செவ்வாய், 10 மே, 2011

துவக்குகள்தான் ஊர்களை ஆட்சி செய்கின்றன

பார்த்திபன்

அன்புள்ள குமாருக்கு,
வணக்கம். எதை எழுதுவது? எதை விடுவது? என்று புரியவேயில்லை. தகவற் தொடர்பாடலின் விளைவாக கடிதங்களின் யுகம் ஏறக்குறைய முடிவடைந்து வருகுது எண்டு சொல்லப்பட்டாலும் எங்களுக்கு (ஈழத்தமிழருக்கு) கடிதங்கள் இன்னும் ஒரு முக்கியமான சங்கதியாகவும் தொடர்பாடற் சாதனமாகவுமே இருக்குது. இதுக்குக் காரணம், நாங்கள் எதையும் வெளிப்படையாகக் கதைக்க முடியாத ஒரு சூழல் தொடர்ந்து கொண்டிருக்கிறதாலேயே ஆகும்.
தொலைபேசியில நாங்கள் ஒண்டையும் சுதந்திரமாக் கதைக்கேலாது. ஒட்டுக் கேட்பார்கள். போர் முடிஞ்ச பிறகும் ஒட்டுக் கேட்கிறதும் கண்காணிக்கிறதும் விட்டுப் போகேல்ல. ஊர் ஊராகப் படைகள். ஒழுங்கை, தெருவெல்லாம் படைகள். என்ன தோற்றத்தில, என்ன கோலத்தில நிக்கிறார்கள் என்று ஆருக்கும் தெரியாது. இனியொரு இயக்கமோ போராட்டமோ யுத்தமோ வரக்கூடாது எண்டதில வலு கவனமாக இருக்கிறார்கள்.
யுத்தத்தால களைப்படைஞ்ச ஆரும் இப்பிடிக் கவனமாக இருக்கிறதில தப்பில்ல. ஆனால், ஏன் யுத்தமொண்டு வந்ததெண்டதைப் பற்றியும் கொஞ்சம் சிந்திச்சால் நல்லது.
இந்த நிலையில உளவு, கண்காணிப்பு, வேவு, அவதானிப்பு எண்டு பல எச்சரிக்கை நடவடிக்கைகள். இதெல்லாம் ஆருக்கு நட்டத்தைத் தரும்? எங்களுக்குத்தானே! நாங்கள்தானே நம்பமுடியாதவர்களாக, சந்தேகத்துக்குரிய ஆட்களாகியிருக்கிறம். அதிலயும் இப்ப இருக்கிற எங்கட நிலைமை மிக மோசமானது. வன்னியில இருக்கிற சனங்கள் இன்னும் பாதிப்பில இருந்தும் துக்கத்தில இருந்தும் மீளேல்ல. அரசியல் நிலைமையைப் பொறுத்தவரையில சொல்லத் தேவையில்லாத அளவுக்கு படு பலவீனமாக இருக்கிறம். புலம்பெயர் நாடுகளில கூட ஆயிரத்தெட்டு அணிகள் தினமும் முளைச்சுக் கொண்டிருக்கிறதைத்தான் பாக்கிறம்.

தோற்றுப் போனால் அவர்களின் குரலையோ கதையையோ ஆரும் பெரிசாக் கணக்கில எடுக்க மாட்டார்கள். எங்கட நிலைமை இப்ப இப்பிடித்தானிருக்கு.
இப்ப பார், ஒரு விசயத்தை ஒழுங்காக் கதைக்கேலாது. வெளிவெளியாக எதையும் பேசேலாது. அதால, எல்லாத்தையும் அடக்கி வாசிக்க வேண்டியிருக்கு. இப்பிடியே எத்தினை காலந்தான் பேசாமடைந்தகளாகவும் ஒளிச்சு மறைச்சும் விழுங்கி விழுங்கியும் கதைக்க முடியும்?
மனிசனெண்டால், பேசவேணும். கதைக்க வேணும். கதைக்கவும் பேசவும் முடியாத வாழ்க்கையில என்னதான் இருக்கு? அது நரகம். இப்ப இந்த நரகத்தைத்தான் அனுபவிச்சுக் கொண்டிருக்கிறம்.
குமார்,
அதாலதான், இந்தக் கடிதம். இப்பிடிக் கடிதம் எழுதிறதில கொஞ்சம் ஆறுதல். ஒண்டு, ஒரு பெரிய சுமையை இறக்கி வைச்ச மாதிரி ஒரு உணர்வு. அதோட சொல்ல வேண்டியதையெல்லாம் ஏதோ ஒரு மாதிரிச் சொன்னதைப் போலவும் இருக்கும். அடுத்தது, சில விசயங்களை மத்தவைக்கும் சொன்னதாக இருக்கும். அதோட இதெல்லாம் ஒரு பதிவிலயும் கிடக்கிறதா மாறும். இப்பிடியெல்லாம் சிறைப்பட்டு, உத்தரிச்சு, தினமும் எல்லாத்துக்கும் பயந்து, ஒடுங்கித்தான் ஒரு காலம் வாழ்ந்தம் எண்டதைப் பதிஞ்சு வைக்கிறதாகவும் இருக்கும். அதாலதான் இதை எழுதிறன்.
சரி குமார், இனி விசயத்துக்கு வாறன். இஞ்ச இப்ப காணி விலை படுபயங்கரமாக ஏறியிருக்கு. அதுவும் யாழ்ப்பாணத்திலயும் வவுனியாவிலயும் காணி வாங்கிறது, வீடு வாங்கிறது எண்டால், அது இனி இஞ்சயுள்ள சனங்களால செய்ய முடியாத ஒரு காரியமாக மாறிக் கொண்டிருக்கு.
யுத்தம் முடிஞ்ச உடன உருவாகியிருக்கிற ஒரு அமைதிச் சூழலைப் பயன்படுத்தி இப்பிடிக் காணி வாங்கிறது, வீடு வாங்கிறது, சொத்துகளைச் சேர்க்கிறது கொஞ்சப் பேருக்குக் கைவந்த கலை. இந்த மாதிரிக் காரியம் பாக்கிற விளையாட்டு முந்திச் சமாதானப் பேச்சுவார்த்தை நடந்த 2002 காலப்பகுதியிலயும் நடந்தது. இதில முக்கியமாக இந்தச் சொத்துகளைச் சேர்க்கிறதில நம்பர் வண் ஆக்களாக இருக்கிறவை கூடுதலாகப் புலம் பெயர்ந்திருக்கிறவைதான்.
தங்களிட்ட இருக்கிற காசுப்பலத்தைப் பாவிச்சு விலையை ஏத்திச் சந்தையைத் தங்கட கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்திடுகினம். இதால ஏழைச்சனங்கள்தான் கூடுதலாகப் பாதிக்கப்படுகுதுகள். முந்தி உடையார்மார், பெரிய காணிவளம் உள்ள ஆக்கள் செய்த அதே காரியத்தை இப்ப இன்னொரு வகையில, இன்னொரு தரப்புச் செய்யுது.
போர்க்காலத்தில கொஞ்சக்காலம் கொழும்பில தெகிவளை, வெள்ளவத்தை, கொட்டகேனா, கொள்ளுப்பிட்டிப் பக்கத்தில இந்த மாதிரி வீடுகளுக்கு விலையை ஏத்திச்சினம் எங்கட ஆக்கள்.
யாழ்ப்பாணத்தில இருக்கேலாது எண்ட நிலைமை வரேக்க, எங்கட ஆக்கள் கொழும்பில வீடு வாங்கிச்சினம். கொழும்பில வீடு வாங்கிறதுக்கு வெளிநாடுகளில இருக்கிற சொந்தங்கள் உதவிச்சினம். இதால இவைக்கு கொழும்பிலயும் வீடு. யாழ்ப்பாணத்திலயும் வீடு எண்டாச்சு.
அப்ப யாழ்ப்பாண வீடுகள வலிகாமத்திலயும் தீவிலயும் இருந்து அந்தரிச்சு வந்த சனங்கள் பாதுகாத்துதுகள். இப்ப போரில சிக்கிக் கஸ்ரப்பட்ட சனங்கள் காசுக்கும் தொழிலுக்கும் அந்தரிக்கேக்க, இந்த நிலைமையைச் சாட்டாக வைச்சுத் தவிச்ச முயலடிக்கிற காரியும் தாராளமாக நடக்குது.
ம், இதையெல்லாம் சொல்லி என்ன பயன்? மனச்சாட்சிக்கும் அறிவுக்கும் சம்மந்தமில்லாமல் வாழ முற்படுகிற ஆக்களோட எதைக் கதைச்சும் பயனில்லை.
இவை இப்பிடி வவுனியாவிலயும் யாழ்ப்பாணத்திலயும் காணிகளையும் வீடுகளையும் வாங்கிக் கொண்டிருக்க, ஊர் ஊராகப் பிரதேசம் பிரதேசமாக படைத்தரப்புக் காணிகளைச் சுவீகரிச்சுக் கொண்டிருக்கு.
ஓவ்வொரு உதவி அரசாங்க அதிபர்களிட்டயும் தங்களுக்குத் தேவையான காணிகளைப் பற்றி எழுதிக் கொடுத்து அனுமதி வாங்கி நிரந்தரப் படை முகாம்களை அமைச்சுக் கொண்டிருக்குது படைத்தரப்பு. இந்தக் காணிகளின்ர அளவு நீ நினைக்கிற மாதிரி ஏதோ கொஞ்சமல்ல. நூறு இருநூறு ஏக்கர் எண்டுதான் இந்தக் கேள்விகள் இருக்கு.
என்ரை நண்பர் ஒருதர் ஒரு பிரதேச செயலராக இருக்கிறார். அவர் சொன்னார், தன்னட்ட வந்து ஒரு படைப்பிரிவு தங்களுக்கு இவ்வளவு காணி வேணும் எண்டு ஒரு தொகையைச் சொல்லிக் கேட்டிச்சினமாம். அவை கேட்ட காணியின்ரை அளவு ஒரு கிராமசேவகர் பிரிவு அளவு காணி. அதுக்குள்ள நான்கு ஐந்து ஊர்கள் அடக்கம். பேசாமல் ஊர்களையே தாரை வார்த்துக் கொடுத்திடலாம் எண்டு அவர் தன்னுடைய ஊழியர் ஒருவரிடம் சொல்லிக் கவலைப்பட்டிருக்கிறார்.
தனக்கு வந்த இந்தச் சோதனையை இந்த அதிகாரி கடந்தது ஒரு தனிக்கதை.
இப்பிடியே ஊர்களாகவும் பெரிய பிரதேசங்களாகவும் தங்களுக்கு வேணும் எண்டு ஒரு தரப்புக் கேட்டால் பரவாயில்லை. ஆளாளுக்கு வந்து கேட்கிற மாதிரி ஒவ்வொரு படைப்பிரிவும் வந்து தங்களுக்கு அவ்வளவு வேணும், இவ்வளவு வேணும் எண்டு கேட்டால், கடைசியில என்னதான் மிஞ்சும்?
இதில ஒரு வேடிக்கையும் தந்திரமான உண்மையும் இருக்கு. அது என்னெண்டா, தாங்கள் ஆக்கிரமிப்புச் செய்யாமல், சட்டரீதியாக இந்தக் காணிகளை வாங்கிக் கொள்வதாகப் படைத்தரப்புக் காட்டிக் கொள்ள முற்படுவதே இது.
இந்த நிலைமையிலதான், இந்த நண்பர் தானும் ஒரு தந்திரம் செய்திருக்கிறார். அவர் காணி கேட்டு வந்த படையினருக்குச்சொன்னாராம்...
'.....இப்பிடி உங்களுக்கு இந்தளவு காணிகளைத் தந்தால், அரசியல் ரீதியாக தனக்கு பல நெருக்கடிகளைத் தருவார்கள். இணையத்தளங்களில எல்லாம் எழுதி, இதை அரசியலாக்கி விடுவார்கள். நீங்கள் அரசாங்கத்தரப்பில இருந்து இதுக்கு நடவடிக்கை எடுங்கோ. அல்லது பாராளுமன்றத்தில பாதுகாப்புச் செலவீனத்துக்கு நிதி ஒதுக்கிறதைப் போல பாதுகாப்புக்கு எண்டு காணிகளையும் கேட்டு வாங்குங்கோ. அப்பிடியெண்டால் எங்களுக்கும் பிரச்சினை இல்லை. உங்களுக்கும் பிரச்சினை இல்லை....' எண்டிருக்கிறார்.
வந்தவர்களுக்கு ஒண்டுஞ் சொல்லேலாமற் போயிட்டுது. போயிட்டாங்கள். ஆனால், இனி என்னமாதிரி வருவாங்களோ இல்லையோ எண்டு தெரியேல்லை என்கிறார் இந்த உதவி அரசாங்க அதிபராக இருக்கும் நண்பர்.
ஆனால், நண்பருக்கு இன்னொரு கவலை. தாங்கள் நிர்வாக அதிகாரிகளாக இருந்து கொண்டு, அரசாங்கத்துக்குக் கட்டுப்பட்ட நிலையில இருந்து கொண்டு சில விசயங்களில எதிர்ப்பாகவும் புத்திசாதுரியமாகவும் நடந்து கொள்ளிற அளவுக்குக் கூட இந்த அரசியல்வாதிகள் எதையாவது உருப்படியாகச் செய்யிறேல்ல எண்ட கவலை.
இதைப்போல ஏராளம் கவலைக்குரிய சங்கதிகள் நடக்குது.
வன்னியில பல இடங்களில இப்ப படைமுகாம்கள் அமைக்கப்படுகுது. பிரமாண்டமான முகாங்கள். எல்லாம் நிரந்தர முகாம்கள். அவ்வளவும் முக்கியமான இடங்களிலதான். சந்திகள், பொது இடங்கள் எல்லாவற்றிலும் இந்தப் படைமுகாம்கள் அமைக்கப்படுகின்றன.
கிளிநொச்சியில முந்திப் புலிகள் வைச்சிருந்த அல்லது புலிகளின் வசமாக இருந்த அத்தனை இடங்களிலயும் இந்த நிரந்தரப் படைமுகாம்களைக் காணலாம். நந்தவனம், அரசியற்றுறை நடுவப்பணியகம், புலிகளின் குரல் வானொலி இருந்த இடம், புலனாய்வுத்துறையின் இரகசிய நடவடிக்கைத் தலைமையகம், நுண்கலைக்கல்லூரி, தமிழீழப் பல்கலைக்கழகம், நிர்வாகசேவைத் தலைமைப் பணியம், கணினிப் பிரிவுச் செயலகம், நவம் அறிவுக்கூடம், புனர்வாழ்வுக்கழகம், பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனை, மருத்துவப்பிரிவு மையச் செயலகம், நிதித்துறையின் சில பிரிவுகள் இருந்த இடங்கள், தமிழீழ வைப்பகத் தலைமைப் பணிமனை, ஆட்சேர்ப்புப் பிரிவு அல்லது பரப்புரைப் பிரிவு என அத்தனை இடங்களிலும் இப்ப படைமுகாம்கள்தான்.
இது காலமாற்றமா அல்லது களமாற்றமா அல்லது இதெல்லாம் ஏதோ ஒரு வேடிக்கைதானா என்று எனக்குத் தெரியவில்லை. வரலாறு இந்தமாதிரி மாறிமாறி வெவ்வேறு அதிகாரங்களுக்குக் கீழேதான் நகர்ந்து கொண்டிருக்கிறது போலும். என்ரை வயதுக்கு நான் எத்தனையோ விதமான தரப்புகளின்ரை கையில துவக்குகளிருந்ததைக் கண்டிட்டன். எங்கட ஐயா, அம்மாவின்ர காலத்தில அவையள், பிரித்தானியப் படைகள், இலங்கைப் படைகள், இந்தியப் படைகள், விடுதலைப் புலிகள், ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ, ரெலி, ரெலா, என்.எல்.எவ்.ரி, பேரவை, கருணாகுழு, பிள்ளையான்குழு, ஈ.பி.டி.பி, ஜிகாத், ஜே.வி.பி அது, இது எண்டு எத்தனையோ ஆயுதந்தாங்கிய குழுக்களைக் கண்டிருக்கிறார்கள். இலங்கைத்தீவு துவக்குகளால் நிறைந்திருக்கிறது போலும்.
இப்பவும் துவக்குகள்தான் ஊர்களை ஆட்சி செய்கின்றன. துவக்குகள் மலிஞ்சிருக்கிற அளவுக்கு தேங்காய், மரவெள்ளிக்கிழங்கு போன்ற பொருட்கள் மலியவில்லை. ஒரு தேங்காய் (நல்ல தேங்காயைக் காண்பது அரிது. நல்ல தேங்காயை வாங்குவது அதைவிட அபூர்வம்) எண்பது ரூபாய்க்கு ஏறிவிட்டது. தென்னைகளையெல்லாம் போர் திண்டு விட்டதல்லவா? ஆகவேதான் தேங்காய்க்கு இந்த விலை.
தென்னந் தோட்டங்கள் இருந்த காணிகள் எல்லாம் வெட்டவெளிகளாக இருக்கு. எங்களின்ரை தென்னம்பிள்ளைகளும் இல்லை. பெத்த பிள்ளைகளும் இல்லை எண்டு சின்னப்பாலத்தடிச் சின்னையா அண்ணை சொல்கிறார். அவர் தென்னைகளை ஒரு நாளும் மரங்களாகவே பார்த்ததில்லை. அதுகளை அவர் பிள்ளைகளாகவே பார்த்தார். தென்னை மரம் எண்டு அவர் சொல்லி நான் கேட்டதில்லை. 'தென்னம்பிள்ளை' எண்டுதான் சொல்லுவார். தன்ரை பிள்ளைகளைப் போலத்தான் அவர் தென்னைகளை – தென்னம்பிள்ளைகளை வளர்த்தார். ஆராவது தென்னைகளில் மறந்தேனும் கத்தியையோ கோடாரியையோ பாய்ச்சி விட்டால் அவர் அந்த நேரம் படுகிற பாட்டைப் பற்றித் தெரியுந்தானே.
ஆனால், இப்ப அவற்றை காணிக்குள்ள ரண்டே ரண்டு தென்னைகள்தான் நிக்குது. இப்பிடித்தான் பெரும்பாலான காணிகளில தென்னைகள் இல்லாமற் போயிட்டுது. அளம்பில், பளை, இயக்கச்சிப் பக்கமெல்லாம் முந்தி ஏராளம் தென்னைகள் நிண்டது. இப்ப இந்த இடங்கள் எல்லாம் வெறும் வெட்டை வெளியாகக் கிடக்கு.
குமார், மடத்தடிச் செல்லரத்தினம் அண்ணையின்ரை குஞ்சன் வெளியில இருந்து வந்திருந்தான். அரசடிப்பிள்ளையார் கோயிலுக்குப் பக்கத்தில கட்டிற கலியாண மண்டபத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் குடுத்தான். ராமகிருஸ்ணா பள்ளிக்கூடத்துக்கு ஐயாயிரம் குடுத்தான். அவன்ரை பெரிய மாமி – சரஸ்வதி அக்காவின்ரை மூண்டாவது மகள் வனிதா, வன்னியில காயப்பட்டு வந்திருந்தாள். அவளுக்கு ஐயாயிரம் குடுத்தான். வான் பிடிச்சுக் கொண்டு கஜூரினா பீச்சுக்குப் போனான். பிறகொருநாள் கீரிமலைக்கு அவனும் சிவத்தாற்ற ஆனந்தனும் போனாங்கள்.
நான் அவனைத் தேர் முட்டியடியில சந்திச்சன். ஒரு மாதம் நிண்டவனை ஒரு ஐஞ்சாறு தடவை சந்திச்சிருப்பன். ஒரு நாள் நாட்டு நடப்பு, அரசியல், சனங்களின்ரை நிலைமை எல்லாத்தைப் பற்றியும் ஏதோ கதை வந்திட்டுது. அப்ப நான் குஞ்சனிட்டைக் கேட்டன், நீ பலதுக்கும் காசைக் குடுத்திருக்கிறாய். ஆனால், எதுக்குக் கூடக் குடுக்கோணும், எதுக்குக் குறையக் குடுக்கோணும் எண்டு உனக்குத் தெரியாதா எண்டு கேட்டன்.
’அவனுக்கு என்ரை கேள்வி பிடிக்கேல்ல. நாட்டு நிலைமை பிழைச்சதுக்கு நான் பொறுப்பில்ல. அதுக்கு உதவி செய்ய வேண்டிய ஆக்கள் அதுக்குக் காரணமாக இருந்தவையள்தான். ஆனால், என்ரை சொந்தம், நான் படிச்ச பள்ளிக்கூடம் எண்டதாலதான் இந்த உதவியையாவது செய்தன். பள்ளிக்கூடத்துக்கு அரசாங்க உதவி தாராளமாக் கிடைக்கும். ஆனா, அந்த வழியளை நாங்கள் பாக்கிறேல்ல. அதால, அந்த உதவிகளை எல்லாம் அரசாங்கம் சிங்களப் பகுதிகளுக்குக் குடுக்குது. இஞ்ச நாங்கள் கஸ்ரப்பட்டு உழைச்சு வைச்சிருக்கிற காசை வைச்சுத்தான் பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி எண்டு எல்லாம் கட்டிக் கொண்டிருக்கிறம்.
ஆனால், கல்யாண மண்டபத்தை நாங்கள்தான் கட்டவேணும். அது எங்கட அடையாளம். அது எங்களோட பண்பாட்டோட கலந்திருக்கு’ எண்டு பெரிய பிரசங்கமே செய்தான்.
இந்த விளக்கத்தைப் பற்றி நீ என்ன நினைக்கிறாயோ எண்டு எனக்குத் தெரியாது. ஆனா, என்னைப் பொறுத்தவரை, கஸ்ரப்படுகிற சனங்களும் போரால பாதிக்கப்பட்டு அல்லாடிக் கொண்டிருக்கிற சனங்களும் ஆரோ வெளிநாட்டு என்.ஜீ.ஓக்கள் எண்ட வெள்ளைக்காரர்களிட்டைக் கையேந்த, நாங்கள் இப்பிடிக் கல்யாண மண்டபங்களைக் கட்டிறதும் பாரம்பரியத்தைக் காக்கிறம் எண்டு வியாக்கியானப்படுத்திறதும் சரியெனப்படவில்லை. ஆனால், சனத்துக்குச் செய்ய வேண்டியதைச் செய்து கொண்டு இதுகளையும் பார்க்கலாம். அதுதான் சரியாகும். ஆனால், இதைப்பற்றி ஆர் இந்த மாதிரி ஆக்களிட்டக் கதைக்கிறது?
இதைவிட, பெரிய கிளியக்காவின்ரை இரண்டாவது மகளுக்குக் கலியாணமாகீட்டுது. 39 வயது வரை காத்திருந்த அந்தப் பிள்ளையை வன்னிப் போரில சிக்கி மனிசியைப் பறிகுடுத்த ஒரு ஆள்தான் கட்டியிருக்கிறார். அவருக்கு ஒரு பிள்ளை இருக்காம். ஆனால், அந்த ஆள் நல்ல மனுசன் எண்டு கேள்வி. கிளியக்காவின்ரை மகள் இந்தக் கலியாணத்துக்குச் சம்மந்தப்பட்டதுதான் பலருக்கும் ஆச்சரியம். இவ்வளவு காலமும் இருந்த குமர், இப்ப இப்பிடி ஒரு முடிவுக்கு வந்திருக்குதே எண்டு பெரிய கிளியக்காவுக்குக் கவலை. காசு, சீதனம் ஒண்டும் கேக்காமல், குடுக்கிறதுக்குச் சம்மதப்பட்டு ஒரு ஆள் வந்திருக்கிதே எண்ட சந்தோசம் இவளுக்கு.
எப்பிடியோ கலியாணம் நடந்து முடிஞ்சிட்டுது. கலியாணத்துக்கு நானும் போனன். நல்ல சனக்கூட்டம். ஆனால், கலியாண வீட்டிலயும் எங்கட சனம் என்னத்தைப் பற்றியெல்லாம் கதைச்சிருக்கும் எண்டு உனக்கும் தெரியும்.
இதைத்தான் வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் எண்டு சொன்னார்களோ..
சரி, குமார். எழுதிக் கொண்டே இருக்கலாம். ஊரிலயும் உலகத்திலயும் ஏராளம் புதினங்கள் இருக்கு. அதையெல்லாம் பிறகு சொல்லிறன். ஆட்கடத்தல், ஆட்களை மீட்டுத்தரல் எண்டெல்லாம் ஏராளம் புதினங்கள்....
காணாமற் போனவர்களைக் கண்டு பிடித்துத் தருவது, போரின்போது சரணடைந்து தகவலே தெரியாமலிருக்கும் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களை மீட்டுத்தருவது என்று பெரும் பேரம் பேசி ஏமாற்றும் பெரிய தொழிலும் இப்போது வளர்ந்துள்ளது. இந்தத் தொழிலில் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்த சில உறுப்பினர்களும் படையினரும் கூட்டாக ஈடுபட்டுள்ளனர். சனங்களின் பரிதவிப்பைப் பயன்படுத்தி – அவலப்படும் பெண்களை (தாய்மாரையும் மனைவிமாரையும் இலகுவாக ஏமாற்றி) இந்தக் காரியங்களைப் பார்க்கின்றனர் இவர்கள். இதைப்பற்றிப் பின்னர் விவரமாக எழுதுகிறன்.
சரி, மீண்டும் சந்திப்போம். ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் அதை முன்பின் யோசிச்சுச் சொல்லு. கண்டபடி கதைச்சால், அதுக்கான அறுவடையை இங்க நாங்கள்தான் பெறவேணும். இந்தப் போருக்குள்ளயே தப்பி வந்திட்டம். இனி ஏமாளித்தனங்களாலும் எச்சரிக்கையில்லாத காரியங்களாலயும் வீணாகச் சாக முடியாது. இதை நீ விளங்கிக் கொள்ளுவாய் என நம்புகிறன்.
நன்றி.
அன்புள்ள
பார்த்திபன்
மேலும்

NANTRY http://www.ponguthamil.com

1 கருத்து:

Nesan சொன்னது…

எல்லா விசயத்தையும் உங்கள் கடிதம் அலசுகிறது ஊர்ப்புதுனம் அதிகமாக வருகிறது.