ஞாயிறு, 29 மே, 2011

கனிமொழி குறித்துக் கருத்துத் தெரிவிக்க பிரதமர் மன்மோகன் சிங் மறுப்பு

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு கோர்ட் விசாரணையில் உள்ளது. எனவே கனிமொழி கைது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

எத்தியோப்பியா, தான்சானியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மன்மோகன் சிங் டெல்லி திரும்பினார். வழியில், விமானத்தில் வைத்து அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது தமிழகத்தில்ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் திமுகவுடனான கூட்டணியில் மாற்றம் வருமா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த மன்மோகன் சிங்,

இப்போதுவரை ஐக்கிய முற்போக்கு கூட்டணியில்தான் திமுக நீடிக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.

கனிமொழி கைது குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது,

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் என்னால் எதுவும் கூற முடியாது என்றார்.

தான் ஊர் திரும்பியதும் அமைச்சரவை மாற்றம் குறித்து கவனம் செலுத்தப் போவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து அவரிடம் கேட்டபோது, இது மக்கள் தீர்ப்பு என்றார்.

பாகிஸ்தான் தீவிரவாதம் குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,

பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜிகாதி அமைப்புகளால் இந்தியா கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதே பயங்கரவாதம் பாகிஸ்தானையும் திருப்பித் தாக்கும் என்பதை அந்த நாடு உணர வேண்டும். அண்மையில் கராச்சி கடற்படைத் தளத்தில் நடைபெற்ற தாக்குதலை படிப்பினையாக எடுத்துக் கொண்டு இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகளைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

ஹெட்லி, பாகிஸ்தானிய தொடர்புகள் குறித்து அடுத்தடுத்து கூறி வரும் தகவல்கள் குறித்த கேள்விக்கு, நாம் இதற்கு முன்பு சொல்லாததை ஹெட்லி கூறி விடவில்லை. அனைத்தும் நாம் ஏற்கனவே கூறி வரும் புகார்கள்தான், குற்றச்சாட்டுக்கள்தான்.

ஹெட்லி அமெரிக்காவின் சிகாகோ நீதிமன்றத்தில் அளித்துள்ள வாக்குமூலத்தில் புதிதாக எதையும் கூறவில்லை. மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு தொடர்பு இருக்கிறது என்பது உலகறிந்த உண்மை.

டேவிட் ஹெட்லி மீதான விசாரணை முடிந்த பின்னர் அவரை இந்தியா கொண்டு வந்து விசாரணை நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை: