சனி, 28 மே, 2011

கறுப்புப் பணம்.. தடுக்க, மீட்க குழு அமைத்தது மத்திய அரசு!

கறுப்புப் பணம் உருவாவதைத் தடுக்கவும், அதை சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்வதைத் தடுக்கவும், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்கவும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்குப் பரிந்துரைக்க மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் (Central Board of Direct Taxes-CBDT) தலைமையில் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.

இந்தக் குழுவில் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் சட்டப் பிரிவு உறுப்பினர், அமலாக்கப் பிரிவு இயக்குனர், வருவாய் புலனாய்வுப் பிரிவின் டைரக்டர் ஜெனரல், கரன்சிகள் பிரிவு டைரக்டர் ஜெனரல், மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் பண்ட் டிரான்ஸ்பர் பிரிவு இணைச் செயலாளர், நிதித்துறை புலனாய்வுப் பிரிவின் இணைச் செயலாளர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவு ஆணையர் இந்தக் குழுவின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை மத்திய நிதியமைச்சகம் இன்று வெளியிட்டது.

கறுப்புப் பணத்தின் சட்ட விரோத பரிமாற்றத்தை தடுப்பது மற்றும் வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்பது ஆகியவை தொடர்பாக இப்போதுள்ள சட்டங்களை இந்தக் குழு ஆராய்வதோடு, அதில் தேவைப்படும் மாற்றங்கள் குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரைக்கும்.

கறுப்புப் பணம் தொடர்பான சட்ட நடவடிக்கைகளை கடுமையாக்குவது தொடர்பான பரிந்துரைகளையும் இந்தக் குழு வழங்கும்.
6 மாத காலத்திற்குள் இந்தக் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அறிக்கையின் அடிப்படையில், மத்திய அரசு புதிய
சட்டத் திருத்தங்களைக் கொண்டு வரும் என்று தெரிகிறது.

இந்தக் குழு அமைக்கப்பட்டது கறுப்புப் பணத்துக்கும் ஊழல் தடுப்புக்கும் எதிரான மிக முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை: