்த்த கொள்ளிவால் பேய்களின் பயம் இப்போது இருக்கவில்லை.
ஆனால் ‘அந்த புதுப் பள்ளிக் கூடத்தில் வாங்கில்லை அல்லது கதிரையில இருந்து படிக்க விடுவார்களோ? என்ற ஏக்கமும் கதிர்காமர் வாத்தியாரைப் போல யாராது வாத்தியார் என்னுடைய புது உடுப்பை வாழைத் தடலாலை அடிச்சி ஊத்தையாக்கிப் போடுவாரோ?’ என்ற பயமுமே அப்போது இருந்தது.
நாங்கள் அந்தப் பள்ளிக் கூடத்தை அண்மித்த போது… ‘அறங்செய்ய விரும்பு’ ‘ஆறுவது சினம்’ ‘இயல்வது கரவேல்’ ஈவது விளக்கேல்’ என்ற ஒளவையாருடைய ஆத்தி சூடியையும் ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’’ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்ற கொன்றை வேந்தனையும் அங்கு படிக்கின்ற பிள்ளைகள் உரத்த குரலில் கூட்டாகச் செல்வது காற்றில் மிதந்து வந்தது.
நாங்கள் அந்தப் பள்ளிக் கூடத்துக்காகச் சென்ற அந்த வீதியின் ஒரு திருப்பத்தில் மா மரங்கள் பால மரங்கள், தென்னை மரங்கள், பனை மரங்கள், கமுகு (பாக்கு) மரங்கள் வாழை மரங்கள் என்ற பல்வகை மரங்களும் செம்பரத்தை மணி வாழை ரோஜா மல்லிகை கனகாம்பரம் என்று நிறைய பூமரங்களும்; நிரம்பிய ஒரு சோலை இருந்தது. அந்தச் சோலையைத்தான் நான் படிக்கப் போகும் புதுப் பள்ளிக் கூடம் என்று எனது பெற்றொர் எனக்குக் காண்பித்தனர்.
‘பள்ளிக் கூடம் என்ற பெரிய கட்டிடங்கள் இருக்கும். கதிரை மேசைகள் இருக்கும்’என்று எண்ணிக்கொண்ட சென்ற எனக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது.
அந்தச் சோலையின் நடுவே ஒரு பெரிய மால் என்ற சொல்லுகின்ற ஒரு ஓலைக் கொட்டகையும் அதற்கு அருகே ஒரு சிறு குடிசையும் இருந்தன. ஆங்காங்கே உயரமாக வளாந்திருந்த மாமரம் பலா மரங்களுக்கு இடையே சிறு சிறு வட்டக் குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன. அந்தக் குடில்களின் தரையில் கடற்கரை மணல் போடப்பட்டிருந்தது.அந்த மணலில் இருந்து தான் பிள்ளைகள் பாடம்படித்துக் கொண்டிருந்தார்கள். பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அந்தக் காட்சியைப் பாத்தவுடன் என்னுடைய ஏமாற்றம் இன்னும் அதிகரித்தது.
‘சே! இந்தப்பள்ளிக் கூடத்திலையும் நிலத்தில் இருந்துதான் படிக்க வேண்டி இருக்கிறதே!’ என்று நான் சலித்தக்கொண்டேன். ஆனால் எல்லோருமே நிலத்தில் இருந்து படித்ததை பார்த்த போது நான் எற்கனவே படித்துக் கொண்டிருக்கும் மந்திகை பள்ளிக் கூடத்தை விட பறவாயில்லை என்ற திருப்தி ஏற்பட்டது.
இதேவேளை அந்தப் பள்ளிக் கூடம் இருந்த அந்த சோலைக் காணிக்குள் அங்காங்கே தடுப்பு வேலிகள் போடப்பட்ட பகுதிக்கள் நான்கு ஐந்து மான்களும் பல முயல்களும் மேயந்துகொண்டிருந்தன..
இன்னொரு புறத்திலே பல மயில்களும் ஏராளமான புறாக்களும் பஞ்சவர்ணக் கிளிகள் உட்பட பல வகையான கிளிகளும் இருந்தன. இந்த மான்களையும் மயில்களையும் பஞ்சவர்ணக் கிளிகளையும்; நான் அதுவரை பாலபோதினி பாடப்புத்தகத்தில் இருந்த படங்களில் தான் பார்த்திருக்கிறேன். அவற்றையெல்லாம் நேரில் பாhர்த்த போது எனக்கு ஒரே மகிழ்ச்சியாக இருந்தது.
ஆனால் அந்த மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. எனது பெற்றோர் அந்த மிருகங்களையும் பறவைகளையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என்னை அழைத்துக் கொண்டு அந்தச் சோலையின் நடுப்பகுதியில் இருந்த மாலை (பெரிய கொட்டகை) நோக்கிச் சென்றனர்.

அந்த மாலின் முன்பகுதியின் இரண்டு பக்கத்திலும் இரண்டு முளம் (ஏறக்கறைய ஒரு மீட்டர்) உயரத்தக்கு பெரிய விசாலமான மண்ணாலான திண்ணைகள் அமைக்கப்பட்டிருந்தன. வலது பக்க திண்ணையில் ஒரு பாய் விரிக்கப்பட்டு அதில் எராளமான ஏட்டுச் சுவடிகளும் பல புத்தகங்களும் வைக்கப்பட்டிருந்தன. இடது பக்கத் திண்ணையிலே மான் தோல் விரிக்கப்பட்டு அதன் மேல் தமிழ் தாத்தா என்று அழைகக்ப்பட்ட கந்த முருகேசனார் கம்பீரமாக அமர்ந்திருந்தார்.
நல்ல சிவந்த நிறம்.பஞ்சு போன்று வெள்ளையாக நரைத்த தலை மயிர். அதே நிறத்திலான நிண்டதாடி. இடுப்பில் மட்டும் நான்கு முள வேட்டி. நெற்றியல் தீருநீற்றுப் பூச்சு அகண்ட மர்பிலும் அடத்தியான சௌ;ளi முடி என்று அவரது தோற்றத்தையும் அவர் அமர்ந்திருந்த விதத்தையும் நான் முதல் முதலாக பார்த்த போது, ஒரு சில விநாடிகள் எனக்கு பயத்தில் நெஞ்சு அடைத்து, தொண்டைத் தண்ணிர் வற்றி, பேச்சோ அழுகையோ வராத ஒருவிதமான திகில் நிலைக்கு தள்ளப்பட்டேன்.
அம்மா எனக்கு அடிக்கடி கூறும் புராணக் கதைகளில் வரும் முனிவர்களுடைய ஞாபகம் தான் வந்தது. ‘புளிய மரத்தில் முனி இருக்கும், முனியடிக்கும் ஆட்களை கொண்டு பேயிடும்’ என்கின்ற கதைகளெல்லாம் எனக்கு அந்தக் கணத்தில் நினைவுக்கு வந்தது.
‘நான் குழப்படி செய்யிறதால அம்மாவும் அப்பாவும் பள்ளிக் கூடத்தக்கு என்று பொய் செல்லி முனியிட்டை பிடிச்சுக் கொடுக்கிறதுக்கு கூட்டிவந்திருக்கினம்’ என்று நினைத்து அம்மாவை கட்டிப் பிடித்துக்கொண்டு கண்ணீர்விட்டுக் கதற ஆரம்பித்தேன்.
‘ஐயோ நான் இனி மேல் குழப்படி செய்ய மாட்டன். என்னை முனியிட்டை பிடிச்சுக் கொடுக்காதையுங்கோ. ஐயா..ஐயா (அப்பாவை நான் ஐயா என்று தான் கூப்பிடுவது வழக்கம்) அம்மாவிட்டை சொல்லணை. என்னை பிடிச்சசுக் குடுக்க வேண்டாம் எண்டு. நான் இனிமேல் குழப்படியே செய்யமாட்டன்’ என்று நான் கதறின கதறலால் அங்கே பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர்களும் மாணவர்களும் பாடத்தை நிறுத்திவிட்டு எங்களையே பார்த்தார்கள்.
“அப்பன் அழாதையடா அவர் முனி இல்லை. அவர் பெரிய வாத்தியார் .அவர் மனிசன் தான் பயப்பிடாதை. ஐயாவும் அம்மாவும் உன்Nhடை கூட இருக்கிறம்’ என்று அம்மா என்னை சமாதானப் படுத்தி எனது பயத்தை தெளிய வைக்க முயற்சித்தா.
கந்த முருகேசனாருக்கு நான் ஏன் அப்படி கத்தி அழுகிறேன் என்பது புரிவில்லை. அவர் எனது அப்பாவிடமும் அம்மாவிடமும் அதற்கான காரணத்தை கேட்டுத் தெரிந்து கொண்டதும் “பேய் பிசாசு முனி என்று பிள்ளையை நல்லா பயப்பிடுத்திப் போட்டியள். இப்படிச் சின்ன வயதிலேயெ அதுகளை பயப்பபடுத்தினால் எப்படி அதுகளுக்கு தன்னம்பிக்கை வரும்?” என்று அவர் அவர்களை கடிந்து கொண்டார்.
அத்தோடு என்னை தூக்கி தான் அமர்ந்திருந்த திண்னையில் இருத்தும்படி அம்மாவுச் சொன்னார்.
‘நான் மாட்டன்.நான் மாட்டன் என்னை விடுங்கோ’ என்று நான் அம்மாவை இன்னும் இறுக்கி கட்டிப்பிடித்துக் கொண்டு கத்தி அடம்பிடிக்க அவர் தனது உதவியாளை அழைத்து எனது வயதுள்ள இரண்டு பொடியளை கூட்டி வந்து தனக்கு பக்கத்தில் இருத்தும்படி கட்டளையிட்டார்.
அவர்கள் வந்து இருந்ததும் ‘இப்ப பாத்தியே உன்னை போல பொடியள் அவருக்குப் பக்கத்தில இருக்கிறாங்கள்;. நீயும் பயப்பிடாமல் ஏறி இரு” என்ற அம்மா தைரியம் சொல்ல, நான் அவவை கட்டிப்பிடித்த பிடியை விடாமல் கழுத்தை திருப்பி அந்தப் பொடியளைப் பாத்தேன் . கொஞ்சம்; பயம் குறைந்தது.
அதை தெரிந்து கொண்ட அம்மா மெதுவாக என்னைத் தூக்கி அந்தத்திண்ணையில் இருத்தினா. அழுகை நின்றாலும் விம்மல் நிக்காத நிலையில், நான் அவவின் கையை பிடித்தக் கொண்டு தலையை குனிந்தவாறு அமர்ந்து கொண்டிருந்தேன். கந்த முருகேசனாரை நிமிர்ந்து பார்க்க எனக்கு தைரியம் வரவில்லை.

அவர் மொதுவாக எனது கையை பிடித்து இழுத்து என்னத் தூக்கி தனது மடியில் இருத்திக் கொண்டார். எனக்கு மறுபடியும் பயம் அதிகமாகிவிட்டது. விம்மி விம்மி அழுமை பீறிட்டு வரும் போல் இருந்து.
அவர் என்னை தடவி “பயப்பிடாத உன்ரை அப்பாவும் அம்மாவும் பக்;கத்தில் தான நிற்கினம். எதுக்கு பயப்பிட வேணும்” என்று சொல்லி ஆறுதல் படுத்தியதுடன், தான் சாப்பிடுவதற்கு வைத்திருந்த முந்திரிகைப் பழத்தை எடுத்து எனக்கு ஊட்டி விட்டார்.
ஏறக்குறைய 10 நிமிடங்களுக்கு மேல் நடந்த இந்தச் சம்பவங்களை அங்கிருந்த ஆசிரியர்களும் மாணவர்களும் பாடம் படிப்பிப்பதையும் படிப்பதையும் விட்டு விட்டு பார்த்துக்கொண்டிருந்தனர்.
கந்த முருகேசனார் அவர்களை ஒரு அதட்டுஅதட்டி விட்டு என்னப் பார்த்து “சின்னப் பொடியனின் (எனது தந்தையின்; பெயர் அது) சின்னப் பொடியா! நாங்கள் பாடம் படிக்கலாமோ?” என்ற கேட்டார்.
அதற்கு நான் விம்மிக்கொண்டே சம்மதம் தெரிவித்து தலையாட்ட “உன்னுடைய பேரென்ன?” என்று அன்போடு திருப்பிக்கேட்டார்.
நான் “சிவ.. சிவன.. சிவநேச…மூர்த்தி என்று விம்மில் தடுக்க தடங்கித் தடங்கி பதில் சொன்னேன்.
“சிவநேசமூர்த்தி- சிவனுக்கு நேசமான மூர்த்தி அது யார் தெரியுமோ?” என்று அவர் திருப்பிக்கேட்க, நான் தெரியாதென தலையாட்டினேன்.
“தமிழ் கடவுளான முருகன். அவர்தான் சிவனுக்கு நேசமான மூர்த்தி என்று விளக்கமளித்த அவர் “சரி நான் இன்னொரு கேள்வி கேட்கப் போகிறேன் அதுக்கு பதில் சொல்லு பார்க்கலாம்” என்றார்.
அது என்ன கேள்வி என்று நான் அவரை நிமிர்ந்து பார்க்க, “உன்னுடைய பெயர் சிவநேசமூர்த்தி என்பது உனக்குத் தெரியும் ஆனால் நீ யார் என்பது உனக்குத் தெரியுமோ? நீ யார்? இதுக்கு பதில் சொல்லு பார்ப்போம்” என்றார்.
“அதற்கு விடை தெரியால் நான் யோசனை செய்ய “இன்றைக்கு முதல் நாள் இவ்வளவும் போதும் நாளைக்கு உன்னுடைய விட்டிலை இருக்கிற எல்லாரிடமும் கேட்டு அதற்கான விடையை தெரிந்து கொண்டு வா” என்று சொல்லி என்னை மடியில் இருந்து இறக்கிவிட்டார்.
அத்துடன் எனது பெற்றோருக்கு மீண்டும் “பிள்ளையளை ஒருநாளும் சாமி பூதம் பேய் பிசாசு முனி என்று சொல்லி பயப்பிடுத்தாதையுங்கோ” என்று அறிவுரை கூறி அனுப்பிவைத்தார்.
நாங்கள் வெளியெ வந்தததும், கண்ட கண்ட புராணக் கதைகளை சொல்லி அம்மாதான் என்னை பயப்படுத்துவதாக அப்பா வழிக்கு வழி அவவை ஏசிக்கொண்டே வந்தார் .என்னுடைய சிந்தனை எல்லாம் ‘நான் யார்?’ என்பதை பற்றியே இருந்தது
நீ யார்? என்ற இந்தக் கேள்வி ஒரு மிகச் சிறிய கேள்வியாக இருந்த போதிலும் அதற்குரிய விடையை கண்டுபிடிப்பதென்பது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை.

என்னுடைய அம்மா ,அப்பா, அப்பு (தாத்தா) ஆச்சி (பாட்டி) உற்றார் உறவினர் யாருக்குமே இந்தக் கேள்விக்கான விடை தெரியவில்லை. அன்று இரவு வரை எனக்குத் தெரிந்தவர்கள் நண்பர்கள் என்று எல்லோரிடமும் இந்தக் கேள்வியை கேட்டுப் பார்த்துவிட்டேன். யாருக்கும் அதற்கு சரியான பதில் சொல்லத் தெரியவில்லை.

‘நீ யார்? என்றால், அதற்குரிய பதில் ‘நீ சிவநேசன் சின்னப்பொடியனின் மகன்’ என்றே எல்லோரும் கூறினார்கள். எனக்கு என்னவோ அந்தப் பதில் சரியாக இருக்கும் என்று தோன்றவில்லை.

இரவு பாயில் படுத்துக் கொண்டு உறக்கம் வராமல் இதைப்பற்றியே நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன்.

‘ உன்னுடைய பெயர் சிவநேசமூர்த்தி என்பது உனக்குத் தெரியும் ஆனால் நீ யாரென்றது உனக்குத் தெரியுமோ?’ என்று கந்த முருகேசனார் கேட்ட அந்தக் கேள்வியை திரும்பத் திரும்ப எனக்கு நானே கேட்டுப்பார்த்தேன்.

‘நான் சின்னப்பொடியனினதும் இலட்சுமியினதும் ஒரே மகன். எனக்கு எட்டு வயது ஆகிறது.நான் ஒரு மாணவன்.’ என்பதற்கு அப்பால் வேறெதையும் என்னால் கண்பிடிக்க முடியவில்லை.

மறுநான் காலையில் வழக்கம் போல அம்மாவுடன் கந்த முருகேசனாருடைய பள்ளிக் கூடத்தக்கு புறப்பட்டேன். அன்று அப்பா தனது தொழிலுக்கு சென்று விட்டதால் அம்மா மட்டும் என்னோடு வந்தா.

நாங்கள் எழுவாக்கை வயல் வெளியைக் கடந்து தற்போது கந்த முருசேனார் வீதி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் அந்த வீதியால் சென்ற போது எங்களை கண்டவர்களும் கடந்து சென்றவர்களும் ஒருமாதிரியாக முறாய்த்துப் பார்த்துக் கொண்டு சென்றார்கள்.

நாங்கள் சென்ற அந்தப் பகுதி முழுக்க முழுக்க மேட்டுக் குடியினர் குடியிருக்கும் பகுதியாகும். பொதுவாக அந்தக்காலத்தில் (1955-65) நாங்கள் மேட்டுக் குடியினருடடைய குடியிருப்புக்களுடாக செல்லும் போது ஆண்கள் தோளில் துண்டோ சேட்டோ போடாமலும், பெண்கள் ஆடம்பரமாக உடையுடுத்தாமலும் செல்ல வேண்டும். மற்றப்படி சாதரணமாக உடை உடுத்திச் சென்றால் எங்களை யாரும் கணக்கில் எடுப்பதில்லை. அனால் அன்று எங்களை அவர்கள் பார்த்த பார்வையில் வித்தியாசம் தெரிந்தது. நான் புது உடுப்பும் புது செருப்பும் போட்டுக் கொண்டு போகின்றபடியினால் தான் அப்படிப் பார்க்கிறார்களோ? என்ற சந்தேகம் எனக்கு எற்பட்டது.

நாங்கள் பாடசாலையை நெருங்கிய போது வழக்கமாக காற்றில் மிதந்துவரும் பாடச் சத்தம் கேட்கவில்லை.அதற்குப் பதிலாக அந்தப் பாடசாலைச் சோலையிலிருந்த மாமரத்திலிருந்து இரண்டு குயில்கள் ஏட்டிக்குப் போட்டியாக கூவிக்கொண்டிருந்த சத்தம் மட்டுமே கேட்டது.

பாடசாலை வளவுக்குள் நாங்கள் நுழைந்து போது மாணவர்கள் யாருமின்றி அது வெறிச்சோடிப்போய் இருந்தது. ‘ஏன் என்ன நடந்தது பள்ளிக் கூடம் இல்லையா?’என்று நாங்கள் யோசித்தவாறு கந்த முருகேசனார் அமர்ந்தருக்கும் மாலை நோக்கிச் சென்றோம்.

தான் வழக்கமாக அமரும் இடத்திலிருந்து ஏட்டுச் சுவடி ஒன்றை படித்துக் கொண்டிருந்தவர். என்னைக் கட்டதும் ‘வா..வா..வா.. சின்னப்பொடியனின் சின்னப்பொடியா!’ என்று மகிழ்ச்சியோடு வரவேற்றார்.

“ஏன் நயினார் இன்டைக்கு பள்ளிக் கூடம் இல்லையோ? பொடியள் ஒண்டையும் காணேயில்லை?’ என்று அம்மா தயக்கத்துடன் கேட்க அவருக்கு அடக்க முடியாத கோபம் வந்து விட்டது..

“உங்களுக்கு எத்தினை தரம் சொல்லுறது நயினார் எண்டு கூப்பிட்டு கூழைப் கும்பிடு போடாதையுங்கோ எண்டு.” என்று கத்தினார். அந்தக்காலத்தில் நாங்கள் மேட்டக்குடி ஆண்களை; ‘நயினார்’ என்ற சொல்லியும், பெண்களை ‘நச்சியார் என்ற சொல்லியும் தான் அழைக்க வேண்டும்.
அவருடைய கத்தலில் அம்மா பயந்து போய் ஒடுங்கி நிற்க…
“ஏன் இண்டைக்கு பள்ளிக் கூடம் நடக்கேல்லை எண்டு உனக்குத் தெரியுமா?. உன்ரை மகனைத் நான் மடியில் தூக்கி இருத்திப் போட்டனாம். அவனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்திட்டனாம். ஓரு நளப்பொடியனை கந்த முருகேசன் எப்பிடி மடியில இருத்தி பாடம் சொல்லிக் கொடுக்கலாம் ? என்று எங்கடை ஆக்கள் என்னைப் பார்த்து கேள்வி கேக்கினம்;. அதனாலை தங்கடை பிள்ளையளை என்னட்டை படிக்க அனுப்ப மாட்டினமாம். போராட்டம் நடத்துகினமாம் போராட்டம்’ என்று பெரிந்து தள்ளினார்.
அப்போது தான் வழியில் நாங்கள் சந்தித்த கனவான்கள் கூட்டம் எங்களை முறைத்துப் பார்த்த பார்வைக்கு எனக்கு அர்த்தம் புரிந்தது.
அம்மாவை வீட்டுக்கு திரும்பிப் போய் விட்டு மத்தியானம் வந்து என்னை கூட்டிச்செல்லும்படி கூறிய கந்த முருகேசனார், என்னை தனக்குப் பக்கத்தில் கூப்பிட்டு இருத்தி ‘நீ பயப்பிடாதை நான் உனக்கு படம் சொல்லித் தாறன். உவங்கள் ஆர் வந்தாலும் வராட்டிலும் நான் உனக்கு படிப்பிக்கிறன்’என்றார்.
அந்த வயதில் எனக்கு அவர் சொன்ன அந்தச் செல்லின் அர்த்தமும் தாக்கமும் புரியவில்லை.ஆனால் வளர்ந்து பெரியவனாகி எனக்கு விபரம் தெரிந்தபோது அதை நினைத்து ,அந்த மாமனிதனுடைய துணிவையும் தமிழ் பற்றையும் நினைத்து வியப்படைந்திருக்கிறேன். அவரிடம் கல்விகற்க சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு பெருமைப்பட்டிருக்கிறென்.
‘சைவமும் தமிழும் தமிழினத்தின் இரண்டு கண்கள்’ என்றும், ‘மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்’ என்றும் அந்தக்காலத்தில் பேச்சிலும் எழுத்திலும் கூறிவந்த யாழ்ப்பாணக் குடாநாட்டு அதிகார வர்க்கம், ‘சாதியம் என்பது மேன்மைகொள் சைவ நீதியின் பிரிக்க முடியாத ஒரு அம்சம்’ என்று நம்பியது.
நிலமும் கல்வியும் பட்டங்களும் பதவிகளும் சமூகத்தின் மீதான ஆளுமையும் தங்களுக்கு மட்டுமே உரித்தானவை என்றும் அவையெல்லாம் இறைவன் கொடுத்தவரம் என்றும் இந்த அதிகார வர்க்கம் கதைவிட்டுக்கொண்டிருந்த போது, கந்த முருகேசனார் தன்னுடைய தமிழ் புலமையால் அதை மறுதலித்து மதம் கொண்ட யானை தன்னுடைய அழிவை தானே தேடிக்கொள்வதைப் போல மதம் பிடித்த தமிழனும் தன்னுடைய மதவெறியால் தன்னுடைய தலையில் தானே மண் அள்ளிப் போடுவான் என்று இன்றைக்கு 50 வருடங்களுக்கு முன்னர் துணிந்து சொல்லியிருந்தார்.
அன்று கந்த முருகேசனாருடைய பாடசாலையில் என்னைத் தனியே விட்டு;விட்டுச் செல்வதற்கு அம்மா தயங்கினா.நான் அழுது அடம்பிடிப்னோ என்ற பயத்தை விட சாதி வெறியர்கள் வந்து எனக்கு ஏதும் செய்துவிடுவார்களே என்ற பயமே அவவுக்கு அதிகமாக இருந்தது.
அதை அவ கந்த முருகேசனாரிடம் கூறியபோது “நான் இருக்கிறன் இங்கே ஒரு பயலும் வரமாட்டாங்கள் நீ பயப்பிடாமல் போயிட்டு வா” என்று கூறி அனுப்பி வைத்தார்.
அம்மா சென்றதும் என்னைக் கூர்ந்து பார்த்த கந்த முருகேசனார் “ நான் நேற்று உன்னிடம் ஒரு கேள்வி கேட்டனே… என்ன கேள்வி” என்று கேட்டார்.
“நீ யார்?” என்ற கேள்வி என்று நான் சொல்ல…
“அதுக்குப் பதில் தெரியுமா?” என்று அவர் திருப்பிக் கேட்டார்.

நான் தெரியும் என்றும் சொல்லமுடியாமல் தெரியாதென்றும் சொல்ல முடியாமல் தயங்க “எங்கே அதுக்கு பதில் சொல் பார்ப்போம்”; என்றார் அவர்.

“நான் சின்னப்பொடியனினதும் இலட்சுமியினதும் ஒரே மகன். எனக்கு எட்டு வயது ஆகிறது.நான் ஒரு மாணவன்” என்று தயங்கித் தயங்கி சொன்னேன்.

தனது கண்களை மூடி தனது வெண்தாடியை ஒரு நிமிடம் தடவிய அவர் தூரத்திலே புல் மேய்ந்து கொண்டிருந்த மானை காட்டி “அது என்ன? என்ற கேட்டார்.

நான் “மான்” என்று பதில் பதில் சொல்ல மயில்களைக் காட்டி “அது என்ன?” என்றார்.

நான் “மயில்” என்று சொல்ல “அப்ப நீ என்ன ?” என்று அவர் திருப்பிக்கேட்டார்.

அதற்கு உடனே பதில் சொல்லத் தெரியாமல் நான் தடுமாற … “அது மான் இது மயில் ….நீ…. மனிதன்” என்று ஒரு வித இராகத்தோடு உரத்து அழுத்திச் சொன்ன அவர்….

“சரி மனிதன் என்றால் என்ன?” என்று அடுத்த கேள்வியை கேட்டார்.

‘மிருகங்கள் ஐந்தறிவு உள்ளவை, மனிதன் ஆறறிவு உள்ளவன்’ என்று அம்மா எனக்கு ஏற்கனவே சொல்லித்தந்திருந்த படியால் “மனிதன் என்றால் ஆறறிவு உள்ளவன்” என்று நான் அவரது கேள்விக்கு துணிந்து பதில் சொன்னேன்.

எனது பதிலைக் கேட்டதும் தனது கண் புருவங்களை உயர்த்தி என்னை கூர்ந்து பார்த்த அவர் “ ஆறாவது அறிவு என்றால் என்ன?” என்று கேட்டார்.
அதற்குரிய பதிலும் எற்கனவே எனக்குத் தெரிந்திருந்த படியால் “பகுத்தறிவு” என்று சொன்னேன்.

“பகுத்தறிவு என்றால் என்ன?” அவர் திருப்பக் கேட்க எனக்கு சரியான பதில் சொல்லத் தெரியவில்லை.

“ பகுத்தறிவு என்றால் பகுத்து அறிவது .‘சரி பிழை -, நன்மை தீமை -நல்லது கெட்டது’ என்று எல்லாவற்றiயும் சீர்தூக்கிப்பார்த்து சரியான முடிவுக்கு வாறது.” என்று அவரே அதற்கு விளக்கம் சொன்னதுடன் “இங்கை இந்த இந்த மான்களை பார், மயில்களைப் பார், புறாக்களைப் பார் , கிளியளைப் பார் இதுகளுக்கு பகுத்தறிவு இல்லை எண்டு நாங்கள் சொல்லுறம்;. அதுகள் தங்களுக்குள் எவ்வளவு ஒற்றுமையா இருக்குதுகள்.ஆனால் பகுத்தறிவு இருக்கிறதா சொல்லிக் கொள்ளுற நாங்கள் சாதி சமயம் உயர்ந்தவன் தாழ்ந்தவன் எண்டு சொல்லிக்கொண்டு ஒருதரை ஒருதரை உயர்த்தி தாழ்த்தி சண்டைபிடிச்சுக் கொண்டிருக்கிறம்.” என்று கூறி ஒரு பெருமூச்சுவிட்டார்.

“மனிதன் என்றால் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தவேண்டும். அவன்ரை மனதிலை கருணையும் இரக்கமும் இருக்க வேண்டும்.மற்றவைக்கு உதவி செய்ய வேணும் எண்ட குறிக்கோள் இருக்க வேணும். தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்பவன் தான் உண்மையான மனிதன். தியாகம் செய்கிறது தான் உண்மையான மனித குணம்.” என்று அவர் அன்று சொன்ன அந்த வார்த்தைகள் இன்றும் என் மனதில் ஆளமாக பதிந்திருக்கிறது.

“முதலில் நீ மனிதன். அடுத்து தமிழன். அடுத்து சின்னப் பொடியன் இலட்சுமியின் மகன். இது தான் உன்னுடைய அடையாளம். இது தான் ‘நீ யார்?’ என்ற அந்தக் கேள்விக்குரிய முழுமையான விடை” என்று அவர் விளக்கமாகச் சொன்னதும் நான் அதை மனதுக்குள் திரும்பச் திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்தேன்.;

“ நீ மனிதன் எண்டது உனக்குத் தெரியும். அடுத்தது தமிழன். தமிழன்; எண்டால் என்னண்டு தெரியுமோ? ஏன் நீ தமிழன்? இதுக்கு பதில் சொல்லு பார்ப்போம்” என்று அவர் அடுத்த கேள்வியைக் கேட்டார்.

நான் கொஞ்சநேரம்; அதைப் பற்றி யோசித்துப் பார்த்து விட்டு “ தமிழ் கதைக்கிற படியால் நான் தமிழன்” என்று பதில் சொன்னேன்.

“இங்கே தமிழ் ஆக்கள் கொஞ்சப் பேர் இங்கிலிஸ் கதைக்கினம். அப்ப அவை இங்கிலிஸ்காரரா?” என்று அவர் எதிர் கேள்வி கேட்டார்.

எனக்கு குழப்பமாகப் போய்விட்டது. என்ன பதில் சொல்வதென்றே தெரிய வில்லை. நான் அப்பாவித் தனமாக அவரது முகத்தை பார்க்க….

அவர் “நல்லா யோசிச்சுப்பார் உன்ரை அப்பாவிட்டையும் அம்மாவிட்டையும் போய் கேட்டு நாளைக்கு எனக்கு வந்த பதில் சொல்லு” என்றார்.

நான் “சரி” என்று தலையாட்டியதும் ….

அடுத்தது “நீ சின்னப்பொடியன்ரையும் இலட்சுமியின்ரையும் மகன் . சரி அவை இரண்டு பேரும் ஆருடைய பிள்ளையள்? அவையைப் பற்றி தெரியுமோ?” என்று கேட்டார்.

எனக்கு ஏற்கனவே அந்த விபரம் தெரிந்த படியால் “அப்புச்சிக்கு(அப்பப்பா) பெயர் வினாசி.அப்பாச்சி (அப்பம்மா) க்கு பெயர் சின்னாச்சி. அப்புக்கு (அம்மப்பா) பெயர் கணபதி ,ஆத்தை (அம்மம்மா)க்கு பெயர் வள்ளி” என்று உடனே சொன்னேன்.

“சரி உனக்கு அவையின்ரை அப்பா அம்மா ஆரெண்டு தெரியுமோ? என்று அடுத்த கேள்வி வந்தது. உண்மையில் அவர்களைப் பற்றிய விபரம் எனக்கு அப்போது தெரியாது.

அதை புரிந்து கொண்ட கந்த முருகேசனார்; ‘அவை யார்?; எங்கே இருந்தவை. அவை என்ன செய்தவை? இப்ப எங்கை இருக்கினம் என்ற விபரங்களை யெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டு மறுநாள் தனக்கு வந்த சொல்ல வேண்டும் என்றும் சென்னார்.

அன்று அத்துடன் படிப்பு முடிந்துவிட்டது. அம்மா வரும் வரை என்னை அங்கிருந்த மான்கள் மயில்கள் கிளிகள் எல்லாவற்றையும் சுற்றிப்பாக்கும்படி சொன்னார்.
எற்கனவே மந்திகைப் பள்ளிக் கூடத்தில் கதிர்காமர் வாத்தியாரிடம் பேச்சுவாங்கி அடிவாங்கி அவமானப்பட்டு அழுதுகொண்டு படித்தவந்த எனக்கு கந்த முருகேசனாரின் அனுகு முறையும் ஆவர் பாடம் சொல்லித் தந்த விதமும் எனக்கு மிகவும் பிடித்தவிட்டது. நிறைய தெரிந்து கொள்ளவேண்டும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை அது தூண்டியது.
00000 00000 00000 00000 00000
யாழ்ப்பாணப் புலவர் மரபு என்பது நெல்லைநாத முதலியார்,சின்னத்தம்பிப் புலவர் குமாரசாமிப் புலவர், மயில்வாகனப் புலவர்,சேமசுந்தரப்புலவர் என்று பலரை உள்ளடக்கிய ஒரு நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டது.
யாழ்ப்பாணப் புலவர் மரபு அல்லது அறிஞர் மரபினுடைய கருத்தியல் தளம் என்பது ஆறுமுக நாவலருடைய சற்சூத்திரக் கோட்பாட்டை இயங்கியல் தளமாக கொண்டதாகவே இருந்த வந்தது, இருந்து வருகிறது.
அதை மறுதலிக்கும் எவரும் அந்த மரபுக்கு உரிமை கொண்டாடவோ அல்லது அதற்குள் வரவோ முடியாது என்பது எழுதப்படாத ஒரு சட்டமாகும்.இதையும் ஒரு தேச வழமை சட்டம் என்று கூடச் சொல்லலாம்.
கந்த முருகேசனார் இந்த மரபை உடைத்த படியினால் அல்லது அதை ஏற்க மறுத்தடியினால் அவரை இந்த சற்சூத்திர பரம்பரையினர் ஓரங்கட்டியதுடன் திட்டமிட்டு இருட்டடிப்பும் செய்து விட்டனர்
000000
கந்த முருகேசனார் பற்றிய வரலாற்றுத் தகவல்

வடமராட்சியில் அமைந்துள்ள தென் புலோலியில் புற்றளை என்னும் கிராமத்தில் கந்தப்பர் தெய்வானைப் பிள்ளை தம்பதியருக்கு இரண்டாவது மகனாக 27.04.1902 ஆம் ஆண்டு பிறந்தவர்தான் 'உபாத்தியாயர்' என்றும் 'தமிழ்த் தாத்தா' என்றும் யாவராலும் அழைக்கப்பட்ட அறிஞர் கந்தமுருகேசனார். இப்பெரியாரின் வரலாறும் பணிகளும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.

அறிஞர் கந்தமுருகேசனார் ஒரு வறிய விவசாய குடும்பத்தில் பிறந்து தமது ஆரம்பக் கல்வியை தரம் 1 முதல் 4 வரை தட்டாதெரு மெ.மி.த. கலவன் பாடசாலையிலும் அதன் பின்னர் புலோலி ஆண்கள் ஆங்கிலப் பாடசாலையென அழைக்கப்பட்ட வேலாயுதம் மகா வித்தியாலயத்திலும் கற்றதுடன் கல்வியை வறுமையின் காரணமாக இடையில் நிறுத்தினார். இதன் பின்னர் ஈழமணி ஆசிரியர், புலவர் என்று அன்றைய காலத்தில் அழைக்கப்பட்ட க. முருகேசபிள்ளை என்ற பெரியாரிடம் சிறிது காலம் கந்தபுராணமும் நன்னூல் காண்டிகையுரையும் கற்றார். பின்பு நன்னூல் யாப்பிலக்கண காரிகை போன்ற சிற்றிலக்கணங்களையும் தொல்காப்பியம் போன்ற பேரிலக்கண நூல்களையும் தானாகவே எவரினதும் உதவியுமின்றிப் படித்து ஒரு தலைசிறந்த அறிஞரானார்.

கந்த முருகேசனாருக்கு ஏறத்தாழ 25 ஆவது வயதில் கால்கள் வலுவிழந்தன. அதற்கு முன்பு புராணங்களுக்குப் பயன் சொன்னவர். பின்பு அதைத் தொடர முடியவில்லை. இளமைக்காலத்தில் கோயில்களில் புராணங்களுக்குப் பயன் சொன்ன இப்பெரியார் கால்கள் வலுவிழந்து, முடமான பின்னர் ஒரு நாத்திகவாதியாக மாறி விட்டார். நாத்திகவாதியாக மாறினாலும் இரவு, பகல் என்று பாராது சகலவற்றையும் கற்றுப் பாண்டித்தியம் அடைந்தார். சிறந்த சிந்தனையாளராக மாறி பொதுவுடைமை தத்துவங்கள் வாழ்க்கைத் தத்துவங்கள் யாவற்றையும் நன்கு கற்றார்.

மேலும் 'தமிழ்த் தாத்தா' என்று யாவராலும் அழைக்கப்பட்ட கந்த முருகேசனாரின் உறைவிடம் இயற்கை அழகு படைத்த சூழலிலே அமையப்பெற்று 'தமிழகம்' என்ற நாமத்தை பெற்று அவ்வூர் மக்களுக்கு கல்விச் செல்வத்தை பாரியென வாரி வழங்கினார். கிரேக்க ஞானி சோக்கிரட்டீசின் விசாலமான நெற்றியும் உலகப் புகழ் பெற்ற வங்கக் கவி தாகூரின் கண்களும் ஆங்கில இலக்கிய மேதை பெர்னாட்ஷாவின் வெள்ளித் தாடியும் கொண்டவராக புலோலி மக்களின் மத்தியில் வாழ்ந்து வந்தார்.

கந்தமுருகேசனாரின் உறைவிடம் 'தமிழகம்' ஒரு திண்ணைப் பள்ளிக்கூடமாக விளங்கிற்று. அதனை மகாகவி தாகூர் கண்ட 'சாந்திநிகேதன்' என்று அழைத்தால் மிகையாகாது. இப் பள்ளிக் கூடம் பாலர் வகுப்பு முதல் பண்டிதர், வித்துவான் வகுப்பு வரை எப்போதும் மாணாக்கர்களால் நிறைந்திருக்கும். இங்குதமிழ் மட்டுமின்றி சமயம், தர்க்கம், பூமி சாஸ்திரம், கணிதம் யாவும் இவரால் கற்பிக்கப்பட்டன. இக்கல்விக் கூடத்தில் ஒழுங்கு, கட்டுப்பாடு, அன்பு, அமைதி யாவும் பேணப்பட்டன. இத்துடன் கந்தமுருகேசனார் பல நூல்களை எழுதி வெளியிட்டிருந்தாலும் அவரின் 'நல்லை நாவலன் கோவை' 1930ஆம் ஆண்டு எழுதப்பட்டாலும் 69 ஆண்டுகளுக்குப் பின்பே புத்தக உருவாக முன்னாள் புலோலி வேலாயுதம் மகா வித்தியாலயத்தின் அதிபராகவும் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் இன்று பழைய மாணவர் சங்கத்தின் (கொழும்புக் கிளை தலைவராகவும்) சமாதான நீதிவானாகவும் இருக்கும் சே. ஏகாம்பரநாதனின் பெரு முயற்சியினால் வெளியிடப்பட்டது. உண்மையிலேயே ஏகாம்பரநாதனின் இந்த உயரிய பணியை நாம் பாராட்ட வேண்டும்.

'தமிழ்த் தாத்தா' கந்த முருகேசனாருக்கு அறிஞர் அண்ணாத்துரை, இரா. நெடுஞ்செழியன், நாஞ்சில் மனோகரன் ஆகிய தமிழக அரசியல் தலைவர்களோடும், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, பொன் கந்தையா, பீற்றர் கெனமன் போன்றவர்களோடு நேரடித் தொடர்பும் தபால் மூலத் தொடர்பும் கொண்டிருந்தார். ஈழத்தின் மிகப் பெரிய பகுத்தறிவுச் சிந்தனாவாதியாக, தமிழ் அறிஞராக, சமூக சீர்திருத்தவாதியாக, தர்க்கவாதியாக, பல்துறை விற்பன்னராக எல்லாவற்றிற்கும் மேலாக மனித நேயம் கொண்ட மானிடனாக வாழ்ந்த மாபெரும் கலைப் பொக்கிசமான கந்த முருகேசனார் 14.06.1965 ஆம் ஆண்டு தமது 63 ஆவது வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார்.

'(கலாபூஷணம்' செல்வத்தம்பி மாணிக்கவாசகர்)

3 கருத்துகள்:

நடராசா குணபாலன் சொன்னது…

திரு.சிவா சின்னப்பொடி

மிக்க நன்றிகள்.அயலூரில் பிறந்து வளர்ந்தும் பெரிதாக கந்தமுருகேசனாரைப் பற்றி அறிந்திருக்கவில்லை. உங்களது பதிவினால் கொஞ்சம் அறியக் கூடியதாய் உள்ளது. என் கூடப் படித்தவர் ஒருவர் புற்றளையைச் சேர்ந்தவர்.அவரது இயற்பெயர், அதாவது பெற்றோர் முதலில் இட்ட பெயர் ரவீந்திரன். கந்தமுருகேசனார் தூய தமிழ்ப் பெயராக வை என்று உரிமையுடன் கூறி, நக்கீரன் எனப் பெயரிட்டாராம். நக்கீரனின் பெற்றோரும் அதை ஏற்றனராம். இதை நக்கீரனே சொல்லிக் கேட்டேன்.

அன்புடன்

ந.குணபாலன்

siva sinnapodi சொன்னது…

எனது பதிவைப் படித்தத்தற்கு நன்றி குணபாலன்
கந்த முருகேசனார் ஒரு அற்புதமான மனிதர்
அவரை பற்றி எழுதுவதானால் நிறைவே எழுதலாம்
எனது வேலைப் பழுவுக்கு மத்தியில் என்னால் எழுத முடிந்தது இவ்வளவு தான்
அன்புடன்
சிவா சின்னப்பொடி

கிருத்திகன் சொன்னது…

சிலையடி கடந்து போய் ‘நல்லை நகர் நாவலர் பிறந்திலரேல்...’ படித்த எங்களுக்கு அங்கே சிலையாயிருப்பவர் பற்றித் தெரிந்திருக்கவில்லை... நாவலரையும் நாங்கள் சரியாகப் புரிந்திருக்கவில்லை. இப்போது கந்தமுருகேசனாரைப் பற்றித் தேடினால் சிவா சின்னப்பொடியிடமிருந்து மட்டுமே தகவல்கள் கிடைக்கின்றன. எல்லாம் நாவலர்தம் கைங்கர்யம்.