வியாழன், 5 மே, 2011

கனிமொழி கைது காலத்தின் கட்டாயமா? மறுபக்கம்

தன் அரசியல் வாழ்வின் மிகக் கடினமான காலகட்டத்தை தி.மு.க., கடந்துகொண்டிருக்கிறது. தி.மு.க., என்றால், கருணாநிதி. கருணாநிதி என்றால் கனிமொழி. அந்த வகையில், கனிமொழி என்றாலே கழகம் தான். கட்சிக்கு வந்த களங்கம் என்று மட்டுமில்லாமல், தன் அருமை மகள் கனிமொழி என்பதால், தனிப்பட்ட முறையில் முதல்வருக்கும் இது நெருக்கடி தான்.

உயர்மட்ட செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் இதுபற்றி விலாவாரியாகவே விளக்கினார் கருணாநிதி. "சில நாட்களாகவே சி.ஐ.டி., காலனி இல்லத்துக்குப்போகவில்லை. தாயும், மகளும், மற்றுமுள்ளவர்களும் படும் வேதனையைக் காணச்சகிக்கவில்லை' என்பதாக அவர் கவலைப்பட்டிருந்தார். கனிமொழி கைதாவாரா? கருணை காட்டப்படுமா? சட்டம் கைகொடுக்குமா? மத்திய அரசு கைவிடுமா? என, ஏராளமான கேள்விக்குறிகள் அறிவாலயத்தைச் சுற்றி எழுந்துகொண்டிருக்கின்றன. தேர்தல் முடிவைப் போலவே, ஆளாளுக்கு, தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் இதுபற்றி விசாரித்துக் கொண்டிருக்கின்றனர். எனக்கு கிடைத்த தகவலின்படி, கனிமொழியின் கைது, எந்த வகையிலும் தவிர்க்கப்பட முடியாது என்பது தான் உண்மை. இதுகுறித்து, சட்டவல்லுனர்களிடமும், சி.பி.ஐ., அதிகாரிகளிடமும் விசாரித்த வகையில் கிடைத்த தகவல்கள்: "2 ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கைப் பொறுத்தவரை, இதுவரை யார் யாரெல்லாம் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றனரோ, அவர்கள் அனைவருமே கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

கனிமொழி ஒருவரைத் தவிர, குற்றம்சாட்டப்பட்டவர்கள் எவருமே வெளியில் இல்லை. இவர்களில், முதல் எதிரியாகச் சேர்க்கப்பட்டுள்ள ராஜா ஒருவர் தான், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் முன்பே கைது செய்யப்பட்டவர்கள். மற்றனைவரும் குற்றப்பத்திரிகைக்குப் பிறகு கைதானவர்களே. அந்த வகையில், கனிமொழி கைதாவதற்கும் அதிகளவு வாய்ப்புகள் உள்ளன. "குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலே, விசாரணை அதிகாரியின் வேலையில் பாதி முடிந்துவிடுகிறது. அதன் பிறகும் கைதின் அவசியம் என்ன?' என்ற வினா எழுப்பப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு, இரண்டு அம்சங்கள் முக்கியமானவை. ஒன்று, விசாரணை. இன்னொன்று சாட்சிகள். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதன் மூலம், விசாரணை வேண்டுமானால் பெருமளவு முடிந்திருக்கலாமே தவிர, சாட்சிகள் கலைக்கப்படும் அபாயம் தொடரவே செய்யும். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகும் கைது நடவடிக்கை மற்றும் சிறைவாசம் கொண்ட வழக்குகள், ஏராளமான முன்னுதாரணங்களாக உள்ளன.

சாதாரண வழக்குகளில் மட்டும் தான், குற்றப்பத்திரிகை தாக்கலும், கைதி விடுவிப்பும் தொடர்புபடுத்தப்படுகிறது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட கடும் குற்றங்களில் அவ்வாறு செய்யப்படுவதில்லை. ஒருவர் கைது செய்யப்பட்டு 60 நாட்கள் அல்லது 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாவிட்டால், அவர் ஜாமீன் பெறுவதற்கு இயல்பாகவே தகுதியாகிறார் என்பது சாதாரண நடைமுறை தானே தவிர; எல்லா வழக்குகளுக்கும் பொருந்துவதல்ல. ஸ்பெக்ட்ரம் வழக்கைப் பொறுத்தவரை, குற்றம்சாட்டப்பட்ட எல்லாருமே, சமூகத்தில் பெரும் செல்வாக்கு உடையவர்கள். இவர்கள், சாட்சியைக் கலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவர் என்றால், நீதிமன்றம் இதை மிகச் சுலபமாக ஏற்றுக்கொள்ளும். இவர்கள் வெளியில் நடமாடுவதன் மூலம், சாட்சிகள் கலைக்கப்படலாம்; மிரட்டப்படலாம்; வழக்கில் தலையீடு அதிகரிக்கலாம் என்பன போன்றவை, சி.பி.ஐ.,யின் வாதமாக இருக்கும்.

சரணடையச் சொல்லியோ, கைதாகும்படியோ நீதிமன்றம் உத்தரவிடும்போது, ஜாமீன் கேட்டு கனிமொழி தரப்பு மனுத்தாக்கல் செய்யலாம். இதிலும், ராஜா ஒருவரைத் தவிர, மற்ற அனைவருமே ஜாமீன் கேட்டு, மனு தள்ளுபடி செய்யப்பட்டு, சிறையில் இருப்பவர்கள் தான். ராஜா மட்டுமே, இதுவரை ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, கனிமொழியின் ஜாமீன் மனுவும் ஏற்றுக்கொள்ளப்படும் வாய்ப்பு குறைவு. "இவர் வெளியில் நடமாடுவதால் வழக்குக்கு குந்தகம் இல்லை' என சி.பி.ஐ., உத்தரவாதம் தந்தால், ஜாமீன் தருவது பற்றி நீதிமன்றம் பரிசீலிக்கலாம். ஆனால், குற்றம்சாட்டப்பட்ட அத்தனை பேரின் ஜாமீனுக்கும் எதிர்ப்பு தெரிவித்துவிட்டு, கனிமொழிக்கு மட்டும் சி.பி.ஐ.,யால் கருணை காட்ட முடியாது. மிகப் பெரிய உடல்நலக் குறைவோ, சிறைவாசம் அனுபவிக்க முடியாத, தள்ளாத வயதோ கூட கனிமொழிக்கு இல்லை. எனவே, உடல்நிலையைக் காரணம் காட்டியும் அவர் ஜாமீன் கோர முடியாது.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டும், சுப்பிரமணியசாமியும், இந்தியாவில் உள்ள அத்தனை ஊடகங்களும் நேரடியாகக் கண்காணிக்கின்றன. விசாரணை நீதிமன்றத்திலோ, விசாரணை அதிகாரிகளிடத்திலோ ஏதேனும் சின்னச் சலனம் தென்பட்டால் கூட, மிகப் பெரிய கூச்சல் கிளம்பிவிடும்; சுப்ரீம் கோர்ட் விளாசிவிடும். அந்த வகையிலும், கனிமொழி விட்டுவைக்கப்படுவது சிரமமே. இப்படி எல்லா அம்சங்களும் விரல் நீட்டுவது, சிறைச்சாலையே நோக்கியே! இருந்தாலும், "அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்' என்ற பொது விதி இருப்பதால் தான், திட்டவட்டமான இந்த விஷயம் கூட, சஸ்பென்சாகவே நீடிக்கிறது!

- ஆர்.ரங்கராஜ் பாண்டே -
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=235935

கருத்துகள் இல்லை: